அவன் மட்டும் இல்லாதிருந்தால்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 9,860 
 

கதவைத் தட்டினேன். அழைப்பு மணி பார்வையில் படவில்லை. தட்டியபிறகு தோன்றியது. இத்தனை வேகம் காட்டியிருக்கவேண்டாமென்று.

சுசீலாதான் வந்து கதவைத் திறந்தாள். என்னைப் பார்த்ததும் திகைப்பு.

“உள்ளே வரலாமா”

“வா..ங்க”

சுதாரித்துக் கொண்டு அழைத்தாள். உள்ளே புழுக்கம் இன்னும் அதிகமாய்த் தெரிந்தது.

“தினு ஸ்கூலுக்குப் போயிருக்கானா”

தலையசைத்தாள். கூடவே குழப்பமும். நான் ஏன் இந்த வேளையில் வந்திருக்கிறேன் என்று.

“எதுவும் சாப்பிடுகிறீர்களா”

அவளை நேராகப் பார்த்தேன். ‘நீ போ.. நீ போ’ என்று கடைசியில் என்னைப் பிடித்துத் தள்ளி விட்டார்கள். எப்படி சொல்லப் போகிறேன்.

“கொஞ்சம் நாம இப்ப வெளியே போகணும். கிளம்பலாமா” என்றேன்.

“எ..துக்கு”

“நத்திங். வந்து.. சரவணன்”

சுசீலாவுக்கு எதுவோ புரிந்திருக்க வேண்டும்.

“இருக்காரா.. இல்லே”

என் மௌனம் அவளை உலுக்கியது. அதைவிட அவளின் நிதானம் என்னை ஆச்சர்யப்படுத்தியது.

“போ..லாம்”

உள்ளுக்குள் விசும்ப ஆரம்பித்து விட்டாள்.

“தினுவையும் கூட்டிகிட்டு போயிரலாம்” என்றாள் காரில் ஏறும்போது.

ஹாஸ்பிடலில் போஸ்ட்மார்டம் முடிந்து இறுதிச் சடங்குகளும் முடிய இரவு எட்டு மணியாகிவிட்டது.

என் மனைவியுடன் கோபியின் மனைவியும் சேர்ந்து சுசீலாவுக்குத் துணையாக இருந்தார்கள்.

நாங்கள் மூவரும்தான் ரொம்ப வருஷமாய் சிநேகிதம். எங்களில் சரவணன் மட்டுமே வித்தியாசப்பட்டவன். பழக்கங்களுக்கு அடிமையாகிப் போனவன்.

“நீங்களாச்சும் அவருக்கு புத்தி சொல்லக்கூடாதா?” என்றாள் என் மனைவி ஒருமுறை.

“சொல்லாமலா.. நோ அட்வைஸ் பிசினஸ். அப்புறம் உங்க நட்பே வேணாம்னு போயிருவேன்னான். வேற வழி.. பேசாம விட்டுட்டோம்”

“எனக்கு என்னவோ சரின்னு படலீங்க. வீட்டுக்கு பணமே தரலியாம். பாவம். அவங்க ஒரு தடவை ரொம்ப அழுதுட்டாங்க.”

“என்னை என்ன பண்ணச் சொல்றே.. அவன் புத்திமதி கேட்கிற ஆள் இல்லை. மீறி சொன்னா.. இப்ப பேசறதும் போயிரும். அதனால திருந்தப் போறதில்லே. அட்லீஸ்ட் இப்ப எங்க மேல ஒரு மரியாதையாவது வச்சிருக்கான்”

சுசீலாவுக்கு எங்கள் அலுவலகத்திலேயே வேலை கிடைத்துவிட்டது. நானும் கோபியும் மிகவும் முயற்சித்தோம். பலன் கிடைத்தது.

அவ்வப்போது அவளைப்போய் பார்த்துவிட்டு வருவோம். தினு நன்றாகப் படிக்கிறான் என்பது தெரிந்து சந்தோஷப்பட்டோம்.

அன்றும் போயிருந்தோம்.

“தினு.. பிராகிரஸ் ரிப்போர்ட்டைக் காட்டு.. அங்கிள்கிட்டே”

முதல் ரேங்க்! கையைப் பற்றி குலுக்கினேன். லேசாய் வெட்கப்பட்டான். அப்படியே சரவணன் ஜாடை.

எனக்குள் பெருமூச்சு.

“ஹூம்.. அவன் இருந்தா.. சந்தோஷப்பட்டிருப்பான்”

சுசீலாவிடமிருந்து நிதானமாய் பதில் வந்தது.

“இல்லீங்க. இவனும் அவரைப் பார்த்து கெட்டுப் போயிருப்பான். இப்ப அந்த அதிர்ச்சில பொறுப்பு வந்து என் பேச்சை முழுசாக் கேட்கறான். நிச்சயமா இவன் முன்னுக்கு வருவான். எங்களுக்கும் இழந்து போன சந்தோஷம் கிடைச்சுரும்.”

சில சமயங்களில் யதார்த்தம் விடுகிற அறை பளீரென்றுதான் விழுகிறது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *