எனக்கு எப்படி……?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 6,111 
 
 

இருட்டு எனக்கு இருட்டாய்த் தெரியவில்லை. பளீரென்று வெளிச்சமடிக்கும் பகலாய் இருந்தது. மனதில் அத்தனை மகிழ்ச்சி. ஆசைப்பட்டது நடக்குது அதுக்கு மேலேயும் அது தானாய் நடக்குதுன்னா…. மனசுல மகிழ்ச்சியும், புத்தியில பூரிப்பும் வராம என்ன செய்யும் ?

விசயத்துக்கு வர்றேன்.

எனக்கு ஆத்மார்த்தமான நண்பன் ஒருத்தன். நான் நகரம் அவன் கிராமம். தொலைவு என் இடத்திலேர்ந்து அஞ்சு கிலோ மீட்டர். அவன் அம்மா அப்பா குடும்பமே எனக்குப் பழக்கம். எங்களுக்குதி திருமணம் முடிஞ்சும் நட்பு மாறலை. மனiவி மக்களோடு இரண்டு பேரும் ஒருத்தொருத்தர் வீட்டுகளுக்குப் போய் வர்ற அளவுக்குப் பழக்கம், நெருக்கமாகிடுச்சு.
ஒரு நாள் திடீர்ன்னு அவன் என்னைத் தேடி என் வீட்டுக்கு வந்தான்.

”நான் துபாய் போறேன் !” சொல்லி எனக்கு அதிர்ச்சி கொடுத்தான்.

”ஏய் ! என்னடா எனக்குக் கூட தெரியாம எப்படி ?!”ஆச்சரியப்பட்டேன்.

”எனக்கும் எதிர்பாராததுதான். அதிர்ஷ்டவசமாய் அடுத்த ஊரு புரோக்கர் ஒருத்தன்..’…உன் படிப்புக்குத் தகுந்த வேலைக்கான விசா அஞ்சு வருச ஒப்பந்தத்துல இருக்கு. உடனே துபாய் போகனும். போறீயா ?’ கேட்டான். போகலாம் ஆனா கையில காசு இல்லை…தயங்கினேன். அதுக்கு அவன், வேலை விசாவைக் கையில கொடுத்ததும் கொடு சொன்னான். நானும் அசால்டா சரி சொன்னேன். பத்தே நாள்ல எல்லாத்தையும் முடிச்சு கையில கொடுத்து அடுத்தவாரம் விமானம்ன்னு நீட்றான்; என்னால நம்பவே முடியலை.” சொன்னான்.
எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்துது. ஆனாலும் பணத்துக்கு அடிபோடுறானோன்னு மனசுக்குள்ள சின்ன பயம். கேட்டாலும் கொடுத்துதானாகனும் ! துணிஞ்சு……

”எவ்வளவு பணம் தேவை ? ” கேட்டேன்.

”அதெல்லாம் வேணாம். வீட்ல பணம் இருந்துது. மிச்சம் மீதிக்கு மனைவி நகைகள் வைச்சு கொடுத்து வேலையை முடிச்சாச்சு. நாளைன்னைக்கு விமானம் ஏர்றேன்.” சொல்லி என் நெஞ்சுல பாலை வார்த்தான்.

”சரி. வேற ஏதாவது உதவி ? ” வலிய உதவுறதுதானே நட்பு ! ஏறிட்டேன்.

”அதைச் சொல்லத்தான் வந்தேன். நான் அஞ்சு வருசத்துக்குக் காணாப் பொணமாய் இந்த நாடு, காட்டை விட்டுப் போறேன். என் வீட்டுல என்னைத் தவிர வெளி வேலை செய்ய வேற ஆள் கிடையாது. அதனால… நான் திரும்பும்வரை நீ என் வீட்டுக்கு அடிக்கடிப் போய் என் அம்மா அப்பா மனைவி மக்களைச் சந்திச்சு, கவனிச்சு உதவி ஒத்தாசை செய்து, எனக்கு நல்லது கெட்டது சொல்லனும். எனக்கு உன்னைத் தவிர வேற ஆள் கிடையாது.” சொன்னான்.

”நண்பனுக்கு இதைக் கூடச் செய்யலைன்னா என்ன நட்பு ? தாராளமாய்ச் செய்யறேன் !” சந்தோசமாய்ச் சொன்னேன்.

எங்கள் பேச்சைக் கேட்டு வேலை செய்து கொண்டிருந்த என் மனைவி பாஞ்சாலியும்….

”இந்த உதவி ஒத்தாசைக்கூட இல்லேன்னா எப்படிண்ணா. நீங்க தைரியமாய்ப் போங்க. தினம் போய் கவனிச்சு வர நானே இவரைக் கிளப்பறேன். மாசத்துக்கு நாலைஞ்சு தடவை நானும் போய் பார்;த்து வர்றேன். உங்க குடும்பத்தைப் பத்தி கவலைப் படாதீங்க.” சொன்னாள்.

”இந்த உத்திரவாதம் போதும் தங்கச்சி!” அவன் திருப்தியாய் எழுந்தான்.

ஞாயிற்றுக்கிழமை. அவன் அம்மா அப்பா மனைவி மக்கள், நான், என் மனைவி எல்லாரும் ஒன்னாய்ப் போய் அவனை விமானம் ஏத்தி விட்டுத் திரும்பினோம். விமானம் ஏறும்வரை தன் அழுகையை அடக்கி இருந்த அவன் மனைவி வைதேகி…..திரும்பி வீடு வரும்வரை அழுதுகிட்;டே வந்தாள். என் மனைவிதான் அவளுக்கு ஆறுதல் தேறுதல் சொல்லி தேற்றி வந்தாள்.
கணவன் மீது எத்தனைப் பாசம் ?! சுற்றி இருந்த எல்லோருக்குமே அது கனத்தது.

சின்னஞ்சிறு வயசு. ஐந்து, ஆறு வயதில் இரு ஆண் மக்கள். பிரிவு, சுமை….எவருக்குத்தான் பொறுக்கும்; !

இந்த பரிவு பச்சாதாபம், அன்பு அக்கரையில், சனி ஞாயிறு வார விடுப்பு மத்த விடுப்புகள் மட்டுமில்லாமல் ஓய்வுகிடைத்த போதெல்லாம் கிராமத்திற்;குச் சென்று நண்பன் குடும்பத்தைப் பார்த்து அம்மா அப்பாவிற்கும் மகன் இல்லாத குறையைப் போக்கி……தண்ணி வரி, தொலைபேசி, மின்சார பில்…. மற்றும் இதர உதவிகள் செய்து, அவன் மனைவி மக்களுக்கும் வேண்டிய உதவிகள் செய்து…. தவிர்க்க முடியாதவைகளுக்கு அவர்களை என் இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்து தேவையானவைகள் வாங்கிக் கொடுத்து அப்படியே என் வீட்டில் காட்டி கொண்டு விட்டு வரும் வேலையையும் செய்தேன்.

இங்கேதான் பருவம் வேலை செய்து பஞ்சும் நெருப்பும் பத்திக்கிடுச்சு !

வைதேகிக்கும் எனக்கும் தொடுப்பாய்டுச்சு.

நட்புக்குத் துரோகம்ன்னு மனசுக்குள் உறுத்தல் இருந்தாலும்…வைதேகி வயசு… பிரிவு அஞ்சு வருசம் தாங்காது. நாம கவனிக்கலேன்னா வேற ஒருத்தன் கவனிச்சுடுவான். கவனிக்கிறதோட நிறுத்தாம காசு பணம் புடுங்கி… குடும்பத்தையேக் குட்டிச்சுவர் ஆக்கினாலும் ஆக்கிறதுக்கு வாய்ப்பிருக்கு. இது நாட்டுல நிறைய நடக்குது. இப்படிப்பட்ட பெண்களைக் குறி வைச்சு ஒரு கும்பல் அலையுது. நேரடியாய்ப் பேசி கவுக்கிறது மட்டுமில்லாம கைபேசியில பேசி சுலபமாய்க் கவுத்துடுறாங்க. அப்படி வைதேகி வெளிக்குப் பாய்ஞ்சு வீணாய்ப் போனால் நண்பன், நட்பு, உறவு மொத்ததுக்கும் அவமானம் தலைக்குனிவு. இந்த பழக்க உறவு வெளிக்குத் தெரியாது. அப்படியே ஆள் அம்மா அப்பாவுக்குத் தெரிஞ்சாலும் ‘தேனெடுக்கிறவன் புறம் கையை நக்காமல் இருக்கமாட்டான். உதவி செய்யறவன் அனுபவிச்சுப் போறது தப்பில்லே !’ விடுவாங்க. அதையும் மீறி பொறுக்காமல்…..மகனிடம் சொன்னால்….அவனும் மனைவி வெளிக்குப் பாயலைன்னு சந்தோசப்பட்டு கண்டுக்காம விடுவான்.

உன்னையும் மீறி வெளியே விட்டுடாதே! நெனைப்பான்.! நெனைச்சி…. தொடர்ந்தோம். இது இப்படி இருக்க…… வைதேகி மொத்தமாய்த் தின்ன ஆசைப் பட்டாப் போல.

”மாமனார், மாமியார் கண்ணுல மண்ணைத் தூவி இருக்கிறது என்னைக்கும் ஆபத்து. அடிக்கடி வெளியில் போய்த் தங்கி வர்றதும் செலவு, தப்பு. நம்ம உறவு மத்தவங்க கண்ணுல பட்டு உங்க மனைவி காதுல விழுந்தால் நாம ஒருத்தரை ஒருத்தர் நெருங்கக்கூட முடியாது. இதையெல்லாம் தவிர்த்து நாம இன்னும் நெருக்கமாய், நல்லா இருக்கனும்ன்னா நான் தனிக்குடித்தனம் வர்றது சரி. வாடகைக்கு வீடு பாருங்க.” சொன்னாள்.

என் மனசுக்குள்ளே திக். அதேசயம், வாளை மீன் வசமாய் வந்து வலையில மாட்டினா…யாருக்குக் கசக்கும். ? சந்தோசமாய் தலையாட்டினேன்.

இரண்டு நாள் கழிச்சு நானும் என் மனைவியும் நண்பன் வீட்டுக்குப் போனோம். அங்கே அவன் அப்பா, அம்மா, வைதேகி.. எல்லாரும் இருந்தாங்க.

நண்பன் அப்பா, ”தம்பி ! சரியான போக்குவரத்து வசதி இல்லாம என் பேரப்புள்ளைங்க இங்கிருந்து அங்கே பள்ளிக்கூடத்துக்கு வர ரொம்ப சிரமப்படுது. போக்குவரத்து அதிகம் இருந்தாலும் அஞ்சு , ஆறு வயசு புள்ளைங்களைத் தனியே விட பயம். காரு, வண்டி, வாகன வசதி அப்படி கன்னாபின்னான்னு பெருத்துப் போய், தாறுமாறாய் ஓட்டுறாங்க. யாரை நம்பியும் புள்ளைங்களை அனுப்ப முடியலை. வைதேகி தினம் வண்டியில கொண்டு விட்டு வர்றதும் சாத்தியமில்லே. காத்து மழை காலத்துல மொத்ததுக்கும் ஆபத்து. புள்ளைங்க பள்ளிக்கூடமே போக முடியாது. கிராமத்துல டியூசனுக்கும் வசதி இல்லே. என் மருமகள் ரொம்ப கஷ்டப்படுது. பேசாம புள்ளைங்க பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்துல வீட்டைப் பார்த்து வைதேகியைத் தனிக்குடித்தனம் வைக்கிறதுதான் எல்லாத்துக்கும் வழி. என்ன சொல்றீங்க ? ” கேட்டார்.

பெண்ணுக்கு எவ்வளவு புத்திசாலித்தனம்.! தான் நினைத்ததை அடைய…… என்னென்ன வழி வகைன்னு யோசிச்சு எப்படியெல்லாம் காய் நகர்த்தல்!? – எனக்குள் ஒரே பிரமிப்பு.

”சரிப்பா !”… தலையாட்டினேன்.

உள் குத்து, விபரம் புரியாத என் மனைவி, ”ரொம்ப நல்ல முடிவு. என்னதான் சொத்து சொகம் தேடி வைச்சாலும் இன்னைக்குப் புள்ளைங்களுக்குப் படிப்பு முக்கியம். இது நல்ல முடிவு. நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க ஏற்பாடு பண்றோம் !” சொன்னாள்.

பாஞ்சாலியே எங்களுக்குப் பச்சைக்கொடி காட்றாளே! நினைச்சு சந்தோசப்பட்டாலும்… அவ அப்பாவித்தனத்துக்கு என் மனசுக்குள் சின்ன வலி, பாவம், பரிதாபம்.!

”சரி.” கிளம்பினோம்.

அப்புறம்… வைதேகி இந்த வாடகையிலும் சின்ன திருத்தம் செய்தாள்.

”ரொம்ப தூரம் இல்லாம உங்க வீட்டுக்குப் பக்கத்திலேயே…வீடு கிடைச்சா ரொம்ப சவுகரியம். உங்க வீட்டுல ஆளில்லாத சமயம் இந்த வீட்டுக்கு வந்திடலாம்! ” சொன்னாள்.

”இதுவும் அற்புதமான யோசனை. ஆனா…சின்ன ஆபத்து! ” தயங்கினேன்.

”எல்லாம் நான் யோசிச்சாச்சு. எது வந்தாலும் நான் சமாளிச்சுக்கிறேன். நான் சொல்றபடி நடங்க. ” சொன்னாள்.

நானும்… மகளே சமர்த்து. மருமகளே நகர்த்து ! வந்தேன்.

விசயத்தை பாஞ்சாலியிடமும் சொன்னேன்.

”அடிக்கடி நானும் போய் வர….பழக வசதி !” சந்தோசப்பட்டாள்.

ஒரு சுபயோக சுபதினத்தில் வைதேகி எங்க வீட்டுக்கும் அடுத்தத் தெருவுக்குக் குடி வந்தாள். நான்; போய் சாமான் சட்டுகளை ஒரு மினி வேன்ல அள்ளி போட்டு வந்தேன். அதுகளை ஓர ஒதுங்க வைக்க…. பாஞ்சாலி கொஞ்சம் ஒத்துழைச்சாள். அப்புறம்… என்னை விட்டுட்டு தன் வீட்டு வேலையைப் பார்க்கப் போனாள். நானும் வைதேகியும்; எல்லாத்தையும் எடுத்து வைச்சோம். முடியலை. ராவாச்சு.

பாஞ்சாலியும் புள்ளைங்களும் என்னைத் தேடியே வந்துட்டாங்க.

நானும் கிளம்பினேன்.

உடனே…வைதேகி, ”அக்கா! ஒரு உதவி. புது இடம். ஊர்ல திருடர் பயம் வேற….துணை இல்லாம படுத்தால் தூக்கம் வராது. நீங்களும் புள்ளைங்களும் நாலு நாட்களுக்கு ராத்திரி எங்களோடு படுங்க. அத்தான் உங்க வீட்டுல படுக்கட்டும். பழகின பின் துணை வேணாம.” சொன்னாள்.

அதுக்கு என் மனைவி அன்பு அக்கரையாய், ”எனக்கு தனியே படுக்கப்பயம் கிடையாது. குழந்தைங்களோடு அங்கே படுக்கறேன். இவர் இங்கே இருக்கட்டும். ஆம்பளைத் துணை இருக்கிறதைப் பார்த்து…. ஒரு திருடனும் திரும்பிப் பார்க்கமாட்டான். நெருங்க மாட்டான்!” சொன்னாள்.

”அக்கா..!” வைதேகி தயங்கினாள்.

நானும்….. ”பாஞ்சாலி !” பயந்தேன்.

”எதுக்கு ரெண்டு பேருக்கும் வீண் பயம், தயக்கம். ? நான் சந்தேகப்பட்டால்தான் பிரச்சனை. படமாட்டேன்.! என் குடும்பத்தை விட்டு இவர் பொழுதுக்கும் இங்கேயே இருந்தாலும் எனக்குக் கவலை இல்லே. நண்பருக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாத்தனும். அதுக்கு அவர் பொண்டாட்டி புள்ளைங்களை குடல்ல வைச்சாவது காப்பாத்தனும்.!” சொல்லிப் போனாள்.

இப்போ சொல்லுங்க ? விபரம் தெரியாம பொண்டாட்டியே புருசனைத் தூக்கி பக்கத்து வீட்டுக்காரியிடம் விட்டுப் போனால்…..இருட்டு பகலாய்த் தெரியாமல் என்ன செய்யும் ?

என்னதான் அடுத்த வீட்டுல அதிக சந்தோசமாய் இருந்தாலும் நம்ம வீட்டு நெனைப்பு வருமில்லையா ? இப்போ எனக்கு அந்த உதைப்பு.

ராத்திரி பாதி சாமம். திருட்டுக்குப் பயந்து மனைவி நிம்மதியாய்த் தூங்கறாளான்னு பார்க்கப் புறப்பட்டேன்.

படுக்கை அறையில விளக்கு எரியுது.

‘பாவம் பாஞ்சாலி ! அங்கே தைரியமாய்ப் பேசி புருசனை இன்னொரு வீட்டுக்குக் காவல் வைச்சுட்டு…. இங்கே தைரியத்துக்கு விளக்கைப் போட்டுத் தூங்கறாள் !’ நெனைச்சி சத்தம் போடாமல் சன்னல் கதவை மெல்ல விளக்கிப் பார்த்தேன்.

தீயை மிதித்த….அதிர்ச்சி.

கட்டில்ல நெருக்கமாய் பக்கத்து வீட்டுக்காரன். அவன் மடியில அரைகுறையாய் பாஞ்சாலி…..

”இனி பயம் இல்லே. கவலை வேணாம். ராத்திரியானால் என் வீட்டுக்காரருக்கு அங்கே காவல். உங்களுக்கு இங்கே வேலை !” சொன்னாள்.

எனக்கு சட்டுன்னு தலை சுத்தல், மயக்கம் ! தட்டுத்தடுமாறி உட்கார்ந்த எனக்கு அடுத்து தலையில் இன்னொரு பெரிய இடி.

சரி. நாமும் சரி இல்லே. மறப்போம் மன்னிப்போம்ன்னாலும்…..இப்படிப்பட்ட அதி புத்திசாலி பொம்பளைங்களாலதான் சமீப காலமாய் கள்ள உறவு….. கணவன் கொலை! ன்னு ஆம்பளைங்க சாவு அதிகம்.!

எனக்கு எப்படி ? நினைக்க……. தலை கிர்.

Print Friendly, PDF & Email
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *