அப்பாவிக் கணவர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 12, 2016
பார்வையிட்டோர்: 7,359 
 
 

சடகோபன் ஒரு பண்பாளர். நான்கு பேர் அடங்கிய அந்த வீட்டில் அவர் தான் சம்பாதிப்பவர். அரசாங்க உத்தியோகத்தில் சென்னையில் ஒரு பெரிய கெசடட் அதிகாரி. நேர்மையானவர். கண்டிப்பானவர். திறமைசாலி.

ஆனால் அவருக்கு அதிகாரி அவர் மனைவி காயத்ரி. வீட்டில் உள்ள அனைவரையும் ஆட்டிப் படைப்பவள். அவர்களுக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் வசந்தி. சென்னையில் ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ படித்துக் கொண்டிருக்கிறாள். அடுத்தவள் ரம்யா +2 படித்துக் கொண்டிருக்கிறாள்.

காயத்ரிக்கு தான் ரொம்ப கெட்டிக்காரி என்கிற நினைப்பு. சிக்கனம் என்கிற பெயரில் விலை மோரில் வெண்ணை எடுப்பவள். படு கஞ்சம். காய்கறியிலிருந்து கோலமாவு வரை பேரம் பேசிப் பேசியே வியாபாரிகளை விரட்டி அடிப்பவள்.

வீட்டின் வாசலுக்கு வரும் காய்கறிக்காரனிடம் எல்லாமே நூறு கிராம்தான் வாங்குவாள். வெண்டைக்காய் வாங்கினால் பொறுமையாக அதன் மெல்லிய முனைகளை உடைத்துப் பார்த்து பொறுக்கி வைத்து, பீன்ஸ் காய்களை பிய்த்துப் பார்த்து, தக்காளியை அமுக்கி என்று ஒவ்வொரு காய்களையும் இம்சைப் படுத்தி கடைசியாக மொத்தமாக விலை பேசி, அவனுடன் சண்டை போட்டு மிகக் குறைந்த விலையில் வாங்கிக் கொள்வாள். தன் சாமர்த்தியத்தை தோழிகளிடம் பீற்றிக் கொள்வாள்.

ஒரு நாள் சமைத்துவிட்டு அதை நான்கு நாட்கள் ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு சுட வைத்து பரிமாறி சமாளிப்பாள். இது கூட பரவாயில்லை… தனக்கு மரியாதைக்கு வைத்து ஓதிக் கொடுக்கப்பட்ட புடவைகளை அடுத்தவர்களுக்கு விற்று காசாக்கிக் கொள்வாள். தன் தோழிகள், தெரிந்தவர்கள் ஷாப்பிங் செல்லும்போது இவளும் அவர்களுடன் ஒட்டிக்கொண்டு தி.நகரில் உள்ள தனக்கு தெரிந்த கடைகளுக்கு கூட்டிச் செல்வாள். அதில் பத்து பர்சன்ட் கமிஷன் பார்த்து விடுவாள்.

தி.நகரில் உள்ள அந்த பிரபல பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்கு தரப் படும் பிரசாதத்தை சாப்பிட்டுவிட்டு அதைத் தவிர ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து அதையே மதியம் சுட வைத்து சாப்பிடுவாள்.

சடகோபன் அப்பாவி. மூக்கைப் பிடித்து அமுக்கினால், வாயினால் சுவாசிக்கத் தெரியாது. குடும்ப விஷயங்களில் சமர்த்து சாமர்த்தியம் போறாது. காயத்ரி அடிக்கடி “உங்க அம்மா எப்படித்தான் உங்கள வளர்த்தாளோ” என்று இடித்துக் காண்பிப்பாள். அவருக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. அவரின் சம்பளத்தை அப்படியே காயத்ரிதான் எடுத்துக் கொள்வாள். அவளிடம் செலவுகள் பற்றி எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார். கோபமே வராது.

கடைக்குட்டி ரம்யாவிடம் மிகவும் வாஞ்சையுடன் இருப்பார். “உங்க பெயரையாவது சடகோபம்னு வெச்சிருக்கலாம்பா” என்று ரம்யா அடிக்கடி அவரை கிண்டல் பண்ணுவாள். தேமேன்னு அமைதியாக ஆபீஸ் போவார், வருவார். பேப்பர் படிப்பார். டி.வி. நியூஸ் பார்ப்பார். தன் காரியங்களை தானே பார்த்துக் கொள்வார்.

அனால் காயத்ரி இவரிடம் பேசும்போது அதட்டலாகத்தான் பேசுவாள்.

இவர் அன்புடன் “காயத்ரி” என்று கூப்பிட்டால், அவள் “என்ன வேணும் உங்களுக்கு?” என்று அதட்டுவாள். அவளின் இந்த அலட்சியப் போக்கினால் குழந்தைகளுக்கும் சடகோபன் மேல் ‘அப்பா’ என்கிற மரியாதை துளியும் கிடையாது. எல்லாவற்றையும் அம்மாவிடம் கேட்டுத்தான் செய்வார்கள்.

காயத்ரி சடகோபனுக்கு தெரியாமல் மாட்னி ஷோ சினிமாவுக்கு அடிக்கடி சென்று வருவாள். அவருக்குத் தெரியாமல் லாக்கரில் நிறைய நகைகள் சேர்த்துக் கொள்வாள், புடவைகள் விதம் விதமாக வாங்கிக் கொள்வாள்.

சடகோபன் வக்கணையாக சாப்பிடக் கூடியவர்தான். அனால் எதையும் காயத்ரியிடம் செய்யச் சொல்லி கேட்டு வாங்கிச் சாப்பிட மாட்டார். இதில் மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால் பெரும்பாலான நேரங்களில் அவருக்கு இருப்பதைப் பரிமாறக்கூட காயத்ரி மறந்து விடுவாள்.

அன்றும் அப்படித்தான்… இரவு சாப்பிடும்போது “தோசைக்கு தொட்டுக் கொள்ள என்ன இருக்கு?” என்று ஆவலுடன் சடகோபன் கேட்டபோது “மிளகாய்ப்பொடி இருக்கு” என்று காயத்ரி சொன்னாள். இவரும் அமைதியாக தோசைக்கு மிளகாய்ப் பொடி போட்டுக் கொண்டு சாப்பிட்டார்.

அடுத்து காயத்ரியும் இரண்டு மகள்களும் சேர்ந்து சாப்பிடும்போது பிரிட்ஜில் சாம்பாரும், தக்காளி சட்டினியும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

காயத்ரி மிகவும் சாதரணமாக, “ஐயோ…அப்பாக்கு தொட்டுக்க ஒண்ணுமே போடலடி..” என்றாள். அப்போது அங்கு தண்ணீர் குடிக்க வந்த சடகோபன் மிக இயல்பாக, “அதனாலென்ன குழந்தைகளுக்கு போடு… நீயும் சாப்பிடு” என்றார். சின்னதாக ஒரு கோபத்தையோ, எரிச்சலையோ எதையும் அவர் வெளிப் படுத்தவில்லை.

எம்.பி.ஏ படித்து முடித்த வசந்திக்கு அண்ணா சாலையில் உள்ள ஒரு நல்ல கம்பெனியில் நிரந்தர வேலை கிடைத்தது. அடுத்த ஆறு மாதத்தில் கன்பர்மேஷனும் ஒரு வருடத்தில் நல்ல இன்க்ரிமென்டும் கிடைத்தது.

இப்படியாக நன்றாகப் போய்க் கொண்டிருந்த சாத்வீகமான குடும்பத்தில் வசந்திக்கு தன்னுடன் வேலை பார்க்கும் காளிமுத்துவின்மேல் காதல் ஏற்பட்டது.

வசந்தியும், காளிமுத்துவும் ஒரு நாள் தி.நகர் ரெஸ்டாரண்டில் காப்பி குடித்துக் கொண்டிருந்தபோது அதை காயத்ரி பார்த்துவிட்டாள். அன்று இரவே அது யார் என வசந்தியிடம் கேட்டபோது, “அவர் பெயர் காளிமுத்து என்றும், தன்னுடன் வேலை பார்ப்பதாகவும் அவரைத்தான் தான் மணந்து கொள்ளப் போவதாகவும்” வசந்தி சொன்னாள்.

காளிமுத்துவின் பச்சை நிற டிரவுசரும், மஞ்சள் சட்டையும், முரட்டுத் தோற்றமும் காயத்ரிக்கு குமட்டிக்கொண்டு வந்தது.

“ஏண்டி லவ் பண்ணாலும் டீசண்டா ஒருத்தன பாத்துத் தொலைக்கக் கூடாதா?”

“அதுதான்மா காதல்… அவர் ரொம்ப நல்லவரும்மா, நீதாம்மா அப்பாகிட்ட சொல்லி எப்படியாவது சம்மதிக்க வைக்கணும்.”

“அப்பாவா… அவருக்கு காதலைப்பற்றி ஒரு எழவும் தெரியாது… ஒரு சினிமா உண்டா, டிராமா உண்டா? இவர கட்டிண்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்.?”

வசந்தியின் காதல் ரம்யாவுக்கும் சொல்லப்பட்டது. காயத்ரி, வசந்தி, ரம்யா மூவரும் கூடிக் கூடி பேசிக் கொண்டனர். சடகோபன் வீட்டில் இல்லாதபோது காளிமுத்து அடிக்கடி இவர்கள் வீட்டிற்கு வந்து சென்றான்.
மூவரும் காளிமுத்துவுடன் சினிமா, ஹோட்டல் சென்று விட்டு வருமளவிற்கு அன்னியோன்யம் வளர்ந்தது.

அப்பாவி சடகோபனிடம் எல்லாமே மறைக்கப் பட்டது.

ஆறு மாதங்கள் சென்றன. அன்று வசந்தி வாந்தி எடுத்தாள். லேடி டாக்டரிடம் காண்பிக்கப்பட்டது. வசந்தி மூன்று மாதம் கர்ப்பம் என்பது தெரியவர காயத்ரி அதிர்ந்து போனாள். அதைத் தொடர்ந்த நாட்களில், வசந்தியிடம் காளிமுத்துவின் ஒட்டுதல் குறைந்துகொண்டே வந்து, கடைசியில் நின்றும் போனது. அவன் பெங்களூருக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு சென்று விட்டான்.

அடுத்த தவறையும் காயத்ரி செய்யத் துணிந்தாள். கர்ப்பத்தைக் கலைக்க வசந்தியை அழைத்துக்கொண்டு பிரபல டாக்டரிடம் சென்றாள். அவர், “தற்போதைய நிலையில் அதைக் கலைப்பது உயிருக்கு ஆபத்தாக முடியும்” என்று சொல்லிவிட்டார்.

வேறு வழியில்லாமல் நிழலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதிக பணம் சம்பாதிக்கும் ஒரு லேடி டாக்டரிடம் காண்பித்து கர்ப்பத்தைக் கலைத்தாள்.

கர்ப்பம் முரட்டுத் தனமாக கலைக்கப் பட்டதால் அழற்சியினால் அல்குல் சீழ் பிடித்து அடிக்கடி டாக்டரிடம் போக வேண்டியிருந்தது.

சென்னையில் தீபாவளி முடிந்ததும், மழை பொத்துக்கொண்டு பெய்தது. எங்கும் வெள்ளம். இயல்பு வாழ்க்கை முடங்கியது.

மழையினால் தொடர்ச்சியாக ஐந்து முறைகள் அந்த லேடி டாக்டரை பார்க்க முடியவில்லை. மழை முடிந்து வெள்ளம் வடிந்து சென்று பார்த்தபோது அவளது ஹாஸ்பிடலே வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போய்விட்டது தெரிய வந்தது.

சீழ் பிடித்த இடம் பெரிதாக செப்டிக் ஆனதும், வசந்தி காய்ச்சலில் விழுந்தாள். காயத்ரி எவ்வளவோ முயன்றும் வசந்தியைக் காப்பாற்ற முடியவில்லை. இரண்டு வாரத்தில் துவண்டுபோய் இறந்தாள்.

மழையைத் தொடர்ந்த காய்ச்சலினால் இயற்கையாக இறந்து விட்டாள் என்று சடகோபன் நம்ப வைக்கப்பட்டார்.

சில நாட்கள் சென்றன. அக்காவின் மரணத்தினால் ரம்யாவுக்கு அம்மாவின் மேல் பயங்கர கோபம் கனன்று கொண்டிருந்தது. அன்று மாலை ஆறு மணி இருக்கும்… “அக்கா அந்தக் காளிமுத்துவை காதலிக்கிறான்னு தெரிஞ்சதும் அத அப்பாகிட்ட நீ ஏம்மா உடனே சொல்லலை?”

“………..”

“அப்பா உன்ன நம்பித்தானே இந்தக் குடும்பத்தையே ஒப்படைச்சாறு…
சின்ன சின்ன விஷயங்களிலிருந்து அவர்கிட்ட பொய் சொல்ல ஆரம்பித்து, நிறைய விஷயங்களை அவரிடமிருந்து மறைத்து….சே. நீ ரொம்ப கெட்டிக்காரின்னு நீயே உன்னப் பத்தி முடிவு செய்து, இப்ப அக்காவ சாவடிச்சிட்டிய….என்ன மாதிரியான அம்மா நீ?”

“சும்மா இருடி, அவருக்கு தெரிஞ்சா என்னத்த பெரிசா பண்ணியிருப்பாரு?”

“கண்டிப்பா அக்கா செத்திருக்கமாட்டா. உடனே அவள கண்டிச்சிருப்பாரு… இல்லேன்னா வேற கல்யாணம் பண்ணி வச்சிருப்பாரு. அதுவும் முடியலைன்னா அந்த நாய்க்கே அக்காவ கல்யாணம் பண்ணி வெச்சிருப்பாரு. அக்கா அவன்கிட்ட கண்டிப்பா ஏமாந்து இருக்க மாட்டா. இந்த மாதிரி செத்திருக்கமாட்டா. அப்பா ஆபிஸ்ல காட்டின கண்டிப்பையும், கோபத்தையும் நம்மகிட்ட காட்டாம, ரொம்ப பாசமா அன்பா இருந்து நம்மையெல்லாம் நம்பி மூத்த பொண்ண இப்ப பறி கொடுத்துட்டாரு…அவருக்கு இன்னமும் உண்மை தெரியாது.”

“ரம்யா உனக்கு ரொம்ப வாய் நீளுது…”

அப்போது சடகோபன் திடீரென வீட்டினுள்ளே வந்தார்.

காயத்ரியிடம் கோபமாக, “ஏண்டி நீளக் கூடாது? நான் எல்லாத்தையும் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்… குடிச்சுட்டு வந்து பொண்டாட்டிய கை நீட்டி அடிக்கிறவன், ரேசுக்கு போறவன், சீட்டாடிட்டு வர்றவன், கூத்தியாவோட கூத்தடிக்கிறவன்… இந்த மாதிரியெல்லாம் கணவன் அமைஞ்சா நீங்கல்லாம் மூக்க சிந்திகிட்டு ஐயோன்னு அழுதபடி வாழ் நாள் முழுவதும் பிலாக்கணம் பாடுவீங்க… நேர்மையா எனக்கு எல்லாமே என் பொண்டாட்டிதான்னு நம்பினா… குடும்பத்தையே அசிங்கப் படுத்தி குறைந்த பட்ச வாழ்வியல் ஒழுக்கத்தைக்கூட கடைப்பிடிக்காம புருஷனுக்குத் தெரியாம சினிமாக்கு போவீங்க, நகை நட்டெல்லாம் வாங்குவீங்க, மினுக்குவீங்க, பெத்த பெண்ணையே கொலையும் செய்வீங்க…

அப்பாவின் கோபத்தை முதன் முறையாகப் பார்த்த ரம்யா அதிர்ந்தாள். .

“நான் உனக்கு ஒரு நல்ல கணவனா, குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருந்தேன்னு நம்புகிறேன். ஆனா இப்படியும் அசிங்கமா ஒரு மனைவி, ஒரு அம்மா நடந்து கொள்ள முடியும் என்பதற்கு நீ ஒரு அவஸ்தையான உதாரணம். எனக்கு இப்ப உன் மேல் நம்பிக்கை போய்விட்டது…..

“இந்த வீடு என் சம்பாத்தியத்தில் உன் பேர்ல நான் வாங்கியது. நீயும் இப்ப நிறைய நகை நட்டு சேர்த்து வச்சிருக்க… பணமும் இருக்கிறது. இனிமேல் இந்த வீட்ல நீ நிம்மதியாக உன் இஷ்டம் போல இருக்கலாம். நானும் ரம்யாவும் வேறு வீடு பார்த்துப் போகிறோம். எஞ்சியுள்ள என் ஒரே மகளை நல்ல இடத்தில் கல்யாணம் செய்து வைக்க வேண்டியது என் கடமை. அதை கண்டிப்பாக நான் செய்வேன்… ச்சே… இனிமே இந்த வீட்ல நான் ஒரு நிமிஷங்கூட இருக்க மாட்டேன். உன் முகத்துல முழிச்சாலே பாவம். குட் பை.”

சடகோபனும், ரம்யாவும் விருட்டென்று உள்ளே சென்று தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு காயத்ரியின் முகம் பார்க்காது வீட்டை விட்டு வெளியே சென்றனர்.

காயத்ரியால் அப்போதைக்கு அழத்தான் முடிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *