”பரிமளம்! கொஞ்சம் காபி தா” கொல்லைப்புறம் கை, கால், முகம் கழுவச் சென்றார் கேசவன்.
”காபி டேபிள்-ல வச்சிருக்கேன்” சொல்லிவிட்டு அடுக்களைக்குள் புகுந்தாள் பரிமளம்.
திரும்பி வந்தவர் கடுப்பாகிக் கத்த ஆரம்பித்தார்.
”ஏய் பரிமளம், இங்க வந்து பார்! இந்தப் பூனையை”
காபியைக் கீழே கொட்டி முழுசாய் குடித்திருந்தது அது.
”உனக்கு ஆயிரம் தடவை சொல்லிட்டேன்! இதுக்கு சாதம், பால்னு பழக்கம் பண்ணாதேன்னு! நாம என்னதான் தந்தாலும் திருடிச் சாப்பிடறது பூனை புத்தி, வர வரத் தொல்லை தாங்க முடியல” பேச்சில் அனல் பறந்தது.
”நாளை அய்யாச்சாமிய வரசொல்லி, ஊர் அந்தாண்ட இருக்குற வாய்க்கால்ட்ட கொண்டுபோய் விட்டுறச் சொல்லு. இல்ல நடக்கறதே வேற” கண்டிப்புடன் சொன்னார்.
மறுநாள் காலை! பள்ளியில் சிறுவர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார் கேசவன்.
”அறம் செய விரும்பு”….
…………. இடையிடையே அந்தச் சப்தம் கேட்டது.
”உயிர்களிடத்தில் அன்பு வேணும்”
லொள்! லொள்!
அந்தச் சப்தம் அருகில் கேட்டது. “என்னடா அது சத்தம்?” அதட்டிய அதட்டலில் அந்தச் சிறுவன் எழுந்தான். அவன் பையில் அந்த நாய்குட்டி.
அவர் பார்வையைப் புரிந்து கொண்டவனாய், ”இல்ல சார்! ரோட்ல, இங்கயும் அங்கயும் ஓடிட்டு இருந்துச்சு, கார்ச் சக்கரத்துல மாட்டிடும்னு எடுத்துட்டு வந்துட்டேன். வீட்ல வச்சி வளர்க்கப் போறேன் சார்” நடுங்கியபடிச் சொன்ன மாணவனைப் பார்த்துக் கேசவனுக்கு உடல் தளர்ந்து நடுங்கியது.
– செப்டம்பர் 2007
நல்ல கதை.அனைத்து உயிர்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும் .