அன்னை அழைக்கின்றாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 12, 2023
பார்வையிட்டோர்: 1,085 
 
 

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வான மண்டலத்தில் நிலைகுலைந்த எரிநட்சத்திரம் போல எதிர்பாராமலே அவன் முன் வந்து நிற்கின்றாள் அவள்.

அவனுக்குப் பேரதிர்ச்சி! வெறுப்பும் வேதனையும் கலந்த கோபாவேசத் தீ அவனுள்ளத்தில் சீறியெழுகின்றது. கண்கள் எரிதணலாகின்றன. அவளை அவன் வெறித்துப் பார்க்கின்றான்.

அவளுடைய முகத்தில் பீதி. சப்த நாடிகளும் ஒடுங்கித் தலை குனிந்தபடியே நிற்கின்றாள் அவள். அவளது நிலை பரிதாபகரமாய் இருக்கின்றது. கணப்பொழுதில் அவன் தன்னுணர்வு பெறுகின்றான். அவள் மேல் அவனுக்கு அனுதாபம் பிறக்கின்றது.

“பாவம், அவள் தான் என்ன செய்வாள்?” தனக்குத்தானே கூறிக்கொள்கின்றான். நிதானத்திற்கு வந்த அவன், அவளைப் பரிவுடன் நோக்குகின்றான். “ஏன் நின்றுகொண்டிருக்கின்றாய்? உட்கார்வது தானே?” கனிவுடன் கூறுகின்றான்.

அவள் தயங்கித் தயங்கி உட்காருகின்றாள். அவனை விழுங்கிவிடுவது போல தாபத்துடன் பார்த்துக் கொண்டி ருக்கின்றன அவளது விழிகள்.

முப்பது வருடங்களாக அவனைக் கணப்பொழுதாவது பார்க்க வேண்டுமென்று ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தன வல்லவா அவ்விழிகள்.

இருவரும் மெளனமாய் இருக்கின்றனர். அவளை அவன் வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

அவளது அடர்ந்த சுருண்ட கூந்தலில் இடையிடையே வெள்ளிக்கம்பிகளாய் மயிர்கள் மயிர்கள் தெரிகின்றன. இரட்டை நாடித் தேகம், உடற்கட்டில் மெல்லிய தொய்வு, உடையில் எளிமை. அன்று போல் அவள் செல்வச் செழிப்புள்ளவளாக இருந்தும், தஙக நகைகள் மிகக் குறைவாகவே அணிந்திருக்கின்றாள். அவளது மோகனத் தோற்றத்தில் குறிப்பிடத்தக்க எதுவித மாற்றத்தையும் அவனால் கண்டு கொள்ள முடியவில்லை. 

அதே மருட்சி பொங்கும் விழிகள். அவற்றில் ஆழம் காண முடியாத சோக நிழல் படர்ந்த ஏக்கம். முதல் நாளைய பிரயாணக் களைப்பின் சோர்வு அவளில் தெரிகிறது. அவளுடைய பிறை நெற்றியின் இடது புறத்திலுள்ள அந்த வடு….. அவனது மனம் அலைகின்றது. அவள் சிறுமியாயிருந்த பொழுது அவனால் தான் இந்த வடு ஏற்பட்டது. ஜன்னலூடாக அவனது பார்வை வெளியே செல்கின்றது. 

எண்ணற்ற கரங்கள் வானத்தை எட்டிப்பிடிக்க முயல்வது போல தனது கொப்புகளையும் கிளைகளையும் பரப்பி கிளைத்துச் சடைத்து அடர்த்தியாக வளர்ந்தோங்கி மதர்த்து மரகத மலையாய் நிற்கின்றது ஒரு வேப்பமரம். 

அன்று அவளும் பருவம் பொங்கிப் பூரித்து மதர்த்து மரகத மோகினியாய் இருந்தாள். 

அவனது நினைவுச் சுழல் விரிகின்றது. 

மண் விளையாடும் பருவத்தில் அவனும் அவளும் தினமும் இதே வேப்பமரத்தின் நிழலில் மணிக்கணக்காக விளையாடுவார்கள். 

வேப்பமரம் கன்னிப் பருவத்து வண்ணக் குமரிபோல் விடலையாயிருந்த போது சித்திரைப் புதுவருடப் பிறப்பு கொண்டாட்டக் காலங்களில் அந்த மரத்தின் கொப்பில் அன்ன ஊஞ்சல் கட்டி அவனும் அவளும் அப்பகுதியிலுள்ள பிள்ளை களும் சேர்ந்து மாதக் கணக்காக ஊஞ்சலாடி மகிழ்ந்து குலாவியது அவனது ஞாபகச் சுவட்டில் தோன்றிப் படர்கின்றது. 

ஒருநாள் அவள் அந்த அன்ன ஊஞ்சலில் தாவி ஏறுகின்றாள். அவன் குறும்புத்தனமாக திடீரென ஊஞ்சலை ஆட்டுகின்றான். அவள் நிலை தடுமாறி விழுகின்றாள். அவளது நெற்றியின் இடது பக்கத்திலிருந்து இரத்தம் பீறிட்டுப் பாய்கின்றது. இதனால் ஏற்பட்ட அந்த வடு அவர்களது பால்ய பருவத்தின் நினைவுச் சின்னமாக இன்றும் நிலைத்து நிற்கின்றது. 

அவள் பருவமடைந்த பின்னர் கூட அவளும், அவனும் வேப்பமரத்தின் கீழ் மாலைவேளைகளிலும் நிலாக் காலங்களிலும் நீண்ட நேரம் தங்களது எதிர்கால வாழ்க்கை பற்றி மனக்கோலம் வரைந்து மெய்மறந்திருப்பார்கள். அவர்களது இதயங்களில் தினம் தினம் எண்ணற்ற புதுப்புது இன்பக் கனவுகள் தோன்றி தவழ்கின்றன. 

அவர்களது பெற்றோர்கள் இதை பெரிதும் பொருட் படுத்துவதில்லை. ஏனென்றால் அவர்கள் மீது அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. 

காலப்போக்கில் இதே வேப்பமரத்தின் கீழ் அவர்களது இதயங்களில் தூய்மையான கன்னி உறவு அரும்பி மொட்டாகி மலர்ந்து எழிலுடன் மிளிர்கின்றது. இந்த உறவில் அவர்களது ஆத்மாக்கள் சுயதன்மையிழந்து இரண்டறக் கலந்து சங்கமிக்கின்றன. இச்சங்கமத்தில் ஜனித்த ஜீவநாதம் பிரபஞ்சத்தில் பிரவேசித்து வியாபித்து எதிரொலித்துக் கொண்டேயிருக்கின்றது. ஒன்றாக இணைந்த அவர்களது ஆத்மாக்கள் வண்ணச் சிறகடித்து விண்ணில் மிதந்து உலாவி லயித்திருக்கின்றன. 

பிணந்தின்னி அரசின் இரும்புக் கழுகு ஒன்றின் இரைச்சல் திடீரெனக் கேட்கின்றது. அவன் விழிப்படைகின்றான். அவள் பதறுகின்றாள். 

“இது ஹெலியின் இரைச்சல். இந்த ஹெலி வழமையாய் பலாலிக்கு இதாலைதான் போய்வாறது. சும்மா நாளையிலை பயப்படத் தேவையில்லை”, அவன் அவளைத் தேற்றுகின்றான். அவள் அமைதியடைகின்றாள். அவனது பார்வை மீண்டும் வேப்பமரத்தை நாடுகின்றது. முன்பிருந்த அதே வேப்பமரமா இது? 

அவனுக்கே தடுமாற்றம். அவன் தினமும் இந்த வேப்ப மரத்தைப் பார்த்திருக்கின்றான். 

ஆனால் இன்று என்றுமில்லாதவாறு இந்த வேப்பமரத்தைப் பார்த்த அவனது மனம் ஆத்மவிசாரத்தில் ஈடுபட்டிருக்கின்றது. 

இந்த வேப்பமரம் இவ்வளவு செழிப்பாக, அடர்த்தியாகக் கிளைத்துச் சடைத்து உருண்டு திரண்டு வளர்த்தோங்கி யிருக்கிறது என்பது அவனது கவனத்தில் புலப்படவில்லை. 

ஏன் கோகிலாகூட எவ்வளவு முதிர்ச்சியடைந்து விட்டாள். அவளது சிந்தனையிலும் செயலிலும் எவ்வளவு மாற்றமேற்பட்டுள்ளது என்பது அவனுக்கு எங்கே புரியப் போகின்றது. அவளது உடல் சற்று பருத்துவிட்டதுதான். அதில் அன்றிருந்த ஒயிலும் நளினமும் மெருகும் இன்றுகூட எள்ளளவும் குறையவேயில்லை. அதில் அதே இளமைத் துடிப்பு. ஆனால் இன்று அந்தியில் தோன்றும் துன்ப நிலவின் சாயல் நிழலாடுகின்றது. 

விசும்பும் சத்தம் கேட்கின்றது. தன்னை சுதாகரித்துக் கொள்ளுகிறான் அவன். சுயநிலைக்கு வந்த அவன் அவள் பக்கம் பார்வையைத் திருப்புகின்றான். 

அவளது விழிகளில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்கின்றது. 

வாலிப வனப்புடன் இருந்த அவனது வாளிப்பான உடல் சிதைந்து சீரழிந்துவிட்டது. உருக்குலைந்த அவனது தோற்றத்தைப் பார்த்து, தன்னால்தான் அவனுக்கு இக்கதி ஏற்பட்டது என்று வருந்திக் கண்ணீர் விடுகின்றாளா? அல்லது தனது அன்புக்கினியவனுடன் தான் வாழக் கொடுத்து வைக்கவில்லையேயென்று பொருமி அழுகின்றாளா? 

“கோகிலா உனக்கென்ன நடந்தது? ஏன் அழுகின்றாய்?” “என்னால்தானே உங்களுக்கிந்தக் கதி நேர்ந்தது” குற்ற உணர்வுடன் கூறுகின்றாள். 

“ஏன்? எனக்கென்ன குறைச்சல்?” 

“உங்கள் உடல்….. நீங்கள் ஏன் உங்களை இப்படி அழித்துக் கொண்டிருக்கின்றீர்கள்”. 

“எனது உடலுக்கென்ன?” 

“பார்த்தால் தெரியுதே என்ன மாதிரி வாட்ட சாட்டமாயிருந்த உடம்பு இப்படி எலும்பும் தோலுமாய் இளைச்சுப் போச்சே. ஏன் ஊண் உறக்கமில்லாமல், ஓய்வொழிச்சல் இல்லாமல் நாடோடியாய் அலைஞ்சு திரியிறியள்?” 

“உனக்கெப்படித் தெரியும்? நேற்றுத்தானே நீ இஞ்சை வந்தனி” 

“என்னைப் பார்க்க வந்த ஆட்களிட்டை உங்களைப்பற்றி விசாரிச்சனான் அவையிலை சிலபேர் என்னாலைதான் உங்களுக்கிந்த நிலை வந்ததெண்டு பட்டும் படாமலும் சொல்லிச்சினம்”. 

“வந்ததும் வராததுமாய் என்னைப்பற்றி விசாரணையில் இறங்கிட்டியே? என்னிலை அவ்வளவு கரிசனையே?” 

“ஏன் நான் விசாரிச்சால் என்னவாம்? எனக்கு உரிமையில்லையே?” 

“நான் சும்மாவா சுத்தித் திரியிறன். என்ர வேலையைப் பற்றி எனக்கல்லவோ தெரியும். அதிலை எனக்குக் கிடைக்கிற திருப்தி, மனநிம்மதி மற்றவைக்கெப்படித் தெரியும்? எனக்குத் தான் அது தெரியும்”. 

“நீங்கள் நிம்மதியாய் சந்தோஷமாய் இருக்கிறியள் எண்டு என்மேல் ஆணையாய் சத்தியம் செய்யுங்கோ பார்ப்பம்.” 

உணர்ச்சிமயமாய்க் கேட்கின்றாள். 

“கோகிலா உண்மையைச் சொல்றதுக்கு என்ன சத்தியம் வேண்டிக் கிடக்கு. உத்தியோகம், சொத்து, காசு பணம் இருந்தால்தான் வாழ்க்கை சந்தோஷமாயிருக்குமெண்டு நீங்கள் நினைக்கிறியள். நீங்கள் எதிர்பார்த்த, எதிர்பார்க் கின்றவை ஒண்டும் என்னட்டை இல்லைத்தான். ஆனால் நான் உண்மையாய் மனத்திருப்தியோடை சந்தோஷமாய்த்தான் வாழ்கிறன்.” 

“அதெப்படி? உங்களிட்டை என்ன கிடக்கு?” அவள் ஒன்றும் புரியாமல் அவனைக் கேட்கின்றாள். 

“நான் எந்த மக்களோடை சேர்ந்து வாழ்கிறேனோ அவர்கள்தான் என்ர சொத்து. நான் அவையின்ரை சொத்து!” அழுத்திக் கூறுகின்றான். 

எங்கோ குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கின்றது. கோகிலா பயப்பீதியடைவதை அவன் அவதானிக்கிறான். “கடலிலை யிருந்து பீரங்கியடிக்கிறார்கள் நேவிக்காரர்”. 

“ஏன்?” 

“கரையிலையிருக்கிற மக்களுக்குப் பயம் காட்டி கலைக் கிறதுக்குத்தான் இந்தப் பீரங்கியடி. ஆனால் ஆயிரக் கணக்கான மீன்பிடித்தொழிலாளரின்ரை வயித்திலை வரியக் கணக்காய் நெருப்புத்தான்….. அவனுடைய வார்த்தைகளில் சூடேறுகின்றது- தீட்சண்யம் நிறைந்த கணகள கனலாகின்றன. 

கோகிலாவின் சகோதரி இரண்டு தம்ளர்களில் தேநீர் கொண்டு வந்து வைத்துவிட்டு அவர்களைப் பார்த்தபடியே நிற்கின்றாள். 

அவன் அவைகளைப் பார்க்கின்றான். 

“தேத்தண்ணியைக் குடியுங்கோவன்” அவளுடைய சகோதரி கூறுகின்றாள். 

அவன் தேநீரை எடுக்கவில்லை. 

“எங்கடை செல்வம் தேத்தண்ணி குடிக்கிறதில்லை யெண்டு உனக்குத் தெரியாதே?” 

உரிமை தொனிக்கும் குரலில் சகோதரியைக் கேட்கின் றாள் கோகிலா. 

இவ்வளவு நீண்ட காலத்துக்குப் பிறகும் இந்த சின்ன விசயத்தைக்கூட ஞாபகத்திலை அவள் வைத்திருக்கிறாள் என்பதைக் கண்ட அவனுடைய உள்ளம் பூரித்துச் சிலிர்க் கின்றது. கண்கள் பனிக்கின்றன. 

“நான் தீர மறந்து போனன். இதோ ஒரு நொடியிலை வாறன்” விர்ரென அவள் அவ்விடத்தை விட்டகல்கின்றாள். மீண்டும் வெடிகுண்டுச்சத்தம் இடிமுழுக்கமாய் தொடர்ச்சி யாய் கேட்கின்றது. 

“அங்கை வீடுகளை ஆயிரக்கணக்கிலை கட்டிக் குடுக்கிறாங்கள். இங்கை இருக்கிற ஆயிரக்கணக்கான வீடுகளை குண்டு வைச்சுத் தகர்க்கிறாங்கள்.” வெறுப்புடன் கூறுகின்றான். 

செல்வராஜ் எலுமிச்சம் பழ ரசத்தை சுவைத்துக் குடித்துக் கொண்டிருக்கின்றான். அவனது சிந்தனை எங்கோ சென்று கொண்டிருக்கின்றது. 

“செல்வம். என்னை நீங்கள் இந்த முப்பது வரியத்தில எப்பவாவது நினைச்சதுண்டா? ” அவளது குரலில் அன்றிருந்த அதே குழைவு. 

“கோகிலா நான் உன்னை மறந்தாலல்லவோ நினைக் கிறதுக்கு. என்றைக்கும் நீ என்னுடன்தானே இருக்கிறாய்.’ கோகிலாவின் இதயம் விம்முகின்றது. கண்கள் குளமாகின்றன. அவனுடைய காலில் விழுந்து கதறி அழவேண்டும் போலிக்கிறது அவளுக்கு. 

அவள் சிரமப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றாள். சேலைத்தலைப்பால் தனது கண்களைத் துடைக்கின்றாள். 

அவளது இதயத்தின் ஆழத்தில் நெடுங்காலமாக நெருடிக் கொண்டிருந்த முள்ளொன்று அகற்றப்பட்டு விட்டதென்ற உணர்வினால் ஏற்பட்ட ஆனந்தமய லயிப்பு அவளுக்கு. 

“செல்வம், நீங்கள் கொஞ்ச நாளைக்கு எங்களோட வந்து இருங்கோவன்”, என்ன கேட்கிறேன் என்று தெரியாமல் தன்னை மறந்த நிலையில் அவனைக் கேட்கின்றாள். 

“என்ன உங்களுடன் வருவதா?” வியப்புடன் பார்த்து அவளைக் கேட்கின்றான். 

“ஓம் செல்வம்! எங்களோட வந்திருந்தால் ஓய்வெடுத்து உடம்பைத் தேற்றலாம். வாறியளே? ” கெஞ்சிக் கேட்கின்றாள் அவள். 

“சரி நான் வாறதெண்டு வைச்சுக் கொள்ளுவம். ஆனால் ஒண்டு……!”அவன் இழுக்கின்றான். 

வியப்பில் அவளது விழிகள் விரிகின்றன. “என்ன? என்னெண்டு சொல்லுங்கோ செல்வம்?” அவள் அவசரப்படுகின்றாள். 

“என்ரை சொத்து? ” அவன் புதிர் போடுகின்றானா? “செல்வம் நீங்கள் என்ன கதைக்கிறியள்? உங்களிட்டை எங்கை சொத்துக் கிடக்கு? நீங்கள் வெறும் தனிக்கட்டை தானே? ஒன்றும் புரியாமல் அவள் தடுமாறிக் கேட்கின்றாள். “முதலே நான் சொன்னனே. மக்கள்தான் என்ரை செல்வ மெண்டு. அதை அழிய விட்டிட்டு நாங்கள் என்னண்டு வெளி நாட்டுக்குத் தப்பி ஓடுறது? 

அவளுடைய முகம் கறுக்கிறது. ஏமாற்றம் விம்மலாக வெளிவருகின்றது. 

“கோகிலா நேரத்தோடை நாங்கள் போட்டி போடுறம். மூச்சு விடக்கூட நேரமில்லை. இந்த நெருக்கடியான நேரத்திலை எங்கடை நாட்டை விட்டிட்டு நாங்கள் தப்பி ஓடுறதே? இது நடக்கக் கூடிய காரியமே?” 

அவளுக்கு குழப்பமாய் இருக்கின்றது. 

“செல்வம், உங்களோடை சேர்ந்து வாழ நான் குடுத்து வைக்காட்டியும் எங்களோடை நீங்கள் வந்து தங்கினால் எனக்கு மனம் சாந்தியடையும். உங்கட உடம்பும் தேறும். பிறகு நீங்கள் இஞ்சை திரும்பி வந்து நல்லாய் வேலை செய்யலாம். என்ன வாறியளே செல்வம்? ” மீண்டும் அவள் மன்றாடுகின்றாள். 

“இதை மாத்திரம் கேளாதே கோகிலா. என்னாலை வர முடியாது. நீ வேற ஏதாவது கேள். நான் செய்யிறன். நான் வரேலாதெண்டால் வரேலாதுதான்.” அவனது வார்த்தைகளில் உறுதி, கடுகடுப்பு. 

“இனி உங்களிட்டை என்னாலை எதைக் கேக்கேலும்? ஆனால் ஒண்டை மட்டும் உணருறன் செல்வம்.”

“என்னத்தை உணர்கின்றாய் கோகிலா? “

“என்னடடை ஏராளம் சொத்திருக்கு. கணவன், பிள்ளைகள், சொந்தக்காறர்கள் எல்லாருமிருக்கினை. ஒண்டுக்கும் குறைச்சல் இல்லை. ஆனால் எல்லாம் இருந்தென்ன? நான் ஒன்றுமேயில்லாத அநாதைபோலத்தானே இருக்கிறேன். என்ரை வாழ்க்கை என்றுமே வறட்சியும் வெறுமையும் தான் செல்வம்.” மனக்கசப்பும் விரக்தியும் நிறைந்த வேதனையுடன் கூறுகின்றாள் அவள். 

“இதுக்கு என்னாலை என்ன செய்ய முடியும் கோகிலா?”

“உங்களாலை ஒண்டும் செய்யேலாதுதான். அது காலம் கடந்து போச்சு, உங்களிட்டை ஒன்றுமேயில்லை. ஆனால் நீங்கள் எல்லாம் உள்ளவராக, நிம்மதியாய், சந்தோஷமாய் வாழிறியள் என்றதை இண்டைக்குத்தான் நான் உணருறன். அதுவே எனக்குப்போதும்.” 

அவள் மன நிறைவுடன் கூறுகின்றாள். 

திடீரென ஏதோஅழைப்பு வந்ததை உணர்ந்தவன் போல புறப்படுவதற்கு அவன் எழுகின்றான். 

“கோகிலா, எனக்கு நேரமாச்சு. அங்கை என்ரை ஆக்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பினை. சரி நான் போட்டு வாறன்” கூறிக்கொண்டே அவன் புறப்படுகின்றான். 

தன்னை இழந்தவளாக கோகிலா அவன் செல்வதைப் பார்த்தபடியே நிற்கின்றாள். 

வெளியே வந்த அவனது உடலில் குழுமையான வேப்பங் காற்று தவழ்கின்றது. 

அவன் வேப்பமரத்தைப் பார்க்கின்றான். வேப்ப மர நிழலில் ஏழெட்டு ஆடு மாடுகள் படுத்திருந்தபடியே அசை வெட்டிக் கொண்டிருக்கின்றன. 

மறுபுறம் பார்க்கின்றான். 

குழந்தைகள் சில தங்களை மறந்து, இந்த உலகையே மறந்து, ஆனந்த மயமாய் விளையாடிக்கொண்டிருக்கின்றன.

இதயச் சுமை இறங்கியவனாய் காற்றில் மிதந்து செல்லும் உணர்வுடன் தன் தோழர்களைச் சந்திப்பதற்கு அவன் வேகமாய்ச் சென்று கொண்டிருக்கின்றான். 

– 1994, வேட்கை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2000, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *