உண்மை சுடும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 20,816 
 
 

கதை ஆசிரியர்: ஜெயகாந்தன்.

அது சோமநாதனின் கண்களை உறுத்திற்று. பரமஹம்சரும் விவேகானந்தரும் இருபுறமும் இருக்க, அந்த வரிசையில் தனது படத்தையும் வைத்திருக்கும் கோலத்தை முகம் சுளித்து யோசித்தவாறு மூக்குக் கண்ணாடியை நன்றாக உயர்த்திவிட்டுக் கொண்டு எழுந்து, சுவரருகே சென்று கூர்ந்து நோக்கினார் சோமநாதன்.
அப்போது ஹார்லிக்ஸ் கலக்கிக் கொண்டு வர உள்ளே சென்றிருந்த அவரது மருமகள் கோதை, கையிலேந்திய கப் அண்ட் ஸாஸருடன் ஹாலுக்குள் வந்தாள். சோமநாதன் அவளைத் திரும்பிப் பார்த்தார்.
“இதெல்லாம் யாருடைய வேலை?” என்று தன் படத்தை ஆள் காட்டி விரலால் சுட்டியவாறு கேட்டார்.
கையிலிருந்ததை டீபாயின் மீது வைத்துவிட்டு அவரருகே வந்து நின்று அந்தப் படங்களைப் பார்த்தவாறு கோதை சொன்னாள்: “நான் இந்த வீட்டுக்கு வர்ரதுக்கு முன்னாலிருந்தே இந்தப் படம் இங்கே இருக்கு. தன் வணக்கத்துக்குரிய மேதைகளின் திருவுருவங்கள் இவைன்னு நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் அவர். என் கிட்டேயும் அப்படித்தான் சொன்னார்?…” அவள் அதைச் சொல்லி முடிக்குமுன், மூக்குக் கண்ணாடியைக் கழட்டி மேலே போர்த்தியிருந்த சால்வையில் துடைத்தவாறு கிளுகிளுத்த சிரிப்புடன் அவர் சொன்னார்: “என்ன விசித்திரமான இணைப்பு… ஆஸ்திகச் செம்மல்களான அவர்கள் நடுவே, நிரீச்வரவாதியான என் படமா?…” என்று முனகியவாறே, முழங்கையில் தொங்கிய கைத் தடியை வலது கையில் எடுத்து மௌ¢ள ஊன்றி நடந்து சோபாவில் வந்தமர்ந்தார் சோமநாதன்.
கோதை ஹார்லிக்ஸை எடுத்து அவர் கையில் தந்தாள். வயோதிகத்தால் தளர்ந்த கைகள் நடுங்க அவர் அதைப் பருகினார். சூடான பானத்தைப் பருகியவுடன் அவரது நெற்றி வேர்த்திருப்பதைக் கண்ட கோதை, மின்சார விசிறியைச் சுழல விட்டாள். காற்றில் அவரது நரைத்த அடர்ந்த கிராப்புச் சிகை நெற்றியில் விழுந்து கொத்தாய்ப் புரண்டது. சோமநாதனின் பார்வை ஹாலை நோட்டமிட்டு அங்கிருந்த ரேடியோ, அந்த மூலை ஸ்டாண்டில் உள்ள புத்தர் சிலை, ஜன்னலுக்குப் போட்டிருந்த வெளிறிய நீல நிறத் திரைச் சீலை முதலிய பொருட்களைக் குறிப்பாகக் கவனித்த பின், கோதையின் மேல் வந்து நிலை பெற்றது. அவர் விழிகளில் அன்புணர்ச்சி மின்னிப் புரள ஒரு குழந்தைபோல் புன்னகை காட்டினார்.
அந்தப் புன்னகை ‘அடி, சமர்த்துப் பெண்ணே, வீட்டை ரொம்ப அழகா வெச்சிருக்கே’ என்று பாராட்டுவது போலும், ‘சந்தோஷமாயிருக்கிறாயா மகளே’ என்று விசாரிப்பது போலும், ‘உன்னைப் பார்க்க எனக்கு மிகத் திருப்தியாயிருக்கிறது’ என்று பெருமிதத்தோடு குதூகலிப்பது போலும் அமைந்திருந்தது.
அத்தனை அர்த்தங்களுக்கும் பதில் உரைப்பதுபோல் அடக்கமாய், பெண்மை நலன் மிகுந்த அமைதியோடு பதில் புன்னகை சிந்தினாள் கோதை. அவர் தனது கைக் கடிகாரத்தைப் பார்த்து, “ஓ! மணி அஞ்சாகிறதே… காலேஜிலிருந்து வர இவ்வளவு நேரமா! எனக்கு ஏழு மணிக்கு ரயில்…” என்றவாறு வெளியே எட்டிப் பார்த்தார்.
அதே நேரத்தில் காம்பவுண்ட் கேட் திறக்கப்படும் ஓசை கேட்டுக் கோதை ஆவலுடன் வெளியே நடந்தாள். பரமேஸ்வரனை இரு கைகளிலும் அணைத்துக் கொள்ள பரபரத்த உடலுடன் எழுந்து நின்றார் சோமநாதன்.
“அவர் இல்லை… போஸ்ட்மேன் – அவருக்கு ஏதோ ஒரு கடிதம்” என்று கூறியவாறு, அந்தக் கவரைத் திருப்பித் திருப்பிப் பார்த்தவாறே உள்ளே போனாள் கோதை. சோமநாதன் அருகிலிருந்த போட்டோ ஆல்பத்தை எடுத்துப் புரட்டியவாறு பரமேஸ்வரனின் வருகைக்குக் காத்திருந்தார்.
பரமேஸ்வரன் தற்போது தமிழ்ப் பேராசிரியராய்ப் பணியாற்றும் அதே கல்லூரியில்தான் பத்தாண்டுகளுக்கு முன் ஆங்கிலப் புரபஸராகப் பணியாற்றினார் சோமநாதன். அவரிடம் ஒரு மாணவனாக இருந்து அவர் ஓய்வு பெறுவதற்குள் அதே கல்லூரியில் பரமேஸ்வரன் விரிவுரையாளராகப் பணியேற்கும் அந்த இடைக்காலத்தில், வேறு எவரிடமும் ஏற்பட்ட உறவினும் வலுமிக்க பாந்தவ்யமும் நட்பும் அவர்களிடையே உருப்பெற்றது.
சோமநாதன் கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்றுச் சொந்தக் கிராமத்துக்குப் போய்விட்ட பிறகு பரமேஸ்வரனுக்கும், சோமநாதனுக்குமிடையே ஏதோ சில சமயங்களில் கடிதப் போக்குவரத்து இருந்தது. இரண்டாண்டுகளுக்கு முன் சோமநாதன் ஏதோ காரியமாகச் சென்னைக்கு வந்தபோது பத்தாண்டுகளுக்குப் பிறகு சோமநாதனும் பரமேஸ்வரனும் சந்திக்க நேர்ந்தது. பரமேஸ்வரனைக் கண்ட சோமநாதன் ஒரு விநாடி திகைத்தே போனார். அதற்குக் காரணம் மாணவராய் இருந்து, விரிவுரையாளரான பரமேஸ்வரன் பேராசிரியராய் உயர்ந்திருப்பது மட்டுமல்ல; புஷ் கோட்டும், கண்ணாடியும் தரித்த, காதோரம் சிகை நரைத்த – சோமநாதன் எதிர்பாராத – பரமேஸ்வரனின் முதிர்ந்த தோற்றம்தான். அதனினும் முக்கிய காரணம் நாற்பது வயதாகியும் அவர் பிரம்மச்சாரியாய் வாழ்ந்து வருவது…
தன் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய ஆசானைக் கண்டதும் அவரது கைகளைப் பற்றி அன்புடன் கண்களில் ஒற்றிக் கொண்டு நின்ற பரமேஸ்வரனைப் பாசத்துடன் முதுகில் தட்டிக் கொடுத்தவாறு, “நீங்கள் இன்னும் பிரம்மச்சாரியாக இருந்து வருவதைக் காணா ஏதோ ஒரு குற்ற உணர்வு என் மனத்தை உறுத்துகிறது… இந்த உறுத்தல் அர்த்தமற்றது என்று நீங்கள் கருதுகிறீர்களா?” என்று ஆங்கிலத்தில் கேட்டார் சோமநாதன்.
சோமநாதன் எப்போதும் தனது அபிப்பிராயத்தை அழுத்தமாகக் கூறிவிடுவார். ஆனால் அத்துடன் நிறுத்திக் கொள்ள மாட்டார். யாரிடம் தன் அபிப்பிராயத்தைக் கூறுகிறாரோ அவரிடமே ஒரு வகை ஆமோதிப்பை, அல்லது உடன்பாட்டை, விரும்புகிற வகையில் மற்றவரின் அபிப்பிராயத்தையும் எதிர்பார்ப்பார். அது அவரது சிறப்பான பண்புகளில் ஒன்று என்பதைப் பரமேஸ்வரனும் அறிவார்.
பரமேஸ்வரனுக்குப் பெற்றோரோ மிக நெருங்கிய பந்துக்களோ யாரும் தற்போது இல்லை. அவர் தனியன். பரமேஸ்வரனைப் போன்ற அடக்கமான தனியர்களின் வாழ்க்கையில் ‘திருமணம்’ என்ற வாழ்வின் திருப்பம் நிகழ்வதெனின், நமது இன்றைய சமூகத்தில் நண்பர்களின் – பொறுப்பும் அந்தஸ்தும் மிகுந்த நண்பர்களின் – உதவியால்தானே நடந்தேற வேண்டும்! அப்படிப்பட்ட நண்பனாய், வழிகாட்டியாய், ஞானாசிரியனாய் இருந்து வந்த சோமநாதனின் கடமையல்லவா அது? – என்பனவற்றையெல்லாம் நினைத்துத் தான் அவர் தன்னிடம் இவ்விதம் கேட்கிறார் என்பதைப் பரமேஸ்வரன் உணர்ந்தார்.
“ஏன்? பிரம்மசரியம் ஒரு குற்றமா?” என்று சிரித்த வண்ணம் கேட்டார் பரமேஸ்வரன்.
“அது குற்றமுமில்லை; சரியுமில்லை. குறையற்ற ஓர் ஆண் பிரம்மச்சரிய விரதத்தை அனுஷ்டிக்க ஒரு லட்சியம் வேண்டும். இப்படி ஒரு காரியத்தோடு இருந்தால் அந்தப் பிரம்மச்சரியம் சரியானது ஆகும். இல்லாமல் பிரம்மச்சரியத்துக்காகவே ஒருவன் பிரம்மசாரியாயிருந்தால் அது சரியற்றதும், பின்னால் ஒரு காலத்தில் குற்றமும் ஆகும். எதற்குமே ஓர் அர்த்தம் வேண்டும்; அர்த்தமே இல்லையென்றால் அதுக்குப் பெயரே அனர்த்தம்! உங்கள் பிரம்மச்சரிய விரதத்துக்கு ஒரு அர்த்தம் உண்டுன்னா, நான் என் அபிப்பிராயத்தை மாத்திக்கிறேன்” என்றார் சோமநாதன்.
பரமேஸ்வரன் ஒரு விநாடி யோசித்தார்; அது யோசனையல்ல; அது ஒருவகை பிரமிப்பு. பிறகு புன்னகை புரிந்தார். அது புன்னகையல்ல! அது ஒருவகை சரணாகதி.
அந்தச் சந்திப்பின்போது அவர்கள் இருவரும் வெகுநேரம் சம்பாஷித்தனர். பத்து வருஷங்களுக்கு முன்பு சோமநாதனுடன் பழகியபோது அவரை எந்த அளவுக்குப் புரிந்து கொண்டு எந்த அளவுக்கு அவரிடம் மதிப்பு வைத்திருந்தாரோ, அதை விடவும், பத்தாண்டு முதிர்ச்சியின் பிறகு தனது முதிர்ந்த அறிவோடு அவருடன் சம்பாஷிக்கையில் பன்மடங்கு அதிகம் புரிந்து கொண்டு சோமநாதனிடம் முதிர்ந்த மதிப்பும் முழுமையான சரணும் அடைந்தார் பரமேஸ்வரன்.
பரமேஸ்வரனைப் பிரிந்து ஊர் திரும்பும்போது சோமநாதன் லீவில் தனது கிராமத்துக்கு வரவேண்டுமென்று அவரை அழைத்தார்.
“இந்த அழைப்பைக் கடமை உணர்ச்சியோடு விடுக்கிறேன்” என்று ஆங்கிலத்தில் கூறிப் பின் தமிழில் தொடர்ந்து சொன்னார்: “சிறு வயதிலிருந்தே தாய் தகப்பனில்லாம என் தங்கை மகள் ஒருத்தி என் கிட்டே வளர்ப்புப் பெண்ணாய் இருக்கா… அவளும் கல்யாணமே வேணாம்னு இருந்தவ… இப்ப அவள் மனம் அதற்குப் பக்குவப்பட்டிருக்கிற மாதிரி தோணுது. எதுக்கும் நீங்க ஒரு தடவை வாங்க. பரஸ்பரம் சரின்னா நடத்தி வைக்கிறது என் கடமை…” – குலம் கோத்திரம் விசாரிக்காமல், மனிதனின் தரத்தையும் நட்பையும் உத்தேசித்து நடக்கும் அவரது உயரிய பண்பை உள்ளூரப் போற்றினார் பரமேஸ்வரன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்தத் திருமணம் நடந்தது. திருமணம் நிகழுமுன் பரமேஸ்வரனுக்கு ஒரே ஒரு விஷயம் மனத்தை உறுத்திக் கொண்டே இருந்தது.
கோதைக்கு இருபது வயது. பரமேஸ்வரனுக்கு நாற்பது வயது.
பரமேஸ்வரனின் இந்தத் தயக்கத்தை உணர்ந்தபோது சோமநாதன் விளக்கினார்: “வயதில் இவ்வளவு வித்தியாசம் வேணாம்னு நீங்கள் நெனச்சா உங்கள் தனிப்பட்ட விருப்பம்ங்கற முறையில் அது சரிதான். அதற்கு வேறே காரணம் இல்லேன்னாலும் அப்படி ஒரு தனிப்பட்ட மனோபாவனை உங்களுக்கு இருக்குங்கற ஒரு காரணத்தை உத்தேசிச்சே இந்த யோசனையைக் கைவிட்டு விடலாம்; நீங்களே யோசிச்சு முடிவு செய்ய வேண்டியது இது.”
கறாராக, முடிவாக என்ன கூறுவது என்று பரமேஸ்வரனுக்குப் புரியவில்லை. சோமநாதன் தனது அபிப்பிராயத்தை வற்புறுத்துகிறவருமில்லை. அவரது யோசனையை மறுத்துவிட்டால் வருத்தப்படக் கூடியவருமில்லை என்று பரமேஸ்வரன் நன்கு உணர்ந்ததனாலேயே, இதில் என்ன முடிவெடுப்பது என்று புரியாமல் குழம்பினார்.
அவரது மேலோட்டமான குழப்பத்தையும் உள்ளார்ந்த சம்மதத்தையும் புரிந்துகொண்ட சோமநாதன் பரமேஸ்வரனிடம் தீர்மானமான தோரணையில் கேட்டார்: “ஆமாம், உங்கள் தயக்கத்திற்கான பிரச்னைதான் என்ன?”
பரமேஸ்வரன் – தனது நாற்பது வயதை மறந்து – ஒரு வாலிபனுக்கே உரிய சங்கோஜத்துடன் தலைகுனிந்து மெல்ல இழுத்தவாறு கூறினார்: “வயது வித்தியாசம்தான்…”
“ஓ!” என்று கூறிச் சிரித்தார் சோமநாதன்: “நான் தான் சொன்னேனே, இந்த வித்தியாசம் அதிகம்னு நீங்க நெனைச்சா, இந்த முயற்சியைக் கைவிட்டுடலாம்னு… உங்க மனசிலே விருப்பம் இருந்து, பார்க்கறவங்க என்ன சொல்லுவாங்களோங்கற போலிக் கூச்சத்திற்காக ஒரு காரியத்திலே தயக்கம் காட்டறது அவசியமில்லாதது; அர்த்தமில்லாதது…”
“உலகத்திற்காகவும் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கு இல்லையா?” என்று உள்ளங்கையில் கோடு கீறினார் பரமேஸ்வரன்.
“ஆமாம் ஆமாம்; உலகத்திற்காகக் கொஞ்சம் என்ன, முழுக்க முழுக்க யோசிக்கணும். ஆனால், பரமேஸ்வரன்… உலகம்ங்கறது உங்களைச் சுத்தியுள்ள சிறு வட்டம் மட்டுமில்லை; அது எத்தனையோ கண்டங்களாய், நாடுகளாய்ப் பரந்து கிடக்கு… யோசிச்சுப் பார்த்தா அங்கெல்லாம் இந்த வித்தியாசம் ஒரு பொருட்டில்லை; நியாயமானது கூட! உங்கள் வசதிக்கு உங்கள் உலகத்தைச் சுருக்கிக் கொள்ள நீங்கள் விரும்பினா – ஒரு சின்ன அரட்டைக் கூட்டமே உலகம்னு பார்க்காதீங்க – அந்த உலகத்தை உங்களுக்குள்ளேயே உங்க ஹிருதயத்துக்குப் பக்கத்திலே எளிமையா ஒரு மனிதனின் உலகம்னாவது பாருங்களேன்! அதன்படி சுயமான முடிவு செய்யுங்களேன்..” என்று சொல்லி, மௌனமாய்ச் சற்று கண்மூடி யோசனையில் ஆழ்ந்தார் சோமநாதன்.
‘இந்த மனிதர்தான் மனுஷனின் மனத்துக்குள் நுழைந்து எப்படி தீர்க்கமாய்ப் பார்க்கிறார்!’ என்று வியந்து நோக்கினார் பரமேஸ்வரன்.
கண்களைத் திறவாமலே தொடர்ந்து பேசினார் சோமநாதன். “ஒரு ஆண் கல்யாணம் செய்து கொள்ளும்போது தனக்காகவே செய்து கொள்வதாக நினைக்கிறான்; பெண்ணும் அப்படியே நினைக்கிறாள். தனக்காகச் செய்து கொள்கிற எந்தக் காரியமும் அதிருப்தியாய்த்தான் முடியும். கல்யாணத்தின் உண்மைத் தாத்பரியம் அதுவல்ல. தனக்காக வாழ்ந்துகிட்டிருந்த ஒருவனோ ஒருத்தியோ இன்னொருவர்க்காக வாழறதின் ஆரம்பமே திருமணம். சமூக வாழ்வின் சிறு வட்டம் – அடிப்படை வட்டம் – தாம்பத்யம். இந்த அடிப்படைக் கூட்டுறவிலேயே இந்தத் தியாக உணர்வு ஏற்பட்டாத்தான் சமூக வாழ்வே சிறப்பாய் அமையும். ஆனால், ‘எனக்காக, என் சுகத்துக்காக’ங்கற நோக்கிலேயே ஆணும் பெண்ணும் கல்யாணம் பண்ணிக்கிற ஒரு சுயநலப் போக்கினாலேதான், தனி மனுஷனின் குடும்ப வாழ்க்கையும் சரி, சமூக வாழ்க்கையும் சரி, அதிருப்தியும் துன்பமுமா மாறிப்போகுது… நீங்க உங்களுக்காக அவளைக் கல்யாணம் செய்து கொள்றதாக நினைக்கக் கூடாது… அவளுக்காக…! இதையேதான் நான் அவளுக்கும் சொல்லியிருக்கேன்… உறவின் அடிப்படையே இந்த பரஸ்பர உணர்வுதான்னு நீங்க நினைக்கிறீங்களா…?”
பரமேஸ்வரன் ஒரு விநாடி யோசித்தார். அது யோசனையல்ல…
இந்த இரண்டு வருட மணவாழ்க்கை, வாழ்க்கையின் அர்த்தத்தை அவருக்கு உணர்த்திற்று. கோதையில்லாமல் அவரால் இனி வாழ இயலாது என்ற உணர்வை, ஒரு பந்தத்தை – அவர் ஏற்படுத்திக் கொண்டு விட்டார் – அல்லது அவள் ஏற்படுத்தி விட்டாள். தன்னை ஒரு முழு மனிதனாகச் சோமநாதனும், தனது வாழ்க்கைக்கு ஒரு முழு அர்த்தத்தைக் கோதையும் உருவாக்கி விட்டதை உணர்ந்து அவரைத் தனது வணக்கத்துக்குரிய வழிகாட்டியாகவும் அவளைத் தனது உயிருக்கிணையான துணையாகவும் ஸ்வீகரித்தார் பரமேஸ்வரன்.
தங்களது தாம்பத்ய வாழ்க்கை ஆனந்தமாயிருப்பதை, பரஸ்பரத் திருப்தியும் நிறைவும் மிகுந்து விளங்குவதை ஒருநாள், இந்த வயது வித்தியாசம் குறித்துக் கோதையிடம் அவர் கேட்டு, அவளுரைத்த பதிலில் அவர் நன்கு உணர்ந்தார்.
மங்கிய ஒளி வீசும் சிறு விளக்கின் வெளிச்சத்தில் சயன அறையின் அந்தரங்கச் சூழ்நிலையில் அவரது மார்பில் சித்திரம் வரைந்தவாறு சாய்ந்து, செவியருகே இதழ்கள் நெருங்க, ஆத்மார்த்தமான ரகசியக் குரலில் அவள் பேசிய போது அவருக்கு ரோமாஞ்சலி செய்தது…
“நீங்க கேட்டது மாதிரி, ஆரம்பத்திலே எனக்கும் இப்படி ஒரு நெனைப்பு இருந்தது… ஆனா, ஆனா… இப்ப தோணுது; எல்லோருமே உலகத்திலே இந்த வித்தியாசத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டா எல்லாருடைய வாழ்க்கையும் சொர்க்கமாயிருக்கும்னு… ஒத்த வயசாயிருந்தா விட்டுக் குடுக்கற குணமோ இணக்கமாகிற குணமோ இருக்காதுன்னு தோணுது… இந்த வித்தியாசத்தினாலேயே ஒரு அந்நியோன்யமும், ஒரு… ஒரு… எனக்குச் சொல்லத் தெரியல்லே… நான் ரொம்ப சந்தோஷமாயிருக்கேன். அவ்வளவுதான் சொல்ல முடியுது” என்று அவரது கேள்விக்குப் பதிலாக அவள் வெகு நேரம் சிரமப்பட்டு வார்த்தைகளைத் தேடிப் பிடித்துத் தன் மனத்தைத் திறந்து அவர் மனத்துள் கொட்டியபோது, இருவர் உள்ளமும் நிறைந்தே வழிந்தன…
காஷ்மீரத்து ஏரிகளிலிருந்து கன்னியாகுமரி முக்கடல் வரை, பின்னணியாகக் கொண்டு அவர்கள் இணைந்து காட்சி தரும் போட்டோக்கள் நிறைந்த அந்த ஆல்பத்தின் மூலமே அவர்களின் ஆனந்தமயமான குடும்ப வாழ்க்கையை உணர்ந்தார் சோமநாதன்.
ஆல்பத்தின் கடைசி ஏட்டைப் புரட்டி அதை மூடியபோது, தன் எதிரே “எப்போ வந்தீங்க?” என்று ஆர்வமாய்ப் புன்னகை பூத்து, கரம் குவித்து நிற்கும் பரமேஸ்வரனை ஹால் வாசற்படியில் கண்டு, இரண்டு கைகளையும் விரித்தவாறு எழுந்து நின்ற சோமநாதன் குழந்தைபோல் சிரித்தார். பிறகு அருகில் வந்த பரமேஸ்வரனின் கையைக் குலுக்கித் தோளில் தட்டிக் கொடுத்தார்.
“திடீர்னு ஒரு அவசர வேலையா வந்தேன். இப்ப ஏழு மணி ரயில்லே போகணும்” என்று அவர் கூறியது கேட்டு பரமேஸ்வரனின் முகம் சுருங்கிற்று; “இப்பவே மணி அஞ்சரை ஆகுது. சரி, நான் உங்களோட ஸ்டேஷன் வரை வரேன்” என்று கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டார்.
“ஆஹா! அதற்கென்ன அவசரம்? இன்னும் ஒண்ணரை மணி நேரம் இருக்கு. நீங்க உடை மாத்தி, காபி சாப்பிட்டுட்டுப் புறப்படலாம்.”
அந்த நேரத்தைக் கூட வீணாக்க மனமில்லாமல் ஹாலில் நின்று சோமநாதனைப் பார்த்தவாறே கோட்டைக் கழற்றினார் பரமேஸ்வரன். பக்கத்தில் வந்து தயாராய்க் கை நீட்டி அதை வாங்கிக் கொண்டு உள்ளே போன கோதை திரும்பி வரும்போது டவலுடன் வந்தாள். டவலைத் தோள்மீது போட்டுக் கொண்டு சோபாவிலமர்ந்து பூட்ஸ்களைக் கழற்ற ஆரம்பித்த பரமேஸ்வரனிடம், ஹாலில் இருந்த அந்தப் படங்களைப் பார்த்தவாறு கூறினார் சோமநாதன்: “இந்த வினோதமான இணைப்பைப் பார்க்க எனக்கு வேடிக்கையாக இருக்கு!”
பரமேஸ்வரனும் தலை நிமிர்ந்து பார்த்தார்: “இதில் என்ன வேடிக்கை? – ஒருத்தர் எனக்கு அசைக்க முடியாத இறைநம்பிக்கை தந்தவர். இன்னொருத்தர் பிரம்மச்சரியத்தின் மேன்மையை எனக்கு உணர்த்தியவர். நடுவில் இருக்கிறவர் பிரம்மச்சரியத்தின் அர்த்தத்தை உணர்த்தி வாழ்க்கைக்கு வழி காட்டியவர்… தாயும் தகப்பனும் இல்லாத எனக்கு இரண்டுமாகிய குருநாதர். என் பெற்றோரின் படம் என் கிட்டே இல்லாத குறையையும் இந்தப் படம் தீர்த்து வச்சிருக்கு… இந்த மூவரும் எனது வணக்கத்துக்குரிய ஞானிகள்…”
“ஓ! டூ மச்! நீங்கள் என்னை அதிகமாய்ப் புகழறீங்க” – என்று தோளைக் குலுக்கிக் கொண்டு எளிமையுணர்வோடு சிரித்தார் சோமநாதன்.
“- இல்லை, நான் உங்களை எளிமையாய் வழிபடுகிறேன்” என்று புனித உணர்வுடன் எழுந்து நின்றார் பரமேஸ்வரன்.
“வழிபாடா?” என்று புருவங்களைச் சுளித்தார் சோமநாதன். “அதில் எனக்கு நம்பிக்கையில்லை” என்றார்.
“வழிபாட்டில் நம்பிக்கை, வழிபடுகிறவனுக்குத்தானே தேவை! அதன் மூலம் எனக்கொரு மனோபலம் உண்டாகுது… உங்களுக்கு அதில் ஆட்சேபணையா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே போனார் பரமேஸ்வரன்.
“மிகவும் உணர்ச்சி வயப்பட்ட மனிதர்!” என்று முனகிக் கொண்டார் சோமநாதன்.
சற்று நேரத்திற்குப்பின் தூய வேட்டியும் முழுக்கைச் சட்டையும் அணிந்து, நெற்றியில் பளீரெனத் தீட்டிய விபூதியுமாய் வந்த பரமேஸ்வரன் சோபாவில் வந்து அமர்ந்தார். கோதை ஹார்லிக்ஸ் ‘கப்’புடன், சற்று முன் வந்த கடிதத்தையும் கொண்டு வந்து நீட்டினாள். பரமேஸ்வரன் அமைதியாய் ஹார்லிக்ஸைக் குடித்தபின் கவரைப் பிரித்துக் கடிதத்தைப் படித்தார்.
“பேராசிரியர் பரமேஸ்வரன் அவர்களுக்கு!
இது ஒரு மொட்டைக் கடிதம் என்று தூக்கி எறிந்து விட முடிவு செய்வதற்கு முன், மொட்டைக் கடிதங்களும் உண்மைகளைக் கூற முடியும் என்றறியவும்.
உமது வாழ்க்கையே ஒரு மகத்தான பொய்யை அடித்தளமாகக் கொண்டு எழுந்து நிற்கிறது. நீர் வணங்கத் தகுந்த தெய்வமாகக் கருதியிருக்கிறீரே, அந்த சோமநாதன் – அவர் எத்தகைய பேர்வழி என்பதை நீர் அறிய மாட்டீர்! கோதையைப் போன்ற குணவதி உமக்கு மனைவியாக வாய்த்தது குறித்து குதூகலப்படுகிறீரே, அந்தக் கோதையின் கடந்த காலம் பற்றியும் நீர் அறிய மாட்டீர்! திருமணவாவதற்கு முன் அவள் ஒருவனின் காதலியாய் இருந்து, கர்ப்பமுற்ற பின் கைவிடப்பட்டவள். தெய்வாதீனமாகவோ, அந்தப் பெரியவரின் ஆலோசனையின் விளைவாகவோ அது குறைப் பிரசவமாகப் போயிற்று. உம்மை ஏமாற்றி அவளைக் கட்டி வைத்து விட்டார் உமது குருநாதர். நீர் அவளுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தலாம். உம்மை நீரே ஏமாற்றிக் கொள்வதன் விளைவே இந்த மகிழ்ச்சி.”
கையெழுத்தில்லாத அந்தக் கடிதத்தைப் படித்து முடித்தவுடன் அதைக் கிழித்தெறிந்துவிட அவரது விரல்கள் துடித்தன. ஒரு விநாடி தயக்கத்துக்குப் பின், ஏனோ அக்கடிதத்தை மடித்துச் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டார்.
“ஏதாவது விசேஷமான செய்தியா?” என்று கேட்டார் சோமநாதன்.
“ம்… அதில் ஒண்ணுமில்லை…” என்று பொய்யாகச் சிரித்தார் பரமேஸ்வரன். அந்தக் கடிதத்தை ஒரு பொருட்டாக்காமல் மனத்திலிருந்து ஒதுக்கி விடவே முயன்றார் அவர். அவர் பார்வை ஹாலில் மாட்டியிருந்த அந்தப் படங்களின் மீதும், பிறகு சுவரோரமாகக் கையில் ஒரு பத்திரிகையுடன் தேவதை போல் நின்றிருக்கும் கோதையின் மீதும், இறுதியாகத் தனது மௌனத்தையும், தவிப்பையும் எடை போடுவது போல் தன்னையே கவனித்துக் கொண்டிருக்கும் சோமநாதன் மீதும் மாறி மாறித் திரும்பியபோது, திடீரென அவருக்கு ‘இந்த மனிதர் தனது உள்ளத்து உணர்வுகளைக் கண்டுபிடித்து விடுவாரோ’ என்ற அச்சம் பிறந்தது.
அவர் முகம் திடீரெனக் கலவரமுற்றிருப்பதைக் கோதை உணர்ந்து கொண்டாள். அருகில் வந்தாள். “ஏன் தலை வலிக்கிறதா?” என்றாள்.
“இல்லை…” என்று அவர் விழிகளை உயர்த்தி, அவளைப் பார்த்தபோது, அவரது கண்கள் சிவந்து பளபளத்தன.
“கண்ணெல்லாம் திடீர்னு செவந்து இருக்கே” என்று நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். “லேசாச் சூடும் இருக்கு.”
“எங்கே பார்ப்போம்” என்று எழுந்து வந்த சோமநாதன் பரமேஸ்வரனின் நெற்றியைத் தொட்டுப் பார்த்து, “ஒண்ணுமில்லே… களைச்சுப் போயிருக்கீங்க. நீங்க ரெஸ்ட் எடுத்துக்குங்க… நான் புறப்படறேன். அடுத்த வாரம் நான் வரும்போது ரெண்டுநாள் தங்குவேன்…” என்று தோளில் தட்டிக் கொடுத்தார்.
“எனக்கு ஒண்ணுமில்லே… கொஞ்சம் வெளியே போனாலும் நல்லாத்தானிருக்கும்… நான் உங்களுடன் ஸ்டேஷன் வரை வருவேன்… நேரம்தான் இன்னும் இருக்கே… இதோ வரேன்” என்று மிகுந்த சிரமத்தோடு புன்னகை காட்டி விட்டு எழுந்து சென்று, கண்ணாடியில் தானே தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டார் பரமேஸ்வரன். பிறகு சற்று நேரம் தனியாக இருக்க வேண்டி, மாடியில் போய் வானத்தை வெறித்துப் பார்த்தவாறு நின்றிருந்தார். சட்டைப் பையிலிருந்த கடிதத்தை மீண்டும் எடுத்துப் பார்த்தார். ‘மொட்டைக் கடிதங்களும் உண்மைகளைக் கூற முடியும் என்றறியவும்… உமது வாழ்க்கையே ஒரு மகத்தான பொய்யை அடிப்படையாய்க் கொண்டு எழுந்து நிற்கிறது’ என்ற இரண்டு வாக்கியங்களும், அந்தக் கடிதத்தை நம்பவும் முடியாமல் ஒதுக்கவும் முடியாமல் அவரை வதைத்தன.
திடீரென அவர் அந்தக் கடிதத்திடம் கேட்டார்.
‘சரி, அப்படியே இருந்தால்தான் என்ன? கோதையின் கடந்த காலம் எத்தகையது என்பது பற்றி எனக்கென்ன கவலை? இன்று அவள் எனக்கு ஏற்ற மனைவி. அப்பழுக்கில்லாத தாம்பத்தியம் நடத்துகிறோம் நாங்கள்… ஒரு தவறே நடந்திருந்தாலும் அதனால் ஒருவருக்கு வாழவே உரிமை அற்றுப் போகுமா, என்ன?…’ என்று வாழத் தெரிந்த தெம்புடன் கேட்டபோது, காற்றில் அந்தக் கடிதம் படபடத்தது. அவர் தன் விரல்களைச் சற்றி நெகிழ்த்தினால் அது பறந்தே போயிருக்கும்… ஆனால் அவர் விரல்கள் அதை இறுகப் பிடித்திருந்தன. அதைச் சுக்கல் சுக்கலாய்க் கிழித்தெறிய, ஒரு வெறியும், அதைச் செய்ய முடியாமல் ஓர் உணர்வும் அவரைத் தடுத்தன.
‘இந்தக் கடிதம் என் மனைவியைப் பற்றிப் பேசுகிறது… இது கூறுவது உண்மையாயினும் சரி, பொய்யாயினும் சரி, எங்கள் உறவு எவ்வகையிலும் ஊனமுறாது. ஆமாம், அவள் இல்லாமல் என்னால் வாழ இயலாது. நடந்தது பற்றிக் கவலையில்லை’ என்று ஆன்ம உறுதியோடு தலை நிமிர்ந்து வானத்தைப் பார்த்தார். அடுத்த விநாடி அவர் நெற்றி சுருங்கிற்று… கண்கள் இடுங்கின… உள்ளில் ஒரு குரல் ரகசியமாகக் கேட்டது.
‘எனினும் நடந்ததா என்று தெரிய வேண்டுமே! உண்மை எனக்குத் தெரிய வேண்டுமே!’ என்ற ஓர் எண்ணம் பெருகி வந்து சித்தம் முழுவதும் கவிந்தது. ‘சீ, இந்த அற்பத்தனமான கடிதம் என்னை இவ்வளவு நிலைகுலையச் செய்வதா?…’ என்று எண்ணி அதை எடுத்துக் கிழிக்கையில், பாதியில் அவர் கைகள் தடைப்பட்டு நின்றன. கடிதம் சரிபாதியில் கால்பாதி கிழிக்கப்பட்டிருந்தது. அதில்…
‘மொட்டைக் கடிதங்களும் உண்மைகளைக் கூற முடியும்!…’ என்று வரிகள்!
‘ம்… உண்மையா? நீ கூறுவது அனைத்தும் சில பொறாமைக்காரர்களின் விஷமத்தனம் என்று அறிந்தபின் நானும் கோதையும் சேர்ந்து உன்னைக் கிழித்தெறிவோம். அல்லது ‘கடந்த காலத்தின் நினைவே, எங்கள் வாழ்விலிருந்து விலகிப் போ’ என்று இருவரும் சேர்ந்து உன்னைக் கொளுத்துவோம்’ என்று தீர்மானம் செய்து கொண்டார்.
‘ஆனால், உண்மையை யார் மூலம் அறிவது? இந்தக் கடிதத்தை நிர்மூலமாக்கவே இன்று அவர் வந்திருக்கிறாரோ?’ என்று எண்ணிய ஆர்வத்தில், வேகமாய் மாடியிலிருந்து இறங்கினார் பரமேஸ்வரன்.
ஒரு டாக்ஸியில் ஸ்டேஷனை நோக்கி இருவரும் போய்க் கொண்டிருக்கையில், மௌனம் கலைந்து பேசினார் பரமேஸ்வரன்.
“உங்களுக்கு என்னைத் தெரியும்… நாங்கள் – நானும் கோதையும் உங்கள் ஆசிர்வாதத்தால் எவ்வளவு புனிதமான வாழ்க்கையை நடத்தறோம்னு தெரியும்” என்று சொல்லிவிட்டு, மேலே பேசமுடியாமல் பாக்கெட்டிலிருந்து அந்தக் கவரை எடுத்தார்.
சோமநாதனுக்கு ஒரு விநாடி திகைப்பு.
பரமேஸ்வரன் டாக்ஸிக்குள்ளிருக்கும் சிறு விளக்கின் ஸ்விட்சைப் போட்டு, அந்த வெளிச்சத்தில் அக்கடிதத்தை நீட்டியவாறு சொன்னார்: “சுத்தி வளைக்காமல் ‘இது உண்மை’ அல்லது ‘பொய்’… ரெண்டில் ஒண்ணு சுருக்கமாகச் சொன்னாப் போதும். நீங்க சொல்ற உண்மையான பதில் – எதுவாயிருந்தாலும் – யாரையும் எதையும் பாதிக்காதுங்கறது உறுதி” என்று கடிதத்தைத் தன்னிடம் நீட்டும் பரமேஸ்வரனின் கரம் நடுங்குவதைக் கவனித்தார் சோமநாதன். பின்னர் அமைதியாய் முகத்தில் எவ்விதச் சலனமுமில்லாமல், பாதி கிழிந்த அக்கடிதத்தைப் படித்தார். அவர் முகத்தையே வெறித்திருந்த பரமேஸ்வரன் “எனக்கு உண்மை தெரிய வேணும். ஆமாம்!… அவ்வளவுதான்” என்று படபடத்தார்.
சோமநாதன் அவரைப் பார்த்துக் குழந்தைபோல் சிரித்தார். அந்தச் சிரிப்பு ‘உங்கள் பலஹீனம் இந்த உண்மையை அறியத் துடிக்கும் துடிப்பில் ஒளிந்து கிடக்கிறது’ என்பது போல் இருந்தது.
பரமேஸ்வரனைத் தட்டிக் கொடுத்தவாறு சமாதானப்படுத்தினார் சோமநாதன்: “நீங்க இவ்வளவு உணர்ச்சி வயப்பட்டவரா இருப்பீங்கன்னு நான் நினைச்சதில்லே; இது கெடுதி… இப்படி இருந்தா உங்களுக்கு ‘பிளட் பிரஷர்’ வந்துடும்.”
“நான் உண்மையைத் தேடித் தவிக்கிறேன்” என்று கெஞ்சினார் பரமேஸ்வரன்.
“உண்மையைத் தேடியா? அது எதுக்கு நமக்கு? அது சகலமும் துறந்த துறவிகளின் தொழிலாச்சே!” என்று சிரித்தார் சோமநாதன்.
பரமேஸ்வரனுக்கு சோமநாதனிடம் கொஞ்சம் கோபம் கூட வந்தது, அவரது விளையாட்டுப் பேச்சைக் கேட்க. எனினும் மௌனமாயிருந்தார்.
“மிஸ்டர் பரமேஸ்வரன்! முதல்லே இந்தக் கடிதத்தின் நோக்கம் கீழ்த்தரமானதுங்கறதெ நீங்க புரிஞ்சு கொள்ளணும்” – ஏதோ சொல்ல ஆரம்பித்தார் சோமநாதன். பரமேஸ்வரன் குறுக்கிட்டுப் பிடிவாதமான குரலில் சொன்னார்: “இது சம்பந்தமா எனக்கு ஒரு வார்த்தையில்தான் பதில் வேணும் – உண்மை அல்லது பொய்.”
அந்தக் குரலின் கண்டிப்பையும், அந்தக் குரல் வழியே அவரது மன நிலையையும் உணர்ந்த சோமநாதன் “ஒரு வார்த்தையிலா?” என்று கேட்டுவிட்டு அவர் முகத்தைப் பார்த்தார்.
“ஆமாம், ஒரே வார்த்தையில் – அதை நீங்க சொன்னா நான் நிச்சயம் நம்புவேன்.”
ஒரு குழந்தையின் அல்லது ஒரு குடிகாரனின் வாக்குறுதியைக் கேட்டவர் போல் நம்பிக்கையற்றுச் சிரித்தார் சோமநாதன்.
“எனக்கு வருத்தமாக இருக்கிறது. இந்தக் கடிதம் உங்களை இவ்வளவு தூரம் மாற்றிவிட்டதைக் காண… சரி கேளுங்கள் எனது பதிலை! ஒரே வார்த்தையில் சொல்லுகிறேன். பொய்!” என்று உதடுகள் துடிக்கக் கூறி அந்தக் கடிதத்தை அவரிடமே தந்தார் சோமநாதன்.
அதன் பிறகு இருவருமே ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
சோமநாதனை ரயிலேற்றி விடை தந்து அனுப்பும்போது கூட, அவர் பரமேஸ்வரனிடம் அந்தக் கடிதம் குறித்துப் ‘பொய்’ என்ற அந்த வார்த்தைக்கு மேல் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
ஆனால் பரமேஸ்வரனுக்கோ சோமநாதன் தன்னிடம் இதுவரை பேசிய எவ்வளவோ பேச்சுக்களில் அவர் கூறிய அந்த ஒரு வார்த்தைதான் – ‘பொய்’ என்ற அந்த ஒரு பதம்தான் பொய்யெனத் தோன்றியது. அடுத்த நிமிஷம் தன் மனத்தில் அவ்விதம் தோன்றுவதற்காகத் தன்னையே அவர் நொந்து கொண்டார்.
‘சீ! எவ்வளவு அற்பமாக, கேவலமாக இந்தக் கடிதம் என்னை மாற்றி விட்டது! இதை நான் அவரிடம் காட்டி இது பற்றி கேட்டதே தப்பு… என்னைப் பற்றி அவர் எவ்வளவு மோசமான முடிவுக்கு வந்திருப்பார்…!’ என்று தனது செய்கைக்காக வருந்திக் குழம்பியவாறு வீடு வந்து சேர்ந்தார் பரமேஸ்வரன்.
அவர் வீட்டுக்குள் நுழையும் போது கோதை மாடியிலிருந்தாள். அவ்விதம் இருக்க நேர்ந்தால் பரமேஸ்வரன் நேரே மாடிக்குப் போவதுதான் வழக்கம். ஆனால் இன்று ஹாலிலேயே சோபாவில் உட்கார்ந்து எதிரே இருந்த அந்தப் படங்களை வெறித்துப் பார்த்தவாறிருந்தார்.
அவரை மாடியில் எதிர்பார்த்து, அவர் வராததால் கோதை ஹாலுக்கு இறங்கி வந்தாள்.
‘ஏன்? என்ன உடம்புக்கு?’ என்று அருகே வந்து நெற்றியைத் தொட்டாள். இப்போது சூடு இல்லை. தன் நெற்றியின் மீது வைத்த அவள் கரத்தை இறுகப் பற்றினார் பரமேஸ்வரன்; அவர் கை நடுங்கியது.
“என்ன… என்ன உங்களுக்கு?” என்று பதறியவாறு அவர் முகத்தை நிமிர்த்தியபோது, அவரது உதடுகளில் அழுகை துடித்தது. பார்வை பரிதாபமாய்க் கெஞ்சியது. அதே போழ்தில் அவர் மனத்துள் ஒரு குரல் ஒலித்தது! ‘நான் ஒரு மூடன்; இதோ சத்தியத்தின் சொரூபமாய் என் மனைவி நிற்கிறாள். இவளிடமே அந்தக் கடிதத்தைக் காட்டி உண்மையைக் கேட்பதை விடுத்து – நான் ஏன் இப்படித் தவிக்க வேண்டும்?’
அவர் முகத்தில் திடீரென ஒரு மலர்ச்சியும் புன்னகையும் ஒளிவிட, “எனக்கு ஒண்ணுமில்லை, இப்படி உட்கார்… என் மனத்திலே ஒரு பிரச்னை… நீதான் தீர்க்க முடியும்… என்னை உனக்குத் தெரியும்… நீ இல்லாமல் என்னால் வாழ முடியாதுங்கறதும் உனக்குத் தெரியும்…” அவருக்குத் தொண்டையில் என்னவோ அடைத்தது… “இதைப்படி… சுத்தி வளைக்காமல் ‘உண்மை’ – அல்லது ‘பொய்’ இரண்டில் ஒரு பதில் – அவ்வளவு போதும். நீ சொல்ற பதில் எதுவாயிருந்தாலும் அது யாரையும், எதையும் பாதிக்காது… இது சத்தியம்… எனக்கு உண்மை தெரியணும்… என் வாழ்க்கையின் அடிப்படை ஒரு பொய் இல்லைன்னு எனக்கே தெரியணும்…” என்று கடிதத்தை அவளிடம் தந்து அவர் பேசிக் கொண்டேயிருக்கையில் அந்தக் கடிதத்தை அமைதியாய்ப் படித்து முடித்துவிட்டுக் கண்களை மூடி மனத்தை இரும்பாக்கிக் கொண்டு, உறுதியான குரலில் அடக்கமாய் அவள் சொன்னாள்: “உண்மை.”
அவர் அப்படியே ஸ்தம்பித்து நின்றிருந்தார். அவள் நிஷ்களங்கமான குரலில் தொடர்ந்து சொன்னாள்:
“அது என் வாழ்க்கையில் ஏற்பட்டுவிட்ட ஒரு தவறு. அதுக்காக நான் யாரையும் குற்றம் சொல்லத் தயாராக இல்லை… என் வாழ்க்கையே மூளியாகிப் போச்சுன்னு அப்படியே வாழ்ந்துவிடத்தான் தீர்மானிச்சேன். அது சரியில்லேன்னு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் எனக்கு அறிவுறுத்தினார் மாமா. அப்படி ஒரு சந்தர்ப்பத்திலேதான் நான் உங்களை மணக்கச் சம்மதிச்சேன்.
“மாமா சொன்னார். ‘பொய்யாய்ப் போன ஒரு விஷயத்துக்கு நாம் உயிர் கொடுக்கிறது அவசியமில்லே… இறந்த காலம் இறந்துவிட்ட காலமாகவே போகட்டும். உண்மைங்கறதின் பேராலே ஒரு பொய்க்கு உயிரூட்ட வேணாம். சில உண்மைகள் நெருப்பு மாதிரி, அதைத் தாங்க ஒரு பக்குவம் வேணும். நெருப்போட தன்மையே சுடறதுதான். அதைத் தாங்கிக் கொள்ள எல்லா மனிதர்களுக்கும் மனோபலம் இருக்காது’ன்னார் மாமா. இதை மறைக்க வேணாம்னோ, இந்தக் கடிதத்திலே இருக்கிற மாதிரி உங்களை ஏமாத்தணும்னோ யாருக்கும் எண்ணமில்லை. நான் உங்கள் மனைவி. இந்த உணர்வு வந்தப்பறம் உங்ககிட்டே எதையும் மறைக்கிறது சரியில்லைங்கிறதனாலேயே இந்தச் சந்தர்ப்பத்திலே இவ்வளவும் சொல்லிவிட்டேன். இந்த உண்மை சுடலாம். எனக்குத் தெரியும். அதைத் தாங்கிக்கிற பக்குவம் உங்களுக்கு உண்டு” என்று அவள் சொல்லும்போது, பரமேஸ்வரனின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அவர் உடல் பதறிற்று. சோமநாதன் தன்னிடம் பொய்யுரைத்த துரோகத்தை எண்ணிய போது, தன் இருதயத்தையே சுட்டதுபோல் அவர் அலறினார்: “நான் உன்னை மன்னிக்கிறேன்… கோதை!… ஆனால், ஒரு மணி நேரத்துக்கு முன்னே கூட… இந்தக் கடிதத்தைக் காட்டினப்போ ‘பொய்’ன்னு மனமாரப் பொய் சொன்னாரே, அந்தப் பெரிய மனுஷன் – அவரோட நயவஞ்சகத்தை என்னாலே மன்னிக்க முடியாது… முடியவே முடியாது…!” என்று கூவியவாறு சோபாவிலிருந்து துள்ளிக் குதித்து எழுந்து ஓடினார் பரமேஸ்வரன். சுவரிலிருந்த படங்களில் – அந்த வரிசையின் நடுவே இருந்த, அவரது வணக்கத்துக்குரிய ஸ்தானத்திலிருந்த சோமநாதனின் படத்தை இழுந்து வீசி எறிந்தார்…
ஹாலின் மூலையில் விழுந்து நொறுங்கியது அந்தப் படம். “சீ! இவன் மேதையாம்… ஞானியாம்” என்று அவ்விதம் எண்ணியிருந்த தன்னைத்தானே நொந்துகொண்டு மாடியை நோக்கி ஓடினார்.
அவர் தன் அறைக்குச் சென்று கதவை அறைந்து சாத்தித் தாழிடும் ஓசை ஹாலில் நின்றிருந்த கோதைக்குக் கேட்டது.
“ஓ! உண்மை சுட்டுவிட்டது” என்று முனகிக் கொண்டாள் கோதை.
ஒன்றும் புரியாத பிரமிப்பில், உலகத்தின் மாய்மாலத் தோற்றத்தில் கசப்பும் விரக்தியும் கொண்டு யாரையும் பார்க்க மனமின்றித் தனிமையில் குமுறிக் கொதித்து அடங்கிய மனநிலையோடு அறைக்குள் கட்டிலில் பிரேதம் போலக் கிடந்தார் பரமேஸ்வரன்.
… அப்போது அறைக் கதவு லேசாகத் தட்டப்பட்டது.
அந்தச் சப்தத்தைக் கேட்டும் சலனமற்று முகட்டை வெறித்துப் பார்த்தவாறு படுத்துக் கிடந்தார். மீண்டும் தட்டப்படும் என்று எதிர்பார்த்தார். அடுத்தமுறை தட்டப்படாததால், மேலும் ஒரு நிமிஷம் காத்திருந்தார். பிறகு எழுந்து வந்து தானாகவே கதவைத் திறந்தார் பரமேஸ்வரன்.
அங்கே கையிலொரு சிறு பெட்டியுடன், விடைபெற்றுக் கொள்வதற்காகக் காத்து நின்றாள் கோதை. சில விநாடிகள் இருவரும் ஒருவரை ஒருவர் தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டனர். – அவள் அவரிடம் தௌ¤வான குரலில் பேசினாள்!
“மாமாவின் மேல் நீங்கள் அர்த்தமற்ற பக்தி வெச்சிருக்கறதா நானும் நெனைச்சதுண்டு. அந்தப் படத்தை நீங்க எடுத்து எறிஞ்சப்பறம்தான் அவர் உண்மையிலேயே பெரிய மேதை – மனுஷ மனத்தின் எல்லா இருண்ட மூலைகளையும் பார்க்கத் தெரிஞ்சவர்னு புரிஞ்சுக்க முடிஞ்சுது. உண்மை சுடும்னு சொன்ன அந்த மேதை – உங்களாலே அதைத் தாங்க முடியாதுன்னும் தெரிஞ்சு வைச்சிருந்தார்… நீங்க என்னெ மன்னிக்கிறதாகச் சொல்றதுதான் உங்களை நீங்களே ஏமாத்திக்கிறது. அந்தக் காரியம் என் குற்றம்னு நெனச்சா என்னைத் தண்டிக்க வேண்டியதுதானே நியாயம்?… உங்களாலே என்னைத் தண்டிக்க முடியாது… உங்க நெஞ்சுக்கு அவ்வளவு உரம் இல்லே. அந்தக் குற்றத்துக்கு யாரையாவது தண்டிக்காம இருக்க உங்களாலே முடியாது. அதனாலேதான் நீங்க மாமாவைத் தண்டிக்கிறீங்க. தாய்கிட்டே அடி வாங்கின குழந்தை தம்பியைக் கிள்ளிவிடற மாதிரி, நீங்க என்னைத் தண்டிக்காதது உங்க பலவீனம்; சுயநலம். இல்லாவிட்டாலும் நாம் சேர்ந்து வாழற வாழ்க்கையே நம்ம ரெண்டு பேருக்குமே ஒரு தண்டனைதான் இனிமேலே… எனக்கு உங்க மேலே கொஞ்சமும் வருத்தமில்லே. உண்மை சுடும்னு சொன்னாரே, அந்தப் பெரியவர் கிட்டேப் போயி, ‘உண்மை சுடுகிறது மட்டுமில்லே – சிலரைச் சுட்டுப் பொசுக்கிடும்கிற உண்மை எனக்குத் தெரியாம ஒருத்தரைச் சுட்டு எரிச்சுட்டு வந்துட்டேன்’னு மன்னிப்புக் கேட்டுக்க நான் போறேன்…” என்று சொல்லிவிட்டு, அவரது பதிலைக் கூட எதிர்பாராமல், மாடிப்படிகளில் அவள் இறங்கிச் செல்வதைப் பார்த்தவாறு மௌனமாக நின்றார் பரமேஸ்வரன்.
‘உண்மையைத் தேடியா? அது எதுக்கு நமக்கு? அது சகலமும் துறந்த துறவிகளின் தொழிலாச்சே!” என்ற சோமநாதனின் விளையாட்டான வார்த்தையை எண்ணிப் பார்த்து – அதன் அர்த்தங்களை யோசித்தார் பரமேஸ்வரன்.
அது யோசனையல்ல, அது ஒரு பிரமிப்பு. பிறகு தனக்குள்ளாக லேசாகப் புன்னகை செய்து கொண்டார். அது புன்னகையல்ல, அது ஒரு சரணாகதி.
தடதடவென மாடிப்படிகளில் இறங்கி ஹாலுக்குள் ஓடிவந்தார்.
அப்போது கோதை வெளிக் கதவருகே வந்து கம்பிக் கதவைத் திறந்து கொண்டிருந்தாள்.
“கோதை!” என்ற பரமேஸ்வரனின் தௌ¤வான குரல் கேட்டு அவள் திரும்பிப் பார்த்தாள்.
அங்கே…
சுவரில் மூளியாய் இருந்த அந்த இடத்தில் தனது வழிபாட்டுக்கும் மரியாதைக்கும் உரிய அந்தப் படத்தை எடுத்து மாட்டிக் கொண்டிருந்த பரமேஸ்வரன், அவளைத் திரும்பிப் பார்த்து மனம் திறந்த புன்னகை பூத்து நின்றார்.
தன் வாழ்க்கையின் அஸ்திவாரம் என்று அவர் கருதிய ஒரு பிரச்னையில் பொய்யுரைத்த சோமநாதனையே தன் வழிபாட்டிற்குரிய மேதையாக மீண்டும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியுமானால், அதே பிரச்னையில் உண்மையைக் கூறிய தன் அன்பு மனைவியை அவரால் துறந்துவிட முடியுமா என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *