(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“இந்தச் சின்னஞ் சிறு வார்த்தையை அந்தச் சின்னஞ் சிறு பாலகன் ஏன் அப்படி முணு முணுக்கிறான்? அதை முணு முணுக்கும் போதெல்லாம் அவன் என் கண்ணீர் விடுகிறான்?
இந்த வார்த்தையை ஏழெட்டு மாதங்களுக்கு முன்னால் அவன் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறான். அப்போது அந்த வார்த்தை அவன் உள்ளத்தைச் சுடவில்லை; நெஞ்சை உருக்கி நிலைகுலையச் செய்யவில்லை இப்போது மட்டும் ஏன் அப்படி?
ஆச்சரியந்தான்…………
ஐப்பசி மாதம்; சதாதூறிக் கொண்டே இருந்தது. “‘பள்ளிக் கூடம் விட்டதும் பையன் எப்படி வருவான், இந்த மழையில்? என்ற கவலை அப்பாவைப் பீடித்தது.
குடையை எடுத்துக் கொண்டு கிளம்பினார்; தன் பையனை அழைத்துக் கொண்டுவர.
வழியில் ஒரு மூங்கில் பாலம், அதைக்கடந்தால் அவர்கள் வீடு.
எத்தனையோ முறை எந்த விதமான விக்கினமும் இன்றி அதைக் கடந்து அவர்கள் வந்திருக்கிறார்கள்.
ஆனால் இன்று ………..
அவர்களுக்கு ஒன்றும் நேரவில்லைதான்; ஆனால் யாரோ ஒரு வழிப்போக்கன்-அவன் கால் வைத்ததும் அந்த மூங்கில் பாலம் முறிந்து விழுந்தது; அவனும் தொபுகடீரென்று கீழே விழுந்தான்.
“ஐயையோ!”
இப்படி ஓர் அலறல் !- அடுத்தாற் போல், என்னைக் காப்பாற்றுங்கள்; என்னைக் காப்பாற்றுங்கள்! என்ற கதறல்
பையனுக்குத் தாங்கவில்லை. பாலத்தை நோக்கி ஓடினான்- அருமை அப்பா விடுவாராரா?. அவன் யாரோ, நீ வாடா! என்று கையைப் பிடித்து கரகரவென்று இழுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டார். அதற்குப் பின் அந்த வழிப்போக்கனைப் பற்றி அவர்கள் கவலைப்படவேயில்லை!
ஆனால் இன்று ………..
பொங்கற் புது நாள். கிராமத்தில் கரும்பு வெட்டும் போட்டி நடந்து கொண்டிருந்தது. அப்பாவுக்குத் தெரியாமல் பையனும் அதில் கலந்து கொண்டான்.
“ஐயையோ !
அதே அலறல் – அலறியவன் பையன்தான்! அவன் கையில் சரியான கொடுவாள் வெட்டு; ‘குபுகுபு’ வென்று பாய்ந்தது ரத்தம்!
யார் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள்? அவனுடன் போட்டியிட்ட சிறுவர்கள் கூடப் பயந்து ஓடி விட்டார்கள். எல்லாம் தங்கள் அப்பாக்களிடம் அவர்கள் கற்றுக் கொண்ட அவன் யாரோ, அவன் யாரோ!” என்ற பாடந்தான்!
கடைசியாக ஒரு சிறுவன் வந்தான்; வெட்டுப் பட்டவனை நோக்கி விரைந்தான்.
ஆனால்……….
அதற்குள் அவன் அப்பா வந்து விட்டார்; வழக்கம் போல அவன் யாரோ, நீ வாடா என்று அவனை அழைத்துக் கொண்டுபோய் விட்டார்!
இப்போதுதான் அந்த மூங்கில் பாலத்து சம்பவம் நினைவுக்கு வந்தது வெட்டுப்பட்ட சிறுவனுக்கு; தன் அப்பாவும் அவன் அப்பாவும் ஒரே மனோபாவத்தில் இருப்பது குறித்து அந்தச் சிறுவன் மனம் பொருமினான்.
“அவன் யாரோ!” அவன் யாரோ!”
இவ்வாறு முணுமுணுத்துக் கொண்டே, உதவி செய்வார் யாருமின்றி அழுத கண்ணீர் ஆறாய்ப் பெருக அவன் அப்படியே சாய்ந்தான்.
பையனைக் காணாமல் அப்பா தேடிக் கொண்டு வந்தார் தெருவோரத்தில் மூர்ச்சையாகிக் கிடக்கும் அவனைக் கண்டதும் “ஆ! என்று அலறினார்.
“அவன் யாரோ?
“அவன் யாரோ!
தமக்கிருந்த ஒரே செல்வத்தின்வாய் அந்த ஒரே வார்த்தையைத் திருப்பி திருப்பி முணுமுணுப்பதை கேட்டதும் அவருக்கு திக்கென்றது. அத்துடன் அந்த மூங்கில் பாலத்துச் சம்பவமும் அவருடைய நினைவுக்கு வந்தது.
“அவன் யாரோ!”
“அவன் யாரோ!
பையனைப் போலவே அப்பாவும் இப்போது அந்தச் சர்வ சாதாரணமான வார்த்தையை அடிக்கடி முணுமுணுத்தார்.
இப்படித்தான் அப்பா எல்லோரும் சொல்லிவிட்டுப் போய் விட்டார்கள்- அவர்களில் நானும் ஒருவன் அல்லவா? அவர்களைப் போலவே நானும் மனிதன் அல்லவா?” என்றான் பையன்.
ஆம்; இனி நீ மட்டும் அல்ல. நானும் மனிதன், நாம் அனைவரும் மனிதர்கள்!” என்றார் அப்பா.
– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.