அரங்கேற்றம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 17, 2023
பார்வையிட்டோர்: 1,858 
 
 

”மெயின்ரோடுல ஆறு கிமீ போயிடுங்க தம்பி. பெரிய ஆலமரம் தாண்டி ஒரு மண்ணு ரோடு இடதுகை பக்கமா பிரியும், அதுல ரெண்டு கிமீ போனிங்கன்னா உங்க வலது பக்கமா கிழக்கு பாத்த மாதிரி பெரிய கேட்டு இருக்கும். அந்த வீடுதான். தம்பி, நான் வேணும்னா கூட வர்றேனே” என்று தயங்கி தயங்கி சொன்னார் டிரைவர் ஆறுமுகம்.

“இல்லை அண்ணே, நானே போயிட்டு வந்துடறேன். நீங்க எறங்கிக்கோங்க. சொன்னது ஞாபகம் இருக்கட்டும்” என்றேன் சற்றே உயர்த்திய குரலில்

கீழே இறங்கியவர், “பெரிய அம்மாவுக்கு நான் நிச்சயமா சொல்ல மாட்டேன் தம்பி, ஆனா அவங்களுக்கு தெரியாம போயிடும்னு நினைக்குறீங்களா?” என்று கேட்டுவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் திரும்பி நடக்க ஆரம்பித்தார் ஆறுமுகம்.

ஒரு முழுநிமிடம் அப்படியே அமர்ந்திருந்தேன். ஸ்டியரிங்கை பற்றிய கைகள் என்னையறியாமல் ஸ்டியரிங்கை இறுக்க ஆரம்பித்தன. பெருமூச்சை விட்டபின் வண்டியை நகர்த்தினேன்.

அப்பா….

உலகின் பாதிக்கு பாதி ஆண்களைப் போலவே எனக்கும் என் அப்பாதான் ஆதர்சம். என் முதல் தோழன். அவருடன் நான் விவாதிக்காத விசயமே இல்லை…. அந்த ஒன்றைத் தவிர.

பரம்பரை சொத்தாக வந்த ஆயிரத்து சொச்ச ஏக்கர்கள். காவிரி பாசனத்தில் நெல், தோப்புகள் என்று கணக்கில்லாத பணத்துடன் பிறந்து வளர்ந்தவர். தாத்தாவின் அறிவுரைப் படி சென்னையில் வக்கீலுக்கு படித்து முடித்தபின் கிராமத்திற்கே திரும்பி பண்ணை நிர்வாகத்தை நடத்த ஆரம்பித்தவர். எனக்கு நினைவு தெரிந்து யாரும் அவர் பெயரைச் சொல்லிக்கூட அழைத்ததில்லை, “பெரியவர்” என்ற ஒரு சொல் சுற்று வட்டார கிராமங்கள் அனைத்திலும் அப்பா ஒருவரையே குறித்தது ஆச்சர்யம்தான்.

ஆலமரம் சற்று தொலைவில் தெரிந்தது.

அம்மாவின் அதிகார குரல் மனதிற்குள் கேட்டது ”என்மேல உனக்கு மரியாதை இருக்குறது உண்மைன்னா எக்காரணம் கொண்டும் அந்த பக்கம் போகக்கூடாது”

வேகம் குறைத்து இடதுபுறம் காரைத் திருப்பினேன். ரியர் வ்யூ மிரரில் என் கார் கிளப்பிய புழுதி தெரிந்தது.

எனக்கு 7ம் வகுப்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தபோதுதான் முதல் முதலாக அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவ்வளவு உக்கிரமான சண்டையைப் பார்த்தேன். வெளியே வைக்கோல் போர்கள் நடுவே ஐஸ்பாய் விளையாடிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தபோதே அம்மாவின் ஆக்ரோஷமான குரல் கேட்டது. அப்படியே நின்றேன். ஒன்றும் புரியவில்லை. உள்ளே தயங்கி தயங்கி நுழைந்தேன். ஒரு விநாடி எல்லோரும் அப்படியே எதுவும் பேசாமல் நின்றார்கள். அம்மா கண்ணைக் காட்ட சுந்தர் மாமாதான் வந்து “வாடா, வெளிய போயிட்டு வரலாம்” என்று என்னை இழுத்துக் கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றார்.

அதன்பின் இரண்டு நாட்கள் கழித்து என்னை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டபோது வீட்டின் சூழல் மாறி இருந்ததை உணர முடிந்தது. அதற்குப் பிறகு அம்மாவும் அப்பாவும் எப்போதும் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசிக்கொண்டதில்லை. ஆனால் இருவரின் என் மீதான அன்பும் கண்டிப்பும் எந்த மாற்றமும் இல்லாமல்தான் இருந்தது.

ஆறுமுகம் சொன்ன பெரிய மர நிறத்திலான கேட் வந்தது. சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் எதுவும் இல்லாமல் கல் நட்டு கம்பியினால் வேலி அமைத்திருந்திருந்தார்கள். பார்த்ததும் அந்த வீடுதான் என்று புரிந்தது.

“அருண், வீடுன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? சுத்தியும் ஒரு அம்பது அடிக்காவது தோட்டம், அதுல தென்னை மரம், மாமரம், கொய்ய மரம் எல்லாம் இருக்கணும். கேட்ல இருந்து வீட்டுக்கு போற வழி ரெண்டு பக்கமும் பூச்செடிங்க நம்ம இடுப்பு உயரத்துக்கு வளந்திருக்கணும், அந்த வழியோட ஒரு பக்கம் புல்லுக்கு நடுவுல ஊஞ்சல், இன்னொரு பக்கம் பசங்க விளையாட ஒரு ஏரியா இருக்கணும்”

எல்லாமே இருந்தன. அப்பாவின் வீடு…..

அந்த சம்பவம் நடந்து, ஒரு வருடம் கழித்து அடுத்த விடுமுறையில் ஊருக்கு வந்தபோதுதான் அரசல் புரசலாக தெரியவந்தது. முதலில் நம்ப முடியவில்லை என்றாலும் அப்பா பக்கத்து ஊரில் ஒரு சின்ன வீட்டை கூட்டிக் கொண்டு வந்து வைத்திருப்பதாகவும் அங்கே அவருக்கு ஒரு பெண்குழந்தை கூட இருப்பதாகவும் உறுதியாக தெரிய உடைந்து போனேன்.

அம்மா அப்பாவுடன் கல்லூரியில் படித்தவர். சென்னையில் பிறந்து வளர்ந்த அக்மார்க் தமிழ் பிராமணக் குடும்பப் பெண்ணுக்கு சுத்த கிராமத்தானாகவே தன்னை எப்போதும் அடையாளப்படுத்திக் கொள்ளும் அப்பாவை பிடித்ததற்கு காரணம் இன்று வரை எனக்கு புரிந்ததில்லை. அம்மாவின் குடும்பமும் சென்னையில் நல்ல நிலைமையில் இருந்தவர்கள் என்பதால் இருபக்கமும் எந்த முணுமுணுப்பும் இல்லாமல் திருமணம் முடிந்திருக்கிறது. அப்பா பண்ணையை பார்த்துக் கொள்ள, அம்மா மேல்படிப்பை தொடர்ந்து படித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆகிற அளவுக்கு உயர்ந்த இடைவெளியில் நான் பிறந்து பள்ளிக்கு போக ஆரம்பித்திருந்தேன். அன்னியோனியமாக போய்க் கொண்டிருந்த அவர்களின் தாம்பத்யம் சரி செய்ய முடியாத அளவுக்கு உடைந்தது இந்த ஒரு பிரச்சினையினால்தான்.

அடிக்கடி நினைத்துக் கொள்வேன். இவ்வளவு பிரச்சினைக்குப் பிறகும் அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இருப்பதற்குக் காரணம் நான்தானோ என்று. சுந்தர் மாமா கூட ஒரு முறை அதையேத்தான் சொன்னார். சுந்தர் மாமா என் அம்மாவின் தம்பி. எனக்கு அடுத்து என் அப்பா அம்மா இருவருக்குமே செல்லப் பிள்ளை அவர்.

வண்டியை வெளியேயே நிறுத்திவிட்டு கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தேன். நாய் எதுவும் இருக்காது என்பது தெரியும், கால்கள் பின்ன மெதுவாக நடந்து போர்டிகோவை அடைந்தேன். ரத்தச் சிவப்பில் ஒரு ஆக்செண்ட் நின்றிருந்தது. போர்ட்டிகோவும் காரும் வீட்டின் கதவு ஜன்னல்கள் எல்லாவற்றிலும் ஒரு சிறு லேயர் தூசி இருந்தது. இரண்டு வாரங்கள் முன்பு வரை சுத்தமாக வைக்கப்பட்டிருந்து அதன் பின் சுத்தம் செய்யப்படாமல் இருந்ததை உணர முடிந்தது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு என்னால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தக்காளிப்பழ சாறு ஃபேக்டரிக்கு ஆர்டர் எடுக்க கொழும்பு போயிருந்தபோதுதான் ஃபோன் வந்தது. சுந்தர் மாமாதான் பேசினார். வழக்கம் போல உணர்ச்சி இல்லாத குரலில் “அருண்… அப்பா நம்மை விட்டுட்டு போயிட்டாருடா” என்றார். விசயம் புரிந்து நான் நிலைக்கு வர சில விநாடிகள் ஆனது. நடுங்கும் குரலில் “மாமா…” என்றேன். “உணர்ச்சிவசப்படாத, உடனே அடுத்த ஃப்ளைட் புடிச்சி திருச்சிக்கு வந்துரு, ஏர்போர்ட்டுக்கு கார் வந்துடும்” வைத்துவிட்டார். அப்பா இல்லாத உலகத்தை நான் அதுவரை யோசித்ததே இல்லை என்பது எனக்குப் புரிந்து நான் மீண்டும் இயல்புக்கு வர காரியம் எல்லாம் முடிந்துகூட இரண்டு நாட்கள் ஆனது.

”டிங் டாங்”

உள்ளே சில விநாடிகள் கழித்து யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. கதவை திறந்து பார்த்த, கலங்கிய கண்களுடன் இருந்த அந்த அம்மாளின் முகம் என்னைப் பார்த்த உடனேயே ஆச்சர்யத்தில் மலர்ந்தது. அவசர அவசரமாக கதவைத் திறந்தவர் “உள்ள வாங்க தம்பி, நான் உங்களை எதிர்பார்க்கவே இல்லை” என்றார்.

“என்னை உங்களுக்கு?”

“தெரியும் தம்பி, பெரியவர் உங்க கல்யாண கேசட், ஆல்பம் எல்லாம் கொண்டு வந்து காட்டியிருக்கார்”

தயக்கத்துடன் உள்ளே வந்து அமர்ந்தேன். ஒரு விசாலமான ஹால் அதன் இருபுறமும் விருந்தினர் அறைகள், ஹாலின் நடுவில் ஊஞ்சல், ஹாலைத் தாண்டினால் சூரிய வெளிச்சத்துடன் முற்றம் தெரிந்தது. முற்றத்தின் ஒரு புறம் ஸ்டோர் ரூமுடன் கூடிய சமையல் அறையும் இன்னொரு புறம் இரு படுக்கை அறைகளும் முற்றத்தை தாண்டினால் கிணறு, குளியல் அறைகளும் இருக்கும் என்று உணர முடிந்தது, அப்பா…

“டேய் உங்க அப்பா இந்த வீடு கட்டுறப்ப என்ன சொன்னாரு தெரியுமா, நடுவுல முற்றம் வைக்கணுமாம், வீட்டுக்கு பின்னால கிணறு வரணுமாம், அப்படியே பட்டிக்காடு” என்று வாய் கொள்ளா சிரிப்புடன் அம்மா அடித்த கிண்டலும் அதற்கு அப்பா புன்னகையுடன் பார்த்த பார்வையும் நினைவுக்கு வந்தது.

“செய்தி வந்தது, ஆனா வர முடியலை, காரணம் உங்களுக்கே தெரியும்” என்றார் அவர். அவரை சித்தி என்று அழைப்பதா வேணாமா என்று குழப்பத்துடன் அமைதியாக இருந்தேன்.

“குட்டி, ஒரு காஃபி போட்டு கொண்டுவா. தம்பி வந்திருக்கு பாரு.. உங்க அம்மாவுக்கு எங்க நாங்க சொத்துல உரிமை கொண்டாடிட்டு வந்துடுவோமோன்னு பயம் போல. பெரியவரோட முகத்தை கடைசியா ஒரு தடவை பாக்கக்கூட முடியாம போச்சி” என்றார் விரக்தியாக.

“நான் போய் அந்த வீட்டுக்கு போயி ஒரு நடைபார்த்துட்டு வரலாம்னு இருக்கேன்” தலையை சீவிக் கொண்டிருந்த கவிதா அப்படியே திரும்பி என்னைப் பார்த்தாள். ”எங்களை மாதிரியேதான் அவங்களையும் அப்பாதான் பதினைஞ்சு வருசமா காப்பாத்திட்டு வந்திருக்காரு, இப்ப எப்படி இருக்காங்கன்னு பார்த்துட்டு எதாவது உதவி வேணும்னா செஞ்சிட்டு வரலாம்னு பாக்குறேன்” என்றேன்.

“அருண், அத்தைக்கு சொல்லப்போறியா?”

“இல்லைடா, அம்மா நிச்சயமா ஒத்துக்க மாட்டாங்க. ஏற்கனவே அவங்களுக்காக அப்பா கோடியா கோடியா செலவு பண்ணி இருக்காருன்னு சொல்லி திட்டிட்டு இருக்காங்க”

“நானும் வரவா?”

“வேணாம்டா, அங்க என்ன கண்டிசன்னு தெரியலை. ஒருவேளை அம்மா நினைக்குற மாதிரி அவங்க சொத்துக்கு அடி போடுறவங்களா இருந்தா பிரச்சினையாக வாய்ப்பு அதிகம். நீ வராம இருக்குறதுதான் நல்லது”

ஒரு பெண் காஃபி கொண்டு வந்தாள், “இவதான் என்னோட பொண்ணு, குட்டின்னு கூப்பிடுவோம்” நிமிர்ந்து பார்த்தேன், என் தங்கை.. என்னை விட பத்து வயதாவது குறைவாக இருக்கும் என்று தோன்றியது. லட்சணமான முகம். பார்த்த‌தும் கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது. அப்பாவின் சாயல் அவள் முகத்தில் தெரிகிறதா என்று பார்த்தேன், தன் அம்மாவை அச்சு அசலாய் உரித்து வைத்துப் பிறந்திருந்தாள். கண்களில் லேசான சிவப்பு, அவளும் அழுதிருப்பாள் போல. காஃபியை வாங்கினேன். திரும்பி சமையல் அறைக்கு போனாள்.

”நீங்க.. நீங்க எப்படி அப்பாவுக்கு…” பேச முடியாமல் திணறினேன்.

“என்னோட சின்ன வயசுல என் வாழ்க்கை இப்படி எல்லாம் ஆகும்னு நினைச்சதே இல்லை. என் அம்மா அவ்வளவு நல்லா பரதம் ஆடுவாங்க. அவங்க கொஞ்ச கொஞ்சமா எனக்கு கத்துக் கொடுக்க என் பதினைஞ்சாவது வயசுல நாட்டிய அரங்கேற்றம் பண்ண எல்லா ஏற்பாடுகளும் பண்ணினாங்க. அரங்கேற்றத்துக்கு ஒரு மாசம் இருக்குறப்ப நடந்த ஒரு ஆக்சிடெண்ட்டுல ரெண்டு பேரும் போய் சேந்துட்டாங்க. அந்த ஆண்டவனுக்கு என் மேல கருணை இல்லை போல, என்னை மட்டும் இந்த உலகத்துல விட்டுட்டு போயிட்டான்”

காஃபியை வாயில் வைத்தேன். ஒரே சிப்பில் உணர்ந்தேன். ‘அரை ஸ்பூன் சர்க்கரை போட்டு மூணில் ஒரு பங்கு ஏற்காடு காஃபிக் கொட்டையில டிகாக்சன், நல்லா கலக்கிட்டு காய்ச்சின கெட்டியான எருமைப்பால் டம்ளர் நிறையும் அளவிற்கு ஊத்தி, ஸ்பூனில் மெல்லிசாய் ஒரு கலக்கு’ அப்பாவின் காஃபி.

“காஃபிக்கொட்டை ஏற்காட்டுல இருந்தது வந்தது” என்றார் என் மன ஓட்டத்தைப் படித்தவராய். ஒருநாளும் அப்பாவிற்கு எங்கள் வீட்டின் காஃபி பிடித்ததே இல்லை “எதுக்கு இவ்ளோ நுரை?” என்றோ “டிகாக்சன் கம்மியா போட்டுட்ட” என்றோ “சுகர் இவ்ளோவா அள்ளிப் போடுவீங்க” என்றோ “பசும்பால் காஃபி திக்காவே இருக்குறதில்லை” என்றோ எதாவது குறை சொல்லிக் கொண்டே இருப்பார்.

அவர் விட்ட இடத்திலிருந்து கதையை தொடர்ந்தார். ”அப்பாவும் அம்மாவும் போனதும் என் சித்தப்பா வீட்டுக்கு போனேன். பணத்தைத் தவிர வேற எதுவும் தெரியாத அந்த ஆளு என்னை ஒரு பண்ணையாருட்ட அனுப்பிட்டான். ஆயிரம் பேர் முன்னால நடக்க வேண்டிய என் அரங்கேற்றம் என்னை விட முப்பது வயசு மூத்த அந்த பண்ணையாரு கூட அவரோட தனியறையில நடந்தது” என் இதயத் துடிப்பு அதிகரித்துக் கொண்டிருக்க அவர் தட்டையாக உணர்ச்சியில்லாமல் பேசிக் கொண்டிருந்தார்.

”அப்புறம் மதுரை பக்கத்து ஆளுங்கள்ல நானும் பத்தோட பதினொண்ணா ஆகிட்டேன். கத்து வெச்சிருந்த நாட்டியத்தின் காரணமா அந்த கூட்டத்துலயும் தனிச்சி தெரிய ஆரம்பிச்சேன். என்னோட நாட்டியத்தைப் பாக்குறதுக்காக நூறு மைல் தள்ளி இருந்தெல்லாம் மைனருங்க வருவாங்கன்னா பாத்துக்கோங்களேன். ஆனா வெளிய மத்தவங்க எங்களைப் பாக்குறப் பார்வையிலயே கூசிப்போவேன். ஒரு காலத்துல தேவதாசிகள் கோவில்ல இறைவனுக்கு நெருக்கமானவங்களா பாக்கப்பட்டாங்கன்னு படிச்சப்ப சிரிப்புதான் வந்தது” வார்த்தைகளில் விரக்தி வழிந்தோடியதாகக் தோன்றியது எனக்கு.

திடீரென்று அவர் குரலில் ஒரு புன்னகை அல்லது வெட்கத்தை உணர முடிந்தது “அப்படி ஒரு நாட்டியம் ஆடுறப்பதான் உங்க அப்பாவைப் பார்த்தேன்”.

சில நிமிடம் அமைதியாக இருந்தார். நானும் அவரின் அடுத்த வார்த்தைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தேன். குட்டி சமையலறையில் இருந்து நாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்று தோன்றியது.

“அப்புறம் பெரியவர் அடிக்கடி என்னைப் பாக்க வர ஆரம்பிச்சாரு. சில தடவை ரெண்டு மூணுநாள் கூட தங்குவாரு. அவருக்கு ஏன் என்னைப் புடிச்சது, என்னை அடிக்கடி பார்க்க வர்ற அளவுக்கு அவருக்கு என்ன பிரச்சினை எதையும் நான் அவர்கிட்ட கேட்டதில்லை. ஆனா ஒண்ணு சொல்ல முடியும், பொம்பளை சுகத்துக்காக எல்லா இடத்துக்கும் அலையுற மைனர் இல்லை அவர்”

“அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி இவ பொறந்தா. அதுக்கப்புறம் மத்தவங்க என்னை ஒதுக்குனப்பவும் பெரியவரோட அன்புல எந்த மாற்றமும் இருந்ததில்லை. இவளுக்கு ரெண்டு வயசா இருந்தப்பதான் என்கூடவே வந்துட முடியுமான்னு கேட்டாரு. சரின்னு வந்துட்டோம்” மூச்சை முழுவதும் இழுத்து பெருமூச்சாய் வெளியில் விட்டார்.

”இந்த பதினைஞ்சு வருசத்துல அவரைத் தவிர வேற யாரும் என்னை நெருங்கக்கூட முடிஞ்சதில்லை. அவரோட வெளிய கோவில் குளம்னு போனதில்லையே தவிர வருசம் ரெண்டு தடவை ஒரு ஒரு வாரம் எங்கயாவது வெளியூருக்கு எங்களைக் கூட்டிட்டுப் போவாரு, எங்களுக்கு எந்த குறையும் இல்லாம பாத்துகிட்டாரு”

என்ன செய்யப்போகிறேன் நான். முற்றிலும் அப்பாவை மட்டுமே அண்டியிருந்த இவர்களுக்கு அடுத்த போக்கிடம் ஏது? அதுவும் வயதுக்கு வந்த பெண்ணுடன்.

”பெரியவர் இல்லாம போறது அப்படிங்குற விசயத்தை ஒரு நிமிசம் கூட நான் யோசிச்சே பார்த்ததில்லைன்னு நினைச்சா எனக்கே ஆச்சரியமாத்தான் இருக்கு” என்றார் வேதனையுடன். என் மனதில் ஓடிய அதே எண்ணங்கள் அவர் மனதிலும் ஓடிக் கொண்டிருப்பது புரிந்தது.

“ஆனா பெரியவர் இறந்துட்டாருன்னு தெரிஞ்சதுமே ஆளாளுக்கு தூது அனுப்ப ஆரம்பிச்சிட்டானுங்க, அதிலயும் இவ கண்ணுக்கு லட்சணமா இருக்காளே” என் நெஞ்சில் இடி இறங்கியது. அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தேன்.

“அதிலும் அந்த ரைஸ்மில் மாணிக்கம் அஞ்சு லட்ச ரூபாயோட ஆள் அனுப்பிட்டான், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்கன்னு”. இதயம் பிசைய கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது போல் இருந்தது.

அவர் முகத்தைப் பார்க்க தைரியமில்லாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தேன். அவர் தொடர்ந்து சொன்னார்.

“பணத்தைத் தூக்கி வந்தவன் மூஞ்சியிலயே விசிறியடிச்சிட்டு சொன்னேன், ’பெரியவரோட உப்பை பதினஞ்சி வருசம் சாப்பிட்டு இருக்கோம். என் பொண்ணோட அரங்கேற்றம் அவர் பையன் கூடத்தான் நடக்கும்’னு”

நன்றி: மார்ச் 1 – 15 2011, அதீதம் இதழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *