என்ன சொல்கிறாய் சுடரே

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 29, 2016
பார்வையிட்டோர்: 27,269 
 

ஒவ்வொரு இரவும் அந்த மனிதன் வீடு திரும்ப நடக்கும் போது அவனது முன்னால் சின்னஞ்சிறிய மெழுகுவர்த்தி ஒன்று தனியே எரிந்து கொண்டு போனது.

உண்மையில் நான் சரியாகச் சொல்கிறேனா எனச் சந்தேகமாக உள்ளது,

அந்த மனிதன் மெழுகுவர்த்தியை கையில் பிடித்திருக்கவில்லை, உடன் யாரும் வரவுமில்லை, ஆனால் ஒற்றை மெழுகுவர்த்திக் காற்றில் மிதந்தபடியே அவன் முன்னால் நகர்ந்து போய்க் கொண்டிருந்தது,

விசித்திரமாகயிருக்கிறதில்லை, ஆனால் அது தான் நிஜம்.

பிறந்தநாள் கேக்குகளில் கொளுத்திவைக்கபடும விரல் நீளமுள்ள ரோஸ் வண்ண மெழுகுவர்த்தியது, அதன் சுடர் தூய வெண்ணிறமாக இருந்தது. ஒரு ஆள் நடப்பதற்கு மட்டும் வெளிச்சம் தருவது போல அந்த மெழுகுவர்த்தி முன்னகர்ந்து போய்க் கொணடிருந்தது

இது ஒன்றும் பெரிய அதிசயமில்லை என்பது போலவே அவன் நடந்து சென்றான்

தோல்வி மனிதர்களின் இயல்பை மாற்றிவிடுகிறது, விருப்பமான விஷயங்களைக் கூட வேண்டாவெறுப்புடன் செய்ய வைக்கிறது. அதிலும் காரணம் அறியாமல் தோற்றுப்போனவர்கள் எப்போதும் தன்னைத் தானே குற்றம் சொல்லிக் கொள்கிறார்கள், வருத்தப்படுகிறார்கள். தன்னை நொந்து கொள்வது எவ்வளவு எளிதான வழி, ஆனால் ஆற்றுப்படுத்திக் கொள்ள வேறு என்ன தான் செய்யமுடியும்.

அந்த மனிதன் எப்போதும் இரவில் மிகத் தாமதமாகவே வீடு திரும்புகிறான், ஏன் வீட்டிற்குப் போகிறோம் என்பது போன்ற தயக்கத்துடன், கவலையுடன் வெறுமையுடன் நடந்து போகிறான்.

சில மாதங்களாகவே தனது இயலாமையை நினைத்து நினைத்து நிறையப் புலம்பிவிட்டான், உலகின் மீதான அவனது கோபமும் வடிந்துவிட்டது, இப்போது அவன் குழப்பத்துடன் காத்துக் கொண்டிருக்கிறான், அடுத்த நாளில் தனது வாழ்க்கை இயல்பிற்குத் திரும்பிவிடும் என்ற துளி நம்பிக்கை இன்னமும் அவனிடம் மிச்சமிருக்கிறது

ஒருவேளை கடந்த காலத்தின் சந்தோஷங்கள் தான் ஒன்று திரண்டு இந்தச் சிறிய வெளிச்சமாக வழிகாட்டுகிறதோ என்று அவன் சந்தேகப்பட்டான். ஆனால் மாயவெளிச்சத்தால் தனது வாழ்க்கையை மாற்றிவிட முடியவில்லையே, பின் எதற்கு இந்த ஒளி. அவனைப் போன்ற சாமானிய மனிதனுக்கு அதிசயத்தால் ஒரு பயனுமில்லை

ஒரு நாள் என்பது அவனுக்கு நீண்ட பகலாக இருந்தது. தையற்கடையைத் திறந்து வைத்து தெருவை பார்த்து வெறித்தபடி அவன் நாளெல்லாம் அமர்ந்திருந்தான்,

உலகம் தன் போக்கில் இயங்கிக் கொண்டேயிருந்தது, அவன் ஒருவன் மட்டும் விலக்கபட்டுவிட்டான். அவனது எதிர்பார்ப்புகள் எதுவும் நடக்கவேயில்லை, வேலையை மாற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை, ஆனால் புதிதாக ஒரு வேலைக்குப் போகிற மனநிலை அவனுக்கில்லை, உலகம் ஏன் தன்னை இப்படிக் கைவிட்டது எனக் குழப்பமாக இருந்தது.

