அம்மாவின் திட்டு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 14, 2023
பார்வையிட்டோர்: 4,869 
 
 

“அந்தக் கூறுகெட்டவன் டூட்டி முடிச்சிட்டு வர்ர நேரம். அவன் வர்றதுக்குள்ள இந்த டிபனுக்கு ஏதாவது தொட்டுக்க பண்ணி வக்கணும். இல்லன்னா அவனுக்கு இந்த நொய்யரிசி உப்புமாவுன்னா தொண்டையில இறங்குமா என்ன?” அவனுடைய அம்மாதான் சமையல் அறையிலிருந்து உரக்க புலம்பிக்கொண்டு இருந்தாள்.

வாயிற்கதவை ஒட்டிய ரேழியில் அப்போதுதான் மிதியடியை லேசாகக் கழட்டி வைத்து விட்டு அவன் உள்ளே வந்துகொண்டிருந்தான்.

அம்மாவின் குரலா இது? ஆமாம். அம்மாவின் குரல்தான். அவனைத்தான் அம்மா அப்படிச்சொல்கிறாள். இப்படிக்கூட அம்மா அவனைத் திட்டுவாளா, அவனுக்கு நம்ப முடியவில்லையே. “பெற்ற தாயொடு எண்ணக்கடவுளும் இல்’ என்கிற வாசகம் வேறு இந்த சமயம் பார்த்து நினைவுக்கு வந்து போக வேண்டுமா என்ன?

மனம் தொடர்ந்து ஒரு வினாவைத்  துருவி எடுத்தது. அவனுக்கு இருபது வயது. சிதம்பரம் கல்லூரியில் ஒரு பட்ட வகுப்பை முடித்துவிட்டு சொல்லிக் கொள்கிற மாதிரிக்கு வேலை ஒன்றில் சேர்ந்தான். சம்பளம் என்று ஒன்றும் வாங்கிக் கொண்டுதானே அய்யா அவன் இருக்கிறான்? அவனுடைய அம்மா அவனை ஒரு வார்த்தை திட்டி அவன் அந்தக்கணம் வரை கேட்டதில்லை. அப்படி எல்லாம் அம்மா திட்டும்படிக்கு அவன் எதுவும் செய்துவிடவும் இல்லை. செய்ததுவாய் ஒரு நினைவு கூட இல்லை. அவன் கண்கள் ஈரம் கூட்டிக் காட்டின. மனம் நொறுங்கிவிடுவதுபோல் அனுபவமானது. அம்மா அவனை க் கூடவா திட்டுவாள்? கற்பனை கூட செய்து பார்த்தது இல்லையே அவன்…

பிறகு அவன் காதால் கேட்டதுதான் என்ன? அம்மா அவனைத் திட்டி தான் இருக்கிறாள். அதுவே உண்மை. அது இல்லை என்றாகிவிடுமா? வேண்டும் என்றால் அம்மா அவனைத் திட்டியது அவன் காதில் விழவில்லை என்கிற மாதிரிக்கு நடந்து கொள்வது சரியாக இருக்கலாம். அவன் வீட்டில் இல்லை. ஏன் இன்னும் வீட்டிற்குள்ளே வந்து சேரவில்லை. ஆகத்தான் இப்படித்திட்டி இருப்பாள். அப்படியும் இருக்கலாம். ஆனால் அவன் இல்லாதபோது அம்மா அவனைத் திட்டுவாளா என்ன? இன்றுதானே அவனுக்கு முதன் முதலாக இப்படி ஓர் அனுபவம்.

வீட்டில் இரண்டு கருங்கல் அம்மிகள் இருந்தன. ஒன்று பாட்டி ஆண்ட அம்மி. அதனை இழுத்து அரைக்க அம்மாவுக்கு வலிமை ஏது? ஆகத்தான் அம்மியில் சிறியது ஒன்றை வாங்கி இருந்தாள். அந்த சிறிய ஒன்றில்தான் சட்டினி அரைத்து முடித்தாள்.
“வாடா கை கால் அலும்பு. வந்து உக்காரு. உப்புமா ரெடி. சாப்பிடலாம்”

அவன் கைகால் அலம்பிக்கொண்டான். அவன் தந்தை வீட்டுத்தோட்டத்தில் ஏதோ வேலை செய்துகொண்டிருந்தார். அண்ணன் அண்டையூர் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்தான். இந்நேரம் அவன் பள்ளியில் வகுப்பு நடத்திக் கொண்டு  இருப்பான்..
தங்கை உள்ளூர் பள்ளிக்கூடம் சென்றிருக்க வேண்டும்

அவனுக்குத் தந்தி ஆபிசில் வேலை. அப்படியும் ஒரு ஆபிசா, அங்கும் ஒரு வேலையா? தந்தி சேவை என்கிறார்களே அது என்ன என்று இன்றைக்குக் கேள்வி வைக்கலாம்.
அருகில் உள்ள சிறு நகரம் முதுகுன்றம். அங்கு தந்தி அலுவலகத்தில் அவன் இரவுப்பணி முடித்து காலையில் வீடு வந்து சேர்கிறான்.

“எல்லாரும் சாப்பிட்டு ஆச்சா?”

“நீயும் நானும் பாக்கி”

“ஏம்மா நீ சாப்பிட்டு இருக்கலாமே?”

“நீ வருவே… நீ சாப்பிடுவே… அப்புறம் சாப்பிடலாம்னுதான் இருந்தேன்”

அம்மா அவனுக்கு மட்டுமே நொய்யரிசி உப்புமாவை தட்டில் பரிமாறினாள். தயாராக வைத்திருந்த சட்டினியை ஓரமாக வைத்தாள்.

“ஏம்மா நீ இன்னும் சாப்புடலைன்னே? சட்டினி எல்லாத்தையும்?”

“இருக்கட்டும்டா, எனக்கு சட்டினி வேணும்னு இல்லே. பொட்டுக் கடலை கொஞ்சமா இருந்தது. மளிகை வாங்கணும். சட்டினி உனக்கு மட்டும்தான்னு அரைச்சேன்”

“அப்பா… அண்ணன், தங்கைக்கு?”

“இல்லடா அவுங்க தொட்டுக்க இல்லாமயும் சாப்புடுவாங்க. நீதான் அது வேணும்னு ஆசைப்படுவே?”

“எனக்கு மட்டும்தான் இந்த சட்டினி ஏற்பாடா?”

அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அவனுக்குப் பரிமாறிய மிச்சத்தை அப்படியே தன் வாயில் போட்டுக் கொண்டாள்.

“என்னம்மா நாலு வாய் கூட போட்டுக்கல. அவ்வளவுதான் உனக்கா?”

“தோ… சமையல் ஆயிடப் போவுது. சாப்டா போச்சு” அம்மா அவனுக்குப் பதில் சொன்னாள். அவனுக்குச் சங்கடமாக இருந்தது. அம்மா பேருக்குத்தான் காலை உணவு எடுத்துக் கொண்டாள். மனம் என்னமோ செய்தது. தோட்டத்துப் பக்கமாக எட்டிப் பார்த்தான். அப்பா தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டு மும்முரமாக ஏதோ வேலையில் இருந்தார்.

அருகில் இருந்த பாதிரி மாமரத்தில் கூடு கட்டியிருந்த தாய்க் குருவி தன் குஞ்சுகளின் உணவுக்கு என ஏதோ சிலதுகளைக் கவ்விக் கொண்டு சென்றது. கூட்டினுள் இருந்த பிஞ்சுக்குருவிகள் தமக்குப் பசிப்பதைத் தாம் கீச்சிட்டு அறிவித்தன. அவன் அப்படியே நடந்து கிணற்றடிக்குப் போனான். ராட்டினம் இடப்பட்ட கிணறு. ஒரு வாளி தண்ணீர் சேந்தினான். தண்ணீர் “ஜில்’லென்று இருந்தது. இரண்டு கைகளாலும் அள்ளி அள்ளிக் குடித்தான். வாளித்தண்ணீரில் இருந்த லேசான மண்ணின் மணம்கூட அவனுக்கு நிறைவு தந்தது.

கிணற்றுச் சுவரில் தாய்க் குரங்கொன்று தன் வயிறு பிடித்து தொங்கும் ஒரு சிறுகுட்டிக்கு அங்கங்கு சிந்திய கிணற்றுத் தண்ணீரை கைகளால் ஊட்டிக் கொண்டு இருந்தது. குரங்குக்குட்டியின் கண்கள் அழகாக இருந்தன. அது தன் தாயின் முகத்தைப் பார்த்து சிரித்த மாதிரி தெரிந்தது.

“தம்பி… தம்பி… தோ இந்த பூனயப் பாத்தியா? இங்க வாயேன்” அவன் அப்பா அழைத்துக் கொண்டிருந்தார். அவன் கிணற்றடியிலிருந்து தன் அப்பா நிற்கும் இடம் சென்றான். அப்பா தன் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டுதான் தோட்ட வேலை செய்வார். அவன் அப்பா காட்டிய தாய்ப்பூனையைப் பார்த்தான்.

“பெரிய பூனை… வாயில சின்ன குட்டி”

“அது ஒண்ணும் இல்ல. தாய்ப்பூனை தன் குட்டிப் பூனைய தூக்கிக் கிட்டு வேறு இடம் போவுது”

“குட்டிக்கு வலிக்காதா?”

“எப்பிடி வலிக்கும்? அதோட அம்மால்ல அத பல்லால கவ்வி தூக்கிகிட்டுப் போவுது”
அப்பா தென்னை மரங்களுக்கு அடியில் கொத்திவிட்டிருந்த அழகைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.

அப்பா நெய்வேலி நகரம் சென்று அரிசி வியாபாரம் செய்தவர்தான். இப்போது அது எல்லாம் முடிவதில்லை. அரிசி வியாபாரம் என்றால் “ஆகா ஓகோ…’ என்ற அளவில் இல்லை. ஏதோ குடும்பம் ஓடியது. அண்ணன் எப்படியோ ஓர் ஆசிரியர் தொழிலில் சேர்ந்துவிட ஓடிக் கொண்டு இருக்கிறது வாழ்க்கை. தங்கை இந்த ஆண்டோடு பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டால் பிறகு அவளுக்கு என்ன என்று பார்த்தாக வேண்டும்.

“குளிச்சிட்டு கௌம்பணும்ல?”

“ஆமாம். குளிச்சிடணும்… சாப்பிடணும்… கௌம்பணும்”

“ரா சாப்பாடு கையில எடுத்துகிட்டுப் போவுணும்தானே?”

“ஆமாம்”

அவன் குளிப்பதற்குச்சென்று கிணற்றடி ராட்டினத்திற்கருகே நின்று கொண்டான். கோழி ஒன்று கிணற்றுச்சுவர் ஓரம் தன் குழாத்துடன் கொத்தி கொத்தி மேய்ந்து கொண்டிருந்தது. அவனைக் கண்டதும் அவை “பராச்’ என்று நகர்ந்து மேய்ந்தன. ஆகாயத்தில் பருந்து ஒன்று வட்டமிடுவதைப் பார்த்த தாய்க்கோழி குஞ்சுகளை அணைத்து அணைத்து அவை மேல் ஏறி ஏறி நின்று தன் இறகால் மூடி ஆத்திர ஆத்திரமாய்க் கூவிக் கொக்கரித்தது. வானத்திலிருந்து கீழ் வந்த பருந்து ஏமாந்து போனது.

“என்னடா கோழி கேவுற சத்தம்?”

“மேல பறாந்து நோட்டம் உட்டிச்சி அதான்”

“குஞ்சுவ மேல ஏறி அதவுள ஆத்தா கோழி காபந்து பண்ணும். கோழி மிதிச்சி குஞ்சு சாவாதுன்னு சொல்லுவாங்க. தெரியும்ல?” அப்பா அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவன் குளித்து முடித்தான். வீட்டிற்குள்ளாகச் சென்றான். அவனுடைய அம்மா மதிய சாப்பாட்டைத் தயாரித்து முடித்து அந்த அசதியில் தாழ்வாரத்தில் கிடந்த விசிப்பலகையில் சற்றுப் படுத்துக் கண்களை மூடி மூடித்திறந்தார்.

அம்மாவின் புடவை கொஞ்சமாய் நெகிழ… வயிறு சற்று வெளியில் தெரிந்தது. அம்மாவின் தொப்புள் சுற்றி மொத்தமாக மூன்று திட்டுக்கள் சிவப்பும் வெள்ளையுமாய்த் இருந்தன. அம்மாவுக்கு மூன்று குழந்தைகளுமே சிசேரியன் என்பது சட்டென்று நினைவுக்கு வந்தது.

அம்மா கண்விழித்தாள்.

“சாப்புடலாமா. உனக்கு நேரம் ஆகிடப் போவுது. ரா சாப்பாடும் எடுத்து வச்சிட்டேன்.”

 “நீ காலையிலயே சரியா சாப்புடலயே?” 

“அதுக்கு என்ன தம்பி? அப்பா வந்துடட்டும்” அம்மா பதில் சொன்னாள்.

அம்மாவின் வயிற்றில் இருந்த மூன்று அறுவை சிகிச்சை ரணத் திட்டுக்களில் தன்னுடையதும் ஒன்று என்கிற நினைப்பு மேலிட சாப்பிட்டு எழுந்தான்.

“ஏம்பா சரியா சாப்புடலயா?” அம்மா இன்னும் அவனைக் கேட்டுக் கொண்டே இருந்தாள்.

ஒப்பிலாத் தாய்மையின் முன் தான் சிறுத்துப் போனதை அவன் மனம் நொந்து நொந்து அனுபவித்தது, அவனுக்கு மட்டுமே அது உணர முடிந்தது.

– மே 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *