ஆத்மாவின் தாளங்கள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 7,836 
 
 

விநாயகர் படத்தருகில் இருந்த சுவர்க்கடிகாரம் இரவு பத்தடித்து ஓய்ந்த பின்னும் சத்தியமூர்த்தி ‘வெற்றியடைய வேண்டுமா? பிரம்மச்சரிய விரதத்தில்…..’ என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி, நித்யா இருவரும் தனித்தனியாக இரண்டே அறைகள் கொண்ட அந்த சிறிய வீட்டில் இருந்த கட்டில்களில் தனித்தனியாக அவர்கள் படுத்திருந்தார்கள். கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டே புத்தகம் படித்துக்கொண்டிருந்த சத்தியமூர்த்தியின் அருகில் வந்த நித்யா “என்னங்க இன்னும் நீங்க தூங்கலையா?” என்று கேட்டாள்.

“இல்லை நித்யா, நீ தூங்கு லைட் எரிந்து கொண்டிருப்பதால் உனக்கு தூக்கம் வரலையா ?”என்று அவன் கேட்டதற்கு, அவள் ஏதோ தனக்குள்ளேயே கூறிக்கொண்டே மீண்டும் சென்று படுத்துக் கொண்டாள். படுத்தவள் தூங்குவதுபோல் கண்களை மூடிக்கொண்டாள்.

சத்தியமூர்த்தி புத்தகத்தை மூடி விட்டு அவள் படுத்திருக்கும் நிலையைப் பார்த்தான். கடந்த ஒரு மாதமாக அவன் கடைபிடித்திருந்த பிரமச்சரியம் காற்றில் பறந்து விடுமா?, தான் அவளுக்குக் கொடுத்த வாக்குறுதி எல்லாம் தவிடு பொடியாகி விடுமா ? என்று அச்சப்பட்டான்.

அவளுடைய கருங்கூந்தல் இழைகள் மின்விசிறியின் சுழற்சியில் முன் நெற்றியில் தவழ்ந்து விளையாடிக் கொண்டு இருந்தன. அவள் மல்லாந்து படுத்துக்கொண்டு இருந்ததால் அவள் விடும் மூச்சுக் காற்றினாலும் மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தாலும் அவளுடைய மெல்லிய ஆடைக்குள் செழுமைகள் ஏறி இறங்குவதைப் பார்த்து, அவனை நிலை தடுமாற வைப்பதுபோல் அவனுக்குத் தோன்றியது. அப்போது அறையில் மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தாலும் அவன் முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது..

இன்னும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தால், தான் அவளிடம் கூறிய உறுதிமொழி பொய்யாகி, தன்னை ஒருமாதிரியாக நினைத்து விடுவாள் ? அதனால் அவள் மனம் புண்படும்படி தான் வரம்பு மீறி விடுவேனோ ? என நினைத்து விரைந்து சென்று விளக்கை அணைத்து விட்டு படுக்கையில் சத்தியமூர்த்தி சாய்ந்தான். சுட்டுப் போட்டாலும் தனக்கு இப்போது தூக்கம் வராததுபோல் இருக்கிறது. அவன் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே கடந்து போனவைகளை புரட்டிப் பார்க்க ஆரம்பித்தான்.

சத்தியமூர்த்தி கல்லூரியில் படிக்கும்போதே, நித்யாவிடம் அடிக்கடி பேசி பழகி இருக்கிறான். அவள் அருகில் இருந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாலே, அவனுக்கு அதில் ஓர் இனம் தெரியாத இன்பத்தையும் உணர்ந்தான். எத்தனையோ பெண்களிடம் அவன் பேசினாலும் நித்யாவிடம் பேசும்போது மட்டும் ஒரு இன்பத்தில் மிதப்பதுபோல் உணர்ந்தான். இதற்குப் பெயர்தான் காதல் என்பதா என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டான்.

சத்தியமூர்த்தி கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன். பயந்த சுபாவம் உள்ளவன். எனவே எதையும் வெளிப்படையாக கூறுவதற்கு அஞ்சுவான். அவன் நித்யாவைக் காதலிப்பதாக, அன்று அவளிடம் கூறியிருந்தால், அவன் இன்று இப்படி நித்யாவிடம் வாக்குறுதி கொடுத்து விட்டு, தூக்கம் வராமல் கஷ்டப்பட்டு கொண்டு இருக்க மாட்டான். அவன் தன்னோட காதலை வளர்த்தானே தவிர வெளிப்படையாக அவளிடம் காதலைக் கூறவில்லை. இதுதான் அவன் செய்த மிகப் பெரிய தப்பு.

அவன் கல்லூரிப் படிப்பும் முடிந்தது. எல்லாமே மின்னல் வேகத்தில் நடந்து முடிந்துவிட்டது .ஆம். நிதயாவுக்கும் சத்தியமூர்த்தியின் நண்பன் பரத்துக்கும் எதிர்பாராமல் திருமணம் நிச்சயார்த்தம் முடிந்தது. தன்னோட காதலை பற்றி அப்போதும்கூட நித்யாவிடமோ நண்பன் பரத்துவிடமோ வெளிபடுத்தாமல், அவன் மனதிற்குள்ளேயே போட்டு புதைத்து விட்டான். சத்தியமூர்த்தி, பரத்-நித்யா திருமண நிச்சயார்த்தம் சென்று நித்யா எங்கிருந்தாலும் வாழ்க என்று மனநிறைவோடுதான் வாழ்த்தினான்.

திருமணம் நிச்சயார்த்தம் முடிந்து பதினைந்து நாட்கள் கழித்துதான் நித்யா-பரத்தின் திருமணம் என முகூர்த்தநாள் பார்த்திருந்தார்கள். அதற்குள் நிதயாவின் வாழ்வில், பரத் வாழ்வில் விதியானது விளையாடி விட்டது. என்றும்போல் அன்றும் பரத் அலுவலகத்திற்கு ஸ்கூட்டரில் சென்றவன், எதிரே வந்த லாரியில் அடிபட்டு தூக்கி எறியப்பட்டு பலமாக மண்டையில் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

நித்யாவுக்குத் தகவல் கிடைத்து அதிர்ச்சியுடன் மருத்துவமனையை சென்றடைந்தாள். அவள் தகவல் கிடைத்து மருத்தவமனைக்குச் செல்வதற்கு முன்பாகவே சத்தியமூர்த்திக்குத் தகவல் கிடைத்து, அங்கு சென்று தன் நண்பன் பரத்துக்கு இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் இரத்தம் கொடுத்த பிறகு , பரத் பத்து நிமிடங்கள்தான் உயிருடன் இருந்திருப்பான்.. அதற்குள் தன் மனதில் தோன்றியதையெல்லாம் சத்தியமூர்த்தியிடம் கூறி விட்டான்.

பரத், சத்தியமூர்த்தியைப் பார்த்து “ சத்தியம் நிதயாவுக்கு வாழ்வு கொடு. இவ்வளவு இளமையில் அவளோட வாழ்க்கை முடிய வேண்டாம். பொதுவாக திருமணம் நிச்சயார்த்தம் முடிந்த மாப்பிள்ளை , விபத்தில் இறந்து விட்டால் , அந்தப் பெண்ணை ராசியில்லாதவள் என்ற இந்தச் சமூகம் முத்திரையைக் குத்தி விடும். அதன்பிறகு நித்யாவின் திருமணம், அவள் வாழ்வு என்பது கேள்விக் குறியாகி விடும். நிதயாவுக்கு நீதான் வாழ்வு கொடுக்க வேண்டும். எந்தக் காரணமும் கூறி என் வேண்டுகோளை மறுத்து விடாதே” என்று பரத் கூறும்போது சத்தியமூர்த்தி கண்ணீர் பொங்க, எதிரே நின்று கொண்டிருந்த நிதயாவைப் ஏறிட்டுப் பார்த்தான்.

தன்னோட நண்பன் பரத்தின் இறுதி வேண்டுகோளை அவனால் அப்போது மறுத்துக் கூற முடியவில்லை. அப்போது தன் எதிரே நின்றுகொண்டு இருந்த நித்யாவிடம் சம்மதம் கேட்டு விட்டு , பரத்துக்கு பதில் கூறமுடியாத நிலையில் பரத்தின் உடல் நிலையானது மிகவும் மோசமாக இருந்தது. எனவே நண்பனின் வேண்டுகோளுக்கு இணங்கி ‘சரி’ என்பதுபோல் தலையாட்டிக் கொண்டே கண்ணீர் ததும்ப சத்தியமூர்த்தி ,பரத்தின் உள்ளங்கையில் தன் உள்ளங்கையை வைக்கவும் அவன் உயிர் பிரிந்தது.

அப்போது தன் பக்கத்தில் இருந்த நித்யா கண்ணீர் விடுவதைக் கண்டு சத்தியமூர்த்தி அவளைத் தேற்றினான். பரத்துக்கு தாய் தகப்பன் உறவினர்கள் யாரும் இல்லாததால், சத்தியமூர்த்தியே பரத்தின் இறுதிக் காரியங்களைப் பார்த்தான்.

ஒரு மாதம் கழித்து சத்தியமூர்த்தி நித்யாவைச் சந்தித்து “ நித்யா உனது மனதைத் தேற்றிக்கொள். உனக்கு ஒரு துணை அவசியம் தேவை. மேலும் ஒரு பெண் இந்தச் சமூதாயத்தில் தனியாக வாழ்வது, என்பது உடல்ரீதியாகவும் உள்ளரீதியாகவும் பலவிதமான இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். கதைகளில் வேண்டுமானால் புதுமைப்பெண் வீரப்பெண் ஏன் ஆண்கள் மட்டும் தனியாக வாழும்போது, ஒரு பெண்ணால் வாழமுடியாதா எனப் படிக்கலாம் மேடை ஏறியும் பேசலாம். ஆனால் இது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதைப் புரிந்து கொள்.

எனக்காக எதுவும் சொல்லவில்லை உன் எதிர்காலத்தை நினைத்துதான், நண்பன் பரத்துக்கு வாக்கு கொடுத்தபடி, நான் உனக்கு துணையாக இருக்கேன். நாம் ரெண்டு பேரும் தனியாக ஒரே வீட்டில் சேர்ந்து இருந்தாலும் பக்கத்தில் இருப்பவர்கள் ஒரு மாதிரியாகப் பேசுவார்கள். எனவே நாம ரெண்டு பேரும் பதிவுத் திருமணம் செய்து கொள்வோம்.. மேலும் சத்தியமூர்த்தி தொடர்ந்தான்.

“நண்பன் பரத்துக்கு வாக்கு கொடுத்தற்காகத்தான் இந்த முடிவுக்கு வந்தேன் என்று மட்டும் நீ நினைத்து விடாதே நீ தனிமரமாகயிருந்து கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டு என்னால் தாங்கிக் கொள்ள முடியாது நன்கு யோசித்துத்தான் நான் கூறுகிறேன்” என்றான் சத்தியமூர்த்தி.

நித்யா அவனது நல்ல எண்ணத்தை புரிந்து கொள்ளாமல், கோபத்துடன் “சத்தியம், நான் இளமையாகவும் அழகாகவும் இருப்பதால்தானே என்னை ஏற்றுக் கொள்ள முன் வருகிறீர்கள் “என்றாள் நித்யா

”இல்லை நித்யா இல்லை. உண்மையிலேயே உனக்கு ஒரு நல்ல வாழ்வு கொடுத்து, உன் பாதுகாப்பு கருதித்தான் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறேன். உன்னோட இளமையும் அழகையும் கண்டு அல்ல என்பதைப் புரிந்து கொள் நித்யா.” அப்போதுகூட அவன் தான் கல்லூரியில் படிக்கும்போது நித்யாவைக் காதலித்தது குறித்து ஒன்றும் கூறவில்லை.

“நான் நினைத்தால் அழகான இளமையான பெண்ணைப் பார்த்து, மணம் முடித்துக் கொள்ளலாம்.. ஆனால் உன்னைத் தனியே தவிக்க விட என் மனம் இடம் கொடுக்கவில்லை. உனக்கோ உற்றார் உறவினர் யாரும் இல்லை. இந்நிலையில் இப்பொல்லாத உலகில் நீ தன்னந்தனியே இருப்பது மிகவும் கஷ்டம் நித்யா. நாம் இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்வோம். நீ விரும்பினால் நாம் இருவரும் கணவன் மனைவியாக இருப்போம் .உனக்கு விருப்பமில்லை எனில், உனக்கு நான் ஒரு பாதுகாவலனாகவே இருந்து விடுகிறேன்“ என்று அவளுக்கு புரியவைக்க முயற்சி செய்தான் சத்தியமூர்த்தி.

“சத்தியமூர்த்தி என்ன பேசுகிறீர்கள் என்று தெரிந்து கொண்டு சுய நினைவோடுதான் பேசுகிறீர்களா ? உங்களுக்கு இப்போது என் இளமையான உடம்பு தேவை அதை அனுபவிக்க ஆயிரம் கதைகள். அடுக்கடுக்கான வாக்குறுதிகள் அப்படித்தானே…!” என்றாள் நித்யா !

“ஐயோ நித்யா என்ன என்னை எல்லாரையும்போல் என்னையும் காமவெறி பிடித்து அலையும் காமுகன் என்று நினைத்து விட்டாயா நித்யா வாழ்க்கையில் இன்பங்களை எல்லாம் வெறியுடன் சுவைக்க நான் என்றுமே விரும்பியது இல்லை., பெண்மையை மதிக்கத் தெரிந்தவன் எப்போதும். உண்மையைத்தான் பேசுவான் என்பதை உணர்ந்து கொள் . என்னை நம்பு. உனக்கு எப்படி புரிய வைப்பது என்று எனக்குப் புரியவில்லை. உன் விருப்பம்ந்தான் என் விருப்பம் என்று கூறிவிட்டேன்” என்று அவன் கூறும்போது கண்களில் கண்ணீர்த் துளிகள் ததும்பி நின்றன.

நித்யா தன்னோட முடிவிலிருந்து தன் நிலையிலிருந்து சற்று இறங்கி வந்தாள். சத்தியமூர்த்தியை திருமணம் செய்து கொள்ள நீண்ட தர்க்க வாதங்களுக்குப் பின் சம்மதித்து சத்தியமூர்த்தியிடம் நீங்க கூறியபடியே பதிவுத் திருமணம் செய்து கொள்வோம். ஆனால் ஒரு கண்டிசன் ,என் அனுமதியின்றி, என்னைத் தொடக்கூடாது. அதாவது……புரியும் என்று நினைக்கிறேன். நாம் இரண்டு பேரும் தனியாக இருக்கும்போது உங்களுடைய சுயரூபம் குணம் எப்படிபட்டது என்று தெரியவரும் . அதாவது பெண்மையை மதிக்கத் தெரிந்தவரா ? இல்லை மிதிக்கத் தெரிந்தவரா ! என்பது தெரிய வரும். அதாவது கணவனா அல்லது பாதுகாப்பாளரா என்பது அறிய முடியும்” என்று நித்யா கூறும்போது அவளது நம்பிக்கையின்மை நன்கு வெளிப்பட்டது. இந்த கம்யூட்டர் உலகில் இப்படிப்பட்டப் பெண்ணா என்று சத்தியமூர்த்தி நினைத்து ஆச்சரியப்பட்டான்’.நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடதே.’. என்ற கண்ணதாசன் பாடல் வரிகள்தான் அவனுக்கு ஞாபகம் வந்தது.

‘ எங்களுக்குத் திருமணம் ஆகி ஒரு மாதமாகியும் நான் அவளுக்கு வாக்கு அளித்தபடி அவள் விருப்பப்படி பாதுகாவலாகத்தான் இருந்து வருகிறேன். இருந்தாலும் சில சமயங்களில் …’. அவனை அவனது நினைவலைகளில் இருந்து சுவர்க்கடிகாரம் மணி அடித்து கலைத்தது.

எழுந்து சென்று மின்விளக்கைப் போட்டான். தூக்கத்தில் நித்யாவின் ஆடை விலகி அவள் படுத்திருந்த நிலை விளக்கின் வெளிச்சத்தில் அவனுடைய உணர்வுகளை தட்டி எழுப்பியது. அருகில் சென்று ஆடையைச் சரி செய்தது விட்டான். அந்த மென்மையான கருங்கூந்தலை வருடிவிட்டு ‘ ‘என்னை மன்னித்து விடு நித்யா என்னால் உன் அழகைப் பார்த்து ரசித்துக்கொண்டு மட்டும் இருக்க முடியாது.என்று மனது கிடந்து அடித்துக் கொண்டது

‘சீ சீ இவ்வளவுதானா நீங்க இதுக்குத்தான் என்னை திருமணம் செய்ய அப்படித் துடித்தீர்களா என்று நித்யா என்னைத் திருப்பிக் கேட்டுவிட்டால்… சத்தியமூர்த்தி நெற்றியிலுள்ள வியர்வைத் துளிகளைத் கையினால் துடைத்துக் கொண்டான். இனிமேல் இப்படிப்பட்ட உணர்வுகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. இதற்கு ஒரே வழி ஒரு குழந்தையை தத்து எடுத்து அக்குழந்தையை தன்னோட அருகில் வைத்துக் கொண்டால் ,அக்குழந்தையை கவனிப்பதிலேயே தன் கவனம் சென்றுவிடும். எனவே விடிந்ததும் முதல் வேலையாக குழந்தையை தத்து எடுப்பதற்கு நித்யாவிடம் அனுமதி வாங்கி விடவேண்டும்.

நிதயாவிடம் என்னோட தோல்வியை ஒப்புக்கொண்டு தன் நிலையக் கூறிவிட வேண்டும். ‘ஒரு தத்து எடுத்தக் குழந்தை இருந்தால்தான் நித்யாவுக்கு கொடுத்த வாக்குப்படி பாதுகாவலனாக இருக்க முடியும் என பலவித எண்ணங்களுடன் சத்தியமூர்த்தி தூங்கியும் விட்டான்.

அன்றிரவு நித்யாவும் சத்தியமூர்த்தியைப்போல் படுக்கையில் தூக்கம் வராமல் பலவிதமான எண்ணப்போராட்டங்களுடன் படுக்கையில் புரண்டுபுரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். ’இன்றைக்கு நான் பயமில்லாமல் இங்கு பாதுகாப்புடன் இருப்பது, சத்தியமூர்த்தி எனக்கு அவர் கொடுத்த வாழ்வுதான். அவர் நினைத்திருந்தால் அழகான வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து, சந்தோசமாக இருந்திருப்பார். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. இதுவரை என்னிடம் கொடுத்த வாக்குறுதியை கண்ணியமாக காப்பாற்றி வருகிறார். அது போதுமே அவருடைய நல்ல குணத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாமே !

சத்தியமூர்த்திக்குத்தான் என் மீது அளவுகடந்த அன்பு இருந்தால் என் அருகில் இருந்து எனக்குப் பாதுகாப்பாக இருப்பார். திடீரென்று நித்யாவின் மனசாட்சி அவளைக் கேலி செய்யவும் ஆரம்பித்தது. சத்தியமூர்த்தி என்ற அந்த உத்தமரை உனது அன்புக்காக ஏங்க வைத்திருப்பாயா ? அவரும் ஒரு ஆசாபாசங்கள் நிறைந்தவர் என்பதை நீ இதுவரை நினைத்துப் பார்த்தாயா ? உனக்கு வாழ்வு கொடுத்த அவருக்கு நீ செலுத்துகிற நன்றியின் லட்சணமா இது.

‘ நான் என்ன தப்பு செய்தேன் என தன்னோட மனதைப் பார்த்துக் கேட்டாள்.’நீ இல்லாமல் அவர் வேறு ஒரு பெண்ணை மணம் முடித்திருந்தால் அவருடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு அப்பெண் தன்னையே பூரணமாக ஒப்படைத்திருப்பாள். ஆனால் நீயோ அவரைச் சுற்றி ஒரு தேவையில்லாத வட்டம் வரைந்து , அந்த வட்டத்திற்குள்ளேயே செக்குமாடுபோல் அவரைச் சுற்றிவரும்படி செய்து வேடிக்கை நீ பார்க்கிறாய்.

நிஜந்தான். எனக்காக தன் இன்பமான எத்தனையோ இரவுகளையும் சத்தியமூர்த்தி இழந்து தவித்திருக்கிறார். ஆம் எப்படியெல்லாம் தனிமையில் வாட்டி அவர் இன்ப வாழ்வுக்காக ஏங்கவும் வைத்து, சித்ரவதை செய்து விட்டேன். நான் ஒரு பாவிதான். என்று தனக்குள் வருந்தினாள். ஐயோ கடவுளே என்னை மன்னித்து விடு. அவரது உணர்வுகளைப் புரிய வைக்கவும் தட்டி எழுப்புவதற்காக இன்று என்னை தூங்கவிடாமல் எண்ண அலைகளை உண்டாக்கி விட்டாய் என்றுதான் நினைக்கிறேன்.

இந்த எண்ண அலைகள் மட்டும் இன்று வரவில்லை என்றால் இன்னும் நான் அவரை அவருடைய வாழ்வையே சூனியமாக்கிருப்பேன். சத்தியமூர்த்தி போன்ற உத்தமரை நான் கணவராகப் பெறுவதற்கு என்ன தவம் செய்திருப்பேனோ என்று நினைத்து நினைத்து தன்னோட எண்ண அலைகளை அடக்க முடியாமல் அந்த நடுஇரவில் விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்

அருகில் மற்றொருகட்டிலில் படுத்திருந்த சத்தியமூர்த்தி எழுந்து வந்து “ என்ன நித்யா இன்னும் நீ தூங்காமல் என்ன அழுது கொண்டிருக்கிறாய் “ என்று ஆதங்கத்துடன் கேட்டான்.

“சத்தியமூர்த்தி என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் தெய்வத்தையே நான் சோதித்து விட்டேன். அன்று லக்ஷ்மணன் கிழித்த கோட்டை சீதை தாண்டினாள். ஆனால் நான் கிழித்தக்கோட்டை இதுவரை நீங்கள் தாண்டாமல், உங்கள் உயர்ந்த பண்பைக் காட்டி, என்னைத் தலை குனியும்படி செய்து விட்டீர்கள். என்னை மணந்த ஒரே காரணத்திற்காக வேறு எந்தப் பெண்ணையுமே ஏறெடுத்துப் பார்க்காமல் இருந்து விட்டீர்கள். இந்த கம்யூட்டர் காலத்திலும் உங்களைப் போன்ற ஆண்களும் இருக்கிறார்கள் என்பதை உங்களைப் பார்த்து நான் தெரிந்து கொண்டேன்”என்று நித்யா கூறும்போது உணர்வு மிகுதியில் வார்த்தைகள் வராமல் திணறினாள்.

சிறிது இடைவெளிக்குப் பின் சத்தியமூர்த்தியைப் பார்த்து “உங்களுக்கு நான் கிழித்தக் கோட்டை நானே அழிக்கிறேன். இக்கணத்திலிருந்து என்னை முழுமையாக உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” என்று கூறிக்கொண்டே அவன் மார்பில் வெட்கத்துடன் அவள் சாய்ந்தவுடன், அவள் கருங்கூந்தலை இதமாக வருடி, அவளைத் தன்னோட மார்போடு சத்தியமூர்த்தி இறுக அணைத்தவுடன், அன்றைய நிசப்தமான இரவில், அப்போது அங்கு அவர்கள் சரீரத்தின் தாளங்களோடு, அவர்களின் ஆத்மாவின் தாளங்களும் கேட்க ஆரம்பித்தன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *