(இதற்கு முந்தைய ‘கதைப் புத்தகங்கள்’ கதையைப் படித்த பிறகு, இதைப் படித்தால் புரிதல் எளிது)
“ப்ளஸ் டூ எழுதி என்ன செய்யப் போறே?” சபரிநாதன் அசுவாரசியமாக காது குடைந்துகொண்டே கேட்டார்.
“ஒவ்வொரு பரிட்சையா எழுதுவேன்.”
“ஒவ்வொரு பரிட்சையான்னா?”
“மொதல்ல பி.ஏ., பொறவு எம்.ஏ.”
சபரிநாதன் காது குடைவதை நிறுத்தினார். பாளையங்கோட்டையில் புனித சவேரியார் பள்ளியில் அந்தக் காலத்தில் அவர் படித்தது பத்தாவது வரைக்கும்தான். அவரைப் பொறுத்த வரையில் அவருடைய பெண்டாட்டி அவரைக் காட்டிலும் பணக்காரியாக இருக்கலாம். ஆனால் அவரைவிட படிப்பாளியாக இருந்துவிடக் கூடாது. நாளைக்கு அவள் புருஷனை மதிக்க மாட்டாள். இப்போதும் மதிப்பதில்லை என்பது வேறு விஷயம்!
சபரிநாதன் அவளின் படிப்பு விஷயத்திற்கு ஆணி அடிக்கும் விதமாக, “ராஜி தாயி… நீ ஒரு படிக்காத மேதை! ஒனக்கு எதுக்கு இந்தப் படிப்பும் பரிட்சையும்? தூக்கி அதையெல்லாம் ஒடப்புல போடு! சட்டுப்புட்டுன்னு எனக்கு ஒரு சிங்கக்குட்டியை பெத்துக் குடுக்கிற வழியைப் பாரு! சரியா கல்யாணமான பத்தாவது மாசம் மரகதத்துக்கு புவனா பொறந்தாச்சி!” என்று முடிவாகச் சொன்னார்.
படிப்பு விஷயத்திற்கும் சபரிநாதன் நாமம் போட்டுவிட்ட பிறகும் ராஜலக்ஷ்மி சோர்ந்து போய்விடவில்லை. பாட்டுக் கற்றுக்கொள்ளவாவது அவர் ஒப்புக்கொண்டு ஏற்பாடு செய்து தரமாட்டாரா என்று ஆசைப்பட்டாள். ஏதாவது ஒரு ஜன்னலைத் திறந்தாவது நன்றாக மூச்சு விடலாமே என்ற தவிப்பு அவளுக்கு.
பாட்டு கற்றுக் கொள்வதில் இளமை சார்ந்த விஷயம் எதவும் இருப்பதாகத் தெரியவில்லை சபரிநாதனுக்கு. உடனே பத்தமடைக்கு கிளம்பிப் போய் அவருடைய ஆப்த பிராமண நண்பரான வயசான பாட்டு வாத்தியாரைப் பார்த்தார். ஆனால் அவரால் திம்மராஜபுரத்திற்கு வந்து பாட்டு சொல்லித்தர தோதுப்படாது என்று சொல்லிவிட்டார். ராஜலக்ஷ்மிதான் வாரத்தில் மூன்று நாட்கள் பத்தமடை போய் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அடித்துச் சொல்லிவிட்டார்.
“அவளைத் தனியா அனுப்ப எனக்குத் தோதுப்படாது.”
“அப்ப நீயும் அவகூடவே வாயேன் சபரி…”
ராஜலக்ஷ்மியோடு நன்றாகப் போய்வருவாரே சபரிநாதன்! இப்படியாக அவளின் பாட்டுச் சமாசாரத்திற்கும் மங்களம் பாடிவிட்டார் சபரிநாதன். இதற்கு மேல் என்ன இருக்கிறது?
ராஜலக்ஷ்மி திறந்து பார்க்க ஆசைப்பட்ட அத்தனை ஜன்னல்களும் சபரிநாதனால் நன்கு மூடப்பட்டு ஆணி அறையப்பட்டு விட்டன. சுருக்கமாகச் சொன்னால் அவளின் திருமண வாழ்க்கை ஒரு சிறைவாசமாக இருந்தது. சபரிநாதனும் ஒரு சிறைக் கண்காணிப்பாளராக அவளிடம் நடந்து கொண்டார். ஆயுள் கைதிகளுக்கு சிறைக்குள் சின்னச் சின்ன சலுகைகள் கிடைப்பது மாதிரி, ராஜலக்ஷ்மிக்கும் சில சலுகைகள் தரப்பட்டன.
அவள் கோயிலுக்குப் போய்வரலாம். பக்கத்து வீட்டுப் பெண்கள் பாத்திரம் பண்டம் வாங்க திருநெல்வேலி போனால் அவர்களுடன் ராஜலக்ஷ்மியும் போய்வரலாம். மற்றபடி ஆற்றில் நிறைய தண்ணீர் போகிறது என்ற ஆசையில் போய் குளிப்பதற்கெல்லாம் அவளுக்கு அனுமதி கிடையாது. ஆற்றில் அவள் குளிக்கும்போது சின்ன வயசுப் பையன்கள் பார்த்துவிட்டால் சபரிநாதனின் குலப்பெருமை என்ன ஆவது? அதற்கும்மேல் ராஜலக்ஷ்மியின் கற்பு என்ன ஆவது?
ஆனால் எதிர்பாராமல், சபரிநாதன் வெளியூர் போகிற சமயங்களில், ஆற்றிலும் தண்ணீர் நிறையப் போய்க் கொண்டிருந்தால், ராஜலக்ஷ்மியை ஆற்றுக்கு குளிக்க அழைத்துப்போக அந்த ஊர்ப் பெண்களில் ஒரு கூட்டமே தயாராக இருந்தது. அவளை சபரிநாதன் அநியாயமாக வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்திருக்கிறார் என்பதில் திம்மராஜபுரம் ஜனங்களின் மத்தியில் ஒரு ரகசிய அனுதாப அலை இருந்தது. ஆனாலும் என்ன – ராஜலக்ஷ்மி என்ற சிறைப்பறவைக்கு இந்த அனுதாப அலையெல்லாம் போதவில்லை.
சிறைக்குள்ளேயே கைதிகள் சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்வதுண்டு. அல்லது சிறையை விட்டுத் தப்பிச்செல்ல காத்திருந்து முயற்சி செய்து பார்ப்பதும் உண்டு. ராஜலக்ஷ்மிக்குள்ளும் அப்படிப்பட்ட மனநிலை லேசாக முளைவிடத் தொடங்கியிருந்தது. அந்த மாதிரி மனச் சூழ்நிலையில், பொழுது விடிந்து இருட்டும்வரை மூன்று வேளையும் சபரிநாதன் சொல்கிற சமையலை சமைத்துப் போட்டுக்கொண்டு, “உனக்கு நன்றாக சமைக்கவே தெரியலை” என்ற தினசரி சான்றிதழையும் பெற்றுக்கொண்டு வீட்டிற்குள் அப்படி இப்படியென்று ஏராளமான தண்டனை நாட்களை மெளனமாகவே கழித்து விட்டிருந்தாள். ஆனால் அப்படி மெளனமாகவே இருந்து விடுகிற அபிப்பிராயமும் கிடையாது ராஜலக்ஷ்மிக்கு…!
பட்டுச் சேலைகள் கட்டிக்கொண்டு, மூன்று வேளைகள் நன்கு உண்டு, வெற்றிலை போட்டுக்கொண்டு, ஒரு அரண்மனைக் கிளியாக மட்டும் அடங்கி வாழ அவள் மனசு ஒப்பவில்லை. எப்படியாவது சபரிநாதனிடமிருந்து மீண்டு, சுதந்திரக் காற்றை கண்டிப்பாக சுவாசித்தே ஆக வேண்டும் என்ற மன நிலையில் அவள் உறுதியாக இருந்தாள்.
இங்கே இப்படியிருக்க, அங்கே ஹைதராபாத்தில், சுகுணாவின் கணவன் சுப்பையா ராஜலக்ஷ்மியை நினைத்து நினைத்து ஏங்கி உருகிக் கொண்டிருந்தான். ராஜலக்ஷ்மியின் சொக்க வைக்கும் அழகிற்கு அவன் அடிமையாகிவிட்டான். உறவு முறைப்படி மாமனாரின் மனைவி என்பவள் மாமியார் ஸ்தானம். ஆனால் புதிதாகக் கல்யாணமாகி வந்த மாமியார் சுப்பையாவைவிட ஐந்தாறு வயதுகள் குறைவு. சுப்பையா ஒரு சராசரி ஆண்மகன். அவனுக்கு முதன் முதலாக கல்யாணத்தில் மாமியாரைப் பார்த்ததுமே காதல் துளிர் விட்டுவிட்டது. மாமனார் மீது பொறாமை மேலோங்கியது.
பல இரவுகள் தூங்காமல் ராஜலக்ஷ்மியையே நினைத்துக் கொண்டிருந்தான். காதலிலும், போரிலும் நேர்மை, ஒழுக்கம் என்பது அனர்த்தம் என்று அர்த்தம் செய்துகொண்டான். பலவிதமாக யோசனைகள் செய்து, இறுதியில் அவளிடம் எப்படியாவது பேசி அவளின் நட்பைப் பெற்றுவிடுவது என்றும் பிறகு தன் காதலை அவளிடம் சொல்லிவிடுவது என்றும் முடிவு செய்தான்.
அதிலும் ஒரு பிரச்சினை என்னவென்றால் ராஜலக்ஷ்மிக்கு என்று தனியாக ஒரு மொபைல் கிடையாது. அவள்தான் சிறைக் கைதியாக இருக்கிறாளே!? சுகுணா எப்போதும் அவள் அப்பாவிடம் அவருடைய மொபைலில் பேசிவிட்டுத்தான் ராஜலக்ஷ்மியிடம் பேசுவாள் என்பதைப் பார்த்திருக்கிறான்.
மாமனார் தினமும் காலை ஏழுமணிக்கு வயல் வரப்புகளைப் பார்க்கப் போவார் என்பதை மனைவி சுகுணாவிடம் பேசித் தெரிந்துகொண்டான் சுப்பையா. அதன் பிறகு ஒன்பது மணி வாக்கில்தான் வீடு திரும்புவாராம். மாமனாரின் மொபைல் இலக்கம் அவனுக்குத் தெரியாது. இதுகாறும் மாமனாரிடம் நட்பு பாராட்டாமல் இருந்தது குறித்து தன்னையே நொந்துகொண்டான். அதனால் ஒருநாள் சுகுணா குளித்துக் கொண்டிருந்தபோது, அவளுக்குத் தெரியாமல் அவளின் மொபைலை நோண்டி மாமனாரின் நம்பரைப் பார்த்து சேமித்து வைத்துக்கொண்டான். இனி அடுத்ததாக அவரிடம் மரியாதையுடன் பேசி முதலில் அவரின் அன்பைப் பெறவேண்டும் என்று முடிவு செய்தான்.
அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை…
காலை ஏழு மணிவாக்கில் மனைவி சுகுணா குளித்துக் கொண்டிருந்தாள். மகன் தூங்கிக் கொண்டிருந்தான். மாமனார் இந்நேரம் வயலுக்கு கிளம்பியிருப்பார். மொபைலை தன்னோடு எடுத்துச் சென்றிருந்தால் அவரிடமே அப்பாவியாக நலம் விசாரித்து விடுவது; ஒருவேளை மொபைலை வீட்டிலேயே அவர் வைத்துவிட்டுப் போயிருந்தால், ராஜலக்ஷ்மி அதை எடுத்துப் பேசுவாள். அவளிடம் சகஜமாகப் பேசி அவளைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது என்று சுப்பையா முடிவு செய்தான்.
கை விரல்கள் துறுதுறுத்தன. ஆசையுடன் மாமனாரின் மொபைலுக்கு போன் செய்தான்.
நான்கு ரிங்குகள் போயிற்று. காத்திருந்தான். பிறகு, மொபைலை எடுத்து “ஹலோ” என்றாள் ராஜலக்ஷ்மி.