அம்மாவின் அளவற்ற அன்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 10, 2019
பார்வையிட்டோர்: 7,564 
 

ஒரு வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்தால் அது அந்த வீட்டை சில காலத்துக்கு முடக்கிப் போட்டுவிடும். அந்த சோகத்தில் இருந்து மீள சில காலம்
பிடிக்கும். அதுவே நமது அன்புக்குரியவர்களாக இருந்து விட்டால் அதில் இருந்து மீள்வது பகீரதப் பிரயத்தனமாகக் கூட இருக்கும். அநேகமாக
உறவினர்களும் நண்பர்களும் இந்த சோகத்தில் இருந்து விடுபட உதவுவார்கள்.

அவர்களின் பிரசன்னம், ஆறுதல் வார்த்தைகள், அனுதாபத்துடனான விசாரிப்புக்கள் என்பனதான் நம்மை நாம் தேற்றிக்கொள்ள உதவும்.

அத்தகைய விசாரிப்புக்களின் போதெல்லாம் நாம் இறந்தவர் பற்றிய ஞாபகங்களையும் நல்ல பண்புகளையும் சொல்லி அழுவதன் மூலம் தான் நம் சோகத்தை வடித்துக் கொள்கிறோம். மரணச் சடங்குகள் என்பதே இந்த அர்த்தத்தில் தோற்று விக்கப்பட்டதுதான். அதன் காரணமாகத்தான் ஒப்பாரி பாடுதல் என்பது தொன்றுதொட்டே நம் பாரம்பரியமாக இருந்து வருகின்றது.

தெரேசாவின் அன்புக் கணவன் பெஞ்சமின் திடீரென ஏற்பட்ட சுகவீனத்தில் மரணித்த போது அவளால் அதனை கொஞ்சமும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் ஒரேயடியாக இடிந்து போய் மனம் நொந்து ஒரு மூளையில் போய் அழுது கொண்டிருந்தாள். அவளைத் தேற்றுவதற்கு பலரும் பலவாறு முயற்சி செய்தும் அது வீண் முயற்சியாகவே இருந்தது. நண்பர்கள் அவளது சோகத்தை அவள் தான் தீர்த்து கொள்ள வேண்டுமெனக் கூறி விடை பெற்றனர். ஆனால் இறந்து போன அவளது கணவன் பெஞ்சமின் ஒரு சராசரி மனிதன் அல்ல என்பதனை அவனது நண்பர்கள் நிரூபித்த போது தான் அவள் பிரமிப்படைந்தாள்.

அவளுள் அவள் கணவன் தொடர்பில் ஒரு பெருமித உணர்வு ஏற்பட்டது. அவளை யாரென்றே அறிந்திராத பெஞ்சமினின் நண்பர்கள் எங்கோ தூர இடத்தில் இருந்தெல்லாம் வந்திருந்து அவள் கரங்களைப் பற்றிக்கொண்டு துக்கம் விசாரித்து ஆறுதல் சொன்ன போது அவளால் தன் கணவனை எண்ணி நெகிழாமல் இருக்க முடியவில்லை. பெஞ்சமினுடன் அவன் வாழ்நாளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பழகிய அவனது நண்பர்கள் நூற்றுக்கணக்கில் வந்து அவனது இனிய சுபாவத்தையும் அவனுடன் பழகிய நாட்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இதனைவிட எண்ணற்ற தொலைபேசி அழைப்புக்களுக்கு அவள் பதிலளிக்க வேண்டியிருந்தது. மற்றும் அனுதாபச் செய்திகள், கடிதங்கள், தபாலட்டைகள், மலர் வளையங்கள் வந்து குவிந்திருந்தன. இவையெல்லாம் அவள் கணவன் மீது அவளுக்கு அளவற்ற மதிப்பும் மரியாதையையும் உண்டு பண்ணியது. இதையெல்லாம் நினைத்து அவள் மனது உருக உருக அவள் சோகம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய
ஆரம்பித்தது.

இவற்றையெல்லாம் விட ஊரில் இருந்து வந்திருந்த ஒரு கடிதம் அவள் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தது. அது அவளது பள்ளிக்கூடத் தோழியான பிரெட்ரிக்காவிடம் இருந்து வந்திருந்தது. அவளும் பிரெட்ரிக்காவும் பள்ளிப் படிப்பு முடியும் வரை ஒன்றாகப் படித்தவர்கள். தெரேசா பல்கலைக்கழக பிரவேசம் பெற்று கொழும்பு வந்தவள்தான். பின் பல்கலைக்கழகத்தில் பெஞ்ஜமினை காதலித்து திருமணம் செய்து கொண்டு வேலை கிடைத்து இங்கேயே தங்கிவிட்டாள். ஆனால் பிரெட்ரிக்கா பாடசாலை படிப்பு முடிந்ததுமே திருமணம் செய்துகொண்டாள்.

ஆனால் பிரெட்ரிக்காவின் திருமண வாழ்வு நீண்டகாலம் நிலைக்கவில்லை.

அவளுக்கு மூன்று சிறு குழந்தைகள் இருந்த நிலையில் அவளது கணவன் ஒரு விபத்தில் சிக்கி மரணமடைந்து விட்டான். அதன்பின் அவள் தன்பிள்ளைகளை வளர்க்க மிகச் சிரமப்பட்டாள். வருமானம் ஒன்றைப் பெற்றுக் கொள்ள வேலை ஒன்று தேடவேண்டியிருந்தது. பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்து ஆளாக்க வேண்டியிருந்தது. அவள்பட்ட கஷ்டங்களுடன் ஒப்பிடுகையில் தெரேசாவின் துயரம் அவ்வளவு பெரிய துன்பம் என்று சொல்வதற்கில்லை.

பிரெட்ரிக்கா எழுதியிருந்த கடிதத்தை முழுவதும் படித்தாள். அவள் தன்னை ஆறுதல் படுத்த பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் விரிவாக எழுதியிருந்தாள்.

எனினும் அவள் எழுதியிருந்த எல்லாவிடயங்களையும் விட ஒரு விடயம் தெரேசாவின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

‘தெரேசா என் கணவர் இறந்து போன போது நான் ரொம்பவும் ஒடிந்து போயிருந்தேன்.

என்னால் நிமிர்ந்து அமரக்கூட முடியவில்லை. அப்போது தான் உன் அம்மா எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் என்னை அணைத்துக் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார்கள். அவர்கள் இறுதியாகக் கூறிய வார்த்தைகள் எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கின்றது. இந்தத் துக்கம் உன்னால் தாங்கிக் கொள்ள முடியாதது தான் பிரெட்ரிக்கா. உன்னிடம் நான் எதைச் சொன்னாலும் உன் மனது ஆறுதலடையுமா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உனக்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை மறந்துவிடாதே. உன்னையும் என் பிள்ளை போல்தான் கருதுகிறேன். உன்மீது நான் மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன்’ என்று அவர்கள் கூறினார்கள். எனக்கு என் அம்மா இல்லாவிட்டாலும் அந்த வார்த்தைகள்
என் அம்மாவே நேரில் வந்து கூறியது போல் இருந்தது. எனக்கு அது மிகுந்த ஆறுதல் அளிப்பதாக இருந்தது என பிரெட்ரிக்கா தன் கடிதத்தில்
குறிப்பிட்டிருந்தாள்.

தெரேசாவின் அம்மாவும் இப்போது உயிருடன் இல்லை. இருந்தாலும் அவளுக்கு அவளின் அம்மா ஞாபகத்தை பிரேட்ரிக்காவின் அந்த வார்த்தைகள் வரவழைத்து விட்டன. அவளது அம்மாவின் முகம் அவள் கண்முன் தோன்றி, அந்த வார்த்தைகளை அவள் காதுகளில் கூறுவது போல் அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலித்தன. அவள் கண்கள் சோகத்தால் குளமாகிவிட்டிருந்தாலும் அந்த வார்த்தைகள் அவளுக்கு மிகுந்த ஆறுதல் அளிப்பவையாக இருந்தன. அவள் சிறுவயதில் தன் அம்மாவின்மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு பாட்டுப் பாடக்கேட்டது. அவள் தோளில் தொங்கியது. அவள் கன்னத்திலும் நெற்றியிலும் தந்த முத்தங்கள் எல்லாமே ஒன்றொன்றாக ஞாபகத்துக்கு வந்தன.

ஒரு பெண்ணுக்கு தன் கணவனை இழக்கும் துக்கமும் ஒரு ஆணுக்கு தன் மனைவியை இழக்கும் துக்கமும் மறக்க முடியாத சோகங்களாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதில் இருந்து விடுபட சில கொழுகொம்புகளை அழுத்தமாக பிடித்துக்கொள்ள வேண்டியதன் தேவை மிக அவசியமானதாகும்.

பிரெட்ரிக்காவும் தன் அம்மா சொன்ன அதே வார்த்தைகளையே தானும் தெரேசாவுக்காக தெரிவிக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தாள். ‘நான் உன்மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன்’ என்று அவளது அம்மா பிரெட்ரிக்காவிடம் கூறிய அந்த வார்த்தைகள் அம்மாவின் குரலாக அவள் காதுகளில் ஒலித்தபோது அவள் விசும்பி விசும்பி அழுதாள். அவள் அழுது ஓய்ந்த போது அவள் தலையை பாரமாக அழுத்திக் கொண்டிருந்த அந்த பெரும் சோகம் முக்கால்வாசி தீர்ந்து போயிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *