உயர்ந்தவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 12, 2024
பார்வையிட்டோர்: 197 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கையில் பாடப்புத்தகங்களுடன் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்த பரசுராமன் எதிரே நின்ற சங்கரனைப் பார்த்ததும் எண்சாண் உடம்பும் ஒருசாணாகக் குறுகிப்போய் நின்றார்.

“எழுதிக் கொடுத்திருக்காப்பில் நோட்டில் உள்ளபடி வட்டியோட அசலையும் வெச்சுட்டுப் போய்யா… பெரிய்ய .. வாத்தியார் பட்டம் வேறே..!வாங்கின கடன காலாகாலத்தில் திருப்பிக் கொடுக்க முடியாத உனக்கெல்லாம் எதுக்கய்யா வெள்ளையும் சொள்ளையும்.

கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி அக்கம்பக்கம் பார்க்காமல் பேசிக் கொண்டிருக்கும் சங்கரன் முன் வேட்டை நாயைக் கண்ட முயல்போல் சர்வாங்கமும் ஒடுங்கி நின்ற பரசுராமனின் கண்களில் மௌனம் மட்டுமே பளிச்சிட்டது. வறண்டுபோன தொண்டையைக் கணைத்துக் கொஞ்சம் ஈரப்படுத்திக் கொண்டவர் இரண்டு கைகளையும் கவித்து அவரைக் கும்பிடுகிறார். இவர் எதையோ சொல்ல வருவதற்குள் சங்கரன் மறுபடியும் வார்த்தையினால் சுட ஆரம்பிக்கிறார். இந்த உலகமே ஒன்று கூடி தனது முகத்தில் காரி உமிழ்வது போன்ற உணர்வு பரசுராமனுக்கு.

இன்னம் நாலு நாள்தான் கெடு குடுப்பேன். உங்க மரியாதையை நீங்கதான் காப்பாத்திக்கணும்.

போய்விட்டார் சங்கரன் பரசுராமன் வீட்டு வாசல் படியிலே உட்கார்ந்து விட்டார்.

அடுத்தவாரம் அவரின் ஒரே மகள் சாந்தியின் திருமணம். இந்தியாவில் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு இங்கே வந்து டாக்டராகப் பணிபுரிந்துவருகிறாள். அவளை அந்த உத்தியோகத்தில் கொண்டு வந்து நிறுத்த அவர் வாங்கிய கடன்தான் இன்று அந்த அவமானத்தை அவருக்கு ஏற்படுத்தியது.

வியாபாரத்தில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த பரசுராமன் எதிர் பாராத விதமாய்ப் பங்குதாரர்களால் மோசம் போய் நொடித்துப் போனார். எதிர்த்துப் பேசவே தட்டிக் கேட்கவோ ஆண்வாரிசு இல்லாததால் தன் விதியை நொந்து கொண்டு நடப்பது நடக்கட்டும் என்று வீட்டில் வந்து உட்கார்ந்தபோதுதான் மகள் தன் மலை போன்ற ஆசைகளுடன் வந்து நின்றாள்.

இயல்பாகவே நன்றாகப் படிப்பவள். இப்போது மிகவும் அருமையான தேர்வு முடிவுகளுடன் வந்து நின்றாள். தனது செல்ல மகளை எப்படி எல்லாம் படிக்க வைக்கவேண்டும் என்று அவர் கனவுகண்டு கொண்டிருந்தாரோ அந்த ஆசைகளுக்கேற்ப அவள் வந்து அவர்முன் நின்றபோதுதான் அவர் இதயம் கொஞ்சம் கலங்கியது.

இருந்தாலும் மகளிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல் அவளை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். அவள் படித்து முடிந்து வந்து உத்தியோகத்தில் அமர்ந்தபோது கடனும் வட்டியும் முதலுமாய் வீட்டையே விழுங்கி நின்றது. வட்டிக்கார சங்கரன் சாதாரணமான மனிதர் அல்ல. சொன்னது சொன்னதுபோல் செய்துவிடுபவர்.

பரசுராமன் வியாபாரம் போனாலும் தன்னிடமிருந்த தமிழை வைத்துக் கொஞ்சம் ஜீவனம் நடத்தி வந்தார்.

சாந்தியின் உத்தியோகம் அழகு அறிவு கண்டு பலர் பெண்கேட்டு வந்தார்கள். இருந்தும் பரசுராமன் தன் நண்பர் நடேசன் பிள்ளை அறிமுகம் படுத்திய இடமே நல்ல இடமென்று முடிவு செய்தார். மாப்பிள்ளையும் டாக்டர் உத்தியோகம் பார்த்தது அவருக்குப் பிடித்த காரணமாயிருந்தது.

எல்லா விஷயமும் பேசி முடித்தபின் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் தங்கள் மகளுக்கு சீதனமாக பெருந்தொகை ஒன்றை முன் வைத்தார்கள். சிறிது நேரம் யோசித்த பரசுராமன் அதற்கும் ஒப்புக் கொண்டார். அவர் மனைவி பயந்துபோனாள்.

“குடியிருக்கும் வீட்டையே மீட்ட முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும்போது சீதனப் பணத்துக்கு இவர் எங்கே போவார்” என்ற பயமே அவளுக்கு. ஆனால் பரசுராமனோ நடப்பது நடக்கட்டும் வேலையைப் பார் என்றவராய் நாளைக் கழித்துக்கொண்டிருந்தார்.

மாப்பிள்ளை வீட்டார் கெடுபிடி செய்தால் வீட்டையே கொடுத்து சமாதானம் செய்து விடலாம் என்ற எண்ணம் அவருக்கு. ஆனால் அதற்கும் வழியில்லாமல் சங்கர் வந்து எச்சரிக்கை செய்து விட்டுப் போய்விட்டான்.

வாசல்படியில் உட்கார்ந்திருந்த தனது தோளில் பட்டுப்போன்ற கைகள் பட்டுத் திரும்பியவர் கண்களில் நீர்முத்துக்கள் திரண்டு கீழே விழுகின்றன.

“அப்பா… ஏனப்பா அழுகிறீர்கள்?” பதறியவாறு கேட்கும் மகளைப் பார்க்கும் திராணியற்று தலைகவிழ்ந்துக் கொள்கிறார் பரசுராமன்.

“ஒன்று மில்லையம்மா. பெண்ணைப் பெற்றவன் என்றாவது ஒரு நாள் கண் கலங்கித்தானே ஆக வேண்டும்?”

தந்தையின் பேச்சின் பொருள்புரியாமல் நின்ற மகளை தாய் வந்து அமைதிப்படுத்தினாள். ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் பற்றிச் சொன்னான். அதைக் கேட்டதும் சாந்திக்கு ஆத்திரம் அதிகமாகியது. அவள் பெற்றோரைக் கடிந்துகொண்டாள். என்ன காரியம் பண்ணியிருக்கீங்க நீங்க.. என்னைப் பெத்துவளர்த்து படிக்கவெச்சு ஆளாக்கினது நான் உங்களை எல்லாம் கண் கலங்காமல் பார்த்துகிறதுக்காகத்தான். அதை விட்டுவிட்டு எங்கிருந்தோ வர்ற ஒருத்தனுக்கு என்னையும் என் படிப்பையும் என் சம்பாத்தியத்தையும் கொடுக்கிறதுமில்லாம ஆயிரக் கணக்கில் பணத்தையும் கொடுக்கச் சொல்லி உங்களை யாரு வற்புறுத்தினாங்க..

ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் காலம் பூரா அவளோட வாழப் போறவன் அவளோடு சேவைக்கும் உழைப்புக்கும் சீதனத்தை வர்றவளுக்கு எந்த கணவனாலேயும் சம்பளம் கொடுக்க முடியுமா.. இதை எல்லாம் நெனச்சுப் பார்க்காம அவுங்கதான் கையலாலகாத்தனமா பணம் கேட்டா அதுக்கு நீங்களும் சம்மதிக்கணுமா?”

அவள் ஆத்திரத்தை அம்மா சமாதானப்படுத்தினாள்.

“நீங்க சும்மா இருங்கம்மா.. உங்களை எல்லாம் இவ்வளவு கஷ்டப்படுத்தி நான் அங்கே போய் வாழணும்கிற அவசியம் என்ன வந்தருக்கு.. பேசாம கல்யாணத்தை நிறுத்திடுங்க..”

பரசுராமன் மகளை சமாதானப் படுத்தினார். காலத்தோட உன்னைப் படிக்க வைச்சக் கரைசேர்த்தது மட்டும் என் கடமை இல்லேம்மா.. கண்ணியமா உன்னை ஒருத்தன் கையில ஒப்படைக்கிறது என் கடமை. அதை எப்படியும் நான் செய்துதான் ஆகனும். என் தலையை அடகு வைச்சாச்சும் நான் நடத்துவேன்.. நீ போய் உன்னோட வேலையைப் பாரு

மகள் போய்விட்டாள். கையில் இருந்த திருக்குறள் புத்தகத்துடன் பரசுராமன் வெளியே இறங்கி நடந்தார்.

மருத்துவமனையில் புகுந்து விட்ட பின்பு சாந்தியின் மனத்துள் தாயும் தந்தையுமே சுற்றி சுற்றி வந்தார்கள். நெஞ்சமோ தாமரை இலைத் தண்ணீராய்த் தவித்தது. அவளது அழகிலும் பண்பிலும் மனம் லயிதது அவளை ஆசைப்பட்டவன் ஒருவன் உண்டு. படிப்பின் காரணமாய் அவனை அவள் ஒதுங்கி நின்றாள். அந்த பண்பாளன் அரவிந்தன் தற்சமயம் ஒரு நிறுவனத்தில் தலைமைக் கணக்கராய் பணி செய்து கொண்ருந்தான்.

எதிர்பாராதவிதமாய் மருத்துவமனையில் தன் நண்பனைப் பார்க்க வந்த அரவிந்தன் கண்களில் சாந்தி பட்டுவிடவே அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. இருவரும் நலம் விசாரித்துக் கொண்டார்கள். அவளுடன் பேச வேண்டும் என்றான். பணிமுடிந்து சந்திப்பதாய்ச் சொன்னாள்.

அவள் வரும்வரை காத்திருந்தான். இவருவரும் கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார்கள். நிகழ்காலத்துக்கு வந்தபோது தனக்கேற்பட்டுள்ள நெருக்கடியைச் சொன்னாள் சாந்தி. என் பெற்றோரின் மன விருப்பத்தை நான் எப்படி நிராகரிப்பது என்றாள்.

வாடிய முகத்துடன் விடை பெற்றான்.

சாந்தியின் மணநாள் வந்தது. மாலையும் கழுத்துமாய் மணமேடையில் உட்கார்ந்திருந்தாள் சாந்தி. மணமகன் வந்து உட்கார்ந்தார். கூடவே அவருடைய அப்பாவும் வந்தார்.

“என்னங்க சம்பந்தி இன்னும் பணம் வந்து கைக்கு சேரலியே”

குரல் ஒரு மாதிரியாக ஏறி இறங்கியது.

“கொஞ்சம் பொறுமை.. பொறுமையா இருங்க சம்பந்தி.. இதோ கொஞ்ச நேரத்தில்…”

“என்னய்யா பொறுமை… நான் பொறுமையா இருந்து கடைசியா இளிச்சவாயன் பட்டம் கட்டிகிட்டுப் போவேன்னு நெனச்சீங்களா… பணம் வந்தாதான் தாலி கழுத்திலே ஏறும்”

சம்பந்தியின் கடுமையான வார்த்தையினால் பரசுராமன் நொறுங்கிப்போனார். படித்துப் பட்டம் பெற்ற மாப்பிள்ளையோ அப்பாவின் முகத்தைப் பார்க்க அவனளவுக்கு படித்து உத்யோகம் பார்க்கும் மணமகள் தந்தையின் பாதங்களைப் பார்க்கிறாள்.

“யோவ் அய்யரே.. நிறுத்தய்யா உம்மோட மந்திரத்தை.. டேய் எழும்பி வாடா இப்படி..”

நாகரிகம் இல்லாமல் கூச்சல் போடும் சம்பந்தியின் கையைப் பிடித்துக்கொண்டு பரசுராமன் கெஞ்ச மணமேடையில் இருந்து மாப்பிள்ளையும் எழுந்து விடுகிறார். விருந்தினர்கள் விக்கிப் போனார்கள். கூட்டத்தில் இருந்த இளைஞன் ஒருவன் வருகிறான். சம்பந்தியிடம் போய் அவருக்கு வணக்கம் சொல்கிறான்.

“மாப்பிள்ளை ஸார்… திருமணம் வாழ்க்கையில் அமையற புனிதமான விஷயம். அந்த விஷயத்தில அவுங்க அவுங்க விருப்பத்துக்கு விளையாட ஆரம்பிச்சிட்டா அப்புறம் உலகத்தில தர்மத்துக்கே மரியாதை இல்லாமப் போய்டும்.

ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குந்தான் திருமணம் இல்லீங்க.. பணத்தை பெருசா நெனைச்ச பவித்திரமான பெண்ணை நீங்க உதாசீனம் பண்ண நெனைச்சா .. அப்புறம் உங்க குடும்பத்துல இப்படி ஒரு காரியம் நடக்காதுங்ககிறது என்ன நிச்சயம்.

இதோ இருக்கு பணம்! நீங்க கேட்தைவிட அதிகமாகவே இருக்கு. ஒரு தங்கைக்கு அண்ணன் கொடுக்கிற சீதனம். பிடிங்க பணத்தை.. கட்டுங்க தாலியை,,”

மாப்பிள்ளை மணமேடையில அமர்ந்து தாலியைக் கட்டுகிறார். அட்சதை மழையாய் பொழிகிறது. மங்கல மேளம் முழங்கிறது.

பரசுராமன் அந்த இளைஞனை நெருங்கி அவன் கைகளைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொள்கிறார்.

“தம்பி யார் பெத்த பிள்ளையோ இப்படி சமயத்தில் கடவுள் மாதிரி வந்து பணத்தைக் கொடுத்து என் மானத்தை காப்பாத்திட்டே.. நீ நல்லாயிருக்கணும்”

‘தப்புங்க.. இது என்னோட பணமில்லே. இது எங்கப்பாவுக்கு நீங்க கட்டின வட்டிப் பணம். இதோ அப்பாவுக்கு நீங்க எழுதிக் கொடுத்த வீட்டு அடமானப் பத்திரம்.. அளவுக்கு மீறி பணத்தை வெச்சி அவர் என்னதான் செய்யப்போறார்னு தெரியலை போங்க”

அவன் முடிப்பதற்குள் சங்கரன் பதறிக் கொண்டு ஓடி வருகிறார்.

“அரவிந்தா.. அரவிந்தா.. நான் கஷ்டப்பட்டு சேத்த பணம்டா இப்படி வீணாக்கிட்டீயே.. இது உனக்கே நல்லாயிருக்கா”

பரசுராமன் திகைப்புடன் அவரைப் பார்க்க மணமேடையில் இருந்தவாறே சாந்தி நீர் தழும்பிய கண்களோடு அவனைப் பார்க்கிறாள்.

“வாங்கப்பா.. வட்டி வாங்கி சேர்க்கிற பணம் நாமா வலியத் தேடி வைக்கிற பாவம். அந்த பாவத்தில வாழ நான் விரும்பல..” தன் தந்தையின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான் அவன். ஆனால் அவளது இதய பீடத்திலே மிக உயர்ந்து நின்றான்.

– செவ்வந்திப் பூக்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2007, வெளியீடு: சிங்கை தமிழ்ச்செல்வம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *