ஊமை சாட்சிகள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 27, 2013
பார்வையிட்டோர்: 13,635 
 
 

மணி இரவு பனிரெண்டைத் தாண்டிருக்கும். அந்த இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு அலறத் தொடங்கியது ரகுவின் செல்போன்.. சத்தம் கேட்டு முதலில் விழித்த ரகுவின் அப்பா அருகில் படுத்திருந்த ரகுவை எழுப்பி.,

“டேய் ரகு… போன் அடிக்குது பாருடா…” என்றார்..

ரகுவின் வீடு சிறியது… ஹால், கிச்சன், பாத்ரூம், ஒரு சிறிய பெட்ரூம் அவ்வளவே தான்.. ரகுவின் அம்மாவும், தங்கையும் பெட்ரூமில் படுத்துக்கொள்ள ரகுவும் அவன் அப்பாவும் ஹாலில் படுத்துக்கொள்வது வழக்கம்…

தூக்கம் கலைந்த ரகுவும் செல்போனை எடுத்து டிஸ்ப்ளேயில் அழைப்பது யாரென்று பார்த்தான்..

“யாருடா இந்த நேரத்துல போன் பண்றது” என்ற அவன் அப்பாவிடம்
“கதிரேசன் பா” என்றான் ரகு..

செல்போனின் பதிலளிக்கும் பொத்தானை அழுத்தி.,
“ஹலோ.. சொல்லுடா கதிரு..” என்றான்..

கதிரேசன் ரகுவின் கல்லூரி வகுப்புத் தோழன்… கதிரேசன் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு அவனின் நெருங்கியத் தோழன் ரகு மட்டுமே…

மறுமுனையில்.,” ரகு… நான் உங்க வீட்டுக்கு வெளிய தான் நிக்குறேன்… கொஞ்சம் எழுந்து வாயேன்…” என்றான் கதிரேசன்.. அவன் குரலில் தெரிந்த ஒரு வித பதற்றம் ரகுவை அவசரம் அவசரமாக வெளியே வரச் செய்தது… பைக்கோடு நின்று கொண்டிருந்த கதிரேசனின் முகத்தில் கவலை ரேகையை வாசித்த ரகு.., “என்னடா இந்த நேரத்துல வந்திருக்க… என்னாச்சி.. ஏதாவது பிரச்சனையா…?” என்றான்…

“அம்மாக்கும் அப்பாக்கும் வழக்கம் போல இன்னைக்கும் சண்டை டா.. நான் கொஞ்ச நேரத்துல சரியாகிடும்னு நினைச்சி ரூம்க்கு போய்ட்டேன்… ஆனா அப்பா கோவிச்சிட்டு காரை எடுத்துட்டு எங்கயோ போய்ட்டாருடா… மொபைல வேற சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருக்காருடா…” என்ற கதிரேசனின் உதடுகள் அவன் அழுவதற்கு தயார் என்பதை அறிவிக்கும் பொருட்டு துடிக்கத் தொடங்கின…
சிறிது இடைவெளி விட்டு மீண்டும் கதிரேசனே பேசத் தொடங்கினான்..
“ரகு.. நீ கொஞ்சம் கெளம்பி எங்கூட வரியா.. அப்பா எங்கயாவது ஹோட்டல், லாட்ஜ்ல தங்கியிருக்குறாரனு விசாரிச்சிட்டு வரலாம்” என்றான்.. அவனின் பதட்ட நிலை உணர்ந்த ரகுவும் ” சரி டா.. கொஞ்சம் இரு… சட்டைய போட்டு வந்தரேன்..” என்று உள்ளே சென்று சட்டை அணிந்து கொண்டு தன் அப்பாவிடம் கதிரேசனின் நிலையை சுருக்கமாக கூறிவிட்டு மீண்டும் வெளியே வந்து கதிரேசனோடு பைக்கில் ஏறிக்கொண்டான்..

மலைக்கோட்டை மாநகரின் வீதிகள் அந்த இரவு நேரத்தில் ஆள் அரவமற்று அனாதையாய் கிடந்தன.. சத்திரம் பேருந்து நிலையம், தில்லை நகர், உறையூர் என்று திருச்சியின் முக்கியமான வீதிகளில் உள்ள ஹோட்டல் மற்றும் லாட்ஜ் எல்லாவற்றிலும் விசாரித்தும் வெறும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சின இருவருக்கும்… பிறகு மத்திய பேருந்து நிலையம் அருகே இருந்த சில லாட்ஜ்களையும் விசாரித்து எந்த தகவலும் இல்லாமற் போகவே தளர்ந்து போன இருவரும் மூடியிருந்த ஒரு டீக்கடையின் முன்பு வந்து பைக்கை நிறுத்தினார்கள்…

“இப்ப என்னடா பண்ணலாம்” என்று ரகு கேட்ட கேள்வியை சரியாக கவனிக்காத கதிரேசனின் மூளையில் சட்டென்று ஒரு மின்னல் வெட்டியது…

“டேய் அப்பாவோட காலேஜ்ல போய் ஒரு தடவ பாத்துட்டு வந்துரலாமா..?” என்றான் கதிரேசன்.. ரகுவுக்கும் கதிரேசனின் யோசனை சரியென்று படவே இருவரும் கதிரேசனின் அப்பா வேலை பார்க்கும் கல்லூரி நோக்கி பைக்கை செலுத்தினார்கள்…

கல்லூரியை அவர்கள் நெருங்கிய பொழுது கேட் அருகே நின்றிருந்த வாட்ச்மேன் இருவரையும் தடுத்து நிறுத்தினான்…

“யாருப்பா நீங்க ரெண்டு பேரும்..?” என்ற வாட்ச்மேனிடம்

“நான் மேக்ஸ் டிபார்ட்மெண்ட் HOD சேகர் ஸாரோட பையன்… அப்பா இங்க வந்தாரா..?” என்றான் கதிரேசன்..

“ஆமா தம்பி… ஸார் வந்தாரு… மேன்ஸ் ஹாஸ்டல் பக்கம் போனாரு… போய் பாருங்க..” என்றபடியே கேட் திறந்து வழி விட்டான்…

“ரொம்ப தேங்க்ஸ்ன்னே..” என்ற கதிரேசன் மேன்ஸ் ஹாஸ்டல் நோக்கி வண்டியை முறுக்கினான்…

தூரத்திலேயே கதிரேசன் அவன் அப்பாவின் காரை அடையாளம் கண்டுகொண்டான்… ஹாஸ்டல் போர்டிக்கோவில் அமர்ந்து சில மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள்… கதிரேசன் அவர்களை நெருங்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவனுடைய அப்பாவை பற்றி விசாரித்தான்…

“வாங்க.. ஸார் இருக்குற ரூம்க்கு கூட்டி போறேன்…” என்று ஒரு மாணவன் நடக்க ஆரம்பிக்க இருவரும் அவனைப் பின்தொடர்ந்தார்கள்.. ஒரு நீண்ட வராண்டா வழியே கூட்டிச் சென்ற அந்த மாணவன் உள்பக்கமாக சாத்தியிருந்த ஓர் அறையின் முன்பு நிறுத்தி., ” ஸார் இந்த ரூம்ல தான் இருக்காரு..” எனக் கூறிவிட்டு கழண்டு கொண்டான்… அந்த மாணவன் வராண்டாவைக் கடந்து போகும் வரை காத்திருந்த கதிரேசன் கதவை தட்டினான்.. எந்த வித பதிலும் இல்லாமற் போகவே மீண்டும் கதவை பலமாக தட்டினான்… சில நொடிகள் கழித்து கதவிற்கு பின் சிறிய சலசலப்பு… கைலி முண்டா பனியன் சகிதம் கதவை திறந்த சேகர், கதிரேசனையும் ரகுவையும் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் வெறித்துப் பார்த்துவிட்டு கதவை மீண்டும் அறைந்து சாத்தினார்… அந்த சத்தம் இரவின் அமைதியால் சற்று பலமாக ஒலிக்க படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் எழுந்து அறையின் முன்பு வந்து நின்றார்கள்… மீண்டும் கதவைத் திறந்த சேகர்.., ” ரகு.. நீ மட்டும் உள்ள வா…” என்று கூற ரகு சிறிது தயங்கியபடியே உள்ளே நுழைந்தான்… மீண்டும் மூடிக் கொண்ட கதவின் முன்பு நின்ற கதிரேசனை அந்த மாணவர்கள் ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் படிக்கச் சென்றார்கள்…

உள்ளே நுழைந்த ரகு, சேகர் அமர்ந்திருந்த கட்டிலின் அருகே போய் நின்றான்…

சேகர் “உக்காரு ரகு..” என்றார்…

ரகு எந்தப்பதிலும் கூறாமல் கட்டிலின் நுனியில் அமர்ந்தான்… இருவரும் சற்று நேரம் பேசிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தார்கள்… அந்த அமைதியை விரும்பாதவராய் சேகரே பேசத் தொடங்கினார்…
“டெய்லி சண்டதான்பா.. ஒரு நாள் கூட இவனோட அம்மா சும்மா இருக்க மாட்டேங்குறா.. நானும் எத்தன நாள் பொருத்து போறது… இவனும் அவங்க அம்மா பேச்சை தான் கேக்குறான்..” எனக் கூறிகொண்டே வந்தவர் சிறிது இடைவெளி விட்டு பேசத் தொடங்கினார்…

” இவனோட அம்மாவோட தம்பிக்கும் எனக்கும் ஆகவே ஆகாது.. நானும் அவளோட தம்பியும் பேசியே பலவருசம் ஆச்சி.. அவன் கல்யாணத்துக்கு போக கூடாதுன்னு நான் படிச்சி படிச்சி சொல்லியிருக்க ரெண்டு பேரும் என் பேச்சைக் கேக்காம அந்த கல்யாணத்துக்கு போய்ட்டு வந்திருக்காங்க… அப்ப என் பேச்சுக்கு என்னப்பா மரியாதை…?” என்ற சேகரின் கேள்விக்கு பதிலேதும் கூறாமல் அமைதியாக இருந்தான் ரகு.. பிறகு ஒருவாறு தயங்கி பேசத் தொடங்கினான்…

“சரி அங்கிள்… அதுக்காக இந்த நேரத்துல வீட்ட விட்டு ஏன் அங்கிள் வந்திங்க… உங்கள கானோனதும் கதிரு கொஞ்சம் நேரத்துல பதறிட்டான்… ப்ளீஸ் வாங்க அங்கிள் வீட்டுக்கு போலாம்..” என்றான்..

“இல்லப்பா… இனிமே அந்த வீட்டுக்கு நான் போறதா இல்ல… நான் இப்டியே ஹாஸ்டல்ல தங்கிக்குறேன்…” என்றார் சேகர்…

“ப்ளீஸ் அங்கிள் வாங்க… கதிரு உங்கள நினைச்சி ரொம்ப வருத்தப்படுறான்… வாங்க அங்கிள்…”

“இவனுக்கு அவங்க அம்மாதான்ப்பா முக்கியம்.. நான் இல்ல…”

“என்ன அங்கிள் இப்டியெல்லாம் பேசுறிங்க… அவனுக்கு நீங்க ரெண்டு பேருமே தான் அங்கிள் முக்கியம்…” என்ற ரகுவின் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு சேகர் ஒருவாறு வீட்டுக்குப் போக சம்மதித்தார்…

” சரி ரகு.. நீ வெளிய இரு.. நான் சட்டைய போட்டு வந்திரேன்…” என்றார்..

மகிழ்ச்சியோடு வெளியே வந்த ரகு, அங்கே கதிரேசன் இல்லாததை கண்டு சிறிது அதிர்ந்தான்.. அவனைத் தேடிக் கொண்டு வராண்டா தாண்டி வெளியே வந்த ரகு , மரத்தின் கீழே நிறுத்திய தன் பைக்கின் மீது சாய்ந்தபடி நின்ற கதிரேசனைக் கண்டதும் சற்று நிம்மதியடைந்தான்..

“மச்சி.. ஒன்னும் கவலைப்படாத… அப்பா வீட்டுக்கு வரேன்னு சொல்லிட்டாரு…” என்று மகிழ்ச்சியாய் ரகு கூற கதிரேசன் எந்த பதிலும் கூறாமல் தலைக் குனிந்து நின்றான்..

“டேய் என்னடா…” என்றபடியே ரகு அவன் தலையை உயர்த்த கதிரேசனின் கண்கள் கலங்கிய நிலையிலிருந்தன…

“டேய்.. அப்பா தான் வரேன்னு சொல்லிட்டாறேடா… அப்பறம் என்னடா…” என்றான் ரகு..

கதிரேசன் , ” உன்ன ரூம்க்குள்ள கூப்ட்டு பேசின அவரு என்ன ஏன்டா உள்ள கூப்பிடல… நான் என்னடா பண்ணேன் அவர…” என மீண்டும் கலங்கினான்.. விழிகளை துடைத்த படியே பேசத் தொடங்கினான்…

” டெய்லி ரெண்டு பெரும் சண்டை போட்டுக்குறாங்க டா… ரெண்டு பேருமே விட்டுக் கொடுத்து போக மாட்டேங்குறாங்க… இவங்க போட்டுக்குற சண்டைல என் தலையும் என் தங்கச்சி தலையும் தாண்டா உருளுது… நாங்க சின்ன பிள்ளையா இருக்குறதுல இருந்தே இதே தாண்டா… முடியல ரகு.. தற்கொலை பண்ணிக்கலாம்னு கூட தோணுது டா…” என்றான்..

” டேய்.. லூசு மாதிரி பேசாதடா… எந்த வீட்டுல தான் அப்பா அம்மா சண்டை போட்டுக்கலை.. ” என்ற ரகுவின் ஆறுதல் வார்த்தைகளுக்கு சிரித்த கதிரேசன்., “போட்டுக்குறாங்க… ஆனா மறுபடியும் பேசிக்காம இருக்காங்களா…? என் அப்பா அம்மா நேரடியா பேசிக்கிட்டே எட்டு வருஷம் ஆச்சிடா … ரெண்டு பெரும் எங்ககிட்ட பேசுற மாதிரி ஜாடை மாடையாத் தான் பேசிக்குவாங்க… ஒரே வீட்டுல இருந்துட்டே அப்பா அம்மா பேசிக்காம இருக்குறத பாக்குறது எவளோ கஷ்டம் தெரியுமா ரகு..” என்றான்..

கதிரேசனின் அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினான் ரகு.. மீண்டும் பேசத் தொடங்கினான் கதிரேசன்..

“இதோ இப்பக்கூட பாத்தல… என் மனசு எவளோ கஷ்டப் படும்னு யோசிக்காம என்னை வெளியவே நிக்க வச்சி அந்த பசங்க முன்னாடி அசிங்கப்படுத்தினத… அவருக்கு அவரு சொல்றத எல்லாரும் கேக்கணும்.. அது மட்டும் தான் முக்கியம்… ஆனா என் அப்பா அம்மா கிட்ட இருந்து ஒரே ஒரு நல்ல விஷயம் கத்துக்கிட்டேன்… ஒரு parents ஆ பெத்த பிள்ளைங்கக்கிட்ட எப்படியெல்லாம் நடந்துக்க கூடாதுன்னு நல்லா கத்துக்கிட்டேன் டா..” என்ற கதிரேசனின் விழிகள் மீண்டும் கலங்கத் தொடங்கின..

அவன் பேசி முடிப்பதற்கும் அவனின் அப்பா வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.. கதிரேசன் கண்களை நன்றாகத் துடைத்துக் கொண்டான்…

சேகர்.,”ரகு… கார்ல வா.. உன்ன வீட்ல ட்ராப் பண்ணிடுறேன்…” என்றார்…

ரகு..,”இல்ல பரவால்ல அங்கிள்… நீங்களும் கதிரும் கார்ல போங்க.. நான் கதிர் பைக்ல வீட்டுக்குப் போய்க்குறேன்..” என்றான்…

“ம்.. சரிப்பா…” எனக் கூறியபடியே சேகர் டிரைவிங் சீட்டில் அமர்ந்து கொள்ள, கதிரேசன் தன் பைக் சாவியை ரகுவிடம் கொடுத்துவிட்டு ஒரு விரக்தியான சிரிப்பை உதிர்த்து கொண்டே காரில் ஏறிக் கொண்டான்..

“வரேன் ரகு..” என்று சேகரும், “வரேண்டா..” என்று கதிரேசனும் ரகுவிடம் விடைப்பெற்றுக் கொள்ள கார் நகரத் தொடங்கியது…

கனத்த இதயத்துடன் ரகு அந்த கார் போகும் திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்…

Print Friendly, PDF & Email

1 thought on “ஊமை சாட்சிகள்

  1. யதார்த்த கதை.கதிரேசன் போன்ற பல பிள்ளைகள் உண்டு இந்த உலகத்தில்.அப்பா அம்மா பிள்ளைகளுக்கு உதாரணம் ஆக இருக்கவேண்டும்,உபத்திரம் ஆக இருக்க கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *