கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 17, 2014
பார்வையிட்டோர்: 13,916 
 
 

நியூயார்க்.

விண்ணை முட்டும் கட்டிடங்கள், பனி படர்ந்த சாலைகள், விரைந்தோடும் கார்கள்.

பார்த்துப் பார்த்து ஒரு சேலையை வாங்கிக் கொண்டிருந்தான் ரகு. பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாய் அந்த சேலையை எடுத்துக் கொண்டான்.

“ம்ம்.. அம்மாவுக்கு இது நல்லா இருக்கும் இல்லையா ஜெனி?“ – மனைவியைக் கேட்டான்.

ஆமாம் என்பதுபோல தலையசைத்தாள் அவள்.

அந்த சேலையை வாங்கிக் கொண்டு நேராக ,ஏர்போர்ட் நோக்கி விரைந்துக் கொண்டிருந்தது ரகுவின் கார்.

“நீயும் என்கூட வரலாமே ஜெனி? நீ தான் அம்மாவைப் பாத்ததே இல்லையே?” .

“தேவையில்லை” – சட்டென்று வந்தது அவள் பதில்.

அவளிடம் பேசி பயனில்லை என்பதால் அவன் ஒன்றும் சொல்லவில்லை.

கிட்டதட்ட எட்டு வருஷம் கழித்து அம்மாவைப் பார்க்கச் செல்கிறான் ரகு. அம்மா மேல் கொள்ளை பிரியம் அவனுக்கு. ஆனால் அதே அளவு இருந்த கோபத்தால் இத்தனை காலமும் அவளைப் பார்க்காமல் இருந்தான் .

ஜெனியின் பிடிவாதமும் அதற்கு ஒரு காரணம். இதோ இத்தனை வருடம் கழித்து மீண்டும் அம்மாவைப் பார்க்க ஒரு வாய்ப்பு.

ஏர்போர்ட்டில் இறங்கிக் கொண்டு ஜெனிக்கு விடை கொடுத்தான்.

ப்ளைட்டில் தனது இருக்கையைத் தேடி அமர்ந்தான். பளிங்குச் சிலைப் போல் இருந்த பணிப்பெண் கொடுத்த சாக்லேட்டையும் , ஜூஸையும் சாப்பிட்டுக் கொண்டே கண்ணையர்ந்தான்.

ரகுவின் அம்மா வள்ளி. அவன் பிறந்த இரண்டு மாதத்திலேயே கணவனைப் பறிக் கொடுத்தவள். சொந்தங்கள் எவ்வளவோ சொல்லியும் மறுமணம் செய்துக் கொள்ளாமல் ரகுவுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவள்.

“ஏம்மா அவன் விதி போய் சேந்துட்டான். இந்த சின்னப் புள்ளையை வச்சிக்கிட்டு நீ கஷ்டப்படனுமா? பேசாம இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோயேன்”- அவளுடைய அண்ணன் சொன்னார்.

“இல்லைண்ணா. எனக்கு ரகு இருக்கான். அவனுக்கு நான் இருக்கேன். இது போதும் எனக்கு”

“உன் இஷ்டம்மா”.

தன்னோட சொந்த கிராமத்தில் தன் அண்ணன் வீட்டிலேயே மகனுடன் இருந்தாள் வள்ளி. ஆனால் சுய சம்பாத்தியத்தில் வாழ வேண்டுமென விரும்புபவள். தனக்கு இருந்த சிறிது நிலத்தில் விவசாயம் பார்த்தும், தையல் வேலை செய்தும் ரகுவை வளர்த்தாள் . ஒரே பிள்ளை என்பதால் அதிகச் செல்லம் கொடுத்து, அவன் எதை கேட்டாலும் எப்பாடு பட்டாவது வாங்கிக் கொடுத்து விடுவாள்.

வள்ளியின் அண்ணனுக்கு ஒரு மகள் ராஜி. ரகுவை விட இரண்டு வயது இளையவள். அவளுக்கு வள்ளி என்றால் உயிர். அத்தை, அத்தை என ஆசையாகச் சுற்றி வருவாள். ரகுவும் அம்மா மேல ரொம்பா பாசமா இருந்தான். ஒரு நொடி கூட அவளைப் பிரிய மாட்டான்.

“அம்மா நான் பெருசானவுடனே உனக்கு என்னல்லாம் வாங்கி தருவேன் தெரியுமா?”

“என்ன கண்ணு வாங்கித் தருவ?”

“புடவை , நகை , சாக்லேட், பிஸ்கட் எல்லாமே வாங்கி தருவேன் “.

“என் ராசா!. அம்மாவுக்கு எதுவும் வேணாம்பா. நீ இப்படியே பாசமா இருந்தா அது போதும் கண்ணு.. ”

“சரிம்மா”.

எந்த நிலையிலும் அப்பா இல்லாத குறை தெரியாமல் பார்த்துக் கொண்டாள். ரகுவும் நன்றாக படித்தான். பள்ளி இறுதித் தேர்வில் மாவட்டத்திலேயே முதல் மாணவனாக வந்தான். வள்ளிக்கு பெருமை தாங்க முடியவில்லை. எல்லார்கிட்டையும் சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டுக்கிட்டா

“எம்புள்ள தான் எல்லார்க்கும் மேலயாம். தெரியுமா ராக்காயி?”

“உம்புள்ள எப்பவுமே டாப்பு தான்த்தா”

“முதல்ல மாரியாத்தாளுக்கு தீ மிதிக்கணும்”- தலை கால் புரியவில்லை வள்ளிக்கு.

பொறியியல் படிக்க விரும்பினான் ரகு. ஆனால் அதிகச் செலவாகும் என்பதால் வள்ளி சிறிது தயங்கினாள். பிறகு அவள் அண்ணன் தான் கடன் வாங்கி அவனை படிக்க வைத்தார்.

“ரொம்பா செலவாகுமேண்ணா . நீயே ஒத்த பொட்ட புள்ளைய வச்சிக்கிட்டு கஷ்டப்படற, இப்ப இவனுக்காகவும் கஷ்டப்படணுமா?”

“அட நீ சும்மா இரு வள்ளி, புள்ள படிப்ப விட எது முக்கியம். நான் பாத்துக்கறேன் விடு.”

பக்கத்து பட்டணத்தில் உள்ள ஒரு பெரிய கல்லூரியில் ரகுவுக்கு இடம் கிடைத்தது. கல்லூரி பேருந்து அவன் ஊருக்கும் வருவதால் மிகவும் வசதியாக போனது.

அண்ணன் மகள் ராஜிக்குக்கு ரகுவை கட்டி வைக்க வள்ளிக்கு ஆசை. அவள் அண்ணனுக்கும் இதில் சம்மதந்தான். படிப்பு முடிந்து நல்ல வேலைக் கிடைத்ததும் கல்யாணத்தை முடிச்சிடலாம்னு இருவரும் பேசி வைத்துக் கொண்டனர்.

நாலு வருடம். மின்னல் போல சென்று விட்டது. இதோ படிப்பை முடித்து ரகுவிற்கு ஒரு பெரிய நிறுவனத்தில் வேலையும் கிடைத்து விட்டது. வள்ளி, அவள் அண்ணன், ராஜி எல்லார்க்கும் இதுல சந்தோஷம் தான். ஆனால் ஒரே கவலை வேலை அமெரிக்காவில் என்பது தான்.

“அவ்ளோ தூரம் உன்னை விட்டுட்டு நான் எப்படிம்மா தனியா போறது. நீயும் வந்துடு என்கூட” – கெஞ்சினான் ரகு.

“இல்லை கண்ணு! இந்த ஊரு, மாமா, ராஜி , நம்ம வீடு, நிலம் இதெல்லாம் விட்டுட்டு என்னால் வர முடியாது. அது மட்டுமில்லாம அந்த ஊரெல்லாம் எனக்குச் சரிப்பட்டு வராதுப்பா. நீ போய் வாய்யா. ” என வள்ளிச் சொல்ல கண்ணீர் மல்க ப்ளைட் ஏறினான் ரகு

ரகு இல்லாமல் வள்ளியால் இருக்க முடியவில்லை. தினமும் அவன் போனுக்காக தூங்காமல் காத்திருந்து அவனுடன் பேசிய பிறகு தான் தூங்குவாள். ரகு மீது இருந்த பாசத்தை அப்படியே தன் நிலத்தில் காட்டினாள். முன்பை விட அதிக சிரத்தையுடன் வேலை செய்தாள். ஏன் இப்படி உடம்பைக் கெடுத்துக்கிட்டு வேலை செய்யறனு அவள் அண்ணன் திட்டியதைக் கூட பொருட்படுத்தவில்லை. அவ்வளவு பாசம் தன் நிலத்தின் மீது.

ஒவ்வொரு முறை ரகு ஊருக்கு வரும்போதும் அம்மாவை தன்னுடன் வரும்படி கூப்பிடுவான் ரகு. ஆனால் பிடிவாதமாக மறுத்து விடுவாள் வள்ளி.

இந்த முறை அவன் ஊருக்கு வரும்போது அவனுக்கும் ராஜிக்கும் கல்யாணத்தை முடிச்சிடலாமென நினைத்தாள். ஆனால் ரகுவின் எண்ணமோ வேறு மாதிரியிருந்தது.

ஊருக்கு வந்து எல்லாரிடமும் நலம் விசாரித்தப்பின் அம்மாவை தனியாக அழைத்துக்கொண்டு வெளியில் வந்தான்.

“அம்மா உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்மா ”

“நானும் உங்கிட்ட ஒன்னு சொல்லனும் கண்ணு”

“என்னம்மா சொல்லு”

“நம்ம ராஜிக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி வெச்சுடலாம்னு நானும் மாமாவும் ஆசைப்படறோம். அதான் எப்ப முகூர்த்தம் வச்சிக்கலாம்னு சொல்லுப்பா”

“இல்லைம்மா எனக்கு இதுல இஷ்டமில்லை”.

“ஏன் ரகு?”

“என்கூட வேலைப் பாக்கற ஜெனிங்கற பொண்ண எனக்குப் புடிச்சிருக்கு. அவளையே கட்டிக்கலாம்னு இருக்கேன்”

“என்னது வெள்ளைக்காரியா? நம்ம வீட்டுக்கா? ஒருக்காலும் இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்.” – முதல் முறையாக ரகு கேட்டதுக்கு மறுப்புச் சொன்னாள் வள்ளி.

“இல்லைம்மா அவ ரொம்ப நல்ல பொண்ணு, பெரிய வசதியான குடும்பம். அதுமட்டுமில்லாம அவளைக் கட்டிக்கிட்டா அந்த ஊரு சிட்டிசன்ஷிப்பும் ஈசியா கிடைச்சிரும்.

“உன்னை படிக்க வச்சு ஆளாக்கின உங்க மாமாவை விட அந்த வெள்ளைக்காரி உனக்கு பெரிசா போய்ட்டாளா?”

“எனக்கு என் வாழ்க்கைதான் முக்கியம். ஒழுங்கா நீயும் எங்கூட வந்துடு. மூனு பேரும் சந்தோஷமா இருக்கலாம்.”

“முடியவே முடியாது. நீ அவளைக் கட்டிக்கிட்டா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்”

இப்படியாக வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் “ இனி எந்த காலத்துலயும் என் மூஞ்சில முழிக்காதன்னு வள்ளி சொல்ல , அன்று கோபித்துக் கொண்டு போனவன் திரும்பி வரவேயில்லை. வள்ளியும் அவள் அண்ணனும் எவ்வளவோ முயற்சித்தும் அவனை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அந்த துக்கம் தாளாமல் வள்ளி படுத்த படுக்கையாகி விட்டாள். ராஜி தான் அவளைக் கவனித்துக் கொண்டாள்.

ரகு ஜெனியை மணந்துக் கொண்டு, சிட்டிசன்ஷிப்பும் வாங்கி அமெரிக்காவில் செட்டிலாகி விட்டான். இத்தனை வருடத்தில் பலமுறை அம்மாவைப் பார்க்க ஆசை வரும். கூடவே அவள் பேசிய வார்த்தைகளும் ஞாபகம் வர அப்படியே விட்டு விடுவான். அதையும் மீறி ஆசை வந்தால் ஜெனியின் பிடிவாதம் அதைத் தடுத்து விடும்.

அம்மாவைத் தவிக்க விட்டு வந்த பாவமோ என்னவோ குழந்தைப் பாக்கியம் மட்டும் அவர்களுக்கு வாய்க்கவேயில்லை. எட்டு வருடம் ஓடி விட்டது. இப்பொழுது தான் ஊருக்கு வருகிறான்.

சென்னை ஏர்போர்ட்.

லக்கேஜ் எடுத்துக்கொண்டு வெளியே வந்து ஒரு டாக்சி பிடித்து தன் ஊருக்கு வந்து இறங்கினான். இத்தனை வருஷத்துல அந்த கிராமம் எவ்வளவோ மாறியிருந்தது. பாதி வயல்வெளிகள் காணாமல் போய் ரியல் எஸ்டேட் ப்ளாட்களாக மாறியிருந்தது.

தான் படித்த பள்ளி, விளையாடிய இடங்கள் என அனைத்தையும் பார்த்துக் கொண்டு வந்தான். அந்த இடங்கள் எல்லாவற்றிலும் அம்மாவினுடைய ஞாபகங்கள் நிறைந்திருந்தது. தன்னுடைய நிலத்தை பார்த்ததும் வண்டியை நிறுத்த சொல்லி இறங்கினான். கீழே குனிந்து ஒரு பிடி மண்ணை அள்ளினான்.

“இந்த மண்ணு மேல தான அம்மா உசுரையே வச்சிருந்தா, இதுக்காக தானே எங்கூட வராம இந்த ஊருலையே இருக்கணும்னு ஆசைப்பட்டா. இதுல தான் என் உசுரே இருக்குனு சொல்லுவியேம்மா” என நினைத்து அந்த மண்ணை நெஞ்சில் பூசிக் கொண்டான்.

வீட்டுக்கு சென்றான். அந்த வீடு மட்டும் எந்த மாற்றமுமில்லாமல் அப்படியே இருந்தது. அம்மாவின் தையல் மெஷின் , தன்னுடைய பழைய சைக்கிள், சட்டை , விளையாட்டு பொருட்கள் எல்லாம் ஒரு ஓரமாக கிடந்தது.

உள்ளே சென்றான்.

ஹாலில் ஒரு ஓரமாக கட்டிலில் படுத்திருந்தாள் அம்மா. அருகே சென்று அவள் முகத்தைப் பார்த்தான்.

“அப்பப்பா! முகத்தில் எவ்வளவு கவலை ரேகைகள். எல்லாம் தன்னால்தானே” என யோசித்து மெல்ல குனிந்து நெற்றியில் முத்தமிட்டான். உழுது, உழுது கடினமாகியிருந்த அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு தடவிக் கொடுத்தான். பின் தான் வாங்கி வந்த சேலையை அவளுக்கு போர்த்தி விட்டான்.

நீண்ட நேரம் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான்.

அப்பொழுது அங்கு வந்த அவன் மாமா “ யெய்யா ரகு அம்மாவைப் பார்த்தியாப்பா, எப்படி நொடிச்சுப் போயிருக்கா பாரு! எப்பவுமே உன்னைப் பத்தி தான் பேசிட்டிருப்பா. புள்ளையைப் பாக்கணும் பாக்கணும்னு தவிச்சிட்டு இருந்தா. பாவி மக! என்னைக்காச்சு நீ வந்துடுவன்னு ரொம்ப நம்பிட்டிருந்தா. கடைசியில அவ சாவுக்குத் தான் நீ வர மாதிரி ஆயிடுச்சு பாத்தியா” – கதறினார் மாமா.

“தப்பு பண்ணிட்டேன் மாமா. என் சுய நலத்தால தான இவ்வளவும். எத்தனையோ தடவ அம்மாவை பாக்கனும்னு தோணுச்சு ஆனா பாழாய்ப்போன என் வீராப்பால நானே எங்கம்மாவை கொன்னுட்டனே!, கடைசியா என் முகத்த பாக்கற பாக்கியத்த கூட நான் குடுக்கலையே. ஐயோ நான் பாவி மாமா நான் பாவி, எனக்கு மன்னிப்பே கிடையாது”. – நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதான் ரகு.

அவனுடைய கண்ணீரில் அவள் முகம் நனைந்தது. அவள் ஆத்மாவும் கூட..

4 thoughts on “அம்மா…

  1. “என்னைக்காச்சு நீ வந்துடுவன்னு ரொம்ப நம்பிட்டிருந்தா. கடைசியில அவ சாவுக்குத் தான் நீ வர மாதிரி ஆயிடுச்சு பாத்தியா”…

    — ” எல்லோருடைய ammaum காத்துகிட்டு இருக்காங்க. அனால் பிள்ளைகள் எல்லா வாய்ப்பையும் “மிஸ்” பண்ணிட்டு கடைசியில் அம்மாவை “மிஸ்” பண்றாங்க !!! …

    உணர்வுள்ள நல்ல கதை ..

  2. கதை, ஆத்மார்த்தமான உணர்வுகளுடன் அழகிய சோக கவிதையாய் இருப்பதென்னவோ நிஜம். ஆம் கதை அல்ல “கவிதை”! நாளும் உயர்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *