அவன் பெண், அவள் ஆண்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 8,556 
 

சென்னை தியகராய நகரிலுள்ள பிரபலமான திருமண மண்டபம் முன்பு அந்த ஓலா கார் நின்றது.

இன்று அக்ஷயாவின் தங்கைக்கு திருமணம். நேற்று தான் அவளை தோலில் போட்டிக்கொண்டு போலியோ சொட்டு மருந்து போட சென்றதுபோல் இருந்தது அவளுக்கு. அக்ஷயாவால் மாலினிக்கு திருமணம் என்றால் நம்பவே முடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் ஃபோன் செய்திருந்தாள் மாலினி.

”அக்கா, யாரை பத்தியும் கவலைபடாதே, எனக்காக நீ வந்தே ஆகனும்”

“இல்லடி, அது வந்து…“

“வந்து..போயி கதை எல்லாம் வேண்டாம்..ஆனால் ஒன்னு..நீ இல்லாமல் நான் தாலி கட்டிக்க மாட்டேன்,என்ன பத்தி உனக்கு தெரியும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தாள் மாலினி.

பிடிவாதக்காரி! செய்தாலும் செய்துவிடுவாள் என்ற பயம் ஒரு புறம் இருக்க, தன் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தன்னை அக்கா என்று அழைக்கும் ஒரே ஆள் அவள் தான். அந்த நன்றிக்காவது செல்வோம் என்று முடிவு செய்தாள்.

நீண்ட நாட்களுக்கு பின் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தாள் இன்று. மும்பையிலுருந்து விமானம் பிடித்து சரியாக முகூர்த்தம் முடிய அரை மணி நேரம் இருக்க வந்திருந்தாள், ஆசை தங்கை அழைத்த ஒரே காரணத்தினால். மண்டபம் முழுக்க உறவுகள் சுற்றி கொண்டிருந்தன. அவர்களை கண்டதும் சட்டென்று அந்த உற்சாகமெல்லாம் மறைந்தது . ஒருகனம் அப்படியே திரும்ப சென்று விடலாமா என்று யோசித்தாள். மறுகனம் பேனரில் இருந்த மாலினியின் முகம் கண்ணில் பட உற்சாகம் மீண்டும் பிறந்தது.

“மேடம், இடம் வந்ததிருச்சு” என்று ஓலா டிரைவர் கூற, யோசனையில் இருந்து மீண்டாள் .

“இவர்களுக்கெல்லாம் பயந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியுமா ?” என்று எண்ணியவாறு “ஏவ்வளவு ஆச்சு பா?” என்றாள் தனது ஆண் குரலில். டிரைவர் திடுக்கிட்டு பின் திரும்பினான். பின்பு எல்லாம் புரிய சுதாரித்துக் கொண்டான்.

“ஒன் ஃபிப்டி…. ஸாரி…சார்-னு கூப்பிடவா இல்ல மேடம்-னு கூப்பிடவா… இதுக்கு முன்னாடி இப்படி யாரும் வண்டில வந்ததே கிடையாது, எதாவது தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சிக்கங்க..”

“ஏன் ? இதுக்கு முன்னாடி பொண்ணுங்க உங்க வண்டியில ஏறியதே இல்லயா என்ன ? இந்தாங்க ஒன் ஃபிப்டி”

“ ஸாரி மேடம், இப்போ தெளிவா இருக்கேன்” என்று மரியாதை கலந்த புன்னகையுடன் பணத்தை பெற்றுக்கொண்டு சென்றான். பன்னீர் தெளிக்க நின்றிருந்தவர்கள் இவளை கண்டதும் எதோ முணுமுணுத்துக்கொண்டார்கள்.

“ஹும்…இந்த டிரைவர்க்கு இருக்கும் முற்போக்கு எண்ணம் கூட தங்களை பெரிய மேதாவிகள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் இந்த கூட்டத்திடம் இல்லை” என்று நொந்துக்கொண்டே மண்டபத்தை நோக்கி நடந்தாள். மண்டபத்தின் முகப்பில் சிறிய கோபுரம் அமைத்து அதில் பராசக்தியின் விக்கிரத்தை வைத்திருந்தார்கள்.

அங்கே சென்று மாலினிக்காக வேண்டிவிட்டு, “தாயே, இந்த வேடிக்கை மனிதர்களிடம் இருந்து என்னையும், என் பொல்லாத வாயிடம் இருந்து அவர்களையும் காப்பாற்று” என்று முறையிட்டு மண்டபத்தின் உள்ளே நடந்தாள்.

அக்ஷயாவிற்க்கு மூன்றாம் பாலினத்தின் மீது நம்பிக்கை இல்லை. தான் பெண் என்று அவளுக்கு தெரியும். ஒருவர் ஆணா பெண்ணா என்பது அவர் அவர்களின் உள்ளம் தான் முடிவு செய்ய வேண்டும், அவர்களின் உறுப்புகள் அல்ல என்பது அவளின் நம்பிக்கை.

முதன்முதலாக தான் ஒரு பெண் என்று உணர்ந்தபொழுது அவளுக்கு பன்னிரண்டு வயது. ஓருநாள் எல்லோரும் இருக்க “அம்மா, நான் ஒரு பெண் என்று நினைக்கிறேன்” என்றாள். சுற்றி இருந்தவர்கள் “டேய் அக்ஷய் , ஏன்னடா இது புது விளையாட்டு” என்று சிரித்துவிட்டு அமைதியாகிவிட்டர்கள். அவளும் ஒன்றும் புரியாதவளாய் விட்டுவிட்டாள்.

பின்பு ஒரு வருடம் கழித்து அவள் உடல் மற்றும் பாவனைகளில் மாற்றம் தெரிய அவர்களுக்கு விஷயம் புரிய ஆரம்பித்தது. அவளது அம்மா, “நான் என்ன பாவம் செய்தேன், கடவுள் எதுக்கு என்னை இப்படி தண்டித்தான்”, என்று நெஞ்சை அடித்திக் கொண்டு கதறினாள். அம்மாவும் பெண் தானே. பின் ஏன் அதை தண்டனையாக கருதுகிறாள் என்று குழம்பினாள் அக்ஷயா. அன்று முதல் அவள் தாய் இதுவரை அவளிடம் பேசியதில்லை.

உறவுக்காரர்கள் அவளை தொலைத்துவிட யோசனை கூற, அப்பாவிற்கு அதில் உடன்பாடு இல்லை. பல தொண்டு நிறுவனங்களை நடத்தி வரும் அவர் மனது, அவர்களின் கருத்தை ஏற்க மறுத்தது. வீட்டிலே அவளை வளர்த்தாலும் சுற்றி இருக்கிறவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து, தனி வீடு வாங்கி, செவிலியரை அமைத்து படிக்க வைத்தார்.

இன்று அவர் இல்லை என்றாலும் , அவர் அன்று இல்லை என்றால் தனது நிலைமை என்ன என்று எண்ணி பார்க்கவே அச்சமாக இருந்தது அவளுக்கு. “நீ பெண் என்று உனக்கு தெரியும். அதில் உறுதியாக இரு” என்று அவர் கூறிய வார்த்தை தான் தன்னை இன்று வாழ வைத்திருக்கிறது என்று எண்ணி மகிழ்வாள். எல்லா தடைகளையும் உடைத்து பொறியியல் முடித்து இன்று ஃப்ரீலேன்சராக இருக்கிறாள்.

எவ்வளவோ ஏளனங்கள், அவமானங்கள்,தடைகளை பார்த்துவிட்டாள். இவள் துவண்டு இருக்கும்பொழுது மாலினி “பழசையெல்லாம் நினைக்காதே அக்கா, நடக்கப்போவதை நினை” என்பாள். ஆனால் அவளுக்கு தெரியும் நடக்கப்போவதை நினைப்பதென்பது கனவு காண்பதுதான். நடந்தவற்றை நினைப்பதை நிறுத்திவிட்டால், நினைப்பதற்க்கு எதுவுமே இருக்காது. எதுவுமே நினைக்காமல் மனிதனால் இருக்க முடியாது. நடந்தவற்றை தனக்கு கவசமாக மாட்டிக்கொண்டாள். கடந்தகால நினைவுகள் தான் அவளை மேலும் வலிமையாக்கிக் கொண்டிருந்தன.

அவளுக்கு பிடித்த ஆங்கில தொடர் ஒன்றில் டிரியன் என்று வளர்ச்சிக்குன்றிய கதாபாத்திரம் வரும். ஒருமுறை டிரியன் “ நீ யார் என்பதை மறக்காதே. ஏனெனில் இந்த உலகம் அதை மறக்காது. அதையே நீ ஒரு கவசமாக அணிந்துக்கொள். உன்னை யாராலும் புண்படுத்த இயலாது” என்று கூறுவான். அதை தனது அறையில் எழுதி ஒட்டி வைத்திருந்தாள்.அதன் படியே வாழ்ந்துக்கொண்டும் இருக்கிறாள்.

இப்படித்தான் ஒருமுறை சினிமா பார்க்கச் சென்றபொழுது இவளை பார்த்து ஒருவன் இரண்டு முறை கை தட்டினான். சட்டென்று திரும்பி , “ சில்லரை இல்லப்பா, ஆனா பாத்தா பாவம இருக்க, இந்த இருபது ரூபா வச்சிக்கோ” என்று அவன் கையில் இருபது ரூபாயை போட்டுவிட்டு நடந்தாள்.அவனை சுற்றி இருந்தவர்கள் அவனை பார்த்து சிரிக்க அவமானத்தில் தலை குனிந்தான்.

இதையெல்லாம் எண்ணியவாறே மண்டபத்திற்க்குள் நுழைந்தாள். மேடை மேல் மாலினியையும் மாப்பிள்ளையும் அமர்ந்திருப்பதை கண்டாள். அவள் மனம் என்றும் இல்லாத அளவு நெகிழ்ச்சியுற்றது. மாலினி சிரித்தாவாறே கையசைத்தாள். அக்ஷயா வழிந்தோடிய ஆனந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு கை அசைத்தாள். அம்மாவை விதவை என்பதால் மேடைக்கு கீழே நிற்க வைத்திருந்தனர். இவளை பார்த்தும் பாராதுமாய் முகத்தை திருப்பிக்கொண்டாள்

“டேய் அக்ஷய், நீ வரமாட்டேன்னு சொன்னாங்க, பரவாயில்லை கரெக்ட்டா தாலி கட்டுற சமயதுல வந்துட்டே “ என்று கூறியவாறு கமலா சித்தி வந்து நின்றாள்.

“நல்லா இருக்கிங்களா சித்தி, சித்தப்பா நல்லா இருக்காறா ?…. அப்புறம் என் பெயர் அக்ஷயா,….. அக்ஷய் இல்லை”

“ஆரம்பிசிட்டியா…எல்லாம் நல்லா இருக்காங்க…”

இன்னும் சித்தி அவளை நலம் விசாரிக்கவில்லை

“அப்புறம் சித்தி..”

“அப்புறம்… அது வந்து…சொல்றேன்னு தப்பா எடுத்துகாதே..அம்மாகூட கீழ தான் நிக்கிறாங்க..நீ மேடைக்கு போனா மாப்பிள்ளை வீட்டுல எதாவது நினைச்சுப்பாங்க…நீ இங்கயே இரு….” என்றாள் தயக்கத்துடன் கமலா சித்தி

எதிர்பார்த்தது தான். இதுவே மற்ற நாளாய் இருந்திருந்தால் இந்நேரம் வீம்புக்கென்றே நேராக மேடை ஏறியிருப்பாள். ஆனால் இன்று மாலினியின் தினம். இன்று களேபரம் செய்து தன் பக்கம் கவனத்தை திருப்பிக்கொண்டால் நன்றாக இருக்காது என்பதிறிந்து அமைதியாக இருந்தாள்.

“எல்லாம் எனக்கு தெரியும்,சித்தி. நீங்கள் போய் கல்யாண வேலையை பாருங்க…” என்று புன்முறுவல் செய்தாள்.

கமலா சித்தி “என்ன செய்ய காத்திருக்கிறாளோ ? “ என்ற ஐயத்துடன் நகர்ந்து செல்ல , அக்ஷயா அருகிலுள்ள நாற்காலியில் அமர்ந்தாள் .

மாங்கல்யத்தை அனைவரிடமும் கொடுத்து ஆசி பெற்றுக்கொண்டு இருந்தார்கள். சுற்றி பார்த்தாள். பரிட்சையமான முகங்கள் சில தன்னை குருகுருவென்று பார்த்துக்கொண்டு இருப்பதை கவனித்தாள். இவள் அவர்களை கண்டதும் தலையை திருப்பிக்கொண்டார்கள்.

புதிய முகங்கள் யாரும் தன்னை கவனிக்கவில்லை, தன்னை அறியாதவர்கள் சாதாரணமாக அவளை கடந்து சென்றுக்கொண்டு இருந்தார்கள் என்பதை கவனித்தாள். அப்படியே யோசனை கடலில் மூழ்கினாள்.

சிறுவயதில் அக்ஷய்யாக இருந்த பொழுது, கமலா சித்தி பெண் விடுதலைக்காக கட்டுரை எழுத நமக்கு உதவியிருக்கிறாள். இப்பொழுது தன்னை மேடை ஏற தடுக்கிறாள்.

சரி, நாம் தான் பெண்ணாக மாறியவள் என்று வைத்துக்கொண்டாலும் பெண்ணாகவே பிறந்த அம்மா மேடை ஏறுவதிலும் அவளுக்கு உடன்பாடில்லை. ஏன்! அம்மாவிற்கே அதில் உடன்பாடில்லை….பெண்களே தங்களுக்கு முட்டுக்கட்டை அமைத்திக்கொண்டால் பாலின சமத்துவம் எப்படி சாத்தியமாகும் ?

மாலினி அவளுக்கு பிடுத்த பயோ டெக்னாலஜி படித்துவிட்டு , அதில் ஆய்வு மேற்கொண்டு இருந்தாள். இவளுக்காவது பிடித்ததை செய்யும் வாய்ப்பு இருக்கிறது என்று மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். ஆனால், இன்று திடிரென்று அவளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். அவளது கணவன் திருமணத்திற்க்கு பிறகு வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியதாக மாலினி கூறியிருந்தாள்.

ஒரு பெண், விடுதலையை யாரிடம் இருந்து பெற வேண்டும் ? ஆண்களிடம் இருந்தா ? இதோ, ஆம் என்ற பதிலாய் மாலினியின் கணவன் இருக்கின்றானே. ஆனால், அப்பா மற்றும் காலை தன்னிடம் மறியாதையுடன் பேசிய டிரைவர் போன்ற ஆண்களும் உள்ளனரே ?

அன்று பெண் விடுதலை பற்றி பேசிய அம்மாவும், கமலா சித்தி போன்ற பெண்களும் கூட இன்று மாலினி போன்று தனது மகள்களையும் அதே நிலைக்கு தானே ஆளாக்குகின்றனர்.

பெண்ணாய் பிறந்தவர்களுக்கு சமுகம் வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துவிட்டு அதனை தக்க வைத்துக்கொள்ளும் சுதந்திரத்தை மறுத்துவிடுகிறது. பெண்ணாய் மாறிய தனக்கோ எதை வேண்டுமனாலும் செய்ய கொடுத்துவிட்டு, வாய்ப்புகளை கொடுக்க மறுக்கிறது !

இதோ இந்த புதிய மனிதர்கள் விவரம் எதுவும் அரியாத வரை சாதாரணமாக நடந்துக்கொள்கிறார்கள். விவரம் தெரிந்த பின், வேறு விதமாக நடந்துக்கொள்கிறார்கள்.

இந்த பிற்போக்கான எண்ணங்களை யார்,எங்கே விதைக்கிறார்கள் ?

இவ்வாறு எண்ணிக்கொண்டு இருக்க மாங்கல்யத்தை அவளிடம் ஆசி பெற நீட்டினாள் ஒரு சிறுமி. அக்ஷயா அதை வணங்கிவிட்டு , அட்சதையை எடுத்துக்கொண்டாள். கமலா சித்தி அந்த சிறுமியை முறைத்துக்கொண்டு இருந்தாள். மீண்டும் விடை தேடி யோசனையில் மூழ்கினாள் அக்ஷயா.

“இவ்வளவு எளிதாக நமக்கு புரிகின்றபொழுது ஏன் மற்றவர்களுக்கு புரிவதில்லை. ஒருவேளை நான் ஆணாக இருந்து பெண்ணாக மாறியதாலா?”

சட்டென்று அவளுக்கு எல்லாம் புரிந்தது. ”ஆம், அதுதான். ஆணாக இருந்த நான் பெண்ணாக மாறியது எப்படி?

அந்த பன்னிரண்டு வருடமும் என்னுள் எங்கோ பெண்மை ஒழிந்துக்கொண்டு இருந்திருக்கிறது. அது அதிகம் சுரக்கவே பெண்ணாக மாறினேன். ஆகவே ஒவ்வொரு ஆணுக்குள்ளும் பெண்ணியம் ஒழிந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆண்மை ஒழிந்துக்கொண்டு தான் இருக்கிறது

ஆண், பெண் என்பது என்ன ? உடலில் டெஸ்டோஸ்டிரோன் அதிகம் சுரந்தால் அவன் ஆண்.எஸ்ட்ரோஜன் அதிகம் சுரந்தால் அவள் பெண்.

ஆக, ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் இருக்கும் ஆணை அறிய வேண்டும், ஒவ்வொரு ஆணும் தனக்குள் இருக்கும் பெண்ணை அறிய வேண்டும். அதுவே, பாலினச் சமத்துவத்திற்க்கான ஒரே வழி…”

இவ்வாறு யோசனையில் மூழ்கி இருந்தவள், அய்யர் “கெட்டிமேலம், கெட்டிமேலம்” என்றதும் விழித்தெழுந்தாள். மாப்பிள்ளை மாலினிக்கு தாலி கட்டிக்கொண்டு இருந்தான். அவன் மாலினிக்கு கைவிலங்கு போடுவது போல இருந்தது அவளுக்கு.

அட்சதை தூவி வாழ்த்திவிட்டு அமர்ந்தவள், “ தெய்வமே, ஒரு பெண்ணிற்க்கு தான் எத்தனை பூட்டுகள் போடுகிறார்கள். இந்த மனிதர்களை நீதான் காப்பாற்ற வேண்டும்” என்று வேண்டிக்கொண்டே முகப்பில் இருந்த பராசக்தியை நோக்கினாள்.

ஒருவன் பராசக்திக்கு கிரில் கதவு உபயம் செய்து பூட்டு போட்டிருந்தான். ”உனக்கே விபூதி அடிச்சிடாங்களா ?” என்று எண்ணியவாறே தனக்குள் சிரித்திக்கொண்டாள்.

தூரத்தில் எங்கோ “நல்லதோர் வீணை செய்தே……” என்ற பாடல் ஒளித்துக்கொண்டு இருந்தது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *