இனி நான் கெட்டவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 7,639 
 
 

“சீக்கிரமா கிளம்புங்க, ரெண்டு வருசம் கழிச்சு நம்ம புள்ள வர்றான், விமான நிலையம் போகனும்” என்று வேக வேகமாக அடுப்பில் வேலையை முடித்துவிட்டு காலை ஏழு மணிக்கே கிளம்பி இருந்தாள் மலர்.

மகிழ்வுந்தைத் துடைத்துக் கொண்டிருந்த நாகய்யன் சற்று பொறுமையிழந்து “காலையில இருந்து இதேதான் சொல்லிகிட்டு இருக்க, விமானம் இங்க வர்றதுக்கு இன்னும் மூன்று மணி நேரம் இருக்கு” என்று சலித்துக் கொண்டார். நமக்கு மட்டும் நம் பையனைப் பார்க்கனும்னு ஆசையில்லாத மாதிரி விரட்டிகிட்டு இருக்கா என்று முணங்கிக் கொண்டார்.

இங்கிலாந்துக்கு வேலைக்குச் சென்ற சூர்யா இரண்டு வருடம் கழித்து இப்பொழுது சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறான். அவனை அழைத்து வந்தவுடன் சொந்த ஊர் திருச்சிக்கு இரண்டு வாரம் கழித்துச் செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்திருந்தார் நாகய்யன். அங்கே சூர்யாவோட அண்ணன் மாறன் இருக்கிறார். அவரது திருமணத்திற்கும் சூர்யா இங்கிலாந்திலிருந்து வரவில்லை.

பத்து மணிக்கு தரையிறங்கும் விமானத்திற்கு காலை எட்டரை மணிக்கே சென்று காத்திருந்த நான்கு விழிகளும் பதினோரு மணிக்கு வெளியே வந்த மகனை ஆரத்தழுவி அணைத்த பிறகு வடித்த சிலசொட்டு ஆனந்தக் கண்ணீரில் திளைத்து இருந்தன. வீட்டில் ஒரே ஆராவாரமாக கூடியிருந்த சூர்யாவின் சில நண்பர்களும், சூர்யாவும் நாட்களைக் கடத்திக் கொண்டு இருந்தனர்.

ஒருவாரம் கழித்து நாகய்யன் நாம வர்ற வெள்ளிக் கிழமை திருச்சிக்குப் போகிறோம் என்றார். சட்டென்று அதிர்ந்து போன சூர்யா “நான் நாளைக்கே இங்கிலாந்து கிளம்பிடுவேன், எனக்கு இன்னும் ஒரு வருசம் அங்கே இருக்கனும்” என்று மெதுவாக சொல்லி முடித்தான்.

பாசத்தின் மிகுதியில் நாகய்யன் சற்றே கோபம் கொண்டு “அதெல்லாம் முடியாதுப்பா, ஒன்றரை வருசத்துல போயிட்டு வர்றன்னு சொல்லிட்டுப் போனவன், இரண்டு வருசம் கழிச்சுதான் வந்திருக்க, இனி நீ அங்கே போக வேண்டாம், உன் அண்ணனுக்குக் கல்யாணம் செஞ்சு வச்சாச்சு, அடுத்து உனக்கும் முடிச்சு வைக்கனும், அதனால நீ போகவேண்டாம்” என்று கட்டளை இட்டார். இறுதியில் சூர்யா எல்லோரும் அதிரும்படியான ஒரு விசயத்தைப் போட்டு உடைத்துவிட்டான். தான் அங்கே ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அந்தப் பெண் வேறு மதத்தவள் என்றும், நீங்கள்லாம் சம்மதிக்கலைன்னாலும் அந்தப் பொண்ணைத்தான் கல்யாணம் பன்னுவேன் என்றும் கூறி விட்டு வீட்டை விட்டு கிளம்பிவிட்டான்.

காதலே சற்றும் பிடிக்காத நாகய்யனுக்கு இது பெரிய இடி. நம்ம பிள்ளையா இப்படிப் பேசுகிறான் என்று சுத்தமாக நம்ப முடியாமல் வீட்டிலேயே புலம்பிக் கொண்டிருந்தார், அதுவும் தன்னிடமே மகன், நீங்கள் வேண்டாம் அந்தப் பெண்தான் முக்கியமென்று சொல்லிவிட்டானே என்று நொந்து வெதும்பினார். மறுநாள் கிளம்புவதற்கு மூன்று மணி நேரம் முன் வந்தவனுக்கும் நாகய்யனுக்கும் ஏற்பட்ட பேச்சுவார்த்தை முற்றிப் போய் “நீ என் மகனே இல்லைடா, உன்னைப் பெத்ததையே மறந்து தல முழுகிடுறேன், என் கண்ணுலையே படமா ஒழிஞ்சுப் போடா” என்று கோபமாக பேசிவிட்டார். தாயும் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அவள் இல்லாமல் என்னால் ஒரு நாள் கூட வாழ முடியாது என்று சென்றுவிடான்.

தனியாக விமான நிலையத்துக்குப் புறப்பட்டுச் சென்ற சூர்யாவை பொங்கி வழியும் கண்ணீரோடு காத்திருந்த நண்பன் முகிலன் சந்தித்தான். “நீ பன்றது சரின்னு எனக்குப் படலைடா, எதுவா இருந்தாலும் வீட்டைக் கஷ்டப் படுத்திட்டுப் போகாதே, நடந்ததையெல்லாம் வீட்டுல சொல்லிடலாம் இல்லையென்றால் நீ இதை என்னிடமும் சொல்லாமல் இருந்திருக்கலாம்” என்று முகிலன் வறண்டு போன தொண்டையில் பேசினான்.

இறுகிய குரலில் “இல்ல முகிலா, இப்போதைக்கு வீட்டுக்கு நான் கெட்டவன். இனி எனக்குக் கவலையில்லை. நீதான் என்னோட வீட்டைப் பார்த்துக்கனும், அவங்களுக்கு ஆறுதலா இருக்கனும், என்னைப் பற்றி எந்தத் தகவலும் உனக்கும் நமது நண்பர்கள் யாருக்கும் தெரியாது என்று சொல்லிவிடு. உங்களையெல்லாம் பிரிவதற்கு எனக்கு ரொம்ப கஷ்டமாதான் இருக்கு. ஆனால் கடந்த ஆறு மாசமா நான் யோசிச்சு எடுத்த முடிவு இது. உன்னிடமாவது இந்த உண்மையை சொல்லிவிடுவதால் ஏதோ என் மனதுக்கு ஒரு ஆறுதல். மரணம் எனக்கு பயம் இல்லை, இதுவும் தூக்குத் தண்டனைப் போலதான், சிறையில் தனியாய் இருந்து பின்னர் மரணிப்பது போல உங்களிடமிருந்து விலகி இருந்து நான் மரணிக்க விரும்புகிறேன், இந்த உண்மை உன்னை என்னைத் தவிற யாருக்கும் தெரியக் கூடாதென்று சத்தியம் செய்” என்று பேசி முடித்து சத்தியமும் வாங்கிக் கொண்டு கால்கள் நகர்த்திவிட்டான் சூர்யா.

ஆறு மாதத்திற்கு முன்புதான் சூர்யாவிற்கு புற்றுநோய் இருப்பதை அவன் அறிந்தான், அதைக் குணப்படுத்த முடியாமல் மருத்துவர்களும் கைவிட்டு விட, வாழ்க்கையை நீட்டித்து மட்டுமே கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறான். தன் இறப்பை நிச்சயம் பெற்றோர் தாங்கிக் கொள்ள மாட்டார்களென்று சகஜமாகிவிட்ட காதல் பிரச்சினையில் பிள்ளைகளைத் தலை முழுகும் எத்தனையோ நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாக இருந்து போகட்டுமே என்று மரணம் நோக்கச் சென்றுவிட்டான். இதிலும் சூர்யாவின் பெற்றோர்களுக்கு வருத்தமெனினும், அவனது மரணத்தை விடக் கொடிதல்ல.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *