அறுவை சிகிச்சை

0
கதையாசிரியர்: ,
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 13,784 
 
 

மியா உடைகளைக் களைத்தாள். இரு கைகளாலும் மெத்தையைப் பற்றியவாறே இளனை நோக்கி மந்த காசமாகப் புன்னகைத்தாள். அறையின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஜம்பு பழத்தின் வடிவத்திலும் பலா பழத்தின் உருவத்திலும் திணறி தொங்கியிருந்தன மார்புகள். ஏற்கனவே போதையில் தேங்கியிருந்த கண்களில் காமமும் வழியத் தொடங்கியிருந்தது. மார்புகளை இருகைகளாலும் பற்றியவாறே உதடுகளில் அழுத்தமாய் முத்தம் பதிக்கத் தொடங்கினான்.

கனவிலிருந்து விழித்தவன்போல் எழுந்தான் இளன்.கைத்தொலைபேசியில் அலாரம் அடித்துக் கொண்டே இருந்தது. கண்ணை மூடிக் கொண்டே மெத்தை முழுவதும் கைகளால் துழாவினான். உடலை இடதுபுறமாய் திருப்பி கட்டிலின் அடியில் துழாவினான். கைத்தொலைபேசியின் அலார ஒலியை அடக்கினான். கண்களை மெதுவாக திறந்து கைத்தொலைபேசியைப் பார்த்தான் காலை மணி 8.

அம்மாவிற்கு இன்று 11 மணிக்கு வயிற்று அறுவை சிகிச்சை. விஜயாவைத் தொலைபேசியில் அழைத்தான். அம்மா இன்னும் மயக்கத்திலேயே இருப்பதாகச் சொன்னாள். நேற்றிலிருந்தே உணவு உட்கொள்வதை நிறத்த சொல்லியிருந்தார்கள். அறுவை சிகிச்சைக்குத் தேவையான சிகிச்சைகளைத் தொடங்கியிருந்தார்கள். அப்போதுதான் அம்மாவை சந்தித்து விட்டு பினாங்கு மருத்துவமனையிலிருந்து அப்பாவோடு சுங்கைப்பட்டாணி வந்து சேர்ந்திருந்தான். விஜயாவிடமிருந்து அழைப்பு. 10 நிமிடத்திற்கு முன் போட்ட கடைசி ஊசியிலிருந்து அம்மா சற்று நினைவு தப்பியவள் போல உளறுகிறாளாம். என்னோடு பேச வேண்டுமாம். “தலை ரொம்ப சுத்துதப்பா. பயமா இருக்கு, அப்பாவை பாத்துக்கோ” இன்னும் புரியாமல் ஏதேதோ உளறினாள். கைதொலைபேசி கீழே விழும் சத்தம் கேட்டது. அம்மா மயங்கி விட்டதாக விஜயா சொன்னாள். “விஜ’, பசியாறிட்டியா?” “ம்” என்றாள் சன்னமாக.

வினோத் காலையில்தான் கோலாலம்பூரிலிருந்து வந்திருந்தான். நேற்றே வந்திருக்க வேண்டியவன். அவன் பயிலும் இயற்பியல் துறை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கட்டுரை வாசிக்க வேண்டிய நிர்பந்தம். கட்டுரை ஏற்கப்பட்டால் முது கலை பட்டப்படிப்பின் உதவி தொகை நிச்சயம். வினோத் உடனே வருவதாகத்தான் சொன்னான். நல்ல வேளையாக விஜயாவும் பல்கலைக்கழகத்தில் முதல் வருடம் முடிந்து 3 மாத விடுமுறையில் இருந்ததால் சுலபமாகப் போய் விட்டது. “நீ படிப்பைக் கவனி” என்று சொல்லி விட்டான் இளன். மாடியிலிருந்து கீழிறங்கி வந்த போது வினோத் பசியாறிக் கொண்டிருந்தான். தான் முதலில் மருத்துவமனை செல்வதாகவும் மாமாவிடம் கார் இரவல் வாங்கியிருப்பதையும் சொன்னான். அப்பா தயாராகி உட்கார்ந்திருந்தார்.

விஜயாவுக்கு ரொம்ப பசித்தது. அண்ணன் கேட்டபோது ‘ம்’ என்றாலும் நேற்றிலிருந்து தண்ணீரைத் தவிர வேறெதையும் அருந்தவில்லை. மணி 10 ஆகியிருந்தது. அம்மாவுக்கு 11 மணிக்குதான் அறுவை சிகிச்சை. ஆனால் 9 மணிக்கெல்லாம் அதற்கான ஆயத்தங்களை தாதிகள் தொடங்கியிருந்தனர்.

அம்மா இன்னும் மயக்கமாகத்தான் இருந்தார். அம்மா நேற்று மயங்கும்வரை அவருக்கு வயிற்று புற்றுநோய் என்று நாங்கள் யாரும் சொல்லவில்லை. நோயாளிக்குத் தன் நோயைப்பற்றி தெரிந்து கொள்ளும் அவசியத்தையும் உரிமையும் டாக்டர் பிரபு எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும் அண்ணன் ஏற்று கொள்ளவில்லை. விஜயாவிற்கு இது ஆச்சரியமாகத்தான் இருந்தது. இளன் பொதுவாகவே அமைதியானவன். சில நேரங்களில் உற்று கேட்டால் தவிர என்ன சொல்ல வருகிறான் என்பதை புரிந்து கொள்ள இயலாது. இப்போதே சொன்னால் அம்மா பயந்தும் குழம்பியும் போவாள் என்றான். டாக்டர் பிரபு விஜயாவைப் பார்த்து பெருமூச்செறிந்தார்.இளனின் தோளைத்தட்டிக் கொடுத்துச் சென்றார். இளன் சொல்வதுபோல் அம்மா ஒன்றும் பலவீனமானவரல்ல. வறுமையான குடும்பத்தில் 9 உடன்பிறப்புகளுக்கு மூத்த சகோதரி அம்மா. போதுமான உணவிண்மையால் சிறுவயதிலிருந்தே தொற்றிக் கொண்ட வயிற்றுப் புண்ணோடு 20 வருடங்கள் ரப்பர் மரம் சீவியும், 10 வருடங்களாகப் பலகை தொழிற்சாலையில் பலகை அடுக்கியவர் நிச்சயமாக பலவீனராக இருக்க இயலாது. அதுவுமில்லாமல் அம்மாவுக்கு இதுவொன்றும் முதல் அறுவை சிகிச்சையல்ல. இளனே சிசேரியன் அறுவையில் பிறந்தவன்தான்.

அறுவை சிகிச்சை அறையின் வெளியேயிருந்த நீண்ட வராண்டாவில் தனித்திருந்த விஜயாவை அப்பாவும் வினோத்தும் வந்தடைந்தனர்.

********

மணி காலை 11. அம்மாவை அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்று விட்டதாக வினோத் தொலைபேசியில் சொல்லியிருந்தான். செருப்பு அறுந்திருந்திருந்ததை அணியும்போதுதான் கவனித்தான் இளன். தலையை ஆட்டிக் கொண்டான். கார் சுங்கை டுவாவைத் தாண்டி கொண்டிருந்தது. அறுவை சிகிச்சைக் குறைந்த பட்சம் நான்கிலிருந்து ஆறுமணி நேரமாவது எடுக்கும் என்று நேற்று டாக்டர் பிரபு சொல்லியிருந்தார். உணவு குழாயில் ஒரு சிறு பகுதியோடு வயிறு முழுவதையும் சிறு குடலில் சிறு பகுதியை அகற்றுகிற அறுவை சிகிச்சை. கொஞ்ச நேரத்திற்கு முன்பகுதி காட்சிகள் மங்கலாகி மீண்டது. இன்னும் நேரம் இருக்கிறது. காரை நெடுஞ்சாலையிலிருந்து வெளியேற்றி செபராங் ஜாயா டெஸ்கோவில் நுழைத்தான்.

செருப்புகளுடனான இளனின் பிரச்சனை சரியாக சொல்ல வேண்டுமானால் 18 வயதில் தொடங்கியது. ஒல்லியாக இருந்தவன் திடீரென 6 அடிக்குமேல் வளர்ந்த பிறகு மோசமடைந்தது. இளனுக்கு சிரிப்பு வந்தது. தோட்டபுறத்தில் இருக்கும் வரை அவனுக்கென்று தனி செருப்பு இருந்ததில்லை. தோட்டத்தின் வியாபித்திருந்த அவ்வளவு செம்மண்ணையும் அவன் கால்கள் ஸ்பரிசத்திருக்கின்றன. இன்றும் கால்களில் மிஞ்சியிருக்கும் வெடிப்புகளில் செம்மண் ஒட்டிக் கொண்டிருக்கும் உணர்வு இருக்கிறது. அவன் கால்கள் என்னவோ 12 அளவுதான். ஆனால் காலின் நடுபகுதி மட்டும் குண்டாகப் பெருத்திருக்கும். மலேசியாவில் தயாரிக்கிப்பட்ட செருப்புகள் எதுவுமே அவனுக்கு பொருந்துவதில்லை. வெளிநாட்டு செருப்புகளில் LEE, B.U.M போன்ற விதங்களில் சில செருப்புகள் அளவு பொருந்தின. திருப்பி விலையைப் பார்த்த போதுதான் வாயடைத்துப் போய் விட்டான். குறைந்த பட்சம் நூறு வெள்ளி. இளனுக்கு இது சொற்ப பணம்தான். அம்மா அவனுக்கு வாங்கி கொடுத்த முதல் செருப்பின் விலையே 3.50. அம்மா பக்கத்தில் இருந்தால் விலையைப் பார்த்து அவருக்கு மயக்கம் வந்திருக்கும். இப்போது மட்டும் என்னவாம். Lee Coperஇல் இருந்து ஒரு ஜோடி வாங்கி கொண்டான்.

விஜயா களைந்திருந்தாள். மணி பிற்பகல் ஒன்று. விஜயாவையும் அப்பாவையும் மதிய உணவுக்கு அழைத்தான் வினோத். அப்பா சோயா பானம் மட்டும் வாங்கி வர சொன்னார். சாப்பிட்டுத் திரும்பிய போது அப்பா ஒல்லியான மத்திய வயதில் இருந்தவரோடு உரையாடிக் கொண்டிருந்ததைக் கண்டான். “இவர்கள்தான் பிள்ளைகளா?” என அப்பாவைக் கேட்டுக் கொண்டே எழுந்தவர் “கொஞ்சம் இருங்கள்” என்று பிரிந்து சென்றார். யார் என்று கேட்டதற்கு “தெரியல. அம்மாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்” என்றார் அப்பா.

கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தவர் விபூதி மடித்த பொட்டலத்தை வினோத்திடம் தந்தார். “பாபா பிரசாதம், அம்மாவின் தலகாணி கீழே வைங்க. 3 மாதத்திற்கு முன்பு என் மனைவியும் பிழைக்க மாட்டாங்க என்று இதே டாக்டர்கள்தான் சொன்னாங்க. பிழைச்சிட்டாங்க. டாக்டர்களும் மனுஷங்கதான், பாபா பாத்துக்குவார்” சொல்லிவிட்டு பதில் எதிர்பாராமல் திரும்பி நடந்தார். அப்பாவுக்கு தொண்டை அடைத்துக் கொண்டது. “பேர் கூட கேட்கல” என்றார் மெதுவாக. வினோத் விபூதி பொட்டலத்துடன் நிற்பதைப் பார்த்ததும் விஜயாவுக்கு அந்தச் சூழலிலும் சிரிப்பு வர பார்த்தது.

வினோத்துக்கு பொதுவாக கடவுள் என சொல்லப்படும் விஷயத்தில் நம்பிக்கை இருந்ததில்லை. இன்னும் சரியாகச் செல்வதானால் சடங்குகள் அவனை சோர்வு கொள்ள செய்தன. மகா புருஷரான கடவுளை ஒழுங்காக உட்கார்ந்து படித்தால் தேர்வாக முடிகிற பரீட்சைக்கெல்லாம் தொந்தரவு செய்வது வெட்கமாக இருந்தது. சரியான திட்டமிடல்களோடும் ஒன்றிய சிந்தனையோடும் தொடங்கப்படுகிற முயற்சிகள் பொதுவாகவே வெற்றியடைகின்றன. தோல்விகள் முயற்சியிலுள்ள பலவீனங்களைக் குறிப்பதாக எடுத்துக் கொள்வான். காலையிலேயே மணியடித்து சாமி கும்பிடும் அப்பாவுக்கு இதுவெல்லாம் கஷ்டமாகத்தான் இருந்தன. அம்மாவிடம் ஆதங்கப்பட்டு நிறைய முறை பேசியிருக்கிறார். இருப்பினும் இவ்விஷயத்தில் வினோத்தால் அப்பாவை திருப்தி படுத்த இயலாது. கொஞ்சம் நேரம் விபூதி பொட்டலத்தையே பார்த்திருந்துவிட்டு சட்டைப் பையினுள் சொருகினான்.

விஜயாவிற்கு குட்டியின் ஞாபகம் வந்தது. குட்டியைப் பார்த்தே மூன்று நாட்களாகி விட்டது. சாப்பிட்டானோ இல்லையோ. பக்கத்து வீட்டு கியூ பெங்கை தொடர்பு கொண்டாள். காலையில் வெளியேறும்போதே இளன் குட்டிக்கு உணவிட்டதைப் பார்த்ததாகச் சொன்னாள் கியூ பெங். “கவலை படாதே விஜயா. நான் குட்டியைப் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள் கியூ பெங். உணவு தட்டிற்குப் பக்கத்தில் சுருண்டு படுத்திருக்கும் குட்டியின் பிம்பம் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது.

வாடி வதங்கிய காய்கறி போல் இருந்தார் அம்மா. மூக்கின் இருதுவாரங்களிலும் குழாய்கள் வழிந்தோட பச்சை போர்வை மார்புவரை போர்த்தப்பட்டு மயங்கிய நிலையில் இருந்ததால் அம்மாவின் உடல் குளிரில் சில்லிட்டிருந்தது. விஜயாவிற்கு விக்கிக் கொண்டு வந்தது. போர்வையைக் கழுத்துவரை இழுத்து போர்த்தினாள் விஜயா. டாக்டர் பிரபு இளனை தோள் மீது கை வைத்து அழைத்துச் சென்றார்.

“எப்படியும் மூன்று நாட்களாவது ஐ.சி.யுவில் (I.C.U) வைத்திருப்பார்களாம், விஜ’, வினோத் நீங்க முதல்ல வீட்டுக்கு போங்க” இளன் சொன்னான். அவர்களோடு தளர்ந்த நடையோடு சென்று கொண்டிருந்த அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தான். வாழ்வின் கரடுமுரடான பாதையை பெரும்பாலும் எளிதாகவே கடந்து வந்த அவர்களின் உழைப்பு எனும் அசுர வாகனம், அதல பாதாளத்தின் நுனி விளிம்பில் இருசக்கரங்கள் பழுதடைந்து நிற்கிறது. நாளைக்கு எப்படியும் அப்பாவிடம் உண்மையைச் சொல்ல வேண்டும்.

பினாங்கு பாலத்திலிருந்து வெளியேறும்போது மழை வேகமாக கொட்டத் தொடங்கியிருந்தது. இளனுக்கு தொண்டை அடைத்துக் கொண்டது. அவனையறியாமல் கன்னங்களில் நீர் வழிந்தோட தொடங்கியிருந்தது. அவனுக்கு யாரிடமாவது பேச வேண்டும் போல் இருந்தது. காரை செபராங் ஜெயாவில் திருப்பினான். எண்ணெய் முடிந்த சிக்னல் அடிக்க தொடங்கியிருந்தது அருகில் தெரிந்த ‘Caltex’ நிலையத்தில் காரை நிறுத்தினான். காரிலிருந்து இறங்குவதற்கு முன் முகத்தை நன்றாக துடைத்துக் கொண்டான்.

எண்ணெய் நிலையத்தின் பக்கத்திலேயே கேளிக்கை விடுதிகளை கண்டான் இளன். இருள் மரத்தின் பழங்களாய் ஒளிர்ந்துக் கொண்டிருந்தன வண்ணமயமான விளக்குகள். இளன் மது அருந்துவதில்லை. பல்கலைக்கழகத்தில் படித்தபோது நண்பர்களுடன் கேளிக்கை விடுதிகளுக்குச் சென்றதுண்டு. இரண்டு மூன்று முறை மதுவை குடித்து பார்த்து முடியாமல் விட்டு விட்டான். மதுவை அவன் ஒழுக்கம் சார்ந்த பிரச்சனையோடு சேர்த்து குழம்பிக் கொள்வதில்லை. பொதுவாகக் கசப்பான எந்த உணவையும் அவன் முடிந்த வரை தவிர்த்து விடுவான்.

மணி இரவு 8.30 தான் ஆகியிருந்ததால் விடுதியில் அவ்வளவு கூட்டமில்லை. 80 சதவிதம் இருளில் மூழ்கியிருந்த விடுதி ஒளிர்ந்து மடியும் விளக்குகளில் தவழ்ந்து கொண்டிருந்தது. மெல்லிய R&B இசைப்பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இளனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விடுதியில் மூலைப் பகுதியைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டான்.

என்ன அருந்துகிறீர்கள் என்ற கேள்வியோடு பக்கத்தில் வந்தமர்ந்தாள் ஒரு மலாய்பெண். ‘மியா’ கைநீட்டி அறிமுகப்படுத்திக் கொண்டாள். தன் பெயர் சொல்லி கைகுலுக்கினான். அவள் கை மென்மை குறைந்த உறுதியான கை. இறுக்கமான வெள்ளை ஆடையில் தளர்ந்த மார்புகள் தூக்கி நிறுத்தப்பட்டிருந்தன. மார்புக்குச் சமமான வயிறு. இருள் வெளிச்சத்தில் அழகாகத்தான் தெரிந்தாள். அவன் நண்பர்கள் பெரும்பாலும் அருந்தும் பியரின் பெயரைச் சொன்னான்.

பக்கத்தில் சோஃபாவில் ஒரு பெண்ணோடு அமர்ந்திருந்த சீனனையே அவ்வப்போது கவனித்தான். அவள் ‘பப்’பில் வேலை செய்யும் பெண்ணாக இருக்க வேண்டும். மிதமான போதையில் சிகரெட் பிடித்தபடியே அவ்வப்போது அவளுடைய கழுத்து பகுதியில் முத்தமிட்ட படியே இருந்தான் அச்சீனன். அவளை இழுத்தணைத்து கொஞ்ச நேரம் ஆடினான். கொஞ்ச நேரத்தில் களைத்து சோஃபாவில் அமர்ந்தான். பியர் நிறைந்திருந்த கிளாஸ’ல் ஒரே மிடக்கில் குடித்துவிட்டு வாயை துடைத்துக் கொண்டான். பணப்பையிலிருந்து பணத்தை எடுத்தவன் அவள் மார்பினிடையே திணித்தான்.

“இது ‘R&B’ ‘பப்’பா”? கேட்டான் இளன். ஆமென்று தலையசைத்தாள். ஐஸ்கட்டியினால் நிரப்பப்பட்ட பக்கெட்டில் புதைந்திருந்தன பியர் பாட்டில்கள். குளிர்ந்த பியர் அவ்வளவாகக் கசக்காதது இவனது மனபிரமையாக இருக்கலாம். மியாவும் ஒரு கிளாஸ’ல் பியர் ஊற்றி சாவதானமாகப் பருகலானாள். மியா மிகவும் நேர்த்தியாக உரையாடினாள். திடீரென்று “பூனைகளைப் பற்றி பேசலாமா?” என்றாள். தனக்குப் பூனைகளைப் பற்றி பெரிதாக தெரியாதென்றாலும் நீங்கள் சொல்வதை கேட்டு கொள்கிறேன் என்று கைகளை கட்டி மரியாதையாக சொன்னான். மியா உற்சாகமாக சிரித்து இளனை அணைத்துக் கொண்டாள்.

மூன்று பக்கெட்டுகள் முடிந்தபோது இளன் நிலை தடுமாறியே இருந்தான். மணி இரவு 10.30 ஆகியிருந்தது. விடுதியில் கூட்டம் சற்று கூடியிருந்தது. இளன் தன் பணப்பையிலிருந்து டிப்ஸாக 20 வெள்ளியை எடுத்து மியாவின் கையில் அழுத்தினான். கொஞ்சம் நேரம் அவளையே பார்த்திருந்தவன் அவளை மீண்டும் அணைத்து முத்தமிட்டான். “இன்னும் ஒரு போத்தல், என் செலவு, ப்ளீஸ்?” “ஏன் மியா?” கிளாஸை நிரப்பிக் கொண்டிருக்கும்போது கேட்டான் இளன். “உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” சற்று நேரத்திற்கு முன் பேசிக் கொண்டிருந்ததை விட குரல் இன்னும் தெளிவாக இருந்தது.

மணி இரவு 11.30. காரை வீட்டிற்கு ஓட்டிச் செல்லும் நிலையில் இளன் இல்லை. “இக்கட்டிடத்தில் இரண்டாம் மாடியில்தான் என் அறை இருக்கிறது. உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால் இன்றிரவு தங்கிக் கொள்ளலாம்”. இளன் எதையும் மறுக்கிற நிலையில் இல்லை.

மியாவை அணைத்தபடியே இரண்டாவது மாடிக்குப் படியேறி கொஞ்சம் தள்ளாடியவாறே சென்றான் இளன். இருவர் படுக்கும் கட்டில். இருவர் அமரும் சோஃபா. அலங்கார மேசை மற்றும் குளியலறை அடங்கிய அறை. சோஃபாவில் அமர்ந்ததுமே மியாவை வலுவாக அணைத்து உதடுகளில் முத்தமிட தொடங்கினான் இளன். நெடுநேர முத்தத்திற்கு பிறகு இளனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மெலிதாக சிரித்தபடியே கட்டிலின் மீதமர்ந்தாள் மியா.

மியா உடைகளை களைந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *