அப்பாவின் நண்பர்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 4,306 
 

‘ அறுபது வயதில் ஒருவருக்குத் திருமணம் ! அதுவும் இரண்டாவது திருமணம், மறுமணம் !! ‘ – கேட்கவே உள்ளுக்குள் கோபம் கொப்பளித்தது.

அதே சமயம். ..

அவர்…. அப்பாவின் நண்பர் என்பதால் எனக்கும் பழக்கம், நெருக்கம், உலகம் தெரிந்தவர். அவரா இப்படி. ..?! எனக்குள் வியப்பை திகைப்பு.

அப்பா இறந்த பிறகு. …நான்கு வருடங்களுக்கு முன் அவர் மனைவியின் மறைவிற்குச் சென்றிருந்தேன்.

” என் தங்கத்தைப் பார்ப்பா . …ஆ. .! ” என்னைப் பார்த்ததும் பாச நேச நெகிழ்ச்சியில் தாவிப் பிடித்து குமுறி அழுதார்.

பெண்ணும், மருமகளும் பிணத்தின் தலைமாட்டில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்கள்.

பேரன், பேத்திகள் விபரம் புரியாத வயது. வெளியே…. வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தாய்க்குத் தலைப் பிள்ளையான இவர் மகன் , வருவோருக்கு மரியாதை செய்யும் விதமாக கை கூப்பி வாசலிலேயே நின்றான்.

மனைவி போனாலென்ன பேரன் பேத்திகளைக் கொஞ்சி வழக்கம் போல் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்ததாலே போதும். கால முடிய கட்டையில் ஏறி விடலாம்.! – அப்படித்தான் நினைத்தேன்.

இப்போது என்னடாவென்றால். .. மறுமணம்….?!

எங்கே சிக்கல். .?. மகன், மகள்கள் நாக்கைப் பிடுங்கிக்கொண்டார்களா இல்லையா. .?

என் இரு சக்கர வாகன வண்டியை எடுத்துக்கொண்டு அவர் ஊரை நோக்கி விட்டேன்.

பத்து நிமிடப் பயணம்.

அப்பாவின் நண்பர் மலைப்பெருமாள் வாசலிலேயே அமர்ந்திருந்தார்.

வண்டியை நிறுத்தி இறங்கியதும்….அடையாளம் கண்டு…..

” வாங்க தம்பி ! ” வரவேற்றார்.

நடந்து நான் அவர் முன் அமர. …

” நல்லா இருக்கீங்களா. .? மனைவி மக்களெல்லாம் நலமா. .? ” வாஞ்சையாய் விசாரித்தார்.

” ரொம்ப நலம். ” சொன்னேன்.

” வெயில்ல வந்திருக்கீங்க. மோர் சாப்பிடுங்க. விசாலம். .! ” திரும்பி உன் நோக்கி குரல் கொடுத்தார்.

” இதோ வர்றேங்க. ..” அடுத்த நிமிடம்…..ஆடம்பரமில்லாமல் ஐம்பது வயது பெண்மணி ஒருத்தி தலை காட்டினாள்.

ஆள் ரொம்ப நாசுக்கு, நறுவிசாய் இருந்தாள்.

” இது நம்ப தம்பி. தாகத்துக்கு மோர் எடுத்து வா. ” சொன்னார்.

” சரி ” அவள் உடன் திரும்பி உள்ளே சென்றாள்.

இவர்களைத் தவிர வேறு நாத்திகள் இல்லாதது மாதிரி வீடு வெறிச்சோடி இருந்தது. பிறர் பேச்சு, நடமாட்டங்களும் இல்லாமலிருந்தது.

” பையன் இல்லீங்களா. .? ” நானே கேட்டேன்.

” இல்லை தம்பி. அவன் மாற்றல். சென்னைக்குக் குடியேறி ரெண்டு வருஷமாகுது. ”

” அதான் ரெண்டாம் கலியாணம் பண்ணிக்கிட்டீங்களா. .? ” – வார்த்தைகள் கேட்க வாய் வரை வந்தது. கேட்டே இருப்பேன். அதற்குள் அந்த அம்மாள் கையில் மோருடன் வந்துவிட்டாள்.

” இது என் ரெண்டாவது சம்சாரம் ” மலைப்பெருமாள் இப்போதுதான் அவளை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

எனக்கு மோர் பருக மனமில்லை.

” குடிங்க. ..”

அவர் மனம் நோகக்கூடாதென்று குடித்தேன்.

” வயசான காலத்துல வேண்டாத வேலைன்னு எல்லோரும் நக்கலாய் பேசுறாங்க. நான் கவலைப்படல, வருத்தப்படல. ” அவரே வலிய குரலில் வார்த்தைகளை விட்டார்.

நான் வாய் திறக்கவில்லை.

தொடர்ந்தார்.

” என்னத்த சொத்து, பத்து வச்சிருந்தாலும் ஒரு கால கட்டத்துக்கு பின் பெத்தவங்க மேல் புள்ளைங்களுக்கு மதிப்பு மரியாதை இல்லேஎன்கிறது நிச்சயம், நிதர்சனம், உண்மை தம்பி. பையன் இங்கே வேலையில இருக்கிறவரைக்கும் அவன் பொண்டாட்டிக்காரி…. அதாவது என் மருமகள் முணு முணு, தர தரன்னு இருந்தாலும் வயித்து சோத்துக்கு வஞ்சனை இல்லே. அவனுக்குள் மாற்றல் வந்து வெளியே போனதும்தான் சங்கடம். அவுங்க வேறு முகம் என்ன என்பது தெரியவும் வாய்ப்பாய் இருந்தது.

விலாவாரியா சொல்றேன். எனக்கு இங்கே தனியாய் இருக்கப் பிடிக்காமல் பேரன் பேத்திகளைக் கொஞ்ச மகன், மகள் வீட்டுக்குப் போவேன். ரெண்டு மூணு நாள் தங்குவேன்.

அது அவுங்களுக்குப் பிடிக்கல, தப்பா பட்டுது போல.

” சோத்துக்கு அங்கெ இங்கேன்னு அடிக்கடி அலையாதீங்கப்பா. ஒரு வேலைக்காரியை அமர்த்தி நல்லா சமைச்சி சாப்பிடுங்க. ” அண்ணன், தங்கச்சி ரெண்டு பேருமே சொல்லி வச்சாப்போல சொன்னாங்க.

‘ அடப்பாவிகளா. .?! நான் வர்றது, இருக்கிறதைச் சுமையா நினைக்கிறாங்களே. .! ‘ நெனைச்சி , நொந்து…

” சொத்துகளை வித்து ஆளுக்குப் பாதியாய்க் குடுத்து ரெண்டு பேர் கிட்டேயும் ஆறாறு இருக்கிறதாய் முடிவு பண்ணிட்டேன். ” என் மனசுல உள்ளதை ரெண்டு பேர்கிட்டேயும் சொன்னேன்.

” உங்க முடிவு சரிப்பா. ஆனா. …மாப்பிள்ளை இதை விரும்ப மாட்டார்ன்னு என் மனசுக்குப் படுது. அடுத்து பெண் வீட்டில தங்குறதுல ஒரு நெருடல். எனக்கொன்னு படுதுப்பா. யாருக்கும் சிரமமில்லாம உங்களுக்கும் ஒரு பங்கை ஒதுக்கி அதை முதியோர் காப்பகத்துல கொடுத்து சேர்ந்து ராஜ உபச்சாரமாய் இருக்கலாமேப்பா. ” பொறந்ததுங்க ரெண்டு பெரும் பேசி வச்ச மாதிரி சொன்னாங்க. எனக்கு வெறுத்துப் போச்சு. ”

” எனக்கும் அப்படி செய்யலாம்ன்னு ஆசை. இடையில இவுங்க வந்து சிக்கிட்டாங்க. வெளியூர் கோயில்ல சந்திச்சேன். ” கை காட்டி சொன்னார்.

” விசாலம் விதவை. பொண்ணுங்க ரெண்டும் கட்டிக்கொடுத்து அமெரிக்காவுல இருக்காங்க. பணம் காசு வந்தாலும் ஆதரிக்க ஆளில்லே. சொல்லி விசனப்பட்டாங்க. அப்புறமென்ன. ..

முதியோர் இல்லத்துக்குப் போகாம ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலாய் இருக்கிறதை முடிவு பண்ணி திருமணம் முடிச்சோம். ” நிறுத்தினார்.

‘ தன் தவறை நியாயப்படுத்த கதை ! ‘ எனக்கு பட்டது. அதே சமயம் மகன், மகள் கை நழுவல்கள் வருத்தத்தை ஏற்படுத்தியது.

” அப்புறம் தம்பி…. என் சொத்துகளை எல்லாம் மூணாப் பிரிச்சி மகன் மகள்களுக்கு ஆளுக்கு ஒண்ணாய் கொடுத்துட்டேன். அடுத்து எனக்குள்ள ஒரு பங்கை எங்களுக்குப் பிறகு இதை அனுபவிக்க ஆள் வேணும். ..கஷ்டப்படுற ஒரு ஆணாய் இருந்தாலும், பெண்ணாய் இருந்தாலும் சொல்லுங்க சுரேஷ். மகன், மகளாய் ஏத்து செய்யிறதை செய்யிறோம். ” என்றார்.

எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. திடுக்கிட்டுப் பார்த்தேன்.

” ஏன் தம்பி அதிர்ச்சி. நான் பெத்ததுங்களுக்குக் கடமைகளை முடிச்சிட்டேன். அவுங்க. .. பெத்தவங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை செய்யலையே. எனக்குப் பிறகு என் பங்கும் அவுங்களுக்கு ஏன் போய் சேரனும் ? வர்ற பொண்ணு புள்ளைங்க சொத்துக்காகவாவது எங்களைக் காப்பாத்தும். எங்களுக்கும் வறுமைப்புள்ள பொழைச்ச திருப்தி. ” முடித்தார்.

‘ நியாயம்தான்! ‘ எனக்கு தெரிய. …

” அந்த மாதிரி ஆட்கள் இருந்தால் சொல்றேன்யா ..” திருப்தியாய் எழுந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)