ஊர் நம்புமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 1,500 
 
 

(1961 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குட்டி நாய்களோடு சிறு பிள்ளைகள் உருண்டு புரண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

பிள்ளைகளுக்கும், நாய்களுக்கும் அங்கு குறைவு ஏது? இயற்கையின் அடக்கமுடியாத ஓர் அடிப்படை உணர்ச்சியின் விளைவுகள் அவை.

சிறிது காலத்துக்கு முன்புதான் தோட்ட அதிபரின் வேண்டுகோளின்படி காக்கி’ நிறக் காற்சட்டை அணிந்த ஒரு நாய்சுடுகாரன் குறிபார்த்து அங்குமிங்குமாகச் சுட்டுத் தள்ளிவிட்டுப் போனான். தொழிலாளர்களின் பிள்ளைகள் தப்பிவிட்டன. தேயிலைச் செடிகளிடையே தப்பிப் பதுங்கி ஓடின சில நாய்களின் ‘குட்டிகள்தாம் இப்போது பிள்ளைகளின் விளையாட்டுத் தோழர்கள்.’

‘சலாமுங்க ! சலாமுங்க ! சாமி டொரே சலாமுங்க !!’

‘காக்கி’ நிற யூனிபோம் உடுப்பு அணிந்த சுகாதார இன்ஸ்பெக்டர் ஒருவர் வருவதைக் கண்டு பிள்ளைகள் ஆர்ப்பரித்தனர். நாய்களைச் சுடவாராங்க’ என்று கூவினான் ஒரு பெரிய பையன். உடனே விளையாடிக் கொண்டிருந்த சிறு பிள்ளைகள் சூ சூ’ என்று விரட்டி, குட்டிகளைச் செடிகளுக்குள் தள்ளினார்கள்.

சுகாதார இன்ஸ்பெக்டரைத் தொடர்ந்து சிறிது தூரத்தில் சில உத்தியோகஸ்தர்கள் ஆண்களும் பெண்களுமாக வந்து கொண்டிருந்தனர். அவர்கள் நாய்களைக் கவனிக்கவில்லை. துவக்கும் கொண்டுவரவில்லை. பிள்ளைகளைத்தான் எடைபோட்டு பார்த்தார்கள். கருத்தடைக் கருவிகளை நாகரிகமாக அழகான பெட்டிகளில் வைத்திருந்தார்கள். அவர்கள் முகங்கள் பள்ளிக்குப் பிந்தி வரும் பிள்ளைகளின் முகங்களை ஒத்திருந்தன.

‘சே! ஒரு சில வருடங்கள் முந்தி வந்திருந்தால் இந்தக் கண்றாவியைத் தடுத்திருக்கலாமே என்று அவர்கள் மூளைகள் சிந்தித்து ஏங்கியிருக்கலாம்.

ஆமாம், பார்த்ததும் புளகாங்கிதம் அடைந்து கட்டி அணைத்துக் கொஞ்சிக் குலாவ அந்தப் பிள்ளைகள் என்ன சுகாதார அழகுப் போட்டியில் பரிசு பெறத்தக்க பேபிகளா? நடமாடும் வைத்திய நூதனசாலைகள் தாம், வைட்டமின் ‘ஏ’ குறைவைப் பறைசாற்றும் அழுக்கு நிறக் கண்கள். ‘பி2’க்காக வாய்விட்டழும் கடைவாய்ப் புண்கள் சுண்ணச்சத்துக் கிடைக்காது வளைந்த கால்கள், இரத்தம் இல்லாது வெளிறிய உதடுகள். அதனுடன் சொறி, சிரங்கு, கிரந்தி முதலியவற்றுடன் பூலோகப் படங்கள் போல் படரும் தேமல்கள் வேறு.

இவற்றை எல்லாம் ஒரு விதமாக மூடி மறைக்கும் பட்டை பட்டையான அழுக்கு… ஒரே அழுக்குப் போர்வை,

“தோட்டங்களிலே குடும்பக் கட்டுப்பாடு மிக மிக அவசியம்.” என்றாள் வந்த உத்தியோகஸ்தர்களில் ஒரு பெண்மணி. “சே, மகா மோசம். அநாகரிக மனுஷர். தங்கள் பொருளாதார நிலையை அறிந்து”…

“சலாமுங்க, சலாமுங்க, சலாமுங்க,” பிள்ளைகள் எல்லா லயங்களிலுமிருந்து ஓடிவந்து – பலர் நிர்வாணமாக வந்தவர்களைச் சுற்றி வளைத்து நின்றனர். குடும்பக் கட்டுப்பாட்டு உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வரவேற்பு: அதில் சந்தேகமேயில்லை.

இந்த ஆர்ப்பாட்டத்தைக் கேட்டு அழுக்குப் பாவாடை அணிந்த சிறு பெண்பிள்ளைகள், இடுப்பிலே தங்கள் தாய்மார் பெற்ற கைக்குழந்தைகளை ஏந்திய வாறு அறைகளின் வாசல்களில் வந்து நின்று பார்த்தனர். வீடுகளில் பெரியவர்கள் மலைக்குக் கொழுந்து பறிக்கவும், முள்ளுக்குத்தவும், புல்லுப் பிடுங்கவும் போய்விட்டனர்.

ஓர் அறையில் மட்டும் ஒரு பெண் தனது நாலு நாள் பிள்ளைக்குப் பால் ஊட்டியவாறு கிழிசல் பாய் ஒன்றில் படுத்திருந்தாள். வந்தவர்கள் இன்னும் ஐந்து நாட்கள் பிந்தி இருந்தால் அவள் கூடப் படங்கு கட்டி, கம்பளி போர்த்துக் கூடை ஏந்தி வேலைக்குப் போயிருப்பாள். அவள் பெயர் மருதாயி. அவள் உயிருடன் இருக்கும் ஐந்து பிள்ளைகளையும், இறந்து பிறந்த இரண்டு பிள்ளைகளையும், பிறந்து இறந்த மூன்று பிள்ளைகளையும் பெற்றெடுத்தவள். இந்தக் கணக்கின் விபரம் தோட்டத்துப்பிள்ளை இடாப்பில் மட்டுமல்ல, மருதாயியின் வயிற்றறையின் மடிப்புகளிலும் மார்புகளின் சுருக்குகளிலும் நன்றாகத் தெரிந்தது.

உத்தியோகஸ்தர்கள் அவள் அறையை எட்டிப் பார்த்தார்கள். ஒரு மூலையில் அடுப்பிலிருந்து புகை ‘புஃ புஃ’ என்று எழுந்து அறை முழுவதும் வியாபித்தது. அவளின் கால்மாட்டில் குவித்திருந்த மூத்திரச் சேலையிலிருந்து பரவிய நெடி மூக்கைத் துளைத்தது. கைக்குட்டைகளின் உதவியால் தைரியத்தை வரவழைத்தபடி, சேவை மனமும் அவர்களுக்குத் துணை நிற்க, ஒரு விதமாக அறைக்குள்ளே சென்றனர்.

மருதாயி இருமலுக்கும் முனகலுக்குமிடையே தந்த விபரங்களைக் குறிப்புப் புத்தகத்தில் எழுதினர்.

“எனக்கு முப்பது வயதுங்க” என்று சொன்னாள் மருதாயி. பேசும் போது பொய்ப்பல் நழுவியவர்போல் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றாள் எழுதிக்கொண்டிருந்த பெண். அவர்களால் நம்ப முடியுமா? கன்ன மயிர் நரைத்து, கண் குழி விழுந்து, மார்பகம் காற்றில்லா பலூன் ஆகி, குச்சுக் கை கால்களும், மிதப்புப் பற்களுமாகக் காட்சியளித்த மருதாயி, இங்கிலாந்தின் புதுப்பெண் மாக்கரட்டின் வயதினள்!

ஒரே வயதில் காதலுக்கும் சாதலுக்கும் உள்ள வேற்றுமை.

“உனக்குக் கல்யாணம் ஆனது எப்போ?” தன்னைச் சுதாரித்துக் கொண்டு கேள்விகளைத் தொடர்ந்து கேட்டாள் பிரசாரப் பெண்மணி.

“அப்போ எனக்கு வயசு பன்னிரண்டுங்க.”

“மூத்தபிள்ளை ?”

“அது பொண்ணுங்க: வயது பதினேழுங்க”

இரண்டாவது.
மூன்றாவது.

பத்தாவது.

மருதாயி எழுத வாசிக்கத் தெரியுமளவுக்குப் படிக்கும் பாக்கியம் பெற்றவள். அவள் அப்பா தோட்டவேலை செய்ததால், அவர் குடும்பத்திற்குக் கிடைத்த சலுகைகளில் மருதாயியின் அரிவரிப் படிப்பும் ஒன்று. கேள்விகளுக்கு நிதானமாகப் பதில் தந்தாள். எல்லாவற்றையும் கேட்டுவிட்டுக் கடைசியில், கணவன் அல்லது மனைவி ஒப்பரேஷன் செய்து கொள்வதே மருதாயி குடும்பத்திற்கு நல்லது என்று தீர்மானித்தனர் உத்தியோகஸ்தர்கள். இதை அவளுக்கு நன்கு விளக்கிக் காட்டினர். அவள் புண் வயிற்றைத் தடவிக் கொடுப்பதுபோல் இதமாகப் பேசினர். மிஞ்சி இருக்கும் அஞ்சு குஞ்சுகளையும்’ சரியாக வளர்க்க வேண்டும் என்ற அவள் அவாவைப் பல விதமாகத்தூண்டினர்.

மருதாயி ஒப்பரேஷன் செய்வதானால் அவள் பத்துப் பன்னிரண்டு நாட்கள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டும்.

அவள் கணவன் ராமசாமிக்குச் செய்வதனால் ஒரே நாள் போதும். இதையும் எடுத்து விளக்கி ஒரு நாளை அவனுக்கு நிச்சயித்தனர்.

“அவருக்கு வேணாமுங்க. நானே செய்து கொள்கிறேன்.” என்று வேண்டினாள் மருதாயி.

“இல்லை மனுஷி” நீ பச்சைப் பிள்ளைக்காரி. உன் புருஷன் வரட்டும். வடுக்கூடத் தெரியாமல் ஒரு சிறுவெட்டு, அன்றே வீடு திரும்புவான்.”

மருதாயி ‘சரி’ என்றாள்.

ராமசாமி…..?

அன்று அந்திப்பொழுதில் வேலை முடிந்து லயத்துக்குப் பொதுவாக இருந்த தண்ணீர்க் குழாயில் கால் முகம் அலம்பும்போதே ராமசாமிக்குச் செய்தி தெரிந்தது. “என்ன மருதாயி, நான் பெத்த புள்ளைகளை வளர்க்கத் தெரியாது எண்டு நெனைச்சுக் கொண்டாங்களா அந்த மடையங்க.” என்று சீறினான்.

“நான் சொன்னேன் அத்தான். அவங்க காரணம் காட்டினாங்க. என்னை நீயே பாரு. இனி எல்லாம் முடியுமா?” குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரசார முறைகளைச் சீமையில் இரண்டு வருடம் படித்தவள் போல் எல்லாவற்றையும் கூறினாள் மருதாயி. அவர்கள் சொல்லியதைத் தனது சுகதுக்கங்களுடன் கலந்து உருக்கமான முறையில் திருப்பித் திருப்பிக் கிளிபோல் ஒப்புவித்தாள். ராமசாமியும் கடைசியில் எல்லாம் புரிந்துகொண்டவன்போல் “அவங்க சொன்னது நெசந்தான் புள்ள” ஆகட்டும்” என்று ஒரு நீண்ட ஆழமான பெருமூச்சை விட்டான்.

அந்தத் தோட்டத்தில் பல ஆண்கள் வெவ்வேறு நாட்களில் கண்டி பெரிய ஆஸ்பத்திரிக்குச்சென்று, அன்று அந்தியிலேயே ஒப்பரேஷன் செய்து கொண்டு வீடு திரும்பினர். அவர்களும் வால் அறுபட்ட நரி போல் பிரசாரம் செய்தனர். பண்டி பல குட்டி போட்டும் எதற்கு? இருக்கும் புள்ளைகளை ஆனைக்குட்டிகள் போல் வளர்ப்போம்’ என்றனர்.

ராமசாமி தனக்குக் கொடுக்கப்பட்ட நாளில் கண்டிக்குப் போய் வந்தான். “சின்ன வேலை புள்ள; வலி இல்லை. ஆனா கண்டிப்பா இனி நமக்குப் புள்ளைகள் புறக்க மாட்டா” என்று பெண்சாதியைத் தழுவினான்.

கட்டுப்பாடு ஒன்றுக்கும் அடங்காது காலதேவன் இயங்கிக் கொண்டிருந்தான்.

நாட்கள் பிறந்து மாதங்களாக வளர்ந்தன. புது வருடமும் வந்தது. மருதாயிக்குத் தினமும் காலையில் ஒரு மாதிரி இருந்தது. ‘சே.சே. பழக்கம் பொல்லாதது. ஒவ்வொரு வருடமும், இப்படி இருந்ததால் வெறும் மனப்பிரமை என்று எண்ணினாள். தனியாக இருக்கும் நேரங்களில் தொப்பூழுக்குக் கீழே விரல்களை வைத்து அமுக்கிப் பார்ப்பாள்.

‘சீ’ என்ன பைத்தியக்காரச் செயல்…! ஒரு போதும் அப்படி இருக்க முடியாது’ என்று தனக்குள் சொல்லிக் கொள்வாள். என்றாலும் மனப்போராட்டத்தை அவளால் சமாளிக்க முடியவில்லை .

‘எதற்கும், டாக்டர் ஐயாவைக் கேட்டால் போச்சு’ என்று ஒரு நாள் லீவு போட்டுவிட்டுத் தோட்டத்து டிஸ்பென்சரிக்குப் போனாள்.

சோதிக்கும் போதே தோட்டத்து டாக்டர் அவள் முகத்தைப் பார்த்த அந்தப் பார்வை….

முகத்தில் அப்படியே காறித் ‘தூ..’ என்று உமிழ்ந்தது போல…அவமானம்!

கலங்கிய கண்களுடனும் குழம்பிய சித்தத்துடனும் தனது லயத்துக்குச் சூத்திரப் பாவையைப் போல் திரும்பிய மருதாயி தனது செல்வங்களைக் கடைசி முறையாகப் பார்த்தாள்…

தற்கொலை! … செய்தி கொடூரமான சளிக் காய்ச்சலைப் போல் வேகமாகத் தோட்டமெங்கும் பரவியது. காரணம் தெரியாமல் ராமசாமி தவியாய்த் தவித்தான். பலர் பலவாறு பேசிக் கொண்டனர்.

தேயிலைச் செடிகளின் ஆணிவேர்களுக்கு மருதாயியின் நஞ்சு கலந்த உடல் ஆகாது என்று அவளைத் தூரக்கொண்டு போய்ப் புதைக்கும்படி சொல்லிவிட்டார் அதிபர்.

மறுநாட் காலையில், தான் பெற்ற பிள்ளைகளை வளர்க்க ராமசாமி வேலைக்குப் புறப்பட்டான். கும்பிடப் போன போது மாரியம்மன் படத்தில் ஒரு கடிதம் சொருகி இருப்பதைப் பார்த்தான். கடிதத்தைக் கங்காணி ஒருவன் அவனுக்கு காட்டினான்.

அன்புள்ள அத்தானுக்கு உனது மருதாயி எழுதிக் கொள்வது. என் வவுத்திலே ஒரு புள்ளை வளருதாம். டாக்டர் ஐயா சொன்னாங்க. என்ன அத்தான் உன்னைத்தவிர இந்த மருதாயி வேறு யாரையும் நெனைச்சிருப்பாளா? நெசமாக இல்லை அத்தான். கடவுளாணை நம்பு. ஆனால் ஊர் நம்புமா? சிரித்துக் கதைக்கும் மன்னித்துவிடு என்னை. என் புள்ளைகளை வளர்த்துவிடு.

அரைவாசியிலே கதறிவிட்டான் ராமசாமி.

“நீ பத்தினித் தங்கமடி” தலையை லயத்தின் சுவரில் இரத்தம் கசிய மோதினான்.

“மருதாயி, அது என் புள்ளை; என் புள்ளை. நான் அன்று கண்டிக்குப் போனது உண்மை. ஆனா, பயத்தில் ஒப்பரேசன் செய்து கொள்ளவில்லை. உனக்குப் பொய் தான் சொன்னேன்.”

-1961, சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *