(2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“வேணி, காலைல வாசல் தெளிக்க எந்திரிக்கிறப்ப என்னயும் எழுப்பி விடறியா?”
பரிமாறிக் கொண்டிருந்த வேணி, தம்பியை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள். குறும்பாயும். “உத்தரவுங்க மஹாராஜா. சமூகத்துல நாளக்கி என்ன விசேஷமோ?”
“இப்ப கிண்டலாத்தானிருக்கும். நாளக்கி இந்நேரத்துக்கு ஐயா காலரத் தூக்கி விட்டுட்டுத்தான் ஒக்காந்திருப்பார். நாளக்கி ஒரு வி.ஐ.ப்பி. கூட லஞ்ச் சாப்புடப் போறேனாக்கும். கோடீஸ்வர கோடீஸ்வர வி.ஐ.ப்பி. என்னோட பரம விசிறி. இன்னுங் கொஞ்சம் நெய் விடு. ஓ, ஐ ம் ஸாரி, இது ரசமா! ஒன்னோட நிதானத்தப் பாத்து நெய்யாக்கும்னு நெனச்சிட்டேன்.”
‘கிண்டலப்பாரு’ என்று தம்பியின் தலையில் ஒரு ஊமைக் குட்டு வைத்த வேணி, ஒரு பதில்க் கிண்டலில் ஈடுபட்டாள்.
“ஏனுங்க கவிஞர் கம் எழுத்தாளரே, சம்மர் வருதே, ஒங்க கோடீஸ்வர விசிறி கிட்ட சொல்லி ரெண்டு ஸீலிங் ஃபேன் வாங்கிக் கூரையில தொங்க விடப் படாதோ.”
சிரிக்காத வேணி. “இந்தக் கவிஞர் கம் எழுத்தாள ரோட மகிமை வெளியுலகத்துக்குத் தெரிய ஆரம்பிச்சிருச்சு. நீயும் அதை விரைவில் உணர்வாய் மிஸ் வேணி, விரைவில் உணர்வாய்.”
இவர்களுடைய உரையாடலை அவதானித்துக் கொண்டிருந்த அம்மா, தன் அதிருப்திக்கு சொல் வடிவம் கொடுத்தாள். “என்னடா இது வார்த்தக்கி வார்த்த வேணி வேணின்னுட்டு, ஒன்ன விட மூணு வயசு மூத்தவ, அக்கான்னு அழகாக் கூப்ட்டா என்ன? அவனுக்குத்தான் எட்டல. நீயாவது சொல்லேண்டி”
“நீ அலட்டிக்காதம்மா. அக்கா தம்பி ஒறவுக்கு மேலா நாங்க ஃப்ரண்ஸ். அப்படித்தான் பேசிக்குவோம். எனி அப்ஜெக்ஷன் மிஸ் வேணி?”
“யூ ஆர் அப்ஸல்யூட்லி ரைட் ஃப்ரண்ட்.” வேணி அவனை ஆமோதித்தாள்.
அம்மாவுக்குக் கடுப்பாகி விட்டது.
“எப்படியாவது போங்க. பேரச் சொல்லித்தான் கூப்புடற, வெறும் வேணின்னு கூப்ட்டா என்ன. மிஸ் வேணி என்ன மிஸ் வேணி? இருவத்தெட்டு ஆரம்பிச்சிருச்சு, இன்னும் மிஸ்ஸாத்தான் இருக்கா. எனக்கு பக்கு பக்குன்னுது, நீங்க கேலியும் கிண்டலுமா இருக்கீங்க.”
அடுப்பில் பொங்கி வழிகிற பால், ஜ்வாலையாகக் குறைத்ததும் கமுக்கமாய் அமுங்குவதைப்போல, வேணியின் உற்சாகம் தணிந்து போனது. அம்மாவை தீர்க்கமாய்ப் பார்த்தாள்.
“தெரியுதும்மா. கல்யாண வயசு பார் ஆயிருச்சு. இன்னும் எங்களுக்கு பாரமா இருக்கியேடீன்னு சொல்றீங்க.”
மகள் சொன்னதைக் கேட்டு அம்மாவுக்குக் கண்கள் கலங்கி விட்டன.
“ஐயையோ, என்னடிம்மா நீ இப்படிப் பேசிட்ட. நாங்க தானம்மா ஒனக்குப் பண்ணி வக்யணும். ஒங்கப்பாவும் அலஞ்சிட்டுத்தான் இருக்கார், நம்ம தகுதிக்கி ஒண்ணும் சரியா அமைய மாட்டேங்குதேம்மா. இன்னிக்கிக் கூட ஆஃபீஸ் விட்டு மாம்பலம் புரோக்கரப் பாத்துட்டு வர்றேன்னுதான் சொல்லிட்டுப் போனார். மணி ஒம்போதாகப் போகுது. எங்க அலஞ்சிட்டிருக்காரோ, எப்ப வர்றாரோ!”
வேணி அம்மாவைப் பின்புறமாய்க் கட்டிக் கொண்டு கன்னத்தோடு கன்னம் பொருத்தினாள்.
“ஸாரிம்மா, அநியாயத்துக்கு ஒங்க மனச நோகப் பண்ணிட்டேன். எனக்கும் இப்பக் கல்யாணம் பண்ணிக்க இன்ட்ரஸ்ட்டே இல்லம்மா. நீயும் அப்பாவும் என்ன வச்சி காப்பாத்துவீங்கன்னு சொல்லுங்க, காலம் பூரா நா ஒங்களோடயே இருந்துருவேன்.”
“சீ, என்ன ஔர்ற. அப்படியெல்லாம் இருக்க விட்ருவோமா என்ன!”
“அப்ப, என்ன வச்சுக் காப்பாத்த மாட்டீங்களா?”
“அவங்கள வுடு ஃப்ரண்ட், நா ஒன்னக் காலம்பூராக் காப்பாத்தறேன். நீ மட்டும் கட்சி மாறி வரதட்சணக்கிக் கழுத்த நீட்டிராத. பாரதி கண்ட புதுமைப் பெண்ணா இரு.”
“தங்கள் சித்தம் கவிஞர் கம் எழுத்தாளரே.”
“சரி, திரும்பவும் ஆரம்பிச்சிட்டீங்களா, டேய் சீக்கிரம் படு. காலைல சீக்கிரம் எழுப்பச் சொன்ன?”
“ஃப்ரண்ட் இரு இரு. நீ எழுதின ஆன்ட்டி வரதட்சணைக் கவிதைய நீ அம்மாக்குக் படிச்சிக் காட்டணும். என்ன பத்திரிகை அது?”
“காலச்சுவடு.”
“குமுதம், ஆனந்த விகடன்ல எல்லாம் எழுத மாட்டியா நீ? சரி அத எடுத்துட்டு வாயேன். வரதட்சணை அசிங்கத்தப் பத்தி நறுக் நறுக்னு எழுதியிருக்காம்மா. ரியலி ஸூப்பர்ப்.”
“ஆமா. அத நறுக்கி சட்டியில போட்டு பொறிக்க வேண்டியது தா.”
“இங்க பாத்தியா ஃப்ரண்ட், எங்கம்மாக்குக் கூட எதுகை மோனையெல்லாம் சரளமா வருது, கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்ங்கற மாதிரி!”
“அதெல்லாமில்லடி, இது சகவாச தோஷம்.”
“அம்மா மூட்ல இருக்காங்க ராஜா, அதக் கொண்டா வாசிப்போம்.”
“இப்ப ஒண்ணும் நீ வாசிக்க வேண்டாம். அப்பா வர்ற மாதிரியிருக்கு. அவர் எந்த மூட்ல வர்றாரோ. சத்தங்கித்தம் போடாம கம்னு இருங்க.”
அப்பா வந்தார். சோர்வாக வந்தார்.
வீடு நிசப்தமானது.
காலையில் ஆறுமணிக்கே வேணி இவனை எழுப்பி விட்டு விட்டாலும், இப்படிப் புரண்டு அப்படிப் புரண்டு, பாதிக்கண்ணைத் திறந்து நோட்டம் பார்த்து, ராத்திரிக் கனவை அசைபோட்டு, சோம்பல் முறித்துப் பள்ளியெழுச்சி நிறைவு பெற ஏழாகி விட்டது.
கண்ணாடியில் தாடையைத் தடவிப் பார்த்துக் கொண்டான்.
‘ஷேவிங் இன்றைக்கு டியூ இல்லைதான். ஆனாலும் பண்ணிக் கொள்ளலாம். பரவாயில்லை. விசிறிக்கு தரிசனந்தர ஸ்மார்ட்டாய்ப் போக வேண்டாமா?’
முந்தா நாள் துவைத்துத் தொங்கப் போட்டிருந்த சட்டையில் மடிப்புகள் திருப்திகரமாயில்லை.
தெருமுனை இஸ்திரி வண்டியில் அயண் பண்ணி வாங்கி வந்தான்.
அவ்வப்போது அம்மாவை அனத்தி வாங்குகிற பாக்கெட் மனியில் ரெண்டு ரூபாய் காலி.
இந்த உபரிச்செலவைச் சரிக்கட்ட இன்றைக்கு அயனா வரத்திலிருந்து அண்ணா நகருக்குப் பாதயாத்திரை தான் மேற்கொள்ள வேண்டும். வேண்டாம். தூய தமிழிலேயே நடக்கலாம்.
வழி நடைப் பயணம்.
பான்ட் இதே போதும். இன்றைக்கு அஞ்சாவது நாள்தான்.
ஏழே முக்காலுக்கு ஆள் ரெடி.
அப்பா டிஃபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அவர் கிளம்பிப் போன பின்னால் தான் இவன் வீட்டை விட்டு வெளியேற முடியும்.
காலையிலிருந்து இவனுடைய பரபரப்பை வேவு பார்த்த அப்பா, அவனைக்குறித்து அம்மாவிடம் மெல்லக் கேட்பது, அவரை வேவு பார்த்துக் கொண்டிருந்த இவனுடைய காதில் விழுந்தது.
“தொரை காலங்காத்தால டிப் டாப்பா எங்கக் கௌம்பிட்டாராம், கலெக்டர் வேலக்கி எதாச்சும் இன்ட்டர்வ்யூ வந்திருக்காமா? எந்த இன்ட்டர்வ்யூக்குப் போய்க் கிழிச்சான். கதை எழுதறேன் கவிதை எழுதறேன்னு பீச்லயோ பார்க்லயோ ஒக்காந்து பராக்குப் பாத்துட்டிருப்பான். எழுதறது தான் எழுதறான், காசு குடுக்கற பத்திரிகைக்கி எழுதறானா, எல்லாம் தண்டம்!”
அம்மா அப்பாவை அடக்கினாள்.
“சும்மா சும்மா கரிச்சிக் கொட்டாதீங்க. நீங்க நெனக்கிற மாதிரி இல்லீங்க, ஒரு பெரிய ஆளப் புடிச்சி வச்சிர்க்கான். இவனோட ரசிகராம். அண்ணா நகர்ல பெரீய்ய கடை வச்சிர்க்காராம். இன்னிக்கி மத்யான சாப்பாட்டுக்கு இவனக் கூப்ட்டிர்க்காராம். அதான் கௌம்பிட்டிர்க்கான்.”
“அப்ப, ஒரு வேள தண்டச் சோறு மிச்சம்.”
‘ரெண்டு வேளை’ என்று இவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். காலையில் டிஃபனும் வேண்டாமென்று அம்மாவிடம் நேற்றே சொல்லியாச்சு.
இந்த இட்டிலிகளுக்கு வயிற்றில் இட ஒதுக்கீடு செய்து, மதிய உணவுக்கு மனக்கசப்பு ஏற்படுத்துவானேன்?
அப்பாவின் ஆதங்க வெளிப்பாடுகள் புதுசில்லை இவனுக்கு. இது ஒரு வயசுக்கோளாறு.
நடுத்தர வயசிலிருந்து முதுமையை நோக்கி நகர்கிற ஒரு ரெண்டுங் கெட்டான் பருவத்தில், பெற்ற மகனைக் கரித்துக் கொட்ட ஓர் அரிப்பு எல்லாத் தகப்பன்களுக்கும் ஏற்பட்டாக வேண்டும் என்பது இந்தக் கவிஞன் கம் எழுத்தாளனின் ஆராய்ச்சி முடிவு.
அப்பா ஆஃபீஸூக்கு கிளம்பியதும் அம்மாவிடமும் வேணியிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.
அயனாவரம் மேட்டுத் தெருவில் படியிறங்கி, மெட்ரோ வாட்டர் காம்பவுண்டை ஒட்டி நடந்து, புதிய ஆவடிச் சாலையைக் குறுக்கு வெட்டில் கடந்து எட்டிப் பார்த்தால் அண்ணா நகர்.
மிஞ்சி மிஞ்சிப்போனால் முக்கால் மணி நேர நடை.
நடந்தான்.
அவ்வப்போது கர்ச்சீஃபையெடுத்துக் கழுத்தைச் சுற்றி வியர்வையைத் துடைத்தபடி நடந்தான்.
அந்த ஆர்ப்பாட்டமான டிபார்ட்மென்ட் ஸ்டோரின் முகப்பைப் பார்த்தாலே ஒரு மனச் சிலிர்ப்பு.
வறுமைக் கோட்டைப் பற்றிக்கொண்டு ஊசலாடிக் கொண்டிருக்கிற இவனுடைய வர்க்கத்துக்கு மறுக்கப் பட்டிருக்கிற பாணியிலமைந்த பிரமாண்டமான கடை. இதன் உரிமையாளர் சந்தேகமில்லாமல் ஒரு மேல் தட்டுக் கோடீஸ்வரனாயத்தானிருக்க வேண்டும்.
ஜோல்னாப்பை அறிவுஜீவிகள் பாஷையில், பூர்ஷ்வா.
ஸோ வாட்?
இவர் என்னுடைய வாசகர்.
ஏதோ ஓர் அம்சத்தில் என்னைவிடத் தாழ்ந்தவர்.
ஆரம்பத் தயக்கத்தைத் தலையைத்தட்டி அமுக்கி விட்டுப் படியேறினான்.
இவனுடைய வரவுக்காகவே காத்திருந்த மாதிரி முகம் நிறையப் புன்னகையோடு எதிர்த்திசையிலிருந்து வந்தவர், “மிஸ்டர் ராஜா?” என்கிற வரவேற்போடு இவனைக் கை குலுக்கக் கரம் நீட்டினார்.
வசீகரம் வஞ்சனையில்லாமல் வியாபித்திருக்கிற முகம். வயது நாற்பதைத் தாண்டியிருக்கலாம். ஆனாலும் முப்பதுகளுக்கான கம்பீரமான இளமை. தொப்பை கிப்பை போடாத கச்சிதமான உடலமைப்பு.
ரொமான்ட்டிக் புளு கலரில் முழுக்கை சட்டை. அதைத் தாங்கிப் பிடிக்கிற மாதிரி அடர்ந்த நீலத்தில் பான்ட். என்ன நிறம் என்று ஊகிக்க சிரமப்படுத்துகிற பளபளக்கும் ஷூ. உடையின் வர்ணத்தோடு இழைக்கிற மாதிரிப் பொருத்த மாய் ஒரு ட்டை. தாராளமாய், ஏராளமாய்த் தலைமுடி. சிகரெட் கறையால் களங்கமடைந்து விடாத உதடுகளின் மேலாய் நேர்த்தியாய்ச் செதுக்கப்பட்ட மீசை. அதற்குக் கீழே ஒரு காந்தப் புன்னகை.
கவிஞர் கம் எழுத்தாளனாய் மட்டுமல்லாமல், கவிஞர் கம் எழுத்தாளர் தம் ஓவியராய் இருந்திருந்தால் இந்த உருவத்தை மனசில் இருத்தி, வீட்டுக்குப் போய்த் தூரிகை கொண்டு தீட்டியிருக்கலாம்.
தன்னுடைய ப்ரத்யேக அறைக்கு ப்ரத்யேக அறைக்கு இவனைக் கை பிடித்து வழி நடத்திச் சென்றார்.
உள்ளே புகுந்ததும் முகத்தில் பனியடித்தது.
இவனுடைய கதைகளிலிருந்து சில விசேஷமான வரிகளை மிகுந்த ஈடுபாட்டோடு இவனோடு பகிர்ந்து கொண்டு இவனைப் புளகாங்கிதப் படுத்தினார்.
இவனுடைய லேட்டஸ்ட் வரதட்சணைக் கவிதையை வார்த்தை வார்த்தையாய் அலசினார்.
“இந்த அற்புதமான கவிதை மட்டும் ஒரு பதினஞ்சு வருஷம் முந்தி எழுதப்பட்டிருந்தா மிஸ்டர் ராஜா, நா நிச்சயமா வரதட்சணை வாங்காமத்தான் கல்யாணம் பண்ணியிருந்திருப்பேன். ஒங்களுக்கு இருக்கிற முற்போக்கு சிந்தனை, ஒங்க வயசுல அப்ப எனக்கு இல்லாமப் போனதுக்கு நா வெக்கப்படறேன் மிஸ்டர் ராஜா. ஆனா, அதுக்கு ப்ராயச்சித்தம் பண்றதுக்கு சில வருஷங்கள்ள எனக்கு ஒரு சந்தர்ப்பம் வரத்தான் போகுது. எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன்.
பையனுக்குக் கல்யாண ஏற்பாடு நடக்கறப்ப நிச்சயமா அவனுக்கு வரதட்சணைப் பேரம் பேச மாட்டேன். ஒரு பைசாக் கைமாறாமத்தான் அவன் கல்யாணம் நடக்கும். திஸ் இஸ் ய ப்ராமிஸ்.
உணர்ச்சி கொப்பளிக்க அவர் சொன்னதற்கு ஒரு திருத்தத்தை ராஜா முன்வைத்தான்.
“பாதி ப்ராயச்சித்தம் தான் சார் அது.”
“என்ன சொல்றீங்க?”
“ஆமா சார். பையனுக்கு வரதட்சணை வாங்கறதில்லன்னு எப்படி உறுதியாயிருக்கீங்களோ, அதே உறுதி, பொண்ணுக்கு வரதட்சணை குடுக்கறதில்லங்கறதிலயும் இருக்கணும். முன்னத விட இதான் கஷ்டமான காரியம். இதயும் நீங்க செஞ்சு காட்டிட்டீங்கன்னா, அதான் முழு ப்ராய்ச்சித்தம். முழு வெற்றி.”
மேஜைக்குக் குறுக்காய்க் கைகளை நீட்டி இவனுடைய கைகளைப் பற்றிக் கொண்டார் அவர்.
“மிஸ்டர் ராஜா, யூ ரியலி ஆர் ய ஜீனியஸ் ஐ ஸே! இந்த விஷயம் எனக்குத் தோணாமப் போயிருச்சு பாத்தீங்களா! இதான் ஒரு இலக்கியவாதிக்கும் ஒரு வியாபாரிக்குமுள்ள வித்யாசம். என்ன சொல்றீங்க!”
என்ன சொல்லுவான்?
சிரித்தான்.
மனசுக்குள் அப்பா எட்டிப் பார்த்து விட்டுப் போனார்.
இப்படியாகவே மதிய உணவுக்கு வேளை வந்தது.
“வாங்க மிஸ்டர் ராஜா, லஞ்ச்சுக்குப் போகலாம். வீட்ல யாருமில்ல, ஹோட்டேல் தான். எங்க போலாம் சொல்லுங்க.”
“ஹோஸ்ட் நீங்க, எங்க கூட்டிக்கிட்டுப் போனாலும் சரிதான்.”
செவிவழிச் செய்தியாய் மட்டுமே இவன் அறிந்திருந்த நட்சத்திர ஹோட்டேல் ஒன்றின் பெயரை உச்சரித்து, அங்கே போகலாம் என்றார்.
கிழக்கிந்தியக் கம்பெனி சிப்பாய் மாதிரியான தோற்றத்திலிருந்த உயரமான காவலாளி திறந்து விட்ட, டாலடிக்கிற உலோகக் கைப்பிடியால் பார்டர் போட்ட ராட்சசக் கண்ணாடிக் கதவுக்குள்ளே பிரவேசிக்கவே பிரமிப்பாயிருந்தது.
மெத்து மெத்தென்ற கார்ப்பெட் விரிப்புக்கு இவனுடைய ரப்பர் செருப்புகள் ஒரு முரணாயிருந்தன.
பிரமிக்கவோ சங்கடங்கொள்ளவோ இதிலென்ன இருக்கிறது ராஜா?
நீ ஒரு தமிழ்க் கவிஞன்.
நீ ஒரு தமிழெழுத்தாளன்.
நீ சராசரிக்கு மேம்பட்டவன்.
நீ வித்யாசமானவன்.
நட..
நெஞ்சை நிமிர்த்தி நட.
தலை நிமிர்ந்து நட.
தமிழ்த் திமிரோடு நட.
நடந்தான்.
உள்ளே ரெஸ்ட்டாரன்ட்டில், செவிவழிச் செய்தியாய்க் கூட இவன் அறிந்திராத உணவு வகைகள்.
அப்புறமாய் அம்மாவிடமும் வேணியிடமும் ஒப்பிப்பதற்காகச் சில பெயர்களைப் பரிச்சயம் செய்து கொண்டான்.
அப்பழுக்கில்லாத நாப்கினை உதடுகளின் விளிம்பில் ஒற்றியெடுத்தபடி இவனுடைய குடும்பத்தைப் பற்றிக் கேட்டார்.
சொன்னான். பட்டம் பெற்று மூணேமுக்கால் வருஷமாய் வேலை அமையாமலிருப்பதை.
சகோதரியும் சிநேகிதியுமான வேணிக்குக் கல்யாணத்துக்கு வேளை வராமல் காலங்கடந்து கொண்டிருப்பதை.
லௌகீக யதார்த்தங்களுக்கு முன்னால் இவனுடைய எழுத்துக்கள் அவமரியாதைப்பட்டு நிற்பதை.
இவனைக் குறித்து அப்பாவுக்கு நிறைய வருத்தம் இருப்பதை.
எல்லாவற்றையும் சிரத்தையோடு செவியேற்றுக் கொண்டவர், கொஞ்சம் யோசனையோடு சொன்னார், “மிஸ்டர் ராஜா, நா ஒண்ணு சொல்லுவேன், நீங்க தப்பாவே எடுத்துக்கக் கூடாது.?”
“நீங்க ஒரு படைப்பாளி, நா ஒங்களோட தீவிர வாசகன்ங்கற உன்னதமான நிலையிலயிருந்து பூமிக்கி எறங்கி வந்து நாம நண்பர்களாப் பேசுவோம். ஒரு ஃப்ரண்டுங்கற மொறையிலயும், ஒங்களவிட வயசுல மூத்தவன்ங்கற மொறையிலயும், ஒங்களவிட தேவைகள் குறைவா உள்ளவன்ங்கற மொறையிலயும் ஒங்களுக்கு எதாவது செஞ்சாகணும்னு நா ஆசப்படறேன். அந்தக் கடமையும் உரிமையும் எனக்கிருக்குன்னு நெனக்கிறேன். ஆனா ஒங்க ப்ரியாரிட்டி என்னன்னு எனக்குத் தெரியாது. அத நீங்கதான் சொல்லணும். சொல்லுங்க. மிஸ்டர் ராஜா, நீங்க ஏதாவது ஏன்ட்டக் கேட்டுத்தான் ஆகணும். ப்ளீஸ். இப்ப சொல்லாட்டி கூட பரவாயில்ல. சாவகாசமாச் சொல்லுங்க. ஆனா, கட்டாயம் சொல்லணும். நா காத்திட்டிருப்பேன்.”
இவனுக்கு என்ன சொல்லவென்று புரியவில்லை.
இலக்கிய சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து, படைப்பாளி கிரீடத்தைத் துறந்து விட்டு ஒரு சாமான்யனாய், பாமரனாய் இந்தத் தொழிலதிபர் முன்னே நின்று கொண்டிருப்பது போலிருந்தது.
அம்மாவும் வேணியும் மனசுக்குள் இட வலமாய்ப் பெண்டுலமாடினார்கள்.
அப்பாவுந்தான்.
தேவைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் ஒன்றிரண்டைத் தீர்த்து வைக்க ஒரு புண்ணியவான் தயார் நிலையிலிருக்கிறார்.
‘சந்தர்ப்பத்தை புத்திசாலித்தனமாய்ப் பயன்படுத்திக் கொள், தப்பே இல்லை’ என்றது பொது அறிவு.
‘உன்னுடைய மேதாவிலாசத்தை இந்தப் பணக்காரக் கால்களில் இடற விடத்தான் போகிறாயா’ என்று கேட்டது சிந்தனைச் செருக்கு.
“சார், நா அப்பறமா யோசிச்சிச் சொல்றேனே” என்று சமாளித்தான்.
“நோ ப்ராப்ளம், ஐ வில் வெய்ட். ஆனா என்ன வில் வெய்ட். ஆனா என்ன ஏமாத்திரக் கூடாது, நா அப்ஸெட் ஆயிருவேன்.”
வீட்டில், ராத்திரி சாப்பாட்டு வேளையிலும் மனசு யோசனையாய்த்தானிருந்தது.
அம்மாவிடமும் வேணியிடமும் அன்றைய நிகழ்வுகளைத் தொகுத்துச் சொல்லி முடித்திருந்தான். இந்தக் கடைசி ஐட்டத்தை மட்டும் கொஞ்சம் ஓரங்கட்டி வைத்திருந்தான்.
அப்பா இன்றைக்கு சீக்கிரமே வீடு திரும்பியிருந்தார். வேணி பரிமாறிக் கொண்டிருந்தாள்.
“ரசம் இன்னுங்கொஞ்சம் விடட்டா ஃப்ரண்ட்? நெய்யில்ல, ரசம்.”
அவளை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தான். இப்போது சொல்லி விட வேண்டியது தான்.
சொன்னான்.
“நீ என்னடா கேட்ட?” என்றாள் அம்மா, ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும்.
“யோசிச்சிச் சொல்றேன்னு சொன்னேம்மா.”
“யோசிக்க என்னடாயிருக்கு, பெரிய பணக்காரங்கற, பெரிய கடை வச்சிர்க்கார்ங்கற, அவரோட கடையில ஒரு சூப்பர்வைசர் வேல போட்டுத் தரச் சொல்லிக் கேக்கறது தான?”
“அவர் பணக்காரர் தாம்மா, ஆனா என்னோட வாசகர். எம்மேல மரியாதை வச்சிர்க்கறவர். அவர்ட்ட கை கட்டி எப்டீம்மா நா வேல பாக்க முடியும்.”
இவன் சொன்னதைக் கேட்டு அம்மாவின் சுருதி பிசகி விட்டது.
“சரிப்பா, அவர் கடையில் வேண்டாம். அவருக்குத் தெரிஞ்ச பெரிய மனுஷங்க எத்தன பேர் இருப்பாங்க, யார்ட்டயாவது சொல்லி ஒரு வேல வாங்கிக் குடுப்பார்ல்ல, நீ கேட்டிர்க்கலாமே ராஜா?”
இந்தக் கட்டத்தில் அப்பா உள்ளே புகுந்தார்.
“அவர் தாம் பெரிய எழுத்தாள மேதையாச்சேடி, யார்ட்ட கை கட்டி சேவகம் செய்வார்? எவனாவது ஓசியில தீனி போட்டா போய்த் தின்னுட்டு வருவார். ஏண்டா அந்த ஆள் அவ்ளோ ஸீரியஸ்ஸாப் பேசினான்னு சொல்றியே, கேக்க வேண்டியது தானடா. எங்கக்காக்குக் கல்யாணம் ஆகவேண்டியிருக்கு, கொஞ்சம் ஹெல்ப் பண்ணுப்பான்னு கேக்க வேண்டியது தானடா, கேட்டியா நீ?”
அவர் முஸ்லிம்ப்பா.
சொல்லிவிட்டு நாக்கைக் கடித்து கெண்டான். வழுக்கி விட்டது உறைத்தது. அனிச்சைச் செயல் மாதிரி, இவன் சொல்லக் கருதியிராத வாக்கியம் எப்படியோ வெளியே வந்து விழுந்து விட்டது.
அப்பா பிடித்துக் கொண்டார்.
“ஒங்கக்காவ ரெண்டாந்தாரமாக் கட்டிக்கவாடா அந்த ஆளக் கேக்கச் சொல்றேன்? கல்யாணச் செலவுக்கு அம்பதாயிரமோ ஒரு லட்சமோ அந்த ஆள அசத்தி வாங்கப்பாருன்னா, சம்மந்தமேயில்லாம அவர் முஸ்லிம்ங்கறியே. கேட்டுப் பாக்கறது, குடுத்தா வாங்கிக்கிறது குடுக்காட்டி போடான் னுட்டு வந்துர்றது. ஒனக்கு எங்க அவ்ளோ பொறுப்பு! ஒங்கக்காவையும் ஒன்னையும் காலேஜ்ல படிக் க்கவக்க அழுத பணத்துல இவ கல்யாணத்த முடிச்சிர்க்கலாம்.”
வழக்கமாய் இவனுக்காகப் பரிந்து பேசுகிற அம்மா இப்போது வாயைத் திறக்காதது, அப்பா சொன்னதில் அம்மாவுக்கும் சம்மதந்தான் என்று உணர்த்தியது.
இவனுக்குள் நியாயமாகவோ அநியாயமாகவோ ஒரு சங்கடம் பரவியது. தான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதை ஒப்புக் கொள்ள இயலவில்லை. தலை கவிழ்ந்து, பருக்கைகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தான்.
நிசப்பத்தை விலக்கிக் கொண்டு கொண்டு இவனுடைய தலைக்கு மேலாய் ஒலித்தது வேணியின் குரல்.
“ஊறுகா வக்யட்டுமா ஃப்ரண்ட்?”
இந்த சந்தர்ப்பத்தில் அப்பா திரும்பவும் வெடித்தார். “ப்ரண்ட் என்னடி ஃப்ரண்ட்? பேரச் சொல்லிக் கூப்புடேண்டி! நீயும் அவனுக்கு ஜால்ரா தட்டித் தட்டித்தான் ஒன்னால நாங்கெட்டேன், என்னால நீ கெட்டேன்னு ஆய்ட்டீங்க.”
ராஜாவைப் போல மௌனியாயிராமல், வசமாய் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தால் வேணி அப்பாவை மீறிக் குரல் கொடுப்பாள்.
அப்படியரு சந்தர்ப்பம் இப்போது.
“ஸு..கொஞ்சம் சும்மா இருங்கப்பா. ஒங்களுக்கு இதெல்லாம் புரியாது. ப்ரண்ட், ஊறுகா?”
அவளைத் தலைநிமிர்ந்து
வழக்கமாய் இவனுக்காகப் பரிந்து பேசுகிற அம்மா இப்போது வாயைத் திறக்காதது, அப்பா சொன்னதில் அம்மாவுக்கும் சம்மதந்தான் என்று உணர்த்தியது.
இவனுக்குள் நியாயமாகவோ அநியாயமாகவோ ஒரு சங்கடம் பரவியது. தான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதை ஒப்புக் கொள்ள இயலவில்லை. தலை கவிழ்ந்து, பருக்கைகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தான்.
நிசப்பத்தை விலக்கிக் கொண்டு கொண்டு இவனுடைய தலைக்கு மேலாய் ஒலித்தது வேணியின் குரல்.
“ஊறுகா வக்யட்டுமா ஃப்ரண்ட்?”
இந்த சந்தர்ப்பத்தில் அப்பா திரும்பவும் வெடித்தார். “ப்ரண்ட் என்னடி ஃப்ரண்ட்? பேரச் சொல்லிக் கூப்புடேண்டி! நீயும் அவனுக்கு ஜால்ரா தட்டித் தட்டித்தான் ஒன்னால நாங்கெட்டேன், என்னால நீ கெட்டேன்னு ஆய்ட்டீங்க.”
ராஜாவைப் போல மௌனியாயிராமல், வசமாய் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தால் வேணி அப்பாவை மீறிக் குரல் கொடுப்பாள்.
அப்படியரு சந்தர்ப்பம் இப்போது.
“ஸு..கொஞ்சம் சும்மா இருங்கப்பா. ஒங்களுக்கு இதெல்லாம் புரியாது. ப்ரண்ட், ஊறுகா?”
அவளைத் தலைநிமிர்ந்து பார்க்க இயலாதவனாயிருந்தான். “ம்” என்கிற ஓரெழுத்தில் ஊறுகாய்க்கு ஒப்புதல் அளித்தான்.
கண்ணாடி பாட்டிலிருந்து ஒரு ஊறுகாய்த் துண்டைக் கரண்டியிலெடுத்து இவனுடைய ப்ளேட்டின் விளிம்பில் வைத்தபடி வேணி சொன்னாள் மெல்ல:
“ஃபைவ் ஸ்டார் ஹோட்டேல்ல லஞ்ச் சாப்ட்டியே, ஒன்னோட ஹோஸ்ட் கிட்ட சொல்லி லெஃப்ட் ஓவர்ஸ் எல்லாம் பாக் பண்ணி எடுத்துட்டு வந்திர்க்கலாம்ல நீ, இந்த ஃப்ரண்டுக்காக…”
இப்போது இவன் அவளைத் தலைநிமிர்ந்து பார்த்தான்.
– தீராநதி, ஏப்ரல் 2003