ஆத்மாவின் சிறைச்சாலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2022
பார்வையிட்டோர்: 2,276 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கழ்வானம் சிவந்து தீப்பிழம்பாக அனல் பரவிய போது சூரியனின் வெப்பக்காற்று உடம்பில் பட்டபோது சாந்தி தன்னையும் மீறி “ஆண்டவா! என்ன இது சோதனை?” என்று கூறியதோடு தன் மனதில் முள்ளாக குத்தி இதயமெல்லாம் வலியால் துடித்ததை மனதார உணர்ந்தாள்.

மருத்துவமனையை நோக்கி நடந்தாள் சாந்தி. அவன் கணவன் குமார் காலில் அடிபட்டு பெரிய விபத்தில் உயிர் தப்பியதே தெய்வ செயல்.

கடந்த ஒரு மாதமாக சாந்தி மனதில் சந்தோசத்தை இழந்து உண்ண முடியாமல், உறங்க முடியாமல், வாடிய பயிராக துவண்டு விட்டாள். ஏன் இந்த சோதனை சாந்திக்கு? அப்படி அவள் செய்த பாவம்தான் என்ன? முப்பது வயதிலேயே அவள் முதுமையை அடைந்து விட்ட தளர்ச்சியுடன் காணப்பட்டாள்.

எப்படி இருந்தவள்? அழகும், இளமையும் இருக்கும் போது அவள் ஆடிய ஆட்டம் என்ன? எத்தனை ஆண்களை அவமானப்படுத்தினாள். அதன் பலனைத்தான் இப்போது அனுபவிக்கிறாளா?

சாந்தி வீட்டில் செல்லப்பெண் மட்டுமல்ல, அவள் சொன்னதுதான் வேதவாக்கு. சாந்தியின் தாய் விஜயாவும் மகளுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டாள். சிங்கப்பூரில் ‘எ’ நிலை படிப்பை முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாள். சினிமா நடிகைகளை விட சற்று அதிக அழகு நிறைந்த சாந்திக்கு கர்வம் அதிகம். வீட்டில் பெற்றோரை மதிப்பதில்லை. தாய் சரியில்லை என்றால் பிள்ளைகளும் குட்டிச்சுவர் என்பதுதான் சாந்தி விஷயத்தில் உண்மையாயிற்று. காலையில் எட்டு மணிக்கு வேலைக்குச் செல்பவள் இரவு பத்து மணிக்கு மேல்தான் வீடு திரும்புவாள். இதை ஏன் இவ்வளவு தாமதம் என தாய் விஜயா கேட்டால் அனல் பறக்கும் பதில்தான் வரும்.

“நான்தான் சம்பாதிச்சு போடறேன், பேசாம சாப்பிட்டுட்டு உங்க வேலைய மட்டும் பாருங்க,” என்பாள் சாந்தி. பிள்ளைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் பெற்றோர்களுக்கு இது ஒரு சவுக்கடிதான். சாந்தியின் பெற்றோர் அவ்வளவாக படிக்காதவர்கள். சாந்தியின் தந்தை வேலையில்லாமல் வீட்லிருப்பவர். விஜயா சமைப்பதோடு சரி. மகள் சாந்தியின் வருமானத்தை நம்பி வாழ்ந்தனர்.

பாசத்தைக் கொட்டி வளர்த்த மகள் சாந்தியின் மனம் இப்படி மாறிவிட்டதே என கவலைப்பட்டனர் சாந்தியின் பெற்றோர். வேலை முடிந்து வீட்டுக்கு வரும் சாந்தி போனில் பல மணி நேரம் உரையாடிவிட்டு படுத்து விடுவாள்.

திருமண வயதையடைந்த சாந்திக்கு பல வரன்கள் தேடிவந்தன. வந்த மாப்பிள்ளையை பார்த்து பேசி சில நாட்கள் பழகிவிட்டு, பின் உணவில் உள்ள கருவேப்பிலையை தூக்கி எறிவதைப் வீசியெறிந்து விடுவாள். மாப்பிள்ளை பிடிக்கவில்லை என ஆயிரம் காரணங்களைக் கூறுவாள். எது உண்மை என அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

சாந்தி எதிர்பார்த்தது மாப்பிள்ளை நன்கு படித்ததுடன், பணவசதி நிறைந்தவனாக இருப்பதுடன் சாந்தியின் அழகுக்கு நிகரான அழகுள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்று. இதில் எது குறைந்தாலும் சாந்தி சம்மதிக்க மாட்டாள். அப்போது சாந்திக்கு வயது இருபத்தேழு (27). அப்போதுதான் சாந்தியின் பெற்றோர் கவலைப்பட்டனர்.

பின்பு ஓரளவு படித்த, நடுத்தர குடும்பத்து பையன் ஓரளவு அழகுள்ள, ஆனால் நல்ல குணம் நிறைந்த மாப்பிள்ளை கிடைத்து சாந்தியின் கட்டளைக்கு கட்டுப்பட்டு பெண்-மாப்பிள்ளை நிச்சயதார்த்தம் பெரியோர்கள் முன்னிலையில் நடந்தது. சாந்தியின் பெற்றோரும் சாந்தி திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது, திடீரென்று வெளியே சென்றுவிட்டு வந்த சாந்தி,

“கல்யாணத்த நிறுத்திடுங்க, எனக்கு மாப்பிள்ளையை பிடிக்கல” என்று கூறியதைக்கேட்டு திடுக்கிட்டனர் சாந்தியின் பெற்றோர்.

“ஏம்மா சாந்தி என்னாச்சு, நல்லாத்தானே இருந்தே?” என விஜயா கேட்டதற்கு,

“எனக்கு கல்யாணமே வேண்டாம், யாரையும் என்னால நம்ப முடியல, மாப்பிள்ளை ரவி சிகரெட் பிடிக்கிறான், ‘டிரிங்ஸ்’ சாப்பிடறான். கெட்ட பழக்கம் உள்ளவன கல்யாணம் பண்ணி நான் காலமெல்லாம் கஷ்டப்பட முடியாது,” என ஆணி அடித்தாற்போல கூறியதைக் கேட்ட தாய் விஜயா வயிற்றில் புளியைக்கரைப்பது போல உணர்ந்தாள்.

திருமணம் நடந்து மகள் சாந்தி புகுந்த வீட்டில் வாழப் போவதைக்காண ஆவலுடன் காத்திருந்த விஜயா, மனக்கலக்கத்துடன்

“சின்ன வயசிலே ஆண்களுக்கு இதெல்லாம் சகஜம், காலப்போக்கில் உன் அன்பால் ரவியை மாற்றிடலாம்,” என எவ்வளவோ எடுத்துக்கூறியும்,

சாந்தி போனில் ரவியின் அப்பாவிடம் “கல்யாணத்தை நிறுத்திடுங்க” என்றாள். பின்பு சாந்தியின் பெற்றோர், ரவியின் பெற்றோரிடம் தங்கள் மகள் சாந்தியின் முடிவுக்கு தாங்கள் வருந்துவதாகக் கூறி மன்னிப்பு கேட்டனர். ஆனால், ரவியின் பெற்றோர் திருமணம் நின்றுவிட்ட ஆதங்கத்தில் “சாந்தி யாரை கல்யாணம் பண்ணி, எப்படி வாழறான்னு பார்க்கிறோம்” என்று கூறி சாபமிட்டனர்.

ஆண் குதிரையைப் போல் திமிர் பிடித்து அலைந்த சாந்தியை அடக்க யாராலும் இயலவில்லை. பின்பு ஓராண்டு கழித்து தன்னோடு வேலை செய்யும் குமார் என்பவனோடு சில மாதங்கள் பழகி மனதிற்கு பிடித்து, சாந்தி போட்ட கட்டளைக்கு ஒத்துக் கொண்டு திருமணத்திற்கு சம்மதித்தான் குமார்.

திருமணத்திற்கு முன்பே தனி வீடு வாங்கி உடனே தனிக்குடித்தனம் செல்ல திட்டமிட்டபடி, சாந்தி வீட்டைப் பார்த்து பிடித்துப் போன பிறகு குமார்-சாந்தி இருவரின் பெயருக்கு வீட்டை வாங்கி வங்கியில் பணம் கடன் வாங்கி வீடு புதுப்பிக்கப்பட்டு வீட்டுக்குத் தேவையான பொருட்களை குமார் தன் சேமிப்பு பணத்திலிருந்து வாங்கிப் போட்டான்.

குமாரின் தாய் காஞ்சனா மகனிடம் “கொஞ்ச நாள் என்னோடு இருந்துட்டு பிறகு தனிக்குடித்தனம் போகலாமே” என எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள். நடக்கவில்லை.

சாந்தியின் விருப்பத்தை பூர்த்தி செய்வதில் அதிக ஆர்வம் காட்டிய குமார், இதனால் பின்னால் சாந்தியின் போக்குக்கு கட்டுப்பட்டு கஷ்டப்படப் போவதை உணரத் தவறினான்.

குமார்-சாந்தி திருமணம் நடந்து, விருந்து முடிந்த கையோடு, குமாரின் தாய் காஞ்சனா ஆசையுடன் தங்கள் வீட்டுக்கு அழைத்தாள். ஆனால், சாந்தி மிக உறுதியுடன் செல்ல மறுத்தாள். தங்கள் முதலிரவு தன் புதிய வீட்டில்தான் என கூறிவிட்டாள். வேறு வழியில்லாமல், மணமக்களை மனதார வாழ்த்தாமல் “இப்படி தலைக்கனம் பிடித்தவள் எத்தனை நாள் வாழ்கிறாள் பார்ப்போம்” என சாபமிட்டாள் காஞ்சனா.

புதிய மனைவி சாந்தியின் முந்தானையை பிடிக்காத குறையாக குமார், “அம்மா, நான் நாளைக்கு வந்து உங்கள பார்க்கறேன்” என தன் அம்மாவிடம் கூறிவிட்டு புதிய வீட்டில் காலடி எடுத்து வைத்தான்.

புது மனைவி, தனிமை, காதல் எல்லாம் முதலில் இனிப்பாகத்தான் இருந்தது குமாருக்கு. ‘இனிப்பை அதிகம் சாப்பிட்டால் விரைவில் திகட்டிவிடும்’ என்ற உண்மையை குமார்-சாந்தி இருவருமே அறியத் தவறிவிட்டனர்.

நினைத்ததை கடையில் வாங்கி சாப்பிட்டனர். இரண்டு வார விடுமுறை முடிந்து வேலைக்குச் செல்ல வேண்டிய நாளும் வந்தது. சாந்தி காலையில் எழுந்து ஆரம்பித்தாள் பூபாளத்தை. தேநீரைக் கலக்க அவள் பட்ட பாட்டுக்கு குமாரும் ஒத்துழைக்க வேண்டியதாயிற்று.

குமார் தினமும் அவனிடமுள்ள மோட்டார் பைக்கில் தான் வேலைக்குச் செல்வது வழக்கம்.

மாதங்கள் சென்றன. குமார் அன்று மதியம் உணவு உண்பதற்காக தன் மோட்டார் பைக்கில் வேகமாக பயலேபர் மேம்பாலச் சாலையை தாண்டி டிராஃபிக்கில் நின்று கொண்டிருந்த போது திடீரென்று எதிரேயிருந்து ஒரு கனரக லாரி தவறுதலாக வேகமாக வந்து கவிழ்ந்ததில் குமாரின் மோட்டார் பைக் தாறுமாறாக புரண்டு சுற்றி எதிரே இருந்த கழிவு நீர் செல்லும் பாதாளத்தில் தூக்கி எறியப்பட்டான்.

மயக்க நிலை தாண்டி விழித்துப் பார்த்தபோது குமார் அலெக்ஸாண்டிரா மருத்துவமனையில் இருந்தான். உடம்பெல்லாம் ஆணியடித்தது போல வலி. காயங்கள், கட்டு, இரத்தம், சுற்றிலும் மருத்துவர்கள், தாதிகள், குமாரின் தாய் காஞ்சனா கண்ணீர் கடலில் குளித்துக் கொண்டிருந்தாள். சாந்தி ஓரமாக நின்று கொண்டிருந்தாள். என்ன நடந்தது என குமார் எண்ணும் போது, அவன் கால்கள் உணர்ச்சியற்று அசைக்க முடியாமல் உள்ளதை உணர்ந்தான்.

விபத்துக்குள்ளான குமாரை, ஒருவர் தன் காரில் தூக்கி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு குமாரின் பணப்பையிலிருந்த சிறு டைரியின் மூலம் சாந்தியின் கைத்தொலைப்பேசி எண்ணுக்கு தெரியப்படுத்தி, உடனே பதறியடித்துக் கொண்டு சாந்தி மருத்துவமனைக்கு வந்து பார்த்தாள்.

மருத்துவர் இப்போதைக்கு எதுவும் சொல்ல இயலாது. காலில் பலத்த அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும், அது சரியாக சில வாரங்கள் ஆகலாம் என கூறினார். சில வாரங்கள் சென்ற பிறகு மருத்துவர் சொன்ன செய்தி சாந்தியை நிலை குலையச் செய்தது.

ஆம், மருத்துவர்கள் எவ்வளவோ சிகிச்சை மேற்கொண்டும் பலனளிக்காமல் குமாரின் கால்களை வெட்டி எடுக்க வேண்டும் என்ற செய்தியை சாந்தியால் தாங்கிக் கொள்ள இயலாமல், அவள் ஆத்மா அசைவற்று சிறைச்சாலையில் அடைபட்டதைப் போல் எதுவும் செய்ய இயலாமல் தவித்தாள்.

பலரின் சாபத்துக்கு உள்ளான சாந்தியின் மேல் இறைவனுக்கும் கோபமா? ,இளமையின் வேகத்தில் செய்யப்படும் தவறுக்கு இவ்வளவு விரைவில் தண்டனையா?

அன்று யாருமே எதிர்பார்க்காத, எந்தப் பாவமும் அறியாத குமாரின் இரண்டு கால்களும் முட்டுக்குக் கீழ் வெட்டி எடுக்கப்பட்டு காலில் தையல் போட்டு சிகிச்சை நடந்தது.

அழகு நிறைந்த குமாரின் முகமும் கருத்து வாடி இருந்தது. சரியான சாப்பாடு, தூக்கம் இல்லாமல் மனக்கவலையில் குமார் ஆளே மாறி இருந்தான்.

பெற்ற மகனை இந்தக் கோலத்தில் கண்ட காஞ்சனாவின் மனம் ‘அனலில் இட்ட புழு போல’ பொசுங்கினாள்.

மருத்துவமனைக்கு உள்ளே குமாரின் அறைக்குள் வந்து நின்ற சாந்தி, அவனை நேருக்கு நேர் காணவே அரை மனதுடன்தான் வந்திருந்தாள். காலில்லாத குமாரோடு தன் வாழ்க்கை இனிமேல் எப்படி உல்லாசமாக இருக்க முடியும் என அவள் மனதில் ஆயிரம் எண்ணங்கள் தோன்றி மறைந்தன.

வமனையில் குமாரு சுமார் இரண்டுச் செலவுகள் |

மருத்துவமனையில் குமாருக்கு செயற்கை கால்களை பொறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சுமார் இரண்டு மாதங்கள் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றான். மருத்துவச் செலவுகள் யாவும் விபத்துக்கு காரணமான லாரி உரிமையாளரே ஏற்றுக் கொண்டதுடன், குமாருக்கு நஷ்ட ஈடாக சுமார் இருநூறாயிரம் வெள்ளி கொடுப்பதாகவும் நீதிமன்றத்தில் கூறினார்.

பணம் வாழ்க்கையில் நிம்மதியை தந்து விடுமா என்ன?

குமாரை அவன் தாயார் காஞ்சனாதான் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். குமாரை அருகே இருந்து கவனிக்க வேண்டிய மனைவி சாந்தி அவள் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாள். எந்தத் தாயை உதாசீனப்படுத்தி விட்டு மனைவியோடு சென்றானோ, அந்தத் தாய்தான் இப்போது குமாருக்கு பணிவிடை செய்தாள். மகனின் காலைப் பார்த்து கண்ணீர் விட்டாள். குமாருக்கு ஆறுதல் மொழி சொன்னாள்.

தன் தாய் வீட்டிற்குச் சென்ற சாந்தி குமாரை வந்து பார்க்கவில்லை. குமார் சாந்தியிடம் பேச எண்ணி தொலைப்பேசியில் அழைத்தாலும் சாந்தி குமாரிடம் பேச விரும்பவில்லை. அவளின் மனப்போக்கை எண்ணி குமார் மிகுந்த மன வேதனைப்பட்டான். குமார் எவ்வளவோ கெஞ்சி அழைத்தும் சாந்தி வரவேயில்லை. கால்கள் இல்லாத குமாரோடு வாழ சாந்தி விரும்பவில்லை .

சாந்தி மனம் மாறி எப்படியும் தன்னோடு வந்து விடுவாள் என நம்பியிருந்த குமாருக்கு கோர்ட்டிலிருந்து சாந்தியின் விவாகரத்து நோட்டீஸ் வந்ததைப் பார்த்த குமாரின் ஆத்மா சிறைச்சாலைக்குள் அடைப்பட்டதைப் போல உணர்ந்தான்.

போன் மூலம் சாந்தியிடம் சமாதானமாகலாம் என எவ்வளவோ கெஞ்சியும் சாந்தி குமாரோடு வாழ மறுத்துவிட்டாள். குமாரின் தாய் காஞ்சனா, “அவள் ஒரு பெண்ணா , ஆபத்துக் காலத்தில் உன்னைவிட்டு ஓடும் பெண்ணை நம்பி உன் வாழ்க்கையை பாழாக்கி விட்டாயே” என மகன் குமாரிடம், சாந்தியின் உண்மையான தோற்றத்தை கூறி வருத்தப்பட்டாள்.

நாம் என்னபாவம் செய்தோம் என முதன் முறையாக கண்ணீர் விட்டு அழுதான் குமார். இதுநாள் வரை அடக்கி வைத்திருந்த அவன் மனம் கனத்து அழுகையாக வெளிப்பட்டது.

ஆண்மகன் அழக்கூடாதுதான். குமார் பாவம், அவனும் சாதாரண மனிதன்தானே, ஆசா பாசங்களுக்கு கட்டுப்பட்டவன் என்பது அவன் அழுத கண்ணீரிலிருந்து தெரிந்தது.

அழுத பின்பு அவன் மனம் லேசாகி, பூரணமாக சிந்திக்க ஆரம்பித்த போதுதான் தான் பெரிய தவறு செய்து விட்டதை உணர்ந்தான்.

தன் தாய் மனதை ரணமாக்கி விட்டு, புது மனைவியோடு சாந்தியின் பேச்சைக் கேட்டு, அவன் பட்ட பாட்டுக்கு இறைவன் கொடுத்த தண்டனையா?

தன் காலை இழந்து, உயிர் காதலியை இழந்து, இப்போது அவன் வாழ்க்கையையும் இழந்து, இனிமேலும் சாந்தியோடு வாழத்தான் வேண்டுமா?

திருமணம் அவன் வாழ்க்கையில் இதுவரை பல துன்பங்களைத்தான் கொடுத்திருக்கிறது.

எல்லை மீறிப்போகும் பிள்ளைகள் தவறு செய்யும் போது திருத்தாத சாந்தியின் தாய் போன்றவர்களால் குமார் போன்ற ஆண்கள் தண்டனைக்கு ஆளாகிறார்கள்.

நலிவான உடலாகிவிட்ட குமார் ஆத்மாவின் சிறைச்சாலைக்குள் புழுங்கிக் கொண்டிருந்தான்.

மனசாட்சி இல்லாத சாந்தியின் ஆத்மா அவள் உடல் என்ற சிறைச்சாலைக்குள் அச்சுறுத்திக் கொண்டே இருந்தது.

– தமிழ் முரசு 09.05.2004, ’பிரகாசம்’ சிறுகதை தொகுப்பு, முதற்பதிப்பு : மே 2006, சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *