கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 12, 2023
பார்வையிட்டோர்: 3,435 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

4. அதென்னமோ நெசந்தானுங்க சாமி | 5. நான் யார் மேலயும் ஆசைப்படலே |  7. ஏய் நாஞ்சொல்றதைக் கேளு

“ஏன் மல்லிகா, போனை எடுக்குறதுக்கு இவ்ளோ லேட்டு? ரெண்டு தடவை ரிங் விட்டுட்டேன்” 

“ஐயோ சாரிங்க. இப்போதான் கம்பெனியில இருந்து வந்து எங்கம்மா தோசை சுட்டு வெச்சிருந்துதுங்க. பசியே இல்ல. அம்மா வெறும் வவுத்தோட படுத்தா சத்தம் போடுமுன்னு ரெண்டு தோசை சாப்பிட்டு வட்டலைக் கழுவப்பட்டிக்குப் போனேன். சத்தம் கேட்டுச்சு. அப்படியேவா விட்டுடு வர்றதுன்னு கழுவிக் கொண்டாந்து வந்து வெச்சுட்டு எடுத்தேன்.” 

“அப்போ செல்லு எங்க இருந்துது?” 

“டிவி பொட்டிகிட்ட வச்சிருந்தேன். நீங்க படுத்தாச்சா?” “நான் இன்னும் படுக்கலை. எங்க வீட்டுப் பக்கத்துல பழைய ஆட்டாங்கல் மேல உட்கார்ந்துட்டு இருக்கேன்” 

“பூச்சி பொட்டு இருக்கப்போவுதுங்க சாமி” 

“காலைத் தொங்கப்போட்டு எப்பவுமே இதுமேல உட்கார மாட்டேன். சம்மணம் போட்டுத்தான் உட்கார்ந்திருப்பேன். இந்த வீதி லைட்டு ஏனோ ஒரு வாரமா எரியறது இல்ல. நெலா வெளிச்சமும் கம்மியாதான் இருக்குது மல்லிகா’ 

“அப்படின்னா வீட்டுக்குள்ள வந்துடலாம்ல? உஸ்சு உஸ்சுங்குது உங்க போனு” 

“வெளிய நல்லாக் காத்து வீசுது மல்லிகா. நான் பேசுறது கேட்கலையா?” 

“இல்ல.. இல்ல.. கேட்குது. முன்ன ஏதோ செவுட்டுப் பொண்ணைப் போயி கோபியிலயோ எங்கியோ பார்த்துட்டு வந்ததா சொன்னீங்களே? அது மாதிரி என்னையும் செவுடுன்னு நெனச்சிங்ளா?” 

ஓ.. உனக்கு அதையும் சொல்லீட்டனா? இன்னும் என்ன என்ன தான் சொல்லியிருக்கேன்?” 

“உங்க விசயம் எல்லாமும் எனக்குச் சொல்லிட்டீங்க” 

“அப்போ என் வாய் ஓட்ட வாய்ங்றே?” 

நான் அப்படிச் சொல்லலீங்க. நீங்களா நெனச்சிட்டா ஒன்னும் பண்ண முடியாதுங்க சாமி” 

“நான் தான் மெனக்கெட்டுக் கல்யாணம் பன்ற பொண்ணாச்சேன்னு என்னோட விசயம் பூராத்தியும் பேசியிருக்கேன். ஆனா நீ மட்டும் வெளிப்படியா எதையும் சொல்றதில்லே மல்லிகா” 

“நான் தான் சொல்லிட்டேன்ல. இன்னும் என்ன சொல்லணும்” 

“என்ன சொன்னே?” 

“என்னை ஆறு பேர் இந்த ஒரு வருசத்துக்குள்ள பொண்ணு பார்க்க வந்துட்டுப் போயிட்டாங்கன்னு” 

“அது சொன்னே மல்லிகா. என்னமோ உன் ஜாதகம் சிம்மராசி, இன்னம் என்னமோ சொன்னியே நட்சத்திரம் என்ன?” 

“மகம்” 

“ம். மகம். வீட்டுக்கு வந்தா எல்லாம் இந்த பொண்ணு சொல்றபடிதான் நடக்கும்னு போயிட்டாங்கன்னு சொன்னே. அதைய யாரு கேட்டா?” 

“நான் எதாச்சும் உங்ககிட்ட மறைச்சு வெச்சுப் பேசுறதா நீங்க இப்ப நினைச்சுட்டுப் பேசறீங்களா?” 

“அப்படி நினைக்கல. யாரையுமே நீ விரும்பலையா?” 

“இந்தத் தமாஸ்ல எல்லாம் நடிக்கிறாப்லைல்ல விவேக், அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்குப் பிடிக்குதுன்னு அவரைப் போய் நான் கட்டிக்கவா முடியும்? சொல்லுங்க. கம்பெனில பசங்க மலையாளம் பேசுறாங்க, ஹிந்தி பேசுறாங்க. ஒன்னும் எனக்குத் தெரியறதில்லே. திருப்பூர்ல, பல்லடத்துல எல்லாம் கம்பெனிக்குப் போற புள்ளைங்க எல்லாருமே லவ் பண்ணீட்டுச் சுத்துறாங்கன்னு நினைச்சுட்டுப் பேசறீங்ளா? இங்க பாருங்க சாமி. நான் யார் மேலயும் ஆசைப்படலை” 

“இப்போ விவேக்குன்னு சொன்னே?” 

ஆமா விவேக்கை எனக்குப் புடிக்குது. எனக்கு நீங்களே 

ஏற்பாடு பண்ணிக் கட்டிவயுங்க” 

“கட்டி வெச்சுட்டா நீ எனக்கு டாட்டா காட்டிட்டுப் போயிடுவே. அப்புறம் நான் என்ன பண்றது?” 

“தெரியுதுல்ல. அப்படின்னா கம்முன்னு என்னைக் கட்டிக்குங்க” “அப்படின்னா நீ யாரையும் லவ் பண்ணலை?” 

“நான் யாரையும் லவ் பண்ணலை” 

“என்னையுமா?’ 

“என்ன நீங்க, இப்படி எல்லாம் கேட்டுட்டும் பேசிட்டும் இருக்கீங்க?” 

“சரி நானே கேட்கறேன். நாம போன்ல ரெண்டு மாசமா பேசிட்டு இருக்கிறோம்” 

“ம். சொல்லுங்க” 

“தினமும் பத்து மணிக்குக் கூப்பிடறேன். பத்து மணி ஆகறப்ப உனக்கு, நான் போன் பண்ணுவேன்னு ஆசையா இருக்கும்ல?” 

“நீங்க போன் பண்ணுவீங்க, பேசணும்னு தோணும்” 

“ஆசையா இருக்காதா?” 

“அதை எப்படிச் சொல்றதுன்னு தான் எனக்குத் தெரியலங்க. பத்து மணிக்குக் கூப்பிடுவீங்க. பேசுறேன். மீனா புள்ளை ரெண்டாவது வீதியில இருக்கா. அவ தான் எங்கம்மாகிட்ட போன் நெம்பர் இந்த மாதிரி விசயமங்கலத்துல கேட்கறாங்க, குடுக்கலாமான்னு அம்மாவும் நல்ல ஆளுன்னா குடுத்துடுங்காட்டிதான் அந்தப் பொண்ணு உங்க ஊர் பையனுக்குக் குடுத்துச்சு. எனக்கு அந்தப் பையன் கூட யாருனு தெரியாதுங்க. எங்கம்மா கூடக் கேட்டுச்சுங்க” 

“என்னன்னு உங்கம்மா கேட்டுச்சு?” 

“போன் நெம்பர் இந்த மீனா புள்ளை வாங்கீட்டுப் போச்சே. அங்க இருந்து பேசுனாங்களா? எப்ப வர்றாங்களாம்னு கேட்டுச்சு” 

“நம்ம ஆளுங்காட்டிதான் பேசிட்டு இருக்கே நீ?’ 

“பின்ன யாருகிட்ட பேசச் சொல்றீங்க நீங்க? கல்யாணம் பண்ற மாதிரி இருந்தாதான் பேசமுடியும். இல்ல மலையாளத்தான் கிட்டயும் கவுண்டப் பையன் கிட்டயும் ஐயர் பையன்கிட்டையுமா நான் பத்து மணிக்கு மேல பேசிட்டு இருக்க முடியும்? எங்க மச்சானும் அக்காவும் கூடப் போன வாரம் கேட்டாங்க” 

“அவுங்க என்ன கேட்டாங்க?” 

“எப்போ வர்றாங்களாமா? எத்தனை பேரு வர்றாங்ளாமான்னு தான்.” 

“நீ என்ன சொன்னே?” 

“தெரியல. ரெண்டு வாட்டியோ என்னமோ பேசினாங்க. இந்த மாசத்துல நல்ல நாள் இல்லையாமான்னு சொன்னேன்” 

“உனக்குக் கல்யாணம் பண்றதுல ஸ்பீடா இருக்காங்கன்னு சொல்லு” 

“எனக்கும் வயசு இருபது ஆயிடிச்சில்ல. அவுங்க அப்புறம் அவசரப் படாம இருப்பாங்களா?” 

“சரி. இங்க வாரம் நானும் சின்னச்சாமியும் ஞாயிற்றுக்கிழமை வர்றோம்” 

“உங்க அப்பா அம்மா வரமாட்டாங்களா?” 

“அம்மா பவானில இருக்குது. அவ்ளோ தூரம் வராது. அப்பா காட்டு வேலைக்குப் போயிடும்” 

“எவ்ளோ தூரம்? பல்லடம் எல்லாம் ஒரு தூரமா?” 

“மூனு பஸ் மாறி வரோணுமில்ல. இங்கிருந்து திருப்பூர் வரணும். திருப்பூர்ல இருந்து பல்லடம் பஸ் ஏறணும். அங்கிருந்து மினி பஸ் இருக்குதுன்னு சொன்னீல்ல? உங்க ஊரு பேர் என்ன?? மறந்து மறந்து போயிடுது” 

“மூலக்கோணம்பாளையம். மினி பஸ் எல்லாம் நீங்க ஏற வேண்டாம். மச்சான் டிவிஎஸ் வெச்சிருக்காரு. எத்தனை மணிக்கு வருவீங்கன்னு சொன்னீங்கன்ன்னா பல்லடம் பஸ் ஸ்டேண்டுல நின்னு உங்களைக் கூட்டிட்டு வந்துடுவாரு” 

“அவருக்கு செல் இருக்குதோ” 

“ம்.. நெம்பர் தர்றேன் நானு. பொம்பளைக யாரையும் கூட்டிட்டு வரலியா? அவங்க வந்தாத்தானே பூவெல்லாம் எனக்கு வாங்கீட்டு வருவாங்க” 

“ஏன் நான் வாங்கீட்டு வரமாட்டானா? என்ன மல்லிகைப் பூ பத்து மொளம் போதுமா?” 

“பத்தா? சரி நான் ஏன் வேண்டாங்கறேன்? மீனாகிட்ட நான் சொல்லிடவா?” 

“அவகிட்ட இந்த நேரம் சின்னச்சாமியே சொல்லியிருப்பான்” “அப்போ மொதல்லயே பேசி வச்சுட்டிங்களா?” 

“அவன் தான் எத்தனை நாளைக்குப் போன்லயே பேசிட்டு இருப்பீங்க. போயிப் பார்த்துட்டு வந்துட்டா நல்லதுன்னு சொன்னான். அவனுக்குத்தான் உங்க ஊர்ல சொந்தம் சாஸ்த்தியாச்சே!” 

“நீங்க தான் சொல்றீங்க. எங்கம்மாவுக்குக்கூட அவனை இன்னார் அப்புடின்னு தெரியுது. எனக்குத் தெரியவேயில்ல. மீனா கல்யாணம் ரொம்ப லேட் ஆகுமாட்ட?” 

“காசு வேணும்ல? இவன்கிட்ட தாலி செய்யறதுக்குத்தான் ரெண்டு பவுன் வச்சிருக்கான். பணம் இருபது இருபத்தஞ்சாவுது வேணும்னு சொல்றான். மீனா வீட்டுலயும் சிரமம்னு சொன்னான்” 

“ஆமாங்க.. அவளோட தாத்தாவுக்கும் பாட்டிக்கும் ஆஸ்பத்திரி செலவு ரொம்ப ஆகுதாம். அவுங்க கல்யாணம் எப்படியும் ரெண்டு வருஷம் ஆயிடும்னு நினைக்கிறேன். அவளுக்கு வயசு பத்தொன்பது தான்” 

“சரி. இதுல பீப்னு சத்தம் வருது. காசு முடியும் போல, உறுதியா ஞாயித்துக்கிழமை வருவோம். நாளைக்குப் போன் பண்ணிச் சொல்றேன், மல்லிகா” 

“சரிங்க குட் நைட்”


6. வந்ததீம் அழுவாச்சி அழுவறீங்ளே! 

மணி காலை பத்துக்கும் மேலாகிவிட்டது. சரோஜா அக்கா வாசல் படி மீது படுத்துக்கிடந்த நாயின் இடுப்பைப் பார்த்து ஒரு உதை விட்டது. அது ‘கை’ என்று சப்தம் போட்டுக் கொண்டு எழுந்து வாசலில் போய் நின்று கொண்டு, ‘ஏன் இப்படி?’ என்ற பார்வை பார்த்தது. “எந்த நேரமும் வாசப்படியிலயே படுக்கை என்ன படுக்கை? அப்படி ஓரமாக் கெடக்க வேண்டீதுதான? தெரியாத்தனமா உம்பட மேல காலை வெச்சி எறங்கி வாசல்ல உழுந்து மண்டைய ஓடச்சுக்கறதா?” நாய்க்கு எல்லாம் சொன்னால் புரிந்துவிடும் என்கிற நினைப்பில் பேசிக் கொண்டிருந்தது. வேலிக்கால் மீது அணில்கள் ஒன்றையொன்று துரத்தி ஓடிக்கொண்டிருந்தன. “ளேய் பொடுசா, எங்களே போயித் தொலஞ்சே சனியனே?’ சரோஜா அக்காவின் வீட்டுக்குத் தென்புறத்தில் முத்தாச்சி பேரப்பிள்ளையைச் சப்தமிட்டுக் கொண்டிருந்தாள். 

சரோஜா வீட்டின் கதவைச் சாத்தி நாதாங்கி போட்டுவிட்டு வெளியே வந்தது. ஊருக்குள் எல்லா வீடுகளுமே பூட்டிக்கிடந்தன. சாமிநாதனை நேற்று போலீஸ் ஸ்டேசனிலிருந்து வீட்டுக்குக் கூட்டி வருவதற்கு மணி பதினொன்றாகிவிட்டது. ஆள் வீட்டில் தான் இருக்கிறானா என்று பார்க்க சரோஜா சாமிநாதன் வீட்டுக்கு வந்தது. ஒருக்கழித்துச் சாத்தியிருந்த கதவைத் தள்ளி “சாமிநாதா..” என்று சப்தம் போட்டுக் கொண்டு வீட்டுக்குள் சென்றது. சாமிநாதன் மோட்டு வளையைப் பொடபொடவெனப் பார்த்துக் கொண்டு கட்டிலில் படுத்திருந்தவன், “வாக்கா” என்றான். 

“முழிச்சுட்டுதான் படுத்துக் கெடக்கறியா? உங்கொப்பன் அதுக்குள்ள கவுண்டர் காட்டுக்கு ஓடிப்போயிடுச்சா? நேத்துதான் ஊசியப் போட்டுட்டு வந்திருக்குமாட்ட. சோறு குடிச்சியா?” 

“எங்க பசிக்குதுக்கா? பசியே இல்ல. லதா நெனப்பாவே இருக்குது” 

“அப்போ ராத்திரியும் சோறு திங்காமத்தான் படுத்துட்டியா? ஒடம்பு எனத்துக்கு ஆவுறது? சட்டியும் வெறும் சட்டியா கெடக்குது. உங்கொப்பன் சோறும் ஆக்கலியாட்ட இருக்குது? எம்பட ஊட்டுல போய் இமுட்டு சோறு போட்டு எடுத்தாரட்டுமா? ரசம் துளி ஊத்திக் கொண்டாறேன்” 

“வேண்டாம்க்கா. எனக்குச் சோறு எறங்காது. இப்படி என்னை ஏமாத்தீட்டு அவ அப்பன் ஆயாவோட போயிட்டாளேக்கா? அதை நெனச்சாத்தான் சாவலாமுன்னே இருக்குது. எங்கம்மா லதாகிட்ட அப்பவும் சொல்லிட்டே இருந்துச்சுக்கா'” 

“அந்த புள்ளைகிட்ட உங்கொம்மா என்ன சொல்லீட்டு இருந்துச்சு?” 

“போலிஸ் ஸ்டேசனுக்கே அப்படிப் போனாலும் அவுங்க கேட்டாங்கன்னா எம்பட ஊட்டுக்காரன் கூடத்தான் இனி இருப்பேன்னு சொன்னா அவுங்க ஒன்னும் சொல்லமாட்டாங்க. தாட்டி உட்டுருவாங்கன்னு சொல்லிட்டே இருந்துச்சு. இவ மண்டைய எப்போ பார்த்தாலும் சரி சரின்னு ஆட்டிட்டே தான் இருந்தாக்கா. இப்படிப் பண்ணிப் போட்டுப் போயிட்டாளே. நானு உசுரோட இருக்க மாட்டனக்கா இனி” 

“அப்புறமென்ன போயி டிமிட்டு வாங்கீட்டு வந்து குடிச்சுப்போட்டு சாவு. உங்கொப்பனுக்கு ஒரு பையன் தான இருக்கே நீயி. நீயும் போயிட்டீன்னா ஊடு வெறு ஊடா போயிரும். ஆளையும் பாரு அவனையும் பாரு. இப்போ என்ன நடந்துபோச்சு? அவ இல்லைன்னா ஊர்ல பொண்ணுகளா இல்ல? சீக்கிரம் நானு சீனாபுரத்துக்கு போனு பண்டி ஒரு புள்ளையச் சொன்னன்ல அன்னைக்கி, எம்பட தம்பிகாரன் கிட்ட அவிங்க ஊட்டுல பேசச் சொல்றேன். அதுக்கு நானாச்சு. இல்லீன்னா நாம ரெண்டு பேரும் ஒரு நாளைக்கிப் போயி புளையப் பார்த்துப் போட்டே வந்துடலாம். என்றா சொல்றே நீ?‘ 

“நீ சொன்னா சரிக்கா. ஒரே ஒடம்பு வலியா இருக்குதுக்கா. கைல காசு இல்ல” 

“ம். அதைக் கேளு.சும்மா அவ ஏமாத்திப் போட்டா, போட்டான்னு பொலம்பீட்டுக் கெடக்கறான். எவ்வளவு வேணும்? எங்கிட்ட எவ்வளவு இருக்குதுன்னு பார்க்கறேன்” என்று சரோஜா மடிச் சுருக்குப் பையை எடுத்து விரித்துக் கைவிட்டுப் பணம் எடுத்தது. 

“இரநூத்தம்பது இருக்குது. இந்தா இரநூறு வெச்சுக்கோ” என்று நீட்டியது.சாமிநாதன் கட்டிலில் இருந்து எழுந்து வாங்கி மேல்சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். 

இப்ப எதுக்கு காசு உனக்கு? என்ன பண்ணப்போறே?‘ 

“என்ன பண்றது? தண்ணியப் போட்டுட்டு வரவேண்டீதுதான்” 

“அப்புடின்னா இங்கயே வாங்கீட்டு வந்துடு. நான் போயி மாதேஸ்வரன் பொட்டிக்கடையில மொட்டு இருக்குதான்னு பார்த்து வாங்கீட்டு வர்றேன். உம்மட ஊட்டுலயே வறுக்கட்டா? அங்க போயி ஆருகிட்டயாச்சும் நின்னுட்டு பேச்சுக் குடுத்துட்டு லேட்டுப் பண்ணீடாதே என்ன?” 

“யாரு கிட்டப் போயி நான் நிற்கிறேன்? போனதீம் வந்துடறேன்” என்று சாமிநாதன் எழுந்தபோது சரோஜா செல்போன் சத்தமிட்டது. 

“தெவன் இன்னாரத்துலின்னு தெரிலியே” என்று சரோஜா ஜாக்கெட்டிலிருந்து செல்லை எடுத்து “ஹலோ யாரு?” என்றது. 

“யாரு? முருகேசனா? சொல்றா சாமி.. ம். அப்புடியா? சாமிநாதன் இங்கதான் இருக்கான். அவன் செல் சுட்ச் ஆப்பா? சேரி அவ சாவட்டும். நம்புளுக்கு என்ன? சும்மா சுத்தீட்டு இருந்தீன்னா ஊட்டுக்கு வா சாமி. இவனென்னமோ பொலம்பிட்டுக் கெடக்கான். நைட்டே அத்தனை இவுனுக்குப் புத்திமதி சொல்லியும் மண்டைல ஏறுலியாட்ட இருக்குது? சரி சீக்கிரம் வா. வச்சிடட்டுமா?” என்று ஆப்செய்து சரோஜா ஜாக்கெட்டில் செருகிக் கொண்டது. 

“முருகேசன் என்னுங்றான்? என்னமோ சாவட்டுமுன்னியே!” 

“முருகேசன் வெள்ளிரவெளியில இருக்கானாம். பெரிய 

வீரசங்கிலில இருந்து அவன் ஜோட்டால் போனு பண்ணி சொன்னானாம். அந்தப் புள்ளை காத்தால சாணிப்பவுடரைக் கரைச்சுக் குடிச்சுப் போடுச்சாமா. பெருந்துறை கோவை மெடிக்கலுக்குக் கார் வெச்சுக் கூட்டிட்டுப் போனாங்களாமா. இன்னும் ஒரு தகவலும் தெரியலியாம். அதான் நீயும் குடிச்சுட்டியான்னு எம்பட பையன் உம்மட ஊட்டை எட்டிப் பாக்கச் சொல்றான். உனக்குக் கூப்புட்டானாமா. நீ ஆப் பண்ணி வெச்சுட்டியா?” 

“அதை ஆன் பண்ணவே இல்லையக்கா. மருந்து குடிச்சு ஊட்டுக்குள்ள செத்துக் கெடக்கறானான்னு போயி பாக்கச் சொல்றானா முருகேசன்? நானு மயிரச் சாவேன். அவ வேணா சாவட்டும். இப்ப மருந்து குடிக்கிறவளுக்கு நேத்து எங்கப் போச்சு புத்தி? ஊட்டுல கூட்டிட்டு வந்து மிதி போட்டிருப்பாங்க. மிதி திங்க முடியாதுன்னே குடிச்சிருப்பா. ஆமா, நீங்க ரெண்டு பேரும் அம்மாளும் பையனும் ஒரே முட்டா கொஞ்சிக்கறீங்ளே? சாமி வா சாமிங்கறே. அவன் என்ன உன்னை அம்மா தங்கம் அம்மா தங்கம்னு சொல்றானா? நேத்துப் பெரியப்பன் கூட நீங்க ரெண்டு பேரும் ஸ்டேசனுக்கு வந்தப்பவே உங்க சண்டை செரியாப் போச்சா?” 

“ஆமாம் போடா. போயிட்டுச் சுருக்கா வா. உனக்கு இதல்லாம் அதிசயம் போ” என்ற சரோஜா கதவைச் சாத்தியது. சாமிநாதன் சைக்கிளை எடுத்தான். சைக்கிளை அழுத்திக் கொண்டு சென்றபோது தான் உடம்பு வலி தெரிந்தது. வலிக்க வலிக்கவே சைக்கிளை அழுத்தினான். சைக்கிள் கடை முருகன் அச்சகத்திலிருந்து ரோட்டைக் 

கடந்து வந்து கொண்டிருந்தான். இவனைப் பார்த்ததும், “நில்றா சாமிநாதா” என்று சப்தமிட்டான். “ஒரு சின்ன வேலைங்க. பார்த்த ஒடனே வர்றேன்” என்று சைக்கிளை நிறுத்தாமல் நேரே டாஸ்மாக் கடை முன் சைக்கிளை நிப்பாடி ஸ்டேண்டு போட்டான். 

கடைக்காரர் “எங்க நாலஞ்சு நாளா ஆளைவே காணம்? நீங்கெல்லாம் குடியை உட்டுட்டீங்கன்னா நாங்க எங்கெ போறது? கூட ஒருத்தரும் வரலியா? தனியா வந்திருக்கே? என்ன சரக்கு வேணும்?என்றார். மேன்சன் ஹவுஸ் ஒரு ஆப் பாட்டில் குடுங்க என்று வாங்கி இடுப்பில் செருகிக்கொண்டான். பணத்தைக் கொடுத்துவிட்டுச் சில்லறை வாங்கிப் பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டவன் சாக்னா கடைக்குள் நுழைந்து ஒரு கட்டிங் வீசிவிட்டுப் போகலாமா என்று யோசித்தான். 

தெரிந்தவர்கள் என்று யாரு வந்தாலும் “பிரச்சினை என்ன ஆச்சு? எப்படி ஆச்சு?” என்று ஆரம்பித்துவிட்டால் ஆதியிலிருந்து கதை சொல்ல வேண்டும். பாட்டிலும் காலியாகிவிடும். சரோஜா அக்கா இந்த நேரம் பெட்டிக்கடையிலிருந்து வீடு போய் வெங்காயம் தொழித்துக் கொண்டிருக்கும். சீக்கிரம் யாரிடமும் கதையடித்துக் கொண்டிருக்காமல் வரச் சொல்லித் தாட்டிவிட்டிருக்கிறது. அக்காவும் அரைக் கட்டிங் இன்று வீசும் போலதான் தெரிகிறது என்று நினத்தபடியே சைக்கிளை எடுத்தான். 

யாரைப் பார்த்தாலும் “நில்றா சாமிநாதா, உங்கிட்ட ஒரு விசயம் கேட்கோணும்” என்றே கூப்பிடப் போவதாய்ப் பிரமை தட்டியது. காதுக்குள்ளும் “சாமிநாதா சாமிநாதா” என்றே சப்தமாய் யார் யாரோ கூப்பிடுவது மாதிரியே இருக்கத் திரும்பித் திரும்பிப் பார்த்தான். ஒரு வாரம் எங்காவது ஊரை விட்டு ஓடிப்போய்விடலாம் என்றாலும் கையில் பைசா கிடையாது. வழியும் இல்லை. பேசாமல் நாளையிலிருந்து தறி ஓட்டப் போய்விடுவது தான் இப்போதைக்கு நல்லதாகவும் இவனுக்குத் தோன்றியது. மனசு வேறு குளிர் காய்ச்சல் பிடித்த மாதிரியே இருக்கிறது. சைக்கிளை எடுத்தவன் வேகமாய்க் கிழக்குப் பார்த்து மிதித்தான். யாரோ பஸ் ஸ்டாப்பிலிருந்து இவன் பெயரைச் சொல்லி கூப்பிட்ட மாதிரியே தோன்றியது. 

முருகன் சைக்கிள் கடை தாண்டிப்போகையில் அல்லக்கண்ணில் கடைக்குள் பார்த்தபடியே சென்றான். கடைக்குள் முருகன் இல்லாமல் இரண்டு சைக்கிள்கள் நின்றிருந்தன. மறுபடியும் அச்சகத்தினுள் ஆள் பேப்பர் படிக்கப் போயிருக்கலாம் என்று நினத்து அழுத்தினான். வின் டெக்ஸ் தாண்டி மூங்கில்பாளையச் சாலையில் தலை போகிற அவசரம் போல கேர் கேரென விரைவாய்ப் பெடலை மிதித்தான். யாராவது பார்த்தால் இவனுக்குப் பின்னால் பூதம் தான் துரத்துகிறதோ என்றே நினைப்பார்கள். பெட்டிக் கடை முன்பாக மாதேஸ்வரன் நின்று நிதானித்து இவனைப் பார்த்தான். கூப்பிட்டு நிறுத்திவிடுவானோ என்ற அச்சத்தில் ஸ்பீடு பிரேக்கர் திண்டில் பிரேக் போடாமலேயே ஏற்றித் தாண்டினான். கோவிலருகே கிழக்கே இறக்கத்தில் திருப்பி வீட்டின் முன்பாகச் சைக்கிளை நிறுத்தி இறங்கினான். 

கெஸ்கெஸ் என மூச்சு வாங்கிக்கொண்டே வீட்டினுள் சென்றவனுக்கு வீடு இருட்டாய்ச் சுழன்று தெரிந்தது. இடுப்பில் இருந்த பாட்டிலை உருவி எடுத்து நடு வீட்டில் வைத்துவிட்டுக் கட்டிலைத் தேடிச் சென்று விழுந்தான். சரோஜா அக்கா அடுப்பு பற்றவைத்து வடைச் சட்டியை வைத்தது. இவனைப் பார்த்துச் சிரித்து “கருவேப்பிலை தலை இல்லையாடா? கூடைல காணம்” என்றது. “அது இல்லின்னா எறங்காமப் போயிடுமாக்கா. இல்லீன்னா உடு” என்றான். 

யார் யாரோ தெரிந்த முகம், தெரியாத முகங்கள் எல்லாம் விரல் நீட்டி விரல் நீட்டிக் காட்டிக் கெக்கலி போட்டுச் சிரிப்பதாய்த் தோன்றியது. “எல்லாரும் சிரிக்காதீங்கப்பா. என்னத்த அதிசயத்தைக் கண்டுட்டீங்க. ஓடுங்க எல்லாரும். எனக்கு வெட்கமா இருக்குது. வெட்கப்பட்டே செத்துடுவேனாட்ட இருக்குது” என்று கத்தலாம் போல நினைத்தான். சரோஜா அக்கா இவனைப் பார்த்துச் சிரித்தபடியே தான் கடுகு போட்டது. பின்னர் வெங்காயம், மொளகாயை வடைச்சட்டியில் கொட்டியது. முட்டைகளைப் பொத்து ஒரு குண்டாவில் ஏற்கனவே ஊற்றிவைத்திருந்தது. 

“தேஞ்சாமிநாதா போன சுடிக்கு வந்துட்டே. புஸ்புஸ்சுனு மூச்சு வாங்கீட்டு வந்து கெடக்கூறியே. சித்த மெதுவாத்தான் வர்றது?” 

“சைக்கிள் கடைக்காரருக்கு விசயம் தெரிஞ்ச்சு போச்சாட்ட இருக்குதுக்கா. நில்றா சாமிநாதான்னு சத்தம் போட்டாப்ல. இருங்க ஒரு சின்ன சோலீன்னு சொல்லீட்டு வெசையா வந்துட்டனக்கா” 

“அவுரு கேட்டா கேட்டுட்டுப் போச்சாராரு. இந்த மாதிரி ஆயிப்போச்சுங்கன்னு சொல்லிட்டு தான் வர்றது. உன்னோட தலையவா தூக்கிறப் போறாங்க. கேப்பாங்க அவிய இவியன்னு. பயந்துட்டு இனி ஊட்டுக்குள்ளாரயே கெடப்பியா? ரோட்டுப் பக்கமே போவமாட்டியா? எல்லாரும் கேட்கத்தான் செய்வாங்க. அந்தப் புள்ள அவங்க ஆயா அப்பனோட போறன்னு சொல்லீட்டு அவங்க ஊட்டுக்குப் போயிடுச்சுங்கன்னு சொல்லீட்டுப் போக வேண்டீது தான். இதா வறுவல் ஆயிடுச்சு” என்றபடி கரித்துணியில் வடைச்சட்டியைத் தூக்கி எடுத்துக் கொண்டு வந்து நடு வீட்டில் பாட்டிலுக்குப் பக்கத்தில் வைத்தது. செம்பில் தண்ணீரையும் இரண்டு டம்ளர்களையும் எடுத்து வைத்தது. 

“தட்டம் இருக்கும் பாருக்கா. ரெண்டு தட்டத்துல கரண்டில எடுத்துப் போடு” என்றான். சரோஜா தட்டம் எடுத்து வந்து இரண்டிலும் முட்டை வறுவலைக் கரண்டியில் எடுத்துப் போட்டது. வறுவலில் ஆவி பறந்தது. 

“சூடாத் தின்னாத்தான் நல்லாயிருக்கும். எந்திரிச்சு வந்து ஊத்து” என்றது. சாமிநாதன் எழுந்து நடுவீட்டில் சம்மணம் போட்டு உட்கார்ந்து பாட்டிலைக் கையிலெடுத்தான். மெட்டைத் திருகி மூடியைக் கழற்றியவன் கொஞ்சம் கையில் சாய்த்து நடு வீட்டில் உதறினான். பின் இரண்டு டம்ளர்களிலும் சரக்கை ஊற்றித் தண்ணீர் கலந்தான். 

“அட போயி செவனப் வாங்கீட்டு வந்திருக்கலாம்டா. எனக்கு இதே போதும்.உனக்குத்தான ஒடம்பு வலின்னு சொன்னே. நீ குடிச்சுக்கோ” என்று டம்ளரை எடுத்தது. 

“செவனப் எல்லாம் இந்தச் சரக்குக்கு வேண்டீது இல்லக்கா. தொண்டை எரிச்சல் இருக்காது குடி” என்றவன் டளரை எடுத்ததும் அன்னாந்து ஊற்றிக் கொண்டான். மறுபடியும் கீழே டம்ளரை வைத்துச் சரக்கு ஊற்றித் தண்ணீர் கலந்து இன்னொருமுறை குடித்துவிட்டு, தட்டத்தில் இருந்த வறுவலை எடுத்து மென்றான். சரோஜா அக்கா குடித்துவிட்டு வறுவலை எடுத்துக் கொண்டது. 

“எம்பட பையன் வர்றேன்னு சொன்னான் இன்னம் காணம்’ 

“பாசம் பொத்துக்குதா? போனு வச்சிருக்கீல்ல. கூப்புட்டு எங்கடா இருக்கீன்னு கேளு” 

“வேண்டாம். வந்துடுவான்” 

“லதா என்னைய ஏமாத்திப் போட்டாளேக்கா” என்றவன் தட்டில் இருந்த வறுவலைப் பச்சை மிளகாய்களோடு குத்துப் பிடித்து எடுத்து வாய்க்குள் கொட்டிக் கொண்டான். 

“அடப்பச்சை மொளகாயை வெறும் வகுத்துல போட்டு மென்னு முழுங்கறியே? கொடலுக்குக் காரம் ஏறிக்கிச்சுன்னா வயித்துக் கடுப்பே புடிச்சுக்கும்டா. அவதான் போனா போயிச்சாட்டாறான்னு உடுவியா. அதிசீமா” 

“அதிசியமில்லக்கா. அவ மேல நானு ரொம்பப் பாசம் வெச்சுட்டேன். பெரிய வீரசங்கிலில் நோம்பின்னு பசங்க ஊட்டுக்குப் போயிருந்தேன். அப்போ அவளாத்தான் தேடி வந்து பேசினா. பசங்ககூட நம்ப புள்ளைதான்னு சொன்னங்காட்டித்தான் நானே பழகினேன். எம்பட கழுத்தை அறுத்து வீசிட்டுப் போறாப்ல போயிட்டாளேக்கா. நானு இனி என்ன பண்டுவேன். படிச்சு முடிச்சுப் போட்டுத்தான் நாம கலியாணம் பண்ணிக்கோணும்னு சொன்னா. நான் தான் அவசரப்பட்டுட்டேன். வர முடியுமா முடியாதான்னு சத்தம் போட்டுக் கூட்டிட்டு போனேனக்கா” 

“அப்புறம் நீ ஏன் அவசரப்பட்டே?” 

“அவ டூட்டோரியல் பரீட்சை எழுதி பாஸ் ஆயி பதினொன்னு பனிரெண்டு படிச்சு அப்புறம் காலேஜ் மூனு வருஷம் போயி கணக்குப் போட்டா இதுலயே அஞ்சு வருசம் தனியா போயிருமக்கா. எனக்கு முப்பதாயிடும். அதுவரைக்கும் இவ கெடைப்பான்னு பொறவுக்கே சுத்தட்டம் போட்டுட்டு இருக்க முடியுமா? பத்தாவுதே பெயில் ஆயித்தான் டுட்டோரியல் போறவ எப்போ காலேஜ் முடிக்கிறது? அப்புறம் என்னப்பா. வேலைக்குச் சேர்ந்துக்கறேன். நல்ல சம்பளம் வரட்டும்பா. இவ இருக்குற அழகுக்கு இவளை எவனாச்சிம் உடுவானா? 

பொடப்பொடன்னு கண்ணை வெச்சுட்டு எல்லார்த்தியும் தான் பாக்கிறா. பத்தாதுக்கு அவளோட அப்பன் என்னை பஸ் ஸ்டாப்ல அடிக்கிறதுக்கே வந்துட்டான். அதுக்குப் பின்னால் ஒரு பத்து நாளு இவ எனக்குப் போனு பண்டவே காணம். பண்ணுவா எதாச்சிம் சொல்லுவான்னு பார்த்துட்டு இருந்தேன். பதினொறாம் நாளு போனு பண்டி, ‘என்ன எப்டி இருக்கே? சவுக்கியமா? பழனிக்குப் போயிட்டு வந்தாச்சா? என்ன எனக்கு வாங்கீட்டு வந்தே?” அப்பிங்றா! எனக்குன்னா வயித்தெரிச்சல்னா வயித்தெரிச்சல். உடுவனான்னு குடோனு ஓனருகிட்டப் போயி ஆறாயிரம் அட்வான்ஸ் வாங்கீட்டேன். 

“இன்னொரு துளி உத்திக் குடிச்சுக்கறேனக்கா” என்றவன் டம்ளரில் சரக்கை ஊற்றித் தண்ணீர் கலக்காமலேயே எடுத்து மடக் மடக்கெனக் குடித்தான். 

“அட்வான்ஸ் ஆறாயிரம் கேட்ட ஒடனே குடுத்துட்டாப்லையா ஓனரு?

“ம். நான் தறி ஓட்டப்போயி ஆறு மாசம் ஆச்சில்ல. அவுரே வேணுமாடா சாமிநாதான்னு தான் கேட்டுட்டே இருந்தாரு. வேணுங்ற போது வாங்கிக்கறேனுங்கன்னு சொல்லியிருந்தேன். அதும்போகக் கையில ரெண்டாயிரம் இருந்துச்சு. அவளப் பத்து நாளா பார்க்கலைல்ல. ‘பார்க்கணும் வா’ன்னு நெட்டைக் கோபுரத்துகிட்டயே வரச் சொன்னேன். அதுக்கும் முன்னத்த நாள் தான் கையில லதான்னு சூடு போட்டிருந்தேன். நெட்டைக் கோபுரத்துக்கு வந்துட்டா. பாய் புள்ளைங்க மாதிரி கருப்புத் துப்பட்டாவைத் தலையில போட்டுட்டுக் கருப்பு சுடிதார்ல வந்தா. 

எந்த நேரமும் ஊட்டுல ஒரே சண்டையாம். படிக்கவே முடியலைன்னு அழுதா. கையில என்ன கர்ச்சீப்பு கட்டியிருக்கேன்னு பார்த்து, ‘எதுக்குடா இந்த மாதிரி எல்லாம் பைத்தியகாரனாட்ட பண்டுவே? அப்புடின்னுட்டு அழுதா. ‘செத்துப் போயிடுவேன். அதான் கடைசியா பார்க்கலாம்னு கூப்புட்டேன்’னேன். ‘நான் என்ன தான்டா பண்ணட்டும்?’ன்னு என்னையத் திருப்பிக் கேட்டா. கேட்டுட்டே இருந்தாக்கா. உம்மட ஊட்டுக்கே போவ வேண்டாமுன்னுட்டேன். 

அங்கிருந்தே கணேஷ் அண்ணன் காருக்குப் போனைப் போட்டேன். அவரு ‘வாடகைல இருக்கன்டா சாமிநாதா. ரெடி ஆயிடிச்சா? ஒரு மணி நேரமாகுமே’ன்னு சொன்னாப்ல. ‘சரி நேரா நெடச்சிலாபாளையம் வந்துடுங்க’ன்னு சொல்லீட்டு, அவளைச் சைக்கிள்ல ஏறச் சொல்லீட்டேன். ரெண்டு பேரும் நேரா மண் ரோட்டுல காட்டுக்குள்ள முட்டி நெடச்சிலாப்பாளையத்துல நம்ம வழுவுக்கே போயிட்டோம்” 

“அங்கெதுக்குடா அவளைக் கூட்டிட்டுப் போனே?” 

“அங்க தான எம்பட மாமன் இருக்குது” 

“அட சின்னான்கிட்டப் போயிட்டியா?” 

“மாமன் ஊட்டு முன்னாடி வழுவுல போயி சைக்கிளை நிறுத்தீட்டேன். ஊட்டுல அத்தை இருந்துச்சு. இவளைக் கொண்டி உட்டுட்டு ஊருக்குள்ள ரெண்டு பசங்களைத் துணைக்கிச் சேர்த்திக்கிட்டேன். மாமனுக்குப் போனு பண்ணி வரச் சொல்லிட்டேன். எல்லாரும் ஒரு செட்டு சேர்ந்து கெளம்புறப்ப கணேஷ் அண்ணனும் காரோட வந்திடுச்சு. எல்லாரும் கெளம்பிட்டோம். அப்புடியே ஆயிக்கவுண்டம்பாளையம் வழியாப் பெருந்துறை. பெருந்துறைல அவளுக்கு ரெண்டு சீலை, எனக்கு வெள்ளை வேட்டி, சட்டை, துண்டு எடுத்துட்டு கார் நேரா சிவன் மலைக்குப் போச்சு. சாமி முன்னாடி தாலி கட்டுறப்ப மணி செரியா பனிரெண்டு பத்து” 

“சாமிநாதா, அந்தப் புள்ளை ஒரு பேச்சு பேசிலியா? பயப்படலியா?” 

“அதான் அவகூட எம்பட அத்தை இருந்துச்சே. அப்புறம் அங்கியும் நிற்கலை. நேராப் பெருந்துறை வந்து பசங்க ரெண்டு பேரையும் பஸ்சுக்குத் தாட்டி உட்டுட்டு நாங்க பவானியில எங்கம்மா ஊட்டுக்கே போயிட்டம். எங்கம்மா ஆரத்தி எல்லாம் எடுத்துச்சுக்கா” 

“உங்கொம்மா எதுக்குடா ஆரத்தி எடுத்தா? கலியாணம் ஆகாத புள்ளைகதான் ஆரத்தி எடுக்கோணும். அவளுக்கு அந்த எழவும் தெரியல பார்த்துக்க. பக்கத்து ஊட்டுல புள்ளைக இருந்தாக் கூப்புட்டு எடுக்கச் சொல்லியிருக்கறது? இவளே இங்கெ பொழைக்காம அவ ஊடு போயி உட்கார்ந்துட்டு இருக்கா. ஆரத்தி நொட்டனாளாமா.. செரி, அங்க தான் ரெண்டு நாளும் இருந்தீங்களா?’ 

“அங்கயே தான் ஊட்டுக்குள்ளயே கெடந்தோம். தெரிஞ்ச பையன் கொமாரபாளையத்துல இருக்கான். அங்க போயிடறேன்னு எங்கம்மாகிட்ட சொன்னேன். கேட்கலை” 

“நீங்க பவானில தான் இருக்கீங்கன்னு அப்புறம் எப்படிடா அவிங்க ஊட்டுக்குத் தெரிஞ்சுது?” 

“அது லதா பண்டுன வேலை” 

“அவ என்ன பண்டுனா? இதென்றா சீரழிவு?” 

“எம்பட செல்போனைப் பிடுங்கி வெச்சுட்டு, ‘எங்கம்மாகிட்டப் பேசுறேன். எங்கம்மாவுக்கு எம்மேல பிரியம் அழுதுட்டு இருக்கும் பாவம்’னு பேசினா. ‘வேண்டாம். ஒருவாரம் போவட்டும்னேன். ‘அதெல்லாம் நம்மளைய வீட்டுல சேர்த்திக்குவாங்க. பேசுறேன் பேசுறேன்னுட்டுப் பேசிய போட்டாக்கா. வெகுநேரம் அவ அம்மாகூடப் போன்ல என்னென்னமோ பேசிட்டு முடிச்சுட்டு வந்து போனைக் குடுத்தா. ‘என்ன சொல்லுது உங்கொம்மா?’ன்னு கேட்டேன். 

ஒரே அழுவாச்சியாம். கூடுதுறை எல்லாம் போயி சாமி கும்புடுங்க ரெண்டு பேரும்னு சொல்லுச்சாம். ரெண்டு நாள் கழிச்சு பத்திரமா வீடு வந்து சேருங்க சாமின்னு சொல்லுது எங்கம்மான்னா. நானும் கொஞ்சம் கறுக்கடையோடவே ரெண்டு நாளும் வீட்டுல இருந்தேன். எங்கம்மா பார்த்துக்கும்னு தான் இருந்தேன். இப்படி இவ அம்மா பேசறதா சொன்னாங்காட்டி அசால்டா இருந்துட்டேன். ரெண்டு மணி நேரத்துக்குள்ளார அவிங்க பட்டாளம் போலீசோட எங்கம்மா ஊட்டுக்கு வந்துடுச்சு. அவ அம்மா ஊட்டுக்குள்ளார முட்டுனதும் இவ சேலை பாவாடையை உருவி வீசிட்டுக் கையோட கொண்டாந்த சுடிதாரை மாட்டி உட்டுருச்சு’ 

“தாலிக் கவுத்தை அவ ஆயா அவுத்திக்கே அத்து வீசிட்டாளா?” 

“அதை அத்து வீசுறதுக்குத்தான் அவ அம்மா அங்கயே பறவாப் பறந்தா, இவ உடவே மாட்டேனுட்டா. லதா குனிஞ்சு குனிஞ்சு உட்காந்துக்கிட்டா. பார்த்துட்டு அவ அப்பன் தான் அவ அம்மாவைக் கூட்டிட்டுப் போச்சு. பொம்பள போலீசு தான் எந்திரிடி மேலன்னு மெரட்டிக் காருக்குக் கூட்டிட்டு வந்துச்சு” 

“உன்னைய என்ன பண்டுனாங்க அங்கே? அடிச்சாங்ளா?” 

“ஊட்டுல யாரும் என்னை அடிக்கலை. ‘போயி கார்ல ஏறுடா’ன்னாங்க. எங்கம்மாவும் ஊட்டைப் பூட்டிட்டு வந்து ஏறிக்கிச்சு. ஸ்டேசன்ல போயிப் பேசிக்கலாம்னு தான் சொல்லிக் கூட்டிட்டு வந்தாங்க. இங்க வந்து இறங்கறப்பதான் ஸ்டேசன் வாசல்ல பெரியப்பன், முருகேசன், நீ, சின்னசாமி நிற்கறதைப் பார்த்தேன். அப்புறம் தான் லதாவோட அம்மா, எம்புள்ளையை அடிக்காதீங்க, வேண்டாமுங்கன்னு கத்துப் புடிச்சது. ஒரு பொம்பளை போலீசு கையில வச்சிருந்த தடியில லதாவைப் புடுச்சுப் பட்டுப்பட்டுன்னு சூத்தாம்பட்டையில நாலு வெச்சாங்காட்டி அவளும் கத்தட்டம் புடிச்சா. நீதான் உள்ளாரயே வரலியே!” 

“எனக்குப் போலீஸ்னாவே பயம்டா. உன்னை அஞ்சாறு வருசம் உள்ளார தூக்கிப் போட்டுருவாங்கன்னு பேசிட்டு இருந்தாங்களா, எனக்குப் பொக்குனு ஆயிடிச்சு. போலீஸ் கார்ல வந்து தான் எங்களை ஸ்டேசன் வரைக்கும் போனதீம் வந்துடலாம்னு கூட்டிட்டு வந்துச்சு. ஊசி போட்டுக்கப் போன உங்கொப்பனையும் காணம். கேட்டாங்க. தெரியலீன்னு தான் சொன்னேன்” 

“மெரட்டுனாங்களா?” 

“மெரட்டவல்லாம் இல்ல. கையெழுத்துப் போட்டுட்டு வந்துடலாம் நீங்கன்னு சொன்னாங்க. சாமிநாதனையும் கூட்டிட்டு சொன்னாங்க.சாமிநாதனையும் வந்துடலாம்னு சொல்லித்தான் கூட்டிட்டுப் போனாங்க. மெரட்டவெல்லாம் இல்ல. சும்ம சொல்லக் கூடாது.” 

“நாலு அடி உழுந்த ஒடனே லதா தாலியக் கழட்டி இன்ஸ்பெக்டர் டேபிள் மேல வெச்சுட்டா. ‘என்னடி பண்றே?’ அப்படின்னு இன்ஸ்பெக்டர் கேட்டாரு. ‘எங்கம்மா அப்பா கூடவே போயிடறேன்’னு சொன்னா. இனிமேல் எனக்கும் சாமிநாதனுக்கும் சம்மந்தமில்ல. அப்பன் ஆயா சொல்றபடிதான் கேட்டு நடந்துக்குவேன்னு எழுதி கையெழுத்தும் போட்டுக்குடுத்துட்டா. 

இனி நீ இந்தப் புள்ளையப் பார்க்க போறதோ, பேசப் போறதோ வெச்சுக்கப்புடாது ராஸ்கல். வா வந்து நீயும் பேப்பர்ல எழுதிக் குடுடா’ன்னு இன்ஸ்பெக்டர் என்கிட்ட சொல்ல நானும் பேப்பர்ல எழுதிக் கையெழுத்துப் போட்டுக் குடுத்துட்டேன். சரி, இனி அவளே அப்படி எழுதிக் குடுத்துட்ட பின்னாடி நான் என்ன பண்றது? எங்கம்மா பேந்தப் பேந்த முழிச்சுட்டு நின்னுட்டு இருந்துச்சு” 

“எம்பட பையன்கிட்டயும் சின்னச்சாமிகிட்டயும் கையெழுத்து வாங்கீட்டுச் சொல்லி உட்டுருக்காங்களாம்டா. இனி நீ அந்தப் புள்ளையப் பார்க்கப் போனது தெரிஞ்சா இவனுகளைத் தூக்கி உள்ளார போட்டுருவாங்கன்னு. பாரு எத்தனை சீரழிவுன்னு? போயி சாட்டாது போ. எல்லாம் உட்டுட்டு தறிக்குப் போற வழியப் பாரு. நானு உனக்குச் சீனாபுரத்துப் புள்ளையப் பேசிக் கட்டி வச்சுடறேன். இன்னொரு துளி நான் ஊத்திக்கறேன்” என்று சரோஜா தன் டம்ளரில் ஊற்றித் தண்ணீர் கலந்தது. “கொஞ்சூண்டுதான் இருக்குது உன்னோட டம்ளர்ல ஊத்தீரட்டுமா?” என்றது. 

“அப்புறம் இதென்ன கேள்வி. ஊத்து அந்தத் துளியையும்” என்றான். இருவரும் பாட்டிலைக் காலி செய்தார்கள். சரோஜா அக்கா பாட்டிலை உள் ரூமுக்குள் கொண்டு போய் வைத்துவிட்டு, வடைச் சட்டியையும் அடுப்பு மீது மூடி வைத்தது. தட்டங்களையும் 

டம்ளர்களையும் கழுவிக் கொண்டு போய் வைத்தது. வெத்தலை பாக்கை எடுத்துக் கொண்டு இவன் அருகில் உட்கார்ந்தது. 

“துளி வெத்தலை போடறியா?” என்றது. 

“எனக்கு வேண்டாம். அந்தக் காம்பைக் கிள்ளிக் குடுக்கா” என்று கேட்டு வாங்கி வாயில் போட்டுக் கொண்டபோது வாசலில் முருகேசன் சைக்கிளில் வந்து இறங்கி வீட்டிற்குள் வந்தான். 

“தேஞ்சாமி, உடனே வாரன்னுட்டு இவ்ளோ நேரங்கழிச்சு வர்றே? இவுனுக்கு நானு காவல் உட்கார்ந்து பார்த்துட்டு இருக்கேன்” 

“கம்மண்ட்டு உண்டும்மா நுவ்வு.. இவனை மொதல்ல கட்டல்ல கம்முனு ஏறிப்படுத்துக்கச் சொல்லு. சாமிநாதா. போயி எதும் பேசாம படுத்துக்கோ. தண்ணி வேற போட்டுட்டானாட்ட இருக்குது” 

“ஏன்டா? இப்ப எதுக்கு என்னையப் படுக்கச் சொல்றே? நான் படுத்தன்னா குடிச்சதைப் பூராம் கக்கி வெச்சுடுவேன். ஏக்கா, இவனுக்கு என்ன வந்துச்சு? திடீர்னு உள்ள வந்தான். ஏறிப் படுடாஙறான்?” 

“என்னையும் கம்முன்னு இருக்கச் சொல்லீட்டான்டா சாமிநாதா” 

“நீயும் தான் குடிச்சிருப்பியாட்ட இருக்குது. அந்தப் புள்ளையோட அப்பனும், அம்மாவும் கூட இன்னொரு பொம்பளையும் பிரிவுல இருந்து நடந்து வந்துட்டு இருந்தாங்க, இப்போ நான் சைக்கிள்ல வர்றப்ப. இங்க நம்மூட்டுக்குத்தான் வருவாங்கன்னு நான் நெனைக்கிறேன்” 

“அவிய எதுக்குச் சாமி இங்க வர்றாங்க? அதான் நேத்தே எல்லாம் முடிஞ்சுதே. இனி என்ன நம்மூர்ல அவிங்களுக்கு வேலை. மறுபடியும் சண்டை கட்டுனாங்கன்னா நீ போலீஸ் ஸ்டேசனுக்குப் போனைப் போடு” 

“அவ செத்திருப்பா. எழவு சொல்றதுக்கு வருவாங்க” என்றான் சாமிநாதன். வாசலில் நிழலாடியது. முருகேசன் கதவுக்குப் போய் எட்டிப் பார்த்தான். அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். “உள்ளார வரச் சொல்லு சாமி” என்று சரோஜா சொன்னது. முருகேசன் “வாங்க” என்று கூறிவிட்டு உள்ளே வந்து கட்டிலில் உட்கார்ந்து கொண்டான். 

உள்ளே வந்ததும் லதாவின் அம்மா சேலைத் தலைப்பை எடுத்து மூக்கருகில் பிடித்துக் கொண்டு அழுக ஆரம்பித்தது. “இங்கென்ன எழவா உழுந்து கெடக்குது வந்ததீம் அழுவாச்சி அழுவறீங்ளே!” என்றது சரோஜா. 

“அம்மா நீ இண்ட்டிக்கிப் போ” என்றான் முருகேசன். போதையில் இனி அம்மா ஏதாவது கண்டபடி பேசிவிட்டால் வெட்டியாய்ச் சண்டைதானே என்று பட்டது. 

நான் ஊட்டுக்குப் போயி என்னத்த பண்டுறேன்? எல்லாம் நீயே கேட்டுக்குவியா? பெரிய மனுசனா நீயி? ஊட்டுக்குள்ள வந்துட்டு என்ன ஏதுன்னு சொல்லாம அழுதா என்ன அர்த்தம்? சொன்னாத்தான தெரியும்” 

“எங்களைய மன்னிச்சுக்கங்க எல்லாரும்” லதாவின் அப்பாதான் பேச்சைத் துவங்கினார். 

“நாங்க எதுக்கு உங்களை மன்னிக்கோணும். நீங்க என்ன தப்பு பண்டுனீங்க? அது வேணும்ல மொதல்ல” 

“எங்க புள்ளை காத்தால சாணிப் பவுடரைக் குடிச்சுப் போடுச்சுங்க. பெருந்துறை ஆஸ்பத்திரி கூட்டிட்டுப் போயி வவுத்தைச் சுத்தம் பண்டினோம். நாலு பேரு இன்னம் அங்கதான் நிற்கறாங்க. குளுக்கோஸ் பாட்டலு எறங்கீட்டு இருக்குதுங்கோ. போலீஸ் ஸ்டேசன்ல வெச்சு இரண்டு பேர்த்தையும் பிரிச்சு உட்டது தப்பாப் போச்சுங்க. அதுக்குத் தானுங்க மன்னிப்பு கேட்கிறோம்” இவர்களோடு வந்த பொம்பளை தான் இப்போது முழுசாய் இன்ன விசயம் என்று பேசியது! 

“சாணிப் பவுடர் குடிச்சுப் போடுச்சுன்னு சொல்றீங்க. ஏன் குடிச்சுது? நீங்க மெரட்டியிருப்பீங்க குடிச்சிருக்கும்” என்றான் முருகேசன். 

“நாங்க யாருங்க அதை மெரட்டினோம். ஒன்னும் சொல்லலியே” வனை வேண்டாம்னு தாலிய கழட்டி வெச்சுட்டுப் போன புள்ளை எதுக்குச் சாணிப் பவுடர் குடிக்குது? சரி, குடிச்சுட்டுதுன்னு விடுங்க. இப்போ இங்க எதுக்கு வந்திருக்கீங்க?‘ 

“எங்க புள்ளைய மறுபடி ஏத்துக்கங்க. வெட்டியா செத்துப் போயிடுவாளாட்ட இருக்குதுங்ளே. உசுரோட இருந்தாலாச்சும் நாங்க கண்ணுலயாவது பார்த்துட்டு இருப்போம்ல” 

“கூட்டிட்டுப் போயி உங்கூட்டுலயே வெச்சுப் பத்திரமா பார்த்துக்கங்க. எங்களை போலீஸ் ஜட்டியோட உட்கார வெச்சு மிதிக்கும்” 

“என்னுங்க இப்படிச் சொல்றீங்க. கோபத்தை உடுங்க. நாங்கதான் தப்பு பண்ணீட்டம்னு மன்னிப்பு கேட்கறோம்ல. இவுரு ஒன்னும் சொல்ல மாட்டீங்றாருங்ளா?” 

“அவனெனத்தச் சொல்லுவான்? துணிமணிய உங்க முன்னாடிதான அவுத்துப் போட்டுட்டு மிதி தின்னான். பார்த்துட்டு தான இருந்தீங்க போதும்ல. அது பத்தாது? சாவுற வரைக்கும் போதும்’ என்றான் முருகேசன். 

“போட்டிருந்த சேலைய உருவி வீசிச் சுடிதாரு போட்டு உட்டாளாமா இந்தப் பொம்பளை, முருகேசா துணிகூட இவளை என்ன பண்டுச்சுன்னு கேளு” என்றது சரோஜா. 

“அவுரு சும்மாவே இருக்காருங்ளே. ஒன்னும் சொல்லலை. நீங்க ரெண்டு பேரு மட்டும் பேசிட்டு இருக்கீங்க?” லதாவின் அப்பா பேசியது. “சொல்லீரு சாமிநாதா நீயே. அவிங்க கேட்டுக்கட்டும்” 

ல “போலீஸ் ஸ்டேசன்ல தாலிய அதாக் கழட்டிக் கொண்டி இன்ஸ்பெக்டர் டேபிள்ல வெச்சுது பாருங்க, அப்பவே நான் மனசை உட்டுட்டனுங்க. நானு அந்தப் புள்ளை மூஞ்சில கூட முழிக்க மாட்டனுங்க. இனி எங்கீங்க நீங்க நெனைக்கற மாதிரி நானு அந்தப் புள்ளை கூடக் குடும்பம் நடத்தப் போறேன். போயிடுங்க” என்று கும்பிடு போட்டான் சாமிநாதன்.

– தொடரும்…

– எட்றா வண்டியெ, முதற் பதிப்பு: 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *