இரும்புத் திரைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 20, 2022
பார்வையிட்டோர்: 4,058 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘நூறு பவுன் நகையும் ஒரு லட்சம் ரொக்கமும், வீடு, ஒரு கார், கொஞ்சம் விளைநிலம் இதெல்லாம் வரதட்சணையா கொடுக்க தயாரா இருந்தா என் பையனை உங்க பெண்ணுக்கு பேசி முடிச்சிடலாம் எதுக்கும் நீங்க யோசிச்சு பதில் சொல்லுங்க, அப்ப நாங்க போய்ட்டு வர்றோம் ‘ ஜுலைகா ஆணித்தரமாகப் பேசினாள்.

தாயாரின் இந்த விபரீத வரதட்சணை ஆசை கபூருக்கு வெறுப்பைத் தந்தது கபூர் எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு இரண்டு வருடமாய் சொந்த ஊரிலேயே கிளினிக் வைத்து நடத்திக் கொண்டிருப்பவன்.

அவனுக்கு பெண் பார்க்கும் படலம் ஒரு வருடமாய் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்னும் முடிந்த பாடில்லை. எல்லாம் வரதட்சணை ஒத்துவரர்த காரணம் தான்!

பொறுத்துப் பொறுத்து பார்த்த கபூர், தாயாரிடம் ‘என்னம்மா நீங்க செய்யறது கொஞ்சங்கூட நல்லா இல்லே, இப்படி நீங்க பணம் பணம்னு அலைஞ்சி பொண்ணு பார்த்தீங்கன்னா? இந்தக் காலத்துலே நிச்சயம் பொண்ணு கிடைக்கப் போறதில்லே’ அப்படியே நீங்க கல்யாணம் பண்ணி வெக்க நினைச்சாலும் நான் பண்ணிக்க போறதில்லே.

‘நீ எல்லாம் பேசுவேடா, உன்னை நான் பெத்து ஆளாக்கி படிக்க வெச்சதுக்கு? நீ இன்னும் பேசுவே ‘உன்னெ டாக்டரா ஆக்குறதுக்கு நாங்க எவ்வளவு செலவு செஞ்சிருப்போம்! அதையெல்லாம் நீ யோசிச்சுப் பார்த்தா இப்படியெல்லாம் பேசுவியா? ‘ ஜுலைகாவின் அர்த்தமற்ற வார்த்தைகள் கபூரின் நெஞ்சை சுட்டது.

‘நீங்க எவ்வளவோ சிரமப்பட்டு பல ஆயிரங்களை செலவு செஞ்சிதான் என்னெ படிக்க வெச்சிருக்கீங்க. அதுக்காக அந்தச் செலவையெல்லாம் பெண் வீட்லே வசூல் பண்ணனுமா.’ கோபமான வார்த்தைகள் கபூரிடமிருந்து வெளிவந்தது.

‘எங்களுடைய கஷ்டங்களையெல்லாம் புரிஞ்சுக்காம நீ இப்படியெல்லாம் பேசறியே’. ஜுலைகாவின் வார்த்தைகள்.

‘உங்களுடைய கஷ்டங்களையெல்லாம் போக்கத்தானே நான் கிளினிக் வெச்சு நடத்தி சம்பாதிச்சுக் கொடுத்துக்கிட்டிருக்கேன்.’ கபூரின் வீரிய வார்த்தைகள்.

‘இதுக்கு மேலே உன் இஷ்டம்.’

ஜுலைகா இதற்கு மேல் மகனிடம் எதுவும் பேசவில்லை.

கபூர் நீண்ட நேரம் குழப்பநிலையில் ஆழ்ந்திருந்தான். வரதட்சணையுடன் கல்யாணம் செய்து கொள்ள அவனுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை

பிறகு முடிவுக்கு வந்தவனாய், கடைத் தெருவிற்கு சென்றான், வரதட்சணை ஒழிப்பு இயக்கத்தின் மூலம் திருமணம் செய்து கொள்ள எண்ணி!

– நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!, முதற் பதிப்பு: 2005, மல்டி ஆர்ட்ஸ் கிரேஷன்ஸ், சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *