கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 7,583 
 
 

‘எவன் உனக்கு வேலை கொடுப்பான் ?’, உள்ளே ஆத்திரம் பொங்கினாலும், அதை மறைத்துக்கொண்டு கொஞ்சம் கிண்டலாகதான் கேட்டார் அவளது அப்பா.

ஒரு பெண்கள் விடுதியின் வரவேற்பறையில், கிருஷ்ணார்ஜுனர்களின் படம் எதற்கு என்று சபாபதிக்குப் புரியவில்லை.

ஆனால், சுவரில் பாதிக்குமேல் அடைத்துக்கொண்டிருந்த அந்த ஓவியம் மிக அருமையாக இருந்தது. அதில் பல நுட்பமான உள்குறிப்புகள் பொதிந்திருப்பதாக அவருக்குத் தோன்றியது.

அர்ஜுனனின் வில்லும், சில அம்புகளும் கீழே கிடக்கின்றன. அவன் தரையில் மண்டியிட்டுக் கை கூப்பியிருக்கிறான். அவன்முன்னே நிற்கும் கிருஷ்ணர், அறிவுரை செய்யும் பாவனையாகக் கையை மேலே உயர்த்தியிருக்கிறார். பின்னணியில் ஒரு தங்கத் தேர், அதில் மூன்றோ, நான்கோ குதிரைகள். தேரில் அர்ஜுனன் உட்கார்வதற்கான இடம் என்று எதுவும் இல்லை. ஆனால், பார்த்தசாரதியான கிருஷ்ணன் அமருமிடம், நன்கு அலங்கரிக்கப்பட்டு, குஷன் தைத்தாற்போலிருந்தது. கூடவே, காங்கிரஸ் செயற்குழுக் கூட்டங்களில் வைப்பதைப்போன்றதொரு நீண்ட திண்டு. தேரோட்டுபவருக்கு எதற்கு இத்தனை பவுசு என்று தெரியவில்லை.

இப்படியெல்லாம் குதர்க்கமாக யோசிப்பது கடவுள் குற்றமாகுமா என்று அவருக்குத் தெரியவில்லை. ஒருவேளை இந்தக் காட்சியில் பகவான் அருளிக்கொண்டிருக்கும் கீதையிலேயே இதற்கெல்லாம் பதில் இருக்கிறதோ என்னவோ.

கீதோபதேசக் காட்சிக்குக் கீழே ஒரு மேஜை, அதில் பூ இல்லாத ஜாடி ஒன்று, பக்கத்தில் பார்வையாளர்களுக்கான நைந்த நோட்டுப் புத்தகம், ஒன்றிரண்டு பழைய சோ·பாக்கள், மற்றபடி, அந்த அறையில் பெண்மை அடையாளங்கள் என்று எதுவுமே இல்லை.

ஆனால், இந்த வரவேற்பறையைத் தாண்டி உள்ளே சென்றுவிட்டால், விடுதிமுழுவதும் பெண்கள்தான். படிக்கிறவர்கள், வேலை பார்க்கிறவர்கள், அல்லது வேலை தேடுகிறவர்கள் என்று எல்லா வகைகளிலும், எல்லா வயதுகளிலும் பெண்கள் இங்கே தங்கியிருப்பதாக திவ்யா சொல்லியிருக்கிறாள்.

திவ்யா, சபாபதியின் அக்கா மகள். திருநெல்வேலி அரசுக் கல்லூரியில், எஞ்சினியரிங் படித்துவிட்டு, இங்கே சென்னையில் வேலை பார்க்கிறாள்.

அவள் வேலை செய்கிற கம்பெனியின் பெயர் சபாபதிக்கு லேசாகதான் நினைவிருந்தது. அவளது முகவரி அட்டைகூட, பர்ஸினுள் இருக்கிறது. ஆனால், எத்தனை முயன்றாலும், அந்த நிறுவனத்தின் பெயர் அவருடைய வாயில் நுழைவதில்லை.

ஆனால், அது ரொம்ப உசத்தியான கம்பெனி என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். அங்கே வேலை கிடைப்பதுகூட மிகச் சிரமம்தானாம். இந்தத் துறைசார்ந்த யாருடைய உதவியோ, வழிகாட்டுதலோ இல்லாமல், திவ்யா எப்படி இந்த அளவுக்கு வளர்ந்தாள் என்பது அவளுடைய அப்பா, அம்மாவுக்குக்கூட இன்னும் ஆச்சரியம்தான்.

திவ்யாவின் கல்லூரிப் படிப்பு முடிந்ததுமே, அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டார் அவளது அப்பா. முதலாவது வரனை என்றைக்குப் பெண் பார்க்க வரச்சொல்லலாம் என்று அவர் தன் மனைவியிடம் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தபோது, திவ்யாவின் கல்லூரி இறுதித் தேர்வு முடிவுகள்கூட வந்திருக்கவில்லை.

இந்த விஷயம் கேள்விப்பட்டதும், திவ்யா தீர்மானமாகச் சொல்லிவிட்டாள், ‘எனக்கு இப்போ கல்யாணம் வேணாம். நான் வேலைக்குப் போகப்போறேன்’

‘எவன் உனக்கு வேலை கொடுப்பான் ?’, உள்ளே ஆத்திரம் பொங்கினாலும், அதை மறைத்துக்கொண்டு கொஞ்சம் கிண்டலாகதான் கேட்டார் அவளது அப்பா.

‘எவனாவது என்னைக் கல்யாணம் செஞ்சுப்பான்னு நீங்க நம்பறீங்கதானே ? அதேமாதிரி, வேற எவனாவது எனக்கு வேலை கொடுப்பான்னு நான் நம்பறேன்’, திவ்யாவின் பதிலில் உறுதி தெரிந்தது, ‘நான் நாளைக்கு மெட்ராஸ் போறேன். திங்கக்கிழமை எனக்கு ஒரு இண்டர்வ்யூ இருக்கு’

அவள் சொல்வதை நம்புவதா, வேண்டாமா என்று தெரியாமல் திகைப்போடுதான் அமர்ந்திருந்தார் திவ்யாவின் அப்பா. என்னதான் தந்தைவழி ஆணாதிக்கச் சமூகம் என்றாலும், படித்த பெண்ணை, தோளுக்குமேல் உயர்ந்துவிட்ட மகளைக் கட்டிப்போடவா முடியும் ? இந்தக் காலத்துப் பெண், நேராக போலீசுக்கு ·போன் செய்தாலும் செய்துவிடுவாள்.

ஆகவே, ‘எக்கேடோ கெட்டுப் போ’, என்னும் புராதன வாக்கியத்தோடு எழுந்துகொண்டார் அவர். போகிறபோக்கில், ‘நீ வாங்கியிருக்கிற மார்க்குக்கு, உனக்குத் தங்கத் தட்டில வேலையை வெச்சுக் கொடுப்பாங்க, போய் வாங்கிட்டு வா’, என்றார்.

அந்தக் குரூரமான விமர்சனம்தான், திவ்யாவை ரொம்ப பாதித்துவிட்டது. அப்போது கிளம்பி சென்னை வந்தவள்தான், மாமா சபாபதி வீட்டில் தங்கிக்கொண்டு, வேலைக்கு முயற்சி செய்யலானாள். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குமேல், பெரிய நிறுவனங்களில் ஆரம்பித்து, நேற்று முன்தினம்தான் தொடங்கிய உப்புமா கம்பெனிகள்வரை எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று வேகாத வெயிலில் அலைந்தாள். கடைசியில், கிண்டியில் ஒரு சிறிய நிறுவனத்தில் நாலாயிரத்து சொச்ச ரூபாய் சம்பளத்தில் அவளுக்கு வேலை கிடைத்தது.

அந்த நியமனக் கடிதத்துடன்தான் அவள் ஊருக்குச் சென்றாள். அப்போதும், திவ்யாவின் அப்பா அவளோடு சரியாகப் பேசவே இல்லை.

வேலையில் சேர்வதற்காக திவ்யா மீண்டும் சென்னை திரும்பியபோது, இந்த ஹாஸ்டலில் தனக்கென்று ஓர் அறை பார்த்துக்கொண்டாள். ‘இங்கயே எங்களோட தங்கிக்கோம்மா’, என்று சபாபதி சொல்லியும், அவள் கேட்கவில்லை, ‘இந்த இடம் எங்க ஆபீசுக்குப் பக்கமா இருக்கு மாமா, தவிர, நான் முடிஞ்சவரைக்கும் சொந்தக் கால்ல நிக்கணும்ன்னு ஆசைப்படறேன். தயவுசெஞ்சு தப்பா நினைச்சுக்காதீங்க’

இதில் தப்பாக நினைப்பதற்கு எதுவும் இல்லை. என்றாலும், அவள் தன்னையும் அன்னியனாக நினைத்துவிட்டதுதான் சபாபதிக்குக் கொஞ்சம் வருத்தம். ஆனால், திவ்யாவின் அப்பா அவளை நடத்திய விதத்திற்கு, அவள் இந்தச் சமூகத்திலுள்ள எல்லோர் மீதும் நம்பிக்கையிழப்பதுதான் நியாயம் என்றும் அவருக்குத் தோன்றியது.

திவ்யாவை அதிபுத்திசாலி என்றெல்லாம் சொல்லமுடியாது. அதற்காக, முழுமுட்டாளும் கிடையாது, சராசரியான மாணவி. பள்ளியில் படித்த நாள்களிலேயே, நூற்றுக்கு அறுபது என்கிற அளவில்தான் மதிப்பெண்கள் வாங்குவாள். கல்லூரியிலும் அதேமாதிரிதான். படிப்பை முடித்துவிட்டு, வேலைக்கான நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்றபோது, ஆங்கிலம் பேசச் சிரமமாக இருக்கிறது என்று சபாபதியிடம் பலமுறை சொல்லியிருக்கிறாள்.

இதற்காகச் சில ஆங்கிலப் பேச்சு வகுப்புகளுக்குக்கூட பதிந்துகொண்டாள் திவ்யா. ஆனால், அவை அவளுடைய ஆங்கிலத்தில் எந்த அளவு முன்னேற்றத்தை ஏற்படுத்தியது என்று அவரால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை.

இந்தக் காரணத்தால்தான், தனக்குப் பெரிய கம்பெனிகளில் வேலை கிடைக்கவில்லை என்பது திவ்யாவின் வாதம், ‘சாஃப்ட்வேர் வேலைக்குப் படிப்போ, மார்க்கோ அவசியமே இல்லை மாமா, நாம எப்படி யோசிக்கிறோம்ங்கற சூட்சுமபுத்திக்குதான் இங்கே மரியாதை. ஆனா, சில பெருந்தலைங்க, இங்கிலாந்தில பொறந்து வளர்ந்தவங்களைதான் வேலைக்குச் சேர்த்துப்போம்ன்னு ரொம்பதான் அலட்டறாங்க’

எப்படியோ, பல இடங்களில் இப்படித் தட்டுத் தடுமாறியபிறகு, அவளுக்கும் ஒரு சிறிய நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டது. அதுவரை தனது நம்பிக்கையை இழந்துவிடாமல், அப்பா சொன்னதுபோல், பேசாமல் கல்யாணம் செய்துகொண்டு நிம்மதியாக இருந்திருக்கலாமோ என்று ஒரு கணமும் நினைத்துவிடாமல் அவள் உறுதியோடு காத்திருந்ததே பெரிய விஷயம் என்று தோன்றியது அவருக்கு.

ஆனால், தன் அப்பாவுடனான இந்தப் போட்டியில் அவள் ஜெயித்துவிட்டதாக சபாபதி எண்ணிக்கொண்டிருக்கையில், திவ்யா அப்படி நினைக்கவில்லை. இந்த வேலை, மேலும் பெரிய விஷயங்களுக்கான ஏணிப்படிமட்டுமே என்பதில் அவள் உறுதியாக இருந்தாள்.

ஏனெனில், சிறிய நிறுவனங்களில் வேலை செய்யும்போது, ஒருவர் ஒரு விஷயத்தில்மட்டும் கவனம் செலுத்துவது என்பது முடியாது. இங்கே ஆள்கள் குறைவு என்பதால், ஒவ்வொருவரும், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யவேண்டியிருக்கும். ஆகவே, பல விஷயங்களை நன்கு ஊன்றிக் கற்றுக்கொள்ளவும், நல்ல அனுபவம் பெறவும் வாய்ப்புகள் அதிகம்.

இப்படிப் பல்லைக் கடித்துக்கொண்டு சில ஆண்டுகளைக் கழித்துவிட்டால், அதன்பிறகு, இந்த அனுபவம் பேசும். பெரிய நிறுவனங்கள் எதிர்பார்ப்பது இத்தகைய அனுபவஸ்தர்களைதான்.

இந்த நம்பிக்கையில்தான், அந்த நான்காயிரம் ரூபாய் வேலையை ஒப்புக்கொண்டதாகச் சொன்னாள் திவ்யா, ‘ஹாஸ்டல்ல தங்கும்போது, கைக்கும், வாய்க்கும் சரியா இருக்கும். ஆனாலும், நம்ம நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாமே பொறுப்பு-ன்னு இருக்கிறதுதான் மாமா நல்லது’, என்றிருந்தாள் அவள்.

திவ்யா சொன்னதைப்போலவே, அந்த முதல் வேலைக்குப்பிறகு, இந்த மூன்று வருடத்துக்குள் இரண்டு கம்பெனிகள் மாறிவிட்டாள். ஒவ்வொருமுறையும், சம்பள உயர்வு, சவுகர்யங்கள், மரியாதை, சமூக நிலை என்று அவள் விஷயத்தில் எல்லாமே உயர்ந்துகொண்டுதானிருக்கிறது.

ஆனால், இத்தனைக்குப்பிறகும், இப்போதைக்குக் கல்யாணம் செய்துகொள்ளமாட்டேன் என்று அதே பிடிவாதத்துடன் இருக்கிறாள். அதுதான் எல்லோருக்கும் வருத்தம்.

ஆரம்பத்தில் திவ்யா வேலைக்குச் செல்வதை அங்கீகரிக்காத அவளது அப்பாகூட, இப்போது கொஞ்சம் இறங்கிவந்திருக்கிறார். சென்ற மாதம் திவ்யாவைப் பார்ப்பதற்காகவே சென்னை வந்து, டைடல் பார்க்கில் அவளது அலுவலகத்துக்குச் சென்று, சுற்றிப்பார்த்து, வாய் நிறைய பாராட்டிவிட்டுதான் சென்றார்.

‘எல்லாம் சும்மா ஐஸ் வைக்கிற வேலை’, என்று அவரது இந்தச் சுற்றுப்பயணத்தை மொத்தமாக நிராகரித்துவிட்டாள் திவ்யா, ‘எப்படியாவது எனக்குக் கல்யாணம் செஞ்சுவெச்சுடணும். அதுக்குதான் இதெல்லாம்’

‘இருக்கட்டுமே, அதில என்ன தப்பு திவ்யா ?’, என்று வாதிட்டுப்பார்த்தார் சபாபதி, ‘உனக்கும் கல்யாண வயசாகுதில்லையா ?’

‘கல்யாண வயசுன்னு ஒண்ணு எங்கயும் கிடையாது மாமா’, என்றாள் திவ்யா, ‘உங்க கொள்ளுத் தாத்தா காலத்தில, பத்து வயசுதான் கல்யாண வயசு. ஆனா, இப்போ அதைக் கேட்டா உங்களுக்குச் சிரிப்பு வருதில்லை ? அந்தமாதிரிதான், நீங்க சொல்ற இருவத்தி மூணு, இருவத்தஞ்சையெல்லாம் எங்களால கல்யாண வயசா ஏத்துக்கமுடியலை’

திவ்யா சொல்வது சரியா, தவறா என்று அவரால் நிச்சயமாகத் தீர்மானிக்கமுடியவில்லை. எந்த விஷயத்துக்கும் இன்னொரு கோணம் இருப்பது உண்மைதான். ஆனால், இப்போது இந்த நவீனயுகத்தில் எல்லாமே குழப்பமாகிவிட்டதுபோலிருக்கிறது.

என்னதான் தலைமுறை இடைவெளி இருந்தாலும், இரண்டு தலைமுறைகள் சேர்ந்துதான் வாழவேண்டியிருக்கிறது. ஒவ்வொருவரும், இடைவெளியின் மறுபுறத்திலுள்ளவர்களின் முன்முடிவுகளை, தீர்மானங்களை எதிர்த்துப் பேசிக்கொண்டு, ஆதங்கப்பட்டுக்கொண்டு அவரவர் களத்தில் சவுகர்யமாக இருக்கிறார்கள். அல்லது, அப்படி நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், மருந்தைச் சாப்பிடும்போது, குரங்கை நினைக்கக்கூடாது என்று சொல்லப்பட்டவன், மருந்தை மறந்தாலும், குரங்கை மறப்பதில்லை. அதுபோலதான், ஒவ்வொருவரும் மற்றவரைச் சகித்துக்கொண்டாவது சார்ந்து வாழவேண்டியிருக்கிறது.

திவ்யா விஷயத்தில் தான் யாருடைய கட்சி என்று யோசித்தபடி, கீதோபதேசச் சுவரோவியத்தில் அதற்கான பதிலைத் தேடிக்கொண்டிருந்தார் சபாபதி, ‘ரொம்ப ஸாரி மாமா’, என்றபடி கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள் திவ்யா. நெற்றிப் பொட்டைச் சரிசெய்தபடி, ‘கொஞ்சம் லேட்டாயிடுச்சு, ஸாரி’, என்றாள் மீண்டும்.

‘பரவாயில்லைம்மா’, என்றார் சபாபதி, ‘எப்படி இருக்கே ?’

‘எனக்கென்ன ? டாப் ஆ·ப் தி வேர்ல்ட்’, எதிர் சோ·பாவின் ஓரமாக அமர்ந்தாள் திவ்யா, ‘உங்களுக்குப் பிடிக்குமேன்னு கொஞ்சம் ரவா லாடு செஞ்சேன்’, என்றபடி அவரிடம் ஒரு பிளாஸ்டிக் டப்பாவை நீட்டினாள், ‘நீங்க சாப்டுட்டு, மிச்சத்தை வீட்டுக்குக் கொண்டுபோங்க, மாமிக்கு ரொம்பப் பிடிக்கும்’

‘சரிம்மா’, என்று டப்பாவை வாங்கி வைத்துக்கொண்ட சபாபதி, சற்றே தயங்கி, ‘உங்கப்பா மறுபடி ·போன் செஞ்சார்ம்மா’, என்றார்.

‘தெரியும்’, என்றாள் திவ்யா, ‘எனக்கும் நேத்திக்கு ·போன் வந்தது’

‘என்னம்மா முடிவு செஞ்சே ?’

‘மாமா, இந்த விஷயத்தில என் முடிவில எந்த மாற்றமும் இல்லை’, திவ்யாவின் குரலில் உறுதி தொனித்தது, ‘இந்தத் துறையில இப்படியெல்லாம் வரணும்ன்னு எனக்கு சில கனவுகள் இருக்கு, லட்சியங்கள் இருக்கு. அதையெல்லாம் ஓரளவாச்சும் நிறைவேத்தினபிறகுதான், நான் கல்யாணத்தைப்பத்தி யோசிப்பேன்’

‘புரியுதும்மா. ஆனா, அதுக்கெல்லாம் கல்யாணம் ஒரு தடையா இருக்கும்ன்னு நீ ஏன் நினைக்கறே ?’, சற்றே குரலை உயர்த்திக் கேட்டார் சபாபதி, ‘எத்தனையோ பெண்கள் கல்யாணத்துக்கப்புறமும் வேலை செய்யலையா ? ப்ரமோஷன் வாங்கலையா ?’

‘மாமா, நான் அதிகப்பிரசங்கமாப் பேசறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க’, என்றாள் திவ்யா, ‘என்னோட முன்னேற்றத்துக்குக் கல்யாணம் தடையா இருந்துடுமோ-ன்னு நான் பயப்படலை. ஆனா, இந்தக் கல்யாணம்ங்கற நிச்சயமில்லாத விஷயத்தைச் சந்திக்கறதுக்குமுன்னாடி, அது என்னை பாதிச்சுடமுடியாதபடி என்னை உறுதி செஞ்சுக்க ஆசைப்படறேன்’

‘புரியலைம்மா’, சபாபதியின் முகத்தில் எரிச்சலோ, கோபமோ வெளிப்படையாகத் தெரிந்தது, ‘கல்யாணமே வேணாம்-ன்னு சொல்றியா நீ ?’

‘அப்படி இல்லை மாமா, இந்தக் கல்யாணத்தின்மூலமா, ஒருத்தருக்கு மனைவியாகறதன்மூலமா, நான் எந்தவிதத்திலும் பலவீனமாகிட விரும்பலை’, என்றாள் திவ்யா, ‘அதனாலதான், என்னை இன்னும் கொஞ்சம் பலப்படுத்திக்கறேன். என்னோட தன்னம்பிக்கையை வளர்த்துக்கறேன். இந்த வேலையை, ஒரு கூடுதல் ஆபரணமா நினைக்காம, என்னோட ஒரு பகுதியா வளர்த்துக்க ஆசைப்படறேன். இன்னும் நிறைய ஜெயிச்சு, சாதிச்சு, ‘நீ யாரையும், எதுக்காகவும் சார்ந்திருக்கவேண்டியதில்லை திவ்யா’ன்னு எனக்கு நானே சொல்லிக்க நினைக்கறேன். அதுக்கெல்லாம் எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்’

‘சரிம்மா’, என்றபடி எழுந்துகொண்டார் சபாபதி, ‘எனக்கு இன்னும் முழுசா சமாதானமாகலை. ஆனா, எந்தச் சலுகையோ, சிபாரிசோ, ஆதரவோ இல்லாம, தானா கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த பொண்ணு. நீ ஒரு முடிவெடுத்தா, அது சரியாதான் இருக்கும்-ன்னு நம்பறேன்’

‘ரொம்ப சந்தோஷம் மாமா’, என்றாள் திவ்யா, ‘அப்பாமேல எனக்கு எந்தக் கோவமும் இல்லை. அவரையும் தயவுசெஞ்சு என்மேல கோவப்படவேணாம்ன்னு சொல்லுங்க. கல்யாணத் தகுதிங்கறது, வெறும் வயசைப்பொறுத்து முடிவாகற விஷயமில்லைன்னு அவருக்குப் புரியும்போது, அவர் கண்டிப்பா என்னையும் புரிஞ்சுப்பார்’

உணர்ந்துகொண்ட பாவனையில் தலையாட்டிய சபாபதிக்கு, அவள் சொல்வது, தன் தலைமுறை மொத்தத்துக்குமான உபதேசம் என்று தோன்றியது.

நன்றி: ‘அமுத சுரபி’ மாத இதழ்

– என். சொக்கன் [nchokkan@gmail.com] (செப்டெம்பர் 2007)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *