எனக்குள் எதிரி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2022
பார்வையிட்டோர்: 5,182 
 
 

ஜெயந்தன் சிந்தனையில் இருந்தான். விரல்களுக்கிடையில் சிகரெட் புகை காற்று இல்லாததால் ஒற்றை நூலாகி உயர்ந்து கலைந்து கொண்டிருந்தது.

தொலைபேசி ஒலிக்க அது அவனது கவனத்தைக் கலைக்கவில்லை தொலைபேசி தொடர்ந்து அழைக்க கிரைண்டரில் வழித்த மாவுக்கையை உயர்த்திப் பிடித்தபடி வந்த அம்மா, இடது கையால் ரிசீவரை எடுத்து, “ஹலோ, சொல்லுங்க… நான் அவன் அம்மாதான் பேசறேன்… அப்படியா? சரி, ரொம்ப சந்தோஷம் ஸண்டே அவனுக்கு சொகரியப்படுமான்னு கேட்டு நானே போன் பண்றேன்.”

வைத்துவிட்டு அவனை பார்த்தாள் அம்மா.

“ஆர்த்தியோட அம்மா பேசினாங்கப்பா? ஆர்த்தியோட மாமா வந்து உன்னைப் பார்த்துப் பேசணுமாம். உனக்கு வர்ற ஞாயித்து கிழமை சொகரியப்படுமான்னு கேக்கறாங்க.

இங்க பாரும்மா… நானே டென்ஷன்ல இருக்கேன். என்னைத் தொந்தரவு பண்ணாதே. நீ போட்டு அரிச்சியேன்னுதான் உன்கூட பொண்ணு பார்க்க வந்தேன். இந்தக் கல்யாணத்தில் அவசரம் காட்டாதே!”

“அதெப்படி? நமக்கும் பிடிச்சிருக்கு. அவங்களுக்கும் பிடிச்சிருக்கு. நிச்சயம் பண்ண வேண்டிய சமயத்துல அவசரம் காட்டாதேன்னா எப்படி?”

“அம்மா, என் பிரச்சினை எனக்கு ஆறேழு மாசம் போகட்டுமே.”

“அப்படி என்ன பிரச்சினை உனக்கு?”

“சொன்னாலும் உனக்குப் புரியாது.”

“அதெல்லாம் எனக்கு தெரியாது. ஸண்டே ஈவினிங் நீ வீட்டுல இருந்தாகணும். நான் போன் பண்ணிச் சொல்லிடறேன்.”

ஜெயந்தனின் தோளைத் தொட்டு, “எக்ஸ்யூஸ்மீ… எனக்கொரு தாலி வாங்கித் தருவியா,” என்று அந்தப் பெண் கெஞ்சலாக கேட்டதும், ஜெயந்தன் திடுக்கிட்டுப் பதிலுக்கு வார்த்தை தேடினான்.

“தப்பா எடுத்துக்காதீங்க தம்பி என் பொண்ணுதான் இங்க ட்ரீட்மெண்டுட்டுக்காக… என்றார் அவளருகிலிருந்த பெரியவர்.

“பரவாயில்லை ” என்றவன். அடுத்த நாற்காலிக்கு மாறி உட்கார்ந்து, டீப்பாயில் கிடந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டான்.

“ஜெயந்தன் யாரு?” என்றாள் வரவேற்பாளினி. காதுகளில் மகா வளையங்கள் ஊஞ்சலாட.

“நான்தான்…”

“டாக்டர் கூப்பிடறாரு. போங்க சார்” மீண்டும் ஊஞ்சல்.

அடுத்தவர் கால் மிதிக்காமல் அவசரமாக நடந்து, டாக்டர் கார்த்திகேயனின் பெயர் தாங்கிய கதவு தள்ளி உள்ளே வந்தான்.

மேஜைக்கு மட்டும் விளக்கு . டாக்டரின் தாடியில் நரை. சுவர்களில் ஆழமான ஆனால் புரியாத சித்திரங்கள்.

ஜெயந்தன் தயங்கி நிற்க டாக்டரின் விழிகள் புன்னகைத்தன. தாடிக்குள் உதடுகள் அசைவது தெரியவில்லை . ஆனால் ஓசை வந்தது. யெஸ்” என்று.

அவன் உட்கார்ந்தான்.

“என் பேரு ஜெயந்தன்.

என் பிரச்சனை இதுதான் டாக்டர்… முன்னப்பின்ன அறிமுகமே இல்லாத சிலபேரை பார்க்கிறப்போ, இந்த ஆளை குத்திக் கொல்லலாமான்னு எனக்குள் ஒரு கில்லிங் இன்ஸ்டிங்ட் வருது டாக்டர். ஒரு கொலை இச்சை! ஏன் வெறின்னே கூட சொல்லலாம்…”

“இருங்க, நீங்களே வார்த்தைப் படுத்தாதீங்க. சமீபத்துல அந்த மாதிரி எண்ணம் உங்களுக்கு எப்ப வந்துச்சி? அந்த சமயத்துல நீங்க என்ன உணர்ந்தீங்கங்கிறதை மட்டும் எக்ஸ்ஸாக்டா சொல்லுங்க.”

“நேத்துக்கூட டாக்டர், என்னோட ஸ்கூட்டருக்கு பங்க்ல பெட்ரோல் போட்டுட்டு இருந்தேன் டாக்டர். எனக்கு பக்கத்துல ஒரு கார். அந்த கார்ல இருந்தவனை நான் முன்னபின்ன பார்த்ததே கிடையாது. திடீர்னு அவன் சட்டையைப் பிடிச்சி இழுத்துப்போட்டு எதாவது ஒரு ஆயுதத்தால் அவன் மண்டையைப் பொளக்கலாமான்னு தோணிச்சி டாக்டர்.”

“இந்த மாதிரி எத்தனை நாளா இருக்கு?”

“ஒரு வருஷமாவே இருக்கு டாக்டர். முந்தியெல்லாம் எப்பயவாது ஒரு முறை வரும். இப்பல்லாம் அடிக்கடி வருது….”

“எந்த மாதரி நபர்களைப் பார்த்தா உங்களுக்கு அந்த மாதிரி தோணுது? குறிப்பாக ஆண்கள்தானா?”

“இல்லை டாக்டர். பெண்கள் கூட சமயத்துல சினிமால பார்க்கிற கதாபாத்திரங்கள் மேல கூட அப்படி ஒரு வெறி வருது….”

“ஐ ஸீ.. நீங்க கொல்ல நினைக்கிற நபர்கள் எந்த ஏஜ் குரூப்ல இருக்காங்க?”

“அன்னிக்கு பனகல் பார்க்கல கைத்தடி ஊனிக்கிட்டு எழுபது வயசு தாத்தா வந்துட்டு இருந்தாரு. அவரோட கைத்தடியையே பிடுங்கி அவர் மண்டைல அடிக்கணும்னு தோணிச்சி. இவ்வளவு ஏன்? என்னோட சிஸ்டருக்குப் பொறந்த குழந்தையைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போனேன். பக்கத்து பெட்ல டோக்கன் நெம்பர் கட்டின ஒரு பிஞ்சுக் குழந்தையை அப்பதான் கொண்டாந்து படுக்க வெச்சிருந்தாங்க. நியூ பார்ன் பேபி. அந்தக் குழந்தை தலையில் டார்ச் லைட்டால அடிச்சிக் கொன்னுட்டா என்னன்னு தோணிச்சி டாக்டர்….”

ஜெயந்தன் குற்றவுணர்வோடு தலை குனிந்தான். உள்ளங்கை ரேகையில் விரலை ஒட்டினான்.

“இந்த மாதிரி தாட்’ என் மனசுல வந்திச்சின்னா நாலு நாளைக்க அப்செட் ஆயிடுறேன் டாக்டர். ஏன் டாக்டர் எனக்கு இப்படித் தோணுது? வாட்ஸ் ராங் வித் மீ?”

ஜெயந்தனின் தொண்டை அடைத்தது. வார்த்தைகள் பிசிறின.

“கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருங்க. நீங்க என்ன வேலை பார்க்கிறீங்க?”

“பில்டிங் என்ஜினியர் டாக்டர்.”

“ஐஸ்… சமீபத்துல எதாவது விபத்தை நீங்க கண்ணால் பார்த்தீங்களா? இல்ல. உங்களுக்கே ஏதாவது விபத்து ஏற்பட்டிச்சா?”

“விபத்துன்னு ஒண்ணும் பெரிசா இல்ல டாக்டர். கதவுல சுண்டு விரலை நசுக்கிக்கிட்டதை ஒரு விபத்துன்னு சொல்ல முடியாதுன்னு நினைக்கிறேன்.

அவனது நகைச்சுவையை டாக்டர் ரசிக்கவில்லை.

“ம்ம்… நீங்க என்ன மாதிரி படங்கள் பார்ப்பீங்க?”

“ஃபுல் அன் ஃபுல் காமெடி பிக்சர்ஸ்தான் எனக்குப் பிடிக்கும் டாக்டர். படிக்கிற புக்ஸ் கூட காமெடி புக்ஸ்தான்…”

“முதன் முதலா எந்த நபரைப் பார்த்தப்போ உங்களுக்கு அந்த மாதிரி எண்ணம் வந்துச்சி. ஞாபகம் இருக்கா?”

“நல்லா ஞாபகம் இருக்கு டாக்டர். நான் சண்டிகர் போயிருந்தேன் டாக்டர். அங்க ரோஸ் கார்டன்னு ஒரு கார்டன் இருக்கு. அங்க சுத்திப் பார்த்துட்டு இருந்தேன். அப்ப ஒரு ஜோடி கேமிரா கொடுத்து, அவங்களை ஜோடியா போட்டோ எடுக்கச் சொன்னாங்க. அவங்களை கேமிரா வழியா பார்த்தப்போ, அந்த கேமிராவாலயே அவனை அடிச்சிக் கொல்லலாமான்னு தோணிச்சி டாக்டர். அதான் முதல் தடவை…! ”

“அந்த மாதிரி எண்ணம் வர்றப்போ உங்களால் கண்ட்ரோல் பண்ண முடியுது இல்லையா? ஒரு தடவையும் செயல்ல இறங்கினது இல்லைதானே?”

“இதுவரைக்கும் இல்லை. ஆனா இன்னிக்கு சிந்தனையில் இருக்கிற இந்த வெறி திடீர்ன்னு செயலா மாறிட்டா? பயமா இருக்கு டாக்டர். ஹெல்ப் மீ. எனக்குள்ளேயே இருக்கிற அந்த எதிரி யாரு? அவனைத் துரத்துங்க ப்ளீஸ்…”

“பயப்படாதீங்க. சரி பண்ணிடலாம். இது ஒரு வகை மெண்ட்டல் இம்பாலன்ஸ்! மனசு இருக்கே அது ஒரு அபூர்வமான, புதிரான விஷயம். சின்ன குழந்தைங்ககிட்ட ஒரு காரியத்தை செய்யாதேன்னு சொன்னாதான் அவங்க திரும்பத் திரும்ப அதைச் செய்வாங்க. அந்த மாதிரி முதல் முறையா தேவை இல்லாம ஒரு நெகட்டிவ் தாட். உங்க மனசுல வந்துச்சி. அதுக்கு உடனே நீங்க, ஏன் இப்படி ஒரு எண்ணம் வந்துச்சினு கவலைப்பட்டு, அந்த எண்ணத்துக்க நீங்க எதிர்ப்பு தெரிவிச்சிங்க இல்லையா? அதனால் அந்த எண்ணம் அடம் பிடிச்சி மறுபடி மறுபடி வருது. இது ஒரு வகையான அப்ஸெஸன்!”

பிரிஸ்கிரிப்ஷன் பேடை தன்னருகில் இழுத்துக் கொண்டார். பென் ஸ்டாண்டில் இருந்த பேனாவை உருவிக் கொண்டார் டாக்டர்.

“நீங்க சொன்னதுல ஒரு விஷயம் காமனா இருக்கு. யாரா இருந்தாலும் மண்டையில் தாக்கணும்னு தாட் வருது. அதனால் நான் மறுபடி கேக்கிறேன். யாராவது உருட்டுக் கட்டையால யாரையாவது மண்டைல தாக்கினதை நேர்ல பார்த்திருக்கிங்களா? நல்லா யோசிச்சி சொல்லுங்க….”

“அப்படி ஞாபகம் இல்லையே டாக்டர்.”

“ஓ.கோ. நான் உங்களை ஜென்ரலா ஒரு செக்கப் பண்றேன். அதுக்கப்புறம் நான் உங்களுக்கு சில மனப் பயிற்சிகள் கொடுக்கறேன். அதைத் தொடர்ந்து செஞ்சிட்டு வாங்க. சில டாப்லெட்ஸ் எழுதித் தர்றேன்…”

டாக்டர் எழுதத் துவங்கினார்.

எவ்வளவு அடர்த்தியான மீசை ஆர்த்தியின் விரல் ஜெயந்தனின் புகைப்படத்தின் மீசையைத் தடவியது.

“அக்கா… மாமா வந்திருக்காரு…”

அழைத்துக் கொண்டு வந்த அனிதா, ஆர்த்தியின் கையிலிருந்த புகைப்படத்தை பார்த்தாள்.

“அய்… அத்தானோட படத்தை சைட் அடிச்சிட்டு இருக்கியா?”

“ஏய் சும்மா இரு வாலு!”

அவளை அதட்டியபடி புத்தகத்தினுள் புகைப்படத்தை வைத்துவிட்டு ஹாலுக்கு வந்தாள் ஆர்த்தி.

“வாங்க மாமா…”

என்றபடி அம்மாவின் அருகில் வந்து நின்று கொண்டாள் ஆர்த்தி

“ஏன் அக்கா, மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்து ஆர்த்தியைப் பார்த்தாங்க. அவங்களுக்கு பிடிச்சிப் போச்சி. உங்க எல்லோருக்கும் மாப்பிள்ளையைப் பிடிச்சி போச்சி. அப்புறம் நான் வேற எதுக்குப் போய் மாப்பிள்ளையைப் பார்க்கணும்னு பிடிவாதம் பிடிக்கிறே?” என்றார் மாமா.

“நீ இல்லாம இந்த வீட்டுல எதாவது காரியம் நடந்திருக்கா? அவங்க பொண்ணு பார்க்க வந்தப்ப நீ ஊர்ல இல்ல. அதனாலதான் நீ ஒரு தடவை மாப்பிள்ளையைப் பார்த்துட்டு வந்துடுனு சொல்றேன். சரி சீக்கிரம் புறப்படு. ராகு காலத்துக்குள்ளே நீ மாப்பிள்ளை வீட்ல இருக்கணும்”. என்றாள் அம்மா.

அவர் எழுந்து கொண்ட போது ஓடி வந்தாள் அனிதா.

“மாமா அக்கா புக்குக்குள்ள மாப்பிள்ளையோட போட்டோ மறைச்சி வெச்சிருக்கா. பாருங்க.”

“எங்கே கொண்டா! மாப்பிள்ளையை நேர்ல பார்க்கறதுக்கு முன்னாடி ஒரு தடவை போட்டோவ பார்த்துடறேன்…”

அனிதாவிடமிருந்து புகைப்படத்தை வாங்கியபடி,

“எனக்கென்னமோ நான் ஒரு தடவை போய் பார்க்கிறது தேவையான்னுதான் தோணுது” என்றார் மாமா. “என்ன நீ புரியாம பேசிட்டு இருக்கே, நீ ஒரு சைக்யாட்ரிஸ்ட்டு ஆச்சே. நீ ஒருத்தரைப் பார்த்து பத்து நிமிஷம் பேசினாலே அவங்க மனப்போக்கு எப்படின்னு கரெக்டா கணிச்சி சொல்லிடுவியேன்னுதான் உன்னைப் போகச் சொல்றேன்” என்றாள் அம்மா

“அதுவும் சரிதான்” என்று போட்டோவைப் பார்த்த மாமா கார்த்திகேயன் சட்டென்று அமர்ந்துவிட்டார். பெருமூச்சு விட்டார்.

“ஜெயந்தன்தானே இவன் பேரு? இவனை எனக்குத் தெரியும். இவன் என்னோட பேஷண்ட்டுக்கா. இவனுக்கு மனசுல ஒரு பிரச்சினை இருக்குக்கா. தொழில் ரீதியாப் பார்த்தா இதை நான் உங்ககிட்ட சொல்றது தர்மம் இல்லை. ஆனா சொல்லாம் இருக்கிறது இந்தக் குடும்பத்துக்கு நான் செய்ற துரோகம் வேணாம்மா. இந்தப் பையன் வேணாம். வேற் இடம் பார்க்கலாம்…”

போட்டோவை தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

“ஓ.கே. நான் உங்களை ஜென்ரலா ஒரு செக்கப் பண்றேன். அதுக்கப்புறம் நான் உங்களுக்கு சில மனப் பயிற்சிகள் கொடுக்கறேன். அதைத் தொடர்ந்து செஞ்சிட்டு வாங்க. சில டாப்லெட்ஸ் எழுதித் தர்றேன்…”

“கட்” என்றார் டைரக்டர் வெங்கட் கேமராமேனுக்கு அடுத்த ஷாட்டிற்கான குறிப்புகளைச் சொல்லி விட்டு தள்ளி நின்றிருந்த ஜெயந்தன் அருகில் வந்தார்.

“கையை கொடுங்க ஜெயந்தன். இந்த சீன்ல டயலாக் பிரமாதமா வந்திருக்கு. மெடிகல் டெர்ம்ஸ் எல்லாம் எப்படி கரெக்டா எழுதினீங்க?”

“எனக்கு அனுபவமே இல்லாத சீனு. மண்டையைப் போட்டு உடைச்சிக்கிட்டேன். கடைசில நானே ஒரு பேஷண்ட் மாதிரி ஒரு சைக்யாட்ரிஸ்டைப் போய்ப் பார்த்தேன். கதைப்படி ஹீரோவுக்கு உள்ள பிரச்சினையை என் பிரச்சினையா சொல்லி நடிச்சேன். அவரு கேட்ட கேள்விகளை அடிப்படையா வெச்சி டயலாக் எழுதிட்டேன் சார்…”

“கங்கிராஜுலேஷன்ஸ்… ஆ…. மறந்துட்டேனே. நேத்து உங்க அம்மா கிட்ட போன்ல பேசினப்போ சொன்னாங்க. உங்களுக்கு பொண்ணு பார்த்திருக்காங்களாமே. ஆல் தி பெஸ்ட்” என்று கை குலுக்கினார் டைரக்டர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *