கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 11, 2024
பார்வையிட்டோர்: 2,146 
 
 

(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘கொஞ்சம் கெதியாய் நடக்கட்டும்’ என்றார் நமசிவாயம். அவர் மனைவி பார்வதி, ஆலத்தி எடுப்பதற்கு இன்னொரு ஆளைத் தேடி உள் பக்கம் ஓடினாள்.

இராகவன், சாந்தினியின் கைகளைப் பற்றிக் கொண்டான். அவள் தனது உடமை என்பதைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அவன் அந்த மெல்லிய பூப் போன்ற கரத்தைத் தன் கையினுள் அடக்கிக் கொண்டது போலப் பட்டது.

சாந்தினியின் விரல்கள் அவன் விரல்களுடன் பேசவில்லை. அவற்றிலே துடிப்பில்லை. உணர்ச்சி இல்லை .

ஏனோ தெரியவில்லை; உணர்ச்சியில்லாத மரக் கட்டை போன்று அவள் நின்று கொண்டிருந்தாள்.

ஜன அலையின் மத்தியிலே , அன்னம் போன்று அலங்கரிக்கப்பட்ட அந்த வண்ணக் கார், மெதுவாக ஊர்ந்து வந்து நின்றது. உண்மையிலேயே அன்னப் பட்சி ஒன்று நீந்தி வருவது போன்று அழகாக இருந்தது அது.

சாந்தினி மெதுவாகத் தன் கண்களை வலது பக்கம் ஓட்டினாள். இராகவனுடைய தோற்றம் வெகு இரம்மியமாக இருந்தது. அவள் நினைத்தது போலவே, பட்டு வேட்டி சால்வையில் அவன் வெகு கம்பீரமாக இருந்தான். காதிலே போட்டிருந்த கடுக்கன் அவளுக் குச் சிறிது சிரிப்பை வரவழைத்தாலும், அவனு டைய தோற்றம் அவளுக்கு மிகவும் பிடித்துக் கொண்டது.

மணவறையில், ஓமப்புகையின் மத்தியில் அவ ளால் எங்கே அவனைப் பார்க்க முடிந்தது?

ஆனாலும் என்னவோ அவளுக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடவில்லை. “ஊர்வலம், ஊர்வலம்” என்று எதை ஆவலுடன் எதிர்பார்த்தாளோ, அது இல்லாம லேயே போயிருக்கலாம் என்றுதான் அவளுக்கு இப்பொழுது தோன்றியது .

நேற்றுக் காலை கூட அவள் எவ்வளவு கவலைப் பட்டாள். ஊர்வலத்தில் கணவன் பக்கத்தில் எப்படி எப்படியெல்லாம் உட்காரவேண்டும், எப்படி எப்படி யெல்லாம் நடக்க வேண்டும் என்று எவ்வளவு கனவு கண்டாள்!

மாப்பிள்ளை காரில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.

சாந்தினியும் அவர் பக்கத்தில் முட்டியதும் முட்டாததுமாக உட்கார்ந்து கொண்டாள்.

அதைத் தொடர்ந்து வழமைப்படி அந்த ஊர்க் ‘குஞ்சுகுருமன்’ எல்லாம் மாப்பிள்ளை பெண்ணோடு சம உரிமை கொண்டாடிக் காரை நிறைத்துக் கொண் டனர். நமசிவாயம் பட்டபாடு! அப்பப்பா ! குழந்தை களா அவை? குட்டி எமன்கள்.

எப்படியோ, கடவுள் அனுக்கிரகத்தினால், அவர் கள் மத்தியில் நசுங்கியும் நசுங்காமலும், பிராணா யாமம் செய்து கொண்டு ” புதுத் தம்பதிகள் ” ஊர்வலத் திற்குப் புறப்பட்டார்கள்.

சாரதி பெருமிதத்தோடு வேக வளர்ச்சிக் கருவி யில் காலைப் பதித்தான். அவ்வளவுதான் அந்தப் பிரமாண்டமான ஊர்வலமே நகரத் தொடங்கியது.

இதோ முதல் திருப்பம். இந்த வீடுதானே கமலா வீடு; சாந்தினியின் உயிர்த் தோழி.

சாந்தினியின் கண்கள் மெதுவாக மேலெமம்பி. வேலியில் தெரியும் அடுக்கடுக்கான பொட்டுகளைத் தேடின. கமலா அங்கேதான் நிற்பாள். பாம்பின் கால் பாம்பறியுமல்லவா? ஒரு கண நேரம் சாந்தினி யின் கண்களில் ஒளி.

மறுபடியும் பழைய உணர்ச்சியற்ற பார்வை.

கலாசாலையிலே இராகவனுடன் பழகியபோது வெறும் நட்பு என்றுதான் நினைத்தாள். ஆனால் அதுவே இப்படிக் காதலாகித் தம்பதிகளாக்கியும் விடும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

இராகவனிலும் பார்க்க இராகவனுடைய அறி வைத்தான் அவள் காதலித்தாள். ஆனால் இப்போது இராகவனே அவளுக்குச் சொந்தம் – அவள் உடமை.

ஏதோ சிரிப்பொலி. குனிந்த தலையைச் சற்றே நிமிர்த்தினாள் சாந்தினி . மணியண்ணை தான் ஏதோ ‘பகிடி பண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் அவள் கண்கள் எதிரே இருந்த அரசமரத்தில் போய் நிலை குத்திக் கொண்டன. அதே அரசமரம்! ஆனால் அப் போது மரத்தின் கீழே வெறுமனே தான் பிள்ளையார் இருந்தார்; இப்போது போன்று சிறு கோவில் இல்லை.

இதே கோவிலில் பத்து வருடங்களுக்கு முன்னர் அவளும் அவள் மச்சான் மாணிக்கமும் “மாப்பிள்ளை – பொம்பிளை’ விளையாட்டு விளையாடி இருக்கிறார் கள். இன்று –

“சீ! இது என்ன நினைவு? எப்பொழுதோ வயது தெரியாத காலத்தில் பைத்தியக்காரத்தனமாக ஏதா வது விளையாடி இருக்கலாம். அதை வைத்துக் கொண்டு…”

“என்ன? வயது தெரியாத காலமா? ஏன்? இரண்டு வருடங்களுக்கு முன்பு கூட , நீ கலாசாலையி விருந்து விடுமுறைக்கு வந்தபோது உன்னுடைய மச்சான் அந்தத் தபால்கார மச்சான் – உன்னைப் பார்க்க வந்தானே.

உனக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் அவன் எட்டி எட்டி நின்றபோது அவனை நீதானே இழுத்து வைத்துப் பேசினாய்!

“என்ன ஒன்றும் கதைக்கிறீர்கள் இல்லை. நான் ஏதோ படிக்கப்போனால் போல உங்களை மறந்து விட்டேன் என்பது அர்த்தமா?”

“முன்னையப் போல சாந்தா’ என்றுதான் நீங்கள் கூப்பிடவேண்டும் நீங்கள் என்னோடு வித்தியாச மாகப் பழகினால் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது” என்று சொன்னாயே. அது ஒன்றும் மடைத்தனம் இல்லையா?

“என்ன சாந்தி எவ்வளவு நேரமாக மாப்பிள்ளை இறங்கி நிற்பார். நீ இந்த உலகத்திலே இருந்தால் தானே!”

திடீரென்று சாந்தினி நினைவு வந்து, இறங்கிக் கொண்டாள். இராகவன் கடைக்கண்ணால் பார்த்துச் சிரித்துக் கொண்டான்.

அதே அரசமரத்தடிப் பிள்ளையாரைத்தான் தன் மணவாழ்வில் உறுதியோடு இருக்க அருளும்படி வேண்டிக்கொண்டாள் சாந்தனி .

என்றும் இல்லாமல் அன்றைக்கு அவளுக்கு மச்சானின் நினைவு அடிக்கடி தோன்றிக் கொண் டிருந்தது. அதுவும் அன்பைக் கொட்டும் கணவன் – இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுக்கும் கணவன் – பக்கத்திலிருக்கும் போதே இந்த நினைவா?

அவள் அந்த நினைவைத் தள்ளித் தள்ளி விட்டாள்.

அரச மரத்தைச் சுற்றி வந்தார்கள் இருவரும்.

அதைச் சுற்றி வரும்போதே இனிமேல் அந்த நினைவே வேண்டாம் என்று சங்கற்பமும் எடுத்துக் கொண்டாள்.

ஆனால், அவளுடைய சங்கற்பத்துக்கு முதற் சோதனை யொன்று உடனேயே ஏற்பட்டு விட்டது.

அரச மரத்தின் மூன்றாவது திருப்பத்தைக் கடந்த போது அவள் உடம்பில் இரத்தம் எல்லாம் பனிக்கட்டி யாக மாறி விட்டது .

அப்படியே திகைத்து விட்டாள்.

“காஸ்லைட்’டின் வெளிச்சம் திட்டுத் திட்டாக விழுந்திருந்த அந்த அரசமரத்தின் அடிப்பாகத்தில் ”மாணிக்கம் – சாந்தினி’ என்ற எழுத்துக்கள் தெளி வாகத் தெரிந்தன.

அவள் அதை வாசித்தாள். தேகத்தில் ஏதோ உதிருவது போன்ற நினைவு. கைகள் நடுங்கின. நெஞ்சை அழுத்திக் கொண்டாள் அவள்.

அந்தச் சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது. மாணிக்கம் தன்னுடைய பெயரை மட்டும் பொறித்துவிட்டுச் சாந்தினிக்கு அதைக் காட்ட ஓடோடியும் வந்து அவளை இழுத்துக் கொண்டு போனான்.

“மாணிக்கம்’ என்ற பெயரைக் கண்டதும் தன் னுடைய பெயரையும் பக்கத்திலேயே எழுத வேண்டும் என்று அழத் தொடங்கி விட்டாள். ஆனால், சாந்தினி யின் முதல் எழுத்தான “சா” என்பதைச் செதுக்கியது தான் தாமதம் அவனுடைய பேனாக் கத்தி உடைந்து விட்டது.

அப்பப்பா! அதற்குப் பிறகு அவள் படுத்திய பாடு. அவளுடைய கரைச்சல் தாங்காமல் எப்படியோ மாணிக்கம் மற்றொரு கத்தி சம்பாதித்து வந்து மீதி எழுத்துக்களையும் செதுக்கினான்.

அப்பொழுது அவள் அடைந்த ஆனந்தம்!

“சீ! இந்த அரசமரத்துக்கு இருக்கும் நன்றி உணர்ச்சியில் நூறில் ஒரு பங்கு எனக்கு இருக்கிறதா? அன்று எழுதியதை , எழுத்துப் பிசகாமல் இன்றும் வைத்துக் காட்டு கிறதல்லவா? நான் அன்று சொன்ன வார்த்தையை…”

“கடவுளே, கடவுளே, மறுபடியும் மறுபடியும் இதே நினைவுதானா?”…

“பொட்” என்று என்னவோ முதுகில் விழுந்தது சாந்தினி திடீரென்று விழித்துக் கொண்டாள். திரும்பிப் பார்த்தாள். காருக்குள் ஏறியிருந்த குழந்தைப் பட்டாளம் அயரத் தொடங்கியிருந்தது. அவள் மேல் ரவியன் தான் விழுந்திருந்தான்.

இராகவன் சிரித்துக் கொண்டே “பயப்பட்டாயா?” என்றான். மணப் பெண்ணும் பதில் பேசுவதா? அதைச் சாக்காக வைத்துக் கொண்டு சாந்தினி கீழே குனிந்து கொண்டாள்.

சந்தியிலே கார் நின்றது. பிரதான சந்தியல்லவா? அதிலே ஒரு திறம் ‘சமா’ வைக்கா விட்டால் ஊர்வலத்துக்கு என்ன மதிப்பு? அதிலும் மணியம் அண்ணை முந்தா நாள் சாந்தினி வேண்டி வேண்டிச் சொன்னபடி ஒன்றையாவது தவற விடாமல் அப்படியே செய்து வந்தார்.

ஆனால், உண்மையில் சாந்தினிக்கு இவையெல்லாம் இப்போது தேவையாக இருந்தனவா?

நாகசுரத்தில் இராகவர்ணனை தொடங்கியது.

நாட்டைக் குறிஞ்சி இராகம் அந்த நாகசுரக் குழாய் வழியாகப் பிய்த்துக் கொண்டு வந்தது. ஆனால் இந்த இராகத்துக்கு எங்கிருந்து இவ்வளவு சோகத் தன்மை வந்தது? உலகத்துச் சோக இசையை யெல்லாம் பிழிந்து பிழிந்து சேர்க்கிறானே?

போயும் போயும் இந்த நேரத்தில் இப்படி மனதை உருக்கும் இசையையா இவன் வாசிக்க வேண்டும்?

கணவன் பக்கம் திரும்பினாள் அவள். ஆனால், அவனோ வெகு அமைதியாக , ஆனந்தமாக இராகத்தை இரசித்துக் கொண்டிருந்தான்.

மனம் ஒரு கணம் ‘திக்’ என்றது.

இந்தச் சிறு விஷயத்தில் கூட எங்களிடையே வேற்றுமையா !

“தவில் கொஞ்சம் கெதியாய் முடியட்டும். மணி பதினொன்று ஆகிறது” என்றார் மணியம் அண்ணை.

அவளுக்கு மணியம் அண்ணையை வாழ்த்த வேண்டும் போலத் தோன்றியது.

தூக்கக் கலக்கம். ஜனங்கள் எட்டி நடை போட்டார்கள். சாந்தினி மெதுவாகத் தலையை நிமிர்த்தி ஆகாயத்தைப் பார்த்தாள். மழை வரும் போல் இருந்தது. நட்சத்திரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிந்தன.

அருந்ததி நட்சத்திரம் எந்தப் பக்கம் இருக்க வேண்டும். வடக்குப் பக்கம் தானே. ஐயர் அருந்ததி காட்டுவதாகச் சொல்லி வெறும் கூரை முகட்டைத் தானே காட்டினார்.

அதோ தெரிகிறது தூரத்தில் நான் படித்த பாடசாலை. இதோ இந்த வழியால் தானே நான், கமலா, மனோன் மணி எல்லோருமாகப் புத்தகப் பையைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு போவோம். அந்த மணல் மேடு இப்பொழுதும் இருக்கிறதா? அதில் தானே நானும் மச்சானும் ஒட்டியபடியே இருந்து கணக்குப் போடுவோம். படம் வரைவோம்; வீடு கட்டி விளையாடுவோம்.

மறுபடியும் அப்படி விளையாட முடியுமா!

திடீரென்று அவள் மனது கனக்கத் தொடங் கியது. அந்த கன்னங்கரிய இருளில் அவள் மச்சானின் உருவம் வந்து முன்னே நின்றது. “சாந்தினி ! பத்து வருடங்களுக்கு முன்பு எனக்குக் கணக்கு வருகுதில்லையே’ என்று நான் அழுதபோது, என் கண்ணீரை உன் சின்னஞ் சிறு விரல்களால் துடைத்து விட்டு “நான் காட்டித் தாரேன்” என்றாயே; நீ எனக்கு எத்தனை தரம் தான் கணக்குச் சொல்லியிருப்பாய். ஆனால், என் மூளையில் எதுவுமே ஏறவில்லை.

“அப்பொழுது நீ, ‘ஐயோ ஐயோ உங்களுக்கு ஒன்றுமே தெரியாது’ என்று என் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சுவாயே – உன்னுடைய அந்த அன்பெல்லாம் எங்கே ஒழிந்து விட்டது?

“இன்று எங்களைப் பிரித்தது என்ன? உன் பீ.ஏ பட்டம்.”

“இந்த ஏழைத்த பாற்காரனை நீ ஏன் நினைக்கிறாய்”

இது என்ன? இந்த ஊர்வலம் மணியக்காரத் தெருப்பக்கம் திரும்புகிறதே ! என்ன? அந்த வீதியாலா போகிறது?

சாந்தினிக்குத் திக்கென்றது.

அந்த மூலை திரும்பியதுமே அந்த ஓலை வீட்டுக் கூரை, கால் ஒடிந்த படலை தெரிகிறதா என்று பார்த்தாள்.

சீ! அவர் ஏன் அங்கு நிற்கிறார்? கல்யாண வீட்டுக்கே வரமாட்டேன் என்றவர். இந்த நட்டநடு நிசியில் நான் ஊர்வலம் போகும் மகத்தான காட்சியைக் கண்டுகளிக்க வந்து நிற்கிறாராக்கும்.

கார் அந்தக் குடிசையைத் தாண்டும் போது அவள் மனம் படபடத்தது. ஆவலை அடக்க முடியாமல் திரும்பிப் பார்த்தாள்.

தன் எலும்புக் குருத்துகள் எல்லாம் உறைந்து போய்விட்டன.

தூணோடு தூணாய் அவளையே பார்த்தவாறு – அவன் தான் – அவள் மச்சான் தான் ஒரு அகம்பாவம் பிடித்த பெண்ணைப் பார்க்கிறோமென்ற நினைப்பே இல்லாமல், நின்று கொண்டிருந்தான்.

சொற்ப நேரம் தான்.

இருந்தும் அந்தக் கண்களில் இரண்டே இரண்டு சொட்டுக்கண்ணீர் பளபளத்தது போன்று அவளுக்குப் பட்டது.

சாந்தினியின் கழுத்தைத் திடீரென்று நாகப்பாம்பு ஒன்று இறுக்கத் தொடங்கியது. திடுக்கிட்டுக் கீழே பார்த்தாள் – இல்லை அது அவளணிந்திருந்த பூமாலை தான். தலையை மெதுவாகக் கீழே குனிந்து கொண்டாள் கண்ணீரை மறைக்க.

ஆனால் இராகவன் கண்டு விட்டான்; கண்ணீரை மட்டும் தான்.

“ஏன்! சாந்தினி காஸ் லைட் கண்ணைக் குத்துகிறதா? முன்பே சொல்வதற்கு என்ன?” என்று செல்லமாகக் கடிந்து கொண்டான்.

“வேலு, இந்த லைட்டை தூரக் கொண்டு போ” என்று மாப்பிள்ளை அதிகாரத்தோடு சொன்னான்.

அவனுக்குத்தான் எவ்வளவு அன்பு!

“காஸ்லைட் வெளிச்சம் தூரப் போகப்போக அதன் இரைச்சல் அதிகமாகிக் கொண்டே வந்தது.

அவளால் அந்த இரைச்சலைத் தாங்க முடியவில்லை.

“சீ! இது என்ன பிரமை? இந்தப் பேரிரைச்சல் எங்கிருந்து வருகிறது?”

“ஒருவேளை , ஒருவேளை இது என் மச்சான் விடும் பெருமூச்சோ ?”

அவளால் நினைக்கவே முடியவில்லை .

நெஞ்செல்லாம் கனத்தது. அப்படியே நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

கையிலே ஏதோ தட்டுப்பட்டது.

அது இராகவன் கட்டிய புத்தம் புதுத் தாலி.

– 1958

– அக்கா (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 1964, பாரி நிலையம், சென்னை.

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *