அழுது கழித்த இரவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 1,558 
 
 

(1998 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஊர் சொல்லுகிறது, உலகம் சொல்லுகிறது, என்னை நடத்தை கெட்டவள் என்று. அந்த ஒரு சொல்லைக் கேட்கும்போது உண்டாகிற அருவருப்பும், நினைக்கும் போது எழுகிற அசிங்கமும், உருவும் நிழலுமாக ஒருங்கிணைவதால் எழுகிற வெறுப்பும் என்னை ஏளனத்தோடும் எரிச்சலோடும் பார்க்க வைக்கிறது அவர்களை –

அந்த ஒரு சொல்லின் முழு அர்த்தத்தையும் மனதில் வாங்கி அந்தச் சொல்லால் குறிக்கப்படுகிற பெண்ணையும், அந்தப் பெண்ணின் பலவீனத்தையும், அந்தப் பெண்ணின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஓர் ஆடவனை அல்லது அவளது பலத்துக்காட்பட்டு விட்ட ஓர் ஆடவனை உடன் சேர்த்து நினைத்துப் பார்க்க முடியாததால் வெறுப்பை மாத்திரமே வெளிப்படுத்துகிற அவர்களைப் பற்றி நான் கவலை கொள்ளப் போவதில்லை. ஆனால், அதே உணர்ச்சிகளோடு என் கணவரே என்னைப் பார்க்கும் போது….

யாரையும் எளிதில் மயக்கிவிட முடியாததாலும், பிறரின் கவனத்தைக் கவர்ந்து இழுக்கக் கூடியதுதான் என்னழகு.

சிறுபிராயத்தில் கண்ணாமூச்சி விளையாடிய காலத்திலும், தோட்டப் பாடசாலையிலே ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் போதும், பின் கொழுந்து கிள்ள ஆரம்பித்த காலத்திலும் என்னைச் சுற்றித் திரிந்த ஆண் பிள்ளைகளை எளிதில் மறந்து விடுவதற்கில்லை; அப்போதெல்லாம் எப்படி நெருப்பாக இருந்து அவர்கள் என்னை நெருங்கவிடாது செய்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது என்மீது எனக்குப் பெருமையாக இருக்கிறது.

கல்யாணமாகிக் குடும்ப வாழ்க்கை தொடங்கி ஆறு ஆண்டுகள் நினைக்கவே முடியாத வேகத்தில் ஓடி மறைந்து விட்டன. நினைவில் பதித்து மீட்டு மகிழ்வதற்குகந்த எந்தவிதமான நிகழ்ச்சிகளும் வாழ்க்கையில் இடம் பெறவில்லை என்றாலும் திரும்ப நினைவில் எழும்போதே உணர்ச்சிப் புயலை எழுப்பி என்னை அழவைத்த இரவுகளும், அமைதியை இழக்க வைத்த நாட்களும் சில இருக்கத்தான் செய்தன.

ஒருநாள் நடந்து விட்ட நிகழ்ச்சி தான் என்றாலும், அந்த ஒரு நாளைய நிகழ்ச்சியின் நினைவுகள் திரும்பத் திரும்ப உயிர் பெற்று நாளாக ஆக முன்னிலும் வலுவோடு என்னை வாட்டி வதைத்தன.

மணமான பெண்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இது போன்ற அபாக்கியமான இரவுகளும் நாட்களும் இல்லாமலிருக்காது. என்னைப் போல வெளியில் சொல்லிக் கொள்ளத் தைரியமில்லாததால் அழுது கழித்த இரவுகளும், நாட்களும் அவர்கள் வாழ்க்கையில் இல்லை என்றாகிவிடுமா?

“இத்தனை லட்சணமா ஒண்ணு எனக்கு வந்து பொறக்கலேன்னுதான் குறைச்சலாயிருந்தது என்று என் தாயே எத்தனை தரம் முணுமுணுத்திருக்கிறாள். என்னைப் பெண் கேட்க யாரும் வராத காலத்தில் பதினெட்டு வயதுவரை யாரும் கேட்க வராத என்னைப் போன்ற கண்ணுக்கு லட்சணமான பெண் ஒருத்தி இருந்து விட்டால் போதும் தங்கள் பலவீனத்தை மறைத்துக் கொள்ள முடியாத ஆண்கள் பரிதாபத்திற்குரிய ஜீவன் என்று தங்களுக்குள்ளாகவே அவளைப் பற்றி ஒரு நினைப்பை எழுப்பிக் கொண்டு தங்கள் பரிதாப நிலையை வெளிக்காட்டிக் கொள்கிறார்கள். கையோடு அவளைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் வெளியில் பரப்பி, தங்கள் பலவீனம் வெளியில் பரவிவிடாது மறைத்துக் கொள்கிறார்கள்.

கைநீட்டி அடித்தார்; முகத்தில் காறி உமிழ்ந்தார். அத்தனை காலமும் என்னை அதட்டிக்கூட கூப்பிடாத என்னுடைய புருஷன் அன்று அப்படி நடந்து…

அப்படி என்னதான் நடந்து விட்டது?

கொஞ்ச நாட்களாக கொழுந்து றாத்தல் எனக்கு கூடுதலாக இருந்ததுவும், இரண்டு மாதங்களாக எனக்குச் சம்பளம் சற்றுக் கூட இருந்ததுவும், இதைக்குறித்து இட்டுக்கட்டிய கதைகளும் அவருக்குத் தெரிய வந்திருந்தன. அவ்வளவுதான்.

கொழுந்து குறைவாகப் பறிக்கிறேன் என்று கோபித்துக் கொண்டிருந்தால் அதில் நியாயமிருந்திருக்கும்; சம்பளம் குறைவாக இருக்கிறதென்று ஆத்திரப்பட்டிருந்தால் அதில் அர்த்தமிருந்திருக்கும். ஆனால், திறமையினால் என்று நினைத்து நான் மகிழ்ச்சி அடைந்தவைகளையே சிறுமையினால் என்று எண்ணி அவர் ஆத்திரப்படுகிறார்.

“எங்கள் சமுதாயத்தின் வாழ்க்கை அமைப்பில் இப்படி ஒன்றோடொன்று சிறுமையும் பெருமையையும் பின்னிப்பிணைத்து எந்த ஒன்றுக்கும் தீர்வு காண முனையும்போது, தனி மனித உணர்ச்சிளை மதிக்காமலே முடிவு செய்வது ஒன்றும் புதிதல்ல.”

“முப்பது வருடகாலமாக இந்த வாழ்க்கை முறையிலேயே ஊறிப்போன என் கணவர் அன்று அப்படி நடந்து கொண்டது தவிர்க்கமுடியாததுதான். ஆனால், அப்படி நடக்கும் என்பதை எதிர்பார்த்து முன்கூட்டியே விழிப்பாயிருந்திருக்க வேண்டியவள் நான்தான். பார்க்கப் போனால், அப்படி ஒரேயடியாகப் பழியை நானே ஏற்றுக் கொள்ளத்தேவை இல்லைதான்.

திருமணமாகி அவரோடு குடித்தனம் தொடங்க வந்த ஆரம்பத்திலேயே கொழுந்து கணக்கப்பிள்ளையைப் பற்றி சாடைமாடையாகக் கேள்விப்பட்டேன். என்றாலும், சமுதாயத்தில் இல்லாத ஒன்றாக எண்ணி அதை நான் பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை.

மனிதனுடைய பலவீனங்கள் சிலசமயங்களில் மிக வலிவோடு தலை விரித்தாடுகின்றன. வாய்ப்பும் சூழ்நிலயும் வகையாயிருந்து விட்டால் மனிதன் அதற்குட்பட்டு விடுகின்றான். மனித சமுதாயத்தில் புரையோடிக் போயிருக்கின்ற விபரீதங்களுக்குகெல்லாம் காரணமிதுதான்.

மலைநாட்டுச் சமுதாயத்திலும் அதிகாரத்தை கையேற்றிருப்பதால் வெறித்தாண்டவம் போட நினைப்பவர்களுக்கு சூழ்நிலை வகையாயமைந்து விடுகிறது.

நினைத்தாலும் மாற்ற முடியாத விதத்தில், மாற்ற முனைந்தால் நீண்ட எதிர்ப்பையும் நெடிய பகையையும் சமாளித்தாக வேண்டிய வகையில் வாழ்க்கையை ஏற்றுக் கொண்ட சமுதாயத்தில், மானத்தையும் கற்பையும் காத்துக் கொள்வதற்கென்று போராடியாக வேண்டும் என்ற நினைப்பே எழாதவாறு வாழ்க்கைப் போராட்டம் அவர்களை ஊமையாக்கிவிட்டது.

இளம்பருவத்து சிறுபிள்ளைத்தனமான கேளிக்கையில் சிரிக்கவும் பழகவும் தெரிந்துவிட்ட பெண்ணொருத்திக்கு, ஒருத்தனுக்கென்று தன்னை உரித்தாக்கிக் கொண்ட பிறகு உள்ளத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும், உரியவனைப் பற்றிய நினைப்பின் பலத்திலேயே, ஓடி முடித்த வாழ்க்கை எழுப்பிவிட்ட நினைப்பை அழித்து, ஏற்றுக்கொண்ட வாழ்க்கைக்குத் தன்னை தயார் செய்து கொள்ளவும் முடியாது போனால், முடிந்தும் அவள் முயலாது போனால் ஊராரின் குத்தலான பேச்சுக்கும், குறும்பு நிறைந்த பார்வைக்கும் ஆளாகித் தீர வேண்டியவளாகிறாள். தன்கரம் பிடித்தவனையும் அதன் விளைவில் பங்கேற்க வைத்து விடுகிறாள். தாங்கள் இருவருமாகத் தொடங்கி வைத்த குடும்ப வாழ்க்கையின் அமைதியைக் குலைத்து விடுகிறாள்.

ஆனால், நான் எத்தனை பவுத்திரமாகக் நடந்து கொண்டிருக்கிறேன். எவ்வளவு நிதானமாக காரியமாற்றி எங்கள் வாழ்க்கையில் அப்படி ஒரு சூழ்நிலை வந்துவிடாதிருக்கச் செய்திருக்கிறேன். ஆறு வருடங்கள், அவர் குணத்திற்கேற்ப நடந்து, அவர்கண் சிவக்காதவாறு நடந்து வந்திருக்கிறேன். அவர் பங்குக்கும் என்னைக் கண்கலங்க விடவில்லைதான்.

அண்டை அயலோடு பழகும்போது, அடுத்தவர்ளோடு பேசும்போது இயல்பான முரட்டுச் சுபாவத்தால் எப்படி யெல்லாமோ நடந்து கொள்ளும் அவர், வீட்டுக்கு வந்தால் கொஞ்சும் குழந்தையாகவும், கெஞ்சும் பிள்ளையாகவும் மாறிவிடுவார். அப்படி மாறிவிடுவதை விரும்பி வரவேற்று உண்மை தெரியவந்தால் எப்படி மாறி விடுவாரோ என்று பயந்து எத்தனையோவற்றை அவரிடமிருந்து மறைத்து, அப்படி மறைக்க நேர்ந்தமைக்காகப் பல இரவுகளைக் தனித்து அழுதே கழித்திக்கிறேன்.

உழைப்பின் அலுப்பில் அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கையில் எங்கே கேட்டுவிடப் போகிறாரோ என்று பயந்து இருதயத்துக்குள்ளாகவே நான் அழுது கொண்டிருக்கிறேன். துடைக்க முனைந்தால் எழும் அசைவில் எங்கே கண்விழித்து விடுவாரோ என்று பயந்து கண்ணில் வழியும் நீருடனேயே நான் கண்ணயர்ந்திருக்கிறேன்.

அங்கு வந்த ஆறேழு மாதங்கள் கழித்த ஒருநாளில் தராசு நாற்பது றாத்தலைக் காட்டிக் கொண்டிருக்கும் போதே, தட்டுக் கூடையை கையால் ஒரு தட்டுதட்டி அறுபது றாத்தல் என்று கூறி ஆச்சரியத்தோடு நிமிர்ந்த என்னை ஆசையோடு பார்த்ததையும் அடுத்த சில நாட்கள் புதிதாக வந்த அந்தக் கணக்கப்பிள்ளை என்னைத் தனித்துச் சந்திக்க முயற்சித்தபோது அவரைத் தடுத்து நிறுத்தும் வகையில் முகத்தில் உமிழ்ந்தாற்போல வார்த்தைகளை விட்டெறிந்ததையும் நானவரிடம் கூறியதே இல்லை.

அரும்பி வருகிற எண்ணங்களை அவ்வப்போதே செயல்படுத்தி பார்க்கத் துடிக்கிற பருவத்தில் நடந்து விடுபவைகளை பழக்கமாக ஏற்படுத்திக் கொள்வதிலும், படிப்பினையாக ஏற்றுக் கொள்வதிலும் தான் வாழ்க்கை திசை திரும்புகிறதா?

விபரம் தெரியாத விளையாட்டுப் பருவத்தில் நடந்த முறையிலேயே விளைவை எதிர்பார்க்கத் தெரிந்து, விவாகம் முடிந்த பின்னரும் நடந்து கொள்ள வேண்டு மென்று எதிர்பாக்கிற அறியாமையின் பாற்பட்ட அவரது செய்கையை எப்படி என் கணவரிடம் சொல்லி வைப்பது, அப்படிக் செய்வது எந்தவிதத்தில் நியாயமானது?

– பிறத்தியாரென்றால் நம்மிடையே இல்லாத ஒன்றா என்று கேட்டுச் சமாதானம் செய்து கொள்ளும் மனம், அப்படிச் சமாதானம் செய்தே சமுதாயத்தை நாறவைப்பதற்கு இடமளித்த மனம், தன்னுடையதென்றாகி விட்டபோது அதெப்படி நியாயமாகும் என்று கிளர்ந்தெழுகின்ற ஆவேசத்தோடு, தான் உடந்தையாயிருந்ததால் சமுதாயத்தில் ஊறிப் போன பழக்கத்தின் சிறுமையை அசூசையோடு நோக்குகிறது.

சிறுபிராயத்தில் நடந்து போனதை மனதில் வைத்துக் கொண்டோ – மனைவி இறந்து போன நேரத்தில் ஆதரவோடு நெடுநேரம் துயர் விசாரித்ததை நினைவில் வைத்துக் கொண்டோ, இந்த இரண்டினாலுமோ மனதில் நிறைந்து வரும் ஆசைகளுக்கும், ஏக்கங்களுக்கும் உருவம் கொடுத்து அதனை என்னுருவத்தோடு அவர் ஒட்டி வைக்க முனைந்த போது

“நீங்க செய்வது உங்களுக்கே நல்லா இருக்குதுங்களா ஐயா, தோட்டம் முழுக்க உங்களைப் பற்றி மோசமான கதைகள் அடிபடுது. உங்க சம்சாரம் இருந்தபோதே அப்படின்னா, இனி கேட்கவா வேணும். யோசிச்சு நிதானமா நடக்க வேணாமா?” என்று நான் கேட்டேன்.

அடர்ந்து வருகிற கருமை, இருவரும் தனித்து நிற்கிற சூழ்நிலை பாதுகாப்பான அவர் பங்களா, அவருக்குப் போதையூட்டியிருக்க வேண்டும். அந்த போதையிலும் அவர் நிதானம் தவறவில்லை. தனது விருப்பத்தை வெளியிட்டார் எனது சம்மதத்தை எதிர்பார்த்து.

“ரஞ்சிதம் உனக்கு முடியாதுன்னா வேண்டாம். நான் உன்னைக் கஷ்டப்படுத்தல” அவர் சொற்களை வெளியில் விட்டும் விடாமலும் கேட்டார். சிறுபிள்ளைகள் தயக்கத்தில் வார்த்தைகளை மென்று விழுங்குவதைப் போல.

பெண்ணொருத்தி இருளில் தனித்து ஓர் ஆடவனிடம் அகப்பட்டுக் கொண்ட நேரத்திலும் அவளது சம்மதத்தை அவன் எதிர்பார்த்து காத்திருப்பது அந்தப் பெண்ணின் வியாபித்துப் போன பலவீனத்தைப் புரிந்து கொண்டதாலா?

நான் எவ்வளவு அற்பமானவள்? நான் அங்கு வந்து ஐந்தரை ஆண்டுகளுக்கு மேலாக என்னிடம் நின்று பேசவும் முனையாத கணக்குப்பிள்ளையையும், அவரிடத்துக்கு வந்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே மனைவியைப் பறிகொடுத்து விட்டு மாற்றான் மனைவி அதுவும், தனக்குக் கீழ் வேலை செய்கிற ஒருத்தனின் மனைவி என்று தெரிந்தும் – முன்னைய அறிமுகத்தால் முகிழ்ந்து வருகிற ஆசையை வளர்த்து வருகிற இந்தப் புது கணக்கப்பிள்ளையையும் நினைத்துப் பார்த்து என் நிலைக்கு நானே இரக்கப்படுகிறேன்.

இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியான நிலமையை வளர்த்து வருவது? பலவீனமே பலமான ஓர் எதிர் விளைவை ஏற்படுத்தியிருக்கிறதென்பதை அவரிடம் நான் வெளிப்படுத்த வேண்டாமா?

அவர் பேசத் தொடங்குகிறார். பழைய நிகழ்ச்சியைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, நெடுநாளைய நிகழ்ச்சிகளையும் நினைவில் வைத்துக் கொண்டு பேசுகிற சிறு குழந்தையைப் போல.

“ரஞ்சிதம் நீ உன் அம்மாவோட இருந்த காலத்தில் நான் வேலை பழகும் போது நடந்ததை மறந்துடலியே’ அவர் கேட்டே விட்டார்.

அள்ளித்தெளித்த அனல் பட்டாற்போல என் உணர்ச்சிகள் சிலும்பி விழிக்கின்றன. ஒருமுறை நான் வாழ்க்கையில் தவறு செய்திருக்கிறேன். அவரூட்டிய போதையில் இளம்புருவத்து ஆசைக்கனவுகளை நிறைவேற்றி பார்க்கிற சிறுபிள்ளைத் தனமாக ஆசைக்கு இரையாகிவிட்டேன். அவரிடம் இல்லாவிட்டாலும் யாரோ ஒருவரிடம் அந்த ஆசையை நான் பூர்த்தியாக்கி கொண்டு தான் இருந்திருப்பேன்.

அந்த ஒருவர் அவராக இருந்து, அவரும் தோட்டத்தில் உத்தியோகம் பார்ப்பவராய் இருந்து, அதனால் அடங்கிவிட்ட அந்த ஒரு நாளைய நிகழ்ச்சிக்காக நான் எத்தனை நாள் அழுது புலம்பியிருக்கிறேன்? அந்த ஒரு நிகழ்ச்சியே என்னில் எப்படி ஒரு புது வைராக்கியத்தைப் பிறகு தோற்றுவித்திருக்கிறது. ஆனால் அவரோ படிப்பினையாக நான் ஏற்றுக் கொண்டதையே பழக்கமாக ஏற்றுக்கொண்டு தடுமாறுகிறாரா?

“ஐயா, புருஷனுக்குத் துரோகம் செய்யிறவளில்லை நான், நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்’ ‘நான் அமைதியாக, ஆனால் வெகு உறுதியாகப் பேசுகிறேன்.

என்னிடமிருந்து இப்படி ஒரு பதிலை, அதுவும் செய்ய நினைக்கிற பாவச் செயலைக் குத்திக் காட்டுகிற ஒன்றை எதிர்பார்க்காத அவர் ஒரு கணம் வெலவெலத்துப் போனார். சில நிமிட மௌனத்தின் பின்னர் அவரே பேசுகிறார்.

“இந்த நேரத்தில் நீ இங்கிருந்து போவதை யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்? எப்படிச் சொல்லுவார்கள்? தெரியுந்தானே ரஞ்சிதம்” அவர் சொன்னார். அவர் சொன்னது நடந்தது.

தங்களோடு ஒட்டிவிட்டாளென்று நினைத்துக் கொண்ட சிலர் என்னோடு நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். நான் இறங்கி வந்துவிட்டதாக நினைத்துக் கொண்ட அந்தப் பெண்கள் தங்களிறக்கத்தை நியாயமாக்கிக் கொண்டு பேசவும் செய்தனர். அவர்கள் முகத்திலடித்தாற் போல பேசினேன்.

பொண்ணுன்னா அதற்கேற்ற நடத்தையிருக்கணும். புருஷனுக்குத் துரோகம் செய்யாத மனசிருக்கணும். நீங்களும் இருக்கிறீங்களே, தானும் கெட்டுத் தன்னோடு இருக்கிறவர்களையும் கெடுக்க.”

“பெரிய யோக்கியக்காரி பேசுறா கேளுங்கடி” எதிர்பார்த்து ஏமாந்த எரிச்சலில் அவர்கள் அத்தனை பேரும் சீறினர்.

படமெடுத்த பாம்பின் சீறல் வெறுமனே அடங்கி விடக்கூடியதா? சினம் தணிவதற்கு அதற்கு கொத்தித் தீரவேண்டும். மனிதர், மரம், மண் என்று ஒன்று இல்லாமல் போய்விடும்.

“ரஞ்சிதம் நீ என்ன பொம்பளதானா?” எந்தக் கேள்வியை மற்றப் பெண்களைப்பார்த்து நான கேட்டேனோ அதே கேள்வியை அதே அர்த்தத்தில் அவர் என்னிடம் கேட்கிறார்.

ஆறு வருடங்களாக அப்படி ஒரு நிகழ்ச்சி எங்கள் வாழ்க்கையில் இடம் பெறவில்லை. எனவே, அதை எப்படிச் சமாளிப்பதென்றறியாது விழித்தேன்! அவர் மட்டுமாமென்ன? அடுப்படியில் கட்டுக்கட்டாக பீடியை ஊதிக் தள்ளிக் கொண்டே உட்கார்ந்திருந்தார்.

கதவருகில் லாம்பு வெளிச்சம் பட்டுவிடாத இருளில் அழுது கொண்டு நிற்கிறேன் நான். எத்தனை நேரம் இப்படி இருப்பது? இரவு முழுவதையும் இப்படியே கழித்து விடமுடியுமா?

தனிமையில் பல இரவுகளை நான் அழுது கழித்திருக்கிறேன். அப்படிக் கழித்த இரவுகளில் மனப் பாரம் தனிந்திருப்பதாக நான் கூறமாட்டேன். நடந்து போன செயலைக் குறித்து ஒருத்தருடைய பிரலாபம் என்பதால் அது இயல்பானதாயிருக்கலாம்.

ஆனால், இரவின் நிசப்தத்தால் இரண்டு உள்ளங்கள் அமைதி இழந்து தவித்தும் மனச்சுமை இறங்கவில்லையென்றால் பின் அந்த இரவின் அமைதிக் குலைவிற்கு என்ன அர்த்தமிருக்க முடியும்?

ஏதோ ஒருணர்ச்சி என்னை உந்தித்தள்ள விரைந்து சென்று கோப்பையை எடுத்துச் சோற்றைப் போட்டு அவரிடம் நீட்டுகிறேன். ஆனால் வாய் திறந்து எதுவும் பேசவில்லை. அவரும் வாயைத் திறக்கவில்லை. சாப்பிட்டு முடித்த கையோடு பாயை விரித்துப் படுத்துக்கொண்டு என்னையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு என்ன செய்வதென அறியாது விழிக்கத் தொடங்குகிறேன். தூரத்தே, தேயிலைத் தொழிற்சாலையில் காவற்காரன் பன்னிரண்டு முறை மணியை அடித்து வைக்கிறான்.

“என்ன இன்னும் எத்தனை நேரம் அப்படியே நிற்கப் போற வந்துபடு. மணி பன்னிரண்டாச்சு தெரியலை”

அவர் அழைப்பில் இழைந்தோடுவது ஆத்திரமா? ஆதங்கமா? என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை.

பாலாம்பு வெளிச்சத்தை குறைத்து வைத்துவிட்டு நானும் பாயில் சாய்கிறேன். ஒட்டிக் கொண்டு படுத்திருக்கும் அந்த நேரத்திலும் எங்கே உள்ளமும் உறவும் எட்டாததாகி விடுமோ என்ற அச்சம் இருவரையுமே ஆட்டி வைக்கிறது?

“இத்தனை நாளும் இல்லாம இன்னைக்கு மட்டும் ஏன் நீங்க இப்படி நடந்துகிட்டீங்க நானே ஆரம்பிக்கிறேன்.

“நானும் அதையே தான் உன்னிடம் கேட்கிறேன் ரஞ்சிதம்” அவர் பதிலுக்கு கேட்கிறார்.

“நீங்க என்மேல் சந்தேகப்படுறீங்களா….” நான் தயங்குகிறேன்.

“சேச்சே… ஆனா, ஊரும் உலகமும் அப்படி ஒரு சந்தேகத்தை என் மனசில் வளர்க்க ஏன் நீ இடம் கொடுக்கிற” சிறுகுழந்தையைப் போல கேட்கிறார்.

எத்தனை நியாயமான கேள்வி? தன்னுடையவள் என்றாகிவிட்ட ஒருத்தியிடமிருந்து அவளது கணவனுக்கு வேறென்ன வேண்டிக்கிடக்கிறது?

எத்தனை நாள் தனித்து அமைதியிழந்து நான் தவித்திருக்கிறேன் என்று எனக்கே தெரியாது. ஆனால், அத்தனை நாளும் காணாத அமைதியை அந்த

ஒரிரவில் கண்டு விடுமாப்போல அழுகிறேன் நான்.

அத்தனை நாளும் என் மனத்திற்குள்ளாகவே மூடி மறைந்து கிடந்த உண்மைகளைத் தெரிந்து கொண்ட அவரும் அழுகிறார். இருவரும் சேர்ந்தே அழுகிறோம்.

மறந்துவிட நினைக்கிற, மறைத்து வைத்த உண்மைகள் மனதில் தங்கிக்கொண்டு அகலமாட்டேன் என்கிறபோது மனதுக்கு விருப்பமான ஒருவரிடம் அந்த உண்மைகளை வெளிப்படுத்திக் கொள்வதில் ஏற்படுகிற அமைதி ஆச்சரியமானது.

இரவின் நிசப்தத்தில் ஏங்கித் தவிக்கிற இரண்டு உள்ளங்கள் இணைந்து அழுவதால் ஏற்படுகிற அமைதிக்கு இணையாக உலகில் வேறென்ன இருக்க முடியும்?

அந்த இரவை அழுதே கழித்தோம். அப்படி ஓர் இரவு எங்கள் வாழ்க்கையில் இனி வரவே வராது. அந்த நினைவில் அந்த இரவு கழிந்தது. அழுது கொண்டே கழிந்தது.

– சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *