இரட்டைக் காளை மாட்டுவண்டி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 12,019 
 
 

அவனுக்கு இரட்டைக் காளை மாட்டு வண்டியை அதிகம் பிடிக்கும். காரணம், அதில் ஒரு காளை மற்றொரு காளைக்குப் போகுமிடமெல்லாம் வழித்துணையாகக் கூடவே வருவதில் ஒரு ஆறுதல். அவனுடைய மதத்தின் மீது அவனுக்கு நிறைய கேள்விகள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. யாரிடம் கேட்பது? ஓரினச் சேர்க்கையாளர்களை அவன் சார்ந்த மதம் கொடூரமாகத் தாக்குகிறது. அவன் யோசித்துப் பார்க்கிறான். லூத் நபியின் சந்ததியினர் அழிக்கப்பட்டுவிட்டார்களா? இல்லவே இல்லை. அவர்கள் அதிகமாகிக்கொண்டேயிருக்கிறார்கள். நாளும் பொழுதும் அடுக்குகளாய் . . .

புத்தகத்தில் அடுக்கிவைக்கும் உருவங்களைப் பிடித்து வருபவன் சில நாட்களாக அவனுடைய நண்பனாகியிருந்தான். அவன் பிடித்து வைத்துள்ளவற்றைப் பிடிக்கவில்லை என்று யாரும் சொல்லத் தயாரில்லை. அவனின் கோபங்கள் இழந்த அடிமைத்தனத்தை உயிரூட்டத் தூளிகளில் கனவுகளாகப் பதுக்கிவைத்திருந்தான். கலகக்காரர்களின் எழுத்துகள் வளைந்து மேகங்களில் காணாமல்போன சுவடுகளைத் தேடும் மலைக்குகைகளின் பாதைகளாகப் படுத்துக்கிடக்கும் இறுக்கமான பாறைகளில் மின்னிக்கொண்டிருந்தன; சேகரித்த கனவுப்பொதிகள். அவனுடைய மனைவியின் தம்பி ஒரு நாள் மீசையை எடுக்கத் தயாராகிக்கொண்டிருந்தான். குறிப்பிட்ட நாளில் மீசையை எடுத்துவிடுவதை விழாவாகக் கொண்டாட முடிவெடுத்திருந்தார்கள். அந்த நாளில் அவனைப் பிடித்துவைக்கச் சிலரும் அவனுடைய மீசை பறிபோவதைப் பார்க்கப் பலரும் ஒன்று சேர்ந்தார்கள். அந்தக் கூட்டத்திலிருந்து சிலரைப் பிடித்துப் புத்தகத்திலடைக்க வேண்டுமென்று அவனுக்கும் உருவங்கள் பிடிக்கும் நண்பனுக்கும் ஓர் ஒப்பந்தம் உருவானது. இந்த ஒப்பந்தம் உருவான நாளிலிருந்து, அவனுக்கும் மனைவி வீட்டாருக்குமிடையில் வார்த்தைப் பரிமாற்றங்கள் தொடங்கின. அவனுடைய மனைவி ஒப்பந்தத்தை விலக்கிக்கொள்ளக் கூடாதென்பதில் குறியாக இருந்தாள். அவள் தோழியின் அப்பா பச்சைமால், அவளுடைய ஜமாஅத் மையவாடியில் குழிவெட்டுவார். ஜமாஅத் மையவாடியின் மண்ணின் இறுக்கம் அவருக்கு அத்துப்படி. அந்தப் பாதையின் தொடக்கத்தில் நீரோடையாகப் போய்க்கொண்டிருக்கும் மேலாத்து நீரில் அவர் அன்று முகத்தையும் கைகால்களையும் கழுவிக்கொண்டிருந்தார். பாதையை அடைத்தபடி மம்மட்டியும் தகரவாளியும் கடவப் பெட்டியும் இருந்தன. எங்கு சென்றாலும் ஜனநாயகவாதிகள் அங்கீகரிக்க மறுக்கும் அழுக்குடல் முதிய பெண்கள் இருவரும் கைக் குழந்தையை இடுப்பில் சுமக்கும் இரு அரை நிர்வாணப் பெண்களும் அவளைக் கடந்து போய்க்கொண்டிருந்தனர். அவர்களின் பின்னே வந்துகொண்டிருந்த நாயின் வலது முன்னங்கால் நொண்டி நடப்பதற்குத் தோதுவாகத் தொங்கிக்கொண்டிருந்தது. ஈரம் இல்லாத காற்று சீறிக்கொண்டு உடங் காட்டுக்குள் காணாமல்போனது. இருட்டுப் புதருக்குள் மலைகளிலிருந்து யாரோ விரட்டிவிட்ட வெட்டுக்கிளிகள் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தன. ஆனால் அவனது மனநிலை வேறுவிதமாக இருந்தது. அதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. அவனுடைய மனைவி வாக்கப்பட்ட நாளிலிருந்து, அவன் எடுத்துக் கொடுத்த நாட்களையெல்லாம் மனைவி வீட்டார் இருட்டாக்குவதிலேயே கவனமாக இருந்தார்கள். ஏன் தெரியுமா? அவர்களுடைய வீட்டில் கழுதைப்புலியின் நடமாட்டம் ஆரம்பித்ததுதான் காரணம்.

கழுதைப்புலி கருவாட்டு மீனைக் காவல் காப்பதற்காக எழுத்துக்களைப் பிரசவிக்க மருத்துவமனையில் வருடக்கணக்கில் காவல் கிடந்தது. கருவாட்டுக்குக் கழுதைப்புலியின் வாயில் அகப்படுவதுதான் சொர்க்கம்போல் தெரிந்தது. கருவாட்டுப் பானையில் கருவாடு துர்நாற்றம் உண்டாக்கியதை அந்த வீட்டிலுள்ளவர்கள் வெறுத்தனர். அவனுடைய மனைவி கழுதைப்புலியின் நடமாட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தாள். அவளுக்குத்தான் தெரியும் கழுதைப்புலி உண்மையிலேயே கழுதைப்புலியல்ல, களவாணிப்புலியென்று. அவனுடைய மனைவி சின்னப்பெண்ணாக இருந்தபோது களவாணிப்புலி அரக்கப் பரக்க ஓடித் திரிந்து சாக்கடைகளில் பதுங்கிக் கிடந்ததாம். அப்போது ஊர் முழுவதும் துர்வாடை வீசிக்கொண்டிருந்ததாம். அவனுடைய மனைவியின் தந்தை கழுதைப்புலியின் களவாணித்தனத்தைப் பற்றி நன்கு அறிந்துவைத்திருந்தாராம். அதனால் கழுதைப்புலி அவருடைய வீட்டுக் கருவாட்டைக் குறிவைத்ததை எண்ணிக் கலங்கித்தான் போனார். கழுதைப்புலி கருவாட்டை விடாமல் பின்தொடர்ந்தது. கருவாட்டின் மேல் கழுதைப்புலியின் வாடை இன்னும் அதிகமாக வீசத் தொடங்கியது. கருவாடு, கருவாட்டுப் பானையிலிருந்து துள்ளிக் குதித்தால், கடற்கரை சமாதியில் இன்னும் அதிக சமாதிகள் அடுக்கப்பட்டிருக்கும் என்று சொல்லிச் சொல்லியே அவனுடைய மனைவியின் தந்தை பிடிவாதமாக இருந்தார். அவருடைய பிடிவாதத்தைத் தளர்த்த கழுதைப் புலி முயன்று வெற்றியும் பெற்றது. கழுதைப்புலி ஒரு நாள் கருவாட்டுப் பானைக்குள் நுழைந்து கருவாட்டைக் கவ்விப் பாய்ந்தோடிவிட்டது.

மணல் தேரியின் முட்புதர்களின் உலர்ந்த வாடையை முகர்ந்துகொண்டு ஒரு முதியவள் கைத்தடி ஊன்றி நடந்துபோய்க்கொண்டிருந்தாள். முகம் பார்க்கும் கண்ணாடிக்குள் அவன் தன் மூட்டைமுடிச்சுகளைத் திணிக்க முயன்றுகொண்டிருந்ததை அவள் உன்னிப்பாகக் கவனித்தாள். தளைகள் உடைத்துச் சிதறும் சங்கிலிகளின் தெறிப்புகள் கண்களின் காட்சிப்பரப்புக்குள் பாதங்களாக வரிசைப்படுத்தப்பட்டுக் கிடந்தன. எழுதிக் குவித்த சுடுகாட்டு வரலாறுகள் முகங்களைத் தொலைத்துவிட்டு முகட்டில் முகம் புதைத்து நிற்பதைப் பார்த்து அவன், தாழ்ந்த கூரையோலைக் குடிசையின் நிழலுக்குள் சாய்ந்துகொண்டு பரிதவித்தான். கழிவுகளை அள்ளும் கூடையில் குண்டியைத் தேய்த்து அள்ளிக்கொண்டிருந்த சிறுவர்களை இரண்டு செவலைப் பசுக்கள் விளையாட்டாகப் பார்த்தபடி நடந்து சென்றன. ஒரு மனநோயாளி, மர்ம உறுப்புவரை தெரியும் அழுக்குத் துணியைச் சுற்றிக்கொண்டு அவர்களைக் கடந்துபோனான். சிறுவர்களில் இரண்டு பேர் ‘டேய் . . . வாழைக்கா. . . டேய் வாழைக்கா’ என்று சத்தம் போட்டனர். மன நோயாளிக்குச் சிறுவர்களைப் பற்றிய பிரச்சினை இருந்தாலல்லவா அவர்களின் விளியைப் பொருட்படுத்துவான்.

கழுதைப்புலி இப்போதும் கள வாணிப்புலியாகத்தான் நடமாடிக்கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் கருவாடு, மனிதர்களை அடைத்துவைக்கும் அறையைத் தேடிப் போய்க்கொண்டிருக்கிறது. களவாணிப்புலி வேறு கருவாட்டுப் பானைகளில் முகத்தை நுழைத்து முத்தம் கொடுத்துக்கொண்டு அலைகிறது.

கோயில் முற்றத்தில் பூசாரி மந்திரம் ஓதிக்கொண்டிருக்க, உச்சாடனங்களை உன்னிப்பாகக் கவனித்தபடி சிலர் தங்களுக்குள் ஒழுங்கை அமைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். தொலைவில் தெரிந்த மினாராவின் ஒலிபெருக்கியிலிருந்து வந்துகொண்டிருந்த பாங்கொலியைக் காற்று மடைமாற்றிக்கொண்டிருந்தது. அவன் கழுதைப்புலியின் கழுத்தில் கயிற்றைக் கட்டி அதில் வளையத்தை மாட்டிவைத்தான். அது தூக்கிச்சென்று பதுக்கிவைத்தவற்றில் அவனுடைய மனம், பொருள் இழக்காத சலனங்களைப் பொய் என்று சொன்னது. கருவாட்டுப் பானை ஏதேதோ வேதனை விழுந்த நினைவுகளை இடித்துக் கொட்டி பயத்தால் சூழ்ந்தது. அழுகி நாற்றமடிக்கும் கருவாடு இருக்கும் பானை ஓரளவு அலங்காரத் தீண்டல் இல்லாத அழிவுகளை அறியாமலிருப்பது எந்த வகை நியாயம் என்று தெரியவில்லை. குழந்தைகளின் காற்றடைத்த பலூன்களைக் கயிற்றின்மேல் நடக்கும் எறும்புகள் உற்றுக் கவனித்தபடி போய்க்கொண்டிருந்தன. மேடைகளில் ஆடும் களனற்ற நாடகங்களை வெட்டரிவாளும் குத்தீட்டியும் சூலாயுதங்களும் கும்பிட்டு அழுகின்ற உணர்வூட்டம் பெற்றவனைக் காப்பாற்றவா போகிறது. வயல்வெளியில் குனிந்துகிடக்கும் பெண்களின் முகங்களைத் தேடிக்கொண்டிருக்கும் நெற்கதிர்களின் முலைகளை அரை நிர்வாணங்களின் துயரங்கள் சேகரித்துவைத்திருந்தன. நாற்காலிகளின் உடலைக் கீறும் கம்பிவலை அளிக்குள் அடைக்கப்பட்டுக் கிடக்கும் மனித எலும்புகளைக் காணச் சகிக்காத அவன், கைகளுக்குள் ஆசைகளை இளைப்பாற வைத்திருந்தான். பிரம்புக்கூடைக்குள் கரையைத் தொட முடியாத மீன்கள் குத்திக்கிட்டிருந்து கதைபேசிக்கொண்டிருந்தன. பிரம்புக்கூடையின் வேர்களில் ஈரம் கசிந்து மீன்களை ஆற்றுக்குள்ளேயே தங்கியிருக்க வலியுறுத்தியது. ஆற்றங்கரையில் விதைக்கப்பட்ட மீன் முட்டைகளை அவள் வாரியெடுத்து வீட்டின் புறங்களில் விசிறியடித்தாள். இவற்றையெல்லாம் கட்டை மதிலில் உடலை மறைத்துக்கொண்டு சிறுவன் ஒருவன் விழிகளில் பயத்தைத் திணித்தபடி மூச்சுவிட்டுக்கொண்டிருந்ததை அவன் கவனித்தான். நெற்குவியல்களில் தப்பியோடின அதிகாரமில்லாத மரக்கால்கள். அவர்களின் தினக் கூலியை வாங்கிப்போக பேன் பார்த்தபடியும் நேற்றைய கறிகளின் ருசி பற்றியும் சோற்றை நீறவைத்த வெயிலைப் பற்றியும் கனவுகள் சிதைந்த வயலோரங்களைப் பற்றியும் மனிதம்மாய்ந்த மயானங்களில் பழைய வாழ்க்கை மரணிக்காமல் எரிந்துகிடப்பதையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.

கழுதைப்புலியை ஒழுங்காக மேய்க்க விடாதது குறித்து மௌலவி, மேய்ப்பவனிடம் தொடர் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். அவனது வேட்டி ஓட்டைகளில் தொடையின் பகுதிகள் வெளியே அம்பலமாகிக்கொண்டிருந்தன. அட்டைகளில் அலங்கோலங்கள் தொங்குவதை மௌலவிகள் மற்றவர்களுக்குக் காட்சியாக்கிக்கொண்டிருந்தனர். அதைப் பார்ப்பதற்காகக் கூடியிருந்தவர்களிடம் முகத்தை முழங்கால்களில் புதைத்துக்கொண்டு, முதுகை பார்ப்பவர்களின் முகத்துக்கு நேரே வரிசைப்படுத்திவைத்திருந்தனர். பொருள்களின் விலையேற்றத்தையும் உணவில்லாத வயிறுகளின் இறப்புகளையும் அதிகமாக்கிக்கொண்டிருந்த ஆட்சியாளரின் மண்டை டிஜிட்டல் பேனரில் விலைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதனடியில் இன்னும் சில தலைகள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றை வாங்குவோரும் வகைக்கெடுக்காதவர்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தலையில் தகிடுதத்தங்களால் தங்கள் வாழ்வு சிரித்துக்கொண்டிருக்கிறது என்று அந்த டிஜிட்டல் பேனர் எதிரில் நின்று விளக்கமளித்துக்கொண்டிருந்தனர். சிறுவன் ஒருவன் சோற்றுத் தட்டில் கையைவிட்டு அளைந்தபடி இன்னொரு கையால் சோற்றுப் பருக்கைகளை வாரி எறிந்துகொண்டிருந்தான். பருக்கைகளைக் காக்கைகள் நான்முந்தி நீமுந்தி என்று போட்டி போட்டுத் தின்பதைக் கவனமாகப் பார்த்துக்கொண்டேயிருந்தான். ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்கும் அழகான வெளி அது. சிறுவர்களும் சிறுமிகளும் அதிகம்பேர் விளையாடிக்கொண்டும் பேசிக்கொண்டுமிருக்கும் சுதந்திர பூமி. திரிபோல் வானத்தில் மேகங்கள் சுருண்டு கிடக்க நேரம் இருட்டிக்கொண்டிருந்தது.

நீரைச் சுமக்கும் குழாய்களில் அவள் நீச்சலடித்துக்கொண்டிருந்தாள். அவனின் முரட்டுத்தனம் கோடாரி வெட்டுக்குள் அகப்படாமல் கிடந்ததை எண்ணி வருத்தப்பட்டுத்தான் ஆக வேண்டியிருக்கிறது. உப்பளங்களில் கூட்டி அள்ளி எடுக்கும் உப்புப்பரல்களின் சுவையை முகர்ந்தபடி நிற்கும் சிலைகளைத் தடவிப் பார்க்கும் பிஞ்சு உள்ளங்களின் வியர்வையைக் குடித்துச் சிதறிக் கிடக்கும் ஓலைப் பெட்டிகளும் தூக்குப் பாத்திரங்களும் வரலாற்றின் வலியை மீட்டெடுக்க ரணங்களாகிக்கொண்டிருந்த காலைப்பொழுது அது. உடைந்த சுவர் இடுக்கிலிருந்து எட்டிப் பார்க்கும் முகத்தில் உயிர் போராட்டத்தின் அழியாத அமைதியும் கீறல்களும் முதன்மைக் குற்றவாளிகளாக உட்கார்ந்திருந்தன. சுவாசிக்கும் நெஞ்சுகள் இறந்துபோகத் தொடங்கியிருந்தன. ஆவிகள் எரிந்து, சொற் கூட்டங்களில் ரத்தம் கக்கிக்கொண்டிருந்த இரவின் பிம்பங்களில் பழகிய வாழ்க்கையின் வடிவங்களைத் தொகுத்துக் குறியிட்டுக்கொண்டிருந்தன. மனச்சோர்வின் முதிர்ச்சிக் குறைவான மாறுபாடு அவனின் விதிமுறைகளுக்கு மிக விரைவில் காணும் திருவிழாக்கால முறுக்கங்களாக அமைந்துவிடுகின்றன. ஊர்வலங்கள் எரித்த எண்ணிக்கையை பறவைகள் மலையில் வெறுமையாகத் தொடுதலில் அடங்குமாறு சிறிய கற்களை வீசிய தரையில் குழிகள் இருப்பதாக எழுத்து மூலம் ஒப்புதல் கொடுக்கப்பட்டது.

பொதுமருத்துவமனையின் செவ்வக அறைக்குள் படுக்கவைக்கப்பட்ட பரிதாபங்களின் நொந்த உடல்கள். அந்த அறையின் எதிரில் ஆட்சியாளர் கைகூப்பிச் சிரித்துக்கொண்டிருக்கும் தலை. வங்கியின் கடன் வழங்கும் பிரிவுகளில் பெண்கள் நகைகளை எடைபோடக் காத்திருந்ததை அவன் யோசித்துப் பார்த்தான். வெயிலின் நிறம் வெளிறிக்கொண்டிருந்தது. அவன் எதிரில் கிடந்த பெஞ்சில் ஒரு தாய் இயலாத ஐந்து வயதுச் சிறுவனை நெஞ்சோடு அணைத்துச் சாய்ந்திருந்தாள்.

கழுதைப்புலி நினைத்தது நடந்தது. அறைக்குள் திணிக்கப்பட்ட நொந்த உடல்கள் உயிரோடு நடமாடிக்கொண்டிருந்தன. அடுக்கடுக்காய்த்தனது எண்ணங்கள் பயனில்லாமல் போனதற்குக் கழுதைப்புலியின் கருவாட்டுக் கொள்ளை மட்டும் காரணமல்ல. அவன் விரும்பாதவை தொலைவில் இருந்தாலும் அவை அவனைத் தொந்தரவுபடுத்திக்கொண்டேயிருப்பதும் முக்கியக் காரணமாக இருந்தது.

கருவாட்டுப் பானையைச் சுற்றி மோப்பம் பிடித்துக்கொண்டிருந்த கழுதைப்புலி வெறிபிடித்துத் தூக்கி வந்தவைபற்றி, பானையைக் காவல் காப்பவர்கள் புளகாங்கிதம் அடைந்து பெருமைப்பட்டுப் பேசிக்கொண்டு அலைந்தனர். அவன் அந்த நினைவுகளை ஒதுக்கிவைக்காத அனுபவங்களை இரவல் வாங்கி வைத்துக்கொள்வது வெட்கக்கேடானது என்று அவர்களுக்கு உணர்த்த முற்பட்டான். பானையைக் காவல் காப்பவர்களின் குரல்கள் காலத்தைப் புதைத்துக்கொண்டிருந்தன. கழுதைப்புலி அந்தப் பகுதியில் மேயத் தொடங்கிய நாள் முதல் புதிய பிறப்புகள் பற்றி அவர்கள் கவலையற்றவர்களாயிருந்தனர். தங்களைப் பற்றிய நினைவுகளைப் பன்மடங்கு குறைத்துவிட்டுக் கரையைவிட்டு விலகியோடும் ஆகாயத்தாமரைகளாய் மாறுவதற்கு முயன்றனர்.

அழைப்புகள் இழந்து வீழ்ந்து கிடந்த உறவைக் கண்டு பொறுக்க மாட்டாமல் அவன் தன் காலடிகளைக் கட்டுப்படுத்தி உடலோடு இறுக்கிவைத்துக்கொள்வதுதான் உத்தமமென எண்ணிக்கொண்டான். கண்களால் பார்வை அணைத்து வைத்த பாதைகள் நல்லது என்று அறிந்துகொண்டான். அதனால்தான் சிலர் குழப்பமடைந்த நிமிடங்கள் தன்னுள் நுழைந்ததைக் கவனிக்காமல் தற்கொலை செய்துகொள்கின்றனர். கழுதைப்புலி பெரும்பாலான நேரங்களில் அவனை முரட்டுப்பாதையில் தள்ளிக் கெக்கலித்தது. அந்தக் கழுதைப்புலியின் கடைசி நிமிடங்கள் தன்னுள் நுழைய முடியாமல் வெளியேறுவதைக் கவனித்தும் கவனிக்காததுபோல் நடந்துகொண்டதன் மனப்பிறழ்வாக இருக்கலாம் என்று எண்ணினான். அவன் கருவாட்டுப் பானையின் முன் அறைந்துவைக்கப்பட்டிருக்கும் நந்திகளை அவமானப்படுத்திய கழுதைப்புலிமீது கோபப்பட்டபோது, நந்திகள் கண்திறந்து கழுதைப்புலிக்காகக் கண்ணீர்விட்டன. தன்னையிழந்த வாக்கியங்கள் அடிமனத்தை அழைத்துக்கொண்டிருக்க கழுதைப் புலி உணர்வுகளின் பொருள் சொல்லுமா? அதற்காக விவாதங்கள் மண்டியிடுவதை முன்வைக்கத் துடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா? இதற்குமேல் யோசிக்க அவனிடம் ஏதுமில்லை. அந்தக் கருவாட்டுப் பானையின் உன்னதங்கள் மீதான அச்சம் எல்லைகளை எரித்துச் சாம்பலாக்கின. இவற்றையெல்லாம் கழுதைப்புலி கண் காணித்துக்கொண்டிருந்ததை அவன் துணிந்து எதிர்க்கத் திராணியற்றவனாக இருந்தான்.

கழுதைப்புலி தனக்குப் பிடிக்காதவர்களை ஒழித்துக்கட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தது. ராஜகுருவையும் குருதேவையும் பகத்சிங்கையும் தூக்கில்போட ஆங்கில ஏகாதிபத்திய அரசு முயன்றபோது, பண்டிட் ஜவஹர்லால் நேரு, காந்தியை அணுகி ‘அந்த மூன்று இளைஞர்களுக்குத் தூக்கு உறுதியாகிவிட்டது. நீங்கள் இர்வின் பிரபுவின் நண்பராயிற்றே. எனவே நீங்கள் அதைத் தடுத்து நிறுத்த முயலக் கூடாதா?’ என்று வற்புறுத்தியபோது காந்தி எதுவும் பேசாமல் ராட்டையைச் சுழற்றிக்கொண்டிருந்தாராம். இறுதியில் நேருவுக்குக் கோபம் வந்து காந்தியிடம் கோபமாகப் பேசிவிட்டு வெளியேறினாராம். காந்திக்குத் தன் தலைமைமீது நம்பிக்கை குறைவு ஏற்பட்டதன் பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்றென ஏனோ அவனுடைய மனத்தில் வந்து தொலைத்தது. கழுதைப்புலிக்கு ஆதரவாகக் கருவாட்டுப் பானைக்குச் சொந்தக்காரி நடந்துகொண்டிருந்தபோது, அவனால் எதுவும் செய்ய முடியாமல் தவிக்கும் தவிப்புத் தீவிரமான வருத்தத்தைக் கொடுத்தது. அபத்தங்களின் மொத்த உருவமான கழுதைப்புலி கருவாட்டுப் பானையின் சொந்தக்காரிக்கு ஆதரவாக இருக்க, பின்னாளில் எதிராக வந்தால் எதையும் மற்றவர்கள் முன் வைப்பது, பானையின் இருப்பை மட்டுமின்றி வளர்ச்சியை அழித் தொழிப்பதற்குக் காரணமாக இருக்க முடியுமென எண்ணினான்.

Print Friendly, PDF & Email

1 thought on “இரட்டைக் காளை மாட்டுவண்டி

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

    காக்கா கதை புரிஞ்சும் புரியாத மாதிரயுமா இருக்கே….!!??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *