படுக்கையில் புரண்டு புரண்டு படுத்து, வலி எடுத்தது தான் மிச்சம்!… துாக்கம் விரைவில் வந்து கண்களைத் தழுவுவதாகத் தெரியவில்லை.
ஒரு காலத்தில், காதலின் ஏக்கத்தால் தூக்கம் வரவில்லை…. இப்பொழுது முறிந்து போன பத்து வருட காதல் வாழ்க்கையை நினைத்து நினைத்து துக்கத்தால் தூக்கம் வரவில்லை!
காதல்…. எவ்வளவு பொய்யான விஷயம்!.. ஜாதி, மதம் நிறம், மொழி வித்தியாசங்கள் பார்க்காமல் பத்து வருட காலமாகக் காதலிப்பதாகக் கூறிக் கொண்டு, கடைசியில் அப்பனின் சொத்து கை நழுவி விடுமோ என்ற ஒரே அல்ப காரணத்திற்காக வேறு ஒருத்தியை.. அதுவும் தன் உயிர்த் தோழியையே மணம் செய்து கொண்ட அவன்….. அவன் ஒரு சண்டாளன்… அவள்…. அந்த உயிர்த் தோழி… ஒரு துரோகி!
கமலாவிற்கு இப்போது 33 வயது. இவ்வளவு வயசாகியும் இன்னும் கல்யாணம் ஆகலையே என்று சிலருக்குக் குழப்பம்….. சிலர், அவளின் சகஜமான போக்கைத் தப்பாக மதிப்பிட்டு நடத்தை கெட்டவளோ என்று தூர விலகினார்கள்….. வேறு சிலர் அவளிடம் விலை பேசியும் பார்த்தார்கள்!! இதற்கெல்லாம் தீர்வு, யாரையாவது கல்யாணம் செய்து கொள்வது தான் என்று கமலாவிற்குப் புரிந்தது.
அன்று ஒரு நாள் வேலையில் இருந்து வீட்டிற்குத் திரும்பியவள், தொலைபேசி பதிவு நாடாவில் தனக்கு ஏதாவது செய்தி வந்திருக்கிறதா என்று அறிய அழுத்தினாள்.
“ஹலோ. ஹலோ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ….” என்ற வார்த்தைகளைக் கேட்டு கமலா அதிர்ந்தாள்.
மறுநாள் தன்னோடு நெருக்கமாகப் பழகும் அலுவலகத் தோழியிடம் மட்டும் தொலைபேசி செய்தியைத் தெரிவித்தாள்.
அடுத்து வந்த மூன்று நாட்களும் இந்த தொலைபேசி பதிவு வந்தது. ஒவ்வொரு முறையும் அந்தக் குரலில் ஏதோ ஒரு பதட்டம் இருப்பதாகத் தோன்றியது. குரலின் வயதும் கொஞ்சம் முதிர்ச்சியாக இருந்தது. “ஆக இது நிச்சயம் வீம்பு பிடித்த பையன்களின் விளையாட்டு அல்ல… அப்படியானால் யாரது?”
மறுநாள், அலுவலகத்தில் தன் மேசைக்கு முன் ஒரு உருவம் மெல்ல மெல்ல வந்து நிற்பதைக் கவனித்து ஏறிட்டுப் பார்த்தாள்.
ரமேஷ் – சக ஊழியன். கமலாவை விட கொஞ்சம் உயர் பதவியில் இருப்பவன். வயது 42 இருக்கும்; அலுவலகத்தில் அவனுக்கு “மௌன சாமியார்” என்று ஒரு பட்டம்!!
“யெஸ் மிஸ்டர் ரமேஷ்?” அவனி டம் ஒரு பதட்டம் இருப்பதைக் கவனித்துக் கேட்டாள் கமலா.
“ஐயாம் சாரி கமலா” என்று கூறியவன் சிறிதாக மடிக்கப்பட்ட ஒரு தாளை அவள் மேசையின் மீது வைத்து விட்டு விறுவிறுவென்று நகர்ந்து போனான். கமலா அதைப் பிரித்துப் பார்த்தாள்.
“ஐ யம் சாரி… ரியலி வெரி சாரி கமலா… உங்களை நான்கு நாட்களாக தொலைபேசியில் தொந்தரவு செய்தது நான் தான். என்னவோ தெரியலை…. கடந்த சில மாதங்களாக, உங்களுக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் என்று என் மனம் துடியாய்த் துடிக்கிறது…நான் நினைப்பது சரியல்ல என்று உங்களுக்குத் தோன்றினால் ஓங்கி ஒரு அறை கொடுத்து விடுங்கள். மனம் குழம்பிப் போய் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு, ஒரு தெளிந்த வழியைக் காட்டுங்கள். இப்படிக்கு ரமேஷ்”
கடிதத்தைப் படித்த கமலா அதிர்ந்து போனாள்…… “ரமேஷ்.. ஒரு மெளன சாமியார்……அழகான மனைவி, மிடுக்கான ஒரு ஆண் மகன் இவர்களோடு இல்லற வாழ்க்கை வாழ்ந்து வரும் இவரா இப்படி??” கமலாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
“சொல்லுங்க…. என்ன உங்கள் குழப்பம்?” வேலை முடிந்த பின் பூங்கா ஒன்றில் அமர்ந்து இருவரும் பேசத் தொடங்கினார்கள்.
***********
நினைவு தெரிந்த நாளில் இருந்தே ரமேஷூக்குக் கஷ்டம்தான், பத்து வயதில் தன் சக நண்பர்களோடு விளையாடிக் கொண்டு இருந்த அவனை, அப்பா திடீரென்று ஒரு நாள் அழைத்து, படிப்பை மூட்டை கட்டச் சொன்னார்.
“ஏன்ப்பா?” என்று அதிர்ந்து போய் குழப்பத்துடன் ரமேஷ் கேட்க அப்பா ‘ஓ’வென்று அழ ஆரம்பித்தார்.
அம்மா பக்குவமாக எடுத்துச் சொன்னாள்….”ரமேஷ்.. நமக்கு அடுத்த வேளை சாப்பாட்டுக்கே கடன் வாங்கித்தான் சாப்பிட வேண்டி இருக்கு. அப்பா பிசினஸ்ல ரொம்ப கஷ்டப்படறார்டா.. அவருக்கு உதவியா நீயும் இனிமே அவரோட வேலை பாரு.. படிக்கப் போக வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அம்மாவும் தேம்பினாள்.
“அம்மா…அப்பா… நான் வேணும்னா இனிமேல் விளையாடவே போகலை… ஸ்கூல் விட்டு வந்ததும் அப்பாவுக்குத் துணையா ராத்திரி கூட வேலை செய்யறேன்… படிப்பை நிறுத்திடாதீங்க….நான் நல்லா படிச்சு, பெரிய ஆளாகி உங்க எல்லாரையும் நல்லா பாத்துப்பேன்..” என்று அழுகையும் கெஞ்சலுமாக சொன்ன வார்த்தைகள் பெற்றோர் மனதை உருக்கியது…. அப்படியே ஆகட்டும் என ஒப்புக்கொண்டனர்.
இலைமறை காயாக இருந்த பாலுணர்வு விஷயங்கள் இந்த நவீன
நாகரிக உலகில் பகிரங்கமாகிப் போய்விட்டது. …அந்தத் தாக்கம் ரமேஷையும் விட்டு வைக்கவில்லை.
தூரத்து உறவுப் பெண் ஒருத்தியின் மேல் அவனுக்கு 13 வயதிலிருந்து ஈர்ப்பு அதிகரித்தது. அவளோ, தன் பெரியப்பா மகன் மேல் தான் அதிகம் ஈர்ப்பு, அவனையே திருமணம் செய்ய விரும்புகிறாள் என்பதை உணர்ந்த போது, அவன் மனம் வலித்தது.
நான்கு ஆண்டுகளாக தன் மனக் கோட்டையில் ராணியாக வாழ்ந்தவள், நிஜ வாழ்க்கையில் பெரியப்பா மகன், அதாவது, அண்ணனின் மனைவியாகப் போகிறாள் …… ‘எனக்கு அண்ணியாகப் போகிறாள்’ என்பதை அறிந்த போது அந்தப் பதினாறு வயதிலேயே அவன் மௌன சாமியார் ஆனான்!
காதல் கோட்டைகளை கல்யாணத்திற்குப் பின் தன் மனைவியோடு கட்டுவதுதான் நமக்கு சரிப்படும் என்று அந்த காதல் கத்திரிக்காய் எண்ணங்களை முட்டை கட்டினான்.
ஆயிற்று…..ரமேஷ் நல்ல படிப்பு முடித்து ஒரு நல்ல வேலையிலும் சேர்ந்தான். பட்ட கடன்கள் போதாதென்று அவன் பெற்றோர் மேலும் சில கடன்களை அவ்வப்போது உருவாக்கி வந்திருந்தனர்…… நான்கு தங்கைளும், மூன்று தம்பிகளும்!!!
ரமேஷ் கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்து விட்டான் என்கிற சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கப் போன தந்தையை கடைசி கால நோய்கள் சில வந்து தாக்கவே, அவர் தன் சொந்தத் தொழிலை மூட்டை கட்டிவிட்டு, வீட்டோடு கிடக்கலானார்.
ரமேஷூக்கு வயது கூடிக் கொண்டு வருவதால் அவசர அவசரமாக முதலில் ஒரு தங்கைக்கு திருமணம் நடந்தேறியது. பிறகு இருபத்தொன்பது வயதில் ரமேஷூக்குத் திருமணம் இனிதாக நடந்தேறியது
மனைவியின் அழகிலும் சிரிப்பிலும் மயங்கிப் போனவன் அவளை உண்மையிலேயே வெகுவாகக் காதலிக்கத் தொடங்கினான். அவனுக்கு தன் மேல் இருந்த மயக்கத்தை, காதலை ஒரு பலவீனமாகப் புரிந்து கொண்டு அவளும் வேண்டுமென்றே ஊடல்களைக் கிளப்பி வேண்டியதை சாதித்துக் கொள்ளத் தொடங்கினாள்…..
தனிக் குடித்தனம் வேண்டும் என்ற எண்ணம் வந்தது தான் தாமதம், சிறு சிறு விஷயத்திற்கெல்லாம் ரமேஷின் குடும்பத்தாருடன் மரியாதை இன்றி வாய்ச் சண்டை போட ஆரம்பித்தாள்.
“தூரம் இருந்தால்தான் இந்த சொந்த பந்தமெல்லாம் நிலைக்கும் இந்த நாகரிக உலகத்திலே” என்று அவன் தந்தையே அவனைத் தனிக் குடித்தனம் போக ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார்.
பிறகு சில மாதங்கள் கழித்து, நான் இன்னும் தூரமாகப் போகிறேன் என்று…..இந்தப் பூவுலகிற்கு விடை கொடுத்து பரலோகம் சென்றடைந்தார் தந்தை.
“இவளின் நடத்தை என் தந்தையின் அவசர மரணத்துக்கு ஒரு மூல காரணம்” என்ற எண்ணம் அவன் மனதை முள்ளாய் குத்தியது. எனினும் அதைப் பெரிது படுத்தாமல் இயல்பாகவே வாழலானான்.
கல்யாணமாகி ஒரு வருடம் ஆகியும் குழந்தை இல்லையே என்ற நச்சரிப்பு…. இரண்டு வருடத்திற்குப் பின் குழந்தையும் பிறந்தது.
“நமக்கென்று ஒரு வீடு வேண்டாமா?” நச்சரிப்பு தொடர்ந்தது….. கடன்பட்டு, மூன்று வருடங்கள் பணம் சேர்த்து வீட்டையும் சொந்தமாக்கிக் கொண்டாயிற்று.
இது போன்ற நச்சரிப்புகள் தொடர் கதையானதில், ரமேஷ் தன் தம்பி தங்கைகளுக்கும் அம்மாவிற்கும் வேண்டிய பண உதவி செய்ய முடியாமல் வருவதை உணர்ந்தான்.
பயமும் ஆத்திரமும் ஒன்று சேர்ந்து அவனைத் தாக்கியது. வாய்ச் சண்டைகள் முளைக்கத் தொடங்கின…. இரவில் படுக்கையில் அவளைத் தொட முயன்ற போதெல்லாம், ‘எனக்கு இது வாங்கித் தருவாயா? அது வாங்கித் தருவாயா?…. முடியாதென்றால் என்னைத் தொடாதே!!” என்று அவள் விலகிப் போனாள்.
நாட்கள் செல்லச் செல்ல….வருடங்கள் உருண்டோட…. அவளின் நடத்தையில், அவளின் பேச்சில் “கணவனிடமே விபச்சாரம் பேசுகிறாள்!!’ என்ற உணர்வைப் பெற ஆரம்பித்தான்….எங்கேயாவது ஓடி விடலாமா? என்று கூடத் தோன்றியது. தன் இல்லற வாழ்க்கையில் முற்றுப் புள்ளி விழுந்து விட்டதாக ரமேஷ் உணர்ந்தான்.
*********
தன் கதையை சொல்லி முடித்தவன், “இதுவே மானம் ரோஷமுள்ள ஆம்பளையா இருந்தா விவாகரத்து வரை போயிருப்பான்…. ஆனா அது என்னால முடியலை..” என்று குரல் கரகரக்க கூறினான்.
“நிறைய கணவன்மார்கள் இன்னொரு பொம்பளை பின்னாடி போறதுக்கு அவங்க மனைவிங்க முக்கிய காரணம்னு தெரிஞ்சுகிட்டேன்….. சரி, என் மேல உங்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது எப்படி? என் கடந்த கால வாழ்க்கை என்ன தெரியுமா?” என்று வினவினாள் கமலா.
“தெரியும்…. அதுக்கப்புறம்தான் உங்க மேல ஈர்ப்பு ஏற்பட்டது…… அதிகரிக்கவும் செய்தது. வாழ்கையில் துன்பப் பட்டவங்கதான், எந்த சுகத்தையும்
துக்கத்தையும் சரிசமமா பங்குபோட்டு அனுசரித்து வாழ முடியும்” ரமேஷ் பதிலளித்தான்.
“உங்களுக்கு என் மேல ஏற்பட்டு இருக்கிற இந்த ஈர்ப்பு – ஒரு அனுதாப உணர்ச்சி. என் மேல ஒரு அனுதாபம், உங்க மேலயே உங்களுக்கு ஒரு அனுதாபம்….இந்த ஈர்ப்பு காதலே கிடையாது…. உங்களுக்கு ஒரு மகன் இருக்கறதை மறந்துடாதீங்க… உங்க மனைவிகிட்ட பக்குவமா பேசிப்பாருங்க….. சரிப்பட்டு வரலைன்னா நீங்க அவங்களை விட்டுப் பிரிய நினைக்கறதை, குறிப்பா சொல்லிப் பாருங்க….. உதாரணமா என் மேல ஏற்பட்ட ஈர்ப்பை வெளிப்படையா சொல்லிப் பாருங்க…… சில சமயம் முள்ளை முள்ளால தான் எடுக்கணும்….
உங்க மனைவியோட பேச்சு, நடத்தை விபச்சாரத்தனமா இருக்குன்னு நினைக்கறீங்க… ஆனா நீங்க இப்போ என்னைத் தேடி வந்திருக்கறதுக்கு என்ன பேர் ரமேஷ்???” கமலாவுக்கு தொண்டை அடைக்க கொஞ்சம் தண்ணீர் பருகினாள். பின்பு தொடர்ந்தாள்….
“ஒரு பொம்பளை 33 வயசுலயும் ஒண்டிக்கட்டையா இருந்தா உங்க எல்லாருக்கும் இளக்காரமா போயிடுச்சு இல்லியா?” கமலா விக்கித்து பேசினாள். சில வினாடிகள் தேம்பித் தேம்பி அழுதாள்.
ரமேஷ் பதறிப் போனான். பல முறை மன்னிப்பு கேட்டுக் கொண்டான். “நீங்க என்னை, ‘போடா நாயே!’ன்னு சொல்லி இருந்தா கூட நான் இன்னும் குழப்பமான மனசோடதான் வீட்டுக்குப் போயிருப்பேன்…ஆனா நீங்க இவ்வளவு வெளிப்படையா பேசி, என் குழம்பின மனசுக்கு ஒரு தெளிவைக் கொடுத்திருக்கீங்க…. அதுக்கு ரொம்ப நன்றி! உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய நான் ஆண்டவனை வேண்டிக்கறேன்!” என்று சொல்லி விட்டு ரமேஷ் கமலாவைத் தனிமையில் விட்டுவிட்டு எழுந்து போனான்.
“எங்கே யாருக்கு எதுவோ….வோ வோ வோ……அவரிடம் அது வந்து சேரும்…. ம்ம்ம்….ம்ம்ம்….” ‘எங்க அம்மா ராணி’ சினிமா பாடலை மனதிற்குள் பாடியவாறு வானத்தைப் பார்த்து விடை தேடினாள் கமலா.