“கோடிகளோடு மாடியில் இருந்தால் தான் வாழமுடியும் என்றில்லை, தெருக்கோடியில் இருந்தாலும் வாழலாம். உடலில் உயிர் இருந்தால் போதும்” என வசதியில் ஆயிரங்கோடிகளைக்கடந்து விட்ட தொழிலதிபர் சாமிக்கண்ணு ஏழையைப்போல் தத்துவமாக பேசினார்.
சாமி கண்ணு போகாத ஊரில்லை, சுற்றாத நாடில்லை. வற்றாத ஜீவநதியாய் வருமானம் வரும் வழியை கண்டு பிடித்தவர், படிக்காத மேதையாக இருந்தார். பல மொழிகளை பாரதியைப்போல கற்றவர், மழைக்கும் கூட பள்ளிக்கு ஒதுங்காதவர், மனைவியிடமே எழுத படிக்க கற்றுக்கொண்டார். இன்று பல பள்ளிகளுக்கு முதலாளி.
எதையும் கண்களில் பார்த்தே கணக்கு போட்டுவிடுவார். ஊரில் கைராசியானவர் என பெயர். தன் பாட்டி இறப்பதற்க்கு முன் பாசத்தால் பேரனுக்கு சுருக்குபையில் சேர்த்ததை முறுக்கு பாத்திரத்திலிருந்து எடுத்து கொடுக்க, ஆடு மேய்ப்பதை விட்டு விட்டு அடமானத்துக்கு நகை வாங்கி வைத்து பணத்தை வட்டிக்குவிட, வட்டி குட்டிபோட்டு பணம் பெருக, பையன் திறமையைப்பார்த்து மாமனும் பெண் கொடுக்க, பல வியாபாரம் என ஆரம்பிக்க பல கோடிகள் லாபமாகக்கொட்டியது.
நினைத்ததை உடனே முடிக்கும் பிடிவாதம். ஆனால் இளகிய மனம், தர்ம சிந்தனை, தெய்வ பக்தி, எல்லாவற்றுக்கும் மேலாக ஒழுக்கம் அவரது உயர்வுக்கு காரணமானது. ‘விஸ்வாமித்திரரைக்கூட மேனகை மயக்கிவிட்டாள். இந்த சாமிக்கண்ணு வை யாராலும் மயக்க முடியாது’ என்பது பெண்களின் கிண்டல் பேச்சு. தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்து மன்மதன் போன்று இருப்பார்.
வயது அறுபதைத்தாண்டியிருந்தது. சஷ்டியப்தபூர்த்தியை கொரோனா காரணமாக கோவிலில் செய்யமுடியவில்லை. வீட்டிலேயே அளவான உறவுகளுடன் கொண்டாடினார். உறவுகளுக்கு சாமிக்கண்ணு வை மிகவும் பிடிக்கும். ஊர்காரர்களுக்கும்தான். தேவையறிந்து ஓடிப்போய் உதவி செய்வார். தன் பள்ளியில் கட்டணம் கட்டமுடியாத குழந்தைகளின் வீட்டிற்கே சென்று குடும்ப கஷ்டத்தையறிந்து பண உதவி செய்வார். “குடும்பத்தில் கஷ்டமிருந்தால் குழந்தைகள் படிக்கமாட்டார்கள்” என்பார்.
“சின்ன வயசுல கஷ்டம் வந்தால்தான் சேமிக்கிற பழக்கம் வரும். சேமிக்கிற பழக்கம் வந்தால் தான் செலவு செய்யற பழக்கம் வராது” என தன்னிடம் வேலை பார்ப்போரிடம் அடிக்கடி கூறுவார்.
“ஒவ்வொரு மனுசனுக்கும் பணபாதுகாப்பு வேணும். மனபயத்தை விட பண பயம் மோசமானது” என்பார்.
“அதே சமயம் பணத்துமேல வெறி வந்திடக்கூடாது. அப்படி வந்திடுச்சுன்னா தப்பு பண்ணியாச்சும் பணம் சம்பாதிக்கலாம் னு தோணும். அது பெரிய ஆபத்து. ஊதாரித்தனமில்லாம உழைக்கிறத சேமிச்சாலே பத்துவருசத்துல பணக்காரனாகிடலாம்” என தனது அனுபவத்தை பள்ளி ஆண்டு விழாவில் குழந்தைகளுக்கு சொல்லித்தருவார்.
இப்படிப்பட்டவருக்கு தனது மகன்களின் செயல்பாடுகள் மன வருத்தத்தை கொடுத்தது. அமெரிக்காவில் படித்தவர்கள் அங்கேயே செட்டிலாகி விட்டனர். கொரோனா காலம் அவர்களை மாற்றியிருந்தது. திடீரென ஊருக்கு திரும்பியவர்கள் தந்தையின் தொழிலை கவனிக்க விருப்பம் தெரிவிக்க, மகிழ்ச்சியுடன் அனைத்து சொத்துக்களையும் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு பெற்ற அனுபவங்களை உலகுக்கு கொடுக்க தயாரானார்.
‘பெற்றவங்களுக்கு முப்பது வருசம், குழந்தைகளுக்காக முப்பது வருசம், உலகத்துக்காக முப்பது வருசம் உழைக்கனம். அதுக்காக தொன்னூறு வயசு ஆயுசு வேணும்’ என கடவுளிடம் வேண்டுபவர் தனக்காக வாழ ஒரு வருடம் கூட கேட்கமாட்டார். உலகம் படிக்காத மேதையின் அனுபவங்களை பெற தயாராகிக்கொண்டிருந்தது. வாழ்ந்தவர் பேச்சு மேடையேறும். உத்தமர் செயலால் உலகம் தேறும்.