உயிரோடு உறவாடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 27, 2015
பார்வையிட்டோர்: 8,776 
 
 

மருமகள் தன்னை வசை பாடுவது பருவதம் காதில் விழுகிறது. பல தடவை மகனிடம் சொல்லியும் கேட்கவில்லை என பருவதம் சற்று மனவருத்ததுடன் இருந்தாள். மகன் வீட்டிற்குள் நுழைத்தார்.

“நான் உன் தங்கையை பார்த்துட்டு வரேன்ப்பா. அவள பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. கண்ணுக்குள்ளயே இருக்கிறா” என்றாள் பருவதம். “சரி போயிட்டு வாங்கம்மா” என்றான். பருவதம் தன்னிடம் இருக்கும் சில துணிகள் எல்லாம் எடுத்துக்கொண்டு மகள் வீட்டிற்கு சென்றாள்.

”வாங்கம்மா எப்படி இருக்கிங்க. அண்ணா, அண்ணி, குழந்தைகள் எல்லாம் எப்படி இருக்காங்க” என்ற படியே அம்மாவை கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றாள் நிவேதா. “மாப்பிள்ளை நல்லா இருக்காரா? குழந்தைகள் எல்லாம் ஸ்கூல் போய்ட்டாங்களா? பெரிய மருமகளுக்கும் எனக்கும் ஒத்து வரமாட்டிங்கிது!! இந்த வீடு உன் பெயரில் தானே இருக்கு? அதனால திமிரா? என்று கேட்டு ஒரு முறை என்னை அடித்து விட்டாள். நான் உன் அண்ணனிடம் சொன்னேன். ஆனால் அவன் அதை அவளிடம் கேட்கவுமில்லை, பெரியதாக கண்டு கொள்ளவுமில்லை” என்று அழுதாள்.

அம்மாவின் அழுகையால் நிவேதாவின் கண்ணும் கலங்கியது. “இங்கு என் கூடயே இருக்கலாம்மா. ஆனால் என் மாமியார் எதும் சொல்லுவாங்களோன்னு பயமா இருக்கு” என்றாள் நிவேதா. “பரவாயில்லை, நீ உன் பொழப்ப பாருமா, நான் உன் சின்ன அண்ணா வீட்டிற்கு போறேன். குழந்தைகள் வந்தா பார்த்துட்டு போறேம்மா”. குழந்தைகளுடன் சற்று நேரம் பொழுதை கழித்தாள். “போயிட்டுவாரம்மா!! மாப்பிள்ளை வந்த சொல்லிடு” என்று தன் சின்ன மகன் வீட்டிற்கு புறப்பட்டாள் பருவதம்.

“டக் டக்” என கதவை தட்டுகிற சத்தம் கேட்ட கதவை திறந்தாள் வசந்தா. ”வாங்க அத்தை எப்படி இருக்கிங்க? அங்க எல்லாரும் எப்படி இருக்காங்க?“ என்றாள். “எல்லாம் நலந்தாம்மா” என்று நடந்தவற்றையெல்லாம் வசந்தாவிடம் கூறினாள் பருவதம். “அடப்பாவமே!! இவ்வளோ விஷயம் நடந்துருச்சா? அதான் சொன்னேன் நீங்க இங்கயே இருங்கன்னு, நான் பல தடவ சொன்னேன். ஆனா நீங்க தான் கேட்க மாட்டேன்டீங்க” என வசந்தா சொல்ல, “சின்ன வீடு, மகனுக்கும் வருமானம் கம்மி, அதான் உங்களுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம்முன்னு நினைச்சேன்“ பருவதம் கூறினாள். “அப்படியெல்லாம் இல்ல அத்தை எந்த கஷ்டம் வந்தாலும் என் குழந்தையை நான் பாக்காமா இருப்பேன்னா? அந்த மாதிரிதான் என் வீட்டுக்காரரை பெத்த தாய், உங்களை பார்க்க நாங்கள் கடமை பட்டுருக்கிறோம். சரி சரி! பாட்டிய இரண்டு பேரும் கொஞ்சியது போதும், வாங்க சாப்பிடலாம். என குழந்தைகளை கூப்பிட்டாள் வசந்தா. “உங்க பையன் வர நேரம் ஆகும். வாங்க அத்தை சாப்பிடலாம்” என்றாள். சாப்பாட்டு வேலை முடிந்தது. அனைவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

போலிஸ்காரர் ஒருவர் வாசலில் “இங்க யாருமா வசந்தா? உங்களை ஜிஹச்க்கு இன்ஸ்பெக்டர் வர சொன்னார்” உடனை பதட்டத்துடன் வசந்தா ஆஸ்பத்திரிக்கு வந்தாள். “உன் கணவன் சாலை விபத்தில் இறந்துவிட்டார். பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். போய் பாருங்கள். நீங்கதான் உடலை அடையாளம் சொல்லணும்” என்றார். கணவனை கட்டி அழுதாள் “இரண்டு குழந்தையுடன் என்னை தனியாக தவிக்க விட்டுட்டு போய்டீங்களே!!”என துயரம் தாங்காமல் கதறினாள். காரியம் அனைத்தும் முடிந்தது. சொந்தம் பந்தம் எல்லாம் சென்றுவிட்டார்கள். வசந்தா ஒன்னும் புரியாத நிலையில் இருந்தாள். பருவதம் வசந்தாவிடம் சென்று “இந்த மாதிரி ஒரு சுழ்நிலையில்தான் உங்க மாமா இறந்துட்டார். ஆனா நான் என் மனச தளர விடல, மூணு குழந்தைகளையும் வளர்த்து, ஆளாக்கி, கல்யாணம் செய்து வைத்தென். நீ மனம் தளராதே!! நான் உனக்கு துணையாக இருக்கேன்” என்று ஆறுதல் கூறினாள்.

வசந்தாவுக்கு அத்தையின் பேச்சு ஆறுதலாகவும், மன தைரியத்தையும் கொடுத்தது. வசந்தாவும் கடுமையாக உழைத்தாள். வீட்டிற்கு அருகில் இட்லி கடை ஒன்றை போட்டு நடத்தி வந்தாள். பருவதமும் அவளுக்கு உதவியாக இருந்தாள். குழந்தைகளை நன்றாக படிக்க வைத்தாள். நாளடைவில் பருவத்தின் உடல்நிலை மோசமாக ஆரம்பித்தது. ஒருபுறம் குழந்தைகள், வியாபாரம், மறுபுறம் அத்தையும் நன்றாக கவனித்து கொண்டாள். நாட்கள் நகர்ந்தது. குழந்தைகளின் படிப்பும் முடிந்தது. ஒரு நல்ல வேலைக்கு செல்ல ஆரம்பித்தனர். வசந்தாவின் வாழ்க்கையில் கொஞ்சம் வசந்தம் வீச ஆரம்பித்தது. பருவதத்தின் உடம்பு மிகவும் மோசமானது. பெரிய மருமகள், மருமகனும் பருவத்தை அவர்கள் வீட்டிற்கு கொண்டு செல்லவும், பருவத்தின் பெயரில் இருக்கும் வீட்டை கடைசி நேரத்தில் எழுதி வாங்கி விடலாம் என்றும் திட்டமிட்டனர்.

பெரியமகன், மருமகள், மகள், மருமகன் என அனைவரும் வசந்தா வீட்டிற்கு வந்தனர். வசந்தா அனைவரையும் வரவேற்றாள். சிறிது நேரம் கழித்து மருமகன் “அத்தையை நாங்கள் சிறிது நாள் எங்கள் வீட்டில் வைத்து பார்க்கலாம் என்று ஆசைப்படுகிறேன்” என்றார். உடனே பெரிய மருமகள் “இல்ல அண்ணா! இவ்வளவு நாள் வசந்தா கஷ்டப்பட்டு பாத்துகிட்டா. இப்பயாவது நான் பார்த்து கொள்ளலான்னு நினைக்கிறேன்” என்றாள். உடனே வசந்தா குறிக்கிட்டு “எனக்கு ஒன்னும் கஷ்டமில்ல அக்கா. அவங்க இங்கயே இருக்கட்டும். அத்தைக்கு விருப்பம் இருந்தாள் நீங்கள் கூட்டிகிட்டு போங்க!” என்றாள். “அப்போ அத்தைய இங்கேயே வைத்து அந்த வீட்டை எழுதி வாங்கலான்னு திட்டம் போடுறையா?” என்று பெரிய மருமகள் கேட்டாள். வசந்தா “அக்கா கொஞ்சம் பார்த்து பேசுங்க. அந்த வீட்டில் எனக்கும் பங்கு இருக்கிறது. ஆனால் அது எனக்கு வேண்டாம். அதுக்காக நான் ஒன்னும் அத்தைய பாக்கல. அத முதல்ல புரிஞ்சிக்கோங்க. அதை நீங்களே வைத்து கொள்ளுங்கள்” என்றாள்.

பருவதம் மெதுவான குரலில் “கொஞ்சம் நான் பேசுறத கேளுங்க! வசந்தா என்னை ஒரு குழந்தை போல பார்த்துக்கொண்டாள். எத்தனயோ கஷ்டத்திலும், என் மனம் நோகாமல் பார்த்துக்கொண்ட அவளை இப்படி தவறாக சொல்லாதீங்க. இன்னொரு ஜென்மம் இருந்தால் வசந்தா எனக்கு மகளா பிறக்கணும். எனக்கு எங்கும் வர விருப்பமில்லை. வசந்தாவின் கையில் தான் என் உயிர் போக வேண்டும்” என்றாள் பருவதம். இதை கேட்டதும் வசத்தாவின் கண்கள் கலங்கியது. ஓடிபோய் பருவதத்தின் காலை பிடித்து அழுதாள். “பக்கத்தில் வாமா” என்று கூப்பிட்டு, அவளுடைய தலையில் கையை வைத்து “நீ நல்லா இருப்பமா.”என்று ஆசிர்வாதத்துடன் உயிர் பிரிந்தது. “கணவனை இழந்த முதல் இன்று வரை எனக்கு ஒரு தாயாகவும், நலம் விரும்பியாவும் இருந்த உங்களை இழந்து விட்டனே!!..” என்று கதறினாள். “உயிரில்லா வீட்டை விரும்பி, உயிருள்ள மனிதர்களை நேசிக்காததை நினைத்து பெரியமருமகள் குற்ற உணர்வால் வருத்தினாள். பெற்றத்தாயை கவனிக்காததை எண்ணி பெரியமகனின் மனம் உறுத்தியது.

நம்மில் பலரும் உயிரற்ற பொருள்களின் மேல் கொண்ட ஆசையையும், அக்கறையையும், உயிருள்ளவர்களின் மீது காண்பிக்க தவறுகிறோம். மனித நேயம் மறந்து, மூடர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே சுயநலம் விட்டு மனித நேய வளர்ப்போம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *