இன்று அவர்கள்… நாளை நாம்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 28, 2023
பார்வையிட்டோர்: 3,866 
 
 

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று விடுமுறை நாள். அவசரமில்லாமல் படுக்கையை விட்டு எழும்போது மணி எட்டு. எனக்கு முன்பே என் மனைவி லதா எழுந்து தயாராகிக் கொண்டிருந்தாள். என்னங்க, சிவராமன் வீட்டுக்கு அவர் பெற்றோர் திவசத்திற்குப் போகணுமில்லையா? சீக்கிரம் கிளம்புங்க” என்று அவசரப்படுத்தினாள் என் மனைவி.

முந்தின நாள் சிவராமன் தன் மனைவியுடன் எங்கள் விட்டுக்கு வந்து “அப்பா அம்மா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. நாளை புரோகிதர்களை அழைத்து வீட்டில் திவசம் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். காலையிலேயே அவசியம் வந்துவிடுங்கள். நீங்கள் என் பெற்றோரின் அன்பைப் பெற்றவர்கள். அவசியம் வரவேண்டும்” என்று அழைத்து விட்டுச் சென்றிருந்தான்.

சிவராமன் சொல்வது சரியே. அவன் பெற்றோர் எங்களுக்கும் பெற்றோர் போலத்தான். நாங்களும் அவர்களை அப்பா அம்மா என்றுதான் அழைப்போம். அவர்களும் எங்களோடு அன்பாய்ப் பழகினார்கள். அவர்களைப் பற்றிய நினைவுடனே புறப்படத்தயாரானேன்.

முன்பு நாங்களும் சிவராமன் குடும்பமும் உட்லன்ட்சில் ஒரே வீடமைப்புப்பேடையில் வசித்து வந்தோம். இருவர் வீட்டிற்கும் நான்கு பிளோக்குகள்தான் இடைவெளி. அப்போதுதான் சிவராமன் குடும்பம் எங்களுக்கு அறிமுகமானது. அவன் பெற்றோர் தினமும் ஒரு முறையாவது எங்கள் வீட்டிற்கு வந்துவிடுவார்கள். என் பிள்ளைகளை அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு சிவராமன் தன் பெற்றோரைத் தன்னோடு வைத்திருப்பது மிகவும் பிடிக்கும். யார் இப்போது கூட்டுக்குடும்பமாக வாழ்கிறார்கள்? என்று என் மனைவியிடம் சொல்லியிருக்கிறேன். அவளும் “ஆமாங்க நமக்குத்தான் அந்த பாக்கியம் இல்லை. எவ்வளவுதான் அழைத்தாலும் அத்தையும், மாமாவும் மாடு, கண்ணு, தோப்பு, தொரவு எல்லாம் விட்டு வர முடியாதுன்னு வர மாட்டேங்கிறாங்க” என்று ஆதங்கப்படுவாள்.

வானம் மேக மூட்டமாய் இருந்தது… அப்பா, அம்மா பற்றிய எண்ணங்களுடனேயே காரை ஸ்டார்ட் செய்தேன். என் மனைவி முன்னேயும் பிள்ளைகள் பின்னேயும் ஏறிக்கொண்டார்கள். சிவராமன் ஜுரோங்கில் வீடு வாங்கிக் கொண்டு போய் விட்டான். ஜுரோங்கை நோக்கி வண்டி ஓடிக்கொண்டிருந்தது. மனதும் பழைய நினைவுகளை நோக்கி ஓட ஆரம்பித்தது.

சிவராமன் அப்பாவும் அம்மாவும் ரொம்ப அன்பாக பழகிக் கொள்வார்கள். அம்மா சொல்வார், தான் சுமங்கலி யாக சாக விரும்பவில்லை என்று. கடவுளிடம் தனக்கு முன் தன் கணவர் இறந்துவிட வேண்டும் என்று வேண்டிக் கொள்வாராம்.

காரணம், தனக்குப்பிறகு தன் கணவர், பார்த்துக் கொள்ள யாருமில்லாமல் சிரமப்படுவாரே என்பதால். கடைசியில் அப்படித்தான் நடந்தது. அப்பாதான் முதலில் இறந்தார். அவர் இறந்து ஒரு மாதத்தில் அம்மாவும் காலமானார்.

“என்னங்க ஒரே யோசனை?” என்றாள் என் மனைவி… சிவராமனின் ‘அம்மா அப்பா பற்றிய நினைவுகளில் மூழ்கிப்போனேன்’, என்றேன்.

அம்மா அப்பா இருவரும் ஒருவர் மேல் மற்றவர் கொண்டிருந்த அன்பு எங்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்கள் வயதான காதலர்களாகத்தான் எனக்குப் பட்டார்கள். இருவரும் கைகளைக் கோர்த்துக்கொண்டு பொடி நடையாக நடந்து எங்கள் வீட்டுக்கு வந்து விடுவார்கள். அப்பாவிற்கு பல் இல்லாததால் எதையும் நொறுக்கித்தான் சாப்பிடுவார். இருவரும் காபி பிரியர்கள். லதா அவர்கள் எப்போது வந்தாலும் காபியும், மேரி ரொட்டியும் கொடுப்பாள். வேண்டாம் என்று சொல்லாமல் பிரியமாய் இருவரும் சாப்பிடுவார்கள். அப்பா ரொட்டியைக் காபியில் நனைத்து சாப்பிடுவார்.

லதாவும் அவள் நினைவுகளை என்னோடு பகிர்ந்து கொண்டாள். “அப்பா இறந்த பிறகு ஒருநாள் அம்மா நம்ம வீட்டுக்கு வந்தார். என்னிடம் அப்பாவைப்பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். உன் மனசுக்குள் வைத்துக் கொள் என்றும் சொன்னார். நானும் உங்களிடம் இதைப்பற்றி இதுவரை சொல்லவில்லை” என்றாள் லதா. மௌனமாய்த் தலையாட்டினேன்.

லதா சொல்ல ஆரம்பித்தாள். “அப்பா, மகன் தன்னிடம் பேசவில்லையே என்று கவலைப்படுவாராம். அம்மாதான் சமாதானம் சொல்வாராம். பெரிய உத்தியோகத்தில் இருக்கிறவன். இரவில் எட்டு எட்டரைக்குத் தான் வீட்டுக்கே வருகிறான். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் விடுமுறை. அன்றும் அவன் நண்பர்கள் அவனை விடுவதில்லை. கிடைக்கிற கொஞ்ச நேரத்தை யாருக்குத்தான் ஒதுக்குவான்? அவன் மனைவி மக்களுக்கா இல்லை நமக்கா? என்று அம்மா புரியச் சொல்வாராம்.

பேரப்பிள்ளைகளைக் கூட அண்ட விடமாட்டேன் என்கிறார்களே என்று அப்பாவிற்கு ஏக்கம். அப்பா இந்தியாவில் வாத்தியாராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். வந்த புதிதில் பேரப்பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார். மருமகள் இங்கு பாடம் நடத்தும் முறையே வேறு என்று பிள்ளைகளைத் தடுத்து விட்டாளாம். மற்ற நேரங்களிலும், தாத்தா பாட்டியைத் தொந்திரவு பண்ணாமப் போய்ப் படியுங்கள் என்று விரட்டிக் கொண்டே இருப்பாளாம்.

மருமகளுக்கு எதுவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஒரு நாள் உங்க நண்பர் சிவராமன் அம்மாகிட்ட “டாய்லட்டை சுத்தமா வைச்சுக்கணும். அப்பா சில நேரங்கள்ல சரியா க்ளீன் பண்ணாம வராங்களாம். நீ கொஞ்சம் பாரும்மா” என்று சொன்னாராம்.

அன்னிலேர்ந்து அப்பா டாய்லட் போனா அம்மா மறுபடி போய் கிளீன் பண்ணுவாங்களாம். ஒருமுறை அப்பா மார்க்கெட்டுக்கு போறேன்னு போய் தனக்குப் பிடித்த வாழைப்பூ, வாழைத்தண்டு, பொன்னாங்கண்ணிக்கீரை என்று ஆசையா அள்ளிக்கினு வந்துட்டாராம்.

மருமகள் இதெல்லாம் ஏன் வாங்கினீங்க. நொண்டப் புடிச்ச வேலை. வீடே நாறிப்போயிடும் என்று குறை சொன்னாளாம். அன்றிலிருந்து அப்பா மார்க்கெட் போறதையும் விட்டுட்டாராம்.”

‘ஆமா லதா, அப்பாவும் அம்மாவும் கொஞ்சங் கொஞ்சமா ஒடுங்கிப் போய்ட்டாங்க. அம்மா எவ்வளவு தீர்க்கமா முடிவெடுத்து அப்பா இறந்த ஒரே மாதத்துல இறந்துட்டாங்க பாத்தியா?” என்றேன்.

அப்பா “வாம்மா இந்தியாவுக்கே திரும்பப் போயிடலாமுன்னு கூப்புடுவாராம். அம்மாதான் ஒத்த புள்ள, இங்க இருந்தா அவன் கொள்ளியாவது கிட்டுமேன்னு சொல்லித்தான் இங்கேயே இருக்க வச்சாங்க தெரியுமா?” என்றான் லதா.

“இதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய் லதா?” என்றேன். “இதற்கெல்லாம் காரணம் தலைமுறை இடைவெளிதாங்க. காலம் மாறி விட்டது. இளைய தலைமுறையினரிடம் அன்பு இல்லை என்று சொல்ல மாட்டேன். அவரவர் குடும்பத்தைக் கவனிக்கவே நேரம் போதமாட்டேங்கிறது. பெரியவர்கள் இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.”

இப்படி லதா சொன்னவைகளை என் மனம் எடை போட்டுக் கொண்டிருக்கையில் சிவராமனின் பிளோக் வந்துவிட்டது. “லதா நீ பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு போ. இரண்டாவது மாடிதான். நான் வண்டியைப் பார்க் செய்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வண்டியைப் பார்க் செய்யச் சென்றேன்.

அங்கங்கே நிறைய பேர் தென்பட்டார்கள். சிவராமன் வீட்டுக்கு வந்திருப்பார்கள் என நினைத்துக்கொண்டே மேலே படிகளில் ஏறி சிவராமன் வீட்டை அடைந்தேன். சிவராமனும் அவன் மனைவியும் முகமலர்ச்சியுடன் வரவேற்றார்கள். லதா பெண்கள் இருந்த அறைப்பக்கம் சென்றாள்.

நான் ஹாலில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து அங்கே நடப்பவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பா அம்மா படம் அங்கே வைக்கப்பட்டு மாலை போடப்பட்டிருந்தது. புரோகிதர் ஒருவர் அருகே அமர்ந்திருந்தார். பத்தி கொளுத்தி வைக்கப்பட்டிருந்தது. “அவா பயன்படுத்தின மூக்குக்கண்ணாடி, கைத்தடி, பொடி டப்பா எல்லாம் எடுத்து வாங்க என்றார்” புரோகிதர். சிவராமன் எல்லாவற்றையும் எடுத்து வந்தான். “ஐந்து செட் வேட்டி துண்டு, புடவை ரவிக்கைத்துணி கொண்டு வாங்க” என்றார். எல்லாம் அப்பா அம்மா படத்திற்கு முன்னே வைக்கப்பட்டன.

“அவா விரும்பி சாப்புடுகிற காய்கறிகள்” என்று புரோகிதர் சொல்லிக் கொண்டிருந்த போதே சிவராமனின் மனைவி எல்லாவிதமான காய்கறிகளையும் தட்டுகளில் கொண்டு வந்து வைத்தாள். அதில் வாழைப்பூ, வாழைத்தண்டு, பொன்னாங்கண்ணிக் கீரை எல்லாம் இருந்தன. சற்று முன்னர் லதா சொன்னது ஞாபகம் வந்தது. ஐந்து வாழை இலைகளில் அரிசியும் காய்கறிகளும் பரப்பப்பட்டன. புரோகிதர் சிவராமனை உட்கார வைத்து மந்திரங்களைச் சொன்னார்.

என் மனம் லதா சொன்ன தலைமுறை இடைவெளி பற்றியே வட்டமிட்டுக்கொண்டிருந்தது. நாளை நமக்கும் வயதாகி விட்டால் நாமும் நம் உணர்வுகளைச் சுருக்கிக் கொள்ள வேண்டுமா? நம் பிள்ளைகளும் நேரம் இல்லை என்பதைக் காரணம் காட்டி நம்மைத் தவிர்த்து விடுவார்களா, நாமும் வயதாகி விட்டால் மேசை, நாற்காலி போல ஜடப்பொருள்களாத்தான் உணர்வுகளற்று உலகிற்கும், நம் பிள்ளைகளுக்கும் பாரமாகி விடுவோமா? இல்லை, இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அன்பை வெளிப்படுத்தினால்தான் அது அன்பு. முதியோர் களின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும். “இன்று அவர்கள். நாளை நாம்” என்று எண்ணிப்பார்த்தபோது எனக்குள் ஒரு தெளிவு பிறந்தது.

‘வாங்கோ எல்லோரும் நமஸ்காரம் பண்ணிண்டு அட்சதை போட்டுக்கோங்க” என்ற புரோகிதரின் அழைப்பு என்னை நிகழ்காலத்திற்குக் கொண்டுவந்தது.

புரோகிதர் சொன்னபடி சிவராமன் மனைவி, குழந்தைகளுடன் அப்பா அம்மா படத்தை வணங்கினான். அதைத்தொடர்ந்து மற்றவர்களும் போய் வணங்கினர். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தது. சிவராமன் என்னிடம் வந்து இருநூறு பேருக்கு ஆனந்த பவன்ல சாப்பாடு சொல்லியிருக்கேன் என்றான். அவன் முகத்தில் பெருமை தெரிந்தது. “நீங்களும் வந்து அட்சதை போட்டுக்குங்க” என்றான் சிவராமன்.

மனைவியை அழைத்தேன். அப்பா அம்மாவை நினைத்து விழுந்து வணங்கி விட்டு அட்சதை போட்டுக் கொண்டதும் போகலாம் என்றேன்.

சிவராமனும் அவன் மனைவியும் சாப்பிட்டுப்போகலாம் என்றார்கள். முக்கியமான வேலை இருப்பதாகச் சொல்லி விட்டுப் புறப்பட்டுவிட்டேன். லதா ஒன்றும் புரியாமல் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு என்னைப் பின் தொடர்ந்தாள்.

காரைச் செலுத்தினேன் வீட்டை நோக்கி. “என்ன திடீர் வேலை?” என்றாள் லதா. ஒன்றுமில்லை, மனசுக்குப் பிடிக்கலை என்றேன். லதா முகம் கேள்விக்குறியானது. “லதா, இவர்கள் அப்பா அம்மா இருந்த போது அவர்கள் உணர்வுகளை மதிக்காமல் நடத்திவிட்டு, இறந்த பிறகு விழா கொண்டாடுவது எனக்கு சரி எனப்படவில்லை. நாம் நம் பெற்றோரை நடத்துவதை நம் பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாளை நம்மையும் நம் பிள்ளைகள் இப்படித்தான் நடத்துதவார்கள் என்பது ஏன் இவர்களுக்கு தெரியாமல் போயிற்று? நீ சொல்லுகிற தலைமுறை இடைவெளி, நேரமில்லை, காலம் மாறிவிட்டது எல்லாமும் சரிதான். ஆனால் எல்லோருடைய உணர்வுகளும் மதிக்கப்படவேண்டும். நீ என்ன நினைக்கிறாய்?” என்று நிறுத்தினேன்.

லதா மௌனமாய் ஆமோதித்தாள்.பிள்ளைகள் வெளியே பார்த்துக் கொண்டிருந்தார்கள். வானம் மழை பெய்து ஓய்ந்திருந்தது.

– முத்துக் கமலம், புன்னகைக்கும் இயந்திரங்கள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2008, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

புன்னகைக்கும் இயந்திரங்கள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2008, மணிமேகலைப் பிரசுரம், சென்னை. இந்நூலாசிரியர் திரு.இராம.வைரவன் தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் பிறந்தவர். இவரின் பெற்றோர் இராமநாதன் செட்டியார், நாச்சம்மை ஆச்சி. சிங்கப்பூரில் 10 ஆண்டுகளாகக் கணினி துறையில் பணியாற்றி வருகிறார். இது இவரின் முதல் சிறுகதைத் தொகுதி. எழுத்துலகம் சிறுகதை, கவிதை என விரிகிறது. படைப்புகள் இணைய இதழ்களிலும், சிங்கை, பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. இவரது க கவிதைகளும் பல பரிசுகளை வென்றுள்ள…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *