உன்னருகே நானிருந்தால்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 10,143 
 
 

ஞாயிற்றுக்கிழமை, நேரம் காலை 6 மணி. காலிங் பெல் சத்தம் கேட்டது. தூக்கத்திலிருந்து முழித்தார் கணேசன். “நீ தூங்கு மீனா. இன்னிக்கு நான் சமையல் வேலை எல்லாத்தையும் பாத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றார். மீனா வேறு யாரும் இல்லை, அவர் மனைவி.

கதவைத் திறப்பதற்குள் இன்னொரு முறை மணி அடித்தாகிவிட்டது. பால்காரருக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. “இதோ வர்றேன்பா. கொஞ்சம் பொறு” என்று சொல்லிக்கொண்டே பால் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு சென்றார் கணேசன்.

கதவைத் திறந்து வெளியே சென்றார். பால்காரர் தன்னைப் பார்த்ததும் சிரிப்பதுபோல் இருந்தது கணேசனுக்கு. “என்னப்பா சிரிக்கறே? இன்னிக்கு ஒரு நாள் வீட்டம்மா வேலையெல்லாம் நான் செய்யலாம்னுதான் நான் பால் வாங்க வந்தேன்” என்றார்.

“எதுக்கு சார் இந்த வம்பு எல்லாம்?” ஆறு வருடங்களாக பால் ஊற்றிவருவதால் கொஞ்சம் உரிமையோடு கேட்டார் பால்காரர்.

“ஒரு நாள்தானே. போயிட்டு போகுதுன்னுதான்”

ஒரு லிட்டர் பால் ஊற்றிவிட்டு, “வாழ்த்துகள் சார். நான் வர்றேன்” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பினார் பால்காரர். பால் வாங்கிக்கொண்டு உள்ளே வந்து பால் பாத்திரத்தை ஒரு நாற்காலியின் மீது வைத்துவிட்டு, கதவை பூட்டிவிட்டு வந்தார் கணேசன்.

சமையலறைக்குச் சென்று மின்விளக்கை ஆன் செய்து, பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்தார். இரண்டு டபரா, டம்ப்ளர் எடுத்து மேஜையில் வைத்தார். பக்கத்தில் இருந்த ஹார்லிக்ஸ் பாட்டிலைத் திறந்து, இரண்டு டம்ப்ளர்களிலும் இரண்டு ஸ்பூன் ஹார்லிக்ஸை போட்டார்.

ஐந்து நிமிடம் ஆகியும் பால் பொங்கவில்லை. கேஸ் தீர்ந்துவிட்டதோ என்று குனிந்து பார்த்தால், தான் அடுப்பை பற்ற வைக்கவேயில்லை என்பது தெரிந்தது கணேசனுக்கு. இதைப்போய் மறந்துவிட்டாயே கணேசா என்று தன் தலையில் ஒரு முறை தட்டிக்கொண்டு, அடுப்பைப் பற்ற வைத்தார். பால் காயத் தொடங்கியது.

அடுத்த சில நிமிடங்களில் பால் பொங்க, அடுப்பை அணைத்தார். ஒரு இடுக்கியை எடுத்து, அதை உபயோகித்து, பால் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, மேஜையில் வைத்தார்.

“நேத்திக்கு நான் சொல்லி சொல்லி கேட்காம, நீ நிறைய ஸ்வீட் சாப்பிட்டே. அதனால, இன்னிக்கு உனக்கு சக்கரை ஒரு ஸ்பூன்தான் போடப்போறேன்” என்று சத்தமாக சொல்லிவிட்டு சர்க்கரை வைத்திருந்த பாட்டிலைத் திறந்து, ஒரு டம்ப்ளரில் ஒரு ஸ்பூன் சர்க்கரையும், இன்னொரு டம்ப்ளரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரையும் போட்டு நன்றாக்க கலந்தார்.

சில நிமிடங்களில் தனக்காகப் போட்டு வைத்திருந்த ஹார்லிக்ஸை குடித்துவிட்டு, பாத்ரூமுக்குச் சென்றார். காலைக்கடன்களை முடித்து, குளித்து, வெளியே வர அரை மணி நேரம் ஆனது.

அந்த இன்னொரு டம்ப்ளரில் இருந்த ஹார்லிக்ஸ் அப்படியே இருந்ததைப் பார்த்தார் கணேசன். மேஜையில் இருந்த ஒரு ஃப்லாஸ்கை எடுத்து, அதை நன்றாகக் கழுவி, அதில் அந்த ஹார்லிக்ஸை ஊற்றிவைத்தார். “உனக்காக கலந்த ஹார்லிக்ஸை இந்த ஃப்லாஸ்குல வெச்சிருக்கேன். எழுந்ததும் மறக்காம குடி” என்று சத்தமாகச் சொல்லிவிட்டு, பூஜையறைக்குச் சென்றார்.

ஒரு மணி நேரம் பூஜை செய்துவிட்டு, பூஜையறையிலிருந்து நேராக சமையலறைக்குச் சென்றார். இட்லி குக்கரில் எட்டு இட்லிக்கான மாவு ஊற்றி, அடுப்பைப் பற்ற வைத்தார்.

அப்போது அவரது கைப்பேசி ஒலித்தது. மறுமுனையில் அவர் மகன் சிவா, “பஸ் ஒரு மணி நேரம் லேட்டு. இப்பதான் வந்திருக்கு. நான் ரவியை கூட்டிக்கிட்டு இன்னும் முக்கால் மணி நேரத்துல வந்திடுவேன்” என்றான்.

ரவியும் சிவாவும் நெருங்கிய நண்பர்கள். பனிரெண்டாம் வகுப்பு வரை சென்னையில் ஒரே பள்ளியில் படித்து வந்தனர் இருவரும். அதற்குப் பிறகு, கணேசனுக்கு கரூருக்கு டிரான்ஸ்ஃபர் கிடைத்ததால், அங்கு குடும்பத்தோடு குடியேறினர். இப்போது கரூரில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலைபார்த்து வருகிறான் சிவா.

ரவி ஒரு மனோதத்துவ டாக்டர். அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து ஒரு வாரம்தான் ஆகிறது. சிவாவின் வீட்டுக்கு இன்றுதான் முதல்முறையாக வருகிறான் ரவி. அதனால்தான் சிவாவே பேருந்து நிலையத்திற்குச் சென்று, அவனை அழைத்து வருகிறான்.

பேருந்தைவிட்டு இறங்கியதும் பரஸ்பரம் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர் ரவியும், சிவாவும். வரும் வழியில் ரவி, “என்னடா திடீர்னு வரச் சொல்லியிருக்கே? என்ன விஷயம்?” என்று சிவாவைக் கேட்டான். அதற்கு சிவா, “முதல்ல நீ வீட்டுக்கு வா. சொல்றேன்” என்றான்.

வீட்டுக்கு வர நாற்பது நிமிடங்கள் ஆகியிருந்தது. தன்னிடமிருந்த ஒரு வீட்டு சாவியை வைத்து, பூட்டப்பட்டிருந்த கதவைத் திறந்து உள்ளே சென்றான் சிவா.

“வாடா ரவி, உள்ளே வா” என்று சிவா சொல்ல அவனைப் பின்தொடர்ந்து ரவி உள்ளே நுழைந்தான்.

இவர்கள் வரும் சத்தத்தைக் கேட்டு கணேசன் கூடத்திற்கு வந்தார். “வாப்பா ரவி. எப்படி இருக்கே? பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு” என நலம்விசாரித்தார் கணேசன்.

“நல்லா இருக்கேன் அங்கிள். நீங்க எப்படி இருக்கீங்க? ஆண்ட்டி எப்படி இருக்காங்க?”

“ம், எல்லாரும் நல்லாருக்கோம். ஆண்ட்டி தூங்கிட்டு இருக்காங்க. நீங்க ரெண்டு பேரும் போய் கை, கால் கழுவிட்டு வாங்க. நான் அதுக்குள்ள ஹார்லிக்ஸ் போட்டு வைக்கிறேன்”

“என்ன அங்கிள் நீங்க சமைக்கிறீங்க? ஆண்ட்டிக்கு லீவா இன்னிக்கு?”

“ஆமாம்பா. ஆண்ட்டி தூங்கிட்டு இருக்காங்க. இன்னிக்கு ஒரு நாளாவது நான் சமைக்கலாம்னுதான்”

“கலக்குங்க அங்கிள்”

அப்போது சிவா குறுக்கிட்டு, “அப்பா, நீங்க போய் ஹார்லிக்ஸ் போடுங்க. நானும், ரவியும் பின்னாடியே வந்துடறோம்” என்று சொல்ல, கணேசன் உள்ளே சென்றார்.

“ரவி, இங்கே என்கூட வா” என்று சொல்லி, ரவியை வாசலுக்கு அழைத்து வந்தான் சிவா.

“என்னடா சிவா, வீட்டுக்கு வந்ததும் சொல்றேன்னு சொன்னியே? என்ன விஷயம்?”

“எங்க அப்பாவை பார்த்தியே, எப்படி இருக்கார் அவர்? நார்மலா இருக்காரா?” சந்தேகத்துடன் கேட்டான் சிவா.

“அவருக்கு என்னடா சிவா. நல்லாத்தானே இருக்கார். ஏன் சந்தேகப்படறே?”

“இங்கே வா, சொல்றேன்” என்று ரவியை தன் அறைக்குள் அழைத்துச் சென்றான் சிவா.

“இங்கே பாருடா ரவி. நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்கு இப்ப புரியும்னு நினைக்கிறேன்” என்று தன் அறையில் மாட்டப்பட்டிருந்த ஒரு ஃபோட்டோவைக் காட்டினான். அந்த ஃபோட்டோ வேறு யாருடையதுமல்ல, சிவாவின் தாயின் ஃபோட்டோதான் அது. ஃபோட்டோவிற்கு மாலை போடப்பட்டிருந்தது.

அதிர்ந்து போனான் ரவி. “டேய், என்னடா சொல்றே? உங்க அம்மாவுக்கு என்ன ஆச்சு? எப்போ..” வார்த்தைகள் வரவில்லை.

“ரெண்டு மாசம் முன்னாடி.. ஹார்ட் அட்டாக்ல..” சரியாக பேச முடியவில்லை சிவாவால். சோகம் தொண்டையைக் கட்டிப்போட்டது போல் இருந்தது.

“வெரி சாரிடா. எனக்கு தெரியவே தெரியாது”

“அத விடுடா, பரவாயில்லை. இப்ப அப்பாவை நினைச்சாதான் பயமா இருக்கு. அம்மா இறந்தது அவருக்கு தெரியுமா, தெரியாதா? இல்ல நடிக்கிறாரா? இல்ல இது ஏதாவது நோயா? எதுவுமே புரியலடா”

“எப்போ இருந்து இந்த மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சார் உங்க அப்பா?”

“ரெண்டு வாரமா இப்படித்தான் பண்ணிட்டு இருக்கார். அதான் பயந்துபோய் உன்னை இங்க வரச்சொன்னேன்”

“அதுக்கு நான் சில டெஸ்ட் எல்லாம் செய்யணும்டா. அப்பதான் கொஞ்சமாவது தெரிய வரும். இங்க எந்த ஹாஸ்பிட்டலுக்காவது உங்க அப்பாவை கூட்டிக்கிட்டு போனியா நீ?”

“இல்ல, அவரை என்ன சொல்லி கூட்டிக்கிட்டு போறதுன்னு தெரியல. அதான் உன்னையே இங்க வரச்சொல்லி கேட்டேன்டா”

“அப்படியா.. சரி வா. உங்க அப்பாக்கிட்ட பேச்சு கொடுத்து பார்க்கறேன். ஏதாவது தெரியுதான்னு பார்க்கலாம்”

இருவரும் சமையலறைக்குச் சென்றனர். அங்கிருந்த மேஜையின் மேல் இரண்டு டம்ப்ளர்கள், நான்கு தட்டுகள் இருந்தன. அந்தத் தட்டுகளில் தலா இரண்டு இட்லிகள் வைக்கப்பட்டிருந்தன.

“வாங்கப்பா. ஹார்லிக்ஸ் ரெடி, அப்படியே ரெண்டே ரெண்டு இட்லி வெச்சிருக்கேன். அடுத்த ஈடு இட்லி குக்கர்ல வெச்சிருக்கேன். கொஞ்சம் பொறுத்துக்கோங்க” என்றார் கணேசன்.

“அங்கிள், நாம மூணு பேருக்கு மூணு தட்டு ஓ.கே. இந்த நாலாவது தட்டு யாருக்கு?” என்று கேட்டான் ரவி.

அதற்கு கணேசன், “அது ஆண்ட்டிக்கு ரவி. தூங்கிட்டு இருக்காங்க பாரு. இன்னும் கொஞ்ச நேரத்துல எழுந்திடுவாங்க. அதான் அவங்களுக்கும் சேர்த்து தட்டு வெச்சிருக்கேன். அவங்களோட ஹார்லிக்ஸ் ஃப்லாஸ்குல இருக்கு” என்றார்.

நிலைமை புரிந்தது ரவிக்கு. இட்லி சாப்பிட்டுவிட்டு கை கழுவ வாஷ் பேசினுக்கு அருகில் செல்லும்போது, “சிவா, இவரை சென்னைக்கு கூட்டிக்கிட்டு வந்துடு. எவ்ளோ சீக்கிரம் கிளம்பறோமோ, அவ்ளோ நல்லது. நான் வீட்டுலயே ஒரு கிளினிக் வெச்சிருக்கேன். அங்க வெச்சு இவருக்கு என்ன ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம், கவுன்சிலிங் போதுமான்னு எல்லாம் பாத்துக்கலாம்” என்றான்.

அன்றிரவே சென்னை கிளம்பலானார்கள் மூவரும். ரவிக்கு கல்யாணம் என்று கணேசனிடம் சொல்லப்பட்டிருந்தது. பேருந்தில் காலியாக இருந்த ஜன்னலோர இருக்கைக்குப் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருந்தார் கணேசன். அவருக்குப் பக்கத்து இருக்கையில் சிவாவும், பின்னிருக்கையில் ரவியும் உட்கார்ந்திருந்தனர்.

வண்டி கிளம்பியது. தன் தோளில் போட்டிருந்த சால்வையை எடுத்து, அந்த ஜன்னலோர இருக்கையில், ஒரு நபருக்குப் போர்த்துவது போல அந்த சால்வையைப் போட்டிருந்தார் கணேசன். “இந்த குளிர் காற்று, பஸ் டிராவல், ஜன்னலோர சீட்டுல நீ, உனக்குப் பக்கத்து சீட்டுல நான்.. அப்படியே நாம காலேஜ் படிக்கறப்போ ஊட்டிக்கு டூர் போனது மாதிரியே இருக்குல்ல” என்று சொல்லி, தன் பழைய நினைவுகளை எண்ணி புன்னகைத்தார் கணேசன்.

சில நொடிகளில் வண்டியின் வேகம் கூடியது, சில்லென காற்று வீசியது. “கொஞ்சம் குளிரடிக்குற மாதிரி இருக்கு, இல்ல?” என்று கணேசன் கேட்க, ஜன்னல் கதவு தானாக மூடியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *