இப்போது நாங்கள் அந்நியர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 11, 2024
பார்வையிட்டோர்: 2,462 
 
 

நீலகண்டன், வைஷ்ணவி தம்பதியர் திருமண்ணூர் ரயில் நிலையத்தில் நின்ற ரயிலில் இருந்து நடைமேடையில் இறங்கியபோது மணி காலை 6.30 . ஏறக்குறைய பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்கள் இருவரும் குடும்பத்துடன் நீலகண்டன் பிறந்த ஊருக்கு வந்திருக்கின்றனர். மேல்மணலி என்ற அவர்களின் அழகான கிராமம். திருமண்ணூரிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அந்த கிராமத்து மக்களுக்கு எல்லாவிதமான பொருட்கள் கிடைக்கும் நகரமாக, திருமண்ணூர் விளங்கியது. ஆனால் இன்று வரையில் நேரடியாக அவர்கள் ஊருக்கு இந்நகரத்தில் இருந்து செல்வதற்கு பேரூந்து வசதிகள் மிகவும் குறைவே. திருமண்ணூரிலிருந்து தென்னந்துறை செல்லும் பேருந்தில் ஏறி நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாவடியில் இறங்கி மேற்கே இரண்டு கிலோமீட்டர் மேல்மணலிக்கு நடந்து செல்பவர்கள் இன்றும் இருக்கின்றனர். திருமண்ணூரிலிருந்து தெற்கே கோடியங்காடு வரை செல்லும் விரைவு ரயில்கள் மாடியில் நிற்காது. இருசக்கர வாகனங்கள் வரத்து பெருகியவுடன் மேல்மணலியில் வசிப்பவர்களில் பெரும்பாலான குடும்பங்கள் அதை வாங்கி விட்டனர். ஏனெனில் எப்போதாவது இரண்டு அல்லது மூன்று மணிநேரம் இடைவெளியில் திருமண்ணூரிலிருந்து மேல்மணலி வழியாக மன்னன்குடி நகரத்திற்கு செல்லும் பேரூந்துகள் மட்டுமே உள்ளன. அவைகள் மேல்மணலி மக்களின் அவசரத்திற்கு அவ்வளவாக உதவாது.

நீலகண்டன், வைஷ்ணவி அவர்களின் குழந்தைகளை வரவேற்று ஊருக்கு அழைத்துச் செல்ல, அவனுடைய நண்பன் வெற்றிமணி வருகிறான். நீலகண்டனும் வெற்றிமணியும் குழந்தைப்பருவத்திலிருந்து இந்த நிமிடம் வரை நண்பர்கள்.’மிகச்சிறந்த நட்புக்கு இவர்கள் அடையாளம்’ என்று மேல்மணலி மக்கள் பேசிக்கொள்வார்கள்.

வைஷ்ணவியின் சொந்த ஊர் திண்ணங்கோரை. மேல்மணலியிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருமணம் ஆனபின் வைஷ்ணவி நீலகண்டனுடன் மேல்மணலியில் இருந்தாள்.ஆதலால் அவளுக்கும் மேல்மணலி மக்களிடம் பரிச்சயம் உண்டு. சுமார் ஒன்றரை வருடங்கள் அவர்கள் அங்கே இருந்தார்கள். பிரசவத்திற்கு திண்ணங்கோரை சென்ற வைஷ்ணவியை அவர்கள் பெற்றோர்கள் அருகில் உள்ள தட்டாவூர் நகரத்து மருத்துவமனையில் சேர்த்தபோது முதல் குழந்தை விஷ்வா பிறந்தான்.

அதுவரையில் நீலகண்டன் திருமண்ணூருக்கு அருகில் உள்ள சர்க்கரை தொழிற்சாலையில் பணி புரிந்து வந்தவன், ஆங்கிலம், இந்தி மிகவும் சரளமாக பேசும் வல்லமை பெற்றவன். தன்னுடைய தந்தை ராமனின் உடல் நலம் குன்றியதால் அவரை கவனித்துக்கொண்டு மேல்ணலியில் இருந்து வந்தான். நீலகண்டன் திருமணம் ஆகிய ஒரு வருடத்தில் ராமன் காலமானார். தாயார் வைதேகி அம்மாள் அனுமதியுடன் நீலகண்டன் வளமான எதிர்காலத்தை மனதில் வைத்து, வேறு பல நகரங்களில் உள்ள நிறுவனங்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வேலை தேடி வந்தான். அதன் மூலம் மும்பையில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் தேர்வாகி மும்பைக்கு குடிபெயர ஆயத்தமானான். தாயார் வைதேகியிடம், நீலகண்டன் தனக்கு நல்ல வேலை கிடைத்தது பற்றியும், மும்பைக்கு குடும்பத்துடன் போகவேண்டும் என்று கூறியபோது, ” நீ உன் குடும்பத்தை கூட்டிட்டு போடா, நீ நல்லா இருக்கணும்.நான் எங்கே அங்கெல்லாம் வர்றது? முடிஞ்ச வரைக்கும் இந்த ஊர்லயே இருக்கேன்.வெற்றி இருக்கான். உன்னோட மத்த ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் இருக்காங்க, தவிர பரமேஸ்வரன் குருக்கள் இருக்கார். என்னைப் பாத்துப்பாங்க. லெட்டர் போட்டுட்டே இரு வாராவாரம். கவலைப்படாதே. ரொம்ப முடியலைன்னா உன் வீட்டுக்கு வந்துடறேன்.” என்றார் வைதேகி உறுதியாக.

அதனால் வைஷ்ணவி, விஷ்வாவுடன் நீலகண்டன் கிராமத்தை விட்டு கிளம்பி வந்தான் மும்பைக்கு. ஊரைவிட்டு புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, வைஷ்ணவியுடன் வெற்றிமணி வீட்டிற்கு சென்று தன் அம்மாவை பார்த்துக்கொள்ளுமாறு கூறும்போது, ” நீலு, இதையெல்லாம் நீ சொல்லவே வேண்டாம். கவலைப்படாமல் நீ ஜாக்கிரதையாகப் போய் வா,”என்று தோளில் தட்டிக்கூறினான். பிறகு அவனுடைய இதர நண்பர்கள் தண்டாயுதம், வைத்தீஸ்வரன், கணேஷ், குமரன், பரமேஸ்வரன் குருக்கள் அனைவரிடமும் விடை பெற்றான். இவர்கள் எல்லோரும் நீலகண்டன் மீது அன்பு கொண்டவர்கள்.

நீலகண்டன் மும்பைக்கு வந்த மூணரை வருடங்கள் பிறகு அவனுக்கு இரட்டை ஆண்குழந்தைகள், அஸ்வத், அபிஜித் பிறந்தனர். அதற்கு இரண்டு வருடங்கள் பின்னர் அபிநவ் பிறந்தான். இது எதிர்பாராத ஒன்றாக இந்த தம்பதிக்கு மனதில் முதலில் சற்று பயம் வந்தாலும் துணிவுடன் எதிர்கொண்டனர் . குடும்பம் பெரிதாகியதாலும், இருக்கும் நகரத்தில் செலவுகள் அதிகரித்த வண்ணம் இருந்ததாலும் நீலகண்டன் அதிக சம்பளம் கிடைக்கும் வெவ்வேறு நிறுவனங்களுக்கு மாறியபடி இருந்தான். கடைசியாக ஒரு பிரபல நிறுவனத்தில் மேலாளராகப்பணியில் அமர்ந்தான். அதன் காரணமாக பணிச்சுமைகளும் அதிகமாக இருந்தது. கிராமத்தைப்பற்றி நினைக்கவே நேரமில்லை.

வைஷ்ணவி மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுபவள்.நன்கு படித்தவள்.இந்தி மொழி நன்றாகப்பேசுவாள். நான்கு குழந்தைகளையும் அருமையாக கவனித்துக்கொண்டு வீட்டையும் கச்சிதமாக நிர்வகித்து வந்தாள். காலையில் வேலைக்கு சென்று இரவு பத்து மணிக்கு வரும் நீலகண்டனுக்கு வீட்டு பிரச்னைகள் பற்றி பேசி அவனுக்கு மனச்சோர்வு தராமல் இருக்க வேண்டும் என்பதில் வைஷ்ணவி குறியாக இருந்தாள். ஞாயிறு அன்றுதான் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து அந்த வாரத்து நிகழ்வுகள் பற்றியும், அடுத்த வாரத்தின் திட்டம் பற்றியும் பேசுவார்கள். நீலகண்டனும், வைஷ்ணவியும் அவரவர்களுடைய கிராமத்து வாழ்க்கை நாட்களைப் பற்றியும், நண்பர்கள் பற்றியும் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்வார்கள். நீலகண்டன் எவ்வாறு அந்த நாட்களில் சைக்கிளிலேயே பல நகரங்களுக்கு நண்பர்களுடன் சென்று வந்ததையும் என்ன திரைப்படம் பார்த்தார்கள் என்பதையும் கதை போலச் சொல்வான். வைஷ்ணவி அவள் பங்கிற்கு அவளுடைய தோழிகளுடன், சகோதரிகளுடன் எங்கெல்லாம் சுற்றுலா போய் வந்தாள் என்பதையும் சொல்வாள். இதனால் அந்தப் பையன்களுக்கு, கிராமத்தைப்பார்க்க வேண்டும் என்றும், தன் அப்பாவுடைய பழங்கால வீட்டைப்பார்க்க வேண்டும், நண்பர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. ஆனால், குடும்பச் சூழ்நிலை அவர்களைப்பயணம் செய்ய விடாமல் தடுத்தது. இதற்கிடையே வைதேகிக்கு உடல்நலம் பலவீனமான நிலையில், நீலகண்டன் மட்டும் ஊருக்கு சென்று அவளை மும்பைக்கு அழைத்து வந்தான். இப்படியாக ஏறக்குறைய பதினெட்டு வருடங்கள் ஓடி விட்டன.

ஒரு வருடம் முன்னர், வெற்றிமணி, தில்லைராஜன், லிங்கம் இவர்கள் மேல்மணலி கிராமத்திலிருந்து புறப்பட்டு மும்பை, நீலகண்டன் வீட்டிற்கு வந்தனர். அந்த கிராமத்தில் இருக்கும் நரசிம்மர் கோயிலைப்புதுப்பித்து, கும்பாபிஷேகம் செய்ய கிராமத்து மக்கள் திட்டமிட்டிருப்பதாக்கூறி நீலகண்டனும் ஏதாவது நன்கொடை தரவேண்டும் என்றும் வேண்டினர். மும்பையில் வேறு பகுதிகளில் இருக்கும் அவர்களின் உறவினர்களைப் பார்த்து இதைச்சொல்லி நன்கொடை வசூலிப்பதற்காக வந்தவர்களை, நீலகண்டன் வீட்டிற்கு வெற்றிமணி அழைத்து வந்தான். சில வருடங்களுக்கு முன்னர், நீலகண்டனும் வெற்றிமணியும் நரசிம்மர் கோயில் கும்பாபிஷேகம் பற்றி உரையாடி இருந்ததாலும், பின்னர் வெற்றிமணி தில்லைராஜன், லிங்கம் இவர்களுடன் சேர்ந்து கோயில் திருப்பணி வேலைகளை ஆரம்பித்து முன்னேற்றம் காணவே, இங்கே அழைத்து வந்தான். நீலகண்டன் ஒரு நல்ல தொகையை காசோலை மூலம் கொடுத்தான். கும்பாபிஷேகத்தன்று அன்னதானம் செலவின் ஒரு பகுதியை ஏற்றுக் கொள்வதாகவும் உறுதியளித்தான். அதைத்தவிர தன் மும்பை, சென்னை அலுவலக நண்பர்கள் மூலமாகவும் நிதி வசூல் செய்து தரவும் சம்மதித்தான். தற்போது தன் மனைவி, தாய், பையன்களுடன் அந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறான்.

“ஹலோ, நீலு, நீங்க ஏறியிருந்த கம்பார்ட்மெண்ட் அங்கே வரும்னு கொஞ்சம் பின்னாடி நின்னுட்டு இருந்தேன். நீ இங்கே இறங்கறதை பாத்தேன். உடனே ஓடி வந்தேன். பிரயாணம் சௌரியமா இருந்துதா? சௌக்யமா இருக்கியா வைஷ்ணவி? அம்மா, நீங்க எப்படி இருக்கீங்க?” என்று வேகமாக அவர்கள் அருகில் வந்த வெற்றிமணி கேட்டான். ” எல்லாரும் நல்லா இருக்கோம் வெற்றி.ரயில் பயணம் வசதியா இருந்தது. இதான் என் பசங்க.மூத்தவன் பிறந்த ஒண்ணரை வயதுக்குள் நாங்கதான் மும்பை போய்ட்டமே, உனக்கு அடையாளம் தெரியாது.” என்று கூறி தன் பையன்களை வெற்றிக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் நீலகண்டன். ” தனலட்சுமி நல்லா இருக்காளா? உங்க பொண்ணு சாவித்திரி எப்படி இருக்கா? இப்ப எந்த ஊர்ல இருக்கா?” என்று வைஷ்ணவி வெற்றிமணியின் மனைவி,மகள் குறித்து கேட்டாள். ” எல்லாரும் சௌக்யம். சாவித்திரி இப்ப இங்க கும்பாபிஷேகத்தில் கலந்துக்க வந்திருக்கா. அவள் சென்னையில் குடியிருக்கா.” என்று சொல்லிக்கொண்டே, வைதேகி அம்மாளிடம்” அம்மா, நீங்க நடக்க வேண்டாம். பேட்டரி கார் ஏற்பாடு பண்ணிருக்கேன். நீங்க, வைஷ்ணவி, சின்னப் பசங்க அதுல வந்துடுவாங்க.நானும் நீலுவும் பின்னாடி நடந்து வர்றோம் ” என்று கூறுகையில், கார் வந்து வைதேகி அம்மாள், வைஷ்ணவி, அஸ்வத், அபிஜித், அபிநவ் எல்லோரும் ஏறி உட்கார்ந்தனர். விஷ்வா இவர்களுடன் நடந்து வருவதாகச் சொல்லி எல்லோரும் நகர்ந்தனர்.

வெளியே வந்ததும் அவர்கள் அருகில் ஒரு கார் வந்து நின்றது.” தில்லை ராஜன் அவனுடைய காரை அனுப்பியிருக்கான் உங்களை அழைச்சிட்டு வர்றதுக்கு. நீலு, நீ, உன் குடும்பத்தோடு இந்த காரில் வந்துடு.நான் பின்னாடியே என் டூ வீலரில் வந்துடறேன். எங்க வீட்டுல போய் இறங்கிக்க. உனக்கு ஒரு ரூம் ஒழிச்சு சுத்தமா வச்சிருக்கேன். தனலட்சுமி சொல்லுவா.எப்படியும் நீங்க போய் சேரும் முன்னாலேயே நான் வந்துடுவேன்.” என்று வெற்றிமணி சொல்லி கார் கதவைத்திறந்து வைதேகி அம்மாள் கையைப்பிடித்து மெதுவாக காருக்குள் அமர வைத்தான். அனைவரும் காரில் அமர்ந்து மேல்மணலி நோக்கி புறப்பட்டனர். போகும் வழியிலேயே நீலகண்டன் தன் குழந்தைகளுக்கு தான் படித்த பள்ளி, அவர்கள் குலதெய்வம் கோவில், மற்ற இடையில் உள்ள ஊரின் பெயர், ஆறுகளின் பெயர் இவற்றைப் பற்றியெல்லாம் சொல்லி வந்தான். விஷ்வா செல்லிடப்பேசி வழியே புகைப்படம் எடுத்து வந்தான். அந்த சிறுவர்களுக்கு இது ஒரு புதிய உலகம் போல் தோன்றியது.

மேல்மணலியில் உள்ள வெற்றிமணி வீட்டில் இறங்கிய அவர்களை தனலட்சுமி, சாவித்திரி, தில்லை ராஜன் அனைவரும் மிக உற்சாகத்துடன் வரவேற்றனர். எல்லோரும் வைதேகி அம்மாள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வேண்டினர். அவர்களுடைய உடமைகளை நீலகண்டன் குடும்பம் தங்குவதற்கு ஒதுக்கியுள்ள அறையில் வைத்திட அனைவரும் உதவினர். அதற்குள் வெற்றிமணி வந்துவிட்டான். அவன் வைஷ்ணவியைப்பார்த்து,” அந்த முற்றம் தாண்டி இடதுபக்கத்திலே பாத்ரூம் இருக்கு. லேடீஸ், குழந்தைகள் எல்லாம் உபயோகிச்சுக்கங்க. முதல்லே ஒரு காபி சாப்பிட்டு அப்புறம் குளிச்சிட்டு ரெடியாகிட்டீங்கன்னா, டிஃபன் சாப்டலாம். நீலு, நீயும் வலது பக்கத்தில் இருக்கற சின்ன பாத்ரூம் யூஸ் பண்ணிக்கலாம். உனக்கு அந்த நாள் நினைவுல குளிக்கணும்னா கிணத்தடி சூப்பரா இருக்கு” என்றான் சிரித்தபடியே. ” சரி, சீக்கிரம் காபி ஏற்பாடு செய் வெற்றி. அதுக்கப்புறம் நான் குளிக்கறது கிணத்தடிலேதான் ” என்று நீலகண்டன் சந்தோஷமாக கூறினான். அவன் பையன்களும்” நாங்களும் கிணத்தடிதான்” என்று கோரஸாக கத்தினார்கள். உடனே வெற்றிமணி”ஒண்ணும் பிரச்னை இல்லை.எல்லாரும் அங்கேயே குளிக்கலாம் ” என்றான்.

அரைமணி நேரம் சென்றபின் நீலகண்டன் கிணத்தடியில் விஷ்வா, அஸ்வத், அபிஜித், அபிநவ் இவர்களுக்கு எப்படி அந்தக்காலத்தில் குளித்தோம், கிணற்றிலிருந்து எப்படியெல்லாம் தண்ணீர் இறைத்தோம் என்பதை விளக்கமாக சொன்னான். இவர்களுடன் வெற்றிமணியும் குளிக்க வந்திருந்தவன் பழைய கதைகளையும், ஒருமுறை கிணற்றில் பித்தளைக்குடம் விழுந்து விட்டதை எவ்வாறு எடுத்தனர் என்பது பற்றி விவரித்தான். சிறுவர்கள் ஆர்வத்துடன் ” வெற்றி அங்கிள், இன்னும் வேறு ஏதாவது அந்தக்கால சேதியெல்லாம் சொல்லங்க.ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு” என்று கேட்டபடியே இருந்தார்கள்.

இதெல்லாம் முடிந்து அனைவரும் காலையுணவு உண்டனர். அப்போதும் அந்தக்காலத்தில் காலையில் உணவருந்திய முறைகள் பற்றிய தகவல்களை வெற்றிமணி, நீலகண்டன், வைஷ்ணவி ஆகியோர் சிறுவர்களிடம் கூறினர். அதன் பின்னர் அவர்கள் வெளியே உள்ள திண்ணையில் வந்து அமர்ந்தபோது, அங்கே வந்தவர்கள் வெற்றிமணியிடம் ” யாருங்க, புதுசா இருக்கு, இந்த விருந்தாளியை இன்னிக்கு வரை பாத்ததே இல்லையே” என்று கேட்டுக்கொண்டே இருக்க, அவனும் “இங்கே பக்கத்துல இருக்குற அந்த வீடு இவங்களுதுதான்.ராமன் அய்யா காலத்துக்கு அப்புறம் இவங்க, நீலகண்டன், ராமன் அய்யா மகன், குடும்பத்தோடு வடக்க போய்ட்டாங்க. ரொம்ப நாளைக்கப்புறம் நம்ப கோவில் கும்பாபிஷேகத்துக்காக வந்திருக்காங்க. நாங்க சின்ன வயசுலேர்ந்து நண்பர்கள்” என்று சொல்லிக்கொண்டே இருந்தான் அனைவரிடமும். ” ஆமாம், நீங்க சொல்லிக்கிட்டே இருப்பீங்க.அவங்களா இது? வணக்கம் அய்யா. வெற்றி உங்களைப்பத்தி அடிக்கடி பேசிக்கிட்டே இருப்பாரு. பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்.” என்று கூறிய ஒவ்வொருவரையும் நீலகண்டனுக்கு ” இது நம்ப தியாகுவோட பையன், இது நம்ப ஜோதி இருந்தாள்லே, அவளோட தம்பி, இது நம்ப ராமலிங்கத்தோட தங்கை, இது கோவிந்தராஜ் பிள்ளையோட பேரன், இது முருகன் இருந்தான்ல அவன் சம்சாரம்” என்று சொல்லி அறிமுகம் செய்து வைத்தான் வெற்றிமணி.

தில்லைராஜனும் , லிங்கமும் அவர்கள் பங்குக்கு சிலரை அழைத்து வந்து நீலகண்டனுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். நீலகண்டனை அவர்கள் புதிய நபர்கள் போல் பார்த்ததை, அவன் வாரிசுகள் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர்.

அன்று மதியம் யாகசாலை வேள்விகள் நடத்த வேண்டியவைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக வெற்றிமணி, தில்லைராஜன், லிங்கம், மும்முரமாக இயங்க ஆரம்பித்து விட்டனர். அப்போது அங்கு வந்த தண்டாயுதம், பரமேஸ்வர குருக்கள் இருவரும் வைதேகி அம்மாள் கையைப்பிடித்து அன்புடன் உரையாடினார்கள். பின்னர் நீலகண்டன், அவன் குடும்பத்தினரிடம் ” எத்தனை வருஷம் ஆச்சு உங்களையெல்லாம் பாத்து, ஊரே மாறிடுச்சு நீலு, முன்பு இருந்தவங்க யாரும் இல்லை இங்கே. ஏதோ நாங்க ஒரு அஞ்சாறு குடும்பம் மட்டும் ரொம்ப பழசு.அந்த நாள்லேர்ந்து இருக்கற பேர்வழிகள். எப்படியோ அந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செஞ்சு அதை நிறைவேத்தற அளவுக்கு வந்தாச்சு. நீ குடும்பத்தோட வந்ததுக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா.” என்று உணர்ச்சி பொங்க கூறினார்கள்.

பிறகு தண்டாயுதம்” நீலு, யாகசாலை பூஜை மூணரை மணிக்கு மேலதான். மத்யான சாப்பாட்டுக்கு இன்னும் நேரம் இருக்கு. வாயேன், அதுவரையில் இப்படி காலாற கிராமத்தை சுத்தி போய்ட்டு வருவோம்.உனக்கும் கிராமத்தை பாத்த மாதிரி இருக்கும். பொழுதும் போகும். பசங்களும் வரட்டும். வைஷ்ணவி வேணும்னாலும் வரட்டுமே. அம்மா இங்கேயே ரெஸ்ட் எடுக்கட்டும்,என்ன சொல்றே!” என்றான். நீலகண்டனுக்கு அது நல்ல யோசனையாக இருந்ததால், வைதேகி அம்மாளை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, தனலட்சுமி, சாவித்திரி இருவரிடமும் வைஷ்ணவி சொல்லிவிட்டு அங்கிருந்து நடக்க ஆரம்பித்தனர். தண்டாயுதம்” குருக்கள் மாமா, வெற்றியிடம் சொல்லிடுங்க, நான் நீலுவோடு கிராமத்தை சுத்திப்பாக்க போயிருக்கேன்னுட்டு. ஒண்ணு அல்லது ஒண்ணரை மணிநேரம் கழிச்சு வந்து பூவலங்காரம் வேலைலே வந்து கலந்துக்கறேன்னு சொல்லுங்க ” என்றான்.. “சரிப்பா சொல்லிடறேன் ” என்றவர் ” நீலு, அப்புறம் பாக்கலாம்.நீ போய்ட்டு வா, நீ வளர்ந்த ஊரு, எப்படி இருக்குன்னு சுத்திப்பாத்துட்டு வா” என்று சிரித்தபடியே கூறி விடை பெற்றார்.

மேல்மணலியில் வெற்றிமணி வீட்டிலிருந்து தெற்கில் நூறடியில் நரசிம்மர் கோயில். இன்னும் சற்று தெற்கில் சென்று திரும்பினால் ஒரு பெரிய தெரு. அது போல் வடக்கில் சென்று, பேரூந்துகள் வரும் சாலையைக் கடந்து பின்னர் மேற்கில் திரும்பினால் அங்கு நீண்ட தெரு, மாரியம்மன் கோவில் இருந்தது. இதற்கிடையே பிரதான சாலையை ஒட்டி சிற்றாறு எனும் ஆறு ஓடியது. குழந்தைகளுடன் நடந்து செல்லும் வழியில் நீலகண்டன் அவர்களிடம் ” இங்கேதான் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது.இந்த இடத்தில் நாவல் மரம், மாமரங்கள் இருந்தன. இங்கே ஒரு வாடகை சைக்கிள் கடை இருந்தது.” என்று விவரித்தவாறு இருந்தான்.

” தண்டாயுதம், இங்கே இந்த குளக்கரையில் வெங்கடாசலம் பிள்ளை மளிகைக்கடை இருந்துச்சுல்ல, என்ன ஆச்சு? இங்கு பக்கிரிசாமி செட்டியாரின் செக்கு மரம் இருந்ததில்ல” என்று கேட்டான். தண்டாயுதம் ” ஆமாம் நீலு, நான், நீ, வெற்றி மூணு பேரும் அந்த கடையில் எத்தனை பொருள் வாங்கிருக்கோம், உங்க தோட்டத்து தேங்காய் எல்லாம் காயவச்சு இங்க இருந்த செக்குல கொடுத்து தேங்காய் எண்ணெய் வாங்கிருக்கோம். ஞாபகம் இருக்கா?” என்று சொல்லிவிட்டு ” எல்லாம் போயிடுச்சு நீலு, பழைய சுவடு அதிகமா எதுவும் இல்லை. நீங்க எல்லாம் இருந்த வீடு ஏதோ ஓரளவுக்கு வெற்றி பாத்துக்கறதால இருக்கு. கிராமத்து போஸ்ட் ஆஃபீஸ்காரங்க அதுல இருக்காங்க. சுத்தமா வச்சிருக்காங்க.” என்றவன் குழந்தைகளை பார்த்து ” பசங்களா, நானும் உங்க அப்பாவும், வெற்றியும் இந்த ஆற்றிலும், அதோ அந்த குளத்திலும் மணிக்கணக்கில் குளிச்சிருக்கோம். நீந்தியிருக்கோம்” என்றான். ” அப்பா சொல்லிருக்காங்க” என்றனர் சிறுவர்கள் சிரித்துக் கொண்டே.

வழியில் தண்டாயுதத்தை பார்த்த மேல்மணலி மக்கள் பலரும் நீலகண்டனை ‘ யார் இது’ என்று கேட்டும் தண்டாயுதம் அவர்களிடம் விவரங்கள் கூறியபின் ” ராமன் அய்யா பையன் நீலுங்களா, எப்படி இருக்கீங்க” என்று கேட்டனர் நீலகண்டனிடம். ஓரிருவர் மட்டும் ” வாங்க நீலுத்தம்பி, பாத்து எவ்வளவு நாளாச்சு ” எனக்கேட்டனர். எல்லாவற்றையும் சுற்றி பார்த்து விட்டு, திரும்ப இவர்கள் வெற்றிமணி வீட்டிற்கு வருவதற்கு முன்பு, நீலகண்டன் அப்போது வாழ்ந்த வீட்டிற்குள் குழந்தைகளை அழைத்துப்போய் காண்பித்தான். ” உங்க தாத்தா இங்கேதான் ஈஸி சேரில் உக்காந்து இருப்பார். இங்கேதான் நான் உக்காந்து படிப்பேன். இந்த இடத்திலதான் நாங்க சாப்பிடுவோம். இந்த கிணத்துலேர்ந்துதான் தண்ணீர் இறைப்போம் தோட்டத்துக்கு” என்று பல நிகழ்வுகள் பற்றி மகிழ்ச்சியுடன் விளக்கினான். விஷ்வா முதல் அபிநவ் வரை எல்லோரும் ஆவலுடன் கேட்டனர்.

அன்று மதியம் உணவுக்கு பின்னர் எல்லோரையும் ஒரு மணிநேரம் ஓய்வெடுத்துக்கொண்டு பிறகு நரசிம்மர் கோயில் பக்கம் வருமாறு வெற்றிமணி கூறினான். சாப்பிட்டவுடன் பிரயாணக்களைப்பால் அனைவரும் நன்றாக உறங்கி விட்டனர். அவர்கள் எழுந்திருக்கும் போது மணி நான்கு ஆகிவிட்டிருந்தது. ” நீங்க நல்லா அசந்து தூங்கிட்டு இருந்தீங்க, எழுப்ப வேண்டாம், அவங்களா எழுந்திரிச்சதும் கோயிலுக்கு கூட்டி வான்னு அப்பா எங்கிட்ட சொல்லிட்டு போனாரு” என்று சாவித்திரி சொன்னாள் நீலகண்டனிடம். அவர்கள் எல்லோரும் தயாராகி புறப்படும் முன் தனலட்சுமி காபி கொடுத்தாள் அனைவருக்கும். வைதேகி அம்மாள் ” நான் நாளைக்கு கும்பாபிஷேகத்தில் கலந்துக்கறேன். இங்கேயே ஓய்வெடுக்கறேன் இப்போ”. என்றார்.

மற்ற அனைவரும் வெற்றிமணியின் வீட்டிலிருந்து நரசிம்மர் கோயில் வந்து சேர்ந்தனர். பக்கத்தில் கோயிலுக்கு சொந்தமான சிறிய திடலில் யாகசாலை பூஜைகள் நடந்து கொண்டிருந்தன. வைஷ்ணவியும், நீலகண்டனும் அந்த கோயில் பற்றிய விவரங்களை குழந்தைகளுக்கு சொல்லியவாறு இருந்தனர். கோயில் பட்டாச்சாரியார் முதல் பெரும்பாலான கிராம் மக்களுக்கு வெற்றிமணி, தில்லை ராஜன், லிங்கம், நீலகண்டனையும், வைஷ்ணவியையும் அறிமுகப்படுத்திக் கொண்டு இருந்தவாறே, கோயிலுக்கு தேவையான பணிகளையும் செய்து வந்தனர். அன்று இரவு ஏழு மணி அளவில் ஒரு நேர்த்தியான பூஜைக்குப் பின்னர் யாகசாலை முடிவுற்றது. பிறகு பிரசாதங்கள் வழங்கி வந்த அனைவரையும் மறுநாள் காலை எட்டு மணிக்கு வந்து கும்பாபிஷேகத்தில் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.

மறுநாள் காலை ஐந்து மணிக்கே எழுந்து வெற்றி மணி குடும்பத்தினரும், நீலகண்டன் குடும்பத்தினரும் தயாராகி மூன்று வீடுகள் தள்ளி இருந்த தில்லை ராஜன் வீட்டிற்கு சென்றனர். காலை உணவு அவர்கள் அனைவருக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். அது முடிந்தபின் கோயிலுக்கு சென்றனர். ஏழு மணி வாக்கில் அக்கம்பக்கத்து கிராமங்களில் உள்ளவர்கள் மற்ற வெளியூர்வாசிகள், நீலகண்டன் போல் மேல்மணலி விட்டு வெவ்வேறு நகரங்களில் குடும்பத்துடன் வசிப்பவர்கள் இப்படி பலரும் சேர்ந்து நல்ல கூட்டம் ஆகி விட்டது. அதில் சிலர் நீலகண்டனை அடையாளம் தெரிந்து அருகில் வந்து நலம் விசாரித்தார்கள். பலரையும் நீலகண்டன் புதிதாக அறிமுகம் செய்து கொள்ளும் நிலையில் இருந்தான். ஒருவழியாக பெருமாள் கோயிலின் கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடந்தேறியது. அதற்குப்பின் பலவிதமான பூஜைகள் ஒவ்வொன்றாக நடந்தன.

பகல் பனிரெண்டு மணிக்கு வந்தவர்கள் அனைவருக்கும் சிறந்த வகையில் மதிய உணவும், பிரசாதப்பொட்டலங்களும் கிடைக்குமாறு, நீலகண்டன் சார்பில், வெற்றிமணி ஏற்பாடு செய்திருந்தான். நீலகண்டன் இரண்டு வாரங்கள் முன்னமே அதற்குண்டான தொகையை அனுப்பியிருந்தான்.

இவைகள் எல்லா நிகழ்ச்சிகளையும் விஷ்வா, அஸ்வத், அபிஜித், அபிநவ் மிகவும் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் பார்த்து ரசித்தனர். ஆனால் அவர்கள் மனதில் ஒரே கேள்வி மட்டும் இருந்து கொண்டே இருந்தது. ‘அப்பாவுடைய சொந்த ஊர். ஆனால் அப்பாவைத் தெரிந்தவர்கள் மிகவும் சிலர்தான். நிறைய பேர்களை அப்பாவுக்கு அறிமுகம் செய்தபின்தான் தெரிந்தது. அது எதனால்? ‘ இது பற்றி அவர்களுக்குள்ளேயே பேசிக்கொண்டனர். விஷ்வா ‘ அப்பாவையே இன்றிரவு கேட்டு விடலாம் ‘ என்று கூறினான்.

கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது பற்றி அனைவரும் அன்று மாலை வரை பேசியவாறு பலரும் கோயிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். இரவு ஒன்பது மணிக்கு நடை சாத்திவிட்டு எல்லோரும் புறப்பட்டு சென்றனர்.

வெற்றிமணி வீட்டில் தனலட்சுமி மற்றும் மற்ற கிராமத்து மகளிரிடம் மிகுந்த சந்தோஷத்துடன் வைதேகி அம்மாள் பேசிக்கொண்டிருந்தார்.அக்காலத்தில் அந்த பெருமாள் கோயில் எப்படி எல்லாம் இருந்தது என்ற விவரங்களைக் கூறி, பலர் முயற்சியால் இன்று இந்த வைபவம் நடந்ததை பெருமையுடன் பேசினார்.

அன்றிரவு நீலகண்டன், வெற்றிமணி, சிறுவர்கள் அனைவரும் உணவுக்குப்பின் வெளித்திண்ணையில் விரித்திருந்த பாய்களில் படுத்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது விஷ்வா, அஸ்வத், அபிஜித், அபிநவ் நால்வரும் தங்களுக்கு எழுந்த அந்த சந்தேகத்தை நீலகண்டனிடம் கேட்டனர். அதனைக் கேட்ட வெற்றிமணி “நீலு, நல்ல புத்திசாலிப்பசங்க, சூப்பரா ஒரு கேள்வி கேக்கறாங்க பாரு, அவங்களுக்கு புரியற மாதிரி பதிலைச்சொல்லுப்பா, நீ”. என்றான். அப்போது உள்ளிருந்து வந்த வைஷ்ணவி ” தூக்கம் வரலை.அதான் கொஞ்சம் திண்ணையில் உட்கார்ந்து காத்து வாங்கிட்டு, பேசிட்டு போகலாம்னு வந்தேன். நல்லா உன்னிப்பா எல்லாத்தையும் கவனிச்சிருக்கானுக போலிருக்கு. அதான் இப்படி கேட்டிருக்கானுக”. என்று சிரித்தபடியே சொன்னாள். பிறகு தன் பையன்களிடம் ” அப்பாவும், அம்மாவும் கிட்டத்தட்ட பதினெட்டு வருஷங்களுக்கு அப்புறம் இப்பதான் இந்த ஊருக்கு வர்றோம் இல்லையா? நிறைய மாறிடுச்சு. அதனால்தான் இப்படி ” என்றாள். பின்னர் நீலகண்டன் தன் வாரிசுகளைப்பார்த்து, ” அது ஒரு காரணம். நாங்க இந்த ஊரைவிட்டு போகும்போது எங்களோடு பழகி நல்லா அறிமுகமான குடும்பங்கள் நிறைய பேரு இப்போ இல்லை. நம்ம மாதிரி அவங்களும் வெவ்வேறு ஊருக்கு போய்ட்டாங்க. இங்கேயே இருக்கற குடும்பங்கள்ல பழைய மனுஷங்க இல்லை. சிலர் இறந்து போய்ட்டாங்க. சிலருக்கு உடல் நலம் இல்லாமல் வெளியே வருவதே இல்லை. சில பேர் குடும்பத்தில் தலைமுறையே மாறிடுச்சு. தினமும் இங்கேயே இருக்கிறவங்களுக்கு இந்த மாறுதல்கள் பத்தி தெரியும். நாம் இவ்வளவு நாள் இடைவெளிக்கப்புறம் இங்கே வரும்போது அவங்களுக்கு புதியவங்க. வெற்றிமணி அங்கிள், ராஜன், லிங்கம் அங்கிள் எல்லாரும் என்னோட அடிக்கடி ஃபோன்ல பேசிட்டிருக்காங்க.வீடியோ காலில் பாத்துக்கறோம். அதனால அந்நியமா தெரியலே. ஆனால் மத்தவங்க அப்படி இல்லையே, கரெக்டா நான் சொல்றது? அதைத்தவிர அந்த காலத்தில் இருந்த எனக்குப்பழக்கமானவங்க தன்னோட அடுத்தடுத்த வாரிசுகளுக்கு எவ்வளவு தூரம் பழைய ஊர்க் கதைகளை சொல்லிருக்காங்கன்னும் நமக்குத் தெரியாது. அதனால், அவங்களோட வாரிசுகள் எங்களை அந்நிய மனுஷங்க போலத்தான் பாப்பாங்க.

இப்போ நாளைக்கு நாம்ப கிளம்பி அம்மாவோட கிராமத்துக்கு போகப்போறோம், அவங்க ஊர்ல இருக்கிற கோயில்கள்ல தரிசனம் செய்ய. அங்கே பாரு, அம்மாவை புதுசா பாக்கற மாதிரிதான் எல்லாரும் நடந்துப்பாங்க. ஏன்னா, அங்கேயும் நிறைய பழைய ஃபேமிலி எல்லாம் வேற ஊர்களுக்கு போய்ட்டாங்க. காலம் காலமாக இப்படித்தான் எல்லா இடத்திலும் நடக்கிறது.

இப்போ நீங்க மும்பைல படிக்கறீங்க. படிச்சு முடிச்சு மேல் படிப்புக்கு வெளிநாடு போய் அது முடிஞ்சவுடன், வேற ஏதாவது கண்ட்ரில வேலையில் அமர்ந்து அதுக்கப்புறம் அஞ்சாறு வருஷம் கழிச்சு மும்பை நீங்க வந்தாலே எல்லாம் புதுசாத்தெரியும். எத்தனை பேரு அதுக்கு முன்னால் உங்களோட எவ்வளவு பழகியிருந்தாலும் கொஞ்சம் அந்நியன் மாதிரித்தான் நீங்க அவங்களுக்கு தெரியுவீங்க.இதுல தப்பு இல்லை. மனுஷ இயல்பு இப்படித்தான். சில விதிவிலக்குகள் உண்டு. ஆனால் பொதுவா இந்த மாதிரி சூழ்நிலைதான் இருக்கும். நான் என்ன பேசினாலும், இன்னும் ஒரு மாசம் இருந்தாலும் அவங்க மனசுக்குள் ஒரு அந்நிய உருவாகத்தான் இருப்பேன்.

என்னதான் முதல் இருபத்தைஞ்சு வருஷங்கள் இங்கே நான் வாழ்ந்திருந்தாலும், இப்போது நாங்கள் இங்கே அந்நியர்கள்தான். போகப்போக உங்களுக்கு இதெல்லாம் உங்க அனுபவம் மூலமாவே தெரிஞ்சுப்பீங்க.” என்று சொல்லி முடித்ததும், வாரிசுகள்” இப்போ புரிஞ்சுது” என்றனர். அப்போது வெற்றிமணி அவர்களைப் பார்த்து ” இந்த ஊர்லயே இருக்கற எனக்கு பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கற கிராமத்துக்கு ரொம்ப நாளுக்கப்புறம் போனாலே என்னை புது மனுஷனா பாக்க ஆரம்பிப்பாங்க. அப்படி இருக்கும்போது இவ்வளவு வருஷங்கள் கழிச்சு வர்ற உங்களை எப்படி நினைப்பாங்க? இதுவே நான் இந்த ஊர்லயே இருக்கறதாலே எல்லாருக்கும் அறிமுகம் செஞ்சு வச்சேன். உங்க அம்மா ஊர்ல அந்த மாதிரி யாரும் இல்லை. அங்கே இருக்கிறவங்க, யாராவது தெரிஞ்சவங்க இன்னும் இருந்தால் அடையாளம் கண்டுப்பாங்க.இல்லாட்டினா அந்நியம்தான். யாரு இவங்க அப்படின்னு தனக்குள்ளேயே பேசிப்பாங்க.” என்றான். சிறுவர்கள் சிரித்தபடியே ‘பிறந்த இடத்திலும் மனிதர்கள் அந்நியர்கள் ஆவதுண்டு’ என்பதை நினைவில் வைத்து தூங்கச் சென்றனர்.

வைஷ்ணவியும் வீட்டினுள் சென்றாள். மறுநாள் காலை அவர்கள் முன்னமே திட்டமிட்டபடி, எல்லோரிடமும் விடைபெற்று, திண்ணங்கோரைக்கு பயணம் செய்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *