இலையுதிர் காலம்….!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 7, 2024
பார்வையிட்டோர்: 1,627 
 
 

“அம்மா! உங்களைப் பாக்க உங்க  மகன் நந்தன் வந்திருக்காரு… இங்க வரச்சொல்லவா..?”

பூர்ணிமா  முகம் பிரகாசமானது… அதேசமயம்  ஒரு மனதுள் ஒரு கேள்வி.. திடீர்னு வரமாட்டானே! சரியா அட்டவணை போட்டமாதிரி மாசத்துல முதல் ஞாயிற்றுக்கிழமை  பத்துமணிக்குத்தானே அவனோட விசிட்டிங் டைம்… அவனாக தீர்மானித்ததுதான்.. இங்கே அப்படி எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது..

“பரம்.. ! என்னோட பையன்  நந்தன் வந்திருக்கான்.. உங்களுக்குத்தான் அவனைப்பத்தி எல்லாமே தெரியுமே..! உங்களையும் மீட் பண்ணின மாதிரி இருக்கும்னுதான் இங்கேயே வரச்சொல்லிட்டேன்… ஹோப் யூ டோண்ட் மைண்ட்…”

“என்ன பூர்ணிமா..?  நாட் அட் ஆல்..!நானும் அவனப்பாக்க ஆசையா காத்துகிட்டிருக்கேன்..”

மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும்படி கூறினார் பரம்… அவர் அதிர்ந்து பேசி அவள் பார்த்ததேயில்லை..

தூரத்திலிருந்து கையாட்டியபடியே வந்தான் நந்தன்..அப்படியே அம்மாவின் வார்ப்பு…

அருகில் வரவர நடை துரிதமானது.

வழக்கமான அதே இறுகிய தழுவல்…

“நந்தன்! மீட் மை ஃப்ரண்ட் பரம்… அவரும் என்ன மாதிரி இங்கே ஒரு சீனியர் சிட்டிசன்..”

பரம் எழுந்து நின்றார்..

நந்தன் அவர் பக்கம் திரும்பாமலே,

“அம்மா.. நான் உங்க கிட்ட தனியா பேசணும்.. உங்க  அப்பார்ட்மென்ட்டுக்கு  போனா நல்லாயிருக்கும்னு நெனைக்கிறேன்…”

பூர்ணிமாவுக்கு முகம் கறுத்து விட்டது.. தன்னை தர்மசங்கடத்தில் மாட்டிவிட்ட நந்தன் மேல் எரிச்சல் வந்தது…

அவன் இதுபோல யாரிடமும் மரியாதைக்குறைவாக நடப்பவன் இல்லை… அதுவும் தனக்கு மிகவும் நெருக்கமான  பரமிடம் இத்தனை அலட்சியம் காட்டியதை அவளால் ஜீரணித்துக்கொள்ள  முடியவில்லை…

“நந்தன்… இவர்…”

அவளை முடிக்கவிடாமல்…,

“சாரி… அப்புறம் பார்க்கலாம்…” என்று கூறியபடி அம்மாவின் கைகளைப் பிடித்து இழுக்காத குறையாக அங்கிருந்து நகர்ந்தான்..

பரமைத் திரும்பிப்பார்த்த பூர்ணிமா அவர் முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் எழுந்து போவதை  இயலாமையுடன்  பார்க்கும் தன்னை நொந்து கொண்டாள்.

நந்தனுடன் பேசக்கூட தோன்றவில்லை.

“சாவிய குடு. நான் திறக்கிறேன்…”

நந்தன் கதவைத் திறந்தான்.

“அம்மா..சூடா ஒரு கப் காபி கிடைக்குமா..? “என்றவன் ஒன்றுமே நடக்காத மாதிரி அங்கிருந்த சோஃபாவில் சாய்ந்து கொண்டு , டி.வி. ரிமோட்டைக் கையில் எடுத்தான்..

பூர்ணிமாவின்  மனதில் ஆயிரம் கேள்விகள்.? நந்தனா இப்படி தரக்குறைவாக நடந்து கொண்டான்…?
பொறுக்க முடியாமல் கேட்டுவிட்டாள்…!


“நந்தன்…!  பார்க்கில  என் நண்பர அலட்சியப்படுத்தினது  போதாதுன்னு இங்க எங்கிட்டயும்  அலட்சியமா நடந்துக்கிறதுக்கு காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா..? அவசரமா தனியா பேசணும்னு  சொன்னியே…இப்ப  ஒண்ணுமே சொல்லாம டி.வி.பாக்கறதுக்குத்தான் இத்தன அவசரமா…?

சாரி நந்து…உங்கிட்டேயிருந்து இத நான் எதிர்பார்க்கல… ஐயம் வெரி மச் ஹர்ட் பை யுவர் பிகேவியர்…!”

நந்தன் எழுந்து நின்றான்..

“அம்மா உங்கிட்டேயிருந்து என்ன ரெஸ்பான்ஸ் வருதுன்னு தெரிஞ்சுக்கத்தான் சும்மாயிருந்தேன்.ஐயம் ஆல்சோ டீப்லி ஹர்ட்…!”

பூர்ணிமா வாயடைத்து நின்றாள்..

நந்தன் இப்படி பேசி கேட்டதேயில்லை..

“நந்து..! நான் உன்ன காயப்படுத்திட்டேனா…? சொல்லு நந்து..? எப்போ..? எப்படி…?”

“நாட் டைரக்ட்லி…பட் இன்டைரக்ட்லி..!”

“கொஞ்சம் புரியும்படி சொல்லக்கூடாதா…?”

“அம்மா.. இப்படி பக்கத்துல வந்து உக்காரு… நான் சொல்லப்போறத கோபப்படாம  கேப்பியா ஹம்…?”

“உம் “என்றாள் சுரத்தில்லாமல்…

அவள் கோபப்படாமலிருப்பதால்தானே அவளை எல்லோரும் ஆட்டிப்படைக்க முடிகிறது…!


பூர்ணிமா தற்போது வசிக்கும் மூத்தோர் குடியிருப்புக்கு வருவதற்கு முன்னால் நுங்கம்பாக்கத்தில் இருந்த, அழகிய தோட்டத்துடன் கூடிய மூன்று கிரவுண்டில் அமைந்த தனது சொந்த வீட்டில்தான் வசித்து வந்தாள்..

இப்போதெல்லாம் முதியோர் இல்லங்கள் ‘சீனியர் சிட்டிசன் ஹோம்’ அல்லது ‘மூத்தோர் குடியிருப்பு’ என்ற ஃபான்சி பலகையைத்தாங்கி வந்தாலும் வயதானவர்கள் தனியாக வசிக்கும் நிலைமைதான்.

அவளாக விரும்பி வரவில்லை.. சூழ்நிலை அப்படி அமைந்து விட்டது..

அவள் கணவன்  இரயில்வேயில் பெரிய வேலையிலிருந்ததால் நகரின் வசதி படைத்த இடத்தில் வீடு கட்டிக்கொள்ள முடிந்தது.அவளும் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று பல்கலைக்கழக பேராசிரியையாய் ஓய்வு பெற்றவள்.

இருவருக்கிடையே கருத்துப் பரிமாற்றம் நிகழ்வதே அபூர்வம்.. மாலையில் கண்டிப்பாக நகரின் புகழ் பெற்ற  ஏதாவது ஒரு கிளப்பில் அவரைக் காணலாம்.. அவள் நிச்சயம் ஏதாவது ஒரு கலைவிழாவில்…

குழந்தைகள் நந்தனும் ,  பத்மினியும் அவரவர் குடும்பம் என்று ஆனபின் , கணவனின் மறைவுக்குப் பின் பூர்ணிமா தனித்திருப்பதில்  அதிருப்தி அடையவில்லை.. அவளுக்கு துணையான புத்தகங்கள் அவளை கைவிடவில்லை.. கட்டுரைகள், கதைகள் எழுதுவது , நல்ல கலைநிகழ்ச்சிகளுக்கு தோழிகளுடன் செல்வது அவளுக்கு போதுமானதாக இருந்தது..

ஆனால் அதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்களே அவளுடைய குழந்தைகள்…


“அம்மா.. நானும் பத்மினியும் பேசிட்டுத்தான் இருக்கோம்..நாங்க உங்க பக்கத்தில இருக்கமுடியலையேன்னு வருத்தமாத்தான் இருக்கு.. உங்களுக்கும் நிரந்தரமா எங்களோட வந்து இருக்க விருப்பமில்லைன்னு பலமுறை சொல்லியிருக்கீங்க.

இவ்வளவு பெரிய வீட்ட தனியா நிர்வாகம் செய்யறது போகப்போக மிகவும் சிரமமா இருக்கப் போவது . அதுவுமில்லாம இது ஒரு டெட் இன்வெஸ்ட்மென்ட்டா போறத நீயும் விரும்பமாட்ட..

இப்போ உனக்கு இரண்டு ஆப்ஷன் இருக்கு…இத ரியல் எஸ்டேட்டுக்கு குடுத்திட்டு உனக்கு ஒரு ஃபிளாட் , உனக்கு பிடிச்ச மாதிரி எடுத்துக்கோ.. உனக்கு வேண்டிய பணத்த நீயே ஃபிக்ஸட் டெபாசிட்ல போட்டுக்கோ.மீதிப்பணத்த நானும், பப்பியும் பிரிச்சுக்கறோம்.எனக்கு கொஞ்சம் பிஸினஸ் கமிட்மென்டஸ் இருக்கு…”

“இன்னொரு ஆப்ஷன் என்ன நந்து?”

“நிறைய ப்ரீமியம் சீனியர் சிட்டிசன் கம்யூனிட்டி லிவிங் பிரபலமாகிக்கிட்டு இருக்கு..உனக்கு முழு சுதந்திரம்..! விரும்பியபடி வாழ்க்கை…நிறைய நண்பர்கள்…யூ வில் ரியலி எஞ்சாய்”

இரண்டில் ஒன்று…! இரண்டாவதை ஏற்றுக்கொண்டு  இங்கு வந்து மூன்று வருடங்களாகிவிட்டது..

நந்துவும் பப்பியும் சொல்லிவைத்துக் கொண்டு மாறி மாறி வந்து பார்த்தார்கள்.

அவளுக்கும் இந்த வாழ்க்கைப் பிடித்துப்போனதா அல்லது பழகிப்போனதா தெரியவில்லை…!

எல்லாம் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது.

இன்றைக்கு என்ன வந்தது நந்துவுக்கு..?


நந்தன் பக்கத்தில் வந்த அமர்ந்து கொண்ட பூர்ணிமா , அவன் கைகளைத் தனதுடன் கோர்த்துக் கொண்டாள்.

“நந்து..எப்படிப்பா இருக்க…? அம்மா உன்ன காயப்படுத்திட்டேன்னு நீ சொன்னத என்னால  நம்பவே முடியல. சொல்லு நந்து! என்ன நடந்தது…?”

“அம்மா…!  இப்போ நான் சொல்லப்போற விஷயத்த நீ எப்படி ஏத்துக்கப்போறன்னு தெரியல… நானும் , பப்பியும் ஒரு மாசம் இதப்பத்தி நல்லா யோசிச்சுதான்   உங்கிட்ட பேச தீர்மானம் பண்ணினோம்…நீ இங்க சந்தோஷமா இருக்கியா…?”

பூர்ணிமா மகன் முகத்தை உற்றுப் பார்த்தாள்.. அவனும் , பப்பியும்  ஒவ்வொரு முறையும் கேட்கும் கேள்விதான்.. ஆனால் இன்று ஏன் அவள் காதில் வித்தியாசமாய் ஒலித்தது…? அதில் ஒரு அவநம்பிக்கை  தொனி கூடவே கலந்து…?”

“நந்து.. எப்பவும் சொல்ற அதே பதில்தான்..ரொம்பவே மகழ்ச்சியா இருக்கேன்..உங்களையெல்லாம் மிஸ் பண்றேன்கிற  ஒண்ணத்தவிர…! அதுவும் பரமோட நட்பு கிடச்சதுக்கப்புறம்  என்னோட சந்தோஷத்துக்கு அளவேயில்ல”

“ஏம்மா…உங்களுக்கு வேற நண்பர்கள் யாரும் கிடையாதா..?”

“நந்து…! உங்கம்மாவப் பத்தி உனக்கு நல்லாவே தெரியும்.. இதுவரைக்கும் நான் நண்பர்களத்தான் சம்பாதிச்சிருக்கேன்… யார் மேலையும் எந்த குறையும் கண்டதில்ல . 

பரம் எனக்கு  எல்லோரக்காட்டிலும் நெருங்கிய நண்பராகக் காரணம் அவருக்கும் எனக்கும் பாலமா அமைந்த  அறிவு தாகம்…புதிது புதிதாய் கத்துக்கிற ஆர்வம்.ஒரு தேடல்…!

எல்லாத்துக்கும் மேல அவரோட அமைதியான , ஆரவாரமில்லாத பேச்சு…!

“அம்மா ! நான்  கேக்கணும்னு  நினைச்ச பாதிக் கேள்விக்கான பதில  நீயே சொல்லிட்ட.. ஆனாலும்  என் மனசுல உறுத்திகிட்டு  இருக்கிற  சில  விஷயத்தைப் பத்தி பேசியே ஆகணும்…உன் மனசு  நோகும்னு எனக்கு தெரிஞ்சும்கூட…”

பூர்ணிமாவுக்கு இன்று எல்லாமே புதிதாய் தெரிந்தது…


“ம்ம்ம்…!”என்றாள் பூர்ணிமா அசுவாரசியமாக…

“நம்ம அப்பாவோட தூரத்து சொந்தம்னு சொல்லிட்டு ஒரு அம்மா..உன் வயசுதான் இருக்கும்…பாமான்னு பேரு…இங்க இருக்காங்கன்னு  சொல்லியிருக்க இல்ல…?”

“ஆமாம்..வந்த புதிசில பாத்திருக்கேன்..இப்போ மீட் பண்ணி ரொம்ப நாளாச்சு…”

“அவுங்க இரண்டு மாசம் முன்னாடி அவுங்க பேத்தி  மேற்படிப்பு விஷயமா பப்பியப் பாக்க வந்திருந்தாங்க…”

“குட்…பப்பி நல்லா கெய்ட் பண்ணுவாளே..”

“ம்ம்ம்…பேச்சுக்கு நடுவில அவுங்க சொன்ன ஒரு விஷயம்….!”

“என்ன தயக்கம்..? சொல்லு நந்து…?”

“நீங்க இப்போ ரொம்பவே மாறிட்டீங்களாம்…! யாரோடையும் பேசறதில்லையாம். நீங்க சொன்னீங்களே அந்த பரம்..! அவரோட மட்டும் மணிக்கணக்கில பேசிட்டிருக்கீங்களாம்..!”

பூர்ணிமா புன்னகைத்தாள்..

“ஆமா..நந்து..! அவங்க சொன்னது அத்தனையும் நிஜம் ..””ஸோ வாட் நந்து..?”

“அம்மா ! அவுங்க பேசினது நல்ல எண்ணத்துல இல்லைன்னு புரியலையா…?”

“நந்து ! அவுங்க அறியாமையில பேசியிருந்தாலும் , அவமானப்படுத்த பேசியிருந்தாலும் எனக்கு அதனால எந்த வித பாதிப்பும் இல்ல..

பொது இடத்துக்கு வந்திட்டா இந்த விமர்சனத்துக்கெல்லாம் பயப்படத் கூடாது.
நீ என்ன இங்க சேர்த்தபோது என்ன சொன்ன தெரியுமா…?

“இங்க உனக்கு முழு சுதந்திரம்..! விரும்பியபடி வாழ்க்கை…நிறைய நண்பர்கள்…யூ வில் ரியலி எஞ்சாய் .மறந்து போச்சா…?

ஆனா ஒரு விஷயத்தில உன்ன நான் ரொம்பவே பாராட்டணும்..மத்தவங்கள மாதிரி முதுகுக்குப் பின்னால பேசாம நேருக்கு நேர் கேக்கற தைரியத்த நான் உனக்கு தந்திருக்கேன்னு நெனச்சு பெருமையா இருக்கு….”

“அம்மா..நீ இங்க இருக்க வேண்டாம்.. வெறும் வாய மெல்றவங்களுக்கு அவலா ஏன் இருக்கணும்..நீ பேசாம எங்கூடயும் , பப்பிகூடயும் இருக்கலாம்…”

“கமான் நந்து…!  அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வராத…உணர்ச்சிவசப்படாம நான் சொல்றத பொறுமையாக் கேளு…


மூணு நாலு வயசு சின்னப் பசங்களப் பாத்திருக்கியா..?   பையன் , பொண்ணுன்னு வித்தியாசமேயில்லாம விளையாடுவாங்க…சேந்து. படுத்து , சேந்து சாப்பிட்டு  அவுங்க உலகமே கள்ளம் கபடம் இல்லாது..எதையுமே எதிர்பார்க்காத நட்பு…

வயதானவங்களும் அந்த குழந்தைகள் மாதிரிதான்…

நானும் பரமும் எண்பதுகள்ள இருக்கோம்.. அவர் ஒரு ஆண் என்ற எண்ணம்கூட என் மனசுலே ஏற்பட்டதேயில்ல… இந்த புனிதமான உறவ கொச்சப்படுத்தி இங்க இருக்கறவங்களே  பேசும்போது   மனசு வலிக்குது…

குழந்தைங்க வளர்ந்து  பதிமூணு, பதினாலு வயசில  அவுங்க எதிர்பார்ப்புகளும் தேவைகளும் மாறும்..அது அந்த பருவத்துக்கே ஏற்படும் இனக்கவர்ச்சி..

எந்த பெற்றோரும் பதிமூணு வயது பெண்ணையும், பையனையும் ஒரே அறையில தனியா விடமாட்டாங்க…அது வளர்ந்த நாடாயிருந்தாலும் சரி..

நான்கூட உன்ன பெண்களோட பழகவிட்டாலும் , அறைக்கதவ மூடக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டிருக்கேன்…

நீ வெளிநாட்டுக்கு இரண்டு வருஷம் வேலைக்குப் போனபோது , அங்க ஒரு பொண்ணு கூட ‘லிவிங் ரிலேஷன்ஷிப்புல’ இருந்ததும் எனக்குத் தெரியும்…”

நந்தனின் முகம் வெளிறியது..

“அம்மா…?” என்று எழுந்து நின்றவனை,

“இட்ஸ் ஓகே… அதெல்லாம் முடிச்சு போன கதை…அப்போ நான் உன்னக்கூப்பிட்டு ஏன் கண்டிக்கல தெரியுமா…? இருபது வயதுக்கு மேல் சொந்தக்கால்ல நிக்கிற உங்களுக்கு  விளைவுகளப்பத்தி ஒரு தெளிவான சிந்தனை இருக்கும்னுதான்…”

“அம்மா ! நீ எவ்வளவு தெளிவா இருக்க..! எங்களையெல்லாம் நல்லா புரிஞ்சு வச்சிருக்கிற உன்னோட உணர்வுகள நான் கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம… நான்தான் உன்னக் காயப்படுத்திட்டேன் அம்மா…! ஐயம் ரியலி அஷேம்ட் ஆஃப் மை பிகேவியர்…!”

“நந்து நாங்கள்ளாம் இப்போ வாழ்க்கையோட கடைசி படிக்கட்டுல நின்னுகிட்டு இருக்கோம்..

இலை , பூ , காய் , கனிகளையெல்லாம் உதிர்த்துவிட்டு வெறும் கிளைகளாக..!

செடிகள் குருத்தா இருக்கும்போது அதைத்தேடி வண்ணத்து பூச்சிகளோ வண்டுகளோ வரது கிடையாது.

ஆனா பூத்துக் குலுங்கும் போது அதச் சுத்தி எத்தனை வண்டுகள்.. பறவைகள்..!

மறுபடி இவைகளெல்லாம் உதிர்ந்து குச்சிகளானதும் , எல்லா மரமும் ஒண்ணாத்தான் தெரியும்..

இதில் ஆண் என்ன ? பெண் என்ன ?

மாறவேண்டியது நம்ம கண்ணோட்டம்தான்…! நான் இந்த இடத்தை விட்டு எங்கேயும் வரமாட்டேன்..

உன்முடிவு என்னன்னு நீ தீர்மானம் பண்ணிக்கோ…!”

“அம்மா! வாங்க..இப்பவே போய் உன் நண்பர பாத்து ஒரு மன்னிப்பு கேட்கணும்…!”

“அதுக்கு அவசியமே இல்ல நந்து.. அவர் அந்த சம்பவத்த அப்பவே மறந்திருப்பார்…!”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *