கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 15, 2018
பார்வையிட்டோர்: 9,639 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

படலை திறக்கும் சத்தங்கேட்டுத் தன் வீட்டுக் கதவை திறந்து வாசலைப் பார்த்தாள்

பாக்கியம். வருவது அவள் கணவன் சிவகுரு என்று கண்டதும்.

“என்னங்க நேரத்தோட வந்திட்டீங்க . மழையும் விட்டபாடில்லை என்ன”

“வேறென்ன பின்ன, முந்தநாள் பிடிச்ச மழை, கொஞ்சமும் ஈவு இல்லாம பேஞ்சுகொண்டுதான் இருக்கு. ஆத்துல கரப்பு குத்தவும் முடியல்ல. தண்ணி கழுத்தளவுக்கு போகுது. இண்டைக்கு கறிப்பாட்டுக்கும் ஒண்டும் அம்புடயில்ல.

அதுதான் வந்திட்டன்” அலுத்துக்கொண்டான் சிவகுரு.

“சரி,சரி பரவாயில்ல நீங்க வந்ததும் நல்லதாப் போயிற்று. இண்டைக்கு நம்ம மகள் மகாவல்லிர சோதினை முடிவு வருகுதாம். நேற்று மகாவித்தியாலயத்தில வாத்தியார் சொன்னவராம் என்று மகா சொன்னாள். அவளும் நீங்க போன கையோட எழுந்து, எனக்கு இடியப்பத்துக்கு சம்பல இடிச்சி தந்துபோட்டு பரபரத்து வெளிக்கிட்டிட்டு வந்து, நிண்டனிலையில தேத்தண்ணீய குடிச்சிபோட்டு போயிற்றாள்”

“மெய்தானா புள்ள.. என்னவோ அந்த முருகன்தான் கண்ணத் திறக்கணும். ராப்பகலா

படிச்சவள். சோறு தண்ணி, தூக்கம் மறந்து படிச்சவள். பாஸ் பண்ணிற்றாள் எண்டால் பெரிய படிப்புக்கு டவுனுக்கல்லோ போகவேணும்!”

“அப்ப அவள் பாசாக கூடாதென்றா சொல்லுறிங்க”

“சே..சே என்ன பேச்சு பேசுறாய் நீ. நான் அப்படி சொல்லல்ல புள்ள. இவ்வளவு படிக்க வைக்கவே நீயும்,நானும் எவ்வளவு கஷ்டப்பட்டிரிக்கிறம்.நீ பொன்னாங்கண்ணி,குப்பைக்கீரை

புடுங்கி சந்தையில கொண்டு விற்று சம்பாதிச்சாய் . பிறகு போடிமாரின் வயல்களிலும் போய் புல்லுப் புடுங்கி சம்பாதிச்சாய். காலையில கடைக்கு இடியப்பம், புட்டு அவிச்சு கொடுத்து உழைச்சாய்.. நானும் கூலிவேலை செய்தேன். அது கிட்டாத சமயத்தில ஆத்தில கரப்புக் குத்தி இறால்,மீன் பிடிச்சி விற்று சம்பாதிச்சேன். இப்படி கஷ்டப் பட்டுத்தானே மகாவை இதுவரைக்கும்

படிக்க வச்சோம். மகாவும் நம்ம கஷ்டங்களப் புரிஞ்சு கொண்டுதானே படிச்சவள். ஏதோ இவ்வளவு கஷ்டத்திலும் அவள உயர் வகுப்புவரை படிப்பிச்சுப் போட்டம் பாக்கியம். என்ன விட நீதான் கூட அவள் படிக்க

வேணும் எண்டு கரிசனை பட்டாய்”

“நம்ம பட்ட கஷ்டம் நம்ம பிள்ள படக்கூடாது எண்டுதானே நான் இவ்வளவு துன்பப் பட்டேன். போர் நடந்த காலத்திலும், அவளப் பள்ளிக்கூடம் கூட்டிக்கொண்டுபோய் விட்டுவிட்டு வயித்தில நெருப்பைக் கட்டிக்கொண்டு இருந்து, பள்ளி கலையிற நேரம் பார்த்து போய் கூட்டிக்கொண்டு வந்தேன். அதை இப்ப நெனைச்சாலும் ஈரக்குலை நடுங்குது. மகாவும், படிப்புல ஆர்வம் காட்டினபடியால் அவளோட வாத்திமாரும் அவள ஊக்கபடுத்தி படிக்கச் சொன்னாங்க. புத்தகம், கொப்பிகள் கூட வாத்திமார் நம்ம மகளுக்கு வாங்கி கொடுத்தது உங்களுக்கு நெனைப்பு இல்லையா”

“ஏனில்லாம புள்ள.. பரமேஸ்வரன் மாஸ்டர் அவளுக்கு நல்ல உதவி செய்திருக்கிறார்.

உயர்வகுப்பு சோதினை வருவதற்கு முன்னமே வெளி இடங்களில இருந்து நல்ல

மாஸ்டர்மார்களை வரவழைச்சு சனி,ஞாயிற்று கிழமைகளில் படிப்பு சொல்லிக் கொடுத்திருக்கிறாங்க. அதற்கு உரிய செலவுகளை எல்லாம் வெளிநாட்டுக்கு போன நம்ம தமிழ் மக்கள் சிலர், கஸ்டத்தில இருக்கிற பிள்ளைகளுக்கு உதவும் நோக்கத்தோட சங்கங்கள் அமைத்து அதனூடாக பல உதவிகள் செய்கிறாங்களாம்.

பரமேஸ்வரன் மாஸ்டர் அவர்களை தொடர்புகொண்டுதான் இந்த ஏற்பாட்டை செய்தவர்”

“ஓம் ஓம் எனக்கு தெரியும். பிள்ள மகாவும் சொன்னவள். அவளோடு இன்னும் பல பிள்ளைகள் வந்து சனி ஞாயிறு கிழமைகளில் படிச்சவங்களாம். எல்லா பிள்ளைகளும் பாஸ் பண்ண வேண்டும். எண்டுதான் கடவுளை கும்பிட்ட நான்”

“மகா பாஸ் பண்ணினா நம்மளவிட பரமேஸ்வரன் மாஸ்டருக்குத்தான் சந்தோசமாக

இருக்கும் இல்லையா பாக்கியம்”

“பின்ன இருக்காதா? அவள் பத்தாம் வகுப்பு நல்லா பாஸ்பண்ணிட்டு வந்தபோது,

அவளுக்கு கணக்கும்,விஞ்ஞானமும் நல்லா வரும் எண்டு சொல்லி அதில கூட கவனம் எடுக்க சொன்னவர். விஞ்ஞான பிரிவில் சேர சொன்னவர். அதோட பள்ளியில படிக்கிறதை விடவும், தன்ர வீட்டுக்கும் வரச்சொல்லி அக்கறையோடு படிப்பிச்சவர்.

நம்ம மகாவல்லியில நல்ல நம்பிக்கை கொண்டவர். அவளை எப்படியாவது நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் எண்ட எண்ணம் அவருக்கு இருக்கு. அதனால அவள் பாஸ் பண்ணினால் நீங்க சொன்ன மாதிரி அவர்தான் கூட சந்தோசப் படுவார்”

சிவகுருவும்,பாக்கியமும் தங்கள் மகள் மகாவல்லி பற்றியும், பரமேஸ்வரன் மாஸ்டர்

பற்றியும் பேசிக்கொண்டு இருக்கும்போது அவர்கள் வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிள் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. இருவரும் எட்டிப் பார்த்தார்கள். பரமேஸ்வரன் மாஸ்டர்.

அவருக்கு பின்னால் மகா அமர்ந்து இருந்து இறங்குகிறாள். இருவரும் ஒருவரை ஒருவர்

கேள்விக் குறியோடு பார்த்துக் கொண்டார்கள். அதே நேரம் பரமேஸ்வரன் மாஸ்டர் மகாவுடன் வந்து கொண்டிருந்தார். அவர் முகத்தில் ஒரு சந்தோசத்தின் சாயல் தெரிந்தது.

‘வாங்க மாஸ்டர் .. குடைய மடக்கி தாங்க இந்த பக்கம் வைக்கிறன்” என்ற சிவகுரு

அவரிடமிருந்து குடையை வாங்கிக்கொண்டான்.

“அம்மா நான் மூன்று ‘ஏ’ எடுத்து நல்லா பாஸ் பண்ணிட்டேன்” என்று சந்தோசத்தில்

தன் தாயைக் கட்டிக்கொண்டாள் மகா.

“அப்பிடியா மகள்..என்று மகாவை அணைத்துக்கொண்டாள் பாக்கியம்.

“இருங்க மாஸ்டர்” என்று ஒரு கதிரையை எடுத்துப் போட்டான் சிவகுரு. மகா தன் தகப்பன் கைகளைப் பிடித்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டாள்.

“நான் நினைத்ததை விட மிகத் திறமையாக மகா பாஸ் பண்ணி இருக்கிறாள். மாவட்டத்திலே முதலாவதாக வந்திருக்கிறாள். கணிதம், பைஒலோஜி,கெமிஸ்ட்ரி ஆ,அதுதான் விஞ்ஞான பாடங்கள்,மூன்றிலும் ‘ஏ’ எடுத்து தேசிய அளவிலும் புள்ளி அடிப்படையிலும் நான்காம் இடம் பிடித்து இருக்கிறாள். இதனால் எங்கள் பாடசாலைக்குப் பெருமை சேர்த்து இருக்கிறாள். எனக்கு இவளில் நல்ல நம்பிக்கை இருந்தது. பாஸ் பண்ணுவாள் என்று தெரியும்.ஆனால் இப்படி மகா அதி சிறப்பாக பாஸ் பண்ணுவாள் என்று நான் நினைக்கவில்லை.. ஏன் எங்க ஸ்கூலும் எதிர்பார்கவில்லை.

எங்க பிரின்சிபால் உட்பட இன்று எல்லா மாஸ்டர் மாருக்கும் பெரிய மகிழ்ச்சி. மகாவை சக மாணவ,மாணவிகளும் கூட வாழ்த்திப் பாராட்டியததைப் பார்க்க முடிந்தது. அஃது அவளின் திறமைக்கு, அடக்கத்துக்கு, அமைதிக்கு, எளிமையான நடத்தைக்குக் கிடைத்த பாராட்டுகள் என்றே நான் எடுத்துக்கொண்டேன்” என்று காலையில் பரீட்சை முடிவு வந்தபின் தங்கள் பள்ளிக் கூடத்தில் நடந்த சம்பவங்களைச் சொன்னார் பரமேஸ்வரன் மாஸ்டர்.

பாக்கியத்தின் கண்களில் நீர்வழிய,அவளால் பேசமுடியவில்லை. சிவகுரு பரமேஸ்வரன் மாஸ்டர் சொன்ன விசயங்களிலிருந்து விடுபடவில்லை. வெளியில் வளவு முழுதும் வெள்ளம். இவர்கள் இருவரின் உள்ளங்களிலும் அந்தக் கணத்தில் மகிழ்ச்சியின் வெள்ளப் பெருக்கு ஓடிக்கொண்டு இருந்தது. ஒரு சிறு அமைதிக்கு பின் பாக்கியம் பேசினாள்.

“ஐயா உங்களுக்குத்தான் நாங்க நன்றி சொல்ல வேணும். மகா நல்லா படிப்பாள் என்று சொல்லி அவளை ஊக்கப் படுத்தி, இவ்வளவு தூரம் கொண்டுவந்தது நீங்கதான்.

எங்களுக்கு கஷ்டமாக இருந்த நேரங்களில் இவளின் பள்ளிக்கூட செலவுகளைக் கூட நீங்க நிறைவேற்றி கொடுத்தீங்க. நீங்க வருவதற்கு முன்னும் நாங்க பேசிக்கொண்டோம் மகா பாஸ் பண்ணினால் எங்களைவிட நீங்கதான் அதிகமா சந்தோசப் படுவீங்க எண்டு”

“”கண்டிப்பா எனக்கு சந்தோசம்தான். ஆனா நான் ஒன்றும் பெரிசாக மகாவுக்கு செய்யவில்லை.

ஓர் ஆசிரியராக என்ன செய்யவேண்டுமோ அதைதான் செய்தேன். இவ, மற்றப் பிள்ளைகளை விட கொஞ்சம் அதீத கெட்டிக்காரி என்று அடையாளம் கண்டும் உங்க குடும்ப நிலை அறிந்தும் என் பிள்ளைபோல் நினைத்துதான் இவளுக்கு சில உதவிகள் செய்தேன்..அதை உதவி என்று சொல்வதைவிட சில அவளின் தேவைகளைச் செய்து கொடுத்தேன். மற்றப்படி மகாவின் அதீத நம்பிக்கையும், இவளுக்கு இருக்கும் அதி புத்திசாலித் தனமும்தான் இன்று இவளுக்கு இப்படி ஒரு வெற்றியை கொடுத்திருகிறது. இன்னும் சொல்லப்போனால் இஃது ஒரு தாய்க்குக் கிடைத்த வெற்றி என்றும் இதை சொல்ல வேண்டும்”

“நீங்க இப்படி சொல்லுறது உங்கட பெரிய மனசக் காட்டுதுங்க அய்யா. என்ன இருந்தாலும் எங்கட புள்ள உங்கட புள்ளமாதிரி என்று சொன்னது எங்களுக்கு பெரிய சந்தோசம்.பலபேர் கஷ்டத்தின் நிமித்தம் தங்கட பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பிறதில்ல. இந்தக் கிராமத்தில எங்களைபோல வசதி இல்லாத குடும்பங்கதான் கனக்க இருக்குது. நானும் எவ்வளவு கஷ்டப் பட்டாலும் என் மகளை படிபிச்சுப்போட வேணும் எண்டு வைராக்கியதோடு இருந்தன். என்ர புள்ளையும் கஷ்டப்பட்டு படிச்சாள். இரவில அவள் சிமினி விளக்கில கண்விழிச்சி நீண்ட நேரம் படிக்கும்போது நான் எத்தனைநாள் மனசு நொந்து கண்ணீர் விட்டிருக்கிறன். ஒரு நல்ல மேசை,கதிரை கூட அவளுக்கு இல்ல. அவளோடு படிக்கிற மற்றப் பிள்ளைகளுடன் ஒருநாளும் தன்னை ஒப்பிட்டு கதைக்க மாட்டாள். தனக்கு அது வேணும்,இது வேணும் என்று ஒருநாளும் அவள் கேட்டதில்ல. ஏதும் நாங்க வாங்கி கொடுத்தால்தான். பள்ளிகூட சட்டைகள் ஆக இரண்டு சோடிகள்தான் வைத்திருக்கிறாள். அதைக்கூட தானே கழுவி, காயப்போட்டு இரவில்

படுக்கும்போது தலவாணிக்குக் கீழ மடிச்சு வச்சிருப்பாள்”

பார்வதி இப்படி சொல்லும்போதே அவளுக்கு அழுகை வந்து விட்டது. மகா ஓடிவந்து தாயை

அணைத்துக்கொண்டாள்.

“அம்மா .என்னம்மா …அதெல்லாம் என்னத்துக்கு இப்போது சொல்லுறீங்க. விடுங்க,,அதுதான் நீங்க நினைத்தபடி நான் பாஸ் பண்ணிட்டன்தானே. நீங்க இனி சந்தோசமாக இருக்க வேணும்” மகா சொல்லும்போதே பரமேஸ்வரன் மாஸ்டர் குறுக்கிட்டார்.

“அதுதானே நீங்க நினைத்ததைச் சாதிச்சுப் போட்டீங்க. இந்த ஊரே இனி உங்களைப் பார்த்து பெருமைப்படப் போகின்றது. மகா சொல்லுறமாதிரி நீங்க இனி அழுகிற நேரமில்ல இது.

சந்தோசப்படுங்க.” என்ற பரமேஸ்வரன் மாஸ்டர் எழுந்து கொண்டார். மழையும் லேசாக விட்டமாதிரி இருந்தது.

“என்ன மாஸ்டர் எழுந்திட்டீங்க. இருங்கோ தேத்தண்ணீ குடிச்சிட்டுப் போகலாம்”

சிவகுரு சொன்னதும். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு “ஐயா வந்ததும் கதையில இருந்திட்டன். இருங்கோ இந்தா போட்டுக்கொண்டுவாறன்”

“இல்ல..ஒன்றும் வேண்டாம். கேட்டதற்கு நன்றி, நான் ஸ்கூலுக்கு போகவேணும். அங்கு எனக்கு இன்னும் கொஞ்சவேலைகள் செய்ய இருக்கின்றன. மகாவின் இந்தப் பரீட்சை முடிவு எனக்கு மட்டுமல்ல எங்கள் பாடசாலையில் சகலருக்கும் சந்தோசத்தை தந்திருக்கிறது. மகாவை பாராட்டி கௌரவிக்க எங்கள் அதிபர், மற்றும் ஆசிரியர்கள் விரும்புகிறார்கள். அதுபற்றி நான் அவர்களுடன் பேசவேண்டி இருக்கிறது. நான் புறப்படுகிறேன்.நீங்க குடுபத்துடன் சந்தோசமாக இருங்கள்” என்ற பரமேஸ்வரன் மாஸ்டர் புறப்பட தயாரானார். சிவகுரு, மூலையில் மடக்கி வைத்திருந்த குடையை எடுத்து அவரிடம் கொடுத்தான். மாஸ்டர் விடைபெற்றுகொண்டார்.

அவர் போன பின்பு தாயையும்,தகப்பனையும் சேர்ந்து நிற்கச்சொல்லி இருவரின் பாதங்களையும் தொட்டு வணங்கினாள் மகாவல்லி. அக்கறையுடன் தன்னைப் பார்த்துகொண்ட தன் பெற்றோருக்கு தனது பரீட்சை முடிவு தந்த வெற்றியின் மூலம் பெருமை சேர்த்துக் கொடுத்துவிட்டாள் அவள். குறிப்பாக அவளின் தாய் பட்ட சிரமங்கள், கஷ்டங்கள்தான், மகா என்னும் மகாவல்லியை இன்று வெற்றிக்கனியைபறிக்க வைத்திருக்கிறது.

கடைக்குக் கொடுப்பதற்கு இடியப்பம். புட்டு அவித்து கொடுப்பதற்காக அதிகாலையில் எழும்பும் தன் தாய், தன்னையும் எழுப்பிவிட்டு படிக்கச் சொல்லுவாள். கூடியவரையில் தனக்கு எந்த வேலையும் தராமல் எல்லாவற்றையும் தானே தனித்துச் செய்து முடித்து விட்டுத், தன்னையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வீதி முனையில் இருக்கும் கடைக்குப் போய் தான் தயாரித்த உணவுகளைக்கொடுத்துவிட்டு, பின் வயல்பக்கம் சென்று இலைக்கறி பறித்து அவற்றை சந்தையில் கொண்டுவிற்று, அரிசி,கறிசாமான் வாங்கி வந்து சமையல் செய்து வைத்து தான் வரும்வரைக்கும் காத்து இருக்கும் தாயை நினைத்து எப்பொழுதும் மனசுக்குள் பெருமைப்படுவாள் மகா.

வயல் வேலைக்கு யாரும் கூப்பிட்டாலும் அதற்கும் சென்றுவருவாள். இதெல்லாம் தனக்காகதான் தன் தாய் செய்தாள் என்று தனது அடிமனதில் பதித்துக் கொண்ட மகாவின் நெஞ்சில் எப்பொழுதும் ஒரு வலி இருந்தது. அந்த வலியையே வைராக்கியமாக்கிக் கொண்டு ஒருவித வெறியோடும் தன்னம்பிக்கையோடும் படித்து, தன் தாய்,தந்தை,ஏன் தன் ஊருக்கும் பெருமை தேடி தந்திருக் கிறாள்.

பரமேஸ்வரன் மாஸ்டர் சென்றபின்னர் செய்தி அறிந்து பெய்து கொண்டு இருக்கும் மழையையும் பார்க்காமல் பலர் பாக்கியத்தின் வீட்டுக்கு வந்து அவளையும், அவள் மகளையும் பாராட்டி சென்றார்கள்.

சற்று நேரம் கழித்து,மீண்டும் வந்த பரமேஸ்வரன் மாஸ்டர் , அடுத்த இரண்டு நாட்களின் பின்னர், மகாவுக்கு ஒரு பாராட்டு விழா தங்கள் பாடசாலையில் நடைபெற இருக்கிறது என்றும் அதற்கு ஊரிலிருந்தும் முக்கிய பெரிய மனிதர்களை அழைக்க இருப்பதாகவும் மகா, பல்கலைக் கழகம் சென்று வைத்தியக் கலாநிதி பட்டப் படிப்பு மேற்கொள்ள அனைத்து உதவிகளையும், செலவுகளையும் செய்ய வெளிநாட்டில் இருக்கும் ஒரு தமிழர் தன்னார்வ தொண்டு அமைப்பு முன் வந்திருகிறது என்ற நல்ல செய்தியையும் சொல்லிச் சென்றார்.அவர் சென்ற பின்னர் மகிழ்ச்சியான மனசுடன் படபடத்துச் சமையல் செய்து தன் மகளுக்கும்,தன் கணவனுக்கும் பரிமாறினாள் பாக்கியம். பொழுது மறைந்ததும், வழமைபோல் தன் அன்றாட வேலைகளில் மூழ்கி விட்டாள்.

இரவு படுக்கும்பொழுது தன் மகள் மகாவை அழைத்து தன் மடியில் கிடத்தி அவள் தலையை கோதிக் கொடுத்தாள். தாயின் அந்த வருடல் கொடுத்த சுகத்தில் அப்படியே கண்ணயர்ந்து போனாள் அந்த வருங்கால வைத்தியக் கலாநிதி.

– பெப்ரவரி 2016

– ஊருக்குத் திரும்பணும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2016, மெய்கண்டான் பிரைவேட் லிமிடெட். இலங்கை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *