உடைவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 1, 2022
பார்வையிட்டோர்: 3,636 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்த முறையும் பொருந்துவது போல வந்து பொருந் தாமல் அது நழுவிவிட்டது. அவன் மீண்டும் பழைய படி முயலத் தொடங்கினான். பழைய துணியைக் கிழித்து, இயந்திரத்தில் நீர் வரும் குழாயைப் பொருத்து மிடத்தில் சுற்றிவிட்டு, மிக மிக மெதுவாக மீண்டும் குழாயை இயந்திரத்தோடு பொருத்தத் தொடங்கினான். பொருந்து வதுபோல் அது இறுகி வந்தது. அசட்டுத் துணிச்சலில் அசைத்துப் பார்த்தான். இறுகியதாகவே பட்டது. மேலும் இறக்குவதற்கான சாவியை உபயோகித்து நெம்புகையில், படாரென்ற சத்தத்துடன் அது மீண்டும் கழன்று விட்டது.

நிதானமிழந்தவனாகக் கையிலிருந்த சாவியை ஓங்கி அந்தப் பொருத்து வாயில் ஓர் அடிவிட்டான். இவனை நிமிர்ந்து பயத்தோடு பார்த்தான். அடிபட்ட இடத்தில் நெளிவு ஏதாவது தென்படுகின்றதா என்பதாகத் தடவிப் பார்த்தான். இரக்கத்திற்குரியவனாகத் தன்னைச் சிலிர்த்து, மீண்டும் பழைய துணியைச் சுற்றிப் பொருத்தத் தொடங்கினான். பொருந்து வாயையும்…பொருத்து வாயையும் மெதுவாக… மெதுவாக…இணைக்க வாயோடு வாய் சேர்க்கையில், மெதுவே எட்டிப் பார்ப்பது போல் வெளிப்பட்ட கறுத்த வாசர் வெளியே விழுந்து உருண்டது. அதைப் பற்றிப் பிடித்து உள்ளே வைத்துப் பொருத்திச் சுழற்று கையில் அது இறுகுவதாகவே வந்து, தொடர்ந்த நெம் பலில் படாரெனச் சுழன்று கையை மீறி, இயந்திரத்தின் ஸ்ராண்டில் அடித்து உறுமியது.

‘என்னால் ஏலா’ தென்பதாகக் கையை உதறி நிமிர்ந்த இவனைப் பார்த்தான்.

கோபப் பார்வை;

வெறுப்பைக் கக்கும் பார்வை;

சலித்த பார்வை;

இரக்கத்தை வேண்டி நிற்கும் பார்வை;

‘நான் படும் கஷ்டமெல்லாம் உனக்குப் புரிகிறதா’ என்ற கேள்விப் பார்வை.

“நீ குளிக்கிற தெண்டால் வாளியாலை அள்ளிக் குளி; என்னாலை இந்தச் சனியனை ஸ்ராட் பண்ண ஏலாது”

இவன் ஒன்றும் பேசவில்லை. மௌனமாகவே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் இவனைப் பார்த்து விட்டு அந்தக் கண்களில் பாசம் மின்னுவது போல –

‘மீசை முளைக்காத பதினெட்டு வயது;

கருத்து உருண்டு வளர்ந்து –

இளமை காணத் துடிக்கும் உடற்கட்டு;

உதட்டில் கறுப்பு – இரகசியமாகச் சிகரெட் பிடிப்பதாலா?

மின்னல் காட்டும் ஒரு முரட்டு வசீகரத்தில்…”

…மீண்டும் முயலத் தொடங்கினான். வேகம் குறைந்த, எல்லைப்படுத்தப்பட்ட ஒரு நிதானத்தில், வாயோடு வாய் பொருத்தி, வெளியே எட்டிப்பார்க்கும் ‘வாசரை’ உள்தள்ளி மெதுவாக மெதுவாகச் சுழற்ற இறுகுவது போலவே வந்து, வழுக்குவது போலத் திடுக் கிட வைத்து, நிஜமாகவே இறுகி விட்டது. சாவியால் மெதுவே மெதுவே நெம்பி மேலும் இறுக்கியாகி விட்டது.

மகிழ்ச்சிப் புளகாங்கிதத்தில் இவனை நிமிர்ந்து பார்த் துப் புன்னகைத்தான். இவனிலும் மகிழ்ச்சியை எதிர் பார்த்தவன் சலனமற்ற இவன் நிலையைக் கண்டு வியப்படைந்தவனாய்ப் பார்த்தான். ‘நீ பாவந்தான் அண்ணா, அண்ணி வீட்டுப் பொதுக் கிணற்றில் சனி முழுக்குச் சண்டையிலிருந்து தப்பிக்கத்தானே இங்கு ஓடி வருகின்றாய்”

“மிசினுக்குத் தண்ணிவிட ஒருக்கால் பிடியுங்கோ அண்ணை”

“நான் வெள்ளைக் கொலர்ச் சட்டை வேலைக்காரன், காலமை எழும்பி மத்தியானச் சாப்பாட்டுப் பொதியோடு பஸ்ஸில் போவேன்: ஓவ்வீசிலை கதிரையில் இருந்து வேலை செய்யேக்கை விர் விர்ரென்று மேலே ‘Fan’ சுத்தும்; ஆட்கள் வருவினம்; போவினம்; சிரிச்சுச் சந்தோஷமாய்ப் பொழுது கழியும் – சந்தோஷமாய்ப் பொழுது கழியும் சிரிச்சுச் சிரிச்சு…ம்…”

இவன் கைபிடிக்கவே கொளக்குக் கொளக் கென்று, இயந்திரத்திலும், நீர் இழுக்கும் குழாயிலும் தண்ணீ ர் நிரம் பிற்று. ஏதேதோ தட்டி…. ஏதேதோ ஊற்றி, டுக்…டுக் கென்று. ஒருக்கால் விக்கி, ஒரே சுருதியில் இயந்திரம் ‘ஸ்ராட்’ ஆகிற்று.

அந்தச் சூழலிலேயே மகிழ்ச்சி களைகட்டிற்று. அடுத்த வீட்டுக் குழந்தை ராதா அள்ளிக் குளிப்பதற் கான சருவச் சட்டியுடன் நிர்வாணமாக ஓடி வந்தாள். குழந்தையின் கண்களில் எட்டி எட்டிப் பார்த்துப் பு மை காணும் ஆவல். சோதி ஏதோ பாடலை முணுமுணுத்த வாறு மாற்றுத் துணியைத் தோளில் போட்டுக் கொண்டு வந்தான். கீதா பாடசாலை ‘யூனிபோமை’ சலவை செய்ய ஆயத்தமானாள், வதனி முழுகுவதற்காகத் தலையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டாள்.

ஆசுவாசத்துடன் நிமிர்ந்து பார்த்த அவன் மீண்டும் இயந்திரத்தைக் கூட்டினான்; குறைத்தான்; நீரிழுக்கும் குழாயைப் பிடித்து மெதுவே குலுக்கினான்; ஏற்றமும், இறக்கமுமான சுருதியில் இயந்திரம் சத்தமிட்டுக் கொண் டிருந்தது . தாரையாய்ப் பீச்சும் நீரைக் காணோம். குழந் தையின் மூத்திரம் போல முதலில் வந்து பிறகு அதுவும் நின்று விட்டது.

இயந்திரத்தினுள் தண்ணீர் அள்ளி ஊற்றி, அதைக் கூட்டிக் குறைத்து பொருந்து வாயை மெதுவே குலுக்கி குலுக்கி, அவன் பம்பரமாக இயங்கினான்.

தாரையாய்ப் பீச்சும் நீரைக் காணோம்.

அவன் சோர்ந்து போனான்.

எல்லோரையும் பரிதாபமாகப் பார்த்தான்.

“இதோடை மாரடிக்கேலாது; உங்கடை உங்கடை அலுவலைப் பாருங்கோ “

இயந்திரத்தின் சுருதியே பெரியதாய் ஒலிக்கும் மௌனத்தில் மனங்கேளாதவனாக மீண்டும் ஒவ்வொன்ருகப் பார்த்துக் கொண்டே வந்தான்.

பொருத்து வாயும், பொருந்து வாயும் இணையும் இணைப்பின் அருகில் சொட்டுச் சொட்டாக நீர் ககிந்து கொண்டிருந்தது.

– 1977, சாதாரணங்களும் அசாதாரணங்களும், முதற் பதிப்பு: அக்டோபர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *