இம்புட்டுத்தேன் வாழ்க்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 12, 2021
பார்வையிட்டோர்: 5,617 
 
 

சூரிய வெளிச்சம் முற்றிலும் பரவாத சிறிது பகலின் வெளிச்சம் மட்டும் ஊடுருவிய மிதமான இருட்டு அறையில் பகல் நான்கரை மணியளவில், கலைந்த போர்வையின் நடுவே முகம் மற்றும் உடம்பெல்லாம் வியர்வை முத்துக்களாய் வடிய முகத்தில் ஏதோ ஒரு சிறு வலிக்கான மிகச் சுழிப்புடன் நெஞ்சைப் பிடித்தவாறே அமர்ந்திருந்தார் மீசைக்காரர் வேலு.

இடுப்பில் தண்ணீர் குடத்துடன் முதல் நடையைக் கட்டிய சிவகாமி ஜன்னலின் வழியே தனது கணவர் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு, சரி இப்போ தான் எழுந்திருக்காங்க போல என்ற நினைப்புடன் அப்பெண்டிக்ஸ் ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ள காரணத்தால் தனது நிதான நடையுடன் அந்த குடத்தை இறக்கி வைத்துவிட்டு இரண்டாவது நடைக்கு பின் வாசலில் இருந்து மீண்டும் தண்ணீர் குழாய் பதிக்கப்பட்டுள்ள முன் வாசலுக்கு வந்தார்.

இந்தமுறை குடத்தை எடுத்துக் கொண்டு வந்தவர் மீண்டும் ஜன்னலின் வழியே தன் கணவரைப் பார்த்துவிட்டு உடனே அங்கு குடத்தை வைத்துவிட்டு பதறியவாறு வீட்டின் அறையினுள் நுழைந்து “என்னங்க என்ன ஆச்சு ? ஏன் உடம்பெல்லாம் இப்படி வேர்த்திருக்கு, ரொம்ப நேரம் இப்படியே உட்கார்ந்து இருக்கீங்க”.

“ஒன்னும் இல்ல கொஞ்சம் நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு”.

“என்னங்க என்ன சாதாரணமா சொல்லுறீங்க, கிளம்புங்க ஹாஸ்பிட்டலுக்கு, நான் போயி மகாவிடம் சொல்லிட்டு வந்துடுறேன். முன்னாடியே ஒரு அட்டாக் வேற வந்திருக்கு இப்படி சாதாரணமா உட்கார்ந்து இருக்கீங்களேங்க”.

“எனக்கு தெரியும் உன்னட்ட சொன்னா இப்படி தான் பதறுவனு. அதெல்லாம் ஒன்னுமில்ல” என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே பட படவென மாடிக்கு ஓடிப்போய் தனது கொழுந்தியாள் மகா’விடம் சொல்லிவிட்டு கீழே வர அதற்குள் சட்டையை மாட்டிக் கொண்டு சாலையில் நடையைத் தொடர்ந்திருந்தார் வேலு.

அறைக்குள் சென்று பார்த்துவிட்டு வெளியே வந்த சிவகாமி தனது கணவர் சாலையில் நடப்பதைப் பார்த்ததும் உடனே ஓட்டம் பிடித்து அவர் அருகில் சென்றார். தனது வீட்டிலிருந்து இருநூறு மீட்டர் தொலைவுள்ள மாவட்ட அரசு மருத்துவமனை வாசலை இருவரும் நெருங்கிய போது தனது கணவரின் கையைப் பற்றிய சிவகாமி “என்னங்க இங்க வேணாம், இன்று ஞாயிற்றுக் கிழமை வேற பெரிய டாக்டர் யாரும் வருவாங்களானு தெரியல. வாங்க நம்ம அரவிந்த் ஆஸ்பத்திரி போகலாம்” என்றார்.

சட்டென்று கையை பறித்துக் கொண்டு நம்பிக்கையுடன் வாசலின் அருகிலே அமைந்த அவசர சிகிச்சைப் பகுதிக்குள் நுழைந்தார் வேலு. அங்கு செவிலியர் பெண் ஒருவர் அலட்சியமாக அவரிடம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்க பின்னே வந்த சிவகாமி “என்னம்மா கேட்டுட்டு இருக்கீங்க அவருக்கு நெஞ்சு வலி, முன்பே ஒருமுறை மாரடைப்பு வேற வந்திருக்கு” என்றதும், உடனே படபடப்புடன் செயல்பட்ட செவிலியர் அவரை ICU வார்டுக்கு மாற்றி ECG கருவிகளையும் அதற்கான குழாய்களையும் அவரு உடலில் பொருத்தி பின்னர் ஆக்சிஜன் குழாயை முகத்தில் மாட்டினர்.

பின்னர் சொந்தபந்தம் எல்லாம் மருத்துவமனைக்கு விரைந்து வர, இப்போது ஒன்றும் பிரச்சனை இல்லை என்று உதவி மருத்துவர் கூறினார். பிறகு மூன்று நாட்களில் நன்றாக பேசும் அளவிற்கு உடல்நிலை தேறிய வேலு தனது படுக்கையின் அருகில் இருப்பவரிடம் நலன் விசாரிக்க, மற்றொருபுறம் படுக்கையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் “தம்பி கொஞ்சம் அமைதியா இருங்கப்பா” என்றதும் அமைதி ஆனார் வேலு. அந்த வயதான பெண்மணியின் அருகில் பதினெட்டு வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுதுகொண்டே அமர்ந்திருந்தார்.

இப்படியாக அன்றைய நாள் இரவை எட்ட வேலுவிற்கு செவிலியர் ஒருவர் வந்து இடுப்பில் ஒரு ஊசியைப் போட்டார். அவரின் கைலியை சரி செய்ய சிவகாமியின் கை உதவிக்குச் செல்லும் முன்னரே தனது இடது கையால் கைலியை ஒரு சிறு மடிப்பிட்டு சுருட்டி இறுக்கிக் கொண்டார் வேலு. உடனே சிவகாமி தன் கணவரை பார்க்க ஒரு நமட்டுச் சிரிப்பு ஒன்றை மனைவிக்கு பரிசளித்தார் வேலு. பிறகு இருவரும் தூங்கிய பின்னர் சரியாக மூன்று மணியளவில் திடீரென ஓவென அழுகுரல் சத்தம். என்ன ஆச்சு என்று இருவரும் விழித்துப் பார்த்த கணம் அருகில் இருந்த அந்தப் பெண் மாரடைப்பால் இறந்துவிட்டதால் அவரின் மகள் தனியாக செய்வதறியாது அழுது கொண்டிருந்தாள். அவளை கையால் சைகை காட்டி அருகில் அழைத்தார் வேலு.

“அழாத மா, உன்னோட சொந்தம் வரலையா” என்றார்.

“என் மாமாவுக்கு சொல்லிட்டேன், அவங்க விடிஞ்சதும் தான் பஸ் பிடிச்சு வருவாங்க” என்று விசும்பி விசும்பி மூச்சிரைக்க அழுது கொண்டே சொல்லி முடித்தாள்.

“சரி மா நீ அழுகாம அக்காவோட படுத்துக்கோ, நாம பார்த்துக்கலாம்” என்று கூறிவிட்டு அங்கிருந்த கம்பவுண்டரை அழைத்து தன் மனைவியிடம் இருந்து ஐநூறு ரூபாய் வாங்கி அவரிடம் கொடுத்து, “உடம்பை பத்திரமா பார்த்துக்க தம்பி, அந்த அம்மாவோட பொண்ணு இங்க தான் தூங்குது. காலையில் அவங்க சொந்தம் எல்லாம் வந்ததும் உடம்பை வாங்கிப்பாங்க. பார்த்து பிரச்சனை இல்லாம முடிச்சுக் கொடுத்துவிடுங்க” என்றதும்,

அவரும் அதைப் பெற்றுக் கொண்டு “சரிங்க அண்ணன் நான் பார்த்துக்கிறேன்” என்று கூறிவிட்டு உடலை மற்றொரு அறைக்குப் பத்திரமாக மாற்றினார்.

விடிந்ததும் காலை ஐந்து முப்பது மணிக்கு அந்த பெண்ணின் அப்பா அங்கு வந்தார். உடனே கோபமாக எழுந்து சென்ற அந்தப்பெண் “நீங்க ஏன் இங்க வந்தீங்க. நீங்க அம்மாவைப் பார்க்க கூடாது. நீங்க இனிமேல் அம்மா மூஞ்சியில் முழிக்கவே கூடாது” என்று கூறி கதறி அழுதாள்.

பாதி போதை தெளிந்த நிலையில் சிவப்பான கண்களுடன் செய்வதறியாது ஒன்றும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தார் அந்தப் பெண்ணின் அப்பா. சற்று நேரத்தில் அங்கு வந்த பெண்ணின் மாமா அந்தப் பெண்ணை தேற்றியவாறு தனது அக்காவின் உடலைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார். இறுதியாக அந்தப் பெண் அழுத கண்களுடன் வேலுவை நோக்கி நன்றிப் பார்வை ஒன்றை உதிர்த்துவிட்டுச் சென்றாள்.

பிறகு சிறிது நேரம் கழித்து அங்கு வெளியே இருந்த சிவகாமியின் கொழுந்தியாமார்கள் இருவரும் “சிவகாமி வா குளிச்சுட்டு உன் கணவருக்கு சுடு தண்ணி எடுத்துக் கொண்டு, நீயும் சாப்பிட்டுவிட்டு வரலாம்” என்றழைத்தனர். “இல்ல நீங்க போயிட்டு வாங்க, நீங்க வந்ததும் நான் போறேன்” என்று விதிவசம் அவர்களது அழைப்பை மறுத்தார் சிவகாமி.

திடீரென லேசாக நெஞ்சு வலியை உணர்ந்த வேலு “அச்சோ இவ ஒரு வெள்ளந்தியாச்சே, என்ன பண்ணப் போறாளோ என்னோட நாசமா போன சொந்தத்தோட மத்தியில. பெரியவன் கொஞ்சம் ஊதாரியா இருக்கான். நடுவுல உள்ளவனுக்கும் விவரம் பத்தாதே. சின்னவன் என்னையவே எதிர்பார்த்துல இருப்பான். நான் என்ன செய்வேன்” என்று மனதினுள் அடித்துக் கொள்ள தனது மனைவிக்கும் மூன்று மகனுக்கும் ஆளுக்கொரு முறையாய் நான்கு முறை பெருமூச்சு விட்டு பிறகு உயிர் நீத்தார். அவர் தனக்காக விட்ட இறுதிப் பெருமூச்சின் காற்றை சுவாசிக்கத் திறனற்று, தனது உயிர் பிரிந்த வலியில் துட்டித்துப் போனார் சிவகாமி.

அந்த தெருவே அதுவரை காணாத அளவிற்கு ஒரு பெரிய கூட்டம் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கு கொள்ள, பதின்ம வயதுடைய மகன்கள் மூவரும் ஊர்வலத்தின் முன்னரே எதிர்காலத்தை அறிந்திராமல் நடந்து சென்றனர்.

விநாயகர் சதுர்த்திக்கு தெருவில் பெரிய விநாயகர் சிலை வாங்கிக் கொண்டாடும் முறையை அறிமுகம் செய்து வைத்த வேலுவின் இறுதி ஊர்வலம் காரணமாக அந்த சிலை அன்று திரையிடப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது. அடுத்தநாள் ஊர்வலத்தில் அந்த விநாயகரும் சேர்ந்தே கரைந்துபோனார்.

இந்த பூமியில் ஆட்கள் வந்தாலும் சரி போனாலும் சரி, நாட்கள் நில்லாமல் வேகமாக நகர ஓராண்டு முடிந்திருந்தது. அப்படியாக முதலாம் ஆண்டு நினைவுநாள் அன்று ராமேஸ்வரம் கடலில் சிவகாமி தன் மகன்களுடன் சேர்ந்து தன் கணவருக்கு தர்ப்பணம் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, தனது அம்மாவிற்கு தர்ப்பணம் செய்ய வந்த பெண் ஒருத்தி துடி துடித்துப் போனாள்.

(“உதவி என்பது தன்னுடைய சூழ்நிலை, காலம் மற்றும் நேரம் பார்த்து செய்வது அல்ல, அது முழுக்க முழுக்க செய்பவரின் மனம் சார்ந்த விஷயம்”.)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *