கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 8,507 
 
 

அறிவியல் பாடத்தில் அன்றுதான் போதித்தார்கள் அது எதனால் என்று. ஒரு எக்ஸ் ஒரு ஓய் குரோமோசோம் ஆணின் மரபணுவாகவும் இரு எக்ஸ் குரோமோசோம்கள் பெண்ணுக்குரிய மரபணுவாகவும் இருக்கும். ஆனால் ஆணுக்கு ஒரு ஒய் குரோமோசோமோடு இரு எக்ஸ் குரோமோசோம் அமைந்து விட்டால் அந்த ஆண் மிகுந்த பெண் தன்மை கொண்டவராக இருப்பார். அதே வேளையில் ஒரு எக்ஸ்சோடு இரு ஒய் குரோமோசம்கள் இருப்பின் அவரிடம் அதிகமான முரட்டு ஆண்குணம் காணப்படும்.

இதுதான் அன்று கற்பிக்கப் பட்டது.

தியாகு சிந்தித்தான். அப்படியானால் எனது மரபனுவில் கூடுதலான குரோமோசம் ஒன்று இருக்கிறதோ? அவன் மனம் துடித்தது. கணக்குப் போட்டுப் பார்த்ததில் அவனுக்கு ஒரு ஒய்யும் இரு எக்ஸ்சுமாக இருக்க வேண்டும். அதுதான் தன்னுடைய பெண் தன்மைக்குக் காரணமாக இருக்க வேண்டும்…

அவன் பாவம். பெண் சுபாவத்துடன் பிறந்தது ஒன்றும் அவன் குற்றமில்லையே! நடக்கும் நடையும், பேசும் பாவமும், குழையும் தன்மையும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைபட்டதாக அல்லவா இருக்கிறது!

“நான் அலியா?”

அலி என்று அவனைக் கூறிவிடலாகாது. அவன் அப்படியல்ல. சாதாரண ஆண்தான்; ஆண்மகனாகத்தான் தன்னைக் கருதியும் நடந்துக் கொள்கிறான். இருப்பினும் அவனுக்குள் ஒளிந்திருக்கும் அதிகப்படியான பெண்தன்மை அடிக்கடி தலைகாட்டி விடுகிறதே! அவனால் அதைத் தடுக்க இயலாமல் போயிற்று. இதனால் அவன் அடைந்த அவதியும் அவமானமும் கொஞ்ச நஞ்சமா?

எல்லோருக்கும் கேலிப் பொருளானான். அவன் நடந்தாலும் குற்றம், நின்றாலும் குற்றம், பேசினாலும் குற்றம், பார்த்தாலும் குற்றம், சிவனே என்று சும்மா கிடந்தாலும் குற்றம். எங்ஙனமாவது எதையாவது கண்டுபிடித்து தியாகுவை அலியாக வருணித்தலில் காட்டும் ஆர்வத்தைப் படிப்பில் காட்டியிருந்தாலாவது நூற்றுக்குக் குறைந்தபட்சம் தொண்ணூறாவது வாங்கியிருப்பார்கள். அந்தளவு உண்ணிப்பாக கவனித்து ஆராயக்கூடியவர்கள் தியாகுவின் சக மாணவர்கள்.

வகுப்பில் யாரும் அவன் அருகில் அமர விரும்பாதபோதும், விக்னேஸ்வரன் மட்டும் ஏதோ பரிவுகொண்டு அமர்வான். அவனது அறிவுரையின் பேரில் முடிந்தவரை தனது நடை, பேச்சு போன்றவற்றை இயல்பான ஆண் நிலைக்குக் கொண்டுவர முயற்சி செய்தான்.

தாமஸ் அல்வா எடிசன் மின்விளக்கைக் கண்டுபிடிக்க ஆயிரம் முறை தோல்வி கண்டு பிறகு வென்றாராமே! தியாகு எடிசனையும் மிஞ்சி முயன்று பார்த்தும் முடிவு என்னவோ தோல்விதான்.

“டேய் தியாகு! கேட்டில்ல? வேற ஒன்னும் இல்லடா… உனக்கு எக்ஸ் குரோமோசம் ஒன்னு அதிகமாப் போச்சாம்! ஹா ஹா ஹா…ன்னு ஈஸ்வரன் சிரிக்க, ஒரு எக்ஸ் கூடிப் போனதுக்கே இப்படின்னா ஏழெட்டு அதிகமா போயிருந்தா இன்னும் என்னென்ன அட்டகாசம் பன்னியிருப்பான்?” என்று கோஷ்டியில் இன்னொருத்தன் சேர்ந்துக்கொண்டான்.

வெந்த புண்ணையும் தாங்கிக் கொள்கிறான்; அதில் வேல் பாய்ச்சி விளையாடினாலும் தாங்கிக் கொள்கிறான்; அதிலே எறிமருந்தை அப்பினால் என்னவாகும்? பாவம் தியாகு. எவ்வளவுதான் தாங்குவான்?

எல்லோரும் அறிவியல் வகுப்பு முடிந்ததும் ஓய்வுக்குக் கலைந்தனர்.

தன் நிலையை நினைத்துருகி இறைவனிடம் மன்றாடினான். செத்துப் போன அப்பாவிடம் “இது உன் தவறுதானே?” என்று வெடித்தான்; அழுதான்; யாருக்கும் திறந்து காட்ட முடியாத மனம் எனும் அறைக்குள் அழுது தீர்த்துவிட்டு, “சே! ஆண்பிள்ளை அழக்கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்காங்க” என்று தன்னைத் தானே தேற்ற முயன்றபோதுகூட ஆண்பிள்ளை என்ற வார்த்தை இடிப்பது போல் தோன்றி மறுபடியும் அவனைக் கலங்கச் செய்தது.

அப்போதுதான் ஓய்வை முடித்து வகுப்புக்குத் திரும்பியிருந்த விக்னேஸ்வரன் தியாகு கலங்கியிருந்ததைப் பார்த்து விட்டான். “தியாகு, நீ சாப்பிட போகலையா?” என்று பேச்சுக் கொடுத்தான்.

“இல்லடா, எனக்கு மனசு சரியில்ல”, என்றவன் கைகளை மடக்கி மேசையில் வைத்து, இடுக்கில் தலையைப் புதைத்துக் கொண்டான்; விக்கியிடம் அழுத முகத்தைக் காட்ட விருப்பமில்லாமல்.

தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு, “இதுக்கெல்லாம் போய் அழலாமா தியாகு? அழகு உடம்புல இல்லடா… உள்ளத்துல” என்று பழைய தத்துவம் ஒன்றைத் திருடி, தனது ஆழ்மனதிலிருந்து வந்த கருத்தைப் போல சொன்னான். பல தடவை கேட்டு புளித்துப் போன தத்துவத்தைக் கேட்டுத் தலையுயர்த்தி அலட்சியமாய் ஒரு பார்வை பார்த்தான். “சொல்ல சுலபமாத் தான்டா இருக்கும்! நீ சொன்ன தத்துவம் நடைமுறைக்கு ஒத்துவரும்னு எனக்கு நம்பிக்கை இல்ல”, விரக்தியால் வார்த்தைகள் ததும்பின.

“ஆள் பாதி, ஆடை பாதிம்பாங்களே! ஒருத்தரோட மனச எடை போடுறதுக்கு முன்ன புறத்தோற்றம் தானே மதிப்பிடப் படுது. இதோ, இங்கயே பார்! உன்னத் தவர என்னை வேற யாரு புரிஞ்சிக்கிட்டா? முதல்ல என்னை மனுசனா கூட மதிக்க மாட்டேன்றாங்க!”, என்று தன் அனுபவத்தில் கிடைத்தப் பாடத்தைச் சொல்லி, தன் பக்க நியாயத்தை வலுப்படுத்தப் பார்த்தான்.

என்ன சொன்னாலும் அவனை அப்போதைய சூழலில் தேற்ற முடியாது என்று புத்தியில் உரைக்க, தியாகுவின் முதுகில் ஆதரவாய் தட்டிக் கொடுத்து விட்டு அடுத்தப் பாடத்திற்கான நூல்களை எடுத்துத் தயார்படுத்தத் தொடங்கி விட்டான் விக்கி.

அந்த கிர் ஜொகாரி பள்ளியிலே தியாகுவிற்கு இரண்டு விஷயங்கள் ரொம்பப் பிடிக்கும்.

முதலாவது, சுற்றும் முற்றும் எங்கு திரும்பினாலும் பச்சைக் கம்பளம் விரித்த இயற்கை எழில். சுங்கை சுமுன், பேராவின் சரித்திர கட்டடங்கள் என்றால் அதில் கிர் ஜொகாரி இடைநிலை பள்ளியையும் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். சுற்றி கிராமப்புறமாக இருப்பதால், பசுமையில் பள்ளி பழையதாயினும் எடுப்பாகவே இருந்தது. தியாகுவிற்கு அதில் ஓர் அலாதி ஈர்ப்பு.

இரண்டாவது என்று கேட்டால்…

“சொல்ல வெக்கமாய் இருக்கிறது”, என்று முகத்தை திருப்பிக் கொண்டு விருட்டென ஓடிவிடுவான். அடித்துப் பிடித்து விஷயத்தை வாங்கியதும் தான் தெரிந்தது அவனுக்குப் பிடித்த இன்னொன்று பக்கத்துக் கிலாஸ் படிக்கும் பிரியா என்று! இது அவன் பொத்திப் பொத்திப் பாதுகாத்து வந்த ரகசியம். அந்த ரகசிய எல்லைக்குள் நுழைய விக்கிக்கு மட்டுமே அனுமதி உண்டு.

பிரியாவிடம் மட்டுமல்ல, தன் குறை காரணமாக தியாகு யாரிடமும் அதிகம் பேச மாட்டான். ஆனால் தன் எண்ணத்தை எப்படியாவது பிரியாவிடம் சொல்லித் தொலைக்க வேண்டுமே! சமயம் வாய்க்கும் போது சொல்வோம் என்று காத்திருந்தவனுக்கு, ஒருநாள் பிரியா தனிமையாய் இருந்த நேரம் வாய்ப்பாகக் கிட்டியதைப் பயன்படுத்திக் கொண்டான் தன் காதலைக் கூற.

தட்டுத் தடுமாறி காதலைச் சொல்லும் போதுதான் பிறவிச் சுபாவம் வந்து காரியத்தைக் கெடுக்க வேண்டுமா? குரல் எங்கோ ஒரு பக்கம் இழுக்க, கைசாடை முகசாடை என்று எல்லாம் சுருதி மாறிப் போக, ஒரே குழருபடி! இதைப் பத்து பேர் பார்த்திருந்தால் அங்கேயே குபீரென்று சிரித்தே அவனைக் கொன்றிருப்பார்கள்.

ஒரு வழியாகச் சொல்லி முடித்தவன், பிரியாவின் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். அவள் முகத்திலோ சோக ரேகை படர்ந்திருந்தது. “ஸாரி தியாகு, உனக்கும் எனக்கும் பொருந்தாது. அதில் ஒரு பிரச்சனை இருக்கு” என்றாள்.

தியாகுவிற்கு பகீரென்றது. “என்ன பிரச்சனை பிரியா?” என்று கேட்டான்.

“ஜாதிப் பிரச்சனையா?”

“இல்ல”

“ஏழை பணக்காரங்கற பிரச்சனையா?”

“இல்ல”

“தோல் கலர் கருப்புன்னு நெனைக்கிறியா?”

“இல்ல”

“பின்ன என்னதான் பிரச்சனை?”

“நீ ஆம்பளையா பொம்பளையாங்கறது தான் பிரச்சனை”, என்று சொன்னவள், ஹோ… ஹோ… என்று சிரித்து ஊரைக் கூட்டிவிட்டாள். “இங்க பாருங்கடா… இந்த மன்மதன் என்னை லவ் பண்ணுதாம்! அதான் நான் கேட்டேன்… என்று செய்தி பரவ ஆரம்பித்து விட்டது.

இது ரகசியம் ரகசியம் என்று பொத்திப் பொத்திப் பாதுகாத்த விஷயம் இன்று முக்கியச் செய்தித் தலைப்பாக பரபரப்பாகப் பரவிக் கொண்டிருக்கிறதே! இதை யார் செய்தாலும் மன்னித்து விட்டுவிடுவார்கள். ஆனால் என்னை…?

தியாகுவால் அதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை. கொஞ்ச நஞ்ச மானமும் காற்றில் போனது. அதுவும் பதினெட்டு வயதுப் பையன் பெண்பிள்ளையால் அவமானப்படுவதை விட வேரென்ன பெரிய அவமானம் இருக்க முடியும்?

அழுத்தம் தலைக்கேற, வீட்டுக்குச் சென்று அம்மாவின் துணி பேழை உள்ள அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டான். இருந்த சேலைகளில் உறுதியான ஒன்றை எடுத்துத் தூக்குக் கயிறாகத் திரித்துக் கட்டினான். அதைக் கழுத்துக்கு ஏற்றும் நேரம் பார்த்து ஒரு தொந்தரவு…

“அண்ணா! அண்ணா!” என்று கதவைத் தங்கை தட்டினாள். நிம்மதியாகச் சாகவும் விடமாட்டார்கள் போலிருக்கே என்று எண்ணி கதவைத் திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டினான், போட்டத் தூக்குக் கயிறு தங்கைக்குத் தெரியா வண்ணம்.

“அண்ணா! சாப்பிட அம்மா மீன் கறி வெச்சிருக்காங்க. சாப்பிட்டுட்டு, தங்கச்சியைக் கொண்டுப் போய் டியூஷன்ல விட்டுறச் சொன்னாங்க” என்று ஒப்புவித்தாள். “அம்மா எங்கே?” என்று தியாகு கேட்க, “இன்னைக்கு புது இடத்துல புல்லுக்கு மருந்து அடிக்க ஆள் கூப்பிட்டாங்கன்னு அம்மா வேலைக்குப் போயிட்டாங்க. சாயந்தரம் தான் வருவாங்க”, என்று சொல்லிவிட்டு ஒன்பது வயது தங்கையை டியூஷனுக்குத் தயார்செய்து விட்டுக்கொண்டிருந்தாள் அவள்.

மறுபடியும் கதவை சாத்திக்கொண்டான் தியாகு. “சே! என்ன முட்டாள்தனம் செய்யப் பாத்தேன்? என்று சுவரில் மாட்டி மாலை போட்டு வைக்கப்பட்டிருந்த அப்பாவின் படத்தைப் பார்த்தான். வீட்டுக்கு ஒரே ஆண்துணை நான் தான்னு அம்மா அடிக்கடி சொல்லுவங்களே! நானும் போயிட்டா அம்மாவும் தங்கச்சிங்களும் எங்க போவாங்க?” என்று தலையில் அடித்துக் கொண்டான்.

“யாரோ எவரோ சொல்வதால் நான் ஆண்பிள்ளை என்றாகி விடுமா? என்னைப் பெத்தவளே நீதான் இந்த வீட்டுக்கு ஆண்பிள்ளைன்னு சொன்னாங்களே, அதை எங்கிட்டுச் சொல்ல? சே! பெரும்பாவம் செய்யத் துணிந்தேனே!”, என்று புத்தி தெளிந்தான். உடனே சேலையை அவிழ்த்து மடித்து எங்கிருந்ததோ அங்கேயே வைத்துவிட்டு மருபடியும் அப்பாவின் படத்தைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டான்.

தங்கை மீண்டும் அழைக்க, இதோ சோற்றைப் போட்டுவிட்டேன்! பத்து நிமிடம் கொடு, முடித்துவிட்டு வருகிறேன் என்றவன் சமையலறை பக்கம் விரைந்தான்.

(இந்து பிரதிநிதித்துவச் சபை – மலேசிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய 11வது சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற கதை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *