அயோத்யா மண்டபம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 3, 2012
பார்வையிட்டோர்: 30,886 
 
 

கிருஷ்ணமூர்த்தி குரலில் உற்சாகம் பொங்க போன் செய்தான், ‘‘கண்ணே கலைச்செல்வி, பாஸ்போர்ட், ஏர்டிக்கெட் எல்லாம் தயார். வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ப்ளைட்டில ஷய்க்! சிங்கப்பூர் நாரிட்டா சான்ஃப்ரான்சிஸ்கோ ஆண்டர்சன் ஏர்போர்ட்டுக்கு வந்துருவான், எல்லாம் பேக் பண்ணிட்டயோல்லியோ?’’

‘‘இன்னும் திணிச்சுகிட்டே இருக்கேன்’’ என்றாள் கலை.

‘‘நாசமாப் போச்சு, ஒரு மாசமாத் திணிச்சுண்டிருக்கே, இன்னும் முடியலையா?

‘‘ஒரு மாசமா கணவன் போத்திகிட்டு படுத்துக்கிட்டிருந்தா?’’

‘‘ரெண்டு நாள்தான் இருக்கு. மாம்பலத்துக்குப் போய்த் தலையைக் காட்டிட்டு வந்துர்றேன்’’.

‘‘நானு?’’

கிருஷ்ணமூர்த்தி தயங்கினான். ‘‘ம்.. நீ வேண்டாம். கலை… இப்ப வேண்டாம். அப்பாக்கு இன்னும் சமாதானமாகல்லை.’’

அவள் குரல் உயர்ந்தது. ‘‘எப்ப சமாதானமாவார், எனக்கு அறுபது வயசாகணுமா?’’

‘‘சே சே குழந்தை பெத்துகிட்டப்புறம்.’’

‘‘நான்சென்ஸ். நான் என்ன வேற்று கிரகத்து மனுசியா?’’

‘‘பாரு, சந்தோஷ சமயத்தில் இந்த டாபிக் வேண்டாமே’’

‘‘நாம யு எஸ் போவுறது உங்கப்பாருக்குத் தெரியுமில்ல?’’

‘‘இன்னும் சொல்லலை’’

‘‘பாரு கிருஷ், சரியாகக் காதில வாங்கிக்க உங்கப்பாவைச் சந்திக்காமப் புறப்படறது எனக்குப் பிடிக்கலை. டாமிட். மாமனாரைப் போய்ப் பாத்தா என்ன? கடிச்சுருவாரா? நான் என்ன பாவம் செய்தேன்?’’

‘‘அப்படி இல்லை கலை, மைகாட்… நான் இதை எப்படி… ஆல்ரைட் சரி முதல்ல நான் போய்ப் பூர்வாங்க வேலைகளைக் கவனிக்கறேன். புறப்படறதுக்கு முன்னாடி பார்க்கணும்கறான்னு சொல்லிப் பார்க்கறேன். சரி கூட்டிண்டு வான்னா…’’

‘‘அந்த அளவுக்கு என்னை வெறுக்க காரணம் என்ன?’’ என்று கண்ணீரை ஒத்திக் கொண்டாள்.

‘‘உனக்குப் புரியாதும்மா, அவங்களுக்கு என்னால எவ்வளவோ மனத்தாங்கல்… ஏமாத்தம்’’.

‘‘என்னை அவங்க பாத்தது கூட இல்லையே.’’

‘‘அம்மாகிட்ட போட்டோ காட்டிருக்கேன்’’.

‘‘அது போதாது’’

‘‘சரி சரி சரி கத்தாதே’’

‘‘பாரு கிருஷ், முதல்ல உனக்குத் தைரியம் வேணும். உங்கப்பாம்மாவைச் சந்திக்காம நான் அமெரிக்கா வரமாட்டேன். நாம செஞ்சுகிட்டது என்னவோ சொல்வாங்களே ‘காந்தர்வ விவாஹம்’ இல்லை ரிஜிஸ்ட்ரார் முன்னால நண்பர்கள், பெரியமனுசங்க சாட்சியோட …’’

‘‘ஆல்ரைட், வெள்ளிக்கிழமைக்குள்ள கூட்டிண்டு போறேன்’’.

‘‘ஏர்ப்போர்ட் போறதுக்கு முன்னே அஞ்சு நிமிஷமா.’’

‘‘ஹய்யோ கூட்டிண்டு போறேங்கறேனே’’ என்றான் அதட்டலாக. இப்ப ஒரு கிஸ் குடு. என்றுஅவளை அணைத்துக்கொள்ள முற்பட்டவனைத் தள்ளினாள்.

மேற்கு மாம்பலத்தில் இரண்டு பல மாடி நடுத்தரக் குடியிருப்புகளின் மத்தியில் அபத்திரமாக வாழ்ந்து கொண்டிருந்தது அந்த ஓட்டு வீடு, அப்பா வாசலில் தொடையில் திரித்து தகளி நூற்றுக் கொண்டிருந்தார். முன்பு பார்த்ததற்கு மெலிந்திருந்தார். முகத்தில் ஒரு வார தாடி, குடுமி.

அவனை மேலும் கீழும் பார்த்து நூற்பதைத் தொடர்ந்தார். ‘‘பார்வதி உன் பிள்ளை வந்திருக்கான். நான் கடைக்குப் போறேன்’’ என்று எழுந்தார்.

‘‘கொஞ்சம் இருப்பா உன்னோடதான் பேசணும்.’’

அவர் அவனை அடிபட்ட பார்வையுடன் பார்த்தார்.

‘‘எங்கிட்ட பேச என்ன இருக்கு. எல்லாம் சந்தி சிரிக்க பேசியாச்சே’’

‘‘நான் பேசவந்தது சந்தோஷமான விஷயம்பா.’’

‘‘உங்கிட்ட எனக்கு பேச ஏதும் இல்லை, கிச்சா. நீ எங்களுக்குத் துரோகம் பண்ணிட்ட. முதுகில குத்திட்ட. அதை முதல்ல ஒத்துக்கோ’’.

‘‘சரிப்பா சரி. நாங்க ரெண்டு பேரும் வர வெள்ளிக்கிழமை அமெரிக்கா போறோம்’’.

‘‘தாராளமா போ, லோகத்தையே ஜெயிச்சுட்டு வா.’’

‘‘போறதுக்கு முன்னால கலைச்செல்வி உங்க ரெண்டு பேரையும் சந்திக்கணும்ங்கறா’’.

‘‘கலைச் செல்விங்கறது…?’’

‘‘விளையாடாதப்பா, என் அகமுடையாள் கலைச்செல்வி’’.

‘‘ஓ… உனக்கு கல்யாணம் ஆயுடுத்தா.’’

‘‘ஏம்பா இப்படி படுத்தறே. எத்தனை நாளைக்குப்பா கோபம்? நான் என்ன செய்யணும்னு விரும்பற? வீடு வீடா போய் அமாவாசை தர்ப்பணம் பண்ணி வெக்கணும்னா.. மண்டபத்தில உக்காந்துண்டு ருத்ரம் சமகம்னு…’’ இதற்குள் அம்மா வந்து அவனைக் காப்பாற்றி உள்ளே அழைத்துச் சென்றாள்.

‘‘அவருக்கு இன்னும் கோபம் ஆறலை. ரொம்ப அவமானப்பட்டு போய்ட்டோம். அந்தப் பொண்ணு மேல எங்களுக்கு எந்த விரோதமும் இல்லை கிச்சு. நடராஜையருக்கு வாக்குக் கொடுத்து தவறிட்டோம். பந்தக்கால் நட்டாச்சு. கல்யாண மண்டபம் புக் பண்ணி திருமாங்கல்யம் பண்ணியாச்சு. நாயனக்காராளுக்கு சொல்லியாச்சு.’’

‘‘தெரியும்மா, தெரியும்மா ‘‘அதனால பவித்ராவுக்கு கல்யாணம் ஆகாம போச்சா சொல்லு’’.

‘‘கொத்திண்டு போயாச்சு. என்ன அழகு, என்ன படிப்பு, நமக்குத்தான் கொடுத்து வெக்கலை. என்ன காதல் கன்றாவியோ, உன் ஆம்டையா கருப்பா சேப்பான்னு கூட தெரியாது. அந்த அழகு இருப்பாளாடா?’’

‘‘போட்டோ காட்டினேனம்மா’.

‘‘பாத்தேன். கொஞ்சம் பூசினா மாதிரி உனக்கு அக்கா மாதிரி இருக்கா’’.

‘‘அம்மா!’’ என்று அதட்டலாகத் தாயைப் பார்த்தான்

‘‘ரெண்டு பேருக்கும் அமெரிக்காவில் ஒரு பெரிய அசைன்மெண்ட் கிடைச்சிருக்கு. போறதுக்கு முந்தி நீதான் அப்பாவைச் சமாதானப்படுத்தி வெக்கணும் நாளைக்கு.’’

‘‘வா இப்பவே கேட்டுரலாம்’’.

திண்ணைக்குத் திரும்ப வந்தபோது அப்பா, ‘‘எங்க என் பனியன்’’ என்று கேட்டார். ‘‘இருக்கியா சாப்பிட்டுட்டுப் போ?’’

அம்மா அழுத்தமாகவே சொன்னாள். ‘‘போனாப் போறதுன்னா… அவளை வரச் சொல்லலாமே. கல்யாணமோ ஆய்டுத்து, பெரியவாதான் தாழ்ந்து போக வேண்டியிருக்கு’’.

‘‘இப்ப என்ன சொல்றே? பாக்க மாட்டேன்னு சொன்னா வத்தக்கொழம்பு பண்ணமாட்டியா?’’

‘‘அந்தப் பொண்ணு உங்ககிட்ட வந்து ஆசீர்வாதம் வாங்கிக்கணுமாம்.’’

‘‘என்ன விசேஷம்?’’

‘‘சொன்னேனேப்பா, ரெண்டு பேரும் அமெரிக்கா போறம். குறைந்த பட்சம் ரெண்டு வருஷத்துக்கு பாக்க முடியாது.’’

‘‘அதுவரைக்கும் இருக்கமாட்டேன்னு சந்தேகமா?’’

‘‘என்ன பேச்சு இதெல்லாம்?’’

அப்பா நூற்ற நூலை சீராக பூணூல் பிரியாகப் பண்ணி, பிரம்ம முடிச்சுப் போட்டு, மஞ்சள் தொட்டு லாகவ விரல்களால் ஒரு பரத நாட்டிய முத்திரைபோலத் திருப்பி எட்டு வடிவில் சுற்றிச் சுற்றி விரல்களின் ஊடே சேகரித்தார். மௌனமாக காத்திருந்தான். அவர் நெற்றியில் யோசனை ஓடியது.

‘‘சரி! அமாவாசை வருது. நான் கடைல இருப்பேன். அங்க வந்து பாக்க சொல்லு. அந்த பொண்ணை நான் பாக்கணும், அவ்வளவுதானே?’’

‘‘பாத்து பேசணும்ப்பா. ரொம்ப நல்ல பொண்ணு’’

கிருஷ்ணமூர்த்தி பேருவகையில் உடனே கலைச் செல்விக்கு செல்லடித்தான்.

‘‘கலைக்குட்டி குட் நியூஸ். நீ உடனே அயோத்தியா மண்டபம் வரே’’.

‘அயோக்கியா மண்டபமா? அது எங்கருக்கு’’

‘‘அயோத்யா… அயோத்யா ராமர் பிறந்த ஊர்’’

‘‘மாம்பலத்திலயா பொறந்தாரு’’.

‘‘கட் தி காமெடி! நீ என்ன பண்றே, மேற்கு மாம்பலத்தில அயோத்தியா மண்டபம்னு இருக்கு. ஆட்டோகாரன்கிட்ட கேட்டா சொல்வான். அங்க வந்துரு’’.

‘‘உங்கப்பா அந்த மண்டபத்திலயா குடியிருக்கார்?’’

‘‘இல்லைடி, அவர் கடை எதுத்தாப்பல இருக்கு.’’

‘‘என்ன கடை?’’

‘‘நீ வந்து பாரேன்’’ என்றான்.

‘‘அப்பா, இதான் கலைச் செல்வி’’.

அவர் ஒரு முறை நிமிர்ந்து அவளைப் பார்த்துவிட்டு, வேறு யாரையோ ‘‘வாங்கோ, சவுண்டிகரணம் சுபஸ்வீகாரம் ஆச்சா?’’ என்றார். கலைச்செல்வி அந்தக் ‘கடையை’ வினோதமாகப் பார்த்தாள். நாமக்கட்டி, விபூதிப் பொட்டலம், குங்குமம், ஓலைப்பெட்டி, தோத்திரபுத்தகங்கள், திருப்பதி பெருமாள் படம் பல சைஸ்களில், சல்லிசு மர வேலைப்பாடுள்ள பெட்டிகள், உருத்திராட்ச மாலைகள், இச்சிலி பிச்சிலி சாமான்கள். மொத்தம் அந்தக் கடையில் ஐம்பது ரூபாய்க்குத்தான் பொருள் இருக்கும் போலத் தோன்றியது.

‘‘அய்யா, நானும் உங்க மகனும் ஐ.ஐ.டி.யில ஒண்ணா படிச்சோம். ஒண்ணா ஒரே கம்பெனியில வேலை பாக்கறோம். கிருஷ் ஒரு ஜெம். ரொம்ப நல்லா வளத்திருக்கீங்க’’.

‘‘ராங் ஓப்பனிங், பார்ட்னர்’’ என்று முணுமுணுத்தான்.

‘‘ம் வளத்தது யாரு’’ என்று ஏளனமாகப் பார்த்தார்.

‘‘ரெண்டு பேருக்கும் ஒரு ப்ராஜெக்ட் விஷயமாக அமெரிக்கா போற சான்ஸ் கெடைச்சிருக்கு’’.

‘‘எல்லாம் சொன்னான் தாராளமா போய்ட்டு வாங்கோ’’.

‘‘அய்யா, இது என்ன கடை?’

‘‘பூணூல், தர்ப்பை சமாசாரங்கள். பிராமின்ஸுக்கு ஏகப்பட்ட கடமைகள், சம்பிரதாயங்கள் இருக்கும்மா. தாயார், தோப்பனார் சொல்றைத கேக்கணும் முதல்ல. அதெல்லாம் யார் இப்ப பாக்கறா. வில்வ இலை, தர்ப்பை பூணூல் மாத்தறது மாசியம் சோதம்பம்னு சடங்குகள் மட்டும் பாக்கியிருக்கு.’’

‘‘இதெல்லாம் சாமி சமாசாரம்ங்களா?’’

‘‘சாமி மட்டும் இல்லை பித்ருக்களை அப்பப்ப கூப்ட்டு சிரார்த்தம் பிண்டாதானம் செய்ய வெக்கறது. இது எங்க பேமிலியோட பரம்பரைத் தொழில். இது என்னோட நின்னு போகட்டும். இவனை இவம்மா திருமாங்கல்யத்தைக் கூட வித்து. படிக்க வெச்சோம்.’’

‘‘எங்கப்பா உழவு மாட்டை வித்தாருங்க’’.

‘‘ஏம்மா அம்மாப்பா வச்சபேரே அது என்னது… கலைச்செல்விதானா இல்லை பணங்கட்டி மாத்திண்டதா?’’

‘‘இல்லங்க.. ஒரு பேர்தான் கலைச்செல்வி’’

‘‘உங்கம்மா பேரு’’.

‘‘தமிழ்ச்செல்வி’’.

‘‘அம்பாள் பேரா ஏதும் இல்லையா’’.

‘‘கலைச்செல்வின்னா சரஸ்வதிப்பா’’.

‘‘நீங்கள்ளாம் என்ன ஜாதி?’’

‘‘போச்சுரா!’’ என்று கிருஷ்ணமூர்த்தி’ ‘‘அப்பா அது வந்து, எனக்கே அது தெரியாது’’ என்று குறுக்கிட்டுப் பார்த்தான்.

‘‘இர்றா’’.

‘‘க்ருஷ், பெரியவர் கேக்கட்டும். நான் சொல்றன். அய்யா. நாங்க வந்து பிற்பட்டவங்க’’.

‘‘பிற்பட்டவங்கன்னா என்ன ஜாதி?’’

அவள் சொல்வதற்குள் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதில் முன் சீட்டில் இருவர், பின் சீட்டில் மூவர் என்று ஐந்து பேர் பளபளவென்று உருட்டுக்கட்டைகளுடன் இறங்கி வந்து ‘மடேர் மடேர்’ என்று அப்பாவின் மண்டையிலும் தோளிலும் தாக்கினர். ஒருவன் கத்தியால் விலாவில் தாக்க, கலைச் செல்வி குறுக்கிட்டாள். ‘‘த்தா சாவுங்கடா’’ என்று கடையில் இருந்த அனைத்தையும் கவிழ்த்து விட்டு பெட்ரோல் குண்டு வீசி விட்டு இன்ஜின் ஓடிக் கொண்டிருந்த ஆட்டோவில் மீண்டும் பாய்ந்து ஏறிச் சென்றனர். புரியாத வாழ்க கோஷம் காற்றில் கரைய, கலைச்செல்வியின் கரங்களில் அப்பாவின் ரத்தம் பிசுபிசுத்தது.

ட்ராவல் ஏஜெண்டிடம் சொல்லி பிரயாண ஏற்பாடுகளை தள்ளி வைத்து விட்டு டிக்கெட்டுகளை ரீ புக்கிங் செய்யச் சொல்லிவிட்டு கிருஷ்ணமூர்த்தி பி.ஆர். ஆஸ்பத்திரிக்கு வந்தான். ஒன்பதாவது அறையில் கலைச்செல்வி அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு ஸ்பூனில் ஆர்லிக்ஸ் புகட்டிக் கொண்டிருந்தாள். அவர் தோளிலும் தலையிலும் கட்டுப்போட்டிருந்தது. ஒரு கண் இடுங்கியிருந்தது. உதடு தடித்திருந்தது.

‘‘நல்ல வேளை தப்பிச்சிங்கப்பா’’.

‘‘எதுக்கு என்னை அடிச்சா? எதுக்கு கடையை எரிச்சா? நான் யாருக்கும் துரோகம் பண்ணலையே’’ என்றார் மெலிய குரலில்.

‘‘சில கேள்விகளுக்கு விடையே கிடையாதுப்பா’’.

‘‘நல்ல வேளை நீங்க ரெண்டுபேரும் தப்பிச்சது தெய்வாதினம்தாம்மா. அமெரிக்கா போற சமயத்தில ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகலை! அவங்களை புடிச்சட்டாளாமே’’

‘‘வேற யாரையோ ரௌடி ஷீட்டரை அரஸ்ட் பண்ணி வச்சுட்டு என்னை அடையாளம் காட்டச் சொன்னாப்பா. எல்லாம் கண்துடைப்பு!’’

நர்ஸ் வந்து, ‘‘க்ளுக்கோஸ் கொண்டு வந்ததா?’’ என்று கேட்டாள். கிருஷ்ணமூர்த்தி க்ளுகோஸ் பாட்டில்களைக் கொடுத்தான்.

‘‘டயபடிஸ், பிபி எதும் இல்லைப்பா உனக்கு. ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாப்பா‘’.

‘‘அமெரிக்கா போகலையா?’’

‘‘ஒரு வாரம் போஸ்ட்போன்பண்ணிட்டோம்பா’’ என்றாள் கலை. அவர் தலையைத் தடவிக் கொடுத்து உதட்டில் எச்சிலைத் துடைத்துவிட்டாள். ‘‘எவ்வளவு தலைமயிர்ப்பா உங்களுக்கு! கிருஷ், சீப்பு கொண்டு வரச்சொன்னனே?’’

‘‘கலை! அவன் போகட்டும். நீ இரேம்மா. எங்க கூட இரேன்.’’

கலைச் செல்வி கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்தாள். அவன் சிரித்து, ‘‘இல்லைப்பா இவதான் சிஸ்டம் ப்ரொக்ராமர். நான் ஆர்கிடெக்ட். ரெண்டு பேரும் போகணும்.’’

‘‘சரி நல்லபடியா போய்ட்டு வாங்கோ. அது என்ன எடம்?’’

‘‘ஸான் ஹோஸே, சாக்ரமெண்ட்டோன்னு ரெண்டு எடத்தில், கலிஃபோர்னியாலப்பா’’.

‘‘அங்க அம்மாவாசை தர்ப்பணம் பண்ணி வெக்கறவா யாராவது நம்மவா இருக்காளா? விஜாரி, தர்ப்பையைத் தூக்கிண்டு வந்துர்றேன். என்னால இனிமே அடி தாங்கமுடியாது’’ என்றார்.

கலைச்செல்வியின் கண்ணீர் அவர் மணிக்கட்டில் உருண்டது.

——————————————————————————————————————————————–

ஜோதியும்-ரமணியும் சில்வியா குறுநாவலுடன் இடம் பெற்றுள்ள ஏழு புதிய சிறுகதைகளில் ஒன்று.

இத்தொகுப்பில் உள்ள மற்ற ஆறு சிறுகதைகள்…

கொல்லாமலே
ஏழையின் சிரிப்பு
திருப்பங்கள்
மற்றொரு பெண் ஜனனம்
துர்கா
ஜோதியும்-ரமணியும்
சில்வியா குறுநாவலும் ஏழு புதிய சிறுகதைகளும் அடங்கியது இத்தொகுப்பு. சுஜாதாவின் கதைகளின் ஆதார குணமான நுண்ணிய அவதானிப்புகளும் சமகால வாழ்வை புதிய கோணத்தில் எதிர்கொள்ளும் பாங்கும், வாழ்வின் வினோதங்கள், அபத்தங்கள் குறித்த சித்திரங்களும் நிறைந்தவை இக்கதைகள்.

(குமுதம் 03.01.2007)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *