கதையாசிரியர்:
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 28, 2013
பார்வையிட்டோர்: 30,615 
 

அந்த பங்களாவின் வெளியில் புல் வெளி இருந்தது.

காலைத் தென்றல் இதமாக இருந்தது. பிரம்பு நாற்காலியில் சாய்ந்திருந்த அன்னபூரணி கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டதும் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

காரை நிறுத்திவிட்டு டிரைவர் ஆறுமுகம் இறங்கி வருவதையும் பார்த்து “என்ன ஆறுமுகம், தம்பி வரலே?” கேட்டாள்.

“வந்துட்டாங்க, பெரிய அய்யா வீட்டுக்குப் போயிட்டு வரேன்னாங்க” என்றான் பணிவாக. அவனுக்கு எதிரில் உணர்ச்சிகளைக் காட்ட விரும்பாத அன்னபூரணி எழுந்து உள்ளே போனாள்.

இவன் என்னதான் நினைத்துக் கொண்டு இருக்கிறான்? லீவிற்கு வரும் குழந்தைகள் பெற்ற தாயையும், தகப்பனையும் பார்க்க ஆவலாக ஓடிவருமா? வந்திறங்கியதுமே பெரியப்பாவைப் பார்க்க போறதாவது, சதா பெரியப்பா, பெரியப்பா தானா?

இவன்தான் இப்படியென்றால் மகள் அனுவும் அப்படித்தான் செய்கிறாள் அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அந்தக் கிழவன் தான் ஏதோ மருந்து வைத்து பெற்றவர்களையே மறக்க வைத்திருக்கிறான். இல்லாவிட்டால் இந்த பிள்ளைகள் பெற்றவர்களைவிட அந்த கிழவனிடம் பாசம் வைக்குமா? எத்தனை செய்தும் நம்மிடம் பாசம் இல்லையே. இதுகளுக்கு!

இது நாள் வரை சரி. விவரம் புரியாதவர்கள்! கல்லுhரியில் கால் வைத்த பிறகும் கூடவா பெற்றவர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. வரட்டும் அவன், கருவினாள் அன்னபூரணி!
நீண்ட நேரத்திற்குப் பிறகு பிரபு வந்தான்.

“அம்மா எங்கள் கல்லுhரியிலேயே நான்தான் மாணவத் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கேன்” என்றான் குதூகலத்துடன்.

“அந்த சமாச்சாரத்தைச் சொல்லத்தான் பெரியப்பா வீட்டுக்கு ஓடினாயா? இத்தனைக்கும் காரணமான தாய்-தகப்பனிடம் அதை முதலில் சொல்லணும்னு உனக்குத் தெரியலையா?” காரமாக கேட்டாள் அன்னபூரணி.

‘என்னம்மா நீங்க, நம்ம குடும்பத்திலே பெரியவர் அவர்தானே? உங்ககிட்டே சொல்லாம இருந்தா நீங்க கோவிச்சுக்கணும், அதான் சொல்லிட்டேனே, பெரியப்பா வீடு வர்ற வழிதானே அதான் அவர்கிட்டே சொல்லி ஆசீர்வாதம் வாங்கினேன் அது தப்பா?’
அவளுக்கு அழுகையும், ஆத்திரமும் பீறிட்டன.

“ஆமாண்டாப்பா அவர்தான் உங்களைப் பெற்று வளர்த்து ஆளாக்கியவர் நாங்கள்ளாம் . . “

பிரபு அவளை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னான்.

“பெற்று விட்டால் மட்டும் அம்மா அப்பா ஆகிவிட முடியாதும்மா.”

“டேய், என்னடா சொல்றே? உங்கப்பா உங்களையெல்லாம் பெரிய கான்வென்ட் படிப்பு படிக்க வைக்கலே? விதம் விதமா துணி வாங்கித் தரலே? நீங்க கேட்டப்ப நீங்க விரும்பின பொருட்களை எல்லாம் தடை சொல்லாம வாங்கித் தரலே? இதெல்லாம் நாங்க செய்யாம உங்க பெரியப்பாவா செஞ்சார்”

உங்களைச் சொல்லிக் குற்றமில்லையடா. ஏதோ தம்பி கஷ்டப்பட்டு சம்பாதிச்சு முன்னுக்கு வரட்டும். அவன் பெத்த குழந்தைகள் அமோகமா வாழட்டும்னு நினைக்காமே பொறாமையிலே வம்சம் அற்றுப் போன உங்க பெரியப்பா எதையோ சொல்லி உங்க மனசை கலைச்சிட்டார் அதாண்டா அப்படிப் பேசறே.”

கோபத்துடன் முகமெல்லாம் சிவக்கத் தாயை ஏறிட்டுப் பார்த்த பிரபு –
“அம்மா அனாவசியமா பெரியப்பாவைத் திட்டாதீங்க. பெரிய கான்வென்டிலே படிக்க வைச்சீங்க. நல்ல துணிமணி, பங்களா, கார் எல்லா வசதியும் செய்தீங்க, மாதம் பிறந்தா காசு, டீக்கா டிரஸ், இஷ்டம் போல் வசதி எல்லாமே செஞ்சிருக்கீங்க ஆனால் . .”

“ஆனால் என்னடா ஆனால், இதை விட பெற்றவர்கள் என்ன செய்யணும்?” தாடை இறுகியது அவளுக்கு.

“அன்பு செய்ய மறந்துட்டீங்க அம்மா ஊர் பெருமைக்காகவும், போலி கவுரவத்துக்காகவும் எல்லாம் செஞ்சீங்க. ஒரு நாளாவது எங்களோட கொஞ்சி மகிழ்ந்து சந்தோஷமா எங்களோட நடந்ததுண்டா?
பெரியப்பாவுக்கு பிள்ளைங்க இல்லாட்டியும் எங்க கிட்டே அன்பு செலுத்தினார். உண்மையைச் சொன்னால் அவருடைய அன்புதான் இத்தனை வசதி இருந்தும் நாங்க தறிகெட்டுப் போகாம இருந்ததற்குக் காரணம். அந்த அன்பு உரம் மட்டும் இல்லேன்னா, நாங்க இந்நேரம் ஊதாரிப் பிள்ளைகளா மாறிபோயிருப்போம். இது புரியாம பணம் இல்லேங்கிற ஒரே காரணத்துக்காக எப்பப் பார்த்தாலும் பெரியப்பாவை கரிச்சுக் கொட்டறீங்களே நியாயமா? மருந்து வைச்சுட்டார்னு சதா அப்பா கிட்டே புலம்புறீங்களே. ஆமாம்மா அன்பு என்கிற மருந்தை வைச்சதினாலேதான் அவரைச் சுற்றியே நாங்க ஓடறோம் புரியுதா?” உறுமினான் பிரபு.

இத்தனையும் கேட்டு உண்மைச் சுட அசைவற்று நின்றாள் அன்னபூரணி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *