உப்பு ஜாடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 25, 2023
பார்வையிட்டோர்: 1,860 
 
 

“ஏய்… நீயும் தான் வாயேன் உள்ள. நாங்க நாலு பேரு மட்டும் வட்டம் சின்னதா இருக்கு. நீயும் வரலாம் இல்ல.. ஏன் இப்படி கோவிச்சுட்டு தனியா உட்கார்ந்துட்டு இருக்க” விளையாடிக் கொண்டிருந்த விக்னேஷ், ஆஷா, ஜெனிபர் மற்றும் முபாரக் கிணற்றடியில் சோகமாய் உட்கார்ந்திருந்த விகாஷை பார்த்துக் கேட்டனர். திறப்பதற்கு தயாராக இருக்கும் அணையை போல கேட்ட அடுத்த நொடியில் கண்களில் தாரையாக நீர் வடிந்தது. “அம்மா திட்டிட்டாங்க.. “என்று இன்னும் தேம்பி அழ. குட்டிப் பட்டாளம் அவனை சூழ்ந்து கொண்டது. “அம்மா தானேடா திட்னாங்க.. அதுக்கு ஏன்டா அழறே..” என்றவாறு கண்ணை துடைத்து விட்டாள் ஜெனிபர். கிடுகிடுவென ஓடிய ஆஷா “தண்ணி குடிடா விக்கி… அழாத.. ” என்று குவளையில் தண்ணீர் நீட்டினாள். தண்ணீரை கஷ்டப்பட்டு தொண்டையில் இறக்கி குடித்த விகாஷ், “நீங்க விளையாடுங்க எனக்கு மூடு இல்ல என்றவாறு வீடு நோக்கி நடந்தான். அம்மாவிடம் திட்டு வாங்கிய தருணம் மீண்டும் நினைவலையாய் எழுந்தது.

காலை 7:30 படுக்கையிலிருந்து எழுந்த விகாஷுக்கு சமையலறையில் உப்பு ஜாடியின் பின்னால் நீல நிற டப்பாவில் ஸ்ட்ராபெரி சுவையில் எடுத்த வைத்த லாலிபாப் நினைவிற்கு வந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான் அம்மா சுவாதி மாடியில் துணி காயவைத்துக் கொண்டிருந்தாள். அப்பா மனோ வாசலில் வண்டியை துடைத்துக் கொண்டிருந்தார். தயங்கிய வண்ணமே மெதுவாய் சமையலறைக்கு சென்றான்.

மூன்றாவது அலமாரியில் தங்க நிற கவருடன் லாலிபாப் விகாஷை “வா வா” என்று அழைத்தது. அலமாரி அருகே சென்றான், உயரம் போதவில்லை. இன்னும் அருகில் சென்றான் கை எட்டவில்லை. குதிக்கால்களை உயர்த்திய வண்ணம் மீண்டும் எக்கி முயன்று பார்த்தான் ம்ஹும்ம்… உயரம் போதவில்லை. பின்கட்டு வாசல் வழியாக அம்மாவை அழைத்து எடுத்துச் தர சொல்லலாம் என்றவாறு பார்த்தான். சுவாதி மாடியில் “ஜீன்ஸ் எவ்ளோ அழுக்கு போயே தொலைக்க மாட்டேங்குது. கழுதை எங்க போய் இவ்ளோ அப்பிக்கிட்டு வருமோ”என்றவாறு ஜீன்ஸை உதறி காய வைத்து க்ளிப் போட்டுக் கொண்டிருந்தாள். ஜீன்ஸுக்கு கிடைத்த மரியாதை தான் தனக்கும் போல என்று தொண்டையை கம்மி எச்சிலை விழுங்கியவாறே மீண்டும் அலமாரிக்கு சென்றான். இப்போது லாலிபாப் ஸ்ட்ராபெரி வாசத்தோடு மீண்டும் விகாஷை அழைத்தது.

கீழ் அலமாரியில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற பிளாஸ்டிக் மனையை எடுத்து வைத்து அதன் மீது ஏறினான். ஒரளவிற்கு டப்பா எட்டியது. ஏதோ சாதித்து விட்டதாய் மனதில் அளவிட முடியாத மகிழ்ச்சியோடு ஸ்ட்ராபெரியின் வாசத்தில் மயங்கியவனாகி ஒருவழியாய் லாலிபாப் கையில் சிக்கிவிட்டது. இழுத்தான். அருகே வந்தது. மீண்டும் இழுத்தான் லாலிபாப் கையில் வந்துவிட்டது அதே நேரம் புதிதாய் வாங்கி வைத்திருந்த உப்பு ஜாடி கீழே விழுந்து பெரும் சப்தத்தோடு ஏழு துண்டாய் விழுந்து நொறுங்கி சமையலறை முழுதும் உப்பு சிதறி தெரித்தது.

சப்தம் கேட்டு சுவாதி மாடியிலிருந்து மின்னல் வேகத்தில் இறங்கி வர மனோவும் வாசலிலிருந்து பதட்டமாக ஓடி வர. கையில் லாலிபாப்புடன் கண்களில் கண்ணீர் குளத்துடன் உப்பு சிதறலுக்கு நடுவில் கையும் களவுமாக பிடிபட்ட திருடன் போல பேச்சுமூச்சற்று உடல் நடுங்கி நின்றிருந்தான் விகாஷ். வந்து பார்த்த சுவாதி இடுப்பினில் இரு கைகளையும் வைத்தவாறு முறைத்துக் கொண்டிருந்தாள் விகாஷை. ஓடி வந்ததிலும் உப்பு ஜாடி உடைக்கப்பட்ட ஆத்திரத்திலும் மூச்சு வேகத்தின் சப்தம் புயல் காற்றை மிஞ்சியது. பதற்றமாய் வந்த மனோ விகாஷை தூக்கி வைத்துக் கொண்டு “உனக்கு ஒன்னும் அடி படலயே கண்ணு” என்று விகாஷின் கால்களையும் கைகளையும் பதற்றமாய் பார்த்தவாறு “லாலிபாப் வேணும்னா அப்பாகிட்ட கேட்டிருக்கலாம்ல. ஏன்டா கண்ணா உப்பு ஜாடிய ஒடச்ச. மேல பட்டிருந்தா அடி பட்டிருக்கும். இனிமே இப்படி செய்யாத”என்ற கடிந்தவாறே விகாஷின் கண்களை துடைத்து விட்டார். விகாஷ் பயந்த வண்ணமே சுவாதியை பார்த்தான்.

“அப்டி என்ன அவசரம் ஒனக்கு? வர்ற வரைக்கும் வெயிட் பண்றது. ஏற்கனவே ஆயிரத்தெட்டு வேல கெடக்கு இத க்ளீன் பண்றது ஆயிரத்து ஒன்பதாவது வேல. உங்களுக்கு வேல செஞ்சே நான் பரலோகம் போய்விடுவேன் போல” என்று தலையில் அடித்துக் கொண்டவாறே “எனக்குன்னு வந்து எல்லாம் அமையுது பாரு” என்றவாறு உடைந்த ஜாடித்துண்டுகளையும் உப்பினையும் பெருக்கிக் கொட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.

அதற்குள் மனோ அவனை ஆசுவாசப்படுத்தி குளிக்க வைத்து உடை உடுக்கச் செய்து. சிற்றுண்டி ஊட்டி விட்டுக் கொண்டிருந்தார். “அப்பா.. உப்பு ஜாடி கைதவறி விழுந்துடுச்சி ப்பா. அம்மா பாவம் நான் ஸாரி சொல்லிட்டு வரேன்பா” என்றான். மனோ சிரித்தவாறே “வெரிகுட் கண்ணா. அம்மாக்கு ஸாரி சொல்லிட்டு ஹெல்ப் பண்ணு” என்று அனுப்பி வைத்தார்.

சமையலறைக்கு வந்த விகாஷ் “ஸாரிம்மா கைதவறி விழுந்துடுச்சி. நான் ஹெல்ப் பண்றேன். நீ போய் ரெஸ்ட் எடுத்துக்கோம்மா” என்றான். “ஐயா சாமி.. நீங்க செஞ்சது வரைக்கும் போதும். கைய கால வச்சிட்டு சும்மா இருந்தாலே போதும். கோடி புண்ணியம். நீ போ சாமி… நானே பாத்துக்கிறேன்” உப்பை வாரி பெருக்கி கொட்டிவிட்டு. கைகளை சோப்பு போட்டு கழுவி துடைத்து பின்னிலை சுருட்டி கொண்டை போட்டுக் கொண்டு குளிப்பதற்கு சென்றுவிட்டாள்.

விகாஷ் பதிலேதும் சொல்ல முடியாதவனாய் ஊமையாய் சோகத்தோடு கிணற்றடிக்கு சென்று அமர்ந்து கொண்டான்.

உடைந்தது உப்பு ஜாடி.

உடைப்பட்டது விகாஷின் மனம்.

– ஜனவரி 2021

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *