ஆண் மகன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 28, 2022
பார்வையிட்டோர்: 1,857 
 

(1951 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புளியன் என்ற அரசன் ஆட்சி புரிந்ததாலோ அல்லது புளிய மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாலோ என்னவோ அந்தத் தீவுக்கு புளியந்தீவு என்ற பெயர் ஏற் பட்டு விட்டது.

ஆரம்பத்தில் கெட்டவன் என்று பெயர் பெற்ற ஒருவன் நல்லவனாக மாறினாலும் முன்னுக்கு நிற்பது கெட்டவ னென்ற பெயர்தான். இதைப் போல நான்கு பக்கங்களும் தெருக்களால் இணைக்கப்பட்டும் கூட இன்னும் இது புளியந்தீவு என்ற பெயரைச் சுமந்து கொண்டுதான் நின்றது.

காடாகக் கிடந்த இடம் இன்று நகரமாகி விட்டது என்றாலும் பாம்பு போன தடம் போன்று காட்சியளிக்கும் தெருக்கள் இன்னும் அதன் பழங்காலப் பெருமைகளை எடுத்துக் கூறிக்கொண்டேதான் இருக்கின்றன.

இங்கே எத்தனையோ அதிசயங்கள். அதில் ஒன்று வைத் தியசாலைக்கும் சிறைச்சாலைக்கும் வித்தியாசம் இல்லை என்பதைக் காட்டுவது போல இரண்டு கட்டடங்களும் மிக நெருங்கி இருப்பது தான்.

புளியந்தீவிலேயே மிகவும் பிரதானமான தெரு ஆஸ்பத் திரித் தெருதான். ஏனென்றால் அங்கே அற்புதங்கள் பல.

திடீரென்று யாராவது ஆஸ்பத்திரித் தெருவில் குதித்து விட்டால் முதலில் அவர்கள் கண்ணுக்குத் தென்படுவது இடம் மாற்றப்பட்டு உக்கி உருக்குலைந்து போன பழைய சவக்காலைதான். நகரத்தின் மத்தியில் அந்தச் சவக்காலை ஏன் இருக்கிறது என்று கேட்டால் அது நமக்குப் புரியாத இரகசியம்.

இந்தச் சவக்காலைக்கு எதிர்ப்புறமாகத்தான் அந்தப் பிள்ளையார் கோயில் இருக்கிறது. கோயில் பிரமாண்டமாக இல்லாவிட்டாலும், அதன் மதில் மிகவும் பெரியது. பிள்ளை யார் கோயிலுக்கு மறுபுறத்தில் ஒரு வித்தியா சாலை. இதன் கதவு எப்பொழுதும் சாத்தப்பட்டுத்தான் இருக்கும். என்றா லும் தற்காலக் குழந்தைகளை எதிர்கால அறிவாளிகளாக் கும் பணியில் மிகவும் சுறுசுறுப்பாகப் பணியாற்றுகிறது இந்தக் கல்விக்கழகம்.

பிள்ளையார் கோயிலையும் கல்விச் சாலையையும் ஏக காலத்தில் தாண்டிச் செல்லும்பொழுது நம்மை வர வேற்பது அரசாங்க விருந்தினரை அடைத்து வைத்துக் காவல் செய்யும் சிறைச்சாலை தான். இந்தச் சமயத்தில் பகுத்தறிவாளன் சிந்தனை வேலை செய்ய ஆரம்பித்து விடும்.

அறிவுக்குப் பொருத்தமற்ற பக்தியும் வாழ்க்கைக்குப் பொருத்தமற்ற கல்வியும் ஒன்று சேர்ந்து மனிதனைச் சிறைச் சாலைக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது. இயற்கையின் இந்த எடுத்துக்காட்டு பகுத்தறிவைப் பயன்படுத்த திராணி யற்ற மனிதனுக்கு எங்கே தெரியப் போகிறது? இதைக் கூடத் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மங்கிப் போய் விட்டது நமது அறிவு நிலையம்.

இந்த சிந்தனை முடிவடையுமுன் இன்னொரு கட்டடத் துக்கு முன்னால் வந்து விடுவோம். அது காயமே இது பொய்யடா என்று சொல்லிக் கொள்பவர்களும் கூடத் தங்கள் உடல் காயத்துக்கு மருந்து கட்டப் போகும் இடம்! இந்த உலகத்தை விட்டு மறு உலகத்திற்குப் போகப் போகி றவர்களை மேளதாளத்துடன் அழைத்துச் செல்ல வரும் எமனுக்கு நாக்கில் இனிப்பைத் தடவி விட்டு மரணத்தில் இருந்து தப்பிக் கொள்ள ஓடி ஒழிந்துக் கொள்ளும் இடம் தான் அந்த வைத்தியசாலை கலியுகத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்த நவலிங்கம் தான் அந்த வைத்தியசாலை. இந்த வைத்தியசாலைக்குப் பின்புறந்தான் அந்த மணல் புட்டி என்னும் இடம் இருக்கிறது.

மணல் புட்டி என்பதால் மண்மேடுகளை அங்கே காண முடியாது. ஆனால் மனிதனின் மனதைப் போன்று அழுக் கேறிய துணிமூட்டைகளைத்தான் காணமுடியும். ஏனென்று கேட்கிறீர்களா? பிறர் நலத்திற்காகத் தன் முதுகெலும்பை உடைத்துக் கொள்ளும் தன்மை பெற்ற சலவைத் தொழிலா ளிகள் வசிக்குமிடம்தான் அந்த மணல்புட்டி.

துணிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட அழுக்குகள் அவர்கள் வாழ்க்கையில் ஒட்டிக் கொண்டதாலோ என் னவோ குடிசை என்ற பெயரில் அந்த குப்பை மேட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

பட்டணத்தில் தனது சிறிய தாயாருடன் வாழ்ந்து வந்த வதனி, வயோதிகத் தந்தைக்கு கையுதவியாக வந்து சேர்ந்தாள் இந்த மணல் புட்டிக்கு. அறிவாளியாக இல்லா திருந்தாலும் எதையும் தெரிந்து கொள்ளும் அளவுக்குக் கற்றிருந்தாள். பட்டணத்தில் வாழ்ந்த வதனிக்கு பட்டிக் காடு போல் காட்சியளித்த மணல் புட்டியில் வாழ்வது கொஞ்சம் கடஷ்மாகத்தான் இருந்தது. என்றாலும் மாலை நேரத்தில் ஆற்றங்கரைப் பக்கம் உலாவி வருவதில் அந்தக் கஷ்டத்தை மறக்க முயன்றாள்.

அன்றொரு நாள் மாலை ஐந்து மணி இருக்கும். அந்த ஊருக்கே பெரிய கோயில் என்று பேசிக்கொள்ளும் பிள்ளை யார் கோயிலுக்கு முன் நின்று கோயிலின் கோபுரத்தைப் பார்த்து கொண்டு நின்றாள் வதனி. என்னைக் கொண்டு தான் இந்தக் கோயிலின் கடவுளை மதிப்பிட வேண்டு மென்று சொல்வது போல தலை நிமிர்ந்து நின்றது அந்தக் கோபுரம்! மாலைக் கதிரவனின் மஞ்சள் வெயில் கோபுரத் தின் செப்புக் கலசத்தில் விழுந்து அதைப் பொன் கலச மாக்கிக் கொண்டிருந்தது. அந்த மினுமினுப்பில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்துத் தன்னையே மறந்து நின்றாள் வதனி. அதே சமயம் அந்த வழியாகச் சென்று கொண்டி ருந்த தெய்வனாயகத்தின் கண்கள் வதனியைப் பார்த்து விட்டன. அவன் கால்கள் தடைப்பட்டன. ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றான் அவன்.

எவ்வளவு நேரம் அப்படி அவன் நின்றானோ அது அவனுக்குத் தெரியாது. சிறிது நேரத்திற்குப் பிறகு மெதுவாக அவள் அருகில் சென்றான். அவள் காதுக்குள் எவ்வளவு அழகாக இருக்கிறது அந்தக் கலசம்?” என்றான்.

எதிர்பாராத இந்தக் கேள்வியால் அதிர்ச்சியுற்ற வதனி ஒன்றுமே பேசாமல் அவளைப் பார்த்தான. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தெரிந்து கொண்ட தெய்வனாயகம் மெது வாகச் சிரித்துக் கொண்டே;

“நீங்கள் இந்த ஊருக்குப் புதியவர், கோயிலைப் பார்த் திருக்க மாட்டீர்கள், இது ஒரு கலைப் பொக்கிஷம் வாருங் கள் காண்பிக்கிறேன்” என்றாள்.

“இல்லை வேண்டாம்” என்று சொல்ல நினைத்தான் ஆனால் சொல்லவில்லை. அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள். அவனது கடைந்த பார்வையும் இனிமையான வார்த்தைகளும் மெதுவாக அவள் உள்ளத்தைக் கிள்ளி விட்டன. பெண்மையின் மதில் போன்ற வெட்கம் அவளைத் தலைகுனிய வைத்தது.

“அதிலென்ன வாருங்கள் நான் துணை செய்கிறேன்” என்றான் தெய்வனாயகம். எல்லை கடந்த வெட்கத்தினி டையே எழுந்த ஆசையை அடக்க முடியாதவளாகத் துணிந்து அவனைப் பின் தொடர்ந்தாள் வதனி. சிறிது நேரத்தில் கோயிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு இருவரும் வெளி வந்தனர்.

“பூ! இவ்வளவு தானா? இதற்குள் ஏன் நாங்கள் போகக் கூடாதாம்? என்ற கேள்வியோடு வெளியே வந்தாள் அவள். தெய்வ சந்நிதானத்தில் அழகுத் தெய்வத்தின் சந்திப்புக் கொடுத்த மகிழ்ச்சியால் படியிறங்கினாள் அவள். சலனமற்றுக் கிடந்த குளத்தில் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டது போல் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டுச் சென்றது இச் சிறு நிகழ்ச்சி.

கோயிலும் அப்படியே தான் இருந்தது கோபுரமும்கூடிய அழகுடன் விளங்கியது. புதுப் புது மனிதர்களெல்லாம் வந்து போனார்கள். புதிதாக ஒரு தேங்காய் வெற்றிலை பாக்குக் கடைகூட அங்கே முளைத்து விட்டது, வதனியும் வருவதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டாள்; ஆனால் தெய்வ னாயகம் மட்டும் அங்கு வரவில்லை.

எப்படியும் சந்திக்கலாம் என்ற நம்பிக்கையில் பத்து நாளாய் வந்து போய்க் கொண்டிருந்தாள், வதனி. ஏனோ அவன் வரவில்லை.

அன்று அவள் மனம் வெகுவாக வேதனைப்பட்டதும் வளமைக்கு மாறாக வெகு நேரம் காத்திருந்தாள் அன்றும் ஏமாற்றத்தைத் தவிர வேறெதுவும் நிகழவில்லை, உடைந்து போன உள்ளத்தை ஏமாற்றம் என்ற வெறும் வெளியில் உதறிவிட்டுக் குடிசையை நோக்கிப் புறப்பட்டாள் வதனி! உள்ளத்தில் தோன்றி மறையும் ஓராயிரம் எண்ணங்களும் கிடையில் அவள் நடந்தாள். தெருவோரத்தில் இருந்த மின்சார விளக்குகளின் வெளிச்சம் அவள் பயணத்துக்குப் பக்கதுணை புரிந்தது. அவள் நடந்து கொண்டே இருந் தாள். வாழ்க்கையில் சிறிது தன்னம்பிக்கையை உண்டு பண்ணி விட்டுத் தன்னை வஞ்சித்த அந்த வரட்டு நிகழ்ச் சியை நினைத்துக் கொண்டே நடந்தாள். தெருவில் குறுக் கிட்ட வெளிச்சத்தைக் கடந்து இரண்டடி வைத்திருக்க மாட்டாள்;

“என்னைத் தெரியவில்லையா?” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டு நின்றாள் வதனி.

அவள் தன்னை அடையாளம் காணவில்லை என்று எண்ணிக் கொண்ட தெய்வனாயகம் அவள் அருகில் வந்து, “என்ன அதற்குள் மறந்து விட்டீர்களா?” என்றான்.

“இல்லை … நான்… உங்க…” அவள் ஏதோ சொல்ல நினைத்தாள். வார்த்தைகள் வரவில்லை நிறுத்திக் கொண்டாள். யாருக்காக இத்தனை நாள் காத்து நின் றாளோ? அவன் தன் முன்னால் நிற்பதைக் கண்ட பொழுது!

சந்திரனின் குளிர்ந்த ஒளிக்குத் தன் உணர்ச்சியைத் தூண்டும் சக்தி இருக்கிறது என்பதை உடைத்தெரிந்து விட்டது அந்த அமாவாசை இருட்டு! அவன் எதையோ நினைத்துக் கொண்டு அவள் கரத்தைப் பிடித்தான், அவள் எதையோ நினைத்துக் கொண்டு அவனைப் பின் தொடர்ந் தாள், ஒருவருக்கும் தெரியாமல் இருவரும் இருளில் மறைந்தனர்.

தவறும் மறதியும் தான் மனிதன் தோன்றக் காரணம் என்று தீர்க்க தரிசனம் கூறப்பட்ட பின்பு தவறு செய்யும் மனிதனில் குற்றமில்லையே? தாகம் என்று ஒன்று இருக்கும் வரை தண்ணீரும் அவசியம்தான் வாழ்க்கையென்றால் வாழைப்பழத் தோலில் வழுக்கி விழத்தான் வேண்டுமென்ற நியதியை ஏற்படுத்திக் கொண்ட பிறகு, விவாகமாகாமல் குழந்தை பிறப்பது சாப்பாட்டுக்குப் பின் கையலம்புவது போலத்தான்.

வண்ணாரப் பெண் என்ற வடுவை மாற்ற வாழ்வு தேடி வழி பார்த்த வதனி கண்மூடி விழிப்பதற்குள் கால் தவறிக் காட்டு வழி நடந்து கொண்டிருந்தாள்.

தெய்வனாயகத்தைக் கண்டு தன் நிலைமையை சீர் படுத்திக் கொள்ளலாம் என்று எதிர்பார்த்தாள் அந்தப் பேதைப் பெண். அவன் வரவில்லை அவனுக்கென்ன அவன் ஆண் பிள்ளை; ஊரில் எத்தனையோ ஹோட்டல்கள், பசி வந்தால் சாப்பிடுவான் எங்கே எப்பொழுது? இதெல் லாம் என்ன கேள்வி! ஆனால் அவள் கதி?

கடைசி நம்பிக்கையில் அன்று அவனை அறிமுகப்படுத்தி வைத்த கோயிலுக்குச் சென்றாள். அன்றும் அமாவாசை நாள் தான், நன்றாக இருட்டி விட்டது. கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த வெற்றிலை பாக்குக் கடை வெளிச் சத்தில் வருகிற போகிறவர்களையெல்லாம் நன்றாகக் கவனித்துக் கொண்டிருந்தாள் வதனி.

காலம் எப்பொழுதும் மனிதனுக்கு நல்லதையே செய்து கொண்டிருப்பதில்லை, இந்த ரீதியில் தான் காலம் வதனியை மரணப் பாதைக்கு அழைத்துச் சென்றது! இல்லையென் றால் தெய்வனாயகம் அன்று அந்த வெற்றிலை பாக்குக் கடையில் தோன்றியிருக்க மாட்டான்.

அவள் கண்களை அகலத் திறந்து பார்த்தாள் ஆம்! தெய்வனாயகம்தான். அவன் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான.

அவன் பூவும் தேங்காயும் கோவிலுக்குப் போய்க் கொண் டிருந்தான், அவன் அவனைப் பின் பொடர்ந்தாள், அவன் கோயில் வாசலில் கால் வைத்தும்.

“உங்களைத்தான் நில்லுங்கள்” என்றாள் வதனி.

இந்தச் சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான் தெய்வனாயகம். அவனை நோக்கி வந்து கொண்டிருந் தாள் வதனி, ஆச்சரியத்துடன் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான் தெய்வனாயகம்.

“ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்! அடையாளம் தெரியவில்லையா?”

“இல்லை வெகு நாட்களுக்குப் பிறகு எங்கே இவ்வளவு தூரம்? என்று தான் யோசிக்கிறேன்” என்றான்.

“உங்களிடம் ஒரு முக்கியமான சம்பவம் சொல்வ வந்தேன் நான்… நான் ஒரு குழந்தைக்குத் தாயாகப் போகிறேன்!” என்றாள் அவள்.

“உண்மையாகவா! அதன் தந்தை யார்?” என்றான் பரபரப்போடு.

அவள் நாணம் கலந்த சிரிப்போடு சொன்னாள்; “அன்று அமாவாசை இருட்டிலே நடந்ததை மறந்து விட் டீர்களா? நீங்கள் தான் அதன் தந்தை!” இதைச் சொல்லி விட்டு அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

பேயால் அறையப்பட்டவன் போல் நின்று கொண்டி ருந்த தெய்வனாயகம் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ‘நான் பிறகு சந்திக்கிறேன் பூசைக்கு நேரமாகி விட்டது” என்று சொல்லி விட்டுப் போக எத்தனித்தான்.

“கொஞ்சம் நில்லுங்கள். ஏன் என் மீது அன் பில்லையா”

“ஏனில்லாமல்?”

“பின் ஏன் பயப்படுகிறீர்கள்?”

“பயப்படவில்லை உன் சா… தி?”

“வண்ணாரப் பெண் என்ற காரணத்தினால் எங்க -ளிடம் இருதயமில்லை என்று நினைக்கிறீர்களா?” அவள் கண்கள் கலங்கி விட்டன.

“அதற்கில்லை வதனி! உலகத்துக்கும் கொஞ்சம் பயப் பட வேண்டி இருக்கிறதே?”

அவன் சுற்றுப் புறத்தைக் கொஞ்சம் வெறித்துக் கொண்டான்.

“அன்று அந்த அமாவாசை இருட்டிலே சாதியைப் பற்றி யோசித்தீர்களா?”

“இல்லை நீயும் கூடத்தான்”.

“ஆம்! காப்பாற்றுவேன். கைவிடேன், உன்னை ஏற்றுக் கொள்வேன் என்றெல்லாம் சொன்னீர்களே! இன்று சாதி என்று விழிக்கிறீர்களே?. எனக்காக இல்லா விட்டாலும் இந்தக் குழந்தைக்காகவாவது என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்,” அவள் கண்ணீர் வடித்தாள்.

“வதனி திடீர் என்று அப்படி எதுவும் செய்து விட முடியாது. சமூகம் பொல்லாதது. என்னை வீண் தொந் தரவு செய்யாதே. என்னால் முடிந்த சில உதவிகளைச் செய்கிறேன், என்ன சொல்கிறாய்?”

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றனர். திரும் பவும் அவன் சொன்னான்.

“பூசைக்கு நேரமாகி விட்டது என்ன உன் முடிவு?”

அவள் நெஞ்சு படபடத்தது. வார்த்தைகள் சிதறிச் சிதறி வெளி வந்தன.

“உங்களுக்கு பூசை அவசியம், எனக்கு என் வாழ்க்கை அவசியம், உங்களை நம்பினேன், உங்கள் சத்தியத்தை நம்பினேன், என் வாழ்க்கையையும் உங்களுக்குக் காணிக்கை வைத்தேன். காதலுக்கு சாதி ஏது? என்றீர்கள். அன்று, சாதியைப் பற்றி யோசிக்கிறீர்கள் இன்று. உன்னை வாழ வைப்பேன் என்றீர்கள் அன்று, என்னை வாழ்வுக்கும் சாவுக் கும் மத்தியில் வைத்துச் சிரிக்கிறீர்கள் இன்று. நான் பெண், நீங்கள் ஆண் மகன்!”

அவள் பேசிக் கொண்டே இருந்தாள். அவனுக்கு அங்கே நிற்க விருப்பமில்லை. அவசரவசரமாக நடந்து கோயிலுக்குள் புகுந்து மறைந்து விட்டான் தெய்வனாயகம்.

அவள் பேச்சினிடையே தலை நிமிர்ந்து பார்த்தாள். அவன் போய் விட்டான்! அவளும் ஒரு முடிவோடு அங்கிருந்து அகன்றாள்.
அவன் பக்தி சிரத்தையுடன் வணங்கிக் கொண்டு நின்றான் சிலைக்கு முன்னால்.

அவள்?

இந்த மனித சமூகத்திடம் இருந்து தன்னைக் காப் பாற்றிக் கொள்ள கோயில் குளத்துக்குள் இறங்கி நடந் தாள்! தண்ணீர் தன்னை அணைத்துக் கொள்ளும் வரை நடந்தாள்.

– 1951, பித்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்ச் 1995, மல்லிகைப்பந்தல் பதிப்பகம், யாழ்ப்பாணம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *