மினு ஸ்கூலுக்கு சென்று விட, வேலைக்கு கிளம்பிய சங்கரை, பின் தொடர்ந்து வந்தாள் ஹேமா. வெளியே கதவு திறந்ததும், சில்லென்ற காற்று முகத்தில் அறைந்தது.
“”இன்னைக்கு வெதர் டெலி-காஸ்டில், ஈவினிங் ஸ்நோபால் இருக்குன்னு சொல்லி இருக்காங்க. நீங்க சீக்கிரம் வந்துடுங்க சங்கர்.”
“”ஓ.கே., ஹேமா… உனக்கு தான், நாலு நாளைக்கு ரெஸ்ட்; என்ஜாய் பண்ணு… பை.”
ஜெர்கினை போட்டபடி காரில் ஏறி, சங்கர் செல்ல, குளிருக்கு இதமாக கைகளை கட்டியபடி வெளியே பார்த்தாள். ஊரிலிருக்கும் அம்மா ஞாபகம் வந்தது. அம்மாவுக்கு தான் இந்த க்ளைமேட் ரொம்ப பிடிக்கும்.
“ஹேமா… மார்கழி மாசம் காலை நேர பனிக் காற்றில் வாக்கிங் போறது, மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா… உங்கப்பா தான் குளிருக்கு பயந்துட்டு கிளம்ப மாட்டேங்கிறாரு!’
“அம்மா நீ அமெரிக்கா வந்தால், நிச்சயம் இதையெல்லாம் என்ஜாய் பண்ணுவே…’ மனதில் நினைத்தவளாய் வீட்டினுள் செல்ல திரும்பியவள், பக்கத்து வீட்டிலிருந்து மரப் படிக்கட்டுகளில் தட, தடவென்று இறங்கி ஓடும் சிறுவர்களை பார்த்தாள்.
“”ஆன்ட்டி… குட் மார்னிங்!”
சிரித்தபடி அவர்களை பார்த்து கையசைத்தாள்.
“”அம்மா… ஆபீஸ் போயிட்டாங்களா?”
ஹேமா ஆங்கிலத்தில் கேட்க, “”இல்லை ஆன்ட்டி… உள்ளே தான் இருக்காங்க!”
கதவை பூட்டினாள். “ஹெலனாவை சந்தித்து, ஒரு வாரம் இருக்கும். போய் பார்த்துவிட்டு வரலாம்…’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.
ஹெலனாவும், பிரபுவும் காதலித்து திருமணம் செய்தவர்கள். பிரபு, அமெரிக்க பெண்ணை தன் மனைவியாக்கி, அழகான இரட்டை குழந்தைகள் பிறக்க, அமெரிக்காவில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தான். அவர்கள் போன வருடம் தான், பக்கத்து வீட்டை விலைக்கு வாங்கி, குடி வந்தனர்.
ஹெலனா நட்பு முறையில், ஹேமாவுடன் நல்லவிதமாக பழகினாள். இந்திய கலாசாரத்தில் அவளுக்கு ஈடுபாடு அதிகம். ஹேமாவிடம், நிறைய விஷயங்களை கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்வாள்.
பிரபுவும், அவளை அக்கா என்றழைத்து, பாசத்துடன் பழகினான். குடும்பத்தை பிரிந்து இருக்கும் ஹேமாவுக்கும், பிரபுவின் நட்பு, மகிழ்ச்சியை கொடுத்தது.
“”ஹெலனா… உன்னை பார்த்து நாளாச்சுன்னு வந்தேன்… எப்படி இருக்கே? பிரபுவையாவது அடிக்கடி மீட் பண்ணுவேன்; உன்னை பார்க்க முடியலையே…”
(அவர்களின் உரையாடல், ஆங்கிலத்தில் இருந்தது!)
“”வாங்க ஹேமா… கம்பெனி விஷயமாக அடிக்கடி வெளியூர் போக வேண்டியிருக்கு. ஒரு வாரமாக வீட்டில் இல்லை!”
“”என்ன ஹெலனா… டல்லாக இருக்கே. உடம்புக்கு ஏதும் முடியலையா?”
“”ஹேமா… உங்க கிட்டே சொல்றதில் தப்பு இல்லைன்னு நினைக்கிறேன். கொஞ்ச நாளாக எனக்கும், பிரபுவுக்கும் அண்டர்ஸ்டாண்டிங் சரியில்லை. எதற்கெடுத்தாலும் சந்தேகப்படறான். என்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கிறான். ஏன் அவன் இப்படி மாறிபோனான்னு தெரியலை.
“”மார்க்கெட்டிங் துறையில் இருக்கிறதாலே வேலை விஷயமாக அடிக்கடி வெளியே தங்க வேண்டிய சூழ்நிலை. போன முறை என் ஆபீஸ் பிரெண்ட் ஜோகின்சோட, ரெண்டு நாள் வர்ஜினியா போயிருந்தேன். அதற்கு பிறகு தான் பிரபுவிடம் பல மாற்றங்கள்…
“”நான் அமெரிக்க பெண்ணாக இருந்தாலும், இந்திய கலாசாரம், பண்பாடு இதிலெல்லாம் ஈடுபாடு ஏற்பட்டுதான் பிரபுவை மணந்தேன்.
“”கணவன் – மனைவி தாம்பத்யம் எவ்வளவு புனிதமானதுன்னு இந்திய தம்பதிகளை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். கணவன் – மனைவி, இருவரும் அவரவர் நிறை, குறைகளோடு ஒருவரையொருவர் ஏற்று, விட்டுக் கொடுத்து, குழந்தைகளுடன் நிறைவாக வாழ்க்கை நடத்துவது போற்றபட வேண்டியது.
“”அந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபு, எனக்கு கணவராக கிடைத்தது என் பாக்கியம். அதை போல, நானும் ஒரு நல்ல மனைவியாக கடைசி வரை பிரபுவுடன் வாழ வேண்டும் என்று தான் நினைத்தேன்; ஆனா, பிரபு… இரண்டு பேரும் பிரிஞ்சுடுவோம்ன்னு சொல்றான்!”
அதிர்ந்து போய் அவளை பார்த்தாள் ஹேமா.
ஒரு முறை பிரபுவிடம், “பிரபு… உன்னோட கல்யாணத்துக்கு, உன் பெற்றோரின் ஒப்புதல் கிடைத்ததா… இந்தியாவில் இருக்கிறவங்க இதை ஒத்துக்கிட்டாங்களா?’ என்று கேட்டாள் ஹேமா.
புன்சிரிப்புடன் அவளை பார்த்தான் பிரபு… “இல்லக்கா… போராடித்தான் சம்மதம் வாங்கினேன். ஹெலனா ரொம்ப நல்லவ. நம்ம இந்திய பண்பாட்டில் உண்மையான ஈடுபாடு உள்ளவ. முக்கியமா என் மனசுக்கு பிடிச்சிருக்கு. எல்லா விஷயங்களிலும், இரண்டு பேரும் ஒத்துப் போறோம். என் வாழ்க்கை அவளோடு இணைந்தால், நான் சந்தோஷமாக இருப்பேன்கிறதை எடுத்து சொன்னேன். அம்மாவுக்கு சம்மதமில்லை; அப்பா தான் என் மனசை புரிஞ்சுக்கிட்டு சம்மதிக்க வைத்தார்…’
“பாசத்தையும், பிரியத்தையும் கொட்டி வளர்த்தோம்… நம் பிள்ளை இப்ப தொலைதூரத்தில் இருக்கான். எங்கே இருந்தாலும் அவன் சந்தோஷமாக இருந்தால் தான், நாம் நிம்மதியாக இருக்க முடியும். அவன் இஷ்டப்பட்ட வாழ்க்கையை அமைச்சுக்கட்டும். எந்த நாட்டை சேர்ந்தவளாக இருந்தால் என்ன… நம் மகனின் மனதை கவர்ந்தவள், நிச்சயம் நல்லவளாகத்தான் இருப்பா…’ என்று, அவனுடைய அப்பா சொன்னதை சொல்லி, பிரபு பெருமைப்பட்ட போது, ஹேமாவும் அந்த பெரிய மனிதரின் பாசத்தை புரிந்து கொண்டாள். அந்த அளவு ஹெலனாவை விரும்பி, வேண்டி திருமணம் செய்தவன், “பிரியலாம்…’ என்று சொல்வதை, அவளால் ஜீரணிக்க முடியவில்லை.
இரவு சங்கரிடம் சொன்னாள்…
“”என்ன செய்யறது… பிரபு நல்ல பையன். இருந்தாலும், அவர்களுக்குள் சுமூகமான உறவு இல்லைன்னா, பிரியறது தானே நல்லது. அவங்க வாழ்க்கையை அவங்க தான் தீர்மானிக்கணும். கேள்விபட்டதும், எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கு.”
“”அந்த பிள்ளைங்க ரெண்டும் பாவம்ங்க… இவங்க விவாகரத்து வாங்கிட்டா… அவங்களோட நிலை?”
“”அம்மா கிட்டே இருக்கும்படி இருக்கும். சனி, ஞாயிறு அப்பாகிட்டே இருக்கலாம்ன்னு ஜட்ஜ்மெண்ட் கிடைத்தாலும் கிடைக்கும். என்ன செய்யறது… அது, அவங்க தலையெழுத்து!”
“”மனசுக்கு கஷ்டமாக இருக்குங்க!”
“”இது, இந்தியா கிடையாது ஹேமா; நீ வாழறது, அமெரிக்காவில். இங்கே இதெல்லாம் சகஜம். விட்டு கொடுக்கற மனப்பான்மை குறைவு. தங்களோட சுய கவுரவம், சுதந்திரம்கிற முறையில் தான் யோசிப்பாங்க.”
“”இருந்தாலும், பிரபு இந்திய பிரஜைதானே… பாரம்பரியமிக்க குடும்பத்தில் வந்தவன் இந்த முடிவுக்கு வரலாமா? ஹெலனாவுக்கு, பிரபுவை பிரிவதில் விருப்பம் இல்லை; அவனுடன் வாழத்தான் ஆசைப்படுகிறாள்.”
“”பார்ப்போம் ஹேமா… கடவுள்தான் அவன் மனசில் மாற்றத்தை கொண்டு வரணும்!”
அந்த வருட விடுமுறை, நான்கு நாட்கள் இருந்ததால், லீவு போட்டு, ரிலாக்ஸ்சாக இருந்தவள், வேலைக்கு கிளம்பினாள்.
“”ஹேமா… உனக்கு விஷயம் தெரியுமா? ஹெலனா குழந்தைகளோடு நியூயார்க்கிலிருக்கும் அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டாளாம். பிரபு சொன்னான். டிவோர்ஸ் அப்ளை பண்ண போறாங்க போலிருக்கு.”
“”பிரபு… இன்னைக்கு எங்க கல்யாண நாள். நைட் டின்னருக்கு வீட்டுக்கு வர்றியா?”
அவளை கை குலுக்கி வாழ்த்தியவன், “”அவசியம் வரேன்க்கா… செல்ப் குக்கிங் போரடிக்குது…”
கேசரி, இட்லி, பொங்கல், பணியாரம் என்று நிறைய அயிட்டங்கள் செய்திருந்தாள். மினுவுக்கு சாப்பாடு கொடுத்து, படுக்க சொல்லிவிட்டு, அவர்களுடன் உட்கார்ந்து ஹேமாவும் சாப்பிட ஆரம்பித்தாள்…
“”அப்புறம் சொல்லு பிரபு… ஊரில் அப்பா, அம்மா நல்லா இருக்காங்களா?”
“”நான் பேசி ஒரு மாசமாச்சுக்கா. மனசு சரியில்லை. சில விஷயங்களை எப்படி அவங்களுக்கு புரிய வைக்கிறதுன்னு தெரியலை. குழப்பமாக இருக்கு; அதான் தள்ளி போட்டுட்டு இருக்கேன்.”
“”பிரபு… உன் பர்சனல் விஷயத்தில் தலையிடறதா நினைக்காதே… ஹெலனா ரொம்ப நல்ல பொண்ணு. அவ, உன்னை கல்யாணம் செய்ததே, நம்ப இந்திய கலாசாரம், பண்பாட்டின் மீது கொண்ட காதலால்தான். அவ, உன்மேல் எவ்வளவு அன்பு, பாசம் வச்சிருக்கா தெரியுமா?
“”முதலில் நம்பிக்கை வைக்கணும் பிரபு. உனக்காக வாழணும்ன்னு நினைக்கிற உன் மனைவி, உன்னை ஏமாத்த மாட்டான்னு நீ மனப்பூர்வமாக நம்பணும். எனக்கென்னவோ ஹெலனா தப்பானவளாக தெரியலை பிரபு!”
சிறிது நேரம் மவுனமாக இருந்தவன்…
“”நானும், அவளை பரிபூரணமாகத் தான் நம்பினேன். கல்யாணமான புதிதிலிருந்த ஈடுபாடு, அவக்கிட்டே இப்ப இல்லை. என்ன இருந்தாலும், அமெரிக்க பெண்தான்கிறதை அவ நடவடிக்கைகளில் காட்டிட்டா… நான் தான் அவளை நம்பி, ஏமாந்துட்டேன்.”
“”ஒண்ணை யோசிச்சு பாரு பிரபு… அவ, உன் மனைவி மட்டுமில்லை; இரண்டு குழந்தைகளுக்கு தாய். தாய்மை உணர்வு மகத்தானது. அது, நிச்சயம் அவளை தப்பு செய்ய தூண்டாது. குழந்தைங்களுக்காகவாவது, உன்னோடு கடைசி வரை வாழணும்ன்னு பிரியப்படறா… அவளோட வேலை விஷயமாக வெளியூரில் தங்கறதை, நீ தப்பான கண்ணோட் டத்தில் பார்க்கிறே. நான், ஹெலனா கிட்டே பேசினேன். அவகிட்டே எந்த தப்பும் இருக்கிறதா தெரியலை.
“”நீங்க ரெண்டு பேரும் மனசுக்கு பிடிக்காம, ஈசியாக டிவோர்ஸ் வாங்கி பிரிஞ்சுடலாம். நீயும், உனக்கான இன்னொரு துணையை தேடிப்ப… ஹெலனாவும் கொஞ்ச நாள் மனசு வருத்தப்பட்டு, பிறகு, அவளும் நிச்சயம் இன்னொரு கல்யாணம் பண்ணிப்பா… உன் பிள்ளைகள் நிலையை யோசிச்சு பார்த்தியா பிரபு. உன் பிள்ளைகளுக்கு, நீ உயிரோடு இருக்கும் போதே, இன்னொருத்தரை அப்பான்னு கூப்பிடற நிலை வரலாமா?
“”கடல் கடந்து இருக்கிற உன் அப்பா, எங்கிருந்தாலும் தன் பிள்ளை சந்தோஷமாக வாழணும்ன்னு, வயசான பிறகும் அன்பையும், பாசத்தையும் தேக்கி வச்சு, மனசில் நினைச்சு வாழறாரே… அந்த தந்தையோட அன்பும், பாசமும் தானே உன் மனசிலும், உன் பிள்ளைங்ககிட்டே இருக்கணும்…
“”நம்ப உடம்பிலே ஓடறது இந்திய ரத்தம். உன் பிள்ளைகளை நினைச்சு பாரு… அழகான அந்த குழந்தைகளின் வாழ்க்கையை சிதைச்சுடாதீங்க… நீங்க ரெண்டு பேரும் மனசுவிட்டு பேசுங்க. ஹெலனா உனக்கானவள். நிச்சயம் உனக்கு பிடிக்காத நடவடிக்கைகளை மாத்திக்க தயாரா இருப்பா. இது, உன்னோட சகோதரியாக நினைச்சு, உன் மேல் உள்ள உண்மையான அக்கறையால சொல்றேன். தப்பா எடுத்துக்காதே பிரபு!”
பதில் பேசாமல், மவுனமாக அமர்ந்திருந்தான் பிரபு.
“”டேக் இட் ஈசி பிரபு… ஏதோ ஹேமா உன் குடும்பத்தின் மேல் வச்சிருக்கிற அக்கறையில் பேசறா. இதை, நீ பெரிசா எடுத்துக்க வேண்டாம். இது, உன்னோட வாழ்க்கை. எந்த முடிவு உனக்கு சந்தோஷத்தை கொடுக்குமோ, அதை நீ தாராளமாக செயல்படுத்தலாம். நாங்க உன்னை தப்பா நினைக்க மாட்டோம்!” என்று சொன்ன சங்கர், “”பிரபு… உனக்கு பணியாரம் பிடிக்குமே… இந்தா வச்சுக்க!” பேச்சை வேறு திசையில் மாற்றினான்.
“”ஹேமா… இன்னைக்கு, சன்டே; நிறைய ரெஸ்ட் எடுத்தாச்சு. கிளம்பு; வாக்கிங் போய்ட்டு வரலாம். இந்த க்ளைமேட்டில் கொஞ்ச தூரம் நடந்துட்டு வந்தா நல்லா இருக்கும்.”
ஓவர் கோட்டை மாட்டி, இருவரும் கிளம்ப, பக்கத்து வீட்டு வாசலில் காரை நிறுத்தி, கதவை திறந்து பிரபு இறங்கினான். அவனை தொடர்ந்து ஹெலனா இறங்க, பிள்ளைகள் இரண்டையும், இரண்டு கைகளிலும் அணைத்தபடி ஹேமா, சங்கரை நோக்கி வந்தான் பிரபு.
“”தாங்க்ஸ் அக்கா… அழுக்காயிருந்த என் மனசை சுத்தப்படுத்திட்டிங்க. என்னோட தவறான நடவடிக்கையால், அன்பான குடும்பத்தை இழக்க இருந்தேன். ஹெலனாவும், நானும் மனம் விட்டு பேசினோம். எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு மறைஞ்சுடுச்சு. இந்த பிள்ளைகள், பத்து நாள் என்னை பிரிஞ்சதை தாங்க முடியாம ஏங்கி போயிட்டாங்க… எனக்கும் நீங்க பேசியதன் அர்த்தம் புரிஞ்சுது. கடைசி வரை என் பிள்ளைகளுக்கு ஒரு பாசமுள்ள தகப்பனாக, என் மனைவிக்கு ஒரு நல்ல கணவனாக இருப்பேன்… மறுபடியும் உங்களுக்கு நன்றி சொல்றேன்.”
அவனை தொடர்ந்து வந்த ஹெலனா, அன்போடு அவளது கரங்களை பற்றி, “”ஒரு இந்திய மருமகளாக கடைசி வரை வாழ, பிரபுவின் மனதை மாற்றி, எனக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த இந்த சகோதரியை, நான் என்னைக்குமே மறக்க மாட்டேன்.”
கண்களில் சந்தோஷம் மின்ன ஹெலனா பேச, அருகில் நிற்கும் கணவனை பெருமிதம் பொங்க பார்த்தாள் ஹேமா.
– பிரவீண் (ஆகஸ்ட் 2011)
இப்போதைய சூழலுக்கு ஏற்ற கதை