என்னவளே… அடி என்னவளே!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 8,113 
 
 

மண்டையைப் பிளக்கும் தலை வலியில் துடித்தபடி எழுந்தேன். ஜன்னல் வழியே புகுந்த வெயில், அறைக்கு ஓர் அசாதாரண வெளிச்சத்தைக் கொடுத்து, என் மனதில் இனம் புரியாத குற்ற உணர்வை உண்டாக்கியது. தலையைக் கையில் பிடித்தபடி எழுந்த போது, நேற்று இரவு நடந்ததெல்லாம் ஃப்ளாஷ் பேக்காக ஓடியது.

நேற்று காலை ஆபீசுக்குக் கிளம்பியபோது, இனிமேல் குடிக்கமாட்டேன் என்று வழக்கம்போல் என் மனைவி மாலதியிடம் சத்தியம் செய்துவிட்டுத் தான் கிளம்பினேன். நான் குடியை விடுவதைக் கடவுளே விரும்பவில்லை போல! நேற்றுப் பார்த்துதானா மகேஷ§க்குப் பதவி உயர்வு வந்து தொலைக்க வேண்டும்? தண்ணி பார்ட்டி வேண்டும் என்று நாங்கள் அவனிடம் சண்டை போட்டு வாங்கினோம்.

கட்டை பிரம்மசாரியான அவனது ஃப்ளாட்டில் பார்ட்டி அமர்க்களமாக ஆரம்பித்தது. அப்போது கூட, பேருக்கு இரண்டு பெக் அடித்துவிட்டுக் கிளம்பி விடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், முடியவில்லை. ஆறு, ஏழு என்று போனவுடன், நான் என் சுய நினைவை இழந்திருக்கவேண்டும். எப்படி வீட்டுக்கு வந்தேன், யார் கொண்டு வந்து விட்டார்கள் என்று எதுவும் தெரியவில்லை.

வேறு யார்… நண்பர்கள்தான் என்னைக் கொண்டு வந்து வீட்டில் விட்டிருப்பார்கள். அப்படி என்றால், மாலதிக்கு நான் குடித்தது நிச்சயம் தெரிந்திருக்கும். ஐயையோ… போச்சு! இன்று பத்ரகாளியாக ஆடப் போகிறாள் மாலதி. இன்றைய சாப்பாட்டில் எனக்கு மண்தான்!

ஆனால், என்னுடைய தலைவலி யைப் போக்க இப்போதைய எனது உடனடித் தேவை இரண்டு சாரிடானும், நல்ல ஸ்ட்ராங்கான காபியும்! மாலதியிடம் கேட்டால், கொலையே விழும். வெளியே போய் வரலாமா என்று நான் யோசித்துக்கொண்டு இருந்த போது, பக்கத்தில் பார்த்தேன்.

கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த டீப்பாயில் ஒரு ஃப்ளாஸ்க், டபரா டம்ளர், இரண்டு சாரிடான் மாத்திரைகள் மற்றும் அன்றைய காலை செய்தித்தாள்! இது யார் வேலையாக இருக்கும்?

ஒருவேளை அனன்யாவின் வேலையாக இருக்குமோ? அனன்யா மாலதியின் தங்கை. ஏதோ ட்ரெயினிங் குக்காக இங்கே தங்கியிருக்கிறாள். ஆனால், அவளுக்கு இதெல்லாம் என்னுடைய தேவை என்று தெரியாதே?

குழம்பியபடி, பெட் காபியை முடித்து, சாரிடானை முழுங்கிவிட்டு, சோம்பேறித்தனமாகப் படுத்திருந் தேன். மணியைப் பார்த்தேன். எட்டரை. இன்னும் அரைமணி நேரத்துக்குள் கிளம்ப வேண்டும்.

இன்று நிச்சயமாக டிபன் கிடையாது. மாலதிக்கு இருக்கும் கோபத்தில், டிபன் கேட்டால் அடிக்கத்தான் வருவாள். பின்னே, குடிக்க மாட்டேன் என்று ஒரு மாதத்துக்கு பத்து முறை சத்தியம் செய்து, அதை பதினைந்து முறை மீறினால், யாருக்குத்தான் கோபம் வராது?

அவசர அவசரமாக பாத்ரூமுக்கு ஓடினேன். அங்கே என்னுடைய ப்ரஷ், பேஸ்ட், ஷேவிங் செட் அழகாக வைக்கப்பட்டிருந்தது. நான் குளிக்கத் தோதாக, வாளியில் மிதமான சூட்டில் வெந்நீர்! சோப், டவல் எல்லாம் அதனதன் இடத்தில் வைக்கப்பட்டு இருந்தன.

குளித்து முடித்து தலையைத் துவட்டிய படி வெளியே வந்தேன். அன்று நான் அணிய வேண்டிய பேன்ட்டும் ஷர்ட்டும் இஸ்திரி போடப்பட்டுத் தயாராக இருந்தன. பொருத்தமான நிறத்தில் டையும் பக்கத்திலேயே இருந்தது.

இப்போதுதான் என் மனதில் முதன் முறையாக ஒரு பயம் உதிக்க ஆரம்பித்தது. ஒருவேளை, மாலதி என்னை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து போய்விட்டாளோ? போகும்போது, அவளது அருமை தெரிய வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்துவிட்டுப் போயிருக்கிறாளோ?

எனக்குள் பகீரென்றது! நான் குடிகாரன்தான். மொடாக்குடியன்தான். சில சமயம் குடித்துவிட்டு வரும்போது, மாலதி ஏதாவது அட்வைஸ் செய்ய வந்தால், அவளைக் கண் மண் தெரியாமல் அடிக்கும் அளவுக்குக் கொடுமைக்காரன் தான். அதற்காக… என்னை விட்டு நிரந்தரமாக ஓடிவிடுவதா?

மாலதி, நீ இல்லாமல் நான் எப்படி வாழப் போகிறேன்! அதுவும், போகும்போது, இப்படி எல்லாவற்றையும் கச்சிதமாகச் செய்துவிட்டுப் போயிருக்கிறாயே… உன்னைப் பிரிந்து நான் வாழ முடியுமா?

மாலதி எங்கே இருந்தாலும், அவள் காலில் விழுந்தாவது கூட்டிக் கொண்டு வந்துவிட வேண்டியதுதான். ஆனால், வருவாளா? என்னைப் போல ஒரு குடிகாரன் தரும் வாக்குறுதிகள் தேர்தல் வாக்குறுதிகள் போலத்தானே! அதை நம்பி வருவாளா என்ன? எனக்குச் சுத்தமாக நம்பிக்கை இல்லை.

மாலதி என்னைக் கன்னாபின்னா என்று திட்டுவாள். ஆனால், அவள் வீட்டில் யாராவது என்னை ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், அவளுக் குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும்.

போன முறை மாமனார் வீட்டுக் குப் போயிருந்தபோது அவர் சாதாரணமாகத்தான் கேட்டார்… ‘‘ஏன் மாப்பிள்ளை, இப்படிக் குடிச்சுக் குடிச்சு உடம்பைக் கெடுத்துக்கறீங்க?’’

உடனே மாலதி அவரைப் பிலுபிலு வென்று பிடித்துக் கொண்டாள். ‘அது எப்படி நீங்கள் என் புருஷனுக்கு அட்வைஸ் பண்ணலாம்?’ என்று குத்திக் குதறிவிட்டாள்.

ஒரு முறை, ப்ளஸ் டூ படித்துக் கொண்டு இருந்த மாலதியின் தம்பி யிடம் நான் ஏதோ சுவாரஸ்யமாகப் சொல்லிக்கொண்டு இருந்தேன். அவன் கவனிக்காமல், வேறு எங்கோ பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அது எனக்குத் தெரியவில்லை. மாலதி பார்த்து விட்டாள். உடனே வேகமாக வந்து தன் தம்பியின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டாள்.

‘‘ஏண்டா, உன்னை யும் ஒரு மனுஷன்னு மதிச்சு மாமா பேசிட்டு இருக்காரு. வேடிக்கையா பாக்குற வேடிக்க..?’’

அவன் மட்டுமல்ல, நானுமே வெலவெலத்துதான் போனேன்.

உடையை அணிந்தபடி சமைய லறைக்குள் நுழைந்தேன். ஏதோ ஒரு பத்திரிகையை சுவாரஸ்யமாகப் படித்துக்கொண்டு இருந்த அனன்யா, மரியாதையாக எழுந்து நின்றாள்.

‘‘வாங்க மாமா, டிபன் சாப்பிட றீங்களா?’’

‘‘மாலதி எங்கே அனு?’’

‘‘உங்களுக்கு நண்டு வறுவல்னா ரொம்பப் பிடிக்குமாமே? அதான், தானே மார்க்கெட்டுக்குப் போய் நல்ல நண்டா பார்த்து வாங்கிட்டு வரணும்னு போயிருக்கா மாமா! நீங்க வந்தா உங்களுக்கு டிபன் எடுத்து வைக்கச் சொன்னா!’’

‘‘என்ன டிபன்?’’

‘‘உங்களுக்குப் பிடிச்ச அடை அவியல்!’’

எனக்கு எதுவுமே புரியவில்லை. நியாயமாகப் பார்த்தால், நேற்று நடந்ததற்கு மாலதிக்கு என் மேல் பழியாய்க் கோபம் வந்திருக்கவேண்டும். ஆனால், வரவில்லை. ஏன்?

நெய் மணத்தோடு அடை அமிர்த மாக இருந்தது. நான்கு அடைகளைக் காலி செய்துவிட்டு, ஃப்ளாஸ்க்கில் இருந்த காபியைக் குடித்துக்கொண்டு இருந்தபோது, அனன்யாவிடம் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தேன்…

‘‘அனன்யா, நேத்து என்ன நடந்துச் சுன்னே தெரியல!’’

‘‘ஆமா, பெரிசா என்ன நடந்துச்சு? வழக்கம்போல நீங்க நல்லா குடிச்சுட்டு, ராத்திரி ரெண்டு மணிக்கு வந்தீங்க. அது சரி, நீங்க எங்கே வந்தீங்க… உங்க ஃப்ரெண்ட்ஸ் உங்களைத் தூக்கிக் கொண்டு வந்து, ஹால்ல போட்டுட்டுப் போனாங்க.’’

‘‘ஐம் சாரி, அனு! அதிருக்கட்டும், மாலு என்ன பண்ணினா?’’

‘‘காச் மூச்னு கத்தினா! உங்க ஃப்ரெண்ட்ஸை ஒரு வழி பண்ணிட்டா. ஆனா, நீங்க நெனவில்லாம கெடந்தீங்க.’’

‘‘அப்புறம்…’’

‘‘நானும் மாலுவும் உங்களைத் தூக்கிட்டுப் போய், உங்க பெட்ல போட்டோம். நான் வெளிய போகும் போது, மாலு உங்க பேன்ட்டைக் கழற்ற ஆரம்பிச்சிருக்கா!

அப்ப உங்களுக்கு முழிப்பு வந்தி ருக்கு. ஆனா, முழுசா வரலை. பேன்ட் டைக் கழட்டறது மாலுன்னு உங்க ளுக்குத் தெரியலை. வேற யாரோ பொம்பளைன்னு நெனச்சு, பேன்ட்டைக் கழட்ட விடாம இறுக்கிப் பிடிச்சுக்கிட்டு, காச் மூச்சுனு கத்த ஆரம்பிச்சுட்டீங்க. என்னமோ ஏதோன்னு பயந்து போய் நான் ஓடி வந்து பார்த்தேன். மாலு பலமா உங்க பேன்ட்டை இழுத்துட்டி ருந்தா. நீங்க திடீர்னு ‘ஓ’ன்னு அழ ஆரம்பிச்சிட்டீங்க.

‘என்னை விட்டுரு. என்னை விடுடீ. இதோ பாரும்மா… நீ யாருன்னே எனக்குத் தெரியாது. நான் கல்யாணம் ஆனவன். என் பெண்டாட்டிக்கு எல்லாக் கொடுமையும் பண்ணிட்டேன். இந்த ஒரு கொடுமை மட்டும்தான் பண்ணல தாயீ… என் உணர்ச்சியோட வெளையாடி அந்தக் கொடுமையையும் பண்ண வச்சிராத. என்னை விட்ரும்மா, ப்ளீஸ்! என் பெண்டாட்டிக்கு துரோகம் பண்ண வச்சிராதம்மா..!’ன்னு கதறினீங்க. நீங்க பேசினதைக் கேட்டு மாலுவும் விசும்பி விசும்பி அழுதா..!’’

எனக்குத் திருமணமாகி இந்தப் பத்து வருடங்களில், முதன்முறையாக என்னவளின் மனம் முழுமையாகப் புரிந்தது. கண்கள் கசிந்தன.

– மார்ச் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *