என் கதாநாயகி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 26, 2023
பார்வையிட்டோர்: 894 
 
 

(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சோபாவில் தலையைச் சாய்த்ததும், சிறுகதைகள் எழுதுவது பற்றிய சிந்தனைகள் பகற் கனவாயின. அக்கனவைக் கலைப்பதுபோல் என் மனைவி, “உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது.” என்று கனமான கடித உறையொன்றைக் கொடுத்துவிட்டுச் சென்றாள். ஆனால், கனவைச் சுவைத்த மனம் அதையே பற்றுக் கோடாகக் கொண்டு, மீண்டும் “லயிக்க”த் தொடங் கிற்று.

கடித உறையைப் பிரித்துப் பார்த்ததும் திடுக்கிட்டேன்.

என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்குச் சர்வ சாதாரணமாக நிகழக்கூடிய சம்பவமொன்றுண்டு. அதை என் சக எழுத்தாளர்கள் வெளியிடக் கூசுவார்கள். ஆனால், நானோ வெட்கத்தை உதிர்த்துத் துணிந்து கூறுகிறேன்.

நாங்கள் எழுதும் கதை கட்டுரைகளின் கையெழுத்துப் பிரதிகள்தாம் “பழைய குருடி கதவைத் திறடி’ என்று போன வேகத்தோடு பத்திரிகை நிலையங்களிலிருந்து திரும்பி வந்து சேரும்.

ஆனால், இது என்ன கூத்து! பத்திரிகை ஒன்றில் பிரசுரமான என் சிறுகதை ஒன்றல்லவா அந்தப் பத்திரிகையிலிருந்து கத்தரித்து அனுப்பப்பட்டிருந்தது!

நான் எழுதியதுதானாவென்றுகண்ணைத் துடைத்துக் கொண்டு பார்த்தேன். கொட்டை எழுத்துக்களில் என் திருநாமம் காணப்பட்டதோடு, கதையை ஒரு சிறிது வாசித்ததும் அது என்னுடையதுதான் என்பது உறுதியாயிற்று.

சில ஆண்டுகளுக்கு முன் பிள்ளைப் பிராயத்திலேயே அகால மரணமடைந்த வாரப் பத்திரிகையொன்றில் வெளிவந்த கதை அது. இப்போது அது எனக்குப் புதிய கதைபோல் தோன்றியது. “குற்றம் யாருடையது?” என்ற அக்கதை இதுதான்.


அவன் யாருடைய காரியத்திலும் அனாவசியமாகத் தலையிடுபவனல்ல. தானுண்டு தன் காரியாலயம் உண்டு என்றிருப்பவன். தினந்தோறும் தனது காரிலேதான் ஆபீசுக்குப் போவது வழக்கம். அன்று மனம் குதூகலமாக இருந்ததால் நடக்கவேண்டுமென்று தோன்றிற்று.

நேர்த்தியான பட்டுச் சொக்காய், ஜரிகைத் துண்டு, காலில் உயர்ரக பூட்ஸ், தங்க விளிம்புடன் கூடிய மூக்குக் கண்ணாடி முதலிய ஆடம்பரங்களுடன் புறப்பட்டான். ஏலம், கிராம்பு, சாதிபத்திரி முதலியன கலந்த வாசனைத் தாம்பூலம் கமகம வென மணம் வீச, வாயில் குதப்பிக் கொண்டு போய்க்கொண்டிருந்தான். அவனுடைய பட்டுக் குடையை விரிக்காமல் கைத்தடிபோல் இடக்கையில் ஒய்யாரமாக மாட்டிக்கொண்டு நடந்து சென்றது கண்களுக்கு விருந்தாகத்தான் இருந்தது

இளமைக்கும் மூப்புக்கும் இடையிலிருந்த அவனுடைய வயது சரியான ஊட்டமிக்க உணவால் மிடுக்கையே காட்டிற்று. தும்பைப் பூ போல் துலங்கிய அவன் ஆடைகள் காலை இளம் வெயிலில் வெள்ளித் தகடென மின்னின.

இப்பொழுது மக்கள் நெருக்கம் குறைந்த சந்து ஒன்றைக் கடக்கவேண்டி வந்தது. பூட்ஸ் “கிரீச். கிரீச்” சென்று ஒலிக்க, மாடிக் கட்டிடங்களின் ஓரமாகச் சென்றான்.

திடீரென்று வாசனைத் தைலம் பூசி வாரி விடப்பட்டிருந்த தனது கிராப் தலையில் ஏதோ மேலிருந்து “ஜில்” லென்று விழுந்தது போலிருந்தது! மறு விநாடி அது தலையிலிருந்து வழிந்து “அபிஷேகம்” செய்ததுபோல் அவன் பட்டுச் சொக்காயை இரத்த நிறமாக்கிற்று.

திடுக்கிட்டு, மேலே அண்ணாந்து பார்த்தான் யுவதி ஒருத்தி சாவதானமாகத் தனது வெற்றிலைப் பாக்கு எச்சிலை உமிழ்ந்து கொண்டிருந்தாள்.

அவனுடைய எண்சாண் உடம்பும் ஒரு சாணாகக் குன்றிப் போயிற்று. எவர் கண்ணிலும் படாமல் அப்படியே மாயமாய் மறைந்து போகக் கூடாதா என்று ஏங்கினான். இந்த அலங்கோலத்துடன் நாலு பேர் நடமாடும் அந்தத் தெருவில் நிற்பதைவிட நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்துப் போகலாம் போலிருந்தது. இவ்வளவுக்கும் காரணமான அந்தப் பெண்மீது அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

“ஓ! யாரம்மா அது? கீழே போவோர் வருவோரைப் பார்த்துக் கவனமாகத் துப்பக் கூடாதோ? மாடி மேல் ஏறிவிட்டால் கண்கள் மேலேதான் பார்க்குமோ?” என்று ஆத்திரத்துடன் இரைந்தான்.

அந்த யுவதி அப்பொழுதுதான் அச்சத்துடன் கீழே நோக்கினாள். அவள் அங்கமெல்லாம் பதறியது. ஆணி அடித்ததுபோல் அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் மனம் “திக்கு! திக்கு” என்று அடித்துக்கொள்ள, மிரள மிரள அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த் துக்கொண்டு நின்றாள். அவ்வளவு அசிங்கமாக இருந்தது. அவனோ, தன்னை யாரும் இந்நிலையில் பார்க்காமல் இருக்கவேண்டுமே என்று கவலைப்பட்டான்.

இரண்டொரு நிமிடங்கள் கழிந்ததும், அவ்வீட்டி னுள் இருந்து சிறுமி ஒருத்தி தயங்கித் தயங்கி வந்து, அவனை நெருங்கி, “அக்கா உங்களைக் கூப்பிடுரா. தயவு செஞ்சு…” என்று குழைந்தாள்.

எதிர்பாராமல் அடைந்த அவமானத்தை மறைக்க அப்போதைக்கு எங்காவது ஒளிந்துகொள்ள வேண்டு மென்று தோன்றியதால், அவன் மறுப்பெதுவும் கூறாது அச்சிறுமியுடன் அவ்வீட்டினுள் பிரவேசித்தான்.

“எதிர்பாராமல் நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. மன்னித்துக்கொள்ள வேண்டும். அவரும் வீட்டிலில்லை. இருந்தால் அவரைக் கொண்டே உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருப்பேன்” என்று எச்சில் உமிழ்ந்த அந்தப் பெண் கதவு மறைவில் நின்று கொண்டு, வருத்தந்தோய்ந்த குரலில் சொன்னாள்.

அவளுடைய குரலில்தான் எவ்வளவு குழைவு! எவ்வளவு மதுரம்!

ஒரு கணம் தன் மனத்துயரை மறந்து அவ்வினிமையான குரலொலியில் லயித்து நின்றான் அவன்.

“நான் இப்பொழுது எப்படி வெளியே செல்வேன்? இங்கு டெலிபோன் இருக்கிறதா? என் ஆபீசுக்குத் தெரிவித்து யாரையாவது வரவழைக்கலாம்.”

“ஐயோ! எங்கள் வீட்டில் டெலிபோன் இல்லையே! அருகில் இருப்பதாகவும் தெரியவில்லையே!” என்று அந்தப் பெண்மணி அங்கலாய்த்தாள்.

வேறு வழியின்றித் தன் அங்க வஸ்திரத்தால் தலையையும் உடம்பையும் மூடி மறைத்துக்கொண்டு வேதமாக வெளியே வந்தான் அவன்.

அதே சமயத்தில் அவ்வீட்டுக்குள் நுழைந்த அந்த மங்கையின் கணவன்மீது மோதிக்கொண்டான்!

“ஓ! யாரது? நில்லய்யா!” என்று கர்ஜித்து வழி மறைத்துக்கொண்டான் வீட்டுக்காரன்.

அம்மனிதன் திடுக்கிட்டான். பிறகு, சமாளித்துக் கொண்டு, “எனக்கு நிற்க நேரமில்லை. என்னை விடும்.” என்று தப்ப முயன்றான்.

“நீர் யார்? யாரைத் தேடி என் வீட்டினுள் நுழைந்தீர்? எதற்கு இந்த முக்காடு?” – வீட்டுக்காரன்.

“நான் யாரென்பதை உமக்குத் தெரிவித்துக்கொண்டிருக்க இது நேரமில்லை. என்னை விடும். நான் போக வேண்டும்.”

“இதென்ன ஐயா, இது! விசித்திரமான பதிலாயிருக்கிறது! என் வீட்டினுள் அத்துமீறிப் பிரவேசித்து வெளியே நழுவுகிறவரை யாரென்று கேட்டால்? …”

“ஓகோ! நீர்தான் இந்த வீட்டுக்கார அம்மாளின் கணவரோ? உமது மனைவியையே கேட்டுத் தெரிந்து கொள்ளும். நான் போகிறேன்.” என்று வீட்டுக்காரனின் கைப் பிடியினின்றும் திமிறினான் அவன்.

இதற்குள் அவள் வீட்டுக்குள்ளிருந்தபடியே, “அவரை விட்டு விட்டு உள்ளே வாருங்கள். நான் எல்லாம் சொல்லுகிறேன்.” என்றாள்.

“அட! என் பெண்சாதிக்கும் வேற்று மனிதராகிய உமக்கும் என்ன ரகசியமய்யா இருக்கிறது? அவளோ, என்னை வீட்டுக்குள்ளே வரும்படி அழைக்கிறாள்! இந்தப் பெரிய? மனிதனோ உடனே வெளியேற வேண்டு மென்று துடிக்கிறான்!… அதிருக்கட்டும். நீர் யார்? உமது திருமுகத்தையாவது காட்டும்.” என்று எகத் தாளமாகக் கூறிக்கொண்டு, அவன் முகத்தை மூடியிருந்த துணியை விலக்க முயன்றான் அந்த விடாகண்டன்.

அவனோ இரும்புப் பிடியாக அதைப் பிடித்துக் கொண்டு, “ஓய்! காலை நேரத்திலே வீணாக என்னிடம் வம்பு வளர்க்காதீர். எரிகின்ற என் மனத்திலே எண்ணெயை வார்க்காதீர். உமக்கு நான் யாரென்பது தானே தெரியவேண்டும்? இதைப் பார்த்துக்கொள்ளும்.” என்று கூறிக்கொண்டே தன் சட்டை ஜேபியிலிருந்த தன் பெயர், தொழில், முகவரி முதலியவை அச்சடித்த சிறிய அறிமுகக் கார்டு ஒன்றை எடுத்துக்கொடுத்தான்.

வீட்டுக்காரன் அதை வெடுக்கென்று பிடுங்கி, வாசித்தான். அவன் முகம் மாறுபட்டது. கைப்பிடியும் தளர்ந்து. அவ்வூரிலேயே அவன் ஒரு பெரிய பணக்காரன், வர்த்தகன் என்பதை உடனே தெரிந்துகொண்டு விட்டான்.

வீட்டுக்காரன் மனம் பெரிதும் குழப்பமுற்றது அந்த மனிதனும் இதுவே சமயமென்று அவன் கைப் பிடியினின்றும் நழுவி, மறைந்தான்.

இதுதான் அன்று நிகழ்ந்த உண்மைச் சம்பவம், அந்தக் கணவன் அன்று முதல் தன் மனைவிமீது சந்தேகம் கொண்டு, அவளைப் படாத பாடு படுத்தினான். கலியாணமாகி மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் இந்தக் கோளாறு.

முடிவில், அந்தப் பைத்தியக்காரன் அவளைத் தன் வீட்டினின்றும் வெருட்டியே விட்டான். மனைவியின் கெஞ்சலும் புலம்பலும், பெற்றோர் உற்றார் உறவினர்களின் போதனைகளும் அவன் மரமண்டையில் ஏறவே இல்லை.

ஆனால், அவளுடைய பெற்றோர்களோ உறவினர்களோ அவளுக்கு ஆதரவு காட்டி ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, போக்கிடமின்றி, முன்னர் தன்னால் அவமானமடைந்த அந்தத் தனவந்தனிடமே தஞ்சம் புகுந்தாள்.

இதன் பிறகு, அக்கதையைக் கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன் – “ஊரெல்லாம் அவர்கள் இருவரையும் கண்டபடி தூற்றுகிறது. நீர் என்ன சொல்லுகிறீர்? குற்றம் யாருடையது?” என்று வாசகர்களைக் கேட்டிருந்தேன்.

கதையை வாசித்து முடித்ததும், கதையின் முடிவு சரிதானா என்பதில் இப்போது ஐயம் ஏற்பட்டது. “சரி தான்” என்று மனம் தட்டிக்கொடுத்தது. “சரியில்லை” என்று மனச்சாட்சி அதட்டிற்று.

இந்தப் போராட்டங்களுக்கிடையே அவ்வுறையினுள் இருந்த கடிதமொன்று என் கவனத்தை ஈர்த்தது. ஆவலுடன் அதைப் பிரித்துப் படித்தேன். அதில் வரு மாறு எழுதியிருந்தது:-

“குற்றம் யாருடையது?” என்ற தலைப்பில் கதை எழுதியிருக்கும் ஆசிரியரே! குற்றம் முழுக்க முழுக்க உம்முடையதுதான். என்ன விழிக்கிறீர்? உம்மைக் குற்றம் சாட்டும் நான் யாரென்பது இன்னும் தெரிய வில்லையா?

நான்தான் ஐயா, உமது கதையில்வரும் கதாநாயகி! ஒரு பாவமுமறியாத என்னை என் கணவரிடமிருந்து பிரித்தீர். அத்துடன் நில்லாது என்னைப் பிறர் ஒருவரின் கள்ளக் காதலியாகவும் ஆக்கிவிட்டீர். ஓர் உத்தம தமிழ்க் குடும்பப் பெண்ணை இவ்வாறு தரக்குறைவாக எழுத உமக்கு எப்படி ஐயா, மனம் துணிந்தது?

பிரசுரிக்க நமக்கு பத்திரிகை இருக்கிறது என்ற துணிச்சலில் குப்பை கூளங்களையெல்லாம் எழுதிவிடு வதா? முன்பின் யோசியாது அந்த மர மண்டை ஆசிரிய ரும் தமது பத்திரிகையில் பிரசுரித்திருக்கிறார். இந்த அடாத செயலால் என்னைப்போல எத்தனை பதிவிரதா சிரோன்மணிகளின் மனம் வெந்து கருகும் என்பதை நீர் சிறிதளவேனும் சிந்தித்துப் பார்த்தீரா?

உம்கதையில் நீர் அளந்திருப்பதுபோல் நான் அந்தக் கனவானிடத் தஞ்சம் புகவுமில்லை, அவர் என்னை ஏற்றுக் கொள்ளவுமில்லை. மாறாக, நான் என் பெற்றோர் இல்லத்திற்கே சென்றுவிட்டேன்.

இரண்டு மாதங்கள் கழிந்த பின்னர்தான் என் கணவர் தம் தவற்றை உணர்ந்தார். என் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, மீண்டும் என்னைத் தம்முடன் அழைத்துக்கொண்டு விட்டார்.

அதுமட்டுமல்ல. அன்று அவர் உள்ளத்தில் காரணமில்லாமலும் சந்தர்ப்பக் கோளாறுகளினாலும் குடியேறிய சந்தேகப்பேயை அறவே அடித்து வெருட்டி விட்டார்.

இப்போது நாங்கள் இருவரும் மலரும் மணமும் போலவும், நகமும் சதையும் போலவும் ஒன்றி இன்ப வாழ்க்கை நடத்தி வருகிறோம்.

என்றாலும், நீர் எழுதி வெளியிட்ட கதை என் மானத்தைக் குலைப்பதாக இருக்கிறது என்னைப் போன்ற இதர சகோதரிகளின் மனவுறுதியைக் கெடுப்பதாக இருக்கிறது.

ஆகவே, நானும் என் கணவரும் உம்மீதும், கதையை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் மீதும் மான நஷ்ட வழக்கு தொடுக்கப் போகிறோம். உங்கள் இருவரையும் நீதி மன்றத்தில் நிறுத்தி, மானத்தை வாங்கிப் பழி தீர்த்துக் கொள்ளப் போகிறோம். இது உமக்கு ஓர் எச்சரிக்கைக் கடிதமாக இருக்கட்டும்.

இங்ஙனம்,
….

கடிதத்தைத் திரும்பவும் படித்தேன். தலை சுற்றியது. சந்தேகப் பேயின் கொடுமையை விளக்க நான் எழுதிய கதை இவ்வாறா “பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடியவேண்டும்?” என் கதாநாயகி தன் கடிதத்தில் தீட்டிய ஒவ்வொரு வார்த்தையும் என் தலையில் சம்மட்டி கொண்டு அடிப்பதுபோல் தோன்றியது. அன்று, பத்தினித் தெய்வமான கண்ணகி பாண்டியன் அவையில் வாதிட்டதைப்போல் அவள் என் எதிரே நின்று வாதாடு வதைப்போல பிரமை தட்டியது.

“ஐயோ! நான் என்ன செய்வேன்? என்னைக் காப்பாற்றுவாரில்லையா?” என்று ஓலமிட்டேன்.

“என்னங்க இது? சோபாவில் படுத்துக்கொண்டு தூக்கத்தில் உளறுகிறீர்கள்?” என்று என் மனைவி என்னைப் பிடித்து உலுக்கி, “கல கல” வென்று சிரித்த பிறகுதான் அத்தனையும் கனவென்று தெரிந்தது!

“அப்பாடா” என்று பெருமூச்சு விட்டேன். பொங்கி வழிந்த வியர்வை வெள்ளத்தைத் துடைத்துக் கொண்டேன்.

“ஆமாம். நீ ஒரு கடித உறை கொண்டுவந்து கொடுத்தாயே, அது எங்கே?”

“இதோ கிடக்கிறதே, உங்கள் சோபாவுக்கு அடியிலேயே.”

அவசர அவசரமாக அதைப் பிரித்துப் பார்த்தேன். சில நாட்களுக்கு முன் நான் எழுதிய “காதலும் கச்சான் பூத்தேயும்” என்ற சிறு கதையின் கையெழுத்துப் பிரதியைத்தான் பத்திரிகாசிரியர், “இது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.” என்ற மதிப்புரையுடன் திருப்பி அனுப்பியிருந்தார்.

இவ்வளவும் இந்தப் பாழாய்ப்போன பகற்கனவின் விளைவல்லவா? என்று ஒரு கணம் வருந்தினேன். ஆனால், மறுகணமே “அந்தக் கனவு இன்னும் சற்று நீடிக்கக் கூடாதா?” என்று ஏங்கினேன்.

– 1955, காதற் கிளியும் தியாகக் குயிலும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.

– கவிஞர் ந.பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (தொகுதி 2), முதற் பதிப்பு: பெப்ரவரி 1999, ப.பாலகிருட்டிணன், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *