அம்மாவைத் தேடி…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 9,191 
 
 

வான்கூவரிலிருந்து ஆறு ஆண்டுகள் கழித்து சென்னை வந்திருந்தான் ஸ்ரீராம். கூடவே அவன் மனைவி அகிலா, வெள்ளை நிற ஜில்லி நாய்க்குட்டி, ஐந்து வயது மகன் கெüசிக். விமான நிலையத்தில் பூச்செண்டு கொடுத்து அவனது மாமியாரும், மாமனாரும் வரவேற்றனர்; கை குலுக்கினர். கெüசிக்கை தூக்கி வைத்து முத்தம் கொடுத்து சாக்லெட் கொடுத்தனர். அகிலாவிற்குத் தன் பெற்றோரைக் கண்டவுடன் ஆனந்தம் பிடிபடவில்லை.

காரில் ஏறியதிலிருந்து கதை கதையாய் கனடா வாழ்க்கையைச் சொல்லிக் கொண்டே வந்தாள். தான் பார்க்கும் வேலை, கணவன் சம்பளம், கெüசிக்கின் படிப்பு, வாழ்க்கை முறை, நவராத்திரிக்கு வைத்த கொலு, சுண்டல், கெüசிக்கின் மழலைத்தமிழ், சுதா ரகுநாதன் கச்சேரி என வாய் ஓயாமல் வர்ணித்துக் கொண்டே வந்தாள். அவளது பெற்றோர் திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டே வந்தனர். முன்னிருக்கையில் அமர்ந்து புன்சிரிப்புடன் கேட்டுக் கொண்டே வந்தான் ஸ்ரீராம். தன் மனைவி கண்ணிலே குழந்தையின் குதூகலத்தைப் பார்க்க அவனுக்கு சந்தோஷமாக இருந்தது.

அம்மாவைத் தேடி

வழியில் சாலையில் இருந்த ஒரு சிறு குழியில் கார் இறங்கி, குலுங்கி ஏறியது. அந்த அசைவில் அகிலா மடியில் கண்ணயர்ந்திருந்த ஜில்லி விழித்துக்கொண்டது.

“”ச்சோ! ச்சோ! நீ தூங்குடா செல்லம். என்னப்பா இந்தூரு ரோட்டுக்கு விடிமோட்சமே கிடையாதா? வான்கூவரில் வந்து பாருங்கோ! வெண்ணையாட்டமா வழுக்கிக் கொண்டே போகும். ஓர் ஆடல், அசங்கல் இருக்காது”

“அப்படி இல்லேடி, இப்ப பேஞ்ச மழை வெள்ளத்துலதான் இத்தனை மோசமா…”

“ஆமா, நொண்டி மாட்டுக்கு சறுக்கினது சாக்கு! ப்ச்!”

அரை மணி நேரப் பிரயாணத்தில் கார் அகிலா அப்பா வீட்டை அடைந்தது. உயரமான மதில் சுவரும், பெரிய இரும்புக் கதவும், புல்வெளியும், பூந்தோட்டமும், கிரானைட் நடை தளமும், ராஜ நிலைக் கதவுமாக அம்மாளிகை அங்குல அங்குலத்திலும் பணக்கார சொகுசை பறைசாற்றிக் கொண்டிருந்தது.

அகிலாவின் அம்மா சீதளா உள்ளே ஓடி, வேலைக்காரி தயாராய் கரைத்து வைத்திருந்த ஆலக்கரைசலில் கற்பூரம் ஏற்றி, அனைவரையும் கிழக்கு முகமாய் நிற்க வைத்துக்காட்டி, திலகமிட்டு, உள்ளுக்கழைத்தாள்.

குளித்து, சாப்பிட்டு, வாங்கி வந்திருந்த லாப்டாப், பிளாட்டினம் பதித்த வளையல், செல்போன், டிஜிட்டல் கேமிரா, ஸ்வெட்டர், சாக்ஸ், சென்ட் பாட்டில் எனக் கூடம் முழுக்க கடை பரப்பு, வீடு முழுவதும் கண் விரியப் பார்த்தது.

மாமியார் முகத்தில் புளகாங்கிதத்தைக் காண ஸ்ரீராமிற்கும் சந்தோஷமாய் இருந்தது. விதவிதமாய் விருந்துபசாரணை நடந்தது. காஞ்சிபுரம் சென்று, ஆர்டர் கொடுத்து, ஒரே மாதிரி டிசைனில் ஒன்பது புடவைகள் வாங்கினான். மனைவி வழி உறவினர்கள் வீடுகளுக்கு விருந்துக்குச் சென்றபோது வெள்ளித் தட்டுடன் சேர்த்து வைத்துக் கொடுத்தான். பத்து நாட்கள் ஓடியதே தெரியவில்லை.

பதினோராம் நாள் ஸ்ரீராம் தன் மனைவி முன்போய் நின்றான்.

“”என்ன ஸ்ரீ” என்றாள் அகிலா.

“ம், அது வந்து…’

“சொல்லுங்க ஸ்ரீ என்ன தயக்கம்?”

“எங்க அம்மாவை ஓர் எட்டு போய் பார்த்துட்டு வரலாம்னு…”

“…”

“என்ன அகில், பதிலே இல்லை?”

“என்ன சொல்லணும்? ம்?”

“”ஏதாவது சொல்லேன்?”

“உங்கம்மா, உங்களுக்குத் தோணித்துன்னா போய் பார்க்கறது தானே! யார் வேண்டாங்கறா?”

“நீ?”

“நான் வரலே. ரெண்டு நாளா ஜில்லி சரியாவே சாப்பிடலை. ஆக்டிவ்வா இல்லாம, சுருண்டு சுருண்டு தூங்கறது. அதை நாளைக்கு டாக்டர் கிட்ட அழைச்சிட்டுப் போய் பார்க்கணும்”

“அப்ப நாளன்னிக்குப் போவோமா அம்மாவைப் பார்க்க?”

“அன்னிக்கு, ராமசேஷன் அவர் வீட்டுக்கு கூப்பிட்டிருக்கார். மறுநாள் அம்மா திருநீர்மலை போகணும்னா. அடுத்தது திருப்பதி, காளஹஸ்தி, பத்ராச்சலம்னு மூணு நாளைக்குப் புரோக்கிராம் போட்டாச்சு”

“என்ன பண்ணலாம்?”

“அவசியம் பார்த்தே ஆகணுமா?”

“என்ன இப்படி கேட்டுட்டே? பெத்த தாயார்!”

“இல்லேங்கலே. அவங்களுக்கு செய்ய வேண்டியது அத்தனையும் செஞ்சுட்டுத் தானே போனோம். டி.வி., ஃபேன், படுக்கை வசதி, சாப்பாடுன்னு சகல வசதியும் நிறைஞ்ச ஆஸ்ரமமாப் பார்த்துதானே தங்க வச்சோம்? பத்து வருஷத்துக்கு மூணு லட்சத்தை மொத்தமா, டெப்பாசிட் பண்ணிட்டு தானே கனடா போனோம்? யார் செய்வா இப்படி? இன்னும் நாலு வருஷப்பணம் பாக்கி இருக்குமே? இத்தனை அட்வான்ஸô கடமையை செய்தது நாமளாத்தான் இருப்போம்”

“வாஸ்தவம்தான்”

“நான் ஒண்ணும் சுய பேரீகை கொட்டிக்கலை. இந்தக் காலத்துல எந்தப் புள்ளையும் மருமகளும் செய்வா இத்தனை?”

“சரி, சரி அதோட ஒரு நிமிஷம் போய் எட்டிப்பார்த்துட்டு வந்துட்டோம்னா ஒரு கடன் தீர்ந்தது. என்ன?”

ஸ்ரீராமின் நச்சரிப்புக்காக அரை மனதாய்ச் சம்மதித்தாள் அகிலா.

மறுநாளே குழந்தையைத் தூக்கிக் கொண்டு காரில் புறப்பட்டனர். போகும் வழியில் மனைவியின் முகத்தைப் பார்த்துப் பார்த்துப் இரண்டு ஆரஞ்சுகளும், ஒரு சீப்பு வாழைப் பழமும் வாங்கினான்.

அகிலா வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.

“எங்க அப்பா விட்டுட்டு ஓடும்போது எனக்கு எட்டு வயசு. அவல் இடிச்சு, அப்பளமிட்டு, சீர் முறுக்கு, கல்யாண பட்சணம் செய்து….அப்பப்பா கொஞ்சம் கஷ்டம்படலை எங்கம்மா என்னை வளர்க்க, பாவம்!” என்றான் தன்னை மறந்து.

“எந்த அம்மாதான் படலை கஷ்டம். பிள்ளைக்காக கஷ்டப்படறவ தான் அம்மா. இதுல என்ன புதுசு? பாவமாம் பாவம்! ஏறுங்கோ வண்டீல. சீக்கிரம் போய் தொலைச்சிட்டு வரணும் சுருக்க. எங்கம்மா இன்னிக்கு அக்கார வடிசிலும் ஆமை வடையும் தன் கையாலே பண்றா! தள்ளாத வயசுல கஷ்டப்படுவாள் ஒண்டியா பாவம்!”

பூம்பூம்மாடாய் தலையாட்டிக்கொண்டே ஏறினான் ஸ்ரீராம். கார் முதியோர் இல்லம் நோக்கி விரைந்தது.

***

“என்ன சொல்றீங்க? கொஞ்சம் நல்லா பாருங்க ரிஜிஸ்டரை” என்றான் ஸ்ரீராம் சத்தமாய். அவனுக்குப் படபடப்பாய் வந்தது. கைக்குட்டையால் வியர்வையைத் துடைத்துக்கொண்டான்.

“சாரி சார். நாங்க எத்தனையோ சொல்லியும் அவங்க கேட்கலை. நீங்க 21.08.2005 அன்னிக்கு இங்க விட்டுட்டுப் போனீங்க. ஒரே ஒருநாள் இங்க இருந்தாங்க. அடுத்த நாள் விடியற்காலையிலேயே புறப்பட்டு போயிட்டாங்க”

“நீங்க ஏன் எனக்கு உடனடியா தெரிவிக்கலை?”

“எப்படி சார்? வந்தீங்க. சேர்த்துவிட்டீங்க. நாங்க கனடா போறோம். போய் லெட்டர் போடறேன். புது முகவரியை அதுல தெரிவிக்கறோம்னீங்க. இன்னி தேதி வரைக்கும் ஒரு லெட்டர் போட்டீங்களா? அதை விடுங்க. ஒரு ஃபோன் கால்… என்ன பெறும்? பெத்த தாய். என்னவோ கடமை முடிஞ்சதுங்கிற மாதிரி கை கழுவிட்டு போய் இப்ப வந்து ரொம்ப பொறுப்பா கத்துறீங்களே?” என்றார் தாளாளர்.

“பணம் பத்து வருஷத்துக்கு உண்டானதை முள்ளங்கி பத்தையாட்டமா மொத்தமா கட்டினோமே? யார் செய்வா?” என்றாள் அகிலா காட்டமாய்.

“இதோ பாரம்மா, அந்த வேதவல்லி அம்மா உங்க பணத்தை புறங்கையால கூட சீண்டலை. ஒருநாள் தங்கி இருந்தாங்க. ஒரு வேளை சாப்பாடும், ஒரு வாய் காப்பியும் குடிச்சாங்க. அதுக்கு உண்டானதை நாங்க வாங்க மறுத்தும், கட்டாயப்படுத்தி தன் கையிலேர்ந்து கொடுத்துட்டுப் போயிட்டாங்க. உங்க பணத்தை மறுநாளே பேங்கல போட சொல்லிட்டாங்க. நீங்க வந்தா ஒப்படைச்சுட சொல்லிட்டாங்க. வட்டியோட உங்க பணம் பேங்க்ல பத்திரமா இருக்கும்மா, அகிலாம்மா!” என்று ஆஸ்ரமக் காப்பாளர் பொட்டில் அறைவதுபோல் சொன்னார்.

அகிலா முகம் சிறுத்துவிட்டது. விடுவிடுவென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய் காரில் ஏறிக்கொண்டாள். ஸ்ரீராமிற்கு உடம்பு கிடுகிடுவென்று நடுங்கிற்று. தான் அனாதை ஆகிவிட்டதைப் போன்ற எண்ணமும், கூடவே பயமும் வந்தது.

“குற்றம் செய்துவிட்டோமோ?” என்ற குறுகுறுப்பு,முதன்முதலாய் முள்ளாய்க் குத்த ஆரம்பித்தது.

“என்ன சார், பெத்த தாயாரை இப்படி நிர்கதியா விட்டுட்டீங்க?” என்பதுபோல் தாளாளர் பார்த்த பார்வையில் அவமானம் பிடுங்கித் தின்றது.

“எங்கே போறேன்னு ஏதேனும் ஏதேனும் சொல்லிட்டுப் சொன்னாங்களா?”

“தஞ்சாவூர் பக்கம், தன் பூர்வீக கிராமத்துக்குப் போறதாச் சொன்னாங்க!”

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு தளர்வாய் நடந்து வந்தான் ஸ்ரீராம் காரை நோக்கி.

“ஆமடையான் அகத்தை விட்டு ஓடினார். பொண்டாட்டி ஆஸ்ரமத்தை விட்டு ஓடினா. நல்ல பொருத்தம். ஓடுகாலி குடும்பம்ன்னா அது உங்க குடும்பத்துக்குதான் சரியாப் பொருந்தும்” என்றாள் அகிலா அலட்சிய சிரிப்புடன்.

ஸ்ரீராம் அதை ரசிக்கும் மனநிலையில் இல்லை.

“இத்தனை லட்சம் கட்டினதுக்கு பட்டை நாமத்தை கொழைச்சு பறக்க சாத்திட்டு பறந்துட்டா ஒங்க அம்மா!”

“சித்த சும்மா இரு. டிரைவர் நேரா தஞ்சாவூர் விடப்பா. அங்கேர்ந்து ஒரு மணி நேரத்துல போயிடலாம் கிராமத்துக்கு”

“என்ன?” உக்கிரமாய் கேட்டாள் அகிலா. ஸ்ரீராம் ஒன்றும் சொல்லாமல் வேறுபக்கம் முகத்தை திருப்பிக் கொண்டான். கார் தஞ்சாவூர் நோக்கி போக ஆரம்பித்தது.

அவனுக்குத் தன் தாயை உடனடியாகப் பார்த்து, ஓரிரு வார்த்தை பேசினால்தான் குறுகுறுப்பு அடங்கும் போலிருந்தது. அம்மா அங்கு எப்படி இருக்கிறாளோ? என்ன கஷ்டப்படுகிறாளோ?

கணவன் விட்டு விட்டு ஓடியபொழுதுகூட உரமாய் இருந்தவள். உறுதியுடன் பிள்ளையை வளர்த்தவள். பிள்ளை ஆசைப்பட்டபடியே பெரிய இடத்து பெண்ணைக்கட்டி வைத்தாள். பணக்கார சம்பந்தம் கிடைத்துவிட்டது என்பதற்காகப் பல்லைக் காட்டிக் கொண்டு நின்றவளில்லை. ஒருமுறை கூட சம்பந்தி வீட்டுப் படியை மிதித்ததில்லை.

சுய கெüரவமும், மரியாதையும் கொண்டவள். கிராமத்து வீட்டை விட்டு வர மறுத்தவளை, ஸ்ரீராம் தான் பிடிவாதமாகக் கொண்டுவந்து முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு வெளிநாடு சென்றான். தாயாரைப் பத்திரமான இடத்தில் ஒப்படைத்து, கடமையைச் சரியாகச் செய்துவிட்டு சென்றதாகத்தான் இத்தனை நாளும் நம்பினான்.

இப்பொழுதான் தவறு செய்துவிட்டோமோ? அம்மா மிகுந்த மனவேதனையுடன் போயிருக்கிறாளோ என்ற ஐயம் ஏற்பட்டது. எப்படி இருக்கிறாளோ? ஒரு வேளை, இல்லையோ? ஐயோ, நினைக்கவே பயமாய் இருந்தது அவனுக்கு. “கடவுளே! எதுவும் நேர்ந்திருக்கக்கூடாது’ என்று வேண்டிக் கொண்டே பயணித்தான்.

“கரிய வழிச்சு பூசினவாள, கரிசனத்தோட போய்ப் பார்க்கறது ரொம்ப அவசியம்தான்! எப்ப நம்ம சொல்லுக்குக் கட்டுப்படலையோ, விட்டுத் தள்ள வேண்டாமா? வலுவிக்க போய்ப் போய் ஈஷிக்கணுமா? என்னத்தையோ குளிப்பாட்டி நடுவீட்ல வச்சாலும், அது வாலக் கொலச்சிண்டு வீதிக்குதான் போகுமாம். போனதைத் தொலைச்சு தலை முழுகாம தேடிப் போறாராம், தேடி. இழுத்துக்கோ, பறிச்சுக்கோன்னு கெடக்கப்போறது. புள்ளயப் பார்த்ததும் ஒட்டுப் புல்லாட்டமா தொத்திக்கப் போறது. எல்லா கர்மாந்தரமும் நம்ம தலையில் விடியப் போறது. யார் கட்டி சொமக்கறது? தேவையா இது? ஐயோ! ராமா ராமா!” மனைவி வாய் ஓயாமல் புலம்பிக்கொண்டே வந்தாள். ஸ்ரீராம் எதுவும் கண்டு கொள்ளவே இல்லை. கார் விரைந்து கொண்டிருந்தது. கனமான மெüனத்துடன் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது.

நண்பகல் வாக்கில் தஞ்சாவூர் வந்தது. “”சாப்பிடுகிறாயா?” என்று கேட்டதற்கு அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். இவனுக்கும் பசி இல்லை. டிரைவரை சாப்பிடச் செய்து, குழந்தைக்குப் பாலும், பிஸ்கெட்டும் வாங்கிக் கொண்ட பின் பயணம் தொடர்ந்தது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் கிராமம் வந்துவிட்டது. சுழித்தோடும் வெண்ணாறும், மூங்கில் தோப்பும், தலை சாய்ந்த கதிரும் பழைய பரவசத்தை ஏற்படுத்தின. நீர் தெளித்து, போடப்பட்டிருந்த சாயங்காலக் கோலத்தில் பன்னீர் பூக்கள் உதிர்ந்திருந்தன.

வீட்டு கருங்கற்படியை மிதிக்கும்போது கோயில் படிக்கட்டுகளில் ஏறுவது போல் ஒரு சிலிர்ப்பு.

பெரிய திண்ணையில் நாலைந்து பாட்டிகள் அமர்ந்து வட்ட வட்டமாய் அப்பளமிட்டுக் கொண்டிருந்தனர். பிரண்டை வாசமும், சீரக வாசமும், விளக்கெண்ணெய் கலந்த உளுந்து வாசமும் நாக்கில் ஜலம் ஊற வைத்தது. திண்ணையில் மறுபாதியில் ஒரு பெண் பெரிய பாத்திரத்தில் குங்குமம் கலந்து கொண்டிருக்க, இரண்டு பெண்கள் அள்ளி வைத்து பாக்கெட் போட இரண்டு கைகள் ஒட்டிக்கொண்டிருந்தன.

உள்ளே கல்யாண கூடத்தில் பெண்கள் உட்கார்ந்து விதவிதமாய் ஆரத்தி தட்டுகள் தயார் செய்துகொண்டும், கூடை பின்னிக் கொண்டும், தையல் தைத்துக் கொண்டும், கைவினைப் பொருள்கள் செய்து கொண்டும் இருந்தனர்.

பக்கவாட்டு நீண்ட அறையில் சீராய்ப் போடப்பட்ட படுக்கைகளில் நான்கைந்து முதியோர் படுத்திருந்தனர். பின்கட்டில் சமையல் நடந்துகொண்டிருந்தது. வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஏதோ ஒரு வேலை நடந்துகொண்டு இருந்தது.

ஸ்ரீராம் மலைத்து நின்றான்.

“என்ன சார் வேணும்? யாரைப் பார்க்கணும்?” என்றாள் க்ரோஸô – கூடை பின்னிக்கொண்டிருந்த பெண்.

“இது என்ன விடுதியா? ஆஸ்ரமமா? சிறுதொழில்கூடமா? என்னம்மா நடக்குது இங்க?”

“சார் இது வீடுதான். இங்க அனாதைப் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், வயதானவங்க என்று அத்தனை பேரும் ஒரே இடத்துல இருக்கோம். சந்தோஷமா நம்பிக்கையோட வாழறோம். எங்களுக்கும் இடமிருக்கு; மனுஷங்க அன்பு செலுத்த இருங்காங்கன்னு ஒரு ஒட்டுதலும் பிடிப்பும் ஏற்படுத்தி இருக்காங்க எங்க அம்மா.”

“பகல்ல உழைக்கிறோம். சாயங்காலம் ஆனா பாருங்க. ஒரே பாட்டும் கூத்தும், சிரிப்புமா இருக்கும். சர்வ சமய பிரார்த்தனை நடக்கும். வாரம் ரெண்டு தடவை டாக்டர் வருவார். எதிர்க்க ரெண்டு வீடு வாங்கி சரி பண்ணிருக்காங்க, படுக்க, புழங்க வசதியா இருக்கு.”

“பணம்?”

“பல்பொருள் அங்காடி ஒண்ணு வச்சிருக்கோம். நாங்க தயாரித்த பொருள்களும் அங்கேயே விற்கப்படுது. பல பேர் நிலமா, பணமா அறக்கட்டளைக்கு எழுதி வச்சிருக்காங்க. வரவு செலவு கணக்கை வக்கீல் வச்சு முறையாக நிர்வகிக்கிறாங்க. எங்க அம்மாவோட நல்ல உள்ளத்தைப் பார்க்கறவங்க கிள்ளிக் கொடுக்க மாட்டாங்க, அள்ளிக் கொடுக்கறாங்க.”

“அம்மா?”

“வேதவல்லி அம்மா!”

ஸ்ரீராமிற்கு மனதுள் அமிர்தம் வழிந்தது. பின் கைப்பையிலிருந்து எதையோ எடுத்து கையெழுத்துப்போட்டு அப்பெண்ணிடம் நீட்டினான்.

“என்ன சார் இது?”

“மூன்று லட்சத்திற்கான செக். உங்க அம்மாட்ட கொடுத்துடுங்க!”

“இதோ பூஜையிலேர்ந்து வந்துடுவாங்க. நீங்களே நேர்ல கொடுக்கலாமே?”

“இல்ல, பரவால்ல நீங்களே கொடுத்திடுங்க!”

“யார்னு கேட்டா என்ன சொல்ல?”

“கடமை தவறிய ஒரு பிள்ளையின் சிறு பிராயச்சித்தம்னு சொல்லுங்க. மன்னிச்சு, பெரிய மனது பண்ணி இதை ஏத்துக்க சொல்லுங்க” குரல் தழுதழுக்க நடுங்கும் கைகளால் காசோலையைக் கொடுத்துவிட்டு காருக்கு விரைந்தான் ஸ்ரீராம். தலை கவிழ்ந்தவாறே தோளில் பிள்ளையுடன் பின்தொடர்ந்தாள் அகிலா.

– டிசம்பர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *