பிள்ளையார்கோவில் திருப்பத்தில் கவிதாவும் அவள் உயிர்த்தோழியாகிய பத்மாவும் நடந்தார்கள் “கவிதா ! இன்று நீ எங்களுடன் புடவை எடுக்க சரவணா ஸ்டோர்க்கு வரணும். நாளை தமிழ் புத்தாண்டு. நாம் எல்லாரும் புதுப்புடவை கட்டிக்கொண்டு ஆபீஸ்க்கு தமிழ் புத்தாண்டுக்கு மறுநாள் வரவேண்டும். நீ என்ன சொல்றே ? “ பத்மா தன்னுடன் கூட வரும் தோழிகளைச் சுட்டிக்காட்டி “சரவணா ஸ்டோர்க்கு அவர்களெல்லாம், என்னுடன் டிரஸ் எடுக்க வர சம்மதித்து விட்டாங்க. நீ மட்டும் வரமாட்டேன்னு ஏன் பிகு பண்ணிக்கிறே ? கவிதா “ என்றாள் பத்மா.
“ நான் பிகு பண்ணலே பத்மா ! நான் உங்களோட சரவணா ஸ்டோர்க்கு டிரஸ் எடுக்க வந்தால் என்னோட மாமியார் வீட்டிலே பிரச்சனை ஏற்படும் என்றுதான் நான் யோசிக்கிறேன். என்னை எப்போதும்போல் உங்கள் வழிக்கு இழுக்காதீங்க ” என்றாள்
“ என்ன பெரிய பிரச்சனை வரப்போறது உன்னோட மாமியார் கணக்கு கேட்பார். உன்னோட ஹஸ்பெண்ட் பெர்மிஷன் இல்லாமல், எதுவும் நீ செய்யக் கூடாது. அடுத்து உன்னோட மாமா வேறு உன்னைக் கோபித்துக் கொள்வார். இதானே உன் பிரச்சனை “ என்று கவிதாவைப் பற்றி நன்கு தெரிந்து கொண்ட கேட்டாள் பத்மா.
“ ஆமா பத்மா ! எல்லாம் தெரிந்திருந்தும் ஏன் என்னை வற்புறுத்திச் சரவணா ஸ்டோர்க்கு டிரஸ் எடுக்க உங்களோட அழைக்கிறே “
“ உன்னோட மாமனார், மாமியார் ஹஸ்பெண்ட் எல்லாருக்கும் பயந்துபோய் உன்னோட ஆசைகளையும் உணர்வுகளையும் கட்டுபடுத்திக்கொண்டு , நீ அடிமையைப்போல் இருப்பது உனக்கு அவமானமாகத் தெரியலையா கவிதா ?! “
“எனக்கு உணர்ச்சிகள் இருந்தால்தான் அடிமையா, எஜமானியான்னு கேட்கத் தோன்றும். எனக்கு அதுதான் இல்லையே பத்மா ! “ என்று அலுத்துச் சலித்துக் கொண்டாள்.
“இந்தக் கம்ப்யூட்டர் காலத்திலும் மாமியாருக்குப் பயந்து வாழும் பெண்கள் இருக்காங்கன்னு உன்னைப் பார்த்துதான் நான் தெரிந்து கொண்டேன் கவிதா .”
“ எல்லாம் என்னோட தலைவிதி. என்னோட தலைவிதியை நீயோ நானோ மாற்ற முடியுமா பத்மா ! “ தன்னோட இயலாமையை இப்படிக் கூறினாள் கவிதா
“ நீ அவங்களுக்கெல்லாம் அடங்கி போவதால்தான், அவர்கள் உன்னை அடக்கி வைத்திருக்காங்க. நீ இப்படி எல்லாம் அடங்கிப் போவதால் ,உன்னோட புருஷனுடைய கோழைத்தனத்துக்கு நல்ல தீனி. தன்னோட வசதிக்காக உன்னை அவர் தன்னோட அப்பா அம்மா பேரைப் பயன்படுத்தி உன்னை அடங்கிப் போகும்படி கூறுகிறார் “
“ பத்மா ‘ப்ளீஸ் என்னை கம்பல் பண்ணாதே. நீ சொல்றபடியெல்லாம் நான் கேட்டால் மற்றவங்க என்னை தப்பாகவே பேச ஆர்ம்பித்து விடுவாங்க. அக்கம் பக்கம் உள்ளவங்க ‘அடங்காத மருமகள்’ என்று பட்டம் வேறு என் மீது கட்டி விடுவாங்க . இப்படி எல்லாம் நான் பேச்சு கேட்க வேண்டுமா?” என்று கவிதா தன் இயலாமையை வெளிப்படுத்தினாள்
பத்மா, கவிதாவை அவள் வழிக்கு இன்று விடுவதாக இல்லை. அவளை தன்னோட வழிக்கு எப்படியும் கொண்டுவந்து விட வேண்டும் என நினைத்துக்கொண்டு “ கவிதா ! நான் சொல்வதைக் கவனமாகக் கேள் தன்னோட அப்பா, அம்மாவை கஞ்சிக்கு அலைய விட்டு விட்டு தான் மட்டும் தனிக்குடித்தனம் நடத்திக்கொண்டு சொகுசா இருக்காங்களே, அப்படிப்பட்ட பிள்ளைகளை, நடுரோட்டில் வைத்து சுட்டுத் தள்ளணும். அதே சமயத்தில் தன்னோட மகன், மருமகளுடைய இயல்பான உணர்வுகளுக்கு மதிப்புக் கொடாம்ல் நந்தி போல் குறுக்கே நிற்கும் பெற்றவங்கள் கூறுவதையெல்லாம் நாம் கேட்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை “ என்று சற்று உரக்கவே கூறினாள் பத்மா.
கவிதா பத்மா கூறுவதைக் கேட்டு அமைதியாக இருந்தாள். ஆனால் அதே சமயத்தில் அவள் மனதில் ஒரு போராட்டமே நடந்து கொண்டிருந்தது. தனது புகுந்த வீட்டைப் பற்றி இப்போது நினைக்கவும் ஆரம்பித்தாள்
ஆம் கவிதா தன்னோட கணவருக்கு நிகராக ஒரு தனியார் கம்பெனியில் டைபிஸ்ட்டாக பணிபுரிந்து வந்தாள். ஆனால் அவள் வாங்கும் சம்பளத்தை ஒரு பைசா குறையாமல் கவரில் வைத்து மாதமாதம் மாமியாரிடம் ஒப்படைக்க வேண்டும். அதனால் அவள் ஓர் டீ குடிக்க வேண்டுமானால் கூட யோசித்துதான் செலவு செய்வாள் கவிதா.
அவள் புகுந்த வீட்டில் அவள் இருக்கும் சூழ்நிலையைத் தெரியாதவர்கள், அவள் பணம் செலவழிக்காத சுத்தக் கருமி என்றும், பணத்தை இப்போதே தனக்கு சேமித்து வைக்கிறாள் என்றுதான் நினைப்பார்கள். அவள் நிலையை நன்கு உணர்ந்தவள் அவளுடன் பணிபுரியும் உயிர்த்தோழி பத்மா மட்டும்தான். அவள் கவிதாவுக்கு அடிக்கடி அவள் கோழைத்தனத்தைச் சுட்டிக்காட்டி தன்னோட வழிக்கு வரும்படி வற்புறுத்துவாள். அதேபோல்தான் இப்போதும் தன்னோட வழிக்குக் கவிதாவைக் கொண்டு வருவதற்கு முயற்சியை மேற்கொண்டாள்
“ கவிதா உன்னோட மாமனார், மாமியார் கூறுவதெல்லாம் நீ கேட்க வேண்டாம் என்று நான் கூறவில்லை. உனக்காக அவர்கள் கூறும் நல்லவைகளை மட்டும் நீ எடுத்துக்கொள். அதேசமயம் அவர்கள் உன்னைச் சுற்றி ஒரு தேவையில்லாத எல்லைக்கோடு போட்டு விட்டு, அதற்குள்தான் நீ சுற்றி வரவேண்டும் , வாழ வேண்டும் என்று உன்னைக் கட்டுப்படுத்தும்போது , நீ ஏன் அந்த எல்லைக்கோட்டைத் தாண்டி வரக்கூடாது. எனக்கு மட்டும் மாமனார் மாமியார் இல்லையா ! நாங்களெல்லாம் அவர்கள் கூட வாழவில்லையா. நீ ஏன் இப்படி மாமனார் மாமியார்க்கெல்லாம் பயந்து பயந்து சாகறேன்தான் எனக்குப் புரியவில்லை.“ என்றாள்
“ பத்மா ! பெண்ணுரிமை, பெண் விடுதலை, சமஉரிமை என்பதெல்லாம் மேடையேறி பேசினால், எழுதினால் கேட்பதற்கும் படிப்பதற்கும் நம்மைப் போன்ற பெண்களுக்கு நல்லத்தான் இருக்கும். ஆனால் நடைமுறைக்கு இதெல்லாம் ஒத்து வராதுப்பா என்பது என்னோட கருத்து ” என்றாள் கவிதா.
“ கவிதா, நான் என்ன சொல்ல வரேன் என்பதை நீ இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். இப்போது சொல்வதைக் கேட்டு, நீ என் மீது கோபப்பட்டு விடாதே. ஒரு பேச்சுக்குத்தான் சொல்றேன். இப்போது நீ யாருக்கும் தெரியாமல், ஒருத்தனோடு தகாதமுறையில் பழகி, பேசி உறவு வைத்திருக்கிறாய் என்று வைத்துக்கொள். அதைப் பார்த்து உன்னோட மாமாவோ, மாமியாரோ உன்னைக் கண்டித்து, உன்னை நல்வழிபடுத்த நினைத்து, உன்னை அவர்கள் கண்டித்து அடக்குராங்கன்னு வைத்துக்கொள். அதற்கு தாராளமாக நீ அவர்களிடம் அவர்கள் சொல்வதைக் கேட்டு அடங்கிப் போகலாம். அடங்கித்தான் போகவேண்டும். அதை நான் மட்டும் அல்ல குடும்பப் பெண்ணாக யாராக இருந்தாலும் அதனை நன்கு வரவேற்பார்கள். அதில் உன்னோட குடும்பக் கவுரவம் மட்டுமல்லாமல் நமது நாட்டுப் பண்பாடும் அடங்கி இருக்கு ” என்று அவளுக்குப் புரியும்படி விளக்கினாள்..
பத்மா , நீ என்னை விடமாட்டேபோல் தெரிகிறது. இப்போ நீ என்னை என்னதான் செய்யச் சொல்ரே ? “ என்று கவிதா தன்னோட பிடிவாதத்திலிருந்து கீழே கொஞ்சம் இறங்கி வந்தாள்.
“ கவிதா ! அப்படி வா வழிக்கு, இப்போதெல்லாம் பெரும்பாலான பெண்கள் சமஉரிமை பெண் விடுதலை என்று எதை நினைக்கிறாங்கனா, அதனை தவறாகப் புரிந்துகொண்டு கட்டுப்பாடு இல்லாமல், பெண்கள் எங்கு எப்படி வேண்டுமானாலும், யார் கூட வேண்டுமானாலும் சுதந்திரமாக சுற்றலாம். யார் நல்லதை எடுத்துச் சொன்னாலும் அதைக் காது கொடுத்து கேட்காமல, அவங்க என்ன சொல்வது, நாம் என்ன கேட்டு அடங்கி நடக்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தில்தான் இருக்கிறாங்க இந்தத் தவறான எண்ணத்தை மாற்றி, சுயபுத்தியுடன் நாம் அடங்கி நடக்க வேண்டியதற்கு மட்டும் அடங்கி நடக்க வேண்டும். அதே சமயத்தில் குதிரைக்கு கண்ணை மறைத்து விட்டால் ஒரே பாதையில் செல்வதுபோல், எல்லாவற்றிகும் அடங்கியும் போகக்கூடாது. அதாவது உன்னைப்போல் போதுமா? நாமும் நல்லது எது ? கேட்டது எது ? என்று சுயமாக சிந்தித்து செயலபட வேண்டும் கவிதா “ என்று ஒரு குட்டிப் பிரசங்கமே செய்தாள் பத்மா.
“ பத்மா, என்னைப் பொறுத்தவரை பெண் விடுதலை, பெண் உரிமைகளைக் காட்டிலும் , என்னோட குடும்பத்தில், அதாவது எனது புகுந்த வீட்டில் எனக்குள்ள உரிமையை பெறுவதற்கு, நான் துணிவுடன் முன் வரவேண்டும் என்று கூற வருகிறாய், அப்படித்தானே” என்றாள் கவிதா.
“அப்பாடி ! கவிதா இப்போதாவது ஒரு வழியாக நான் சொல்வதை சரியாகப் புரிந்து கொண்டாயே . நமக்குள்ள நியமான உரிமையை எப்போதும் விட்டுக் கொடுக்க கூடாது. நீயும் உன் ஹஸ்பெண்ட் போல் வேலைக்குப் போய் சம்பாதிக்கிறாய் . நீ சம்பாதிக்கும் பணத்தில் உனக்கும் செலவு செய்ய உரிமை உண்டு. அதை யாரும் தடுக்க முடியாது, துணிந்து உன்னோட உரிமையை நிலைநாட்டு..உன்னோட ஹஸ்பெண்டும் நாளடைவில் உணர்ந்து உன்னோட வழியில் வருவதோடு, அவருடைய அப்பா, அம்மாவிடம், உனக்காக உனது உரிமைக்காக வாதாடவும் முன்வருவார். ” என்றாள் பத்மா.
கவிதா ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தவளாக “சரி பத்மா நானும் உங்களுடன் சரவணா ஸ்டோருக்கு டிரஸ் எடுக்க வரேன் உனக்குத் சந்தோஷம்தானே. அதனாலே எங்கள் வீட்டில் ஏற்படப்போகும், பின்விளைவுகளையும், எதிர்கொள்ள நான் தயாராகி விட்டேன் “ என்று அவள் கூறும்போது பக்கத்தில் உள்ள பத்மாவும் அவளுடைய தோழிகள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
கவிதா அவர்களுடன் சேர்ந்து சரவணா ஸ்டோருக்கு சென்றாள். அங்கு தனக்கு ஒரு புடவை எடுத்துக் கொண்டாள். அதேபோல் தனது மாமியாருக்குப் புடவை, மாமாவிற்கு வேஷ்டி சட்டை, கணவருக்குப பேண்ட் சர்ட்டிங் கிளாத் எடுத்துக் கொண்டாள். பில் ரூபாய் மூன்றாயிரத்தை தாண்டியது.
. கவிதா கிருஷ்ணாவில் ஸ்வீட் வாங்கிக்கொண்டு, தோழிகள் அனைவரிடம் விடைபெற்று, மயிலாப்பூர் செல்லும் நகரப்பேருந்தில் ஏறினாள்.
கவிதா வீட்டிற்குள் நுழைந்தவுடன் கவிதாவின் கணவன் ரமேஷ் “ வா கவிதா ! என்ன இன்னிக்கி அமர்க்களமாக பெரிய பார்சலுடன் வருகிறாய் “ என்று கேலியும் கிண்டலுமாக வரவேற்றான்.
“ நாளைக்கு தமிழ் புதுவருஷப் பிறப்பு இல்லையா, அதான் நம்ம எல்லாருக்கும் புதுடிரஸ் வாங்கிட்டு வந்தேன் “ என்று வீட்டில் உள்ள மாமியார் மாமனாருக்கும் கேட்கும்படியாகச் சற்று உரக்கவே கூறினாள் கவிதா.
“தான் எடுத்து வந்த டிரஸ்களெல்லாம் மேஜையின் மீது ஒவ்வொரு துணியாக கவிதா வெளியே எடுத்து வைக்கும்போது, அதை பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய மாமியார் பொறுத்துக் கொள்ள முடியாமல், “ இவ்வளவுக்கும் பணம் அவளுக்கு ஏதுன்னு கேள் ரமேஷ்?” முகத்தை கடுகடுப்பாக வைத்துக்கொண்டுத் ,தன்னோட மகன் மூலம் கேட்க ஆரம்பித்து விட்டாள்.
“எங்க கம்பெனியிலே புதுவருஷம் முன்னிட்டு போனஸ் கொடுத்தாங்க அதிலிருந்துதான் இந்த டிரஸ் எல்லாம் வாங்கி வந்தேன் “ என்று தன் கணவருக்கும் மாமியாருக்கும் கேட்கும்படி பொதுவாக கூறினாள்.
“யாரைக் கேட்டுக்கொண்டு இவ்வளவும் செய்தாய் ?டிரஸ் எல்லாம் எடுத்து வந்தாய் ? “என்று மாமியார் நேரடியாகவே கவிதாவின் மீது சீற ஆரம்பித்தார்.
“ நான் யாரைக் கேட்கணும் அத்தை ! . இது நம்ம பணம். அடுத்தவங்க பணம்ன்னால்தான் கேட்கணும். “என்று உரக்கவே அவள் மாமியாரைப் பார்த்து பதிலடி கொடுத்தாள்.
“ கவிதா.. நீ யாருட்ட பேசுறேன்னு தெரிஞ்சுதான் பேசுறயா ?” என்று ரமேஷ் வீடே அதிரும்படி கத்தினான்.
“ நான் எல்லாம் தெரிஞ்சுதான் பேசுறேன். சும்மா இருங்க கத்தாதீங்க . இது நம்ம வீட்டுப் பணம் என்றுதான் கூறினேன். என்னோட பணம் என்று நான் கூறவில்லை. நான் சம்பாதித்தப் பணம் என்றாலும், நம்ம எல்லாருக்கும் அந்தப் பணத்தைச் செலவு செய்ய உரிமை உண்டு. அதாவது ‘நான் உட்பட’, என்பதை சற்று அழுத்தமாக கூறி விட்டு , உங்களுக்குப் புரியுதா” என்று மாமியார் மாமாவையும் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே தன்னோட கணவன் ரமேஷுக்குப் பதில் அளித்தாள்.
“ என்னடா ரமேஷ் இதெல்லாம். புதுப்பழக்கம்…” மாமியாரின் பயம் கலந்த கேள்வி,
“ அத்தை அவரை ஏன் கேட்கிறீங்க. நானாகத்தான் டிரஸ் எல்லாம் வாங்கி வந்திருக்கேன். நான் சம்பாதித்த பணம் என்றாலும், என்னோட பணம் என்று தனிப்பட்ட முறையில் உரிமை கொண்டாடவில்லை. அதேபோல் எனக்கு மட்டும் புடவை வாங்கி வரலே. உங்களுக்கும் மாமாவுக்கும் சேர்த்துத்தான் டிரஸ் எடுத்து வந்திருக்கேன். இதுல்ல என்ன தப்பு இருக்கு அத்தை ” என்று இப்போது கவிதா அமைதியாகப் பதில் அளித்தாள்.
“ ரமேஷ், வீட்டில் எது செலவழிக்க வேண்டுமானாலும் எல்லாரும் கலந்து பேசி, அதற்கு எல்லாருடைய சம்மதம் தெரிவித்த பிறகுதான் இந்த வீட்டில் யாரும் அந்தச் செலவை செலவழிக்க வேணும்னு உன்னோட பொண்டாட்டிக்குத் தெரியுமா? …” என்று கோபத்துடன் கத்தினாள் கவிதாவின் மாமியார்.
“ எனக்கு எல்லாம் தெரியும் அத்தை. நான் வாங்கி வந்த சம்பள பணத்திலே போன மாதம் உங்க மகளுக்கு ஒரு மோதிரம் செய்து கொடுத்தீங்களே அதைப்பத்தி நீங்கள் யாரிடம் கலந்து பேசினீங்க, என்னிடம் கூட கேட்டிருக்க வேண்டாம். ஒருவார்த்தை உங்க பிள்ளையிடமாவது கேட்டுயிருப்பீங்களா ? நீங்க இப்போது கூறுங்க, நான் உழைத்து சம்பாதித்தப் பணத்தை எல்லாம் செலவழிக்க உங்களுக்கு உரிமையுண்டு, எனக்கு உரிமையில்லையா? இது எந்த விதத்தில் நியாயமோ தெரியல்லேயே ..” என்று கவிதா கேள்வியுடன் நிறுத்தினாள்.
“ என்ன திமிரா அவள் பேசறா பார்த்தீங்களா? “ என்று தன்னோட கணவனிடம் அழ ஆரம்பித்தாள் கவிதாவின் மாமியார்.
“ கவிதா கேட்டதில் என்ன தவறு இருக்கு. அவள் கேட்டதெல்லாம், செய்தது எல்லாம் சரிதான். நம்ம மகளுக்கு மோதிரம் செய்யும்போது நீ யாரைக் கலந்து கேட்டுக் கொண்டு செய்தாய் ? எனக்குககூட தெரியாது. இப்போது கவிதா சொன்ன பிறகுதான் மோதிரம் பற்றி எனக்கே தெரியுது “ என்று கவிதாவின் மாமியாரை . மாமா கடிந்து பேசினார்.
“ நீங்களும் மருமகள் பக்கம் சேர்ந்திட்டீங்களா ? “ என்று புலம்ப ஆரம்பித்தாள்.
“அவள் சம்பளப்ப் பணத்தை செலவு செய்வதற்கு, நமக்கு எவ்வளவு உரிமையுண்டோ, அதே போல் அவளுக்கும் அவள் சம்பளப் பணத்தை செலவழிக்க உரிமை இல்லையா ? அவளுக்கும் உரிமை உண்டு . அவள் எனக்குத் தெரிந்து இதுவரைக்கும் தனக்குன்னு எதுவும் செலவு செய்ததை , நான் பார்த்ததே இல்லை. இப்பொது என்ன தேவையில்லாததையா வாங்கி வந்திருக்காள் வீணா அவளைப் போய் கோபப்பட்டு பேசுறயே “ என்று கூறி தன் மனைவியை சமாதானப்படுத்த முயற்சி செய்தார் கவிதாவின் மாமானார்..
கவிதாவின் மாமியார் யாருடைய சொல்லுக்கும் எதற்கும் சமாதானம் அடையாமல் தன்னோட உரிமையெல்லாம் பறிபோய் விட்டதாக்த் தவறாக நினைத்துக கொண்டு, பையில் தன்னுடைய துணிமணிகளைத் திணித்துக்கொண்டு “ நான் என்னோட மகள் வீட்டுக்குப் போறேன் “ என்று கோபத்துடன் வெளியேற முற்பட்டாள்
“அத்தை நீங்கள் எங்கேயும் போக வேண்டாம்… என்று மேலும் ஏதோ கூற முற்பட்ட கவிதாவை “கவிதா உன்னோட அத்தையைப் போகவிடு, அவளுக்கு இந்தக் குடும்ப உரிமை முழுவதையும் நீ பறித்து விட்டதாக் தவறாக எண்ணிக்கொண்டு அவசரகதியில் நினைத்து விட்டாள். அந்த எண்ணம் மாறியவுடன் உன்னைப்பற்றி புரிந்து கொண்டவுடன், அவளே நம்மைத் தேடி வருவாள். அதுவரை அவளை அவள் போக்கிலே விட்டு விடுவதுதான் சரி“ என்று கூறி கவிதாவை அவர் மாமனார் சமாதானப்படுத்தினார்.
மாமாவின் மாற்றத்தைக் கண்ட கவிதா, சரவணா ஸ்டோரில் வைத்து, அப்போது பத்மாவிடம் தான் பயத்துடன் “பத்மா என்னோட மாமியார், மாமாவின் குணத்தை என்னால் மாற்ற முடியுமா ?” என்று பயம் கலந்த சந்தேகத்துடன் பத்மாவிடம் கேட்டதற்கு
“உன்னால் முடியும் கவிதா ! நீ என்னோட பேச்சில் உள்ள நியாயத்தை உணர்ந்து, நீ எங்களுடன் துணிந்து சரவணா ஸ்டோருக்கு ஜவுளி எடுக்க வந்தாயோ, அப்போதே நான் உன்னைப்பற்றி என்ன நினைத்தேன் தெரியுமா கவிதா , நீ உன் உரிமையை புகுந்த வீட்டில் நிலைநாட்டுவாய் என்பது ,எனக்கு உன்மீது நம்பிக்கை வந்து விட்டது துணிந்து நில் தோல்வி கிடையாது “ என்று பத்மா கூறியதை இப்போது கவிதா நினைத்துப் பார்த்து மகிழ்ந்தாள்.
தன் மாமியாரும் தன்னை புரிந்துகொண்டு மகள் வீட்டிலிருந்து விரைவில் வீடு திரும்புவார் என்பதையும் , தன்னோட மாமா தன்னிடம் உள்ள நியாயத்தை உணர்ந்து, தான் செய்தது தவறு இல்லை என்று மாமியாரிடம் சுட்டிக் காட்டியதையும் கவிதா இப்போது நினைத்துப் பார்த்து மகிழ்ந்தாள்.