வீட்டில் மனைவியும் பிள்ளைகளும் அவனது இயலாமையைச் சுட்டிக்காட்டுகிறார்கள், சாப்பிடும் போதும், கதவை தட்டும் போது அதை நன்றாக உணர முடிகிறது. சோப்பு போட்டு குளிப்பதற்குக் கூடக் கூச்சமாகயிருக்கிறது. சம்பாதிக்க இயலாதவன் உறவுகளின் கனிவை எதிர்ப்பார்க்க கூடாது தானா

இந்த நகரில் தான் ஒற்றை மனிதன், தனக்கென யாருமில்லை என அவன் உணர்ந்திருந்தான். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தனிமை பூதாகரமாக வளர்ந்து அவனைக் கவ்வி கொண்டது. ஏன் தனக்கு நண்பர்களேயில்லை. ஏன் தான் மற்றவர்களைப் போலச் சீட்டு ஆடவோ, குடிக்கவோ பழகவேயில்லை, வெளியுலகம் என்ற ஒன்றிருக்கிறது என்பதை இத்தனை ஆண்டுகளாக ஏன் மறந்திருந்தேன் என யோசித்துக் கொண்டேயிருந்தான்.

வேலை எத்தனையோ விஷயங்களை மறக்க வைத்திருந்தது, கவனம் திரும்ப விடாமல் குவிய செய்திருந்தது. ஆனால் வேலையின்மை எல்லாவற்றையும் அடையாளம் காட்டிவிடுவதுடன் குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்திவிடுகிறது

சம்பாதிப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை, அன்றாடத் தேவைகளுக்கு எளிதாகச் சம்பாதித்துவிடலாம் என்று தான் அவனும் நினைத்திருந்தான், அப்படித் தான் இத்தனை காலமும் நடந்து கொண்டிருந்த்து, ஆனால் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அவன் எவ்வளவு முயன்றும் அன்றாடம் ஐம்பது ரூபாய் கூடச் சம்பாதிக்க முடியவில்லை,

சில நாட்கள் டீச்செலவிற்குக் கூட அவனிடம் காசில்லாமல் போயிருந்த்து, ஆனால் கடை வாடகை கொடுக்க வேண்டும், தானும் குடும்பமும் மூன்று வேளைகள் சாப்பிட வேண்டும், பிள்ளைகள் படிக்க வேண்டும். வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டும், மனைவிக்கான மருந்து மாத்திரைகள் வாங்க வேண்டும், இப்படி நிறையத் தேவைகளிருந்தன, ஆனால் எதையும் அவனால் நிறைவேற்ற முடியவில்லை.

நான் ஏன் ஒரு தையற்காரனாக இருக்கிறேன், இப்படி ஒரு வேலையை ஏன் இத்தனை ஆண்டுகள் விருப்பத்துடன் செய்து வந்தேன் என அவன் மீதே கோபம் அதிகமிருந்தது. உலகில் எத்தனையோ வேலைகள் இருக்கின்றன, அதில் தையல் மீது ஏன் தனக்கு ஆர்வம் உண்டானது,

உண்மையில் அந்த ஆர்வம் அவன் விரும்பி உண்டாக்கி கொண்டதில்லை, வீட்டின் வறுமை அவனை ஏழு வயதிலே தையற்கடையில் உதவியாளாக வேலைக்குச் சேர வைத்தது. அவன் நிஜாம் டெய்லரிடம் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்தான், அதன்பிறகு சில வருஷங்கள் கை மெஷின் ஒன்றை வைத்துக் கொண்டு வீடு வீடாகப் போய்ப் பழைய துணிகள் தைத்துக் கொடுத்தான், முடிவில் தனக்கென ஒரு தையற்கடையை அமைத்துக் கொண்டான்,

எல்லாமும் எளிதாகத் தான் நடந்தேறியது, அவனது தையற்கடைக்கென நிறைய வாடிக்கையாளர்கள் இருந்தார்கள், அவர்கள் மணிக்கணக்காகக் கடை வாசலில் காத்திருந்து துணிதைத்து வாங்கிப் போவார்கள், பண்டிகை நாட்களில் இரவு உறங்க கூட நேரமிருக்காது, மற்ற டெய்லர்களைப் போலத் தனது பெயரையோ, கடையின் பெயரையோ அவன் துணியில் பொறிப்பதில்லை. ஒரு போதும் தவறான அளவில் எவருக்கும் உடைகள் தைத்துக் கொடுத்ததுமில்லை. வேலை மட்டுமே அவனது உலகமாகயிருந்த்து, ஆனால் எல்லாமும் இன்று வெறும் நினைவுகள்.

காலத்தின் சுழிக்காற்று அவன் கடையில் வெறுமையை நிரப்பிப் போய்விட்டது, இப்போது ஒருவர் கூட அவன் கடையின் முன்பாக வந்து நிற்பதில்லை, தையல் இயந்திரத்தின் மீது போட்டு வைத்த நீலத்துணியை அவன் விலக்கவேயில்லை, இரண்டு நாட்களுக்கு முன்பாகக் கடையிலிருந்த ஆள் உயர கண்ணாடியை கூடத் துணி போட்டு மூடிவிட்டான், அது தன்னைப் பிரதிபலிக்கும் போது ஏமாற்றம் அதிகமாகிறது.

சீருடைகள் தைக்கிற வேலையிருக்கிறதா என்று கூட அவன் ஒவ்வொரு பள்ளியாகப் போய்க் கேட்டுவந்துவிட்டான், எவரும் அவனுக்கு வேலை தரவில்லை, பலசரக்குக் கடைகளுக்குத் துணிப்பை தைத்துத் தருவதாகக் கூடக் கேட்டுவந்தான், அதிலும் ஒருவருக்கும் ஆர்வமில்லை. தினக்கூலிக்கு டெய்லராக வேலை செய்கிறேன் என்று கூட விசாரித்துவிட்டான்,அதற்கும் திருப்பூர் போக வேண்டும் என்றார்கள்,

பதினெட்டு வருஷங்கள் நடத்திய தையற்கடையை மூடிவிட்டு கூலி வேலைக்குப் போவதற்கு அவனது மனது ஒப்பவில்லை. ஏதாவது நல்லது நடந்துவிடும், மீண்டும் தனது கடைக்கு ஆட்கள் தேடிவருவார்கள் என அவன் நம்பத்துவங்கினான்,

ஆனால் அந்த நம்பிக்கை நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே வந்தது. பகலில் கூடத் தான் இருட்டில் இருப்பதைப் போலவே உணர்ந்தான்.

சில நாட்களின் முன்பு ஒரு பூனை அவனது கடை வாசலில் வந்து நின்று சோம்பல் முறித்தது, பிறகு அவனைக்கடந்து வலதுபக்கக்சுவர் வழியாகத் தாவி ஏறி நடந்து போனது, அந்தப் பூனை திரும்பி வரும் போது அதன் வாயில் நீண்ட மீன் முள் ஒன்றிருந்தது, அதைத் தரையில் போட்டு கடித்து நிதானமாகச் சாப்பிட்டது, அவன் பூனையைக் கண்டு பொறாமை பட்டான், எவ்வளவு எளிதாக இருக்கிறது வாழ்க்கை, மீன்முள்ளை பூனை ருசித்துச் சாப்பிடும் போது அவன் குற்றவுணர்ச்சிக்கு ஆட்பட்டான். தான் கேட்பது மீனில்லை, முள் கிடைத்தால் கூடப் போதும் தானே, ஆனால் அதுவும் கிடைக்கவில்லையே. உலகம் ஏன் இத்தனை கொடூரமாகயிருக்கிறது

குற்றவுணர்ச்சியை ஒருவன் வளர்ந்து கொள்ளத் துவங்கிவிட்டால் உலகம் நரகமாகிவிடும், அது தான் அவனுக்கும் நடந்து கொண்டிருந்த்து,

தன்னைச் சுற்றி நடக்கும் சகல சந்தோஷங்களையும் அவன் வெறுத்தான், வேலையில்லாத ஒருவன் எதற்காகச் சூடாகத் தேநீர் குடிக்க வேண்டும் என டீயை வாங்கி நீண்ட நேரம் ஆற விட்டுக் குடித்தான். தாகம் எடுக்கிற நேரங்களில் கூடத் தண்ணீர் குடிக்க மறுத்தான். எங்காவது சிரிக்கிற சப்தம் கேட்டால் எரிச்சல் அடைந்தான். அரசமரத்திலிருந்து ஒரு இலை உதிர்வது கூட அவனுக்குத் தாங்க முடியாத துக்கம் தருவதாக மாறியிருந்தது

நாளைக்கடத்துவது என்பது எளிதானதில்லை. மனம் பின்னோக்கி போகவே விரும்புகிறது. ஆனால் கடந்த காலத்தை நினைக்கத் துவங்கியதும் தாங்க முடியாத மனவேதனை கொப்பளிக்கத் துவங்கிவிடுகிறது. விரும்பி செய்த வேலையை விட்டு போவது எளிதா என்ன.

எவ்வளவு நேரம் வெறுமையில் உட்கார்ந்தே இருப்பது எனப்புரியாமல் ஒருநாள் தானாக மீதமான துணிகளைக் கொண்டு சிறுவனுக்கான சட்டை ஒன்றை தைக்கத் துவங்கினான்

யாருடைய அளவில் தைப்பது எனத் தெரியவில்லை, மனதிற்குள் ஒரு சிறுவனைக் கற்பனை செய்து கொண்டான்

யாரோ ஒரு சிறுவன் தன்னிடம் சட்டை தைக்கக் கொடுத்திருப்பது போலவும், அதைத் தைத்து முடிந்தவுடன் தேடி வந்து பணம் கொடுத்து வாங்கிப் போவான் என்றும் நினைக்கத் துவங்கினான்

அந்தக் கற்பனை விளையாட்டு அவனை உற்சாகப்படுத்தியது. வீட்டிலிருந்து கிளம்பும் போதே இன்றைக்கு அந்தச் சிறுவன் வந்துவிடுவான் எனச் சொல்லிக் கொள்வான், ஆனாலும் வேலையை உடனே முடித்துவிடக்கூடாது என்பதை உணர்ந்து கொண்டவன் போல மெதுவாக, கவனமாக அந்தச் சட்டையைத் தைக்கத் துவங்குவான், தையல் இயந்திரத்தில் கால்கள் அசையும் போது மனதில் அந்தச் சிறுவன் வந்து வாசலில் காத்திருப்பது போலத் தோன்றும்,

இன்னும் முடியலை தம்பி, போய்விட்டு நாளைக்கு வா எனச் சொல்லிக் கொள்வான்

ஒரு சிறுவனின் சட்டையை எவ்வளவு அழகுபடுத்த முடியும் என அவனுக்கு நன்றாகத் தெரியும், கடையில் உள்ள பொத்தான்களிலே தங்க நிறம் கொண்ட பொத்தானை எடுத்து சட்டைக்குத் தைத்தான், காலரும் கூடப் பட்டையான காலராகவே வைத்துத் தைத்தான், பூவேலை பாடுடன் இரண்டு பைகள் வைத்தான், இத்தனையும் முடிந்து புதுச்சட்டையை முகர்ந்து பார்த்த போது, புதுத் துணியின் வாசனை இனம்புரியாத வருத்தத்தை உருவாக்கியது.

கண்ணாடி முன்பாக அந்தச் சட்டையை வைத்து அழகு பார்த்துக் கொண்டபடியே தம்பி சட்டை ரொம்ப ஜோரா இருக்குடா. இதைப் போட்டுகிட்டா நீ இன்னும் அழகா இருப்பே எனச் சொல்லிக் கொண்டான்

அப்போது தான் அந்த அபத்தம் புரிய துவங்கியது.

ச்சே, என்ன இது, என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன்

இது என்ன பைத்தியக்காரன விளையாட்டு,. இதில் என்ன ஆனந்தமிருக்கிறது. எனச் சட்டையைத் தூக்கி மூலையில் எறிந்தான்

அதன பிறகான நாட்களில் அந்தச் சட்டையை யாராவது ஒரு சிறுவனுக்குத் தந்துவிட வேண்டும் என்று மனதில் தோன்றிக் கொண்டேயிருந்தது, ஒரு மாலையில் புதுச்சட்டையை ஒரு காகிததில் சுற்றிக் கொண்டு வீதியில் இறங்கி நடந்தான், ஒரு சிறுவன் கூட அவன் கண்ணில் படவேயில்லை, வடக்குரத வீதியை ஒட்டிய பிளாட்பாரத்தினைக் கடந்த போது யாரோ உரத்த குரலில் அழுது கொண்டிருப்பது கேட்டது, சுற்றிலும் கூட்டமாக இருந்தது, கூட்டத்தை விலக்கி எட்டி பார்த்த போது பிளாட்பாரத்தில் வசிக்கும் குடும்பத்தில் ஒரு சிறுவன் இறந்து போயிருந்தான், அவனது உடல் கிடத்தப்பட்டிருந்த்து, சுற்றிலும் ஆணும் பெண்ணுமாக அழுது கொண்டிருந்தார்கள்.

தன் கையில் வைத்திருந்த புதுசட்டையை இறந்து போன பையன் உடல் அருகே போட்டுவிட்டு பதற்றத்துடன் தனது கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்

வாழுகிற மனிதர்கள் மீதான கோபத்தை இப்படித் தான் தீர்க்கமுடியும் எனத்தோன்றியது, அன்றிரவு கடையைத் தாமதமாக மூடிவிட்டு வெளியே கிளம்பும் போது இறந்து போன சிறுவன் புதுச்சட்டை அணிந்தபடியே கடை முன்பாக நின்று கொண்டிருப்பது போலத் தோன்றியது,

ஒரு நிமிஷம் பொறி கலங்கிப் போய் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான், என்ன காட்சியிது. மனம் தடுமாறுகிறதோ எனப் புரியாமல் வீட்டினை நோக்கி நடக்க ஆரம்பித்தான்

சரியாக அந்தப் பிளாட்பாரத்தைத் தாண்டும் போது தான் அவன் முன்னால் சின்னஞ்சிறிய மெழுகுவர்த்தி ஒன்று தோன்ற துவங்கியது, ஆமாம், அந்த இடத்தில் தான் எரியும் மெழுகுவர்த்தியை முதன்முறையாகக் கண்டான், சிறிய மெழுகுவர்த்தி, ஆனால் ப்ரகாசமான ஒளி.

அந்த வெளிச்சம் அவனது முன்னால் போகத் துவங்கியது, , எதற்காக ஒரு வெளிச்சம் தனக்கு வழிகாட்டுகிறது எனப்புரியவில்லை, அவனுக்குப் பயமாக இருந்த்து, வேகமாக நடந்தான், வெளிச்சம் கூடவே வந்து கொண்டிருந்த்து,

ஒரு இடத்தில் நின்று அந்தச் சுடரை ஏறிட்டுப் பார்த்தான், ஒற்றை விழியைப் போல அந்தச் சுடர் மினுங்கிக் கொண்டிருந்தது தனது மீளமுடியாத துக்கம் தான் இப்படி ஒரு சுடராக ஒளிர்கிறதோ என நினைத்தான். அந்தச் சுடரை பார்க்கும் போது இந்த உலகில் தான் தனியாக இல்லை என்று தோன்றியது, தனக்கென ஒரு வெளிச்சம் துணையிருக்கிறது, அது தன்னை அழைத்துப் போகிறது, இதை விட வேறு என்ன வேண்டும் என்றும் தோன்றியது

இப்படி யோசிக்க யோசிக்க மனம் கவலையற்றுப் போய்ப் புதியதொரு நம்பிக்கை கொள்ளத் துவங்கியது.

நீண்ட நாட்களின் பிறகு சந்தோஷமாக வீட்டினை நோக்கி நடந்தான், மனைவி பிள்ளைகளிடம் தனக்கு ஒரு மெழுகுவர்த்தி வழிகாட்டுகிறது என வியப்போடு சொன்னான் பிள்ளைகள் அதைக் கேட்பதில் ஆர்வம் காட்டவில்லை,

மனைவி மட்டும் சொன்னாள்

“இப்படி நடக்கும் என எதிர்பார்த்துக் கொண்டுதானிருந்தேன்“

அவள் சொன்னதன் பொருள் அவனுக்குப் புரியவில்லை

நிஜமாகவே ஒரு மெழுகுவர்த்தி நான் நடந்து வரும் பாதையில் வழிகாட்டுகிறது என்றான்

`அதனால் என்ன` என்று அவள் கோபத்துடன் கேட்டாள்

சரிதானே, அதனால் என்ன, இந்த வெளிச்சத்தால் தனக்கு என்ன பயன். இதை ஏன் பெரிதாக நினைத்துக் கொண்டேன் என அவன் மௌனமாகினான்,

அவன் மனைவி கடுகடுத்த குரலில் சொன்னாள்

“கடை நடத்தி சம்பாதித்தது எல்லாம் போதும், கடன்காரர்கள் நெருக்குகிறார்கள் திருப்பூருக்குப் போய்ப் பிழைக்கப் பாருங்கள். இல்லை நானும் பிள்ளைகளும் ஊருக்கு கிளம்புறோம்“

அது ஒன்று தான் கடைசிவழி, நாளைக்குக் கடையை மூடிவிட்டு திருப்பூர் போய்விட வேண்டியது தான் என முடிவு செய்து கொண்டான், ஆனால் மறுநாள் அவன் கடையை மூடவில்லை, காத்திரு, ஏதாவது நல்லது நடந்துவிடும் என அவன் மனது சொல்லிக் கொண்டேயிருந்தது. இப்படியே சில நாட்களைக் கடந்து போனான்,

பின்னொரு இரவு வீடு திரும்பும் போது தன் முன்னே ஒளிரும் சுடரை பார்த்துச் சொன்னான்

தோற்றுப்போனவனுக்கு இருளே ஆறுதல், இந்த ஒளி எனக்குக் கூச்சத்தைத் தருகிறது, அவமானப்படுத்துகிறது, தூயவெளிச்சம் வழிகாட்டுவதற்கு அருகதையற்றவன் நான், எனக்கு வழிகாட்டுதல் தேவையில்லை, விலகிப்போய்விடு,

வெண்ணிற வெளிச்சம் அவன் முன்னால் மெதுவாக ஊர்ந்து போய்க் கொண்டேயிருந்தது,

தனது கவலைகள் வருத்தங்கள் எதுவும் நீங்கப்போவதில்லை, பின் எதற்கு ஒரு மாயம் தன்னைத் தொடர்கிறது. உலகம் இப்படிப் பட்டது தானா, பசித்தவனுக்கு உணவு தருவதை விடுத்து சிறகுகளை அளித்துப் பறக்க வைக்க முயற்சிப்பது தான் அதன் இயல்பா.

அதன்பிறகான நாட்களில் அவன் சவஊர்வலத்தில் செல்லுகிற ஆளைப் போல மெதுவாக வீடு திரும்பத் துவங்கினான், அவன் முன்னே ப்ரகாசமாக மெழுகுவர்த்தி ஒளிர்ந்தபடியே நகர்ந்து போய்க் கொண்டிருந்த்து, சாலையோரங்களில் விழித்தபடியே கிடக்கும் பிச்சைக்காரர்களும், இரவுக்காவலாளியும் இந்த அதிசயத்தைக் கண்டுவியந்தார்கள், சில சமயங்களில் அவன் கடந்து போகும் போது கைகூப்பி வணங்கவும் செய்தார்கள்

சின்னஞ்சிறு வெளிச்சம், இதில் என்ன அதிசயமிருக்கிறது, வானில் கோடான கோடி நட்சத்திரங்கள் ஒளிர்க்கின்றன, அதை எவரது கைகள் ஏந்தியிருக்கின்றன, ஆனால் அதைக் கண்டு இவர்கள் யாரும் அதிசயம் கொள்வதில்லையே, பின் ஏந்த சிறிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தினைக் கண்டு வியக்கிறார்கள் என அவன் நினைத்துக் கொள்வான்

ஒரு நாளிரவு பாலத்தைக் கடந்து போகும் போது அதன் அடியில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு கிழட்டுப் பிச்சைக்காரனும் அவனது மனைவியும் குறுக்கிட்டு அவனது காலில் விழுந்து வணங்கினார்கள்

பிச்சைக்காரனின் மனைவி வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னாள்

“சாமி, நீங்க தான் எங்க கஷ்டத்தைப் போக்கி நல்ல வழிகாட்டணும்“

அவன் எரிச்சலான குரலில் சொன்னான்

“நான் ஒண்ணும் சாமியில்லை. நானும் ஒரு சாமானிய மனுஷன் அதுவும் ஒரு டெய்லர், உங்களைப் போலவே நானும் கஷ்டப்படுகிறேன். இந்த வெளிச்சம் வெறும் ஏமாற்று. இதனால் ஒரு பிரயோசனமும் இல்லை“

“அப்படிச் சொல்லாதீங்க சாமி. கடவுளோட கை தான் அந்த மெழுகுவர்த்தியை பிடிச்சிகிட்டு நிக்குது. கடவுளோட அன்பு தான் உங்களுக்கு வழிகாட்டுது. நீங்க கொடுத்து வச்சவரு“ என்றான் பிச்சைக்காரன்

தையற்காரனுக்கு ஆத்திரமாக வந்தது. அவன சப்தமாகச் சொன்னான்

“வழிகாட்டுற கடவுள் என் வாழ்க்கையை மாற்ற வேண்டியது தானே, எதற்காக இப்படிக் கிடந்து கஷ்டப்படுறேன்“

“மனுசனோட வாழ்க்கையை எப்போ எப்படி மாற்றணும்னு கடவுளுக்குத் தெரியும், வெளிச்சத்தை ஏன் சாமி கோவித்துக் கொள்கிறீர்கள், இந்த வெண்ணிற வெளிச்சத்தைப் பார்க்கும் போது மனசு எவ்வளவு சந்தோஷப்படுது தெரியுங்களா, இதற்காகவே நீங்க பாலத்தைக் கடந்து போற வரைக்கும் நாங்க கண்ணு முழிச்சிகிட்டு இருப்போம்“ என்றாள் பிச்சைக்காரனின் மனைவி

“அப்படியனால் இந்த வெளிச்சத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்“ எனத் தன்முன்னே உள்ள மெழுகுவர்த்தியை பிடுங்கி எறிய முயன்றான், ஆனால் அவனால் அதைத் தொடக்கூட முடியவில்லை. ஆத்திரத்தில் அவன் வேகமாக ஒட துவங்கினான், அப்போதும் வெளிச்சம் முன்னால் சென்று கொண்டுதானிருந்தது

ஏமாற்றத்தின் இறுதி நிலை எப்போதுமே வன்முறை தானே, அப்படியான ஒரு தருணத்திற்காக அந்த மனிதனும் ஏங்க துவங்கினான். சலிப்பின் உச்சத்தில் சம்பந்தமேயில்லாமல் யாருடனாவது சண்டையிட வேண்டும் என விரும்பினான், முன்பு சில தருணங்களில் வாடிக்கையாளர்களிடம் சண்டையிட்டுக் கத்தியிருக்கிறான், அது போலின்றி இப்போது முன்பின் தெரியாத ஒரு மனிதனை கண்டபடி திட்ட வேண்டும் போலிருந்தது,

கோபமாகச் சண்டையிடும் போது தனது குரல் உயர்ந்துவிடுகிறது, அப்போது உடலும் உயரமாவது போலவே உணர்ந்தான், தான் உயிர்ப்புடன் இருப்பதைச் சண்டையே நிருபணம் செய்கிறது, அத்தோடு சண்டை மனதில் உள்ள ஆற்றாமையைப் போக்கிவிடும். ஆனால் யாருடன் சண்டையிடுவது, அதற்கான தருணம் கூடிவர வேண்டும் தானே.

வீட்டில் உள்ளவர்களிடம் சண்டையிடும் போது உடல் குறுகிப்போய்விடுகிறது, வெளியில், யாரோ ஒரு மனிதனிடம் காரணம் இல்லாமலே சண்டையிட வேண்டும் என்ற வேட்கை அவனுக்குள் தீவிரமாக எழுந்திருந்த்து

ஒருநாள். அவன் கடையை மூடிவிட்டு நடக்கத் துவங்கிய போது ஒரு திருடன் பின்னாடியே நடந்து வர துவங்கினான்,

அந்தத் திருடன் வயதானவன், எழுபது வயதிற்கும் மேலிருக்கும், அவன் சில வாரங்களாகவே நோயுற்றிருந்தான், படுக்கையில் கிடந்த போது அவனது நம்பிக்கைகள் முற்றிலும் வடிந்து போயிருந்தன, திருடனுக்கு எதற்கு உறவுகள் என்று அவன் தனியாகவே வாழ்ந்து வந்தான், இத்தனை நாட்களாக மனிதர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளவில்லையே என வேதனைப்பட்டான், குறைந்த பட்சம் ஒரு பெண்ணோடு மட்டுமாவது தான் அன்பாக நடந்து கொண்டிருந்திருக்கலாம் என்று கூடத் தோன்றியது,

நோயுற்ற நாளில் அவனுக்குப் பசி மிகவும் அதிகமானது, பிடித்தமான கோழி இறைச்சி மற்றும் விதவிதமான மீனை சாப்பிட ஆசைப்பட்டான், ஆனால் அதற்கு அவனிடம் பணமில்லை, உடலில் வலுவுமில்லை. பகல் முழுவதும் காய்ச்சல் அடித்த்து, இரவில் காய்ச்சல் வடிந்து உடல் குளிர்ந்தது பாதி உறக்கமும் விழிப்புமாக அவன் கிடந்தான், இரண்டு நாட்கள் முன்பு தான் காய்ச்சல் நீங்கியிருந்த்து, நீண்டநாட்களுக்குப் பிறகு அன்றிரவு தான் அவன் கத்தியை எடுத்து சொருகிக் கொண்டு வழிப்பறிச் செய்வதற்குக் கிளம்பியிருந்தான்

அந்த டெய்லரை பற்றியோ அவனது கஷ்டங்களைப் பற்றியோ திருடனுக்கு எதுவும் தெரியாது, அவன் பாலத்தின் ஒரமாகக் காத்திருக்கும் போது யாரோ ஒரு ஆள் கையில் டார்ச் வெளிச்சத்தை ஏந்தியபடியே நடந்து வருவது போலதான் தெரிந்தது,

நெருங்கி வரும்போது தான் அது டார்ச் வெளிச்சமில்லை, மெழுகுவர்த்தியின் சுடர் எனத் தெரிந்தது, இதை ஏன் கையில் பிடித்து வருகிறான் என்ற குழப்பத்துடன் , தாவி வெளிச்சத்தை அணைத்துவிட்டால் போதும் எளிதாக அந்த மனிதனை தாக்கிவிடலாம் எனக் காத்திருந்தான்

தையற்காரன் மெதுவாக நடந்து வந்தான், எதிர்பாராத நேரத்தில் திருடன் பாய்ந்து வெளிச்சத்தை ஊதி அணைக்க முயன்று தோற்றுப்போய்த் தடுமாறி தையற்காரன் மீது விழுந்தான்,

தான் காத்துக் கொண்டிருந்த தருணம் சாத்தியமாகிவிட்டதைப் போல உணர்ந்த தையற்காரன் தன்மீது மோதி விழுந்தவனைக் கண்டபடி திட்டத் துவங்கினான்

கிழே விழுந்து கிடந்த திருடன் அந்தரத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சம் மிதந்து கொண்டிருப்பதை அதிசயத்துடன் பார்த்தபடி தையற்காரன் திட்டுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான், பிறகு எழுந்து நின்று வியப்போடு கேட்டான்

“இந்த மெழுகுவர்த்தி யாரும் ஏந்திப்பிடிக்காமல் எப்படி மிதந்து கொண்டிருக்கிறது, நீ யார் யோகியா, மாயமந்திரம் தெரிந்தவனா, இது என்ன சித்துவேலையா“

“கிழட்டுநாயே உனக்கென்ன வேண்டும்“ என்று கடுகடுத்த குரலில் கேட்டான் தையற்காரன்

“நான் திருடன், உன்னிடம் இருப்பதை எடுத்துக் கொடுத்துவிடு“ எனக் கத்தியை நீட்டினான் திருடன்

“நான் வெறும் ஆள் என்னிடம் எதுவுமில்லை“ என்றான் தையற்காரன்

“பொய், நீ ஒரு மாயக்காரன், இல்லாவிட்டால் இப்படி ஒரு வெளிச்சம் உன் முன்னால் வருமா. உனக்குத் தெரிந்த மாயத்தைக் கொண்டு எதையாவது செய்“ என மிரட்டினான் திருடன்

“முட்டாள், நானே வேலையில்லாமல் கிடக்கிறேன், என்னிடம் மாயமும் இல்லை மண்ணுமில்லை“

“என்னை ஏமாற்றப்பார்க்காதே, உன் ஏளனப்பேச்சு என்னை ஆத்திரமூட்டுகிறது“ எனக் கத்தினான் திருடன்

“உனக்கு வேண்டும் என்றால் இந்த வெளிச்சத்தைத் திருடிக் கொண்டு போ“, என்றான் தையற்காரன்

“வெளிச்சத்தை யாரும் திருட முடியாது“ என்றான் திருடன்

“இருட்டையும் தான் “என்றான் தையற்காரன்

“வாயை மூடு “எனக்கத்தினான் திருடன்.

“நீயும் என்னைப் போலவே ஒன்றுக்கும் இயலாதவன் தான்“ என்றான் தையற்காரன்

தனது இயலாமையைத் தையற்காரன் சீண்டுவதைத் தாங்கிக் கொள்ள முடியாதவனைப் போலத் திருடன் தனது கைகளை விரித்துத் தாவி அந்த மெழுகுவர்த்தியை பிடிக்க முயன்றான், ஆனால் கைவசமாகவில்லை, சுடர் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தது. எக்கிநின்று ஆவேசத்துடன் கைகளை வீசியும் தோற்றுப் போனான்,

தையற்காரன் அதைக் கண்டு சப்தமாகச் சிரித்தான்

அந்தச் சிரிப்புத் தன்னைக் கைவிட்ட உலகிற்கு எதிரான சிரிப்பை போல ஒங்கி ஒலித்தது

திருடனால் அந்தச் சிரிப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் உருவிய கத்தியை அப்படியே தையற்காரனின் நெஞ்சினை நோக்கி வேகமாகச் செலுத்தினான்

மறுநிமிசம் தையற்காரன் ரத்தம் கொப்பளிக்கத் தரையில் விழுந்து இறந்தான்,

அப்போதும் அந்த மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது

திருடன் ஆவேசத்துடன் மெழுகுவர்த்தியை நோக்கி தனது கைகளை வீசினான், மறுநிமிசம் எங்கும் இருளானது, அந்த வெளிச்சம் இருந்த அடையாளமேயில்லை, பசியோடு திருடன் இருப்பிடம் திரும்பினான்

மறுநாள் காலை தையற்காரனை கொன்ற திருடன் கண்விழித்தபோது அவனது கைகள் சூடாக இருந்தது, எதனால் எனப்புரியாமல் அவன் தனது வலது கையை விரித்தபோது அதனுள் மெழுகுவர்த்தியின் சுடர் ஒளிந்து கொண்டிருந்தது, உற்றுப் பார்த்தான், அதே சுடர் தான் ஆனால் அதன் சூடு தாங்கமுடியவில்லை, வேகமாகக் கையை உதறினான்,

உள்ளங்கையினுள் சுடர் எரிந்து கொண்டிருந்த்து, பயத்துடன் ஒடிப்போய்க் கையைத் தண்ணீரில் வைத்து குளிர செய்தான்,

நீரினுள்ளும் அந்தச் சுடர் அதே வெம்மையோடு அசைந்தபடியே தானிருந்தது. எப்படி இந்தச் சுடர் அவன் உள்ளங்கையினுள் வந்தது என அவனுக்குப் புரியவேயில்லை,

தையற்காரனைப் போலவே அவனும் தனக்குத் தானே பேசிக் கொள்ளத்துவங்கியிருந்தான்.

(உயிர்மை இதழில் வெளியான எனது புதிய சிறுகதை)

Print Friendly, PDF & Email

1 thought on “என்ன சொல்கிறாய் சுடரே

  1. அந்த சுடர் அவனை காப்பாற்றி இருந்த்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